Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • சரப்ஜித் சிங் தலிவால்
  • பதவி,பிபிசி செய்தியாளர், கனடாவிலிருந்து
  • 11 மார்ச் 2024

"நான் இந்தியாவுக்குச் சென்று என் தந்தையைக் கட்டிப்பிடித்து அழ விரும்புகிறேன், எனக்கு அவர் அருகில் இருக்க வேண்டும் என ஏக்கமாக உள்ளது."

இந்த வார்த்தைகளைச் சொன்னவுடனேயே அர்பன்-இன் கண்களில் கண்ணீர் வந்தது. பின் அவர் மௌனமாகி விட்டார். சில கணங்களில் அமைதியைக் கலைத்துவிட்டு, "இங்கே யாரும் யாருக்கும் சொந்தம் இல்லை, எல்லோரும் இங்கிருந்து ஓடிப் போகிறார்கள். கனடாவை பற்றி என்ன நினைத்திருந்தேனோ, இங்கே வந்த பிறகு அது தலைகீழாக மாறிவிட்டது," என்று அவர் கூறினார்.

தனது கனவுகளை நனவாக்கும் நோக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மாணவியாக கனடா வந்தார் அர்பன். அர்பன் பஞ்சாபின் முக்த்சார் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அவருடைய பெற்றோர் ஆசிரியர்கள்.

இரண்டு வருட படிப்பை முடித்த அர்பன், தற்போது பணி அனுமதி பெற்று ‘செக்யூரிட்டி’யாக பணியாற்றி வருகிறார். மேல்படிப்புக்காக கல்வி விசாவில் கனடாவுக்கு வரும் ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்களில் அர்பனும் ஒருவர். ஆனால், இங்குள்ள நிலைமைகள் அவர்களின் கனவுகளுக்கு மாறாக இருக்கிறது.

தன் சோகம் குறித்துப் பகிர்ந்துகொண்ட அர்பன், "நான் என் பெற்றோரை மிகவும் `மிஸ்` செய்கிறேன். அம்மா உணவு தயார் செய்வார். நான் விளையாடுவேன். அப்போது எனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை," என்றார்.

"நீ சாப்பிட்டாயா மகளே, எனக் கேட்பதற்கு இங்கே யாரும் இல்லை. இங்கே நீங்கள்தான் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்," என்கிறார் அவர்.

அர்பனின் கூற்றுப்படி, கனடாவுக்கு வரும் திட்டம் அவருக்கு இல்லை. உண்மையில், கனடா குறித்த பிரகாசமான காணொளிகளைப் பார்த்த பிறகே அவர் மிகவும் ஈர்க்கப்பட்டார். கனடா மிகவும் சுத்தமானது, மாணவர்களுக்குப் பெரிய கார்கள் மற்றும் வீடுகள் உள்ளன. மேலும் இந்த நாடு பெண்களுக்குப் பாதுகாப்பானது என, பஞ்சாபில் எல்லோரும் கனடாவை பற்றிப் பேசுவதை அர்பன் கவனித்தார்.

இளம் வயதில் இருக்கும் அர்பன் இதனால் மூலம் தான் மிகவும் கவரப்பட்டதாகவும், கனடாவுக்கு செல்ல முயல வேண்டும் என்று நினைத்ததாகவும் கூறுகிறார். "நான் எனது பட்டப்படிப்பை முடிக்க வேண்டும் என்று என் பெற்றோர் விரும்பினர். ஆனால், நீங்கள் எவ்வளவு சீக்கிரம் கனடா செல்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் `செட்டில்` ஆகிவிடுவீர்கள் என சிலர் என்னிடம் சொன்னார்கள்.”

அர்பனுக்கு 24 வயது ஆகிறது. அவர் சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் கனடா சென்றார்.

“எனவே, நான் 12ஆம் வகுப்பு முடித்தவுடனே மிக இளம் வயதிலேயே இங்கு வந்தேன். கனடாவில் வசிக்கும் நண்பர்கள் சிலர் இங்குள்ள பிரச்னைகளை என்னிடம் சொன்னாலும் கனடா என்ற `பேய்` என் மனதில் இருந்ததால் அவர்கள் சொன்னதை நான் பொருட்படுத்தவில்லை."

கனடா குறித்த கனவும் உண்மை நிலவரமும்

கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்

கனடாவுக்கு 2021இல் முதன்முறையாக வந்தபோது, தான் நினைத்துப் பார்க்காத வேறொரு உலகத்திற்கு வந்திருப்பது போன்று உணர்ந்ததாகவும் டொரண்டோ தனது கனவுகளின் நகரமாகத் தோன்றியது என்றும் அர்பன் கூறுகிறார்.

"ஏஜெண்ட்டுக்கு அறிமுகமான நபர் ஒருவர் என்னை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் சென்று ஒரு வீட்டின் கீழ்தளத்தில் தங்குவதற்கு வாடகைக்கு எடுத்தார், அங்கு நான் ஏழு மாதங்கள் தங்கினேன்," என்று அர்பன் கூறினார்.

"அந்த இடம் ஒரு மண்டபம் போன்று இருந்தது, அங்கு அறைகள் இல்லை, தரையில் வெறும் மெத்தைகள் மட்டுமே போடப்பட்டிருந்தன. வேறு சில பெண்களும் அங்கு தங்கியிருந்தனர். ஜன்னல்கள் இல்லை, முதல் ஏழு மாதங்கள் கனடாவில் எனது அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது."

கனடாவை பற்றி இந்திய குழந்தைகளுக்குக் காட்டப்படுவது வெறும் கனவுதான் என்கிறார் அர்பன். யதார்த்தம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இத்தகைய ஓரிடத்தில் வசிக்க வேண்டும் என முகவர்கள் சொல்லவில்லை.

படித்துக்கொண்டே எப்படி வேலை செய்ய வேண்டும், மாணவர்களிடம் எவ்வளவு சுரண்டப்படும் என்பது குறித்தெல்லாம் சொல்லவில்லை. இது பற்றி எந்தத் தகவலும் கொடுக்கப்படவில்லை. கனடாவை பற்றி எல்லாமே நன்றாகத்தான் சொல்லப்படுகிறது.

அர்பன் கூறுகையில், மாணவர்களின் வாழ்க்கை மிகவும் சிரமமானது. மன உளைச்சல், குடும்பத்தை விட்டு விலகியிருப்பது, வேலை கிடைக்காததால் ஏற்படும் அழுத்தம், இவை அனைத்தும் மாணவர் வாழ்க்கையின் போராட்டத்தின் ஒரு பகுதி.

தற்போது வேலைதான் பெரிய பிரச்னை என்று அர்பன் கூறினார். குளிர்காலத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு கண்காட்சிகளில், மாணவர்கள் நீண்ட வரிசையில் நின்று வேலை தேடுகிறார்கள்.

இந்த மாணவர்களில் சிலருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது, இந்தியாவில் கனடாவை பற்றி யாரும் இந்த உண்மையைச் சொல்வதில்லை. வாழ்க்கைச் செலவுகள், கல்லூரிக் கட்டணம், வேலை உறுதி இல்லாமை போன்றவற்றால் மனதில் எப்போதுமே மாணவர்களுக்குக் கவலை இருக்கும்.

என்னுடைய படிப்பை முடித்தது, வேலை கிடைத்தது, சம்பளம் வங்கிக் கணக்கில் வந்துவிட்டது என்பது போன்ற சில தகவல்களையே பெற்றோரிடம் தெரிவிப்பதாக அர்பன் கூறினார். மற்ற சிரமங்களை ஏன் சொல்லவில்லை என்று கேட்டால், அவர்கள் கவலைப்படுவார்கள், பெரும்பாலான மாணவர்கள் இப்படித்தான் செய்வார்கள் என்று அவர் கூறினார்.

“நான் சாப்பிடாவிட்டாலும், நான் சாப்பிட்டதாக என் பெற்றோரிடம் பொய் சொல்கிறேன். நான் வேலையிலிருந்து தாமதமாக வந்ததால் இன்று சமைக்க முடியவில்லை என்று என்னால் சொல்ல முடியாது."

சுமார் 24 வயதான அர்பன், தனக்குள் இருந்த குழந்தைமையை இளம் வயதிலேயே இழந்துவிட்டதாகவும் கனடாவில் தான் பெரிய பொறுப்புகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார். கனடா குடியுரிமை பெறுவதைத் தன் நோக்கமாகக் கொண்டுள்ளார் அர்பன். அதன் பிறகுதான் இந்தியா சென்று தன் பெற்றோருடன் இணையத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறார் அவர்.

அர்பனின் கூற்றுப்படி, கனடா ஒரு நல்ல நாடு, யாருக்கும் எந்தப் பாகுபாடும் இல்லை, முன்னேற சம வாய்ப்புகள் உள்ளன. ஆனால் மாணவர் வாழ்க்கை மிகவும் கடினம், இந்தியாவில் வாழும்போது அதைக் கற்பனை செய்து பார்க்க முடியாது என்றார்.

கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் திணைக்களத்தின் (IRCC) 2023 தரவுகளின்படி, இந்த ஆண்டு சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 29 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், அதிகமான இந்திய மாணவர்கள் கல்வி கற்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, சீன மாணவர்கள் இரண்டாவது இடத்திலும் பிலிப்பைன்ஸ் மாணவர்கள் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்திய மாணவர்களில், பஞ்சாப் மற்றும் குஜராத்தில் இருந்து அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கனடா செல்கின்றனர். இது தவிர, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா, ஹரியாணா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தற்போது கனடாவில் படித்து வருகின்றனர். இந்தியர்களில், கனடா செல்லும் மாணவர்களில் பஞ்சாபை சேர்ந்தவர்களே அதிகம்.

லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் பல ஆண்டுகளாக சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்த்து கனடா சென்றுள்ளனர். கிரேட்டர் டொரண்டோ ஏரியா (ஜிடிஏ) சர்வதேச மாணவர்களுக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கான மையமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, பிராம்ப்டன் `மினி பஞ்சாப்` என்று அழைக்கப்படுகிறது.

அக்ரமின் கதை

கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்
படக்குறிப்பு,

அக்ரம்

பஞ்சாபின் பர்னாலா மாவட்டத்தில் உள்ள துல்கோட் கிராமத்தைச் சேர்ந்த அக்ரமின் கதையும் அர்பனை போன்றது. 28 வயதான அக்ரம், 2023ஆம் ஆண்டு கல்வி அனுமதியின் பேரில் கனடாவுக்கு வந்து, தற்போது பிராம்ப்டனில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் திட்ட மேலாண்மை படித்து வருகிறார்.

தனது வகுப்பில் 32 மாணவர்கள் இருப்பதாக அக்ரம் கூறினார். இவர்களில் 25 பேர் இந்தியர்கள், மீதமுள்ளவர்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவரது வகுப்பில் கனடா வம்சாவளி மாணவர்கள் இல்லை.

கனடா வாழ்க்கையை பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அக்ரம், "கனடா ஒரு அழகான சிறை, நீங்கள் எல்லாவற்றையும் பெறுவீர்கள், ஆனால் உங்கள் வாழ்நாள் முழுவதும் அதிலிருந்து உங்களால் வெளியேற முடியாது," என்று கூறுகிறார்.

அக்ரம் கூறுகையில், "தற்போது இங்கு எந்திரங்கள் போல் இருக்கிறோம், காலை முதல் மாலை வரை உழைக்கிறோம், சிலந்தி வலையில் இருந்து வெளியே வரமுடியாது," என்றார். அக்ரமின் கல்லூரி வாரத்தில் மூன்று நாட்கள் மாலை இரண்டு மணிநேரம் நடைபெறுகிறது.

கூலித் தொழிலாளி குடும்பத்தைச் சேர்ந்த அக்ரம் ரூ.22 லட்சம் கடனுடன் கனடா வந்துள்ளார். இந்த கடனைத் திருப்பிச் செலுத்துவதோடு, அவரது கனவுகளையும் நிறைவேற்ற, அவர் இரண்டு பணிநேரங்களில் கடுமையாக உழைக்க வேண்டும்.

அவரைப் பொறுத்தவரை, இந்தியாவில் கனடா குறித்து சொல்லப்படுவது முழு உண்மை இல்லை என்பதை அந்நாட்டுக்கு சென்றவுடன் அவர் அறிந்தார். அக்ரம் திறமையான, இலக்கியத்தில் ஆர்வமுடைய இளைஞர். பஞ்சாபிலேயே இலக்கியம் தொடர்பான நடவடிக்கைகளில் பங்கேற்றார் அக்ரம்.

கனடா வந்த பிறகு அவருடைய கவிதைகளின் எழுத்துகள் மாறிவிட்டன. அக்ரமின் கவிதைகள் பஞ்சாப் நிலத்தின் மீதான அவரது ஏக்கத்தையும் கனடாவின் கடினமான சூழ்நிலைகளையும் பிரதிபலிக்கின்றன.

கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்

செலவுகளைச் சமாளிக்க எல்லா நேரமும் வேலை செய்வதும், எதிர்காலத்தைப் பற்றிய கவலையும் பொதுவாக அவர்களின் முகங்களிலும் வார்த்தைகளிலும் பிரதிபலிக்கின்றன.

கடனைத் திருப்பிச் செலுத்துதல், கல்லூரிக் கட்டணம், வாழ்க்கைச் செலவுகளைச் சந்திக்க, அக்ரம் தற்போது இரண்டு இடங்களில் பகுதிநேர வேலை செய்கிறார். பகலில் கணினி மையத்திலும், இரவில் செக்யூரிட்டியாகவும் பணிபுரிகிறார். அவர் ஐந்து மணிநேரம் மட்டுமே தூங்குகிறார்.

அக்ரம் கூறுகையில், “ஒருபோதும் பதற்றம் குறையாது, குடும்ப உறுப்பினர்களிடம் பேசுவது மன அழுத்தத்தில் இருந்து எனக்கு கொஞ்சம் நிவாரணம் அளிக்கிறது" என்றார்.

அக்ரம், அர்பனை போலவே, கனடாவில் உள்ள பிரச்னைகள் பற்றி எதையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வதில்லை. அக்ரம் தற்போது தனது ஐந்து நண்பர்களுடன் கீழ்தளத்தில் வாடகைக்கு வசிக்கிறார். ஹல்லுன்மா கீழ்தளத்தில் இரண்டு படுக்கைகளும் தரையில் சில படுக்கை விரிப்புகளும் உள்ளன.

ஒரு படுக்கை காலியாக உள்ளது, மே மாதம் இந்தியாவிலிருந்து வரும் மற்றொரு சர்வதேச மாணவருக்காக அப்படுக்கை காத்திருப்பதாக அக்ரம் கூறுகிறார். அக்ரம் தங்கியிருக்கும் கீழ்தளமும் திறந்த மண்டபம் போன்றே உள்ளது.

மன உளைச்சலுக்கு ஆளாகும் மாணவர்கள்

கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்
படக்குறிப்பு,

நிர்லெப் சிங் கில்

நிர்லெப் சிங் கில் பிராம்ப்டனில் உள்ள பஞ்சாபி சமூக சுகாதார சேவைகள் தொடர்பாகப் பணிபுரிகிறார். இந்தியா, குறிப்பாக பஞ்சாபை சேர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கில் கையாள்கிறார்.

இதுகுறித்து நிர்லெப் கில் விளக்குகையில், "கனடாவில் உள்ள மாணவர்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்வதால், பலரும் மனநல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக மிக இளம் வயதில் (12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பிறகு) கனடாவுக்கு வரும் குழந்தைகள் அதிக சிக்கல்களைச் சந்திக்கின்றனர்," என்றார்.

நிர்லெப் சிங் கில் கூறுகையில், இந்த மாணவர்கள் இளம் வயதினராக இருப்பதால் அவர்கள் மனதளவில் முதிர்ச்சி அடையவில்லை.

கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்

அவர்களுக்கு மன அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. அவர்கள் தங்கள் பெற்றோரிடம் எதையாவது சொன்னாலும், பெற்றோர்களால் அதைப் புரிந்து கொள்ள முடியாது" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "இந்தப் பிரச்னை அனைத்து சர்வதேச மாணவர்களிடமும் இல்லை, சிலர் இங்கு முன்னேறியுள்ளனர். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது" என்கிறார்.

சர்வதேச மாணவர்களிடையே மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்று கேட்டால் அதற்குப் பல காரணங்கள் இருப்பதாகக் கூறுகிறார்.

"முதல் காரணம் எதிர்பாராத பொறுப்பு, இந்தியாவில் குழந்தைகள் வசதியான நிலையில் இருக்கிறார்கள், அதாவது அவர்களின் பெற்றோர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறார்கள், எந்தப் பொறுப்பும் இல்லை. ஆனால், கனடாவுக்கு வந்ததும் அவர்கள் உடனடியாக பல பொறுப்புகளைச் சந்திக்கின்றனர். இதற்கு அவர்கள் மனதளவில் தயாராக இல்லை."

போதைப் பழக்கம்

கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்

“கனடாவில் போதைப்பொருள் பரவி வருகிறது. இந்தியாவில் சில வகையான போதைப் பொருள்கள் மட்டுமே உள்ளன. ஆனால், கனடாவில் 55 முதல் 70 வகையான போதை பொருள்கள் கிடைக்கின்றன. போதைக்கு அடிமையாகி, மாணவர்கள் மன மற்றும் உடல் பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்."

இதுமட்டுமின்றி, போதைப்பொருளை அதிகளவில் உட்கொள்வதால் மாணவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலிருந்து அதிகமானோர் கனடாவில் வசிப்பதாகவும், சர்வதேச மாணவர்களின் இறப்பு எண்ணிக்கை மட்டும் ஏன் அதிகரித்து வருகிறது என்றும் நிர்லெப் சிங் கில் கூறினார்.

பெரும்பாலான இறப்புகள் மாரடைப்புடன் தொடர்புடையவை என்று கில் கூறினார். இத்துடன் பல்வேறு காரணங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகி மாணவர்கள் தற்கொலை செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது.

மன அழுத்தம் - ஏன்?

கனடாவில் அதிகான மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு இந்தச் சூழலை எவ்வாறு கையாள்வது என்று தெரியவில்லை என்றால், அவர்கள் விரக்தியடைகின்றார். இதுதவிர, அவர்கள் கனடா குடியுரிமை மற்றும் நிரந்தர குடியிருப்பு (PR) பெறுவது குறித்தும் மன அழுத்தத்தில் உள்ளனர்.

கனடாவில் மாணவர்கள் மரணம்

கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்

சர்வதேச மாணவர் சமூகத்தில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் இன்னொரு விஷயம் கனடாவில் நிகழும் மாணவர்களின் மரணம். இதுகுறித்து அறிய பிராம்ப்டனில் இறுதிச் சடங்கு நடத்துவதற்கான தனியார் அமைப்பின் மேலாளர் ஹர்மிந்தர் ஹன்சியிடம் பிபிசி பேசியது. அவர் 15 ஆண்டுகளாக அந்த அமைப்பை நடத்தி வருகிறார்.

சர்வதேச மாணவர்களின் இறப்பு விகிதம் சமீப காலமாக கணிசமாக அதிகரித்துள்ளது என்று ஹர்மிந்தர் ஹன்சி கூறினார்.

இறப்புக்கான காரணங்களை பற்றிப் பேசுகையில், பெரும்பாலான இறப்புகளில், இயற்கை காரணங்களால் இறப்பது ஒன்றிரண்டு நிகழ்வுகள்தான் என்றும் பெரும்பாலான இறப்புகளுக்குக் காரணம் தற்கொலைதான் என்றும் ஹர்மிந்தர் ஹன்சி தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி, போதைப்பொருளை அதிகமாக உட்கொள்வதாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளும் சர்வதேச மாணவர்களிடையே மரணத்தை ஏற்படுத்துகின்றன.

கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்
படக்குறிப்பு,

ஹர்மிந்தர் ஹன்சி

ஒவ்வொரு மாதமும் சுமார் நான்கு-ஐந்து இறந்த உடல்களை அவர்கள் இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். இதுதவிர சிலர் கனடாவிலும் அவற்றைத் தகனம் செய்கிறார்கள், அதன் தரவு கிடைக்கவில்லை என்று ஹன்சி கூறினார். ஹன்சியின் கூற்றுப்படி, தற்போது கிரேட்டர் டொரண்டோ ஏரியாவில் இத்தகைய அமைப்புகள் பல உள்ளன. கனடா முழுவதிலும் உள்ள தரவுகளை ஒருங்கிணைத்தால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்றார்.

கடந்த 2023 டிசம்பரில், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன், மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த போது, 2018 முதல் டிசம்பர் 2023 வரை 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் இறந்துள்ளனர், அதில் அதிகபட்சமாக கனடாவில் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவற்றில் சில மரணங்கள் இயற்கையானவை என்றும், சில விபத்துகளால் ஏற்பட்டவை என்றும் அவர் அந்த பதிலில் தெரிவித்தார். 2023 டிசம்பரில், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ஷி, இந்தியாவில் இருந்து கனடாவுக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளைவிட மிக அதிகம் என்று கூறியிருந்தார்.

கனடாவில் படிப்பு அனுமதி பற்றிய உண்மை என்ன?

கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்

ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான இந்திய மாணவர்கள் படிப்பு அனுமதியின் பேரில் கனடா செல்கின்றனர். கனடா அரசின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் செயலில் உள்ள மாணவர் விசாக்களின் எண்ணிக்கை சுமார் 29 சதவீதம் அதிகரித்து சுமார் 10 லட்சத்து 40 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

இவர்களில் சுமார் நான்கு லட்சத்து 87 ஆயிரம் பேர் இந்திய மாணவர்கள். இது 2022ஐ விட 33.8 சதவீதம் அதிகம். சர்வதேச மாணவர்கள் கனடா மாணவர்களைவிட மூன்று மடங்கு அதிக கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கனடா அரசாங்கத்தின் 2022 அறிக்கையின்படி, சர்வதேச மாணவர்கள் இங்குள்ள பொருளாதாரத்திற்கு 22 பில்லியன் கனடா டாலர்களை பங்களித்துள்ளனர். கூடுதலாக 2.2 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கியுள்ளனர்.

இதன் காரணமாக, கனடா பொருளாதாரத்திற்கு சர்வதேச மாணவர்கள் அவசியமானவர்களாகத் தோன்றுகின்றனர். இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் இருந்து மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் கனடாவுக்கு படிப்பதற்காக வருகிறார்கள். இதில் பெரும்பாலான மாணவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்.

இதன் காரணமாக, கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சர்வதேச மாணவர்களைச் சேர்க்க முன்னுரிமை அளித்து வருகின்றன. பல கல்லூரிகள் பெயருக்கு மட்டுமே கல்லூரிகள். பல கல்லூரிகளுக்கு வளாகமோ மைதானமோ கிடையாது. இரண்டு அறைகளில்தான் கல்லூரிகள் இயங்குகின்றன. இதுபோன்ற கல்லூரிகளுக்கு எதிராக கனடா அரசு இப்போது சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

கடந்த 2012 முதல் 2021 வரை, மாகாணத்தின் தனியார் கல்லூரிகளில் உள்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் குறைந்துள்ளது என்று ஒன்டாரியோவின் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் துறையின் அறிக்கை தெரிவிக்கிறது.

அதேநேரம், இந்தக் காலகட்டத்தில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் 342 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் 62 சதவீதம் பேர் இந்தியாவை சேர்ந்த மாணவர்கள்.

கனடாவில் கல்வி நிலை

கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்
படக்குறிப்பு,

ஜஸ்விர் ஷமீல்

எல்லாவற்றுக்கும் மேலாக, கனடாவில் கல்வி நிலை என்ன?

இதுகுறித்து டொரண்டோவில் நீண்டகாலமாக பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் ஜஸ்விர் ஷமீல் கூறுகையில், கடந்த பத்து ஆண்டுகளில் கனடாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறிப்பாக இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

“கனடாவுக்கு வருவதற்கான ஒரு வழி படிப்பு அனுமதி. இங்கு, படிப்பை முடித்த பின், பெரும்பாலான மாணவர்கள், லாரி ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள், டெலிவரி தொழிலாளர்கள், உணவகப் பணியாளர்கள் என பணிபுரிய துவங்குகின்றனர்."

இந்த மாணவர்களில் பெரும்பாலானோர் இத்தகைய வேலைகளில் சிக்கித் தவிப்பதாக ஷமீல் கூறுகிறார்.

"படிப்புக்கு ஏற்ற வேலைகள் கிடைப்பது மிகவும் குறைவு. கனடாவின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. மாணவர்களை விடுங்கள், இங்குள்ள குடிமக்களுக்குக்கூட வேலை கிடைக்கவில்லை" என்றார். கனடாவில் உள்ள தனியார் கல்லூரிகள் இந்திய மாணவர்களால் நிரம்பியுள்ளன. பல கல்லூரிகளில் 95 சதவீத இந்திய மாணவர்கள் உள்ளனர் என அவர் கூறினார்.

ஜனவரி 2024இல், கனடா அரசாங்கம் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் சில கட்டுப்பாடுகளை விதித்ததாக அவர் தெரிவித்தார். சர்வதேச மாணவர் சேர்க்கை வரம்புகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கனடா அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை 35 சதவீதம் குறைத்துள்ளது. இதுதவிர, முதுகலை அல்லது முனைவர் படிப்பைத் தொடர இங்கு வரும் சர்வதேச மாணவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கு குறைந்த படிப்புகளில் படிக்கும் மாணவர்கள், தங்களின் கணவர் அல்லது மனைவியை வாழ்க்கைத் துணை விசா மூலம் கனடாவுக்கு அழைத்துக்கொள்ள முடியாது. கனடா நாட்டில் தங்கும் இடங்களுக்கான பிரச்னை தலைதூக்கியிருப்பதாலேயே இந்த நடவடிக்கையை அந்நாடு எடுத்துள்ளது.

கனடா முழுவதும் தற்போது 3 லட்சத்து 45 ஆயிரம் வீடுகள் பற்றாக்குறையாக இருப்பதாக கனடா அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மாணவர்கள் கீழ்தளங்களில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உணவு வங்கிகளின் ஆதரவு

கனடாவில் "மிக மோசமான" சூழலில் இந்திய மாணவர்கள்

கனடாவில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் சர்வதேச மாணவர்கள் பலரால் வேலை தேட முடியவில்லை.

வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கம் அதிகரித்து வருவதால், பல மாணவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்குக்கூட சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

இதனால் பல மாணவர்கள் சீக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உணவு வங்கிகளை நம்பியிருக்க வேண்டியுள்ளது. விஷால் கண்ணா பிராம்ப்டனில் உணவு வங்கி நடத்தி வருகிறார்.

"கல்லூரி கட்டணம், வீட்டு வாடகை மற்றும் வேலையின்மை காரணமாக பல மாணவர்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர்," என்கிறார் கண்ணா.

கண்ணாவின் கூற்றுப்படி, அவர்கள் ஒவ்வொரு மாதமும் 600 முதல் 700 மாணவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்குகின்றனர். சர்வதேச மாணவர்களின் கூட்டத்தை குருத்வாராக்களிலும் பொதுவாகக் காணலாம்.

பெயர் தெரிவிக்க விரும்பாத மாணவர்கள் சிலர், தாங்கள் குருத்வாராக்களில் சாப்பிட செலவதாகத் தெரிவித்தனர். குருத்வாராக்களின் மேலாளர்களும் அத்தகைய மாணவர்களுக்கு உதவ முன்வருகிறார்கள்.

ஏன் இந்தியா திரும்பவில்லை?

இங்கு வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தால் ஏன் இந்தியாவுக்கு திரும்பவில்லை என்று அக்ரமிடம் கேட்டதற்கு, "கிராம மக்கள் என்ன சொல்வார்கள்? உறவினர்கள் என்ன சொல்வார்கள்?" என்கிறார்.

"நாங்கள் விரும்பினாலும் நாடு திரும்ப முடியாது. உறவினர்கள் மற்றும் சமூகத்தின் அழுத்தம் காரணமாக நாங்கள் அவ்வாறு செய்ய முடியாது" என்று அவர் கூறினார்.

திரும்பிச் சென்றால் இந்தியாவில் கனடாவை பற்றிய கனவுகள் என்னவாகும் என்று இந்த மாணவர்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.

அக்ரம் கூறும்போது, “நாங்கள் நாடு திரும்பும்போது, மக்கள் நம்மை எதிர்மறையாகப் பார்ப்பார்கள். கனடாவில் குடியேறுவதற்கான பாதை மிகவும் கடினமானதாகவும் நீண்டதாகவும் தெரிகிறது, ஆனால் நாங்கள் எங்கள் இலக்கை நிச்சயம் அடைவோம்," என்கிறார்.

அர்பனும் கனடாவில் உள்ள வாழ்க்கையால் சோர்வடைந்து பஞ்சாவுக்கு திரும்பி தனது பெற்றோரைச் சந்திக்க விரும்புகிறார். ஆனால் கனடா குடியுரிமை பெறாதது இன்னும் பெரிய தடையாக இருக்கிறது. கனடா குடியுரிமை பெற்ற பிறகுதான் அர்பன் இந்தியா திரும்ப விரும்புகிறார்.

கனடா: இந்திய மாணவர்களை துன்புறுத்தும் மிக மோசமான சூழல் - அங்கு என்ன நடக்கிறது? - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

கனடா -இந்தியா முறுகல் நிலையைத் தொடர்ந்து, கனடா மீதான இந்தியர்களின் சேறடிப்பு Smear campaign அதிகரித்திருக்கிறது. 
BBC யில் அதிகரித்துவரும் கனடா மீதான சேறடிப்பு இதற்கு நல்ல உதாரணம். 

சரியான தெரிவுகளைச் செய்யாது தவறுகளைச் செய்தபின்னர் மேடை சரியில்லை என்றால்? 

😩

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.