Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
டேவிட் வார்னர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், க.போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆக்ரோஷமான இடதுகை பேட்டிங் , சிறந்த தொடக்க ஆட்டக்காரர் மட்டுமின்றி, களத்தில் நங்கூரமிட்டால், ஸ்விட்ச் ஹிட் பேட்டிங்கை சிறப்பாக கையாளக் கூடியவர். ஆப்சைடில் அதிகமாக விளையாடக் கூடியவர், டெஸ்ட் போட்டிகளில் ஸ்ட்ரைக் ரேட்டை ஒருபோதும் 52க்கு குறைவில்லாமல் வைத்துள்ளவர் டேவிட் வார்னர்.

டி20 நிபுணராக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகினாலும் சட்டென தன்னை ஒருநாள், டெஸ்ட் போட்டிகளுக்கு ஏற்ப தகவமைத்துக் கொண்டவர் டேவிட் வார்னர்.

ஆஸ்திரேலிய அணியில் உள்ள சிறந்த பீல்டர்களில் வார்னரும் குறிப்பிடத்தகுந்தவர். வார்னர் களத்தில் இருந்தாலே பெரும்பாலும் பீல்டிங்கை கோட்டைவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தது இல்லை.

 
டேவிட் வார்னர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

132 ஆண்டு வரலாற்றை திருத்தி எழுதியவர்

ஆஸ்திரேலியக் கிரிக்கெட்டின் 132 கால வரலாற்றில் முதல் தரப் போட்டிகளில் விளையாடி தனது திறமையை நிரூபிக்காமல் ஒரு வீரர் தேசிய அணிக்குள் நுழையவே முடியாது.

ஆனால், அனைத்தையும் முறியடித்து, முதல்தரப் போட்டிகளில் இடம் பெறாமலேயே தேசிய அணிக்குள் இடம் பெற்ற முதல் வீரர் டேவிட் வார்னர்தான். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன், உலகக் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர், இந்த தலைமுறையின் தலைசிறந்த பேட்டர், சர்ச்சைகளின் நாயகன் என்று வார்னரை அழைக்கலாம்.

டேவிட் வார்னர் தனது ஆஸ்திரேலிய அணியில் மட்டுமல்லாமல் பிக்பாஷ் லீக், ஐபிஎல் தொடர் என எதில் இடம் பெற்றாலும் தான் சார்ந்த அணிக்காக எந்தவிதமான சமரசமின்றி விளையாடி கோப்பையை வென்றுதரக்கூடிய மேட்ச் வின்னராகவே விளங்கினார்.

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தது வார்னர் தலைமைதான். டெல்லி கேபிடல்ஸ் அணியிலும் இடம்பெற்று தனது திறமையை நிரூபிக்க வார்னர் தவறியதில்லை.

 
டேவிட் வார்னர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தது வார்னர் தலைமைதான்.

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் ஓய்வு

கிரிக்கெட்டிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத, கிரிக்கெட்டை முழுமையாக நேசித்த டேவிட் வார்னர், டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக நடந்து வரும் 3ஆவது டெஸ்ட் போட்டியுடன் டேவிட் வார்னர் எனும் மகத்தான பேட்டரை ஆஸ்திரேலிய அணி இழக்கிறது என்றுதான் கூற முடியும்.

வார்னர் இடம் வெற்றிடமாக மாறும்

இனிமேல் ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் போன்ற சிறந்த தொடக்க ஆட்டக்காரரை தேடி எடுக்க வேண்டிய மிகப்பெரிய சவால் ஆஸ்திரேலிய நிர்வாகத்துக்கு வந்துள்ளது.

ஆடம் கில்கிறிஸ்ட், மார்க் டெய்லர், மேத்யூ ஹெய்டன், ஷேன் வாட்ஸன் போன்றோர் சென்றபின் அடுத்தடுத்து ஜாம்பவான்கள் அணிவகுத்து இருந்ததால், ஆஸ்திரேலிய வாரியத்தின் பணி எளிதாக இருந்தது ஆனால், தற்போதுள்ள ஆஸ்திரேலிய அணியில் இருக்கும் வீரர்கள் வார்னர் இடத்தை எவ்வாறு நிரப்பப் போகிறார்கள் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது.

டேவிட் வார்னர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

வலக்கையிலிருந்து இடக்கைக்கு மாறியவர்

கடந்த 1986ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி சிட்னியின் புறநகரான பேடிங்டன் பகுதியில் பிறந்தவர் டேவிட் வார்னர்.

டேவிட் வார்னர் இடதுகை பழக்கம் கொண்டவராக இருந்தாலும், தொடக்கத்தில் கிரிக்கெட் பயிற்சி எடுத்தபோது வலதுகை பேட்டிங் செய்து வந்தார், அப்போது அவரால் பந்தை அதிக தொலைவுக்கு அடிக்க முடிந்தது. ஆனால், வார்னரின் தாயார் லோரன் வார்னர் அதற்கு சம்மதிக்கவில்லை வார்னருக்கு இடதுகை பேட்டராகவே பயிற்சி அளிக்க வேண்டும் என்று பயிற்சியாளரிடம் தெரிவித்தார்.

அதன்பின் வார்னர் இடதுகை பேட்டராகவே மாறி பயிற்சிஎடுத்தார். 16வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் சிட்னி கோஸ்டர் கிரிக்கெட் கிளப்பில் சேர்ந்து வார்னர் சிறப்பான ஆட்டத்தை நிரூபித்தார். இதையடுத்து வார்னரின் 19வயதில் மாநில கிரிக்கெட் அணியின் ஒப்பந்தமும் கிடைத்தது.

டேவிட் வார்னர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

இடதுகை பழக்கம் கொண்டவராக இருந்தாலும், தொடக்கத்தில் கிரிக்கெட் பயிற்சி எடுத்தபோது வலதுகை பேட்டிங் செய்து வந்தார் வார்னர்.

உள்நாட்டுப் போட்டிகளில் வார்னர்

2008ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக ஆடிய வார்னர். டாஸ்மானியா அணிக்கு எதிராக முதல்முறையாக உள்நாட்டில் சதம் அடித்தார். 2009ம் ஆண்டு நடந்த ஷெப்பீல்டு ஷீல்ட் சீசனிலும் முதல்முறையாக நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக முதல்தரப் போட்டியில் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக களமிறங்கினார். 6-வது வரிசையில் களமிறங்கிய வார்னர் 48 பந்துகளில் 42 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக வார்னர் விளையாடியபோது, உள்நாட்டில் ஒருநாள் போட்டியில் அதிக ரன் அடித்த பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார். 141 பந்துகளில் 197ரன்கள் குவித்து வார்னர் சாதனை செய்து அசத்தினார்.

 
டேவிட் வார்னர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

முதல் டி20 போட்டியிலேயே அசத்திய டேவிட் வார்னர் 43 பந்துகளில் 86 ரன்கள் குவித்து மிரட்டினார்.

1877ம் ஆண்டுக்குப்பின் முதல்வீரர்

டேவிட் வார்னரின் சாதனையையும், பேட்டிங் திறமையையும் பார்த்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அவரை 2009ஆம் ஆண்டு, தேசிய அணிக்குத் தேர்வு செய்தது. இதையடுத்து, 2009, ஜனவரி 11ம் தேதி மெல்போர்னில் நடந்த டி20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டேவிட் வார்னர் அறிமுகமாகினார்.

1877ம் ஆண்டுக்குப்பின் ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வரலாற்றில் முதல்தரப் போட்டிகளில் அனுபவமே இல்லாத ஒரு வீரரை தேசிய அணிக்குள் தேர்ந்தெடுத்தது என்றால் அது டேவிட் வார்னர் மட்டும்தான். முதல் போட்டியிலேயே அசத்திய டேவிட் வார்னர் 43 பந்துகளில் 86 ரன்கள் குவித்து மிரட்டினார். டி20 போட்டி அறிமுகத்திலேயே 86 ரன்கள் குவித்து வார்னர் அசத்தினார்.

2011, டிசம்பர் 1ம் தேதி, பிரிஸ்பேனில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் வார்னர் அறிமுகமாகினார். ஷேன் வாட்ஸன் காயத்தால் அணியில் இடம் பெறமுடியாமல் போகவே, வார்னருக்கு வாய்ப்புக் கிடைத்தது. முதல் இன்னிங்ஸில் 3 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 12 ரன்களும்சேர்த்து அணியின் வெற்றிக்கு வார்னர் காரணமாகினார்.

2ஆவது போட்டியிலேயே டேவிட் வார்னர் சதம் அடித்து 123ரன்கள் சேர்த்து ஜஸ்டின் லாங்கர், ஹெய்டன் சாதனையை முறியடித்தாலும் அந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றியைத் தடுக்க முடியவில்லை.

டேவிட் வார்னர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

வார்னர் 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,932 ரன்கள் குவித்து, 45.30 சராசரி வைத்துள்ளார்

வார்னரின் சாதனைகள்

2009ம் ஆண்டு ஹோபர்ட்டில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில்தான் வார்னர் முதல்முறையாக ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினார். இதுவரை வார்னர் 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,932 ரன்கள் குவித்து, 45.30 சராசரி வைத்துள்ளார்.

இதில் 22 சதங்கள், 33 அரைசதங்கள் அடங்கும். வார்னர் என்றாலே அதிரடி தொடக்க ஆட்டக்காரர், களத்தில் நங்கூறமிட்டுவிட்டால் சதம் அடிக்காமல் செல்லமாட்டார் என்ற மிரட்டலான பாணியை தனக்கே உரிய ஸ்டைலில் கடைசி வரை பராமரித்தவர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலிய அணியில் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு(29) அடுத்தார்போல் அதிகமாக 22 சதங்களை அடித்தவரும் வார்னர்தான்.

டேவிட் வார்னர் இதுவரை 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,695 ரன்கள் சேர்த்துள்ளார் . இதில் 26 சதங்கள், 36 அரைசதங்கள் அடங்கும், 45 ரன்கள் சராசரி வைத்துள்ளார்.

அதேபோல 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வார்னர் 22 சதங்கள், 33 அரைசதங்களுடன் 6,932 ரன்கள் சேர்த்துள்ளார். 99 டி20 போட்டிகளில் விளையாடிய வார்னர் ஒரு சதம், 24 அரைசதங்களுடன் 2894 ரன்கள் குவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக 356 டி20 போட்டிகளில் விளையாடிய வார்னர் 11695 ரன்கள் குவித்துள்ளார். இதில் 8 சதங்கள், 99 அரைசதங்கள் அடங்கும்.

 
டேவிட் வார்னர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

2023 உலகக் கோப்பைத் தொடரில் 11 போட்டிகளில் 535 ரன்கள் சேர்த்து தனது திறமையை நிரூபித்துள்ளார் வார்னர்.

ஆஸ்திரேலிய அணி இருமுறை (2015,2023) ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற போதும், 2021ல் டி20 உலகக் கோப்பையை வென்றபோதும், 2022ல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வென்றபோதும் அணியில் இருந்த பங்களிப்பை செய்தவர் டேவிட் வார்னர்.

டேவிட் வார்னர் டி20 வீரராக அறிமுகமாகி, டி20 வீரராகவே வளர்ந்தாலும், ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்புக் கிடைத்து அதில் விளையாடும்போது தனது ஆட்டத்தின் பாணியை மாற்றிக்கொள்ளத் தயங்காதவர்.

2015ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் 8 போட்டிகளில் 345 ரன்கள் சேர்த்த வார்னர், 2023 உலகக் கோப்பைத் தொடரில் 11 போட்டிகளில் 535 ரன்கள் சேர்த்து தனது திறமையை நிரூபித்துள்ளார்.

2016 காலண்டர் ஆண்டில் மட்டும் ஒருநாள் போட்டிகளில் 7 சதங்களை வார்னர் அடித்து, சச்சின் டெண்டுல்கருக்குபின் 2ஆவதாக இடம் பெற்றார். 93 ஒருநாள் போட்டிகளில் 4ஆயிரம் ரன்களை எட்டிய வார்னர், 5ஆயிரம், 6ஆயிரம் ரன்களை அதிவிரைவாக எட்டிய வீரர் என்ற பெருமையும் பெற்றார்.

டேவிட் வார்னர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பிக்பாஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர் அணிக்காக கேப்டன் பொறுப்பேற்று சிறப்பாக வார்னர் செயல்பட்டுள்ளார்.

கேப்டனாகவும் ஜொலித்த வார்னர்

டேவிட் வார்னர் சிறந்த பேட்டர் என நிரூபித்த அதேநேரத்தில் சிறந்த கேப்டன் என்பதையும் அவர் ஆஸ்திரேலிய அணிக்காக தலைமை ஏற்றபோதும், பிக்பாஷ் லீக்கிலும், ஐபிஎல் தொடரிலும் நிரூபிக்க அவர் தவறவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு ஒருநாள் போட்டிகளில் 3 போட்டிகளில் வழிநடத்திய வார்னர் 3 வெற்றிகளையும், டி20 போட்களில் 9 ஆட்டங்களில் கேப்டனாக செயல்பட்ட வார்னர் 8 வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தார். வார்னருக்குள் இருந்த தலைமைப் பண்பு, ஐபிஎல் டி20 தொடரில் சன்ரைசர்ஸ் அணியில் வெளிப்பட்டது.

ஆஸ்திரேலிய அணிக்கு துணைக் கேப்டனாகவும், கேப்டனாகவும் வார்னர் பணியாற்றியுள்ளார். பிக்பாஷ் லீக்கில் சிட்னி சிக்ஸர் அணிக்காக கேப்டன் பொறுப்பேற்று சிறப்பாக வார்னர் செயல்பட்டுள்ளார். ஐபிஎல் டி20 லீக்கில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக கேப்டனாக செயல்பட்ட வார்னர் கோப்பையையும் வென்று கொடுத்தார்.

 
டேவிட் வார்னர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐபிஎல் லீக்கும் வார்னரும்

ஐபிஎல் டி20 தொடரில் வெற்றிகரமான வெளிநாட்டு பேட்டராக வார்னர் வலம் வருகிறார். ஐபிஎல் தொடரில் மட்டும் 6 ஆயிரம் ரன்களைக் குவித்த வார்னர், இதுவரை 3 முறை ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். 2009 முதல் 2014ம் ஆண்டுவரை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக ஆடிய வார்னர் 2014 ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வார்னர் வாங்கப்பட்டார்.

2015ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட வார்னர், தொடரிலேயே முன்னணி ரன் குவித்து சாதித்தார். 2016ம் ஆண்டில், வார்னர் தலைமையில் ஆர்சிபி அணியை வென்று இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணி கோப்பையை வென்றது.

2018ம் ஆண்டிலும் சன்ரைசர்ஸ் அணிக்கு வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக பந்தை சேதப்படுத்திய புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார். 2019ம் ஆண்டு மீண்டும் விளையாட வந்த வார்னர் முதல் போட்டியிலேயே 85 ரன்களும், அந்த சீசனில் 600 ரன்களுக்கு மேல் குவித்தார்.

2020ம் ஆண்டில் வில்லியம்சனுக்குப் பதிலாக வார்னரிடம் கேப்டன் பதவி தரப்பட்டது. ஆனால், கேப்டனாக வார்னர் வந்தபின் சன்ரைசர்ஸ் ஒரு போட்டியில் மட்டுமே வென்றதால், வார்னர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். பல்வேறு காரணங்களால் அணியில் தொடரமுடியாத நிலையில் வார்னரை டெல்லி கேபிடல்ஸ் அணி மீண்டும் விலைக்கு வாங்கியது.2023 ஐபிஎல் சீசனில் வார்னர் 432 ரன்களை டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக குவித்தார்.

ஐபிஎல் டி20 தொடர் தவிர்த்து இங்கிலாந்தில் கவுன்டி அணிகளான துர்ஹம், மிடில்செக்ஸ் கவுன்டி, குளோபல் டி20 கனடா, வங்கதேச டி20 லீக், பாகிஸ்தான் டி20 சூப்பர் லீக்கிலும் வார்னர் விளையாடியுள்ளார்.

 
டேவிட் வார்னர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

2015ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட வார்னர், தொடரிலேயே முன்னணி ரன் குவித்து சாதித்தார்.

வார்னரின் மைல்கல்கள்

ஆஸ்திரேலியாவில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு வழங்கப்படும் ஆலன் பார்டர் விருதை தொடர்ந்து 2முறை வாங்கிய 4வது வீரர் வார்னர். டி20 வரலாற்றில் ஷேன் வாட்ஸன், வார்னர் தொடக்க ஜோடி சேர்ந்து 1,108 ரன்கள் குவித்துள்ளர், இதுவரை இருவரின் பார்ட்னர்ஷிப்பை எந்த நாட்டு வீரர்களாலும் முறியடிக்க முடியவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சுனில் கவாஸ்கருக்கு அடுத்தாற்போல், தொடர்ந்து 3 டெஸ்ட் சதங்களைக் குவித்து ஆடம் கில்கிறிஸ்ட்டுக்கு அடுத்தாற்போல் வார்னர் மட்டும்தான். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 4 ஆயிரம் ரன்களைக் கடந்த 4ஆவது ஆஸ்திரேலிய பேட்டரும் வார்னர்தான்.

100ஆவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த 8-வது சர்வதேச பேட்டரும் வார்னர்தான். இதற்கு முன் கிரீனிட்ஜ், கிறிஸ் கெயின்ஸ், அசாருதீன், குமார சங்கக்கரா, கிறிஸ் கெயில், டிரஸ்கோத்திக், ராம்நரேஷ் சர்வான் ஆகியோர் இந்த சாதனையைச் செய்திருந்தனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடால் 17 முறை ஆட்டமிழந்தவரும் டேவிட் வார்னர் மட்டும்தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே பந்துவீச்சாளரிடம் அதிகமுறை விக்கெட்டை இழந்தவரும் வார்னர் மட்டும்தான்.

 
டேவிட் வார்னர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சர்ச்சைகளின் நாயகன் வார்னர்

டேவிட் வார்னர் என்றால் அதிரடியான பேட்டிங் என்பது நினைவுக்கு வருகிறதோ இல்லையோ அவருடைய சர்ச்சைகள் கவனத்துக்கு வந்துவிடும். குறிப்பாக 2013 ஐசிசி சாம்பியன் டிராபி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்துக்கு முன் மதுபாரில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டுடன் தகராறு செய்து அவரை வார்னர் தாக்கியது பெரிய சர்ச்சையானது.

இங்கிலாந்து அணியுடன் அடைந்த தோல்வியால் ஆஸ்திரேலிய துவண்டுகிடந்த போது, வார்னர் மதுபாரில் இருந்தபோது இரு வீரர்களும் மோதிக்கொண்டனர். இந்த விவகாரத்தில் வார்னருக்கு அபராதமும், சில போட்டிகளில் விளையாட ஆஸ்திரேலிய நிர்வாகம் தடையும் விதித்தது.

2013ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஏ அணியில் வார்னர் விளையாடியபோது, தென் ஆப்பிரிக்க ஏ அணி வீரரும் விக்கெட் கீப்பருமான தமி சோல்கிலேயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் சர்ச்சையானது. இருமுறை நடுவர்கள் களத்தில் வாக்குவாதத்தை விலக்கிவிட்டாலும், இது முறைப்படி புகராக பதிவாகவில்லை என்பதால், வார்னர் தப்பித்தார்.

நியூசிலாந்து முன்னாள் கேப்டன் மார்டின் குரோவ் வெளிப்படையாகவே வார்னரின் அநாகரீகமற்ற செயல்கள், நடவடிக்கைகளை கண்டித்து, களத்தில் மரியாதைக் குறைவாக நடப்பவர்களுக்கு எதிராக ரெட் கார்டு, மஞ்சள் அட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

2018ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்க பயணத்தின்போது, வார்னர் மனைவி குறித்து தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் டீ காக் பேசிய விதம் இருவருக்கும் இடையே மோதலை உருவாக்கியது.

இதையடுத்து, பந்தை சேதப்படுத்தும் திட்டத்தை வார்னரும், கேப்டன் ஸ்மித்தும் செயல்படுத்தி சிக்கலில் மாட்டிக்கொண்டனர். இந்த விவகாரத்தில் வார்னருக்கும், ஸ்மித்துக்கும் ஓர் ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது.

2018ம் ஆண்டு மார்ச் மாதம் கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வார்னர் ஆட்டமிழந்து சென்றபோது, பார்வையாளருடன் நடந்த வாக்குவாதம் கடுமையாக கண்டிக்கப்பட்டது. இதுபோன்று களத்திலும், வெளியேயும் வார்னர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

டேவிட் வார்னர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியர்களின் மனம் கவர்ந்தவர்

ஆஸ்திரேலிய வீரராக இருந்தாலும் இந்தியாவிலும் மற்ற எந்த வெளிநாட்டு வீரர்களை விடவும் அதிகமாகப் பிரபலமானவர் டேவிட் வார்னர். இந்தியத் திரைப்பட நடனங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிடுவது இந்தியர்களுடன் அவரை நெருக்கமாக்கியது.

இந்தியப் பாரம்பரிய உடைகளை அணிவது, இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளுக்காக கருத்துக் கூறுவது என அவரது சமூக வலைத்தள பதிவுகள் இந்தியர்கள் மத்தியில் பிரபலமானவை.

அவருக்கு கிரிக்கெட் ஆட ஓராண்டு தடை விதிக்கப்பட்டபோது, இந்தியாவில் இருந்து ஆதரவுக் குரல்கள் எழுந்ததையும் கேட்க முடிந்தது.

https://www.bbc.com/tamil/articles/cz9eq3ygg6yo

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

416707187_847944364008375_13011861902909

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடைசி டெஸ்டிலும் அரைசதம் : கண்ணீருடன் ஓய்வு பெற்றார் டேவிட் வோர்னர்!

வார்னர்

அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வோர்னர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சிட்னியில் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்த வோர்னர், ஒருகட்டத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு நடுமைதானத்தில் அழுது விட்டார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடருடன் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வோர்னர் ஏற்கெனவே அறிவித்து இருந்தார்.

அதன்படி, சிட்னியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி அவருக்கு இறுதி போட்டியாக அமைந்தது.

இதில் முதல் இன்னிங்ஸில் 34 ரன்களை சேர்த்த டேவிட் வோர்னர், இரண்டாவது இன்னிங்ஸில் 57 ரன்களை சேர்த்தார். டெஸ்ட் போட்டிகளில் தனது 37ஆவது அரைசதத்தை வோர்னர் பூர்த்தி செய்தபோது, மைதானத்தில் இருந்த ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று வோர்னரை உற்சாகப்படுத்தினார்.

தொடர்ந்து 57 ரன்கள் சேர்த்து இருந்தபோது சஜித் கான் பந்துவீச்சில் எல்பிடபள்யூ முறையில், தனது கடைசி டெஸ்ட் இன்னிங்ஸில் வோர்னர் ஆட்டமிழந்தார்.

அப்போது பாகிஸ்தான் வீரர்கள் அனைவரும் வோர்னருக்கு வாழ்த்து கூறி வழியனுப்பி வைக்க, ஒட்டுமொத்த மைதானமும் கைதட்டல்களால் அதிர்ந்தது.

பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்த டேவிட் வோர்னர், தனது கையில் இருந்த ஹெல்மெட் மற்றும் கையுறைகளை அங்கிருந்த சிறுவன் ஒருவனுக்கு வழங்கினார். முன்னதாக வோர்னர் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியபோது, அவருக்கு பாகிஸ்தான் வீரர்கள் Guard of Honour மரியாதை வழங்கினர்.

கடந்த 2011ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான வோர்னர், 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், 26 சதங்கள் மற்றும் 37 அரைசதங்கள் உட்பட 8 ஆயிரத்து 786 ரன்களை குவித்தார். அதிகபட்சமாக 335 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். முன்னதாக ஒருநாள் போட்டிகளில் இருந்தும் விடைபெறுவதாக, அண்மையில் வோர்னர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சிட்னியில் அவுஸ்திரேலிய அணியின் வெற்றிக்குப் பிறகு, வர்ணனையாளர்கள் டேவிட் வோர்னரை பேச அழைத்தபோது, அவர் ஏதோ சொல்ல வந்தபோது, திடீரென்று உணர்ச்சிவசப்பட்டு மைதானத்தின் நடுவில் அழுது விட்டார். பின்னர் கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்த டேவிட் வோர்னர், அங்கிருந்து திரும்பி சக வீரர்களிடம் சென்றார்.  இது தொடர்பான பல வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் மூன்றிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

சிட்னி நகரில் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்றது. கடந்த 3ஆம் திகதி தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸில் 313 ரன்களை சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, 299 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 14 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, வெறும் 115 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து 130 ரன்கள் என்ற இலக்குடன் களமிறக்கிய அவுஸ்திரேலிய அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள்கொண்ட தொடரை 3-0 என முழுமையாக கைப்ப்ற்றி பாகிஸ்தானை White-wash செய்தது.

https://thinakkural.lk/article/287216



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.