Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐபோன் உற்பத்தி, ஆண் - பெண் பருமன்: தமிழ்நாடு பற்றி பொருளாதார ஆய்வறிக்கை கூறுவது என்ன?

பொருளாதார ஆய்வறிக்கை, இந்தியா

பட மூலாதாரம்,SANSAD TV

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி செய்தியாளர்
  • 22 ஜூலை 2024

இந்தியாவின் நிதி நிலை அறிக்கைக்கு முன்னாட்டமாகக் கருதப்படும் இந்திய பொருளாதார ஆய்வறிக்கை இன்று இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. நிதிநிலை அறிக்கை நாளை (23.07.2024) தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 'இந்திய பொருளாதார ஆய்வறிக்கை 2023-2024'ஐ (Economic Survey of India 2023-24) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பொருளாதார ஆய்வறிக்கை என்பது, மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் அரசின் நிதிச் செயல்பாடு எப்படி இருந்தது, இந்தியப் பொருளாதாரம் எப்படி செயல்பட்டது என்பதை சொல்லும் ஓர் அறிக்கை. எதிர்காலத்தில் வரவிருக்கும் கொள்கை மாற்றங்களையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டும். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முதல் நாள் பொருளாதார ஆய்வறிக்கை நிதித் துறையால் தாக்கல் செய்யப்படுகிறது.

பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கியமான 15 விஷயங்கள்

  • வரும் நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6.5 – 7 சதவீதமாக இருக்கும். மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து 7 சதவீதத்திற்கு மேல் இந்தியப் பொருளாதாரம் வளர்ந்திருப்பதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
  • மக்கள் தொகை வளர்ச்சி, அதிகரிக்கும் தேவைகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பொருளாதாரம் 78.51 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
  • இந்தியாவில் 56.5 கோடி பேர் பணியாளர்களாக இருக்கிறார்கள். இவர்களில் 45 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் விவசாயத் துறையில் இருக்கிறார்கள். 11.4 சதவீதம் பேர் உற்பத்தித் துறையிலும் 28.9 சதவீதம் பேர் சேவைத் துறையிலும் 13 சதவீதம் பேர் கட்டுமானத் துறையிலும் இருக்கின்றனர்.
  • இந்தியாவில் பெண்கள் வேலை பார்ப்பது கடந்த ஆறு ஆண்டுகளில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. வேலைவாய்ப்பின்மை குறைந்து வருவதாகவும் 2023வது நிதியாண்டில் வேலைவாய்ப்பின்மை 3.2 சதவீதமாக இருந்ததாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
  • வெளிநாடுகளில் வேலை பார்ப்போர் அனுப்பும் தொகை (Remittances), இந்த ஆண்டில் 3.7 சதவீதம் அதிகரித்து 124 பில்லியன் டாலர்களாகவும் அடுத்த ஆண்டில் இது 4 சதவீதம் அதிகரித்து 129 பில்லியன் டாலர்களாகவும் இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கை மதிப்பிட்டிருக்கிறது.
  • இந்தியா தரமான உள் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றால் பெரும் அளவில் தனியார் துறை முதலீடு தேவைப்படும் என்றும் இதற்கு மத்திய அரசின் கொள்கை மற்றும் அமைப்பு ரீதியான ஆதரவு மட்டும் போதுமானதாக இருக்காது என்றும் மாநில அரசும் உள்ளாட்சி அமைப்புகளும் மிக முக்கியமான பங்கை வகிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
  • விரைவான நகர்மயமாக்கத்தால் வீடுகளின் தேவை அதிகரிக்கும் என்றும் இது ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
  • இந்திய அரசின் Universal Services Obligation Fund (USOF) நிதியில் ஐந்து சதவீதத்தை தொலைத்தொடர்புத் துறையில் ஆராய்ச்சிக்காகவும் மேம்பாட்டிற்காகவும் செலவிட உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிதியில் தற்போது 80,000 கோடி ரூபாய் இருக்கிறது. இந்த நிதியின் பெயர் இனி 'டிஜிட்டல் பாரத் நிதி' என மாற்றப்படும்.
  • கரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் இந்தியச் சுற்றுலாத் துறை சற்று வளர்ச்சி கண்டிருக்கிறது. 2023ஆம் ஆண்டில் 92 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிட்டால் இது 43.5 சதவீத வளர்ச்சியாகும். 2023ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் புதிதாக 14,000 அறைகள் கட்டப்பட்டிருக்கின்றன.
  • சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகப் பெரிய காலணி உற்பத்தியாளராக இந்தியா இருக்கிறது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் காலணிகளின் மதிப்பு 1.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது, 2024ல் 2.5 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது.
  • செல்போன் உற்பத்தியைப் பொருத்தவரை, 2024ஆம் ஆண்டில் உலகில் உற்பத்தியாகும் ஐஃபோன்களில் 14 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் கர்நாடக மாநிலத்திலும் தமிழ்நாட்டிலும் புதிய தொழிற்சாலைகளுக்காக முதலீடுகளைச் செய்திருக்கிறது.
  • நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைப் பொருத்தவரை, கடந்த ஆண்டில் 67 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது 23.2 டாலராக குறைந்திருக்கிறது. ஆனால், நேரடி அன்னிய முதலீட்டைப் பொருத்தவரை கடந்தாண்டோடு ஒப்பிட்டால் கணிசமாகக் குறைந்திருக்கிறது. வளர்ந்த நாடுகளில் வட்டி விகிதம் அதிகரித்தும், இந்தியாவில் பங்குச் சந்தை வளர்ச்சி அடைந்ததால், அதிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர் லாபத்தை எடுத்ததும் இதற்கு காரணங்கள் என பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
 
பொருளாதார ஆய்வறிக்கை

பட மூலாதாரம்,ANI

  • இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அடுத்த பத்து மாதங்களின் இறக்குமதிக்குப் போதுமானதாக இருக்கும். இந்தியாவின் வெளிநாட்டுக் கடன், உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 18.7 சதவீதமாக இருக்கிறது.
  • இந்தியாவில் உடல் பருமனானவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகவும் குழந்தைகளிடம் இந்தப் பிரச்சனை அதிகரிப்பது உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் என்றும் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண்கள் அதிக உடல் பருமனுடன் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆண்களில் 37 சதவீதம் பேரும் பெண்களில் 40.4 சதவீதம் பேரும் உடல் பருமனாக உள்ளனர்.
  • செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்களில் துவங்கி மிகத் திறன் வாய்ந்த தொழிலாளர்கள் வரை மிகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் ஆண்டுகளிலும் தசாப்தங்களிலும் உயர் வளர்ச்சியை இந்தியா எட்டுவதில் இது பல தடைகளை உருவாக்கும்.
  • 2024ஆம் ஆண்டு மே மாதத்தில், நிலக்கரி, டீசல், எரிவாயு போன்ற மரபுசார் மின் ஆதாரங்கள் தவிர்த்து, பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 45.4 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. 2047ஆம் ஆண்டில் இந்தியாவின் எரிசக்தித் தேவை 2 முதல் 2.5 மடங்கு உயரும் என கணிக்கப்பட்டிருக்கிறது.
  • கோவிட் தொற்று, புவிசார் அரசியல் பதற்றங்கள், சப்ளையில் ஏற்பட்ட தடைகள் ஆகியவற்றால் 2022-23ல் உலகம் முழுவதுமே விலைகள் உயர்ந்தன. ஆனால், மத்திய அரசின் கொள்கைகளாலும் ரிசர்வ் வங்கி தலையீட்டாலும் 2024ஆம் ஆண்டில் பணவீக்கம் 5.4 சதவீதமாக இருந்தது.
 
பொருளாதார ஆய்வறிக்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வி. ஆனந்த நாகேஸ்வரன், இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர்

தலைமைப் பொருளாதார ஆலோசகர் பேட்டி

  • இந்தியப் பொருளாதார அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு இந்தியாவின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் செய்தியாளர்களிடம் பேசினார். அவருடைய பேச்சின் முக்கிய அம்சங்கள்:
  • கடந்த மூன்று ஆண்டுகளாகப் பொருளாதாரம் 8 சதவீதம் அளவுக்கு வளர்ந்திருக்கிறது. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொருத்த வரை, கோவிட்டிற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்ததைவிட 20 சதவீதம் அதிகமாக இருக்கிறது."
  • உலகமயமாக்கம் உச்சத்தில் இருக்கிறது. இந்த சவால்களுக்கு நடுவில் நாம் 'விக்சித் பாரத்'திற்கான பாதையை நாம் தேர்வுசெய்ய வேண்டும். அதனால் உள்நாட்டு வளர்ச்சி என்பது மிக மிக முக்கியமாகிறது"
  • குடும்பங்களின் சேமிப்பு மேம்பட்டிருக்கிறது. "குடும்பங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படக் கூடிய நிதி சொத்துகளில் முதலீடு செய்துள்ளனர். சந்தையோடு இணைக்கப்படாத நிதிச் சொத்துகளை சிறப்பாகவே மேம்பட்டிருக்கின்றன".
  • இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் குறைவாகவே இருப்பதால் ரூபாய் வீழ்ச்சியடைவது பாதிப்பை ஏற்படுத்தாது. டாலர்களில் கடன் வாங்கியிருந்தால் பணத்தின் மதிப்பு குறைவது பிரச்சனையை ஏற்படுத்தியிருக்கும். வர்த்தகத்தில் கிடைக்கும் லாபம், வெளிநாட்டுக் கடன்களைச் செலுத்துவதில் போயிருக்கும். ஆனால், இந்தியாவில் நிலைமை அப்படியில்லை."
  • இந்தியாவில் 85 சதவீதத்திற்கு அதிகமான விளைநிலங்கள் 2 ஹெக்டேர் அளவிலோ அதற்குக் குறைவாகவோதான் இருக்கின்றன. 1970களில் இருந்து தனிநபர் நிலவுடமையின் அளவு குறைந்து வருகிறது. இதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும். நான்கு ஹெக்டேர் அளவுக்கு குறைவான நிலத்தில் இயந்திரங்களைப் பயன்படுத்துவது பொருளாதார ரீதியாக லாபகரமாக இருக்காது
  • தக்காளி, வெங்காயம், பருத்தி போன்றவற்றின் விளைச்சல் உலகளாவிய விளைச்சலோடு ஒப்பிட்டால் 20 - 40 சதவீதம் குறைவாக இருக்கிறது. நிலங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் விளைச்சலை அதிகரிக்கவும்செய்யலாம்.
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய துவங்கினார்- முக்கிய அம்சங்கள்

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

23 ஜூலை 2024, 01:55 GMT
புதுப்பிக்கப்பட்டது 30 நிமிடங்களுக்கு முன்னர்

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய துவங்கினார். 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று, ஜூன் மாதத் துவக்கத்தில் ஆட்சி அமைத்த நரேந்திர மோதி அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தின் முதல் பட்ஜெட் இது.

நிர்மலா சீதாராமன் கடந்த 2019-ஆம் ஆண்டு நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். அப்போது தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இன்று ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய துவங்கியுள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய நாள் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம். அதன்படி நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், 2024-25ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.5 முதல் 7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டிருந்தது.

 

`வேலையில்லா திண்டாட்டம்’ என்பது மத்திய அரசின் முன்னுள்ள மிகப்பெரிய சவால். இந்திய இளைஞர்களுக்குப் போதுமான வேலைகள் இல்லாத சூழல் நிலவுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு என்பதை முன்னிறுத்தியே காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன.

இந்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையும் கூட, மக்கள் தொகை வளர்ச்சி, அதிகரிக்கும் தேவைகள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பொருளாதாரம் 78.51 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்த சவாலை சமாளிப்பதற்கு பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் இடம் பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
பட்ஜெட் தாக்கல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

வரி குறைப்பு இருக்குமா?

நாட்டின் ஒட்டுமொத்த சில்லறை பணவீக்க விகிதம் கடந்த ஜூன் மாதத்தில் 5.1% ஆக இருந்தது. இந்த பணவீக்கத்தை குறைக்கவும், மக்களின் கைகளில் பணத்தை அதிக அளவில் புழங்கச் செய்யவும் வரிக்குறைப்பு அவசியமான ஒன்று என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில், பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி குறைக்கப்படலாம் என்று எதிர்பார்ககப்படுகிறது. ஏனெனில், பெட்ரோல் விலையில் மத்திய அரசு விதிக்கும் கலால் வரி, கூடுதல் கட்டணம் மற்றும் செஸ் ஆகியவை ஐந்தில் ஒரு பங்கு ஆகும். டீசல் விலையிலோ அது 18 சதவீதமாக இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் பெரிய அளவில் மாற்றம் பெறாத வருமான வரி உச்சவரம்பில் தளர்வு இருக்கலாம். இது குறைவான வருமான வரியை செலுத்த மக்களுக்கு உதவுவதுடன், மக்களை அதிக செலவு செய்ய ஊக்குவிக்கும்.

தனியார் முதலீடு ஊக்குவிப்பு

இந்தியா தரமான உள் கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றால் பெரும் அளவில் தனியார் துறை முதலீடு தேவைப்படும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம்.

 
நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம்,SANSAD TV

தமிழ்நாடு முதல்வர் கேட்டது கிடைக்குமா?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 5 கோரிக்கைகளை பட்டியலிட்டு, அவற்றை மத்திய பட்ஜெட்டில் நிறைவேற்றித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

  • 3 ஆண்டுகளாக விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதியை விடுவிக்க வேண்டும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.
  • தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திட போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
  • தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்க வேண்டும்
  • கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்த வேண்டும்
  • வருமான வரிச் சுமையை குறைக்க வேண்டும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் பத்தாண்டுகால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும்

என்பன போன்ற கோரிக்கைகளை அவர் தனது எக்ஸ் தள பதிவில் முன்வைத்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யப் போகும் பட்ஜெட்டில் தமிழ்நாடு முதல் மு.க.ஸ்டாலினின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகள் வெளியாகுமா? தமிழ்நாடு மட்டுமின்றி, நாடு முழுவதும் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழில்துறையினர் என பல்வேறு தரப்பினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் மத்திய பட்ஜெட் இருக்குமா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய பட்ஜெட்: தங்கம், வெள்ளி மீதான வரிக் குறைப்பால் யாருக்கு லாபம்?

தங்கம், வெள்ளி விலை சரிவு

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், சிராஜ்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 23 ஜூலை 2024, 14:04 GMT
    புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 2024-25ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி சுங்கவரியை 15 சதவீதம் என்பதிலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்துக்கான வரியை 6.4 சதவீதமாகவும் குறைத்து அவர் அறிவித்தார்.

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதன் பின்னணியில் ரஷ்யா-யுக்ரேன் போர், உலகளாவிய பண வீக்கம், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் வட்டி விகித உயர்வு என பல காரணிகள் இருந்தாலும், இந்தியாவில் தங்கம் விலை கூடியதற்கு மத்திய அரசின் 15% இறக்குமதி வரியும் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

மத்திய பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில், சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூபாய் 2,080 குறைந்து 52,400 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 260 குறைந்து 6,550 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூபாய் 3,100 குறைந்து 92,500 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

 

'நான்கு ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்'

இந்தியாவில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 800 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. சுவிட்சர்லாந்து, தென்னாப்பிரிக்கா, துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்கிறது.

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதை பொதுமக்களும் நகைக்கடை உரிமையாளர்களும் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து பேசிய தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி, "கடந்த நான்கு வருடங்களாகவே இந்த இறக்குமதி சுங்கவரியைக் குறைக்க நாங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தோம். இந்த வரி குறைப்பு அறிவிப்பால் நடுத்தர மக்கள் பயனடைவார்கள்" என்று கூறினார்.

மத்திய பட்ஜெட் 2024

பட மூலாதாரம்,SANSAD TV

கடந்த வாரங்களில் சவரனுக்கு 55 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருந்த தங்கம் இப்போது 52,400 விற்பனையாவதை சுட்டிக்காட்டிய அவர், "இனிவரும் காலங்களில் சர்வேதச சந்தைகளில் தங்கம் என்ன விலைக்கு விற்கப்படுகிறதோ, கிட்டத்தட்ட அதே விலைக்கு இந்தியாவிலும் தங்கம் கிடைக்கும்." என்றார்.

இந்த வரி குறைப்பால் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து தங்கத்தைக் கடத்துவது குறையும் என்றும் அவர் கூறினார்.

"கடந்த சில வருடங்களாகவே வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் தங்கத்தைக் கடத்தி கொண்டுவருவது அதிகமாக நடைபெற்று வந்தது. அதிக சுங்கவரி தான் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. இதனால் நியாயமாக தொழில் செய்து வந்த பல தங்க நகை வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். அரசின் இந்த அறிவிப்பால், இனி அத்தகைய சட்டவிரோத தங்க பரிமாற்றங்கள் குறையும்" என்று கூறினார் ஜெயந்திலால் சலானி.

ஜெயந்திலால் சலானி

பட மூலாதாரம்,CHALLANIJAYANTILAL/INSTAGRAM

படக்குறிப்பு,ஜெயந்திலால் சலானி, தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர்

பொதுமக்கள் கூறுவது என்ன?

மற்ற நாடுகளில் ஒரு முதலீடாகப் கருதப்படும் தங்கம், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் ஓர் சொத்தாகவும், அந்தஸ்தின் குறியீடாகவும் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் வரதட்சணை கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் என சட்டம் கூறினாலும், திருமணங்களில் தங்கம் முக்கிய பங்கு வகிக்கவே செய்கிறது. மணப்பெண்ணுக்கு அவரவர் வசதிக்கு ஏற்ப தங்க ஆபரணங்களைச் சூடி அனுப்புவது தொடர் வழக்கமாகவே இருந்து வருகிறது.

இந்தியாவில் திருமணத்திற்கு மட்டுமின்றி சீர்வரிசையாகவும், மொய்யாகவும் தங்கம் பரிசளிக்கப்படுகிறது. அப்படியிருக்க இந்த வரி குறைப்பு குறித்து பொதுமக்கள் கூறுவது என்ன?

"எனது மகளுக்கு செப்டம்பர் மாதம் திருமணம் நடக்கவுள்ளது. கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை விறுவிறுவென ஏறிக் கொண்டிருக்கிறது. சவரன் 55,000 ரூபாயைக் கடந்த போது, மிகுந்த கவலையில் இருந்தோம். இப்போது மத்திய அரசும் வரி குறைப்பை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. நிச்சயம் இது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்கிறார் சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி.

தங்கம், வெள்ளியின் இறக்குமதி வரி குறைப்பு

பட மூலாதாரம்,GETTY IMAGES

"இந்தியாவில் பணவீக்கமும் விலைவாசியும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் மக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை. அப்படியிருக்க இது ஒருவகையில் நல்ல செய்தி தான். திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு மொத்தமாக தங்கம் வாங்குபவர்களுக்கு இது நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்." என்கிறார் திருவள்ளூரைச் சேர்ந்த வித்யா ராமன்.

நாகர்கோவிலைச் சேர்ந்த அனிஷா ரஹ்மான் பிபிசியிடம் பேசுகையில், "எனது கணவர் வெளிநாட்டுக்குச் செல்ல என்னிடம் இருந்த நகைகளை அடகு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவர் அனுப்பும் பணத்தை சேமித்து வைத்து அதை மீட்டு விட்டேன். அடுத்து என் மகளுக்கு புதிதாக நகைகள் வாங்க வேண்டும் என பணம் சேமித்து வருகிறேன். இப்போது இந்த வரி குறைப்பால் சர்வதேச விலையிலேயே இந்தியாவிலும் நகை வாங்கலாம் என்று சொல்கிறார்கள், எனவே இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது" என்று கூறினார்.

"வரிக் குறைப்பால் அரசுக்கு லாபம்தான்"

வ. நாகப்பன்
படக்குறிப்பு,வ. நாகப்பன், பொருளாதார நிபுணர்

தங்கம் மற்றும் வெள்ளிக்கான இறக்குமதி சுங்க வரியை குறைத்திருப்பதால் மத்திய அரசுக்கு என்ன பயன்கள் கிடைக்கும் என்பது குறித்து பேசினார் பொருளாதார நிபுணர் வ. நாகப்பன்.

"இந்தியாவில் தங்கத்திற்கான தேவை என்பது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். நீண்ட காலமாகவே தங்கத்தை ஒரு பாதுகாப்பான சேமிப்பு முறையாக மக்கள் பார்க்கிறார்கள். சிறுகச் சிறுக வாங்கலாம், அதே சமயத்தில் பங்குச் சந்தைகள் போல அதிக அபாயமும் இல்லை என்பதால்."

"அப்படியிருக்க கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறியதால் மக்களிடையே ஒரு அச்சம் நிலவியது. மறுபுறம், அதிக சுங்க வரி காரணமாக தங்கக் கடத்தலும் அதிகரித்தது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்த வரி குறைப்பு கொண்டு வரப்பட்டுள்ளது" என்று கூறினார்.

தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு 10 சதவீதமாக இருந்த அடிப்படை சுங்க வரியை 5 சதவீதமாகவும், ஏஐடிசி (AIDC) எனப்படும் வரி 5 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாகவும் குறைக்கப்பட்டு, மொத்தமாக 6 சதவீதம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விளக்கிய வ. நாகப்பன், அதே சமயத்தில் இதனால் அரசுக்கு நஷ்டமும் இருக்காது என்கிறார்.

"15% என்பதிலிருந்து 6% என்பது கேட்க பெரிய வித்தியாசம் போல தெரியலாம், உண்மை என்னவென்றால் அதிகரித்து வரும் தங்கக் கடத்தல்களால் அரசுக்கு பெரும் வரியிழப்பு ஏற்படுகிறது. அதைச் சரிசெய்ய தான் இந்த அறிவிப்பு. இதனால் தங்கத்தைக் கடத்துவது குறையும், தங்கம் விலையும் குறையும், மக்களும் ஆர்வமாக வாங்குவார்கள், அரசுக்கும் போதுமான வரி கிடைக்கும்." என்று கூறுகிறார் பொருளாதார விமர்சகர் வ. நாகப்பன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மத்திய பட்ஜெட்டில் பிகார், ஆந்திராவுக்கு சிறப்புத் திட்டம் - தமிழ்நாடு புறக்கணிப்பா? பாஜக விளக்கம்

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 24 ஜூலை 2024, 03:03 GMT
    புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர்

2024-25ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் செவ்வாய்க்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருப்பதாக தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதன் அடிப்படை என்ன?

இந்த நிதி நிலை அறிக்கையில் ஆந்திரப்பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் பல திட்டங்கள் குறிப்பிடப்பட்டு அவற்றுக்குத் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதால், மற்ற பல மாநிலங்கள் இந்த பட்ஜெட் குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளன.

அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி, இதனை 'ஆந்திரா - பிகார் பட்ஜெட்' என விமர்சித்துள்ளது.

'ஆந்திரா - பிகார் பட்ஜெட்'

இந்த நிதிநிலை அறிக்கைக்கு தமிழ்நாட்டில் இருந்து கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இந்த பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்த முறை நிதிநிலை அறிக்கையை தயாரிக்கும்போது தமிழ்நாட்டின் சில தேவைகளைக் கவனத்தில் கொள்ளவேண்டுமெனக் கூறி, அது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 1

அதில், "மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான நிதி, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல், கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான ஒப்புதல், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள, புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்" என்று முதலமைச்சர் கூறியிருந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 2

'இந்தியாவிற்கான பட்ஜெட் அல்ல'

ஆனால், இந்த நிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் மெட்ரோ ரயில் திட்டங்கள், புதிய ரயில்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாகத் தெரியவில்லை. மாறாக, அரசியல் காரணங்களுக்காக பிகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஆளுவோருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் போன்றே உள்ளது." என்று கூறினார்.

அரசியல் சுயலாபங்களுக்காக குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக அள்ளிக் கொடுத்தும், மதவாத அரசியலை தொடர்ந்து புறக்கணிக்கின்றன என்ற ஒரே காரணத்திற்காக நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்துவரும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மீது வன்மத்தைக் கக்கிடும் வகையில் இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது என கடுமையாக விமர்சித்தார் முதலமைச்சர்.

"இந்திய மக்களாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவங்களைச் சிதைத்திடும் வகையில் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கை மூலம் தேர்தல் கணக்கை தீர்த்துக்கொள்ள பாரதிய ஜனதா கட்சி அரசு நினைத்திருப்பது வேதனைக்குரியது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 

'தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அநீதி'

'தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அநீதி'

பட மூலாதாரம்,FACEBOOK

இந்த நிதிநிலை அறிக்கையில் பிகார், அசாம் போன்ற மாநிலங்களுக்கு வெள்ள துயர்நீக்கத்திற்கான நிதி குறித்து குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தனது பட்ஜெட் உரையில் இது குறித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிகார் மாநிலம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதாகவும் இந்த வெள்ளம் நேபாளத்தில் இருந்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

“நேபாளத்தில் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கும் திட்டங்கள் முன்னேற்றமடையவில்லை. வெள்ள துயர்நீக்க நடவடிக்கைகளுக்காக நாங்கள்11,500 கோடி ரூபாயை வழங்கவிருக்கிறோம். இந்தியாவுக்கு வெளியில் துவங்கும் பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை நதிகளால் அசாமில் ஆண்டுதோறும் வெள்ளம் ஏற்படுகிறது. அவர்களுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகியவை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்படுகின்றன. அவர்களுக்கு உதவிகள் அளிக்கப்படும்" என்று நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

இதனைச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

"இரண்டு தொடர் பேரிடர் இழப்புகளைச் சீரமைக்க பேரிடர் நிவாரணத்தை வழங்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியபோதிலும், இந்த பட்ஜெட்டிலும் போதிய நிதி வழங்கப்படவில்லை. 37,000 கோடி ரூபாய் பேரிடர் நிவாரணமாக வழங்குவதற்கான ஒரு விரிவான அறிக்கையினை தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த நிலையில், மத்திய அரசு சுமார் 276 கோடி ரூபாய் மட்டுமே இதுவரை வழங்கியுள்ளது." என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும், "ஆனால் இன்று உத்தராகண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்கள் மட்டுமின்றி, பிகார் மாநிலத்திற்கு மட்டும் 11,500 கோடி ரூபாய் பேரிடர் தடுப்புப் பணிகளுக்காக வழங்கப்பட உள்ளது. இது, தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய அநீதியாகும்" எனக் குற்றம்சாட்டியிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம்,SANSAD TV

படக்குறிப்பு,சில மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுவதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்திருக்கிறார்.

அதேபோல, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு நிதி எதையும் வழங்காதது, கோயம்புத்தூர், மதுரை ரயில் திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஆகியவை குறித்தும், புதிய ரயில் திட்டங்கள், நெடுஞ்சாலைத் திட்டங்கள் இல்லாதது குறித்தும் முதல்வரின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் மாநில அரசின் பங்கே அதிகமாக இருக்கும் நிலையில், கூடுதல் நிதி எதையும் வழங்காமல் வீடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மாநில அரசுகளுக்கு கூடுதல் நிதிச் சுமையை ஏற்படுத்தும் என்றும் முதல்வரின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்த அறிக்கை வெளியான பிறகு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 27ஆம் தேதி பிரதமர் தலைமையில் முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிடி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

மேலும் புதன்கிழமையன்று தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அதிமுகவின் விமர்சனம்

அதிமுகவின் விமர்சனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

எதிர்க்கட்சியான அ.தி.மு.கவும் இந்த நிதி நிலை அறிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தமிழ்நாட்டின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியைக் காட்டுவதாக கூறியிருக்கிறார்.

"இந்த வரவு - செலவு அறிக்கை வடமாநிலங்களையும் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை." என்று கூறியுள்ளார்.

குறிப்பாக தமிழகத்திற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது என்றும் எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 3
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

Twitter பதிவின் முடிவு, 3

சில மாநிலங்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகையா?

சில மாநிலங்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகையா?

பட மூலாதாரம்,ANI

நிதிநிலை அறிக்கையில் சில மாநிலங்களை மட்டும் குறிப்பிட்டு, திட்டங்களை ஒதுக்கீடு செய்வது முன்னெப்போதும் இல்லாத வழக்கம் என்கிறார் பொருளாதாரப் பேராசிரியரும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினருமான ஜோதி சிவஞானம்.

"இந்தியாவின் நிதிநிலை அறிக்கை என்பது நாட்டின் ஒட்டுமொத்த வருவாயும் எப்படி செலவு செய்யப்படுகிறது என்பதற்கான அறிக்கை. இதில் சில மாநிலங்களை மட்டும் குறிப்பிட்டு அவற்றுக்குத் திட்டங்களை அறிவிப்பது முன்னெப்போதும் நடக்காதது." என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு செய்ய நிதி கமிஷன் இருக்கிறது. எவ்வித பாரபட்சமும் இல்லாமல் நிதிப் பகிர்வை செய்ய வேண்டியது அதன் பொறுப்பு. இல்லாவிட்டால் மத்திய அரசின் திட்டங்கள் மூலமாக மாநிலங்களுக்கு நிதி அளிக்கலாம் அல்லது மத்திய அரசே திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தலாம். ஆனால், ஒரு மாநில அரசு கேட்கிறது என்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்வது சரியல்ல. ஏனென்றால் அது மத்திய அரசுக்கு சொந்தமான நிதி அல்ல. எல்லா மாநிலங்களுக்கும் சொந்தமானது." என்று கூறினார்.

நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது, அனால் அதுமட்டும் விஷயமல்ல, சில மாநிலங்களுக்கு மட்டும் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு பல மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்பதுதான் விஷயம் என்கிறார் ஜோதி சிவஞானம்.

பா.ஜ.க கூறுவது என்ன?

நாராயணன் திருப்பதி.
படக்குறிப்பு,நிடி ஆயோக்கை புறக்கணிப்பது தமிழக மக்களைப் புறக்கணிப்பதற்குச் சமம் என்கிறார் நாராயணன் திருப்பதி

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் சரியானவையல்ல என்கிறார் தமிழக பா.ஜ.கவின் துணைத் தலைவரான நாராயணன் திருப்பதி.

"சென்னை மெட்ரோ ரயில் முதல் அலகிற்குத்தான் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும்போது இரண்டாவது அலகிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றே தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்கும்போது ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணத்தைத் தராதது போல பேசுவது சரியல்ல. இந்தப் பிரச்னை மத்திய அரசும் மாநில அரசும் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சனை." என்று கூறுகிறார் அவர்.

தொடர்ந்து பேசுகையில், "ஆந்திர மாநிலத்தில் பத்தாண்டுகளாக தலைநகரம் இல்லை, அந்தப் பிரச்னையைத் தீர்த்திருக்கிறோம் என மகிழ வேண்டும். அதைவிடுத்து குறை சொல்வது சரியல்ல. நிடி ஆயோக்கை புறக்கணிப்பது தமிழக மக்களைப் புறக்கணிப்பதற்குச் சமம்" என்கிறார் நாராயணன் திருப்பதி.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் சில மாநிலங்கள் நிதி நிலை அறிக்கையில் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுவதை மறுத்திருக்கிறார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், " ஒவ்வொரு மாநிலமும் அவர்கள் முன்வைத்த திட்டங்களின் அடிப்படையில் தாங்கள் கோரியவற்றைப் பெற்றிருக்கும். எந்த மாநிலமும் விடுபடவில்லை. எந்த மாநிலத்தையும் விட்டுவிடுவது எங்கள் நோக்கமுமில்லை. பிரதமர் துவக்கிவைத்த எல்லாத் திட்டங்களும் எல்லா மாநிலங்களுக்குமானவை" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

ஆந்திராவிற்கும் பிகாருக்கும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்ன?

ஆந்திராவிற்கும் பிஹாருக்கும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

இந்த நிதிநிலை அறிக்கையில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி உதவியாக பலதரப்பு முகமைகள் மூலம் நடப்பு நிதியாண்டில் 15,000 கோடி ரூபாய் ஏற்பாடு செய்யப்படும். அதேபோல, போலாவரம் நீர்ப்பாசனத் திட்டத்தை முடிப்பதற்குத் தேவையான நிதி உதவி செய்யப்படும் என நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார்.

ஆனால், இந்த நிதியை மத்திய அரசு நேரடியாக அளிக்கப்போவதில்லை என்றும் பலதரப்பு முகமைகள் மூலமாக அளிக்கப்படும் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அது கடனுதவியா, கடனுதவி என்றால் கடனை யார் திருப்பிச் செலுத்துவது போன்றவை விளக்கப்படவில்லை.

அதேபோல, பிகாருக்கும் பல்வேறு திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் பிகாரில் உள்ள நாளந்தாவில் ஒருங்கிணைந்த மேம்பாட்டுத் திட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒடிசாவிலும் சுற்றுலாவை மேம்படுத்த நிதியுதவி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர, பிகார், அசாம், உத்தரகாண்ட், சிக்கிம், இமாச்சலப் பிரதேச மாநிலம் ஆகியவற்றுக்கும் வெள்ள துயர் நீக்க நடவடிக்கைகளுக்கு உதவி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Budget-ல இந்த ரெண்டுமே இல்லை, எந்த PM-மும் இப்படி பண்ணது இல்ல - Anand Srinivasan Interview

2024-25 நிதியாண்டுக்கான இந்திய அரசின் பட்ஜெட் நேற்றைய தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், பாஜக கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி, ஐக்கிய முற்போக்கு கட்சி ஆட்சியில் உள்ள ஆந்திரா, பிகாருக்கு மட்டும் அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். 

இந்த பட்ஜெட் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஊடக பொறுப்புத்துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியை இந்த காணொளியில் பார்க்கலாம்

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்புறம் வேற என்ன பண்ணுவாங்களாம்......... மோடிஜீ எத்தனை தடவை தமிழ்நாட்டிற்கு வந்து போனார், கன்யாகுமரியில தவம் கூட இருந்தாரே.......... ஒரு சீட், ஒரே ஒரு சீட் கிடைச்சுதா தமிழ்நாட்டில........ தேர்தலில் அவர்களுக்கு தமிழ்நாடு கொடுத்த முட்டைக்கு பட்ஜெட்டில் தமிழக மக்களுக்கு அவர்கள் முட்டை போட்டிருக்கின்றார்கள். 

இது தான் இவர்களின் சுயரூபம். ஒரு நீலநரி போல நிறம் மாறி அப்பப்ப திருக்குறள் கூட சொல்லுவார்கள்......... பொதுவாகவே எல்லோரிடமும் ஏமாறும் தமிழ் மக்கள் இந்தக் கூட்டத்திடம் மட்டும் ஏமாறாமல் இருப்பது அதிசயமே........ 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ராலின்.டெல்கி செல்கிறாராம்.  ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்துவாரா என பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீத்தாராமன் கொஞ்சநாளைக்கு முதல் அல்வா குடுக்கேக்கையே யோசிச்சனான்....😂

தமிழ்நாடு தனியாய் பிரிவதை தவிர வேற வழியில்லை...:cool:

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.