Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
ஆதி அறிவு
-------------------
இப்பொழுது வரப்போகும் புகைவண்டி மூன்றாவது தடத்தில் வந்து கொண்டிருக்கின்றது. முதலாவது மேடையில் நிற்பவர்கள் மேம்பாலத்தில் ஏறி அடுத்த பக்கம் போகவும் என்ற அறிவிப்பு தலைக்கு மேலேயிருந்து வந்து கொண்டிருந்தது. அங்கு முதலாவது தடம், இரண்டாவது தடம், மூன்றாவது தடம், முழு நிலையத்திற்கும் சேர்த்து நான் ஒருவனே முதலாவது மேடையில் நின்று கொண்டிருந்தேன். மனிதர்களின் குறுக்கீடுகள் எதுவும் இல்லாமல், இது செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு இயந்திரம் செய்யும் அறிவிப்பாகக் கூட இருக்கலாம்.
 
சுற்றிவர மெல்லிய இருட்டு கவிழ்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது திடீரென ஒருவர் முன்னால் தோன்றி, எனக்கு ஏதாவது சில்லறைகள் கொடு என்று கேட்கக்கூடும். கேட்பதைக் கொடுத்தால், தோன்றியது போலவே மறைந்தும் விடுவார்கள். ஆனால் ஒரு டாலர் கூட கையிலோ, பையிலோ இல்லை. கடன் மட்டைகள், காசு மட்டைகள் செல்லாத இடம் இது. வந்து கேட்பவர் என் வங்குரோத்து நிலை கண்டு கோபப்படவும் கூடும்.
 
இந்த நிலையில் 'நோ இங்கிலீஸ்' என்று சொல்வது தான் உசிதம். முழுதும் துறந்து தெருக்களில் வாழும் இந்த மனிதர்களிடம் மொழிப்பற்று, தீவிரம் இருக்க சாத்தியமில்லை. இங்கு எவரும் எவரையும் ஆங்கிலம் தெரியாது என்பதற்காக அடித்ததாகவோ அல்லது சுட்டதாகவோ நான் இதுவரை கேள்விப்பட்டதும் இல்லை. 
 
மூன்றாம் மேடைக்குப் போக முன், முதலாம் மேடையின் பின்புறம் பிரயாணச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று இன்னும் ஒரு அறிவிப்பு மேலிருந்து என் மீது இறங்கியது. தனி ஒரு மனிதனுக்காக அரசு இயந்திரம் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தது.  அறிவிக்கும் குரல் இருமி, கம்மி, புகைவண்டி நிற்கப் போகும் அடுத்த அடுத்த தரிப்பிடங்களைச் சொன்னது.
 
உலகில் செயற்கை நுண்ணறிவு இன்னமும் இருமத் தொடங்கவில்லை, ஆதலால் 
இந்த இடத்தில் இன்னும் ஒரு சாதாரண மனிதனும் என்னுடன் இருக்கின்றார் என்ற அந்த நினைப்பே ஆறுதலாக இருந்தது.
 
இன்னும் ஒருவர் அவசரமாக வந்தார். வீடு வேண்டாம் என்று வீதியில் வாழ்பவர்களை அடையாளம் காண்பது மிகவும் இலகு. இவர்கள் ஒரு வீட்டுச் சாமான்களை தங்களுடன் எப்போதும் சுமந்து கொண்டு திரிவார்கள். சுமக்கும் தள்ளு வண்டி கூட அருகில் இருக்கும் பெரிய கடைகளில் ஒன்றினுடையதாக இருக்கும்.
 
வந்தவர் கடகடவென்று என்னைத் தாண்டி, உயர்த்தியில் ஏறி, அவசர அவசரமாக உயர்த்தியின் கதவை மூடி, மேம்பாலத்தில் ஓடி நடந்து, மறுபக்க உயர்த்தியால் இறங்கி, மூன்றாவது மேடையில் உயர்த்தியின் பின்பக்கம் ஒளித்து நின்றார்.
 
புகைப்பதைத் தவிர, செயல்கள் என்று இவர்கள் வேறு எதுவும் செய்வதில்லை. பல புகைத்தல்கள் இங்கே சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டும் உள்ளது. ஒளித்து நின்று புகைக்க வேண்டிய கட்டாயமும் இவர்களுக்கு இல்லை. இலங்கையில் 28 கோடி ரூபாய்கள் பெறுமதியான ஆணிகளை   ஒரு பாலத்தில் இருந்து சிலர் திருடிச் சென்றுள்ளனர் என்ற சமீபத்திய செய்தி நினைவில் மின்னி மறைந்தது.
 
பார்த்துக் கொண்டே இருக்க, நீளம் பாய்தலுக்கு ஓடி வருபவர் போன்று ஒரு பெண்மணி ஓடி வந்தார். நின்றார். 'ஜேக்கப், உன்னை எனக்கு அக்கு வேறு ஆணி வேறாகத் தெரியும். (தடை செய்யப்பட்ட வார்த்தை). (தடை செய்யப்பட்ட வார்த்தை). நீ அந்த உயர்த்தியின் பின்னால் ஒளிந்து நிற்கின்றாய். (இரண்டு தடை செய்யப்பட்ட வசனங்கள்). ஜேக்கப் வெளியில் வரவேயில்லை. புகைவண்டி வந்து கொண்டிருந்தது.
 
ஜேக்கப் அங்கே தான் ஒளித்து இருக்கின்றார் என்று அந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரியும் என்று எனக்கு விளங்கவில்லை. வாழ்க்கை வீடோ வீதியோ, ஜேக்கப்பிற்கும் இது என்றும் விளங்கப் போவதில்லை.
  • Like 12
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்ப எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், ஜேக்கப் புகைவண்டியில் ஏறினாரா இல்லையா........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, suvy said:

இப்ப எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், ஜேக்கப் புகைவண்டியில் ஏறினாரா இல்லையா........!  😂

😀...

 
 
அதில் வந்து இறங்கிய இருவரை ஏற்றிக் கொண்டு நான் வீடு வந்து விட்டேன். ஆனால், கண்டிப்பாக, ஜேக்கப் அதில் ஏறியிருக்கமாட்டார். அப்படியெல்லாம் விட்டிட்டு ஓடிப் போகும் துணிவு ஜேக்கப்புகளுக்கும், எங்களுக்கும் கிடையாது........... 🤣
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கலிபோர்ணியாவில் வீடற்றவர்களின் வாழ்வை ஓரிரு வரிகளில் எழுதியுள்ளீர்கள்.

இலங்கையில் புகையிரதங்களில் பிரயாணம் செய்த காலங்களில் 

அறிவிப்பை செவிமடுக்க காத்திருப்பேன்.

அதிலும் சிங்களத்தில் சொல்வதை பாடமாக்கியே வைத்திருந்தேன்.

அதுசரி கதையை தொடருமா முடிந்துதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, ஈழப்பிரியன் said:

கலிபோர்ணியாவில் வீடற்றவர்களின் வாழ்வை ஓரிரு வரிகளில் எழுதியுள்ளீர்கள்.

இலங்கையில் புகையிரதங்களில் பிரயாணம் செய்த காலங்களில் 

அறிவிப்பை செவிமடுக்க காத்திருப்பேன்.

அதிலும் சிங்களத்தில் சொல்வதை பாடமாக்கியே வைத்திருந்தேன்.

அதுசரி கதையை தொடருமா முடிந்துதா?

இங்கு வீட்டை விட்டு வீதிகளில் வாழ்வோரின் எண்ணிக்கை கோவிட் தொற்றுக் காலத்தின் பின் பல மடங்காகிவிட்டது. நீங்களும் இதைப் பார்த்திருப்பீர்கள். தினமும் அவர்களைக் கடந்து போய்க் கொண்டிருக்கின்றோம்.
 
'ஆதி அறிவு' தொடராது.......😀
 
நாங்கள் என்ன செய்தாலும், எங்கே செய்தாலும், வீட்டிற்கு அது எப்படியோ தெரிந்து விடுகின்றது. இந்த அறிவு/திறமை பெண்களுக்கு மனிதன் தோன்றிய ஆதி நாட்களில் இருந்தே இருக்கின்றது போல..... 😀
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
52 minutes ago, ரசோதரன் said:

ஆதி அறிவு' தொடராது....

ஜேக்கப் என்ன ஆனார்?

அந்தப் பெண் ஏன் துரத்தினாள்?

இதற்கு எப்படி விடை தேடுவது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, ஈழப்பிரியன் said:

ஜேக்கப் என்ன ஆனார்?

அந்தப் பெண் ஏன் துரத்தினாள்?

இதற்கு எப்படி விடை தேடுவது?

அடுத்த தடவை நீங்கள் இந்தப் பக்கம் வரும் போது, நானும் நீங்களும் அந்தப் புகையிரத நிலையத்திற்கு போகிறோம், ஜேக்கப்பை தேடிப் பிடிக்கிறோம், மிகுதிக் கதையைக் கேட்கிறோம்.......😀😀
 
ஜேக்கப்பும் அந்தப் பெண்ணும் வீதிகளில் வாழ்பவர்கள் (போன்று தெரிந்தார்கள்). ஹோம்லெஸ் ஆக, துணைகளுடன் வாழ்பவர்களிற்கிடையேயும் சண்டை சச்சரவுகள் மிகச் சாதாரணமாகவே அடிக்கடி வரும். பல தடவைகள் தெருவில் பார்த்திருக்கின்றேன். இவர்களுக்கிடையேயும் அன்று ஏதோ ஒரு பிணக்கு ஆகியிருக்கவேண்டும். இவை எல்லாமே ஒரு அனுமானம் தான்.
 
ஜேக்கப் எங்கேயும் போயிருக்கமாட்டார். அன்றே பிந்திய இரவிலோஅல்லது அடுத்த நாளோ அந்தப் பெண்ணைத் தேடிப் போயிருப்பார்.
 
வாழ்க்கை சொல்லிக் கொடுத்த பாடம் இது....🤣🤣  
  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
25 minutes ago, ரசோதரன் said:
அடுத்த தடவை நீங்கள் இந்தப் பக்கம் வரும் போது, நானும் நீங்களும் அந்தப் புகையிரத நிலையத்திற்கு போகிறோம், ஜேக்கப்பை தேடிப் பிடிக்கிறோம், மிகுதிக் கதையைக் கேட்கிறோம்.......😀😀
 
ஜேக்கப்பும் அந்தப் பெண்ணும் வீதிகளில் வாழ்பவர்கள் (போன்று தெரிந்தார்கள்). ஹோம்லெஸ் ஆக, துணைகளுடன் வாழ்பவர்களிற்கிடையேயும் சண்டை சச்சரவுகள் மிகச் சாதாரணமாகவே அடிக்கடி வரும். பல தடவைகள் தெருவில் பார்த்திருக்கின்றேன். இவர்களுக்கிடையேயும் அன்று ஏதோ ஒரு பிணக்கு ஆகியிருக்கவேண்டும். இவை எல்லாமே ஒரு அனுமானம் தான்.
 
ஜேக்கப் எங்கேயும் போயிருக்கமாட்டார். அன்றே பிந்திய இரவிலோஅல்லது அடுத்த நாளோ அந்தப் பெண்ணைத் தேடிப் போயிருப்பார்.
 
வாழ்க்கை சொல்லிக் கொடுத்த பாடம் இது....🤣🤣  

அடடே நாம ஏதோ துப்பறியும் கணக்கில் எழுதுகிறீர்கள் என எண்ணிவிட்டேன்.

நன்றி.

  • Haha 2
  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 5/3/2024 at 00:00, ரசோதரன் said:

ஜேக்கப் அங்கே தான் ஒளித்து இருக்கின்றார் என்று அந்தப் பெண்ணுக்கு எப்படித் தெரியும் என்று எனக்கு விளங்கவில்லை.

பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, கிருபன் said:

பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜

👍...

நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.