Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பொது வேட்பாளர் : சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு - நிலாந்தன்

438174770_1168423184148437_8556757522994

கடந்த  மாதம் 30ஆம்  திகதி வவுனியாவில் வாடிவீட்டு விடுதியில் தமிழர் தாயகத்தைச் சேர்ந்த சிவில் சமூகங்களும் மக்கள் அமைப்புகளும் கூடிக் கதைத்தன. ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை  நிறுத்துவது என்று மேற்படி  சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டது. ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டது.

அது ஒரு முக்கியமான சிவில் சமூகச் சந்திப்பு. காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 4 மணி வரை நிகழ்ந்த அச்சந்திப்பில் தமிழர் தாயகத்தைச் சேர்ந்த 32 சிவில் சமூகங்கள் மற்றும் மக்கள் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அமைப்புகளைச் சாராத செயற்பாட்டாளர்களுமாக மொத்தம் 46 பேர் பங்கு பற்றினார்கள்.

மதத் தலைவர்கள், கருத்துருவாக்கிகள், ஏற்கனவே பொதுத் தமிழ் வேட்பாளர் என்ற விடயத்தை முன்னிலைப்படுத்தி கருத்தரங்குகளை ஒழுங்குபடுத்திய “மக்கள் மனு” என்ற சிவில் அமைப்பு, வெளிநாட்டுத் தூதரகங்களோடான சந்திப்புகளில் தொடர்ச்சியாக தமிழ் நோக்கு நிலையை வெளிப்படுத்தும் “தமிழ் சிவில் சமூக அமையம்”  உள்ளிட்ட பலமான சிவில் அமைப்புகள். வலிந்து காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கான அமைப்பு, அரசியல் கைதிகளுக்கான அமைப்பாகிய “குரலற்றவர்களின் குரல்” அமைப்பு, வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவ அமைப்புகள், மயிலத்தமடுவில் மேய்ச்சல் தரையை மீட்பதற்காகப் போராடும் அமைப்பு,தமிழ்ப் பகுதிகளில் தொடர்ச்சியாக இயங்கும் செயற்பாட்டு அமைப்புக்கள்… முதலாக பல்வேறு வகைப்பட்ட அமைப்புக்கள் அச்சந்திப்பில் பங்குபற்றின.

மிகக்குறிப்பாக “பொங்கு தமிழ்” எழுச்சியின் முக்கியஸ்தர்கள், ”எழுக தமிழ்” எழுச்சிக்குப் பின்னால் இருந்து உழைத்தவர்கள், “பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான” அமைப்பின் இணைத் தலைவர்கள் என்று, தமிழ்ப் பரப்பில் நிகழ்ந்த மூன்று எழுச்சிகளின் பின்னால் நின்று உழைத்த பிரதிநிதிகளும் அங்கே வந்திருந்தார்கள் என்பது ஒரு சிறப்பம்சம். இம்மூன்று மக்கள் எழுச்சி அமைப்புகளின் முக்கியஸ்தர்கள் அவ்வாறு ஒரு சந்திப்பில் ஒன்றுகூடியமை என்பது கடந்த 15 ஆண்டுகளில் இதுதான் முதல் தடவை. சந்திப்பின் முடிவில் வெளியிடப்பட்ட  கூட்டு அறிக்கை வருமாறு….

“தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள்வதும் சிந்திப்பதும் செயற்படுவதும் காலத்தின் தேவை என்ற அடிப்படையில் 30/௦4/2024 அன்று வவுனியா வாடிவீடு விடுதியில் ஒன்றுகூடிய தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூகத்தினர் பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டனர்.

1.-தமிழ் மக்கள்  ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதி தேர்தலை கையாள்வது.

2-ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து, அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாக கையாள்வது.

3.-அதற்கு அமைய ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நிறுத்துவது.

4-அதற்காக சிவில் சமூகமும் தமிழ்த் தேசியக் கட்சிகளும்  இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது.

5.-தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்காலக்          கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயல்படுவது..”

இவ்வாறு சிவில் சமூகங்களும் மக்கள் அமைப்புகளும் தங்களுக்கு இடையே ஒரு பொது நிலைப்பாட்டை எடுத்தபின்,அடுத்த கட்டமாக அந்த நிலைப்பாட்டின் அடிப்படையில் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளோடு இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு பொது கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் பொருட்டு கட்சிகளோடு உரையாடுவதற்கு என்று ஒரு குழு உருவாக்கப்பட்டது.

IMG-20240504-WA0025-1024x768.jpg

பொதுக் கட்டமைப்பானது சிவில் சமூகங்களையும் அரசியல் கட்சிகளையும் கொண்டதாக அமையும். பொதுக் கட்டமைப்பு ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நிறுத்துவதற்கு தேவையான குழுக்களை உருவாக்கும். ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்பதற்கான ஒரு உபகுழு,தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்கான உபகுழு, நிதி விவகாரங்களை கையாள்வதற்கான உபகுழு, பொதுத் தமிழ் வேட்பாளர் என்ற தெரிவை ஏற்றுக் கொள்ளாத ஏனைய தரப்புக்குளோடு உரையாடுவதற்கும் தென்னிலங்கையில் உள்ள கட்சிகளோடு உரையாடுவதற்கும் ஓர் உபகுழு.. என்று வெவ்வேறு உபகுழுக்கள் உருவாக்கப்படும். அதாவது ஒரு தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்துவது தொடர்பாக கட்டமைப்பு ரீதியாக சிந்திக்கப்படுகின்றது என்று பொருள்.

தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகின்றவர் தமிழ்ப் பொது நிலைப்பாட்டின் குறியீடு. தமிழ்ப் பொது நிலைபாடு எனப்படுவது பிரயோக நிலையில் தமிழ் ஐக்கியம்தான். தமிழ் ஐக்கியம் என்பது இங்கு தமிழ் கட்சிகளின் ஐக்கியம் என்பதைக் கடந்து கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் மக்கள் அமைப்புகளும் இணைந்த ஒரு கட்டமைப்பாகச் சிந்திக்கப்படுகின்றது.

கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் மக்கள் மத்தியில் நிகழ்ந்த எல்லா எழுச்சிகளும் சிவில் சமூகமும் அரசியல் சமூகமும் இணைந்த ஒரு கட்டமைப்புக் கூடாகவே சிந்திக்கப்பட்டது. எழுத தமிழாகட்டும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பெரெழுச்சியாகட்டும் ஏனைய எந்த ஒரு பெரிய மக்கள் எழுச்சியாக இருந்தாலும், அங்கே தனியாகக் கட்சிகள் அதனை முன்னெடுக்கவில்லை. தனிய சிவில் சமூகங்களும் அதனை முன்னெடுக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளிலும் வெற்றி பெற்ற எல்லாப் பேரெழுச்சிகளும் சிவில் சமூகங்களும் அரசியல் சமூகமும் இணைந்து பெற்ற வெற்றிகள்தான்.

அப்படித்தான் கடந்த 15 ஆண்டுகளுக்குள் ஐநாவுக்கு அனுப்பப்பட்ட கூட்டுக் கடிதம், பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட 13 அம்ச ஆவணம், தமிழகத்தில் சிறப்பு முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்கக் கோரி தமிழக முதல்வருக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனுப்பிய கூட்டுக் கடிதம்..உள்ளிட்ட பெரும்பாலான முயற்சிகள் கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்து முன்னெடுத்தவைதான். இதை இன்னும் சரியான வார்த்தைகளில் சொன்னால், கட்சிகளும் சிவில் சமூகங்களும் இணைந்த போதுதான் வெற்றிகள் கிடைத்தன. அந்த அடிப்படையில்தான் இப்பொழுதும் அவ்வாறான ஒரு வெற்றியை நோக்கி சிந்திக்கப்படுகின்றது.

இந்தக் கட்டமைப்பு வெற்றிபெறுமாக இருந்தால் இது ஜனாதிபதி தேர்தலுக்கான ஒரு கட்டமைப்பு என்பதைக் கடந்து தமிழ்ப்பொது விருப்பத்தை வெளிப்படுத்தும் ஒரு பொருத்தமான அரசியல் தளமாக மாற்றப்பட வேண்டும் என்ற விருப்பமும் மேற்படி கூட்டறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது. அதன்படி எதிர்காலத்தில் தமிழ் அரசியலை தீர்மானிப்பதற்கு தேவையான ஒரு பலமான மக்கள் அமைப்புக்குரிய பொருத்தமான கட்டமைப்பாக அது வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உண்டு.

கடந்த 15 ஆண்டுகளிலும் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் மக்கள் பேரவை தோன்றியது. தமிழ் மரபுரிமைப் பேரவை தோன்றியது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான பேரெழுச்சி இயக்கம் தோன்றியது. ஆனால் இவை எவையுமே அவற்றின் அடுத்தடுத்த கட்டக் கூர்ப்புக்குப் போகவில்லை. இவை எவையுமே தேர்தல்மைய அரசியலைக் கடந்த ஒரு வெகுசன அரசியலை முன்னெடுக்கும் பொருத்தமான ஏற்பாடுகளாகக் கூர்ப்படையவில்லை. இந்த மூன்று கட்டமைப்புகளின் எழுச்சியில் இருந்தும் வீழ்ச்சியிலிருந்தும் அல்லது போதாமைகளில் இருந்தும் கற்றுக்கொண்டு ஒரு புதிய பொருத்தமான கட்டமைப்பை உருவாக்குவதற்கான முதல் அடிவைப்பாக மேற்படி கூட்டறிக்கையில் கூறப்பட்டிருக்கும் பொதுக் கட்டமைப்பை எடுத்துக் கொள்ளலாமா?

IMG-20240430-WA0011-1024x768.jpg

கடந்த 15 ஆண்டுகளிலும் கட்சி அரசியல் எனப்படுவது வளர்ச்சியாக இல்லை. தேய்மானமாகத்தான் இருக்கின்றது. பெரிய கூட்டுக்கள் உடைந்து சிறு கூட்டுகள் உருவாகி வருகின்றன.கூட்டுக்கள் உடைந்துடைந்து உருவாகும் தனிக் கட்சிகளும் கூட பின்நாளில் தங்களுக்குள் உடைகின்றன. அதாவது கடந்த 15 ஆண்டு கால கட்சி அரசியல் எனப்படுவது, தேயும் அல்லது சிதறும் ஒரு போக்காகத்தான் காணப்படுகின்றது. வளரும் ஒரு போக்காக அல்லது திரளும் ஒரு போக்காக இல்லை. மக்கள் இயக்கங்களும் தோன்றி மறைகின்றன. தொடர்ச்சியாக அடுத்த கட்ட வளர்ச்சிக்குப் போகவில்லை.

எனவே இந்தப் பாரதூரமான வெற்றிடத்தின் பின்னணியில் சிவில் சமூகங்களும் கட்சிகளும் இணைத்து ஒரு புதிய வளர்ச்சிக்குப் போகவேண்டிய ஒரு தேவை வலிமையாக மேலெழுகின்றது. ஜனாதிபதி தேர்தலைப் பயன்படுத்தி அவ்வாறான ஒரு கட்டமைப்பின் கருநிலைக் கட்டமைப்பை உருவாக்கினால் அது எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப ஒரு பொருத்தமான வளர்ச்சியை அடையும் என்ற எதிர்பார்ப்பு சிவில் சமூகங்களிடம் காணப்படுகின்றது.

கடந்த 15 ஆண்டுகளிலும் பெரிய கட்சிகள் பலமாக இருக்கும் பொழுது அல்லது பெரிய கூட்டு பலமாக இருக்கும் பொழுது சிவில் சமூகங்களை மதிப்பது குறைவு. 2014 ஆம் ஆண்டு மன்னாரில் நடந்த சந்திப்பு ஒன்றில் சம்பந்தர் அப்போதிருந்த மறைந்த ஆயர் ராயப்பு ஜோசஃப் அவர்களை நோக்கி சொன்ன பதில் அதைத்தான் காட்டுகிறது. ”பிஷப் நீங்கள் சொல்லுவதை சொல்லுங்கோ நாங்கள்தான் முடிவெடுக்கிறது” என்று சம்பந்தர் திமிராகச் சொன்னார். ஆனால் 2020ல் கூட்டமைப்பின் ஏகபோகம் உடைந்து அதன் ஆசனங்கள் வெளியே போனபோது கூட்டமைப்பு இறங்கி வந்தது. அதன் விளைவுதான் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்ட ஒரு கூட்டுக் கடிதம். அதாவது கட்சிகள் பலமாக இருக்கும் போது அல்லது கூட்டுக்கள் பலமாக இருக்கும் பொழுது அவர்கள் சிவில் சமூகங்களை மதிப்பதில்லை. ஆனால் கட்சிகள் பலவீனமடையும் போது சிவில் சமூகங்கள் கட்சிகளின் மீது தார்மீக தலையீட்டைச் செய்யக் கூடியதாக இருக்கின்றது. அப்படி ஒரு கட்டம் இப்பொழுது தமிழ் அரசியலில் ஏற்பட்டிருக்கிறது.

ஜனாதிபதித் தேர்தல் எனப்படுவது அரசாங்கத்தால் ஏற்படுத்தித் தரப்பட்ட ஒரு வாய்ப்பு. அதைத் தமிழ்த் தரப்பு தனது நோக்கு நிலையில் இருந்து கையாள முடியும். இதை கவித்துவமாகச் சொன்னால், அரசாங்கம் திறந்து விட்டிருக்கும் ஒரு மைதானத்தில் தமிழ் மக்கள் தங்களுடைய விளையாட்டை விளையாடுவது.
 

https://www.nillanthan.com/6743/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.