Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

நிகழ வேண்டிய வழி

நிகழ வேண்டிய வழி

  — கருணாகரன் —

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிந்து 15 ஆண்டுகளாகி விட்டது. அங்கே இப்போது மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள் அல்லது அமைதியாக வாழக்கூடியதாக இருக்கும்’ என்ற எண்ணமே பொதுவாக உலகப் பரப்பில் உண்டு. 

யுத்தம் முடிந்தது உண்மைதான். ஆனால், யுத்தத்திற்குக் காரணமான இனமுரணும் இனப்பிரச்சினையும் முடிவுக்கு வரவில்லை. அது இன்னும் கொதிநிலையிலேயே உள்ளது. அதை மேலும் தீவிரப்படுத்தியிருக்கிறது அரசு. ஏனென்றால், இனவாதத்தில்தான் அரசுக் கட்டமைப்பே நிறுவப்பட்டுள்ளது. இரண்டு மொழிகளைப் பேசும் நான்கு இன மக்களைக் கொண்ட சின்னஞ்சிறிய நாட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு யுத்தம் நிகழ்ந்திருக்கிறது என்றால் இதை எப்படி விளங்கிக் கொள்வது?  நாடு பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து நிற்பதும் லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததும் பல்லாயிரம்பேர் உடல் உறுப்புகளை இழந்ததும் ஏனென்று இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை. உலகமெங்கும் கையேந்திக் கடன் கேட்டுக் கொண்டிருக்கிறது இலங்கை. வேறு வழியில்லாமல்  நாட்டின் வளங்களும் பிறருக்கு விற்கப்படுகின்றன. ஆனாலும் இனவாதத்தைக் கைவிடுவதற்கு யாரும் தயாரில்லை. 

பழைய பிரச்சினைகளோடு, புதிதாகப் பல பிரச்சினைகளை அரசாங்கம் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது. தமிழ்பேசும் மக்கள் அதிகமாக வாழும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மந்தைகளின் மேய்ச்சற்தரை தொடக்கம், பௌத்த அடையாளங்கள் என்ற பேரில் நிலங்களையெல்லாம் அபகரிக்கிறது. (இலங்கையில் சிங்களமும் பௌத்தமும் ஒடுக்குமுறைக்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது). மாறாக யுத்தத்திற் கொல்லப்பட்டோருக்கான இழப்பீடோ, நிவாரணமோ, வழங்கப்படவில்லை. காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் பிரச்சினைக்கு முடிவில்லை. இறுதி யுத்தத்தில் சரணடைந்த போராளிகளைப் பற்றிய எந்தச் சேதிகளும் பதிலும் இல்லை. யுத்தத்தின்போது உடல் உறுப்புகளை இழந்த பல்லாயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கான உதவித்திட்டங்கள் எதுவும் செயற்படுத்தப்படவில்லை. பெற்றோரை இழந்த குழந்தைகள் முப்பது ஆயிரத்துக்கு மேலுண்டு. அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில்லை. யுத்தத்தில் அழிவடைந்த பிரதேசங்களில் புதிய தொழில் முயற்சிகள் உருவாக்கப்படவில்லை. ஏன் நாட்டிலேயே தொழிற்சாலைகளை உருவாக்குவதற்குப் பதிலாக பௌத்த விஹாரைகளைக் கட்டுவதிலேயே அரசின் கவனம் உள்ளது. யுத்தத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகளான பொறுப்புக்கூறல், மீள நிகழாமை, பகை மறப்பு, சமாதான முன்னெடுப்பு, அமைதித்தீர்வு எவையும் நடக்கவில்லை. என்பதால் இதுபோன்ற பல பிரச்சினைகளோடுதான் தமிழ் பேசும் மக்கள் வாழ வேண்டியுள்ளது. இதற்குள் நாட்டை உலுக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி வேறுண்டு. முஸ்லிம் மக்களை ஒடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ‘சகரானின் குண்டுத் தாக்குதல்’* இன்னொன்று. 

ஆக சிங்கள மக்களை விட இரட்டிப்பு நெருக்கடியோடு தமிழ்பேசும் மக்கள் வாழ வேண்டியிருக்கிறது. இன்னொரு வகையில் சொன்னால், அபாயங்களின் மீதே தமிழ்பேசும் சமூகங்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன. இலங்கையின் அரசியல் யாப்பு, சட்டம், நீதிபரிபாலனம், ஆட்சிமுறை எல்லாம் இனஒடுக்குமுறையை – இனப் பாரபட்சத்தை – மிக நுட்பமாக மேற்கொள்வற்கேற்ற வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் யார் அதிகாரத்தில் இருந்தாலும் இந்த அடிப்படையில் மாற்றமில்லை என்பதே சுதந்திர இலங்கையின் வரலாறும் நடைமுறையுமாகும். ஆட்சிக்கு வருவதும் அதிகாரத்தில் இருப்பதும்கூட எப்போதும் சிங்களர்களே. அவர்களே பெரும்பான்மையினர். என்பதால், அவர்களுக்கே அந்த வாய்ப்புகள் உண்டு. அதைக் கடந்து பிற சமூகத்தினர் (தமிழ் பேசும் தரப்பினர்) ஆட்சிக்கு வரவே முடியாது. அதற்கான பெரும்பான்மையும் இல்லை. பிறரை ஏற்றுக் கொள்ளும் உளநிலையும் உருவாகவில்லை. பன்மைத்துவ அரசியற் பண்பாடு, பல்லினத்துக்குரிய அரசியல் நடைமுறை இலங்கையில் வளர்ச்சியடையவில்லை. கட்சிகள் அனைத்தும் இனவாதத்தை மேற்கொள்ளக் கூடியவாறு இன அடிப்படையில், இன அடையாளத்தோடுதான் உள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி, தமிழ்தேசியக் கட்சி, தமிழ் மக்கள் முற்போக்குக் கூட்டணி எனத் தமிழ்த்தரப்புக் கட்சிகள். 

இதற்கு நிகராக – போட்டியாக ஜாதிக ஹெல உறுமய, சிங்கள மகாசம்மத பூமிபுத்திரக் கட்சி, சிங்கள மகாசபை போன்றவற்றோடு வெளிப்படையாக இன அடையாளத்தைக் காட்டிக் கொள்ளாத பெருங்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, மக்கள் விடுதலை முன்னணி (J.V.P) எனச் சிங்களக் கட்சிகள். அடுத்த பக்கத்தில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எனப் பல முஸ்லிம் கட்சிகள். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி எனப் பல மலையகக் கட்சிகள் (இவை இந்திய வம்சாவழி மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துபவை). இவை அனைத்தும் அந்தந்த இனங்களையே பிரதிநிதிப்படுத்துகின்றன. ஒன்றை ஒன்று குற்றம்சாட்டிக் கொண்டே தமது இன அடையாள – இனவாத – அரசியலை மேற்கொள்கின்றன. மக்களும் விரும்பியோ விரும்பாமலோ தத்தமது இனக் கட்சிகளுக்கே ஆதரவளிக்கின்றனர். 

இதைக் கடந்து, பன்மைத்துவமாகச் சிந்திக்கக் கூடிய அளவுக்கு, இந்த நெருக்கடிகளைத் தீர்க்கக் கூடியவாறு இலங்கையில் எந்தத் தரப்பும் இல்லை என்பதே துயரம். மிக நீண்ட யுத்தத்தையும் அதனால் ஏற்பட்ட பேரழிவையும் சந்தித்த பிறகும் எவருக்கும் படிப்பினைகள் ஏற்படவில்லை. “இனவாதத்தை முறியடிப்பேன், இலங்கைத்தீவில் சமாதானத்தை நிலைநாட்டுவேன்”  என்று தன்னுடைய கட்சியை வழிநடத்துவதற்கு எந்தத் தலைவரும் நாட்டில் இல்லை. இதனால் சமாதானத்துக்காக வேலை செய்யக் கூடிய, செயற்படுகின்ற ஒரு பத்துப் பேரைக் கூட இந்த நாட்டில் நம்மால் கண்டு பிடிக்க முடியாலிருக்கிறது. அண்மையில் மேற்குநாட்டுத் தூதுவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது அவர் கேட்டார் -“போரைச் செய்வதற்காக நீங்கள் நீண்டகாலத்தைச் செலவிட்டீர்கள். பல படையணிகளை உருவாக்கினீர்கள். பல போர்த்தளபதிகளும் உருவாக்கப்பட்டனர். பல உயிர்களைக் கொடுத்தீர்கள். போர் வெற்றிக்காக எவ்வளவோ இழப்புகளின் மத்தியில் நீண்ட காத்திருப்பில் இருந்தீர்கள். அதிலே நீங்கள் எந்த நன்மைகளையும் பெற்றதில்லை. கண்ணீரையும் துயரத்தையும் பகை உணர்வையும் சம்பாதித்ததுதான் மிச்சம். பதிலாக சமாதானத்துக்காக என்ன விலையைக் கொடுத்தீர்கள்? எத்தனைபேர் சமாதானத்துக்காக உங்கள் நாட்டில் உழைக்கிறீர்கள்? உலகத்தில் அமைதியாக, இணக்கமாக, சமாதானமாக வாழ்வதுதானே சிறப்பு?” என்று. இதற்கு என்ன பதிலைச் சொல்வது? எல்லோரும் ஏட்டிக்குப் போட்டியாக இனவாதத்தை வளர்ப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இனவாதத்திலேயே எல்லோருடைய அரசியலும் நடக்கிறது. அதற்கான நியாயங்களையும் நியாயப்படுத்தல்களையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது. 

ஆனால், இதுவோ  (Post – War period) போருக்குப் பிந்திய காலமாகும். போருக்குப்பிந்திய காலம் என்பது, போர் உண்டாக்கிய அழிவுகளிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளும் காலமாகும். அந்தப் படிப்பினைகளின் அடிப்படையில் பகை மறப்பு, மீளிணக்கம், சமாதானம் ஆகியவற்றைக் கட்டியெழுப்ப வேண்டிய காலமாகும். உலகமெங்கும் போருக்குப் பிந்திய காலம் என்பது கற்றுக்கொண்ட படிப்பினைகளின் அடிப்படையில் முரண்களைக் களைந்து, புத்தாக்கத்தை உருவாக்கும் காலமாகவே இருக்கிறது. இந்த யதார்த்தத்தின்படி, இந்தக் காலகட்டத்தில் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் அனைத்துத் தரப்பினரும் புதிய அரசியலை – புத்தாக்க அரசியலை –  மேற்கொள்ள வேண்டும். அது இனவாதத்திலிருந்து முற்றிலும் விடுபடவேண்டிய அரசியலாக இருக்க வேண்டும். ஆனால், அதற்கு எவரும் – எந்தத் தரப்பும் தயாரில்லை. இதனால்தான் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் தமிழ் மக்களுக்கு தமிழ்த்தலைமைகளாலும் எந்த ஆறுதலையும்  கொடுக்க முடியாதிருக்கிறது. விடுதலைக்காகத் தம்மை அர்ப்பணித்து மாபெரும் தியாகங்களைச் செய்த – அந்தப் போரில் பேரிழப்புகளைச் சந்தித்த மக்களுக்கான களப்பணிகளை ஆற்ற வேண்டும் என்று இந்தத் தலைமைகளால் சிந்திக்க முடியாதிருக்கிறது.  “பிரமுகர் அரசியல்” விளையாட்டில்தான் இவை ஈடுபடுகின்றன. இதில் விடுதலை இயக்கங்களில் இருந்து வந்தவர்களும் (செயற்பாட்டு அரசியலில் உள்ளவர்களும்) பெருந் தவறை இழைக்கின்றனர். பங்கேற்பு அரசியல் (Participation politics), பங்களிப்பு அரசியல் (Contribution politics) அர்ப்பணிப்பு அரசியல் (Commitment politics) என்பதையெல்லாம் கைவிட்டு, பிரகடன அரசியலுக்கு  (Declaratory politics)த் தாவிச் சென்று விட்டனர். பிரமுகர் அரசியல் –  அதாவது   பிரகடன அரசியல்  (Declaratory politics) தானே வசதி!

இனவாதத்தை அல்லது இன அடையாளத்தை விட்டு விட்டால் தமக்குத் தோல்வி ஏற்பட்டு விடும். மக்கள் தம்மை நிராகரித்து விடுவார்கள் என்ற அச்சம் இந்தக் கட்சிகளுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் உண்டு. அதை மீறிச் செயற்படுவதற்கும் சவால்களை எதிர்கொள்வதற்கும் இவர்கள் தயாரில்லை. இன எல்லைகளைக் கடந்து அனைத்துச் சமூகங்களிடத்திலும் மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்ற எந்தப் பேராளுமையும் இலங்கையில் எழுச்சியடையவில்லை. என்பதால் தொடர்ந்தும் மலிவான முறையில் இன உணர்வைத் தூண்டித் தமது அரசியல் ஆதாயத்தை எட்டி விடுகிறார்கள். இதற்குப் போர்க்காலப் பாதிப்பைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இதனால் ஒருவரை ஒருவர் சந்தேகிக்கிறார்கள். நம்பிக்கையீனம் பெரியதொரு நோய்ப்பாதாளமாக விரிந்து கொண்டே செல்கிறது. 

இதே உளநிலையில்தான் இலங்கையின் ஊடகங்களும் உள்ளன. அறிஞர்கள், மதத் தலைவர்கள் எல்லோரும் அந்தந்தச் சமூக – இன – எல்லையைக் கடந்து சிந்திப்பதேயில்லை. எனவே நாடு இனவாதத்திலேயே கட்டுண்டு கிடக்கிறது. இதற்குப் புறம்பாக மாற்றுச் சிந்தனையைக் கொண்ட – சமாதானத்தை விரும்புகின்ற தரப்புகளும் உண்டு. அவை சிறியவை. அவற்றுக்கு அதிகாரப் பெறுமானமோ சமூகச் செல்வாக்கோ, ஊடக அங்கீகாரமோ கிடையாது. ஆகவே, யுத்தம் முடிந்தாலும் நிலைமையில் மாற்மும் முன்னேற்றமும் உண்டாகவில்லை. யுத்தம் உருவாகுவதற்கு அடிப்படையாக இருந்த காரணங்களும் யுத்த கால நிலவரங்களை ஒத்த போக்கும் நீடிப்பதால் நாட்டை விட்டுப் பலரும் வெளியேறிக்  கொண்டிருக்கிறார்கள். முன்பு தமிழர்களே அதிகளவில் புலம்பெயர்ந்தனர். இப்பொழுதுள்ள பொருளாதார நெருக்கடியினால் சிங்களவர்களும் முஸ்லிம்களும்  அதிகமாக வெளியேறுகின்றனர். இதெல்லாவற்றுக்கும் அடிப்படைக் காரணம், இனவாதமும் ஒடுக்குமுறை அரசின்  செயற்பாடுகளும்தான் என்று தெரிந்தாலும் அதைப் புரிந்து கொண்டு மாற்றங்களைச் செய்வதற்கு யாரும் முன்வருவதில்லை. இவ்வளவுக்கும் இலங்கை இயற்கை வளத்தை அதிகமாகக் கொண்ட அழகிய நாடு. அதைப் புரிந்து கொள்ளாமல் பிச்சைக்காகக் கை ஏந்துகிறது. தனக்குள்ளே முரண்பட்டு முரண்பட்டு அழிகிறது. இந்தக் கவலை பலருக்கும் உண்டு. ஆனால், தேர்தல் என்று வந்து விட்டால் மக்கள் தங்களுடைய நியாயமான கவலைகளையும் சுய அறிவையும் தூக்கித் தூர எறிந்து விட்டு இனவாதத்திற்குப் பின்னே அணிவகுத்து விடுகிறார்கள். 

இது இலங்கைச் சமூகங்களைத் தொடர்ந்தும் பிளவுண்ட நிலையிலேயே வைத்திருக்கிறது. இதைத் தமக்கான நல் வாய்ப்பாகக் கொண்டு வெளிச்சக்திகள் இலங்கையில் ஆக்கிரமிப்பைச் செய்கின்றன. நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இன்னொரு நிலையில் நாட்டை, மீளமுடியாப் பெருங்கடனில் மூழ்கடிக்கின்றன. அதற்கு வட்டி வட்டியாகக் கட்ட வேண்டிய இடர்நிலை வேறு. இனமுரணும் பொருளாதார நெருக்கடியும் ஊழலும் மோசமான அரசியற் சூழலும் இதற்கெல்லாம் தாராளமாக உதவுகின்றன. இதையெல்லாம் மக்களுக்கு எடுத்துரைத்து விழிப்பூட்டக் கூடிய அளவுக்கு இலங்கையில் அறிஞர்களோ பல்கலைக்கழகத்தினரோ ஊடகங்களோ இல்லை. ஆக மொத்தத்தில் இனவாதத்துக்கே எல்லோரும் வழிவிடுகிறார்கள். இதை மீறுவோர் – மாற்றுப் பார்வையுடையோர்  -“துரோகிகள்” என்று அடையாளப்படுத்தப்பட்டு சமூக விலக்கம் செய்யப்படுகின்றனர். இது படுபயங்கரமான ஜனநாயக மறுப்பாகும். ஆனால், அதை யாரும் அப்படிக் கருதிக் கொள்வதில்லை. பதிலாக குறித்த விடயம் அல்லது குறித்த ஆள் தமது இனத்தேசியத்திற்கு எதிரானவர் என்றே அடையாளப்படுத்தப்படுகிறது. இப்படியே இந்தப் பாசிஸக் கூறு வலுப்பெற்றுள்ளது. 

வன்முறையானது துப்பாக்கி, கத்தி, வாள், தடி போன்றவற்றால் தாக்கப்படுவதோ தீயினால் எரியூட்டப்படுவதோ மட்டுமல்ல, கடுமையான சொற்கள், ஒரு தரப்பு இன்னொரு தரப்பின் மீது செலுத்தும் அதிகாரம், பிழையான சிந்தனையைத் திணித்தல் போன்றவற்றாலும் நிகழ்வதாகும். அதாவது நேரடியாகவோ மறைமுகமாகவோ  எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தப்படுமானால் அது வன்முறையே ஆகும்! 

இனவாதச்சிந்தனை என்றாலே அது எந்த நிலையிலும் வன்முறையைக்  கொண்டதுதான். அதன் உள்ளீடாக இருப்பது, தமக்கு அப்பாலான தரப்பின் மீது சந்தேகம், அச்சம், எதிர்ப்புணர்வு – பகைமை போன்றவையாகும். தமிழர்கள் முஸ்லிம்களை நம்புவதில்லை. முஸ்லிம்கள் தமிழர்களை நம்புவதில்லை. தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவரை நம்புவதில்லை. சிங்களவர்கள் தமிழரையும் முஸ்லிம்களையும் நம்புவதில்லை. இப்படியே ஒருவரையொருவர் சந்தேகிக்கும்போது, எப்படி நாட்டில் ஒருங்கிணைந்த தீர்மானங்களை எடுப்பது? எப்படி ஒருங்கிணைந்த செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்? இதற்கெல்லாம் மூல விதையைப் போட்டது சிங்களவர்களே. நாடு சுதந்திரமடைந்த 1948 இல் ஆரம்பிக்கப்பட்ட இன ஒடுக்குமுறையை இன்றுவரை பராமரிக்கின்றனர். இதைத் தணிக்கும் உபாயத்தை வகுத்துக் கொள்வதற்குப் பதிலாகத் தாமே இந்த எரியும் தீக்கு ஆகியாகியது தமிழ்த்தரப்பு. சிங்கள இனவாதத்திற்குப் பதில் தமிழ் இனவாதம் என்ற போட்டியாக்கம் பெரும் தீமையில் வந்து முடிந்திருக்கிறது. 

இதேவேளை தம்மைப் பற்றிய உச்ச உயர்வுணர்வையும் (superiority complex) அதிக பாதுகாப்புணர்வையும் (sence of supreme security) இவை கொண்டிருக்கின்றன. சிலவேளை அதிக தாழ்வுணர்வையும் (inferiority complex) கொண்டிருப்பதுமுண்டு. நாட்டிற் பெரும்பான்மையாக இருக்கும் சிங்களவர்கள், ஒருபோது தாமே பெரும்பான்மையினர், தம்மிடமே ஆட்சி அதிகாரம் உண்டு, தாமே பெரும்பான்மையினர் எனத் தம்மை உயர்வானோராக (superiority complex) க் கருதுகின்றனர். மறுநிலையில், இலங்கையில் மட்டுமே சிங்களம் இருப்பதால், தாம் இந்த உலகத்தில் சிறுபான்மையினர், இந்தியா தமக்கு எப்போதும் எதிராகவே இருக்கிறது, அருகில் உள்ள தமிழ்நாடு தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதால், தமிழரையும் விடத் தாம் குறைந்தவர்கள் என தாழ்வுணர்ச்சிக்கு  (inferiority complex)  உள்ளாகின்றனர். இப்படித்தான் தமிழர்களின் உளநிலையும் செயற்படுகிறது. இலங்கையில் தாம் சிறுபான்மையினராக இருந்தாலும் தமிழகத்தோடு இணைத்து, தம்மைப் பெரிய தரப்பாகக் காட்ட முற்படுகின்றனர். இதனால் எப்போதும் குழப்பமும் பதட்டமும் தம்மைத் தற்காத்துக்கொள்ள வேணும் என்ற உச்ச உணர்வும் இரண்டு தரப்பையும் சூழ்ந்திருக்கிறது. எதிர்த்தரப்பின் மீது போரைத் தொடுப்பதற்கான வியூகங்களை வகுப்பதைப்பற்றிய சிந்தனையே ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கிறது. இது நேரடியாக ஆயுதம் தாங்கிய போராகத்தான் நடக்கிறது  என்றில்லை. பல வடிவங்களிலும் ஒடுக்குதலை மேற்கொள்வது, அரசியல் ரீதியாக விலக்குவது, விலகிக் கொள்வது, முரட்டுத் தனமாக எதிர்ப்பது, மற்றமைகளை நிராகரிப்பது, எதிர்த்தரப்புக்கு எதிராக எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பது,  எதையும்  மூர்க்கமாக எதிர்ப்பது, எதையும் சந்தேகிப்பது எனப் பல வகைப்பட்டிருக்கிறது. இதனால்தான் இந்திய, நோர்வே நாடுகளின் சமாதான  (இணக்க) முயற்சிகளும் தோற்றன.

குறித்த சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களுக்கு இதுவொரு  வசதியே. அவர்கள் சமூக எதிர்நிலை உணர்வுக்குத் தலைமையேற்பதாகக் காட்டி, தமது நலனுக்கான அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள். சமூக முரண்கள், இன முரண்கள் மேலும் கூராக்கப்படுகின்றன. இதனால் மக்களுக்கு உண்டாகும் அழிவுகள், இழப்புகள், சேதங்கள், பின்னடைவுகளைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதே இல்லை. அப்படிக் கவலைப்பட்டிருந்தால் எந்த நிலையிலும் இனவாதத்தைக் கடந்த – இணக்கத்துக்கான, சமாதானத்துக்கான அரசியலையே இவர்கள் மேற்கொண்டிருப்பர். அதனுடைய நல் விளைவுகளும் உருவாகியிருக்கும். 

இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு யார் முன்வரவில்லை? அல்லது ஏன் பின்னிற்க வேண்டும்? எந்த அடிப்படையில் இணக்கத்திலும் சமாதானத்திலும் நம்பிக்கை வைப்பது? தமிழர்களும் முஸ்லிம்களும் சமாதான அரசியலுக்கு முன்வந்தாலும் அரசும் சிங்களத் தரப்பும் அதற்குத் தயாரா? அதற்கான உத்தரவாதம் என்ன? இதை யார், எப்படிக் கண்காணிப்பது? அதற்கான பொறிமுறையும் கால எல்லையும் என்ன? இனவாதத்தை ஆரம்பத்தில் உருவாக்கியது யார்? அவர்கள் ஏன் இதற்கான பொறுப்பேற்றலைச் செய்யவில்லை? அதற்கான பரிகாரங்களைக் காணவில்லை? இப்படிச் சில அடிப்படையான – நியாயமான கேள்விகளைச் சிலர் எழுப்பக் கூடும். 

சிங்களத் தரப்பு (ஐ.தே.க. வும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும்) இனவாதத்தைத் தூண்டியது உண்மையே. அதற்கான விலையையும் அவை கொடுத்துள்ளன. அவற்றின் தலைவர்கள் பலர் இனவாதத்திற்கு பலியாகியுள்ளனர். ஆனால், அதற்குப் போட்டியாகத் தமிழ்த் தரப்பும் பிறகு இனமுரணில் ஈடுபட்டது. இதையெல்லாம் கடந்து வர வேண்டும் என்றே காலம் நிர்ப்பந்திக்கிறது. இனவாதத்தைக் கடந்த அரசியலை மேற்கொள்வதற்கு இலங்கைத்தீவில் சிறியதாயினும் சில சக்திகள் உண்டு. மெய்யாகவே அவை சமத்துவத்தையும் அமைதியையும் விரும்புகின்றன. ஆனால், அவற்றை உதிரிகளாகவே மக்கள் நோக்குகின்றனர். ஊடகங்கள் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. அவற்றுக்கு எப்போதும் எரியும் பிரச்சினைகளே வேண்டும். இதையெல்லாம் கடந்து அந்தச் சக்திகள் வளரவில்லை. அல்லது வளர்த்தெடுக்கப்படவில்லை. 

இனவாதம் செழித்திருக்கும் ஒரு சூழலில் அதற்கு எதிரான தரப்புகள் எளிதாக வளர்ச்சியடைய முடியாது என்ற சூழலை ஆழமாக உணர்வோரினால் புரிந்து கொள்ள முடியும்.  அப்படி அந்தத் தரப்பு வளர்ச்சியடைய வேண்டுமாக இருந்தால் அதற்கு ஒரு குறிப்பிட்ட  காலமும் கடுமையான உழைப்பும் தேவை. மிகுந்த சவால்களின் மத்தியில்தான் அவை வேர் விடவும் துளிர் விடவும் முடியும். ஏனென்றால், இனவாதத்தில் திளைத்துப் போயிருக்கும், அதில் முதலிட்டிருக்கும் பிற அரசியற் தரப்புகளும் ஊடகங்களும் லேசில் இந்த மாற்றுத் தரப்புக்கான இடத்தை அளிக்காது. ஆகவே கல்லிலே துளிர் விடும் சிறு விதையைப்போலவே அமைதிக்கான தரப்புகள் ஓர்மத்துடன் முளைத்தெழ வேண்டும். 

பகை வளர்ப்பின் மூலம் ஒருபோதுமே தீர்வை எட்ட முடியாது என்ற தெளிவான பட்டறிவு இருந்தாலும் பலருடைய மனதும் எதிர்ப்பில், பகைமையில்தான்  திளைக்கிறது. சாதிய ஒடுக்குமுறை, பெண்ணொடுக்குமுறை எல்லாம் தவறு என்று தெரிந்தாலும் அதைக் கடக்க விரும்பாமல் திளைப்பதைப்போன்றதே இதுவும்.  அது ஒரு போதையாகி விட்டது. பிறரை எப்போதும் எதிர்த்தரப்பாக நோக்கிப் பழகி விட்டோம். ஆனால் தென்னாபிரிக்காவில் கறுப்பர்களும் வெள்ளையர்களும் பகையைக் கடந்து நிற்கிறார்கள். இன்று  யப்பானும் அமெரிக்காவும் பகையைக் கடந்த நிலையில் இணைந்து செயற்படுகின்றன. கிரோஸிமாவிலும் நாகஸாகியிலும் அமெரிக்கா வீசிய அணுக்குண்டின் தாக்கம் இன்னும் யப்பானில் உண்டு. ஆனால், அதைக் கடந்து செல்வது யப்பானுக்கு அவசியமாக இருந்தது. இப்படிப் பகையைக் கடந்த பல செழிப்பான உதாரணங்கள் உண்டு. ஆனாலும் இதை ஒத்துக் கொள்வதற்கும் முன்மாதிரியாகக் கொள்வதற்கும் யாரும் தயாரில்லை. 

இலங்கையில் இனவாதத்தைக் கடந்த அரசியலைச் செய்வதற்கு முயற்சித்தவர்களை ஏற்கனவே மக்கள் தோற்கடித்து விட்டனர் என்பதையும் நினைவிற் கொள்ள வேண்டும்.  இடதுசாரிய நண்பர்கள் துயரம்தோய்ந்த பகடியாக அடிக்கடி சொல்லும் ஒரு வாக்கியமுண்டு. “இடதுசாரிகளைத் தோற்கடித்து விட்டு, இனவாதிகளை வளர்த்த மக்கள் அதற்கான துயரத்தை அறுவடை செய்கின்றனர்” என. உண்மைதான் ஒவ்வொரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இனவாத அரசியலுக்காக மிகப் பெரிய விலையைக் கொடுத்திருக்கின்றனர். ஆனாலும் மக்கள் இதில் பட்டறிவைப் பெறுவதற்கும் இதைக் குறித்தெல்லாம் சிந்திப்பதற்கும் மாற்று உபாயங்களைத் தேடுவதற்கும் தயாரில்லை. அவர்கள் மலக்குழிக்குள்ளே அமுதத்தைத் தேட முயற்சிக்கிறார்கள். அதற்கேற்றவாறு மலத்திலிருந்து தேனை எடுத்துத் தருவதாக இந்தத் தலைவர்களும் தங்கள் மக்களுக்கு இனிப்பாக வாக்குறுதியளித்துக் கொண்டிருக்கின்றனர். 

இதனால்தான் யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்த பிறகும் யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களை நினைவு கொள்வதற்குத் தமிழர்களால் முடியாதிருக்கிறது. அரசு பல வகையில் அதைத் தடுக்க முற்படுகிறது. இவ்வளவுக்குப் பிறகும் தமிழர்கள், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமது சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த முயற்சிக்கிறார்கள். “அந்த வேட்பாளர் ஒரு போதுமே வெற்றியடைய மாட்டார் என்றாலும் பரவாயில்லை, தமது எதிர்ப்பின் அடையாளமாக இருக்கட்டும்” என்று சொல்கிறார்கள். இப்படி நிறுத்தப்படும் தமிழ் வேட்பாளருக்கு ஆதரவைத் திரட்டுவதற்கு அவர்கள், தமிழ்பேசும் ஏனைய தரப்புகளான முஸ்லிம்களிடமும் மலையக மக்களிடமும் கலந்தாலோசிக்கவில்லை. இப்படித்தான் அறிவீனமாக அனைத்தும் சிந்திக்கப்படுகிறது. புத்தியைத் தீட்டுவதற்குப் பதிலாகக் கத்தியைத் தீட்டுவதிலேயே பலருடைய கரிசனையும் உள்ளது. ஆனால், எதிர்ப்பரசியலின் யுகம் விடுதலைப் புலிகளுடன் முடிவுக்கு வந்து விட்டது. அவர்களே அதனுடைய உச்சம். எதிர்ப்பரசியலைப் புலிகள் பல பரிமாணங்களில் மேற்கொண்டனர். தமக்கான ஆட்சிக்கான நிலப் பரப்பு, ஆட்சி, படையணிகள், தாக்குதல்கள், தொடர்ச்சியான போர், அதை எதிர்கொள்ளும் ஆற்றல், மக்கள் ஆதரவு, அரசாங்கத்தை நிலைகுலைய வைத்தல், சர்வதேசக் கவனத்தை ஈர்த்தல் எனப் பலவாக இருந்தது. இனி ஒரு எதிர்ப்பரசியலை மேற்கொள்வதாக இருந்தால், புலிகளைக் கடந்து நிற்க வேண்டும். அது சாத்தியமானதா? அதை யார் முன்னெடுப்பது?

இந்தக் கசப்பான யதார்த்த வெளியில்தான் இலங்கையர்கள் தமது அரசியலை முன்னெடுத்து, எதிர்காலத்தை உருவாக்க வேண்டியவர்களாக உள்ளனர். சரியான, பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதாக இருந்தால், நாம் மரபார்ந்து சிந்தித்து வந்த இன அடிப்படையிலான சிந்தனை முறையிலிருந்து விடுபட வேண்டும். அதைத் தூக்கியெறிய வேண்டும். இங்கேதான், நம்முடைய வலிமையான – உறுதியான நிலைப்பாடும் போராட்டமும் தேவை. நாம் எந்த நிலையிலும் ஐக்கியத்தை, சமாதானத்தை, நீதியை, உரிமையை, அதிகாரப் பகிர்வை, அமைதித்தீர்வையே விரும்புகிறோம். எந்த நிலையிலும் நமக்குச் சமாதானமே வேண்டும் என்று உறுதியாக – விடாப்பிடியாக நிற்க வேண்டும். அதுவே இனவாத அரசையும் அதன் ஒடுக்குமுறையை இயந்திரத்தையும் உடைப்பதற்கான உறுதி மிக்க ஆயுதம். இதுதான் உலக மொழி. 

 

https://arangamnews.com/?p=10877

  • Thanks 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

//நாம் மரபார்ந்து சிந்தித்து வந்த இன அடிப்படையிலான சிந்தனை முறையிலிருந்து விடுபடவேண்டும். அதை தூக்கியெறிய வேண்டும்.. //

இப்படித்தானா தென்னாபிரிக்காவில் கறுப்பின மக்களுக்கும் வெள்ளையின மக்களுக்கும் பிரச்சனை தீர்ந்தது?



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.