Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
23 JUN, 2024 | 06:27 PM
image

டி.பி.எஸ்.ஜெயராஜ் 

"காப்டன் பிளட் : தீரச்செயல்கள் நிறைந்த அவரது நீள்பயணம்" (Captain Blood : His Odyssey) என்பது பிரபலமான எழுத்தாளர் றஃபீல் சபாட்டினி 1922 ஆம் ஆண்டில் எழுதிய ஒரு சாகச நாவல். உண்மையான, வரலாற்று நிகழ்வுகளின் பின்புலத்தில் புனைவுப் பாத்திரங்களை உருவாக்குவதில் விருப்பார்வம் கொண்டவர் சபாட்டினி. பனைவினதும் உண்மையினதும் ஒரு கலவையான இந்த நாவல் வாசகர்களினால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

காப்டன் பிளட் மிகவும் ஜனரஞ்சகமான நாவலாக விளங்கியது. அதை அடிப்படையாகக் கொண்டு பல வருடங்களாக பல்வேறு மொழிகளில் திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டன. எம்.ஜி. இராமச்சந்திரனின் நடிப்பில் 1965ஆம் ஆண்டில் வெளியான வசூலில் சாதனைபடைத்த "ஆயிரத்தில்  ஒருவன்" திரைப்படம் காப்டன் பிளட் நாவலின் ஒரு தழுவலேயாகும். அந்த திரைப்படத்தில் ஆளும் சர்வாதிகாரிக்கு எதிரான கிளர்ச்சியில் காயமடைந்த மக்களுக்கு  மருத்துவ சிகிச்சை அளித்தமைக்காக பழிவாங்கப்படும் மணிமாறன் என்ற பெயர்கொண்ட மருத்துவர் பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

பிரிட்டனின் வரலாற்றில் 1685ஆம் ஆண்டில் ஜேம்ஸ் மன்னருக்கு எதிரான கிளர்ச்சி ஒன்றுக்கு இரண்டாவது மொன்மவுத் கோமகன் தலைமை தாங்கினார். அந்த கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது. பல கிளர்ச்சியாளர்கள் அடிமைகளாக பார்படோஸுக்கு அனுப்பப்பட்டனர். இந்த பின்னணியைக் கொண்டதே சபாட்டினியின் நாவல்.

நாவலில் சபாட்டினியின் முக்கியமான புனைவுக் கதாபாத்திரம் சமர்செட் பிராந்தியத்தில் வசித்த ஒரு  மருத்துவரான டாக்டர் பீற்றர் பிளட். அவர் மொன்மவுத் கிளர்ச்சியில் எந்தப் பங்கையும் வகிக்கவில்லை. ஆனால்  மோதல்களில் காயமடைந்த கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ உதவிகளை வளங்கினார். இரக்க உணர்வுடனான இந்த மனிதாபிமானச் செயல் தேசத்துரோகச் செயல் என்று குற்றஞ்சாட்டப்பட்டு டாக்டர் பிளட் ஒரு அடிமையாக பார்படோஸுக்கு அனுப்பப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் தம்பிச்சென்று பழைய வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கு நாடு திரும்புவதற்கு முன்னதாக தொடர்ச்சியான பல சாகசச்செயல்களில் ஈடுபடுகிறார்.

காயமடைந்த மொன்மவுத் கிளர்ச்சியாளர்களுக்கு மருத்துவ உதவிசெய்து பிறகு ஒரு அடிமையாக பார்படோஸுக்கு அனுப்பப்பட்ட ஒரு ஆங்கில சத்திரசிகிச்சை மருத்துவரான டாக்டர் ஹென்றி பிற்மனின் வாழ்வை ஓரளவு அடிப்படையாகக் கொண்டே றஃபில் சபாட்டினி டாக்டர் பிளட் பாத்திரத்தை வடித்தார். டாக்டர் பிற்மன் பார்படோஸில் இருந்து தப்பி இறதியில் இங்கிலாந்து திரும்பிவந்தார். அவர் தனது அனுபவங்கள் பற்றி எழுதியதை சபாட்டினி தனது  நாவலுக்கு பயன்படுத்திக் கொண்டார்.

இலங்கை மருத்துவர்

"வாழ்வை நகல்செய்யும் கலையின்" விசித்திரமான ஒரு இலங்கையிலும்  ஒரு மருத்துவர் இருந்தார். அவர் உண்மையான வாழ்வில் டாக்டர் பிற்மன், டாக்டர் பிளட், மணிமாறன் ஆகியோரின் கதிக்கு உள்ளானார்.

இலங்கை ஆயுதப்படைகளுக்கும் ஆயுதமேதந்திய தமிழ் தீவிரவாதக் குழுக்களுக்கும் இடையிலான போரின் நீண்ட வரலாறு சுவாரஸ்யமான சம்பவங்கள் நிறைந்தது. அத்தகைய சம்பவங்களில் ஒன்று உண்மையான ஹென்றி பிற்மனினதும் புனைவுப் பாத்திரமான பீற்றர் பிளட்டினதும் அதே போன்ற அனுபவங்களைக் கடந்துவந்த வடபகுதியைச் சேர்ந்த ஒரு தமிழ் டாக்டரின் கதை.

இந்த தமிழ் டாக்டர் 1982ஆம் ஆண்டில் காயமடைந்த விடுதலை புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு சிகிச்சை அளித்தமைக்காக கைதுசெயயப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். "கறுப்பு ஜூலையில்" வெலிக்கடைச் சிறை படுகொலைகளின்போது கொலைகாரச் சிங்களக் கைதிகள் கும்பலுடன் நேரடியாக சண்டையிட்டு உயிர்தப்பினார். 

பிறகு இந்த டாக்டர் மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து ஏனைய தமிழ் அரசியல் கைதிகளுடன் சேர்ந்து தப்பிச்சென்று படகு மூலம் இரகசியமாக இந்தியாவுக்குச் சென்றார். 

1987  ஜூலை இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கைக்கு பின்னரே அவர் தமிழ்நாட்டில் இருந்து இலங்கை திரும்பினார். அந்த உடன்படிக்கையின் பிரகாரம் மன்னிப்பு வழங்கப்பட்ட பிறகு அவர் மீண்டும் மருத்துவ சேவை வாழ்வைத் தொடங்கி இறுதியில் அவர் ஒரு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக ஓய்வுபெற்றார். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த வாரம் ஜூன் 16ஆம் திகதி தனது 81 வயதில் அமைதியாக மரணத்தைத் தழுவிக்கொண்ட டாக்டர் துரைராஜா வில்லியம் ஜெயகுலராஜா அவர்களே நான் இங்கு குறிப்பிடுகின்ற அந்த தமிழ் டாக்டர். இந்த கட்டுரை டாக்டர் ஜெயகுலராஜாவின் சுவாரஸ்யமானதும் நிகழ்வுகள் நிறைந்ததுமான வாழ்க்கை மீது கவனத்தைச் செலுத்துகிறது. 

இந்த தனித்துவமான ஆளுமை குறித்து மேலும் அறிவதற்கு பேரார்வம் கொண்ட பல வாசகர்கள் என்னுடன் தொடர்புகொண்டார்கள்.  "ஜெயம் மாமா" எனது தாயாரின் மைத்துனி கிறிஸ்டினாவை (பபா மாமி) திருமணம் செய்தார் என்பது ஒரு தற்செயல் நிகழ்வு. ஆனால் அவர் அந்த திருமணத்துக்கு முன்னரே எனது உறவினர்.

டாக்டர் ரி.டபிள்யூ. ஜெயகுலராஜா 1943 பெப்ரவரியில் திருக்கோவிலில் பிறந்தார். அவரது தாயார் றோஸ் மனோன்மணி அப்போது அங்கு ஆசிரியையாக பணியாற்றினார். அவர்வடமாகாணத்தின்  முல்லைத்தீவு மாவட்டத்தில்  தனியூற்று பகுதியைச் சேர்ந்தவர். ஜெயகுலராஜாவின் தந்தையார்  எட்வேர்ட் துரைராஜா கிழக்கு மாகாணத்தின்அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பகுதியைச் சேர்ந்தவர்.

ஜெயகுலராஜா திருக்கோவில் மெதடிஸ்ற் தமிழ் பாடசாலை, கல்முனை வெஸ்லி உயர்பாடசாலை, மட்டக்களப்பு மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றில் கல்விகற்றார். அந்த கல்லூரியின் மாணவர் விடுதியில் அவர் தங்கியிருந்தே பயின்றார். பாடசாலை நாட்களில் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக விளங்கிய ஜெயகுலராஜா மெய்வல்லுநர் போட்டிகள், பட்மின்டன், ரேபிள் ரெனிஸ் ஆகிய விளையாட்டுக்களில் தனது திறமையை வெளிக்காட்டினார்.

இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் அவர் கொழும்பு மருத்துவக் கல்லூரியில் பிரவேசித்து ஒரு டாக்டராக வெளியேறினார். டாக்டர் முத்துத்தம்பி, டாக்டர் ஆட்டிக்கல ஆகியோரின் கீழ் உள்ளகப் பயிற்சிக் காலப்பகுதியை  முடித்துக்கொண்ட டாக்டர் ஜெயகுலராஜா 1971 ஆம் ஆண்டில் திருகோணமலை வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.1972 ஆம் ஆண்டில் திருகோணமலையில் அவரின் திருமணம் நடந்தது.

அதற்கு பிறகு அவர் அரசாங்க சேவையில் இருந்து விலகி திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையில் கனிமமணல் கூட்டுத்தாபனத்தில் ஒரு டாக்டராக கடமைகளைப் பொறுப்பேற்றார். புல்மோட்டையில் சில வருடங்களுக்கு பிறகு ஜெயகுலராஜா குடும்பம் யாழ்ப்பாணத்துக்கு குடிபெயர்ந்தது. அவர்களது ஒரே மகன் டானியல் ஜேசனின் யாழ்ப்பாண சென் ஜோன்ஸ் கல்லூரி  கல்வியே அதற்கு காரணம். 1982ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில்தான்  ஜெயகுலராஜாவின் வாழ்க்கை முற்றாக மாறியது. 

ஜெயகுலராஜாவும் அவரது மனைவியும் மெதடிஸற் திருச்சபையின் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவரகள். யாழ்ப்பாணத்துக்கு வந்த பிறகு ஜெயகுலராஜா புத்தூரில் மெதடிஸ்த் திருச்சபையினால் நிருவகிக்கப்பட்ட சென் லூக்ஸ் வைத்தியசாலையில் பணியாற்றினார். அவரது குடும்பம் வைத்தியசாலைக்கு அண்மையாக இருந்த மருத்துவர்களின் விடுதியில் வசித்தது. ஜெயகுலராஜாவின் சகோதரர் வண. ஜெயதிலகராஜா யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி மெதடிஸ்ற் திருச்சபையில் போதகராக இருந்தார்.

ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 1977ஆம் ஆண்டு பதவிக்கு வந்ததையடுத்து இலங்கையின் இனநெருக்கடி தீவிரமடையத் தொடங்கியது. தனித்தமிழ் நாட்டுக்காக போராடிய ஆயுதமேந்திய பல்வேறு தமிழ் தீவிரவாதக் குழுக்கள் யாழ்ப்பாணத்தில் தீவிரமாக இயங்கின. அவற்றில் பிரதானமானது விடுதலை புலிகள் இயக்கம்.

சாவகச்சேரி தாக்குதல்

1982ஆம் ஆண்டில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய விடுதலை புலிகள் சில பொலிஸ்காரர்களைக் கொன்ற பிறகு பெருமளவு ஆயுதங்களுடன் தப்பிச்சென்றனர். துப்பாக்கிச் சமரில் விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சீலன், ரகு, புலேந்திரன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களுக்கு அவசர மருத்துவச் சிகிச்சை தேவைப்படடது.

வண. ஜெயதிலகராஜாவுடன் சில தொடர்புகளைக் கொண்ட விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் அவரைத் தொடர்புகொண்டார். அவர் தனது மூத்த சகோதரர் டாக்டர் ஜெயகுலராஜாவிடம் சென்று விடயத்தைக் கூறினார். சற்று நேரம் யோசித்த ஜெயகுலராஜா தனது சகோதரருடன் காயமடைந்த புலிகள் இருந்த மறைவிடத்துக்கு சென்று மருத்துவ உதவியைச் செய்தார். காயமடைந்த புலிகள் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்னதாக மேலும் சில தடவைகள் அவர் அவர்களைச் சென்று பார்த்தார். ஜெயகுலராஜாவின் மருத்துவக் கவனிப்பு இல்லையென்றால் காயமடைந்த புலிகளில் ஒருவர் மரணமடைந்திருக்கக்கூடும். மோதல் ஒன்றில் புலிகள் காயமடைந்தது அதுவே முதற் தடவையாகும்.

பல வருடங்களுக்கு பிறகு சம்பாஷணை ஒன்றின்போது ஆபத்தைப் பற்றி யோசிக்காமல் ஏன் காயமடைந்த புலிகளுக்கு சிகிச்சை அளித்தீர்கள் என்று நான் ஜெயகுலராஜாவிடம் கேட்டேன். 

"நான் ஒரு மருத்துவ டாக்டர். மருத்துவத்துறையின் பதவிப்பிரமாணத்தில் குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளுக்கு நான் கட்டுப்பட்டவன்" என்பதே அவரது பதிலாக இருந்தது. அதைப் போன்ற ஒரு சூழ்நிலையில் காயமடைந்திருக்கக்கூடிய எந்தவொரு நபருக்கும்  தான் மருத்துவ உதவியைச் செய்திருப்பார்" என்று அவர் மேலும் சொன்னார். 

காயமடைந்த நபர் ஒரு பொலிஸ்காரராக இருந்தாலென்ன, ஜே.வி.பி. உறுப்பினராக இருந்தாலென்ன ஏன் பொலிசாரினால் சுடப்பட்ட  ஒரு குற்றவாளியாகக் கூட இருந்தலென்ன  அவர்களுக்கு நான் சிகிச்சை அளித்திருப்பேன். இந்த சந்தர்ப்பத்தில் காயமடைந்தவர்கள் குற்றவாளிகள் அல்ல, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடுகின்ற இலட்சியவாத இளைஞர்கள்" என்று அவர் பதில் கூறினார்.

அரசு மிகவும் கடுமையான நடவடிக்கையில் இறங்கி குடாநாடு பூராவும் தீவிர தேடுதலை நடத்தியது. யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் இருந்த கத்தோலிக்க மடாலயம் ஒன்றில் சோதனை நடத்திய பாதுகாப்பு அதிகாரிகள் நன்கு தெரிந்த கத்தோலிக்க மதகுருவை சம்பந்தப்படுத்தும் சான்றுகளை பெறக்கூடியதாக இருந்தது.

யாழ்ப்பாணம் நீர்வேலியில் வங்கிப்பணம் கொண்டுசெல்லப்பட்ட வான் ஒன்று 1981 மார்ச் 25 கொள்ளையிடப்பட்டது. அந்த சம்பவத்தில் இரு பொலிஸ்கார்கள் பலியாகினர். நீர்வேலி வங்கிக்கொள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலை புலிகள் இயக்கமும் தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர் தலைமையிலான தமிழீழ விடுதலை இயக்கமும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையாகும். நீர்வேலியில் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி வணபிதா ஆபரணம் சிங்கராயரிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது.

ஆரம்பத்தில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதல் தொடர்பாக கொழும்புத்துறை மடாலயம் பொலிசாரினாலும் இராணுவத்தினராலும்  முற்றுகையிடப்பட்டது. வணபிதா சிங்கராயரின் அறையும் சோதனைக்கு உள்ளானது. சில புலிகள் காயமடைந்திருந்தால் அவர்களுக்கு மருத்துவப் பராமரிப்பை வழங்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய சாத்தியம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் கவனம் செலுத்தினர்.

சந்தேகத்துக்கிடமான மருந்து கொள்வனவு ஏதாவது இடம்பெற்றிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக  பார்மசிகளையும் மருந்துக் களஞ்சியங்களையும் கண்காணிப்புக்கு உட்படுத்தியது முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்று. வணபிதா சிங்கராயர் வழமைக்கு மாறாக பெருமளவு மருந்துகளையும் பண்டேஜுகளையும் வாங்கியதாக இரகசிய தகவல் ஒன்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்தது. அதனால் அவர் மீது குறிவைக்கப்பட்டது.

வணபிதா சிங்கராயர் 1982 நவம்பரில் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அவரின் கைதினை தொடர்ந்து அப்போது நெடுந்தீவு பங்குத்தந்தையாக இருந்த வணபிதா அன்ரன் சின்னராசா கைதுசெயயப்பட்டார். அவரின் கைதும் அதைத் தொடர்ந்து அவர் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணையும் சாவகச்சேரி பொலிஸ்நிலைய தாக்குதல் தொடர்பிலான விசாரணையில் ஒரு  முன்னேற்றத்துக்கு  வழிவகுத்தன.

சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட உண்மையான புலிகள் பிடிபடவில்லை என்றபோதிலும் கூட தாக்குதலில் காயமடைந்த புலிகளுக்கு உதவியதாகச் சந்தேகிக்கப்பட்ட ஆட்களை பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யக்கூடியதாக இருந்தது.யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் எம். நித்தியானந்தன், சுண்டிக்குளி மகளிர் உயர்பாடசாலை ஆசிரியையான அவரின் மனைவி நிர்மலா, வண. ஜெயதிலகராஜா மற்றும் டாக்டர் ஜெயகுலராஜா ஆகியோர் கைதுசெய்யப்பட்டு குருநகர் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இரு கத்தோலிக்க மதகுருமார், ஒரு புரட்டஸ்தாந்து போதகர், ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர், ஒரு மருத்துவ டாக்டர், ஒரு ஆசிரியை கைது செய்யப்பட்டமை குறிப்பாக தமிழர்கள் மத்தியிலும் பொதுவில் நாட்டிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதுவரை தமிழ்த் தீவிரவாதம் என்பது தமிழ் இளைஞர்களுடன் மாத்திரம் சம்பந்தப்பட்ட ஒரு திட்டமென்றே கருத்தப்பட்து. மதகுருமார் மற்றும் துறைசார் நிபுணர்களின் கைதுகள் ஆயுதப் போராட்டத்துக்கு பரந்ததும் ஆழமானதுமான ஆதரவு இருந்தது என்பதை வெளிக்காட்டியது. இந்த கைதுகளுக்கு முன்னதாக காந்தீய இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட ஒரு டாக்டரும் கட்டிடக்கலைஞரும் கைது  செய்யப்பட்டிருந்தனர். தமிழீழ விடுதலை முன்னணிக்கு தலைமை தாங்கிய இன்னொரு ஓய்வுபெற்ற மருத்துவ டாக்டரும் ' சுதந்திரன் ' பத்திரிகையின் ஆசிரியரும் கூட கைது செய்யப்பட்டிருந்தனர். இனப்பிளவு மேலும் கூர்மையடைந்தது.

சிறில் ரணதுங்க

அதேவேளை, அந்த கைதுகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அப்போது நான் 'த ஐலணட்' பத்திரிகையின் ஒரு அலுவலக செய்தியாளர். ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான செய்திகளை  திரட்டுவதற்காக அன்றைய ஆசிரியர் விஜித யாப்பா என்னை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பினார். அப்போது யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதியாக பிரிகேடியர் சிறில் ரணதுங்க இருந்தார். பிறகு அவர் இராணுவத் தளபதியாகவும் வந்தார். லெப்டினண்ட் கேணல் தயா விஜேசேகரவும் மேஜர் சாலிய குலதுங்கவும் அவரது பிரதம  உதவியாளர்கள்.

வட பகுதி பத்திரிகையாளர்களின் சார்பில் நான் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து பிரிகேடியர் ரணதுங்க (பிறகு லெப்டினண்ட் ஜெனரல்) குருநகரில் செய்தியாளர்கள் மகாநாடொன்றை நடத்தினார். ஜெயகுலராஜாவுக்கும் ஜெயதிலகராஜாவுக்கும் புறம்பாக கைது செய்யப்பட்டவர்களில் இன்னொருவரும் எனக்கு தெரிந்தவராக இருந்தார். நிர்மலா நித்தியானந்தனே அவர். (நித்தியானந்தனை திருமணம் செய்வதற்கு முன்னர் அவர் நிர்மலா இராஜசிங்கம்) வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் அவர் எனது சமகாலத்தவர்.

இராணுவக் காவலில் நிர்மலாவின் உடல் பாதுகாப்பு குறித்து யாழ்ப்பாணத்தில் பெருவாரியான வதந்திகள் கிளம்பின. அந்த செய்தியாளர்கள் மகாநாட்டில் நிர்மலாவின் பாதுகாப்பு குறித்து நான் கேள்விகளை எழுப்பினேன். என்னைச் சீண்டிய பிறகு பிரிகேடியர் ரணதுங்க நிர்மலாவை அந்த இடத்துக்கு அழைத்துவந்து அவர் பத்திரமாக இருககிறார் என்று ஊடகங்களுக்கு காண்பிக்கப்பட்டது. அதையடுத்து நிர்மலாவின் தோற்றம் குறித்து பத்திரிகைகள் விரிவான செய்திகளை வெளியிட்டன. அதன் மூலம் வதந்திகளுக்கு முடிவு கட்டப்பட்டது.

சாலிய குலதுங்க

அந்த நேரத்தில் ஊடகங்களுடன் தொடர்பாடல்களை பேணிவந்தவர் மேஜர் சாலிய குலதுங்க. (அவர் பிறகு மேஜர் ஜெனரல்) அவர் ஒரு நல்ல நண்பராக இருந்தார். டாக்டர் ஜெயகுலராஜா தொடர்பில் குலதுங்கவுக்கு நான் தொடர்ந்து நெருக்குதல் கொடுத்துவந்தேன். ஜெயகுலராஜா எனது அன்புக்குரிய மாமனார் என்றும் அவரிடம் கூறினேன். பிரிகேடியர் ரணதுங்கவின் உள்ளார்ந்த சம்மதத்துடன் சாலிய எனக்கும் ஜெயகுலராஜாவுக்கும் இடையில் ஒரு சந்திப்பை குருநகர் முகாமில் ஏற்பாடு செய்துதந்தார். எந்த இடையூறும் இல்லாமல் நானும் அவரும் தனியாக ஒரு மணிநேரம் பேசினோம். புத்தூரில் எனது மாமியைச் சந்தித்து எனது சந்திப்பு குறித்து கூறி அவரது கவலையையும் ஏக்கத்தையும் தணித்தது நன்றாக நினைவிருக்கிறது.

டாக்டர் ஜெயகுலராஜாவும் அவருடன் சேர்த்து கைது செய்யப்பட்டவர்களும் பிறகு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பனாகொட இராணுவத் தளத்தில் தடுத்துவைக்கப்பட்டனர். குருநகரை போலன்றி விசாரணை என்ற பெயரில் அங்கு மோசமான பெருமளவு  சித்திரவதைகள் இடம்பெற்றன. பிறகு அவர்களுக்கு எதிராக கொடிய பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த சட்டம் முதலில் 1979ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாகக் கொண்டுவரப்பட்டு பிறகு 1982 முதல் நிரந்தர சட்டமாக்கப்பட்டு இன்று வரை நடைமுறையில் இருக்கிறது.

வெலிக்கடை சிறை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயகுலராஜாவும் மற்றையவர்களும் வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அல்லது தடுத்துவைக்கப்பட்ட பெரும்பாலான தமிழர்கள் அன்று புலிகளாகவே நடத்தப்பட்டனர். வெலிக்கடைக்கு சென்று  ஜெயகுலராஜாவை ஒரு தடவை நான் பார்த்தேன். 

அன்று பயங்கரவாத தடுப்புச்சட்ட தடுப்புக்காவல் கைதிகளைச் சந்திப்பதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனது பெயர் டி.பி.எஸ். ஜெயராஜ் என்பதற்கு பதிலாக டி.ஜே.பி.சபாபதி என்று எழுதப்பட்டிருந்த எனது பழைய தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி உண்மையாகவே நான் அவரின் ஒரு மருமகன் என்று உரிமை கோரினேன். அவர் என்னைக் கண்டதும் பெரும் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைப் பற்றி சிந்திக்காமல் தன்னைச் சந்திப்பது குறித்து கவலையடைந்தார்.

சிறைச்சாலையில் படுகொலைகள்

அதற்கு பிறகு பல நிகழ்வுகள் நடந்தேறின. "கறுப்பு ஜூலை" என்று வர்ணிக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிரான படுமோசமான இன வன்முறை 1983ஆம் ஆண்டில் இடம்பெற்றது. 

வெலிக்கடையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளும் தாக்குதலுக்கு இலக்காகினர். மொத்தமாக அங்கு 72 தமிழ் அரசியல் கைதிகள் இருந்தனர். ஜூலை 25 திங்கட்கிழமை சிங்களக் கைதிகள் 35 தமிழ்க் கைதிகளை கொலைசெய்தனர். அந்த தாக்குதலுக்கு தலைமை தாங்குவதற்கு வெளியில் இருந்து  கொலைகாரர்கள் கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்டது. 

அந்த படுகொலைகளுக்கு பல சிறைக்காவலர்கள் உதவியும் ஒத்தாசையும் புரிந்தனர். பயங்கரவாத தடைச்சட்ட தடுப்புக்காவல் கைதிகளின் பாதுகாப்பைப் பேணுவதற்கு வெலிக்கடையில் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட இராணுவப் பிரவு எதையும் செய்யவில்லை. கொலை செய்யப்பட்ட கைதிகளில் ரெலோ தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோரும் அடங்குவர்.

இரண்டாவது படுமோசமான படுகொலை ஜூலை 27 புதன்கிழமை இடம்பெற்றது. எஞ்சியிருந்த தமிழ்க் கைதிகள் அவர்களின் பாதுகாப்புக்காக சிறைச்சாலைக்குள் வேறு ஒரு பகுதிக்கு மாற்றப்பட்டிருந்தனர். அவர்கள் மீது மீண்டும் தாக்குதல் தொடுக்கப்பட்டது. தமிழ்க்கைதிகள் எதிர்த்துப் போராடினர். ஆனால் 18 பேர் கொலை செய்யப்பட்டனர். 

அந்த பகுதியில் இருந்தவர்களில் 11 பேர் மாத்திரமே சாவில் இருந்து தப்பினர். அவர்களில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான இன்றைய கபினெட் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஒருவர்.

ஜெயகுலராஜாவும் ஏனைய துறைசார் நிபுணர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஜூலை 25 தாக்குதலுக்கு பிறகு ஒன்பது கைதிகள் மேல்மாடியில் இருந்த தங்குமிடத்துக்கு கூட்டிச் செல்லப்பட்டிருந்தனர். வணபிதா சிங்கராயர், வணபிதா சின்னராசா, வண. ஜெயதிலகராஜா, டாக்டர் இரராஜசுந்தரம், ஓய்வுபெற்ற டாக்டர் தருமலிங்கம்,டாக்டர் ஜெயகுலராஜா, பத்திரிகை ஆசிரியர் கோவை மகேசன், விரிவுரையாளர்  நித்தியானந்தன், கட்டடக்கலைஞர் டேவிட் ஆகியோரே அந்த ஒன்பது பேருமாவர். அந்த மேல்மாடி தங்குமிடத்துக்கு செல்வதற்கு ஒடுக்கமான படிக்கட்டு ஒன்றே இருந்தது.

இவர்களைத் தாக்குவதற்கு வன்முறைக்கும்பல் ஒன்றுகூடியபோது மகாத்மா காந்தியின் தீவிர பக்தனான "காந்தீயம்" இயக்கத்தைச் சேர்ந்த டாக்டர் இராஜசுந்தரம் "நாங்கள் அவர்களுடன் நியாயத்தைப் பேசி இந்த பிரசசினைக்கு தீர்வைக் காண்போம்" என்று அப்பாவித்தனமாக யோசனை கூறினார். வன்முறைக் கும்பலுடன் சிங்களத்தில் பேசுவதற்காக இராஜசுந்தரம் படிகளில் இறங்கி கீழே சென்றபோது அவரை அவர்கள் தலையில் தாக்கி வெட்டிக் கொலை செய்தனர்.

மேசைக்கால் ஆயுதங்கள்

தமிழ்க் கைதிகளில் ஒரளவு இளம் வயதினராக இருந்தவர்கள் வன்முறைக் கும்பலை எதிர்த்துச் சண்டையிட தீர்மானித்தனர். மதகுருமார் ஆராதனை நடத்துவதற்கு ஒரு சிறிய மேசை கொடுக்கப்பட்டிருந்தது. மேசையை உடைத்து வணபிதா சின்னராசா, வண. ஜெயதிலகராஜா, டாக்டர் ஜெயகுலராஜா, நித்தியானந்தன் ஆகிய நால்வரும் ஆளுக்கொரு காலை கையிலெடுத்தனர். மாடிப்படி ஒடுக்கமானதாக இருந்ததால் கீழிருந்து மேலே ஒருவர் அல்லது இருவரே ஒரே நேரத்தில் ஏறிவர முடியும். இவ்வாறுதான் நான்கு தமிழ்க் கைதிகளும் தங்களது மேசைக்கால் ஆயுதத்தைப் பயன்படுத்தி வன்முறைக் கும்பலின் தாக்குதலில் இருந்து  தங்களைப் பாதுகாத்து உயிர் தப்பக்கூடியதாக இருந்தது. அரை மணி நேரத்துக்கு பிறகு சிறை அதிகாரிகள் வன்முறைக் கும்பலைக் கலைத்ததை அடுத்து தமிழ்க் கைதிகளின் கொடூர அனுபவம் ஒரு அதிசயம் போன்று  முடிவுக்கு  வந்தது.

வெலிக்கடை சிறையில் ஆரம்பத்தில்  இருந்த 72 தமிழ்க் கைதிகளில் இரு படுகொலைச் சம்பவங்களில் இருந்தும் 19 பேரினால் மாத்திரமே உயிர் பிழைக்கமுடிந்தது. அவர்கள் அருவருக்கத்தக்க  "புலிநாளான (கொட்டி தவச) ஜூலை 29 மட்டக்களப்பு சிறைக்கு மாற்றப்பட்டனர். கைதிகள் பொதிகளைப் போன்று ட்ரக் ஒன்றில் ஏற்றப்பட்டு வீதியால் கொண்டு செல்லப்பட்டனர். முதலில் அவர்கள் கொழும்பு கோட் ட காலிமுகத்திடலில் பல மணி நேரம் வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் இயற்கைக் கடன்களை கழிப்பதற்கு கூட அனுமதிக்கப்படாமல் மட்டக்களப்புக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறையுடைப்பு

டாக்டர் ஜெயகுலராஜா பல வருடங்களுக்கு முன்னர் தனது பயங்கரமான அனுபவங்களை தமிழ்நாட்டில்  சென்னை மீனம்பாக்கத்தில் வைத்து என்னிடம் விரிவாகக் கூறினார். மட்டக்களப்புக்கு கூட்டிச்செல்லப்பட்ட பிறகு 1983 செப்டெம்பரில் இடம்பெற்ற சிறையுடைப்பின்போது ஜெயகுலராஜா தப்பிச் சென்றார். மீண்டும் பிடிபடாமல் அவர் இந்தியாவுக்கு இரகசியமாக படகு மூலம் சென்றார். இதையும் தொடர்புடைய ஏனைய விடயங்களையும் அடுத்துவரும் கட்டுரையில் பார்ப்போம்.

https://www.virakesari.lk/article/186786

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்னாரின் ஆன்மாவ அமைதியில் இளைப்பாறட்டும். 

🙏



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.