Jump to content

"ஐம்பெரும் காப்பியத்தின் இரு சுவைசொட்டும் வரிகள்"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
"ஐம்பெரும் காப்பியத்தின் இரு சுவைசொட்டும் வரிகள்"
 
 
தனது கணவனின் குற்ற மற்ற தன்மையை பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிருபித்த கண்ணகியின் சுவை சொட்டும் வரிகளை பாருங்கள்.
 
அதே நேரம் இப்ப இப்படி ஒரு கண்ணகி, கண்ணகியை பத்தினி தெய்வமாக போற்றும் நாடுகளிலாவது வாதிட முடியுமா? எனவும் சிந்தியுங்கள்!
 
"தேரா மன்னா செப்புவது உடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி"
(வழக்குரை காதை : 50-63)
 
“உண்மை தெளியா மன்னனே! சொல்லுகிறேன் கேள். தேவர்களும் வியக்கும்படி ஒரு புறாவினது துன்பத்தை நீக்கின சிபி என்னும் செங்கோல் மன்னனும்; தனது அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியை இடைவிடாது அசைத்து ஒலித்த ஒரு பசுவின் துயரைப் போக்க எண்ணி, அப்பசுவின் துன்பத்திற்குக் காரணமான தனது அரும்பெறல் மகனைத் தானே தனது தேர்ச் சக்கரத்திலிட்டுக் கொன்றவனான செங்கோல் வேந்தன் மநுநீதிச் சோழனும் அருளாட்சி செய்த பெரும் புகழை உடைய புகார் நகரம் என்னுடைய ஊராகும்.
 
புகார் நகரில் மிக்க புகழுடன் விளங்கும் பெருங்குடி வணிகனான மாசாத்துவான் என்னும் வணிகனது மகனாய்ப் பிறந்து, வாணிகம் செய்து வாழ்தலை விரும்பி, ஊழ்வினை காரணமாக உனது பெரிய நகரமாகிய மதுரையிலே புகுந்து, இங்கு அத்தொழிலுக்கு முதலாக என்னுடையகாற்சிலம்புகளுள் ஒன்றினை விற்பதற்கு வந்து, உன்னால் கொலைக்களப்பட்ட கோவலன் என்பான் மனைவி ஆவேன். என்னுடைய பெயர் கண்ணகி” என்றாள்.
 
 
 
"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லா ர்க்கு இவ்வுலகம் இல்லை" என்பார்கள் அப்படிப்பட்ட பணம் பத்தும் செய்யும். இதை நாம் இப்ப பல இடங்களில் பல தடவை கண்டுள்ளோம். அதை எப்படி வளையாபதி கூறுது என்று பாருங்கள்.
 
"குலம் தரும், கல்வி கொணர்ந்து முடிக்கும்,
அலந்த கிளைகள் அழி பசி தீர்க்கும்,
நிலம் பக வெம்பிய நீள் சுரம் போகிப்
புலம்பு இல் பொருள் தரப் புன்கண்மை உண்டோ?"
 
நம் கையில்மட்டும் காசு இருந்துவிட்டால், அது என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?
 
மாந்தர்க்கு உயர்குடிப் பெருமையைத் தரும்; அறிவுச் செல்வத்தையும் வரவழைத்துக் கொடுக்கும்; உற்றார் உறவினர் பசிப்பிணியைப் போக்கி அவரை யுய்விக்கும், ஆதலால் மாந்தர் பாலை நிலங்கடந்தும் திரைகட லோடியும் அப்பொருளை நிரம்ப ஈட்டுதல் வேண்டும் என்கிறது!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
No photo description available. No photo description available. 
 
 
 
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.