Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாந்தாமலை….!மதங்களைக் கடந்த மறுபக்கம்…..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாந்தாமலை….!மதங்களைக் கடந்த மறுபக்கம்…..!

 — அழகு குணசீலன் —

 

spacer.png

 

தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு செல்லும் முன்னரங்க பகுதியில் நாற்பது வட்டை சந்தியில் முழு உயர முருகன் சிலை ஒன்று அப்பகுதி இளைஞர்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுவே கிழக்கின் – மட்டக்களப்பு  பெருநிலப்பரப்பின் உயரமான சிலை என்று செய்திகள் சொல்கின்றன. இது குறித்த கடந்த வாரம் மட்டக்களப்பு பிரதேச சமூக ஊடகங்களில் நிறையவே பேசப்பட்டது. இலங்கையின் இன்றைய சூழலில் மதங்களைக் கடந்து நோக்க வேண்டிய மகத்தான முயற்சி இது.

சிலைத்திறப்புவிழா தொடர்பான துண்டுப்பிரசுரம் கூட வழமைக்கு மாறாக வித்தியாசமாக உள்ளது. அதிதிகள்: சிலையமைப்பதற்கு உதவிய அனைவரும் என்று குறிப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. “என்னை  என்ன அதிதியாக …..?  அழைக்கிறார்கள் என்று கேட்டும், வேறு யார் யார் வருகிறார்கள் அவர்கள் எந்த வகை அதிதிகள்….”? என்று கேட்டு விருப்பும், மறுப்பும் தெரிவிக்கின்ற இன்றைய சூழலில்  இந்த அழைப்பிதழ் வித்தியாசமானது. இந்த பாரிய பணியில் சிலுசிலுப்பு இல்லாமல் பலகாரம் சுட்ட சயந்தன் கிராமசேவகர் குழாமுக்கு பாராட்டுக்கள். இன்றைய அரசியல் சூழலுக்கு தேவை கோழிக் கொக்கரிப்பு  அல்ல ஆமையின் அமைதி.

தாந்தாமலையின் அமைவிடம், அதன் சூழல், சமூக, பொருளாதார, அரசியலில் அது வகிக்கின்ற பங்கு என்பன வெறுமனே கோயில்- வணக்கத்தலம் என்பதற்கு அப்பால் மட்டக்களப்பின் -படுவான்கரையின் வாழ்வியல் கோலத்தில் இதன் பங்கு என்ன? தமிழ்மொழிக்கே உரிய தனித்துவமான நில அடையாளத்தில் பாலையையும், நெய்தலையும் தவிர்த்த மலையும் மலை சார்ந்தும், காடும் காடு சார்ந்தும், வயலும் வயல் சார்ந்தும் அமையப்பெற்ற குறிஞ்சி, முல்லை, மருதம் கலந்த முந்நில கலவை – இயற்கை இந்த படுவான் மண்ணுக்கு அள்ளித்தந்த கொடை.  இதனால்தான் “தா” என்று கேட்டால் “ந்தா” (இந்தா) என்று வரம் கொடுக்கின்ற  அந்த நம்பிக்கையை மக்களுக்கு அவரது கொடுத்ததோ…?

ஒரு காலத்தில்  குறுநில மன்னர்களின் நிர்வாக – ஓய்வு  மையமாக விளங்கியதாக கூறப்படும் வரலாற்றை தாந்தாமலை கொண்டிருந்ததாகவும், பின்னர் அது கைவிடப்பட்ட  ஒன்றாக, வனாந்தரமாக, காட்டு மிருகங்களின் வாழ்வியல் புகலிடமாக இருந்த தாந்தாமலை சுற்றுச்சூழல் படுவான் மக்களின் வேளாண்மை வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த சமூக, பொருளாதார, அரசியலோடு கலந்து இருந்தது. இப்பகுதி மக்கள் பிறப்பு முதல் இறப்பு வரையான சமூக காலச்சார பண்பாட்டு விழுமியங்களோடும், வேளாண்மை விதைப்பு முதல் அறுவடை வரையான தொழில்சார் பாரம்பரியத்தோடும் தாந்தாமலையோடு பிணைக்கப்பட்ட பின்னணியை – மதத்திற்கும் அப்பாலான மறுபக்கத்தை தாந்தாமலைக்கு தந்தவர்கள்.

மட்டக்களப்பின் கலாச்சார -பண்பாட்டோடு இணைந்த  குழந்தைகளின் விற்று வாங்குதல், பிறந்த மயிர் எடுத்தல், காது குத்துதல் முதல் இறப்புக்கு பின்னரான பாரம்பரிய நம்பிக்கைகளை நிறைவேற்றும் ஒரு தலமாகவும் தாந்தாமலை இருக்கிறது. ஆண் குழந்தைகளுக்கும் காதுகுத்தி கடுக்கன் போடுவது அன்றைய வழக்கு. 1960 களிலும் இந்த மரபு தாந்தாமலையிலும் இருந்திருக்கிறது.

இது போன்றே வேளாண்மை விதைப்பு காலத்தில் பொங்கல் போட்டு எல்லாம் சரியாக நடக்க பிள்ளையார் சுழி போடுவதுடன், மழை வேண்டி மற்றும் புதிர்ப்பொங்கல், மாட்டுப்பொங்கல் வரை பயிர்ச்செய்கையாளர்களாலும், பண்ணையாளர்களாலும் நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்பட்ட பல வழக்குகள் இன்னும் தொடர்கின்றன.

அன்றைய சூழலில் தன்னந்தனியாக ஒரு சிலர் காடு வெட்டி வெளியாக்கி வன விலங்குகளின் அச்சம் இன்றி இயற்கையோடு இணைந்து வாழ்ந்தனர். தாந்தாமலையின் வரலாறு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வரலாற்றோடு நெருக்கமான உறவைக்கொண்டது. சிலர் அங்கும், இங்கும் குறிப்பிடுவது போன்று 1956 ஆண்டு வன்முறை காரணமாக  அச்சத்தில் கதிர்காமம் செல்லமுடியாததால்  கதிர்காமத்திற்கு பதிலாக ஒரு தலமாக இது தோற்றம் பெற்றது என்பது உண்மையானது ஆகினும் அதன் வரலாறு பண்டைய ஈழத்தின்  கண்டிய வரலாறு.

  அது போன்றே கல்லோயா குடியேற்றதிட்டம் தாந்தாவின் ஆரம்பமோ, முக்கியத்துவமோ அல்ல. இவை எதுவுமே இல்லாத ஆரம்பமே அதன் வரலாறு. ஆனால் சுதந்திரத்திற்கு பின்னரான சமூக பொருளாதார அரசியல் தாக்கங்கள் தாந்தாமலையின் முக்கியத்துவத்தை அதிகரித்தன என்று கூறுவது பொருத்தமானது.  இன்னும் சொல்லப்போனால் “தூர்ந்து போன”  வாழ்வியலுக்கு  மீண்டும் உயிரூட்டப்பட்டது. இதில் முக்கியமாக பதிவு செய்யப்பட வேண்டிய விடயம் என்னவெனில் அரசியலுக்கு அப்பால் படுவான்கரை மக்கள் தங்கள் சமூக, பொருளாதார வாழ்வியலோடு இணைந்து அந்த முக்கியத்துவத்தை வழங்கினார்கள் என்பதுதான்.

1956 ல் ஏற்பட்ட இனரீதியான வன்முறையானது வழக்கமான கதிர்காம யாத்திரையில் ஏற்படுத்திய தடையும், தாக்கமும் “சின்னக் கதிர்காமம் ” ஒன்றை தேடவேண்டிய நிலையை அன்றைய யாத்திரிகர்களுக்கு ஏற்படுத்தியது. உகந்தை வரை சென்று யாத்திரையை தொடர முடியாமல் திரும்பி வந்து களுவாஞ்சிக்குடியில் கூடிய  முன்னோர்கள் மேற்கு நோக்கி மலையும், மலைசார்ந்த பகுதியை நோக்கி தொடர்ந்து பயணித்து தாந்தாமலையை அடைந்தார்கள் என்று பலரதும் வரலாற்றுக்குறிப்புக்களும், யாத்திரையில் பங்குகொண்டவர்களின் பதிவுகளும் கூறுகின்றன.

திரும்பி வந்த யாத்திரிகர்கள் குழுவில் பல கிராமத்தவர்கள் இருந்தபோதும் படுவான்கரை கிராமங்களை சேர்ந்தவர்கள் கணிசமானவர்கள். இவர்களே தாந்தாமலை நோக்கிய யாத்திரைக்கு வழிகாட்டிகளாக இருந்துள்ளனர். குறிப்பாக முனைக்காட்டை சேர்ந்த  பாலிப்போடி சாமியார், பிள்ளையாகப்போடி, பெரியதம்பிப்போடி, பொன்னம்பலம், மாமாங்கபிள்ளை போன்றவர்கள் இதில் முக்கியமானவர்கள். இவர்கள் தாந்தாமலையை நெருங்கிய நிலையில் “கொறுக்காபுளி ஊற்று” என்று இன்றும் அழைக்கப்படுகின்ற காட்டுப்பகுதியில் இருந்து புகைவரக்கண்டு நம்பிக்கையோடு அந்த இடத்தை அடைந்ததாக பதிவுகள் கூறுகின்றன.

இங்கு ஆச்சரியம் என்னவென்றால் அங்கு அவர்கள் யாரைச் சந்தித்தார்கள், யார் இந்த யாத்திரிகர்களுக்கு உதவி செய்து மலைக்குப்போக வழிகாட்டினார்கள் என்பதுதான். அந்தக்காலத்தில் கூட்டமாக பலர் சேர்ந்து சென்று “கள்ளமரம்” வெட்டி, எருமை மாட்டு வண்டிகளில் ஏற்றி  மட்டக்களப்பு வாவியின்  மேற்கு கரையில் இருந்து கொத்தியாபுலை, கன்னன்குடா  பிரதேச கிராமங்களில் இருந்து வாவிவழியாக வள்ளத்தில் கட்டி மரங்களை கடத்தி காத்தான்குடிக்கு- வாவியின் கிழக்கு கரைக்கு கொண்டு வருவது வழக்கம். முற்றிலும் சட்டத்திற்கு முரணானது. கள்ளமாடுகளும் இவ்வாறு துறைகள் ஊடாக கடத்தப்படுவது வழக்கம்.

“புல்தோண்டி முகமது” என்பவர் காத்தான்குடி மூன்றாம் குறிச்சி யைப் சேர்ந்தவர் என்றும் அவரே இந்த மரம் வெட்டும் குழுவின் தலைவராகவும், காட்டுவாசிகளை நன்கு அறிந்தவராகவும்  இருந்துள்ளார். அவரின் குழுவினரிடம் யாத்திரிகர்கள் உதவிகேட்டதற்கு ஏற்ப புல்தோண்டி முகமது குழுவினர் இவர்களை ஆதரித்து மலைக்கு போவதற்கு “தெகிழங்கொடிகளை” வெட்டி -வெளியாக்கி வழியெடுத்து கொடுத்தனர் என்று கூறப்படுகிறது. இதனால் தான் தாந்தாமலைக்கும் – காத்தான்குடிக்கும் இடையிலான தொடர்பும், உறவும்  நீண்ட  உண்மை வரலாற்றை கொண்டது.  மறுபக்கத்தில் தாத்தாமலைக்கான காணிகளைப்பெற காடழித்து நிலம் பிடித்தவேளை அதற்கு எதிராக வழக்கு தொடுத்த படுவாங்கரையின் வாரிசுகள் இன்று எல்லையை காப்பாற்றுவது பற்றி பேசுகிறார்கள்.

கொடியேற்றத்தின்போது காத்தான்குடியைச்சேர்ந்தவர்கள் வந்து “பட்டாணி மடை” வைத்த பின்னரே கொடியேற்றுவது வழக்கம். அது போன்று பரஸ்பரமாக  சைவர்கள் காத்தான்குடி கபுறடி  பள்ளிவாசல் கொடியேற்றத்திற்கும் கொக்கட்டிச்சோலையில் இருந்து செல்லும் வழக்கம் இருந்தது.1976 வரை காத்தான்குடியில் இருந்து “குத்துப்பக்கிரிகள்” வந்து பக்கிரி மேளம் அடிக்கும் வழக்கமும் இருந்தது. இன்று வாழும் எண்பது வயதுக்கும்  ஐம்பது வயதுக்கும். இடைப்பட்டவர்கள்  இதற்கான நேரடி சாட்சியாக இருக்கிறார்கள். இந்த உறவு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தோடும் இருந்தது. இது வெறும்  மத நம்பிக்கைகளை கடந்த சமூக உறவு . இதை தொலைத்து விட்டு கிணற்றில் போட்டதை ஆற்றில் தேடிக்கொண்டிருக்கிறது அரசியல்.

ஆரம்பத்தில் முனைக்காடு கிராமத்தவர்களால் மட்டும்  நடாத்தப்பட்ட திருவிழாக்கள் ஒன்றாகி, மூன்றாகி, ஆறாகி….. இன்று பல மடங்கு அதிகரித்து பல கிராமங்களுக்கும் “ஊர்த்திருவிழாவை” வழங்கியிருக்கிறது. தாந்தாமலையில் முனைக்காட்டின் பங்களிப்புக்காகவே இறுதித் திருவிழா முனைக்காட்டிற்கு வழங்கப்பட்டது. இடையில் மற்றைய கிராமத்தவர்கள் இதை விரும்பாத தால் ஒரு சந்தர்ப்பத்தில் “திருவுளச்சீட்டு ” போடப்பட்டது. ஒவ்வொரு குறைகளைக் கூறி மூன்று முறைபோடப்பட்டபோதும் முனைக்காடு கிராமத்திற்கே அது கிடைத்தது.

காலப்போக்கில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய நிர்வாகத்தின் கீழ் தாந்தாமலை நிர்வாகம் கொண்டு வரப்பட்டபோதும் பின்னர் அது தனியான நிர்வாகமாக இயங்குகிறது. கொக்கட்டிச்சோலை நிர்வாகத்தின் கீழ் இருந்த காலத்தில் கதிராமப்போடி (கொழும்பார்) வண்ணக்கரின் பங்கு விமர்சனங்களுக்கு அப்பால் குறிப்பிடத்தக்கது.

ஆரம்பகால முருகன் கோயில் முனைக்காடு மக்களாலும், பின்னர் விஷ்ணு கோயில் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவரான பிள்ளையாப்போடியாரால் சொந்த செலவில் அமைக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இருந்தே மகிழடித்தீவு, மண்டூர் கிராமங்களை சேர்ந்த முக்கியஸ்தர்கள் தாந்தாமலையின் வளர்ச்சிக்கு பாடுபட்டிருக்கிறார்கள்.

 காரணம் தெரியாது கட்சி அரசியல் முட்டி மோதுகின்ற இன்றைய காலகட்டத்தில் பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சோ.உ. எதிர்மன்னசிங்கமும், எஸ்.எம். இராசமாணிக்கமும் தாந்தாமலை விவகாரங்களில் கருத்து ஒற்றுமையுடன் இணைந்து செயற்பட்டவர்கள். இது எல்லைக்கிராமங்களின் நிலப்பாதுகாப்பில் இவர்கள் கொண்டிருந்த பொது இணக்கத்தை காட்டுகிறது. 

இதைத் தொடர்ந்து பூ.கணேசலிங்கம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது தாந்தாமலையின் பாதுகாப்பில் அதீத அக்கறை கொண்டிருந்தார். தாந்தாமலை உற்சவ கால நீர் விநியோகம், அன்னதானம் என்பன சோ.உ. எதிர்மன்னசிங்கத்தின் காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு இன்று வெவ்வேறு குழுக்களால் மேற்கொள்ளப்படுகிறது. காணிப்பிடிப்புக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கை வாபஸ் பெற வைப்பதில் எதிர்மன்னசிங்கம், இராசமாணிக்கம் ஆகியோரின் முயற்சி குறிப்பிடத்தக்கது.

 இலங்கையின் இன்றைய சமூக, பொருளாதார, அரசியல் சூழவில் தாந்தாமலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பும், எல்லைப்புற பாதுகாப்பும் முக்கியமானது. இதனால் அப்பகுதியில் குறிப்பிட்ட இலக்கோடு ஒரு துரும்பை எவர் எடுத்துப் போட்டாலும் எதிர்காலம் குறித்த நீண்ட கால நோக்கில் கவனத்தில் கொள்ளப்படவும், பாராட்டப்படவும் வேண்டிய விடயமாகும்.

இந்த வகையில் இந்த முக்கிய கைங்கரியத்தை அதுவும் இன்றைய இன, மத வாத  எரியும் நெருப்புக்குக்கு மத்தியில்   தம்பி சயந்தனின் இளைஞர் அணி “சிலாவின” இல்லாமல் சிலை வைத்திருக்கிறது. யார் குற்றினாலும் எங்களுக்கு தேவை அரிசி என்கிறார்கள் அவர்கள்.

 

https://arangamnews.com/?p=10106

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரை ........பகிர்வுக்கு நன்றி கிருபன்.......!  👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.