Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'தோழர் இரும்பு' என்னும் இச் சிறுகதை ஜான் சுந்தர் அவர்களால் எழுதப்பட்டு 'அகழ்' இதழில் வெளிவந்திருக்கின்றது.

'தோழர்கள்' எப்போதுமே கொஞ்சம் 'இரும்பு' போன்றவர்கள்தான். கொள்கை, கோட்பாடுகள், இலட்சியம் என்று உறுதியாக, வளைந்து கொடுக்காமல் வாழ்பவர்கள். அவர்கள் சாதாரண மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயல்வதில்லை, அவை ஒவ்வொன்றும் தனித்தனியே முக்கியமானவையாகவும் அவர்களுக்கு தெரிவதில்லை போலும்.

இச் சிறுகதை தோழர்களின் இன்னொரு பக்கத்தை, இளகிய மனங்களை, காட்டுகின்றது. இதை வாசித்த போது இது ஒரு சாதாரண கதையாகத் தான் தெரிந்தது. ஆனாலும் பின்னர் இது தினமும் மனதில் வந்து போகின்றது.

கதையில் நிகழும் பிரதான விடயங்களுக்கு பெரிதாக சம்பந்தம் இல்லாமல் இருக்கும் இந்த ஒரு வசனம் எங்களில் பலரை சொல்வது போலவே இருக்கின்றது:

 ” தோ…இரும்பு கூப்பிடுது.. பேரீச்சம் பழம் கெடந்து துள்ளுது.. நம்ம கிட்ட பேசச்சொல்லு… இப்படி சிரிப்பு வருதான்னு பாக்குறேன்” என்றார் தேன்மலர்.  

*****************

தோழர் இரும்பு (ஜான் சுந்தர்)

-----------------------------------------------

வீட்டுச் செலவுக்கு காசு கொடுக்காமல் சாப்பிடுவதில்லை என்கிற  முடிவில் இருக்கிறேன். மகள்கள்  வற்புறுத்தி சாப்பிட வைத்தாலும் மறுசோறு வாங்குவதில்லை என்று ஒரு வைராக்கியம்.  நான் என்ன செய்யட்டும்? வேலை வந்தால்தானே? ”ஹூம்… வந்துட்டாலும்….”  இந்த கஞ்சத்துக்குப் பிறந்தவர்கள் தருகிற சம்பளம் இருக்கிறதே அதை நினைத்தால் மனக்கண்ணில் ஊறுங்கண்ணீர் தோழர் குணசேகரனின் குரல் வழியே ’ஆறாப்பெருகி ஆனை குளிப்பாட்ட, குளமாப் பெருகி குதுர குளிப்பாட்ட’  பெருகிப் பெருகி வழிந்து கொண்டே இருக்கும்.

சின்னமகள் என்னை இழுத்துக் கொண்டு போய் தரையில் அமரச் செய்தாள். பெரியவள் உட்கார்ந்த இடத்துக்கே கைகழுவ பாத்திரமும், தண்ணீர் செம்பும் கொண்டு வந்தாள். வீடு என்று ஒன்று இருந்தால் இப்படி மனுசனைத் தாங்க வேண்டும். அதுவும்  மனசு பொறுக்காத கோபத்தில் இருக்கிற போதோ, நெஞ்சு பாரமாய் இருக்கிறபோதோ தாங்கியே தீர வேண்டும். அதை விட்டு விட்டு ஏற்கனவே புண்ணாக கிடப்பதற்குள் விரலை விட்டு குடையக் கூடாது.

கடந்த இரண்டு மாதங்களாக தன் சேமிப்பால் இந்த குடும்பச் செலவை சமாளித்து வருகிற என் இணையர் தட்டை வைத்து சோற்றை அன்னக்குத்தியில் அள்ளி வைத்து குழம்பை ஊற்றினார். நான் அவரது கண்களைப் பாராமல் சாப்பிடத் துவங்கினேன்.முருங்கைக் கீரையும் பருப்பும் சேர்ந்தாலே பயங்கரமாயிருக்கும் . இதில் அரைத்த தேங்காயும், தேன்மலரின் பிரத்யேகமான தாளிப்பும் சேர்ந்து கொண்டு மணக்க , குழம்பு அதிபயங்கரமாயிருந்தது. நான் என் வைராக்கியத்தை மறந்து, “இன்னும் கொஞ்சம் சோறு போடுங்க தேன்மலர்” என்றபோது, அலைபேசி  ‘தோழர். இரும்பு’ என்று ஒளிர்ந்தது. 

“வேண்டாம்… போதும் ” தட்டோடு எழுந்தேன். 

“தோழர்! வண்ட்டன் ரெண்டே நிமிஷம்”

என் உற்சாகத்தைக் கண்டதும் இங்கே இன்னொரு  தாளிப்பு துவங்கியது.
” தோ…இரும்பு கூப்பிடுது.. பேரீச்சம் பழம் கெடந்து துள்ளுது.. நம்ம கிட்ட பேசச்சொல்லு… இப்படி சிரிப்பு வருதான்னு பாக்குறேன்” என்றார் தேன்மலர்.

நான் கையைக் கழுவிவிட்டு மொட்டை மாடிப்படிகளுக்கு நடந்தேன். “ இன்னேரத்துக்கு  மாடிக்கு போக வேண்டியது நடுசாமத்துல எறங்கி வரவேண்டியது”

மணியைப் பார்த்தேன்.  பத்தரையாகி விட்டிருந்தது.  நாளைக்குப் பேசுவோமா? இல்லை. முடியாது. இப்போது இருக்கிற மனக்குடைச்சலில் இருந்து  நான் வெளியே வரவேண்டும்.

தோழர் ‘இரும்பு’என்கிற இரும்பொறை இளஞ்சேரல்  மாலெ இயக்கத்தில்  பகுதி நேர ஊழியராக இருந்து யோசனைக்கு எட்டாத பெருங்காரியங்கள் செய்தவர். பின்னாட்களில் இயக்கத்திலிருந்து  விலகி மனைவியும் குழந்தைகளுமாக திருப்பூரில் வசிக்கிறார். தமிழாசிரியை மகன் என்றாலும் பள்ளியில் கலகம் செய்து படிப்பை முடிக்காமலே  வெளியேறியதால் தற்போது பின்னலாடைத் துறையில் பணி.

“ஒண்ணுமில்ல தோழர் சாப்புட்டீங்ளா?” 

வானம் கழுவி விட்டாற்போலிருந்தது.

“ஆச்சு தோழர் சொல்லுங்க”  

தாமதமாக கூடு திரும்புகிற ஏதோ ஒரு பறவை கீச்சிட்டது

தோழர் ஒன்றும் இல்லை என்றால் பகிர்ந்து கொள்ள ஏதோ இருக்கிறது என்று பொருள். ஏதோ என்றால்  தட்டையான தகவலாக இருக்காது. புதிய களங்களில் எளிய நடையில் மனதை பிடித்துக் கொண்டு போய் அசாத்தியமான பரவச நிலைக்கு தள்ளுகிற முத்துலிங்கத்தின் கதைகள் பற்றியோ, “ஏந்தோழர்? நெசம்மாலுமே அந்தாளுக்கு எம்பது வயசு ஆகுதுங்ளா?”. ‘நல்ல புணர்ச்சிக்கிடையில் அழுகிற பெண்’ வருகிற பூமா.ஈஸ்வர மூர்த்தியின் கவிதை வரியைக் குறித்தோ, “இதென்னுங் தோழர் விசுக்குனு இப்புடி சொல்டாப்ள?”. ஒவ்வொன்றாகத் தொட்டுத்தொட்டு தொடர்ச்சியாக பேசிப்பேசி அவரது சொந்த  வாழ்வில் கண்ட  மனிதர்களைக் குறித்துப் பேசுவது என்று போகும்.

“பொம்பள  சும்மா ஆறு ஆறறை அடிக்கு கொறையாம இருக்கும் தோழர்.. “

சாட்சியாக நேரில் பார்த்த சம்பவங்களை அசலான கொங்குத்தமிழில் விவரிப்பார்.  
“.. அவரும் ஆதிக்கசாதில பொறந்தவருதானுங்க..ஆனா ஆளு எப்புடி தெரியிங்ளா?  ப்யூர் கம்னிஸ்டுங் தோழர்.. தங்கம்னா தங்கம்ங்!  சுயசாதிக்காரங் கண்ணுக்குள்றயே வெரல உட்டு ஆட்டிப்போட்டாருங் அவுனுக உடுவானுகளா கொன்ட்டானுக”

வீணாகப்போக இருந்த நாளை பேச்சில் வளர்த்தி  உருப்படியாக்கித்தருவார்.

“இங்கே எவன்ட்டயும் எதயிம் பேச முடில தோழர்!  ‘ஏனப்பா முந்தியெல்லாம் வெட்டும் குத்துமா நல்லா ரத்தக் கதையா சொல்லுவ? இப்பல்லாம்  நெஞ்ச நக்குற கதையா இருக்குதேடா நஞ்சப்பா’ன்றானுக.. இவனுக இப்போதைக்கு பக்குவப்பட மாட்டானுக தோழர்”

” நீங்கயேங்க அதயெல்லாம் சட்டை பண்றீங்க?”

“இன்னக்கி ஒரு கலியாணப் பத்திரிக்கை வந்தது தோழர். மனசுக்கே நெம்ப சந்தோசமாயிருச்சுங்”

நான் மௌனமாய் இருந்தேன். தோழர் தொடர்ந்தார். எனக்கு தோழர் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தால் போதும்.

“ஒரு இருவது வருஷத்துக்கு முன்னாடி இதே திலுப்பூருல நானும் என்ர ஃப்ரண்டும் டீக்கடயில நின்ட்டுருந்தோம்.  எனக்கு செம்ம டயர்டாருக்கு. ஏறுவெய்யல்ல வெடி நைட்டு முடிச்சு நிக்கிறன். மறுக்கா பகல் பாக்கோணும். வேல தெரிஞ்ச ஆளுக  கெடைக்க மாட்டாங்க  தோழர். எதையப் பார்த்தாலும் சலிப்பா இருக்குது…” 

நான் செருப்பை மாட்டிக் கொண்டு தோழரோடு வானத்துள் இறங்கி நடந்தேன்.சாயம் போன தர்பூசணித் துண்டாக வீதியில் கிடக்கிறது வெளிர் நிலா.

“…சரீங்களா? ஒரு குடும்பம் வந்து டீக்கடயோரமா நிக்குது. ஒரு பெரியவரு.. அவரு சம்சாரம், அப்பறம் அவிய பொண்ணு,பையன்”

“ம்ம்”  மனம் வரைகிற காட்சியில் திருப்பூர் துலங்கும்.

” பெரியவருதான் டீய வாங்கி வாங்கி ஒரோருத்தருக்கும் குடுக்குறாப்ள”

“செரி” 

“பொண்ணும் பையனும் டீய வாங்கி குடிக்கிறாங்க… இந்தம்மா டீ டம்ளர  வாங்கி கைல வெச்சுட்டு தலய குனிஞ்சே நிக்கிது “

“ஏன்?”

” நமக்குந்தெரீலியே  தோழர்…  குறுக்க பேசாம கேளுங்க… பெரியவரு சமாதானப்படுத்தற மாதற ஏதோ சொல்லீட்டுருக்காரு”

எனக்கு இப்போது உம் கொட்டுவதற்கு யோசனையாக இருந்தது

“நம்ம ஃபிரண்டு சும்மா இருக்காம ‘ஏனுங்க ஏதாச்சிம் பிரச்சனைங்களா? உதவி கீணு வேணுமா?’ அப்படின்னு கேட்டுட்டானுங்க “

“இவன் எப்புமே பக்கத்துல இருக்கறவங்க கிட்ட வாய குடுத்து எதயாவது கேப்பானுங்க நேரம் போறதுக்கு “

“உம்மையில உதவியெல்லாஞ் செய்யமாட்டானுங்க எனக்கு நல்லா தெரியிம் “

“பெரியவரு யாராச்சிம் ஏதாச்சிம் கேப்பாங்களான்னு பாத்துட்டுருந்தாப்ள போல “

“அவரு பாட்டுக்கு சொல்ல ஆரம்பிச்சுட்டாப்ள “

“நல்லா வாழ்ந்து கட்ட குடும்பம் “

“கடங்காரனுக தொல்ல”

 “குடும்பத்தோட கெளம்பி வன்ட்டாங்க “

“ஏதாவது வேல வேணும் “

“இவன் நல்லா ஊ..ஊன்னு கதை கேக்கறானுங்னா?”

“ம்ம்….ம்ம்”

“நான் நடுல பூந்து எனக்கு தெரிஞ்ச ஒரு அண்ணங்கட்ட பேசி அவரு கம்பெனில சேத்து வுட்டன்”

“நாலு பேருமே… செக்கிங்ல ஒருத்தரு, மடிக்கிறது ஒருத்தரு, பண்டலுக்கு ஒருத்தரு, கடைக்கு போறதுக்கு ஒரு ஆளுன்னு செட்டாயிட்டாங்க”

“பெரியவர் வேலை நேரம் போக ,வெளிய மேஞ்சுக்கிட்டுருந்த ஆடு மாடுகள வேடிக்கை பாக்கறது… அதுகளுக்கு தழையப் புடுங்கி போடறதுன்னு இவரா செஞ்சிட்டுருந்திருக்காப்ள… அதுல ஒரு பசுமாட்டுக்கு  வாந்தி பேதின்னு என்னவோ தொந்தரவு இருந்திருக்குமாட்டக்குது …”

“இவரு ரோட்டோரம் தேடித்தேடி அங்கங்க மொளச்சுக்கெடந்த செடியப் பறிச்சு கசக்கி துணில பொதிஞ்சு மொகமூடியாட்டம்  கட்டி வுட்டுருக்காரு அது ரெண்டு மூணு  நாள்ள சும்மா கிண்ணுன்னு ரெடியாயிருச்சு”

“இதையெல்லாம் ஓனர் பார்த்துட்டே இருந்திருப்பாப்ளயாட்டம் இருக்குது”

“பெரியவரே! நீங்க நம்ம தோட்டத்த பாத்துக்கோங்கன்னு சொல்லி தோட்டத்து வீட்டுக்கு குடிபோக சொல்லிட்டாரு”

”அடங்கொன்னியா!”

“பெரியவரு ஊர்ல பெரிய பண்ணக்காரரா இருந்திருப்பாராட்டக்குது”

“இங்க தோட்டத்து வெளச்சல ரெண்டாக்கி ..”

“கால்நடைகள பெருகப்பண்ணி…”

“பார்ரா”

 ” ஆமா தோழர்!    கூடுதலா கெணறு தோண்டி…”

 “நாலஞ்சு வருஷத்துல தோட்டத்த ஜம்முன்னு ஆக்கிட்டாப்ள”

“கொஞ்சம் கொஞ்சமா ஊர்ல இருந்த கடனையும் முடிச்சு.. எல்லாத்தையிஞ்செரி பண்ணி  மறுக்கா ஊருக்கே  போய்ட்டாங்க. இத்தன வருசம் கழிச்சு அவரு புள்ளக்கி கலியாணம்னு நம்மளயும்  நாவகம் வெச்சு அழைக்க வந்துருக்காரு தோழர்! “

” அட! பத்திரிக்கையில புள்ளையூட்டுக்காரன்னு என்ர பேரை அடிச்சிருக்காரு தோழர்!”

தோழர்  அவரது உடையாத வலுத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார். ஆயினும் பெருமிதத்தில் அவர் நெஞ்சம் துடிப்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. 
” மனிதர்களை நமக்குத்தான் அணுகத்தெரீல தோழர். எல்லாருமே அருவாக்கத்திய வச்சுட்டு திரியறதாவே நெனச்சுக்குறோம்”

“போன வாரம் நீங்க கூப்பிடயில ரயில்வே ஸ்டேஷன்ல பார்சல் போட்டுட்ருக்கேன் தோழர் நான் கூப்பிடுறேன்னு சொன்னன்ல”

“ம்ம்…ஆமா….” நான் யோசித்தபடியே ஆமோதித்தேன்.

“அதுவும் பழைய கதைதான்! திருச்சிலருந்து ஒரு அக்கா ரெண்டு பசங்களோட கெளம்பி இங்க வந்துருச்சு “

“புருஷன் பயங்கர தண்ணிவண்டிங்”

“அடி தாங்க முடியாம இந்த பொம்பள, கொழந்தைகள தூக்கிட்டு ரயில்ல வுழுந்து தற்கொலை பண்ணிக்கலாம்னு போயிருக்குது”

“அங்க போயி கொழந்தைக மொகத்த பாத்துட்டு இவனுக்கோசரம் நாம ஏஞ்சாகோணும்? கூடவே இந்த ரெண்டயும் ஏங்கொல்லோணும் ? அதுக என்ன பாவம் பண்டுச்சுன்னு ரயிலேறி வந்திருச்சு”

”அப்பறொம்?”

“இங்க வந்து எங்க கம்பனில சேந்துருச்சு”

”சிறப்பு தோழர்!”

“ரெண்டு பசங்களையும் வச்சுகிட்டு பாவம் அப்படியே வேலைக்கு போயிட்டு வந்துட்டு இருந்தது “

“நம்ம கம்பனில ஒரு அண்ணன்.. பேரு சுப்பிரமணி. நாங்க கிண்டலுக்கு சுனாமின்னு  கூப்பிட்டு ஓட்டுவோம்.  ஆச்சு அப்பவே ஒரு முப்பத்தெட்டு பக்கம் ஆயிருச்சு… கலியாணம் இல்லாத கன்னிப்பையன்”

“அந்த திருச்சிக்கார அக்காள சுனாமிகட்ட கண்ணக்காட்டி நாங்க சும்மா நக்கலுக்குப் பேச,  இந்தாளு பயங்கரமா வெக்கத்துல நெளிவாப்ள… ஒரே காமெடியா இருக்கும் தோழர்.. “

”பொம்பள பாவம் ரெண்டு பசங்களயும் வெச்சுகிட்டு தனியா கெடந்து பாடுபடுது தோழர்.. நம்மாளுஞ் சும்மாத்தானே மெஷினோட்டறப்ள… சேர்ந்து இருக்கட்டுமேன்னு நாங்க நெனச்சோம்”

“அதென்னவோ அந்தக்காளுக்கும்  அதே மாதற தோணிருக்கும் போலருக்குது… ரெண்டு பேருக்கும் செட்டாயிப்போச்சு “

”சிறப்பு….மிகச்சிறப்பு”

“சுனாமி ரூம காலி பண்ணிட்டு அந்தக்கா  வீட்டுக்கே போயிட்டாப்ள”

”ஓஹோ”

“பார்க்கறவன் என்ன பேசுவான்…… ஒரு கவலையுங்கெடயாது “

“கம்பனி பசங்களுக்கு அது ஒரு செக்ஸ் புக்கு கதை தானே தோழர் ? அவனுகளுக்கு வேற என்ன தெரியிம்?”

“பொதுப்புத்தி தோழர்”

“அந்தாளுக்கு சைக்கிள்  கூட ஓட்ட தெரியாது தோழர் ! ரெண்டு பசங்களையும்  நடத்தியே சினிமாக்கு கூட்டீட்டு போவாரு”

“அந்தக்காள விட அந்த பசங்க மேல  சுனாமிக்கு பாசம் “

“பேல்பூரி, காளான், தட்டுவடைன்னு தெனமும் பார்சல் கட்டீட்டு போவாப்ள” 

“எங்கிட்ட ஒரு தடவ சொன்னாப்ள… ‘நானெல்லாம் அனாதையாவே செத்து போயிருவேன்னு நெனச்சேன் இரும்பு! எனக்கு கூட ரெண்டு குழந்தைகளும் பொண்டாட்டியும் கெடைச்சிருச்சே? இதுங்களுக்காகவே வாழ்ந்துட்டு சந்தோஷமா செத்துருவேன்டா நானு’ன்னு …என்ன தோழர் இது  ம்ம்? … எப்படி? எனக்கு அப்போ என்னடா இது காஜி காஜிங்கறானுகளே? அந்த உடல்தேவையைக் கடந்துட்டா அந்தப்பக்கம் ஒரு பெரிய ஏரியா இருக்கு போலருக்குதேன்னு தோணுச்சு ” 

தோழர் இடைவெளி விட்டு மௌனமாய் இருந்தார். நான் வெகு நேரம் பேசாமலே இருந்ததால்  பேசப்போவதாக காட்டிக் கொள்ள, தொண்டையைக் கணைத்துக்கொண்டேன்.

 “ஜப்பான்காரங்க கிட்ட ஒரு  பழக்கம் இருக்கு தோழர்!. நல்ல பேரு சொல்வாங்க… மறந்துருச்சு .. உடைஞ்சு சிதறிப்போன  பீங்கான் கோப்பைத் துண்டுகள எல்லாம் சேகரிச்சு வெச்சுகிட்டு கவனமா அதையெல்லாம் ஒண்ணா சேர்த்து ஒட்டுறாங்க. ஒட்டுப்போட்ட விரிசல்களோட திரும்பவும் பழைய வடிவத்துக்கு அந்த கோப்பையைக் கொண்டு வந்துடறாங்க. விரிசல்களை மறைக்கறது இல்ல. மாறா அந்த விரிசல்களுக்கு தங்க முலாம் பூசுறாங்க. சுக்கு நூறா உடைஞ்சு சிதறிப்போன அந்த பீங்கான் பாத்திரம் இப்போ தங்க விரிசல்களோட ஒளிருது ,வீட்டு அலமாரிகள்ல அதை வெச்சு  அலங்கரிக்கறாங்க. பிசகுகள, தவறுகள, சறுக்கல்கள எல்லாம் அவங்க கொண்டாடுறாங்க. தவறுகளயோ, குறைகளயோ சரி செஞ்சுகிட்டு  நிறைவாக்குறதுதான் வாழ்க்கைங்கறத புரிஞ்சுக்கவே இப்படிச் செய்றாங்க போல, சுப்பிரமணி உடைஞ்சு போன அந்தப் பொண்ணுமேல படிஞ்ச தங்கம் தோழர்! நாம அவங்ககிட்ட பேச முடிஞ்சா இன்னும் அருமையா இருக்கும் “என்று சொல்லி முடித்தேன்.

” தோழர்!….. முழுசா கேளுங்க ! கத இன்னும் முடியல” என்றார் இரும்பு.”காலம்  எப்படியெல்லாம் மாத்தி மாத்திப்போடுது பாருங்க”  

நான் மறுபடியும் மௌனத்தை கைக்கொண்டேன்.

“திருச்சிக்கார அக்காளோட பெரிய பையன் படிச்சு  ஐ டி ஃபீல்டுக்கு போயிட்டான். கர்நாடகாவுல வேலை கிடைச்சிருச்சு”

“பெரியவன் போனானா? அவனுக்கு சாப்பாடு செஞ்சு போட இந்தக்காவும் போயிருச்சு. இங்க திலுப்பூர்ல சின்னவனும், சுனாமியும் தங்கி சமைச்சு, சாப்பிட்டு வேலைக்கு போயிட்டுருந்தாங்க.பெரியவனுக்கு அங்க நல்ல சம்பளம் வரவும், சின்னவனையும் கூப்பிட்டுட்டான். ஓ… இவங்க நம்மள கழட்டிவுடறாங்கன்னு புரிஞ்சிகிட்டு சுனாமி  தண்ணிய போட்டு அப்படியே சும்மா சுத்திட்டு இருந்தாப்ள.பழையபடி அனாதையாயிட்டேன் இரும்புன்னு சொல்வாப்ள”

“அடப்பாவமே”

“கண்ணீர் மட்டும் நிக்காம போயிட்டே இருக்கும் தோழர்,,,   கண் கொண்டு பாக்க முடியாது” 

இரும்பு அழுகிறாரோ என்று எனக்கு சந்தேகம்.

“ஆனா அவங்கள பத்தி யார் கிட்டயும் ஒரு வார்த்தை  தப்பா பேச மாட்டாப்ள. போன வாரம் சின்னவன் வன்ட்டான்”

மொட்டை மாடிக் காற்று சிலீரென்று  முகத்தை வருடியது.

“வந்து எல்லாத்தையும் பேக் பண்ணிட்டு ‘எங்கூட கிளம்பு சுனாமி’ங்கறான். இந்தாளு, ‘இல்ல அது நல்லா இருக்காது’ன்னு சொல்றாப்ள.பெரியவனுக்கு கல்யாணம் பேசணும் நீ இல்லாம எப்படினு அவன் கேட்டான் சொந்தக்காரங்க என்னை யாருன்னு கேட்டா என்னன்னு சொல்றது? அது நல்லா இருக்காது” 

“எவனாச்சும் வந்து கேட்டா எங்க கிட்ட சொல்லு அதெல்லாம் நானும் எங்க அண்ணனும் பார்த்துக்கறோம்னான் பாருங்க  கதாநாயகன் மாதற..அங்கே எங்கம்மா வாயத்தொறந்து சொல்லலன்னாலும் அதனால இருக்க முடியல எளச்சு எலும்பாப்போச்சு”

“எங்களாலயே இருக்க முடியலய்யா உன்ன விட்டுட்டு “

“நீ என்ன இங்கயே இருந்துர்லாம்னு நினைச்சியாக்கும்? சுனாமி இப்ப கிளம்பப் போறியா இல்லையா ?”

“அட உங்க சொந்தக்காரன் யாருன்னு கேட்டா என்னடா சொல்லுவ?” 

“சுனாமி திரும்பத்திரும்ப கேட்டதுக்கு அந்த பையன் சொல்றான் தோழர்.. “

“எங்க அம்மாவோட லவ்வர்ன்னு சொல்லிக்கிறோம் நீ கிளம்பி வாய்யா மூடீட்டு”

“தோழர்! சத்தீமா எனக்கு கண்ணுல தண்ணி வந்துருச்சு தோழர் ..அப்புறம் நான் தான் எல்லாத்தையும் மூட்டை கட்டி ரயில்ல பார்சலா போட்டு அனுப்பி வெச்சுட்டு வந்தேன் “

பிறகு நான்  பேச்சை மாற்ற வேண்டி,” ஏன் தோழர்? கல்யாண பத்திரிகை வைக்க வந்தாரே? அந்த பெரியவர்! அவர் குடும்பத்துக்கு உதவணும்னு உங்களுக்கு ஏன் தோணுச்சு?  உங்க நண்பர் தானே பேசிட்டு இருந்தாரு நீங்க எதனால நடுவுல புகுந்தீங்க? என்று கேட்டேன் .

அவர் சட்டென்று சுனாமியின் கதைக்குள் இருந்து வெளியே வந்தார் .

“அது வந்து தோழர் ….அவரு பேசும்போது அவங்க ஊரோட பேரை சொன்னாரு தோழர்! அவங்க ஊரோட பேரைப்பாருங்க ‘அழகிய நிலமங்கலம் ! ‘ தோழர் ! ‘அழகிய நில மங்கலம்’

ஒவ்வொரு சொல்லாக நிறுத்தி திருத்தமாக உச்சரித்தார்.

“ரொம்ப அழகா இருந்தது தோழர்” இந்த மாதிரி பேரு வச்ச ஊரிலிருந்து ஒரு குடும்பம் வந்து கஷ்டப்படணுமான்னு தோணுச்சு “என்றார். 

எனக்கு ஏதோ நிறைந்து விட்டது போலிருந்தது. 

அவரிடம் ‘திரும்பவும் பேசுவோம் தோழர், கூப்பிடறேன்’ என்று பேச்சை முடித்துக் கொண்டு கீழே இறங்கும் போது ‘அழகிய நில மங்கலம்’ என்று ஒரு முறை சொல்லிப் பார்த்தேன்.
 

https://akazhonline.com/?p=7365

 

  • கருத்துக்கள உறவுகள்

கதைக்குள் கதைகள்.

நல்லூர் எனது ஊர் என்று சொன்னால் கூட தோழர் உதவுவார் என்று நினைக்கிறேன்.

தோழர் இரும்பானாலும் இதயம் மெழுகு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kavi arunasalam said:

கதைக்குள் கதைகள்.

நல்லூர் எனது ஊர் என்று சொன்னால் கூட தோழர் உதவுவார் என்று நினைக்கிறேன்.

தோழர் இரும்பானாலும் இதயம் மெழுகு.

இப்படியான ஏதோ ஒரு காரணத்தை, ஒரு விடயத்தை வைத்து சில மனிதர்களை சட்டென்று பிடித்து விடுகின்றது........கொள்கைகள் உருகி ஓடி விடுகின்றன போலும் அந்தக் கணங்களில். 

  • கருத்துக்கள உறவுகள்

படிக்கப் படிக்க ஒவ்வொரு சம்பவமும் மயிலிறகால் இதயத்தை வருடுவதுபோல் இதமாய் இருக்கு....... ஓரிரு நாட்களுக்காவது இந்தக் கதை மனசுக்குள் சுழன்று கொண்டிருக்கும்.......!  🦚

நன்றி ரசோதரன்.......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.