Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப்பொது வேட்பாளர் = பழைய வாய்ப்பன் அல்லது மூடப்பட்ட கதவு

தமிழ்ப்பொது வேட்பாளர் = பழைய வாய்ப்பன் அல்லது மூடப்பட்ட கதவு

— கருணாகரன் —

தோல்வி ஒரு போதுமே பெரிதல்ல. தோற்றுக் கொண்டேயிருப்பதுதான் பெரிது. அதுவே மிகப் பெரிய துயரமும் அவலமும்.

00

ஈழத் தமிழரின் அரசியல், தோற்றுக் கொண்டேயிருக்கும் ஒன்றாகி விட்டது. அதனால்தான் தமிழர்கள் எப்போதும் தோற்றப்போன நிலையில் இருக்கிறார்கள்.

–         ஆயுதப் போராட்டத்துக்கு முந்திய அரசியலும் தோற்றுப்போனது.

–          ஆயுதப்போராட்ட அரசியலும் தோற்றுப்போனது.

–          ஆயுதப்போராட்டத்துக்குப் பின்னான தற்போதய அரசியலும் தோற்றுப் போனதாகவே உள்ளது.

இதிலும் இரண்டு வகை உண்டு.

–          ஒன்று நம்மைப் பிறர் – எதிராளர்கள் – தோற்கடிப்பது.

–          மற்றது, நம்மை நாமே தோற்கடிப்பது.

அநேகமான சந்தர்ப்பங்களிலும் நம்மை நாமே தோற்கடிப்பதே நடந்து கொண்டிருக்கிறது.

அப்படித்தானுள்ளது, “தமிழ்ப்  பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும்” என்று ஜனாதிபதித் தேர்தலையொட்டிச் சிலர், “சாகிறோம் பந்தயம் பிடி” என்ற மாதிரி, விடாப்பிடியாக முன்னெடுத்துக் கொண்டிருக்கும் தேர்தற் திருவிழா ஏற்பாடுகளும்.  (இதற்காக யாழ்ப்பாணத்தில் ஒரு பத்திரிகை எழுதிக் கொண்டிருக்கும் நகைச்சுவைகள் ஏராளம்).

அதற்குத் தோதாக தமிழ் மக்கள் பொதுச்சபை, தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பு என்று கிழமைக்குக் கிழமை ஒவ்வொரு அமைப்புகளின் உருவாக்கமும் நடக்கிறது. இப்படி இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட அமைப்புகளுக்கு (தமிழ் மக்கள் பேரவை, P 2 P… போன்றவைக்கு) என்ன நடந்தது என்று யாருக்குமே தெரியாது.

இந்த வார வெளியீடான தமிழ்த்தேசியக் கட்மைப்பின் அடுத்த கூட்டம் எப்படி நடக்கும்? அதில் யாரெல்லாம் கலந்து கொள்வார்கள் என்றே தெரியாது. அந்தளவுக்குக் குழப்பங்கள் ஒவ்வொருவருக்குள்ளும்.

இருந்தாலும் இழுத்துப் பிடித்து தலையைக் கொடுத்தே ஆக வேண்டும் என்று இதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர்கள் (களப்புலிகள்) இராப்பகலாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.  

2005 இல் ஜனாதிபதித் தேர்தலின்போது எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு நிகரானதே, இப்போது எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் பொது வேட்பாளர் விவகாரமும்.

அதற்குப் பரிசாக முள்ளிவாய்க்கால் முடிவுகள் கிடைத்தன.

இதற்குப் பரிசாக…!?

நிச்சயமாக இதற்கான எதிர்விளைவுகளையும் தமிழ்ச்சமூகம் சந்திக்கத்தான் போகிறது. “கெடுகுடி சொற் கேளாது” என்பார்களே! அப்படித்தான் நிகழ்ந்து  கொண்டிருக்கிறது.

எப்போதும் சாவுடன், அழிவுடன், பின்னடைவுடன், தோல்வியுடன் விளையாடிப் பார்ப்பது.

தமிழ்ச் சமூகத்தின் உளக்குறைபாடு அல்லது சிந்தனைக் கோளாறுதான் இதற்குக் காரணமாகும்.

எதையும் தவறாகக் கணிப்பிடுவது. அல்லது எதையும் பிழையாகப் பார்க்க முற்படுவது.

ஒரு நண்பர் அடிக்கடி சொல்வார், “பிழையாகக் கணக்கைச் செய்தால் விடையும் பிழையாகத்தான் வரும்” என்று.

இதை உணர மறுத்து, தவறைப் பிறர் மேல் போட்டுத் தப்பித்துக் கொள்வதே  தமிழர்களின் வேலையாக (அரசியலாக) உள்ளது.

அநேகமான தமிழர்கள் எப்பொழுதும் சொல்லிக் கொள்ளும் தலையான வசனம் ஒன்றுள்ளது, “அரசு எங்களை ஏமாற்றி விட்டது” என.

“காலா காலமாக ஏமாற்றப்பட்டோம். இனியும் அப்படி ஏமாற முடியாது” என்று தமிழரசுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவும் திருவாய் மலர்ந்துள்ளார்.  சேனாதிராஜா மட்டுமல்ல, பொதுவேட்பாளரை நிறுத்த வேணும் என்று அடம்பிடிக்கின்ற எல்லோரும்தான் அப்படிச் சொல்கிறார்கள்.

ரணில் ஏமாற்றி விட்டார்.

ராஜபக்ஸக்கள் ஏமாற்றி விட்டனர்.

மைத்திரி ஏமாற்றி விட்டார்.

அதற்கு முன்பு – சந்திரிகா, விஜயதுங்க, பிரேமதாச, ஜே.ஆர். ஜெயவர்த்தன, சிறிமா பண்டாரநாயக்க எல்லாம்  ஏமாற்றி விட்டார்கள் என்று.

போதாக்குறைக்கு இந்தியா ஏமாற்றி விட்டது.

சர்வதேச சமூகம் ஏமாற்றி விட்டது என்றும் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படி எல்லோரும் ஏமாற்றி விடக் கூடிய அளவுக்குத்தான் நம்முடைய தமிழ்த் தலைமைகளும் தமிழ் அரசியலும் உள்ளது.

ஒரு புள்ளியிற் கூட அவர்களைத் தோற்கடிக்கக் கூடிய – வெல்லக் கூடிய – அரசியலே முன்னெடுக்கப்படவில்லை.

ஒரு தலைமைகூட சிங்களப் பேரினவாதப் போக்கைக் கட்டுப்படுத்தக் கூடியவாறு தமிழ் அரசியலை – தமிழ் பேசும் மக்களின் அரசியலை மேற்கொள்ளவில்லை.

காரணம், தோற்றுப் போகும் சிந்தனையை – தோற்கடிக்கக் கூடிய அரசியல் வழிமுறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதேயாகும். அதாவது ஒற்றைப்படைத்தன்மையான அணுகுமுறை.

கறுப்பு – வெள்ளைச் சிந்தனை.

முக்கியமாக உணர்வு சார்ந்த உணர்ச்சிகரமான அரசியல் முன்னெடுப்பே இதுவாகும்.

இது அறிவுக்கு எதிரானது.

என்பதால்தான் அறிவுசார் அரசியலை மொழிவோரையும் முன்னெடுப்போரையும் உணர்வாளர்கள், துரோகிகள் என்று எடுத்த எடுப்பிலேயே குற்றம் சாட்டி நிராகரித்துத் தள்ளி விட முயற்சிக்கிறார்கள்.

அறிவுசார் அரசியலை நிராகரித்தால் அதற்குப் பிறகு எங்கே இராஜதந்திரம் (Diplomacy), தந்திரோபாயம் (strategy), புதிய அணுகுமுறைகள் (New Approaches), மீள் பரிசீலனைகள் (Reconsiderations), திருத்தங்கள் (corrections), மாற்றங்கள் (changes), வளர்ச்சி (Development), புத்தாக்கம் (Innovation) எல்லாம்?

இவையெல்லாம் அரசியலின் அடிப்படைகள். அரசியல் ரீதியான விளைவுகளுக்கானவை.

இவற்றை நிராகரித்து விட்டுத் தமிழ்ச்சமூகம் தனக்குள் சுருங்கிக் கொள்கிறது.

குறைந்த பட்சம் அது இலங்கைத்தீவில் தமிழ்பேசும் சமூகங்களாகக் கூடத் திரள முடியாமல் திணறுகிறது. இந்த லட்சணத்தில்தான் அது பிராந்திய சக்தியாகிய இந்தியாவையும் சர்வதேச சமூகத்தையும் தன்வயப்படுத்தப்போகிறதாம்!

இதெல்லாம் நடக்கிற காரியமா?

கற்பனைக் குதிரைகள் ஓடுவதுமில்லை, களைப்பதுமில்லை.

என்பதால்தான் நிரந்தரத் தோல்வியைத் தமிழ்ச்சமூகம் பெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த 75 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் வரவேயில்லை என்று சொல்ல முடியாது. அந்த வாய்ப்புகளைச் சரியாகக் கையாளக்கூடிய நம்பிக்கையும் திறனும் நம்மிடம் இல்லாமலிருந்ததே உண்மை.

இன்னும் இந்தத் தடுமாற்றம் நீடிக்கிறது.

இதை எத்தனை தடவை சொன்னாலும் புரிந்து கொள்ள மறுப்பதே நிகழ்கிறது. 

காரணம், நிலைமையைப் புரிந்து கொள்ளாத, உண்மையை விளங்க மறுக்கின்ற, யதார்த்தத்தை உணரத் தவறும் அதி தீவிரம், அதி புத்திசாலித்தனம், அதி தூய்மைவாதம், அவநம்பிகை என்ற  பொருந்தாக் குணங்களே.

இது தொடரும் தோல்விகளை உண்டாக்குகிறது.

தொடரும் தோல்விகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பலரும் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்.

இந்த வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றலோ – வல்லமையோ – புத்திசாலித்தனமோ, அரசியல் நடவடிக்கையோ எவரிடத்திலும் இல்லை.

குறைந்த பட்சம் கட்சிகளை – அரசியலாளர்களை – ஒரு குடையின் கீழ்க் கொண்டு வரக் கூடிய திறனும் உணர்வும் யாரிடத்திலும் இல்லை.

அப்படி ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு இரண்டு வழிகள் – இரண்டு அடிப்படைகள் – உண்டு.

1.      கொள்கை ரீதியாக ஒன்றிணைவது (Unity on principle)

2.      பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் விதத்தில், அவற்றுக்குத் தீர்வு காணும் அடிப்படையில் ஒன்று திரள்வது (Based on the issues)

இவை இரண்டின் அடிப்படையிலும் ஒன்றிணையவோ, அரசியலை முன்னெடுக்கவோ, மக்களுக்கான பணிகளைச் செய்யவோ யாரும் தயாரில்லை.

பதிலாக அவ்வப்போது எதையாவது சொல்லித் தண்ணி காட்டுவதற்கே முயற்சிக்கின்றனர்.

இது மேலும் மேலும் தோல்விகளைத் தமிழ்ச்சமூகத்துக்குக் கொடுக்கப்போகிறது.

இதனால் நிரந்தரத் தோல்விக்கு தமிழ்ச்சமூகம் தள்ளப்படப்போகிறது.

என்றபடியால்தான் தமிழ்ச்சமூகத்தையும் விட பின்தங்கிய நிலையில் இருந்த ஏனைய இலங்கைச் சமூகத்தினர் இன்று தம்மை முன்னேற்றியுள்ளனர்.  தமிழர்கள் அவர்களைப் பார்த்து உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் அளவுக்கே நிலைமை உள்ளது.

அப்படிப் புகைந்து கொண்டிருப்பதால் பயனில்லை. அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி தாம் முன்னேறிக் கொள்ள வேண்டியதே அவசியம்.

அதை  விட்டுவிட்டு இப்படியே அடுத்தவரில் பழி சொல்லிக் கொண்டும் உள்ளே புகைந்து கொண்டுமிருந்தால் அதிமுட்டாள்தனமாக  வரலாற்றில் முடிவடைய வேண்டியதுதான்.

 தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முடிவு மட்டுமல்ல, அந்த வழியிற் சிந்திக்கும் அனைத்து முடிவுகளும் அப்படித்தான் உள்ளது.

எவர் ஒருவர் தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி மாறுகிறாரோ அவரிடம்தான்  மாற்றத்தைப் பற்றிப் பேச முடியும். அவருடன் மட்டுமே மாற்றத்துக்காக இணைந்து செயற்பட முடியும்.

தலைமுறை தலைமுறையாக ஒரு மாற்றமும் பெறாதவர்கள், மாற்றத்தை உருவாக்குவதைப்பற்றிச் சிந்திக்காதவர்கள், தமக்குள் வளர்ச்சியடையாதவர்கள்தான்  மாற்றங்கள் குறித்து அதிகமாகப் போதனைகளைச்  செய்கிறார்கள்.

பொருளாதாரம், பதவி போன்றவற்றைத் தவிர, இவர்களுடைய வாழ்விலும் சிந்தனையிலும் பழக்கத்திலும்  எந்த மாற்றமுமில்லை.

ஆனால் இவர்கள்தான் வழிமறித்து,  மாற்றம் பற்றி தீவிரமாகப் போதிக்கிறார்கள்.

உன்னை, உன் வாழ்வை உன்னால் மாற்ற முடியவில்லையெனில் எதனை நீ மாற்றுவாய்? என்று நாம் கேட்க வேண்டும்.

இப்போது இன்னொரு வாய்ப்பான காலம் வந்துள்ளது.

9 ஆவது ஜனாதிபதித் தேர்தல் அந்த வாய்ப்பைக் கொண்டு வந்திருக்கிறது.

இதனைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதற்கான கூர்மையான அவதானிப்போடு, முறையான உரையாடல்களை நிகழ்த்தி,  நிதானமான இறுதித் தீர்மானத்தை எடுக்க வேண்டும். அப்படி எடுக்க முடியும்.

சிங்களத் தரப்பிலும் தமிழ்த்தரப்பை நோக்கி இறங்கி வரக்கூடிய – வரவேண்டிய – சூழல் இது.

அதற்கான சாத்தியக் கதவுகளைத் திறந்து வைத்திருப்பது அவசியம்.

ஆனால், இங்கே நடந்து கொண்டிருப்பது, கதவுகளை மூடும் காரியமல்லவா!

தமிழ்ப்பொது வேட்பாளர் என்பதே கதவுகளை மூடும் செயலன்றி வேறென்ன?

உலகத்தில் இந்த மாதிரி முட்டாள்தனமான வேலையை வேறு எந்தச் சமூகமாவது செய்யுமா?

 தமிழ் மக்களைத் தமிழ்த் தரப்பினரே தோற்கடிக்கும் முட்டாள்தனத்தை  (அவர்கள் இதை அதி புத்திசாலித்தனம், அதி விவேகம் என்றுதான் கருதிக் கொண்டிருக்கிறார்கள்)  இத்துடனாவது நிறுத்துவது நல்லது.

தங்களைப் புத்திஜீகளாகக் கருதிக் கொண்டிருக்கும் இவர்கள் மெய்யாகவே புத்திஜீவிகள் தானென்றால் தமிழ்ச் சமூகம் அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூகம் என்ற அடிப்படையில் வளர்ச்சியை எட்டுவதற்குப் பாடுபட வேண்டும். அதற்குரிய திட்டங்களை வகுத்துக் காட்ட வேண்டும்.

அதை விடுத்து, இந்த மாதிரி பழைய வாய்ப்பனை திரும்பவும் எண்ணைச் சட்டிக்குள் போட்டு எடுக்கத் தேவையில்லை.

தோல்வி ஒரு போதுமே பெரிதல்ல. தோற்றுக் கொண்டேயிருப்பதுதான் பெரிது. அதுவே மிகப் பெரிய துயரமும் அவலமும்.

 

 

https://arangamnews.com/?p=11050

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

தமிழ்ப்பொது வேட்பாளர் = பழைய வாய்ப்பன் அல்லது மூடப்பட்ட கதவு

இப்படித் தமது பார்வையில் தெளிவாகத் தோண்டி எடுத்து வெளியேபோடும் எழுத்தர்கள் தமிழினம் இறங்கிப்போய் நின்று எத்தனை ஒப்பந்தங்கள் எத்தனைசுற்றுப் பேச்சுகள் செய்தன. எவற்றைச் சிங்களம் ஏற்றது அல்லது நடைமுறைப்படுத்தியது என்று சிந்திப்பது நன்று. இருநாடுகளின் ஒப்பந்தமான 13ஆவதையே நடைமுறைப்படுத்தாது அதனை படிப்படியாகச் செயலிழக்கச் செய்துள்ளது சிங்கள அரசு. இதனை அறியாமலா எழுதுகிறார்கள். இப்படியானவர்கள்  தமிழருக்கான தீர்வு என்ன என்று கேட்டுப்பெற்றுக்கொடுத்துத்   தமிழருக்குத் தலைமைதாங்கலாமே. அப்படிச் செய்தால் தமிழரே ஏற்பார்கள்தானே. இப்படி வடையும் வாய்ப்பனுமென்று ஏலம்போடத்தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

1987 ல் தமிழர்களால் உதைத்து தள்ளிய மாகாணசபை முறையை முழுமையாக அமுல்படுத்தினாலே போதும் என்ற நிலையிலேயே தமிழரின் அரசியல் பலம் உள்ளது.  அதற்கு பின்னரான மக்களின் அத்தனை இழப்புகளும் விழலுக்கு இறைத்த நீரே. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.