Jump to content

ரணிலின் துணிவும் ஏனைய போட்டியாளரும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் துணிவும் ஏனைய போட்டியாளரும்!

ரணிலின் துணிவும் ஏனைய போட்டியாளரும்!

 — கருணாகரன் —

நெருக்கடி காலத்திலிருந்து நாட்டை – மக்களை மீட்டது தானே என்கிறார் ரணில் விக்கிரமசிங்க. அதாவது தானொரு மீட்பர், ஆபத்பாந்தகர் என்றெல்லாம் சொல்கிறார். 

“அன்றைய நெருக்கடிச் சூழலில் யாருமே பொறுப்பேற்க முன்வராதபோது தனியாளாக முன்வந்து அந்தப் பொறுப்பைத்துணிவுடன் ஏற்றேன். நெருக்கடியிலிருந்து நாட்டைமீட்பதற்கான தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காகச் சஜித்தையும் அநுரவையும் கூட அழைத்தேன். அதைப்போல தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையும் மலையக் கட்சிகளையும் முஸ்லிம்களையும் கேட்டிருந்தேன். யாரும் வரவில்லை. ஆனாலும், இணைந்து பணியாற்றக் கூடியவர்களைச் சேர்த்து ஆட்சியை அமைத்தேன். அதன் மூலம் பொருட்களுக்காகக் காத்திருக்கும் வரிசை யுகத்தை மாற்றினேன். விவசாயிகளுக்கு உரத்தைத் தந்தேன். பொருட்களின் தட்டுப்பாட்டை நீக்கினேன்…. நாம் இனி வாழமுடியுமா என்று நம்பிக்கையற்றிருந்த மக்களை நிம்மதியோ, அச்சமின்றி வாழ்க்கையைத் தொடரக் கூடியவாறான சூழலை உருவாக்கினேன். அப்படிச்செய்தேன். இப்படிச் செய்தேன்.. ” என்று ஏராளமாகச் சொல்லிச்செல்கிறார் ஜனாதிபதி.

இதில் சில உண்மைகளுண்டு. மறுக்க முடியாது. 

ரணில் சொல்வதைப்போல (அவர் விரும்பியதைப்போல அல்ல) தேசிய அரசாங்கத்தை அமைத்திருக்க வேண்டும். அது பொருளாதாரப் பிரச்சினையையும் இனப்பிரச்சினையையும் தீர்க்கும் முகமாகச் செயற்பட்டிருக்க வேண்டும். கூடவே நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்குவது உட்படப் பலவற்றைச் சீர்செய்திருக்க முடியும். முக்கியமாக அரசியலமைப்பை மாற்றியிருக்கலாம். குறைந்தபட்சம் அதை நோக்கி நகர்ந்து சாத்தியமான பலவற்றையும் செய்திருக்கலாம். 

தேசிய அரசாங்கத்தில் இணைந்திருந்தால் ஒருவரை ஒருவர் சாட்டித் தப்பி விட முடியாது. ஏனென்றால் அனைத்துத் தரப்பினரும் பங்காளிகள். அதில்லாதபோது ஒருவரையொருவர் குற்றம்சாட்டியோ அல்லது எதிர்ப்புக் காட்டியோ தப்பி விடலாம். அப்படித்தான் ஒவ்வொருவரும் இழிவான முறையில் தங்கள் தங்கள் அரசியலைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். 

நாட்டைப் பற்றியோ மக்களைப் பற்றியோ இவர்கள் நேர்மையாக – விசுவாசமாகச் சிந்திக்கவில்லை.  “அந்த  நெருக்கடிச் சூழலில் நாட்டைப் பொறுப்பேற்குமாறு தன்னை 71 தடவை அழைத்தார்கள். நான் செல்லவில்லை. அப்படிப் பொறுப்பேற்றிருந்தால் அது கள்வர்களைப் பாதுகாப்பதாகவே முடிந்திருக்கும். அதை நான் விரும்பவில்லை” என்று இப்பொழுது சஜித் பிரேமதாச பெருமையாகச் சொல்கிறார். 

அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நாட்டைப்  பொறுப்பேற்று, ஆட்சியைப் பலப்படுத்திக் கொண்டு கள்வர்களைப் பிடித்துச் சிறையில் தள்ளி, ஊழலைக் கட்டுப்படுத்தியிருக்கலாம் அல்லவா! இதையே செய்திருக்க வேண்டும் சஜித்.

அப்படிச் செய்யாமல் விட்டதால்தான் அவர்கள் ரணில் அரசாங்கத்தில் பாதுகாக்கப்பட்டனர். ஊழல் தொடர்ந்தது. 

தவிர, ரணிலின் அழைப்பை ஏற்றுத் தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டு செயற்படும்போது, ரணில் விக்கிரமசிங்க, தேசிய அரசாங்கத்திற்குரிய பொதுப் பண்புக்கு மாறாகச் செயற்பட முனைந்திருந்தால் அதை மக்களுக்குச் சொல்லி விட்டு  (நிரூபித்துக் கொண்டு) அதிலிருந்து விலகியிருக்கலாம். அதுவே சரியானது. 

ஆனால் அப்படி எதுவும் நடக்கவேயில்லை. தேசிய அரசாங்கத்திற்கான வற்புறுத்தல்களை இலங்கையின் புத்திஜீவிகள், சமூகச் சிந்தனையாளர்கள், அரசியல்வாதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்குகின்ற மதத்தலைவர்கள் எவரும் செய்யவில்லை. 

இதனால் அரசியற் கட்சிகளைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தங்கள் நிலையிலிருந்தே, தங்களின் பாரம்பரியச் சிந்தனை முறையிலிருந்தே சிந்தித்தனர், செயற்பட்டனர்.  எவரும் நாட்டின் தேசிய நெருக்கடி, தேசியப் பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வு என்று சிந்திக்கவில்லை.

பதிலாக தனியொருவராக (ஒற்றை ஆளாக) நிற்கும் ரணில் விக்கிரமசிங்க  தன்னைப் பலப்படுத்துவதற்காக, பிறரைப் பயன்படுத்துவதற்காக, தந்திரோபாயத்தின் அடிப்படையில்தான் பலரையும் அழைக்கிறார் எனச் சொல்லப்பட்டதுண்டு.  

தனியொருவராக நிற்கும் ரணில் எப்படி ஆளுமையும் நேர்மையும் உள்ள மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்? அவர்கள் தங்கள் ஆளுமையினாலும் நேர்மையினாலும் ரணில் விக்கிரமசிங்கவை அம்பலப்படுத்தியிருக்கலாம். கட்டுப்படுத்தியிருக்க முடியும். 

என்பதால் அன்றைய சூழலை இழந்தது தவறேயாகும். 

இலங்கையின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை எட்டக் கூடியதாக அந்த நெருக்கடிச் சூழல் அனைவருக்குமான பொறுப்பை ஏற்குமாறு அழைத்தது.  

பொதுவாகவே நெருக்கடியொன்றின் போதுதான் அனைத்துத் தரப்பும் ஒருமுகப்பட்டுச் செயற்படக்கூடிய சூழலும் உளநிலையும் உருவாகும். உதாரணம், சுனாமி அனர்த்தச் சூழல்.

அந்தப் பேரிடரின்போது புலிகளும் அரசும் தமிழரும் சிங்களரும் முஸ்லிம்களும் என எதிரெதிர்த் தரப்புகள் எல்லாம் ஒன்றிணைந்து பேதங்களின்றிப் பணியாற்றினர். அதொரு முன்னுதாரணமாகப் பேசப்பட்டது. அதிலிருந்து நல்லெண்ணச் செயற்பாடுகள் உருவாக்கப்பட்டிருந்தால் பிந்திய இலங்கையின் பேரழிவுகளும் இன்றைய பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டிருக்காது.

இன்னொரு சந்தர்ப்பம், கொரோனா பெருந்தொற்றுக்காலப் பேரிடர்ச் சூழல். அதன் போதும் அனைத்துத்தரப்பினரிடத்திலும் ஒரு ஒற்றுமை உணர்வு மேலோங்கியிருந்தது. இனவாதம் தணிந்திருந்த சூழல்களிவை. 

ஆகவே இலங்கையின் பொருளாதார நெருக்கடியோடிணைந்த அந்த நெருக்கடிச் சூழலை அனைத்துத் தரப்பும் இலங்கையை மீட்பதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்தியிருக்கவேண்டும். அதற்கான கருநிலை “அறகலய“வின் மூலம் உருவாக்கப்பட்டிருந்தது. “அறகலய”வில் நேரடியான அரசியற் கட்சிகளுக்கு அப்பாலுள்ள அனைத்துத்தரப்பும் ஒன்றிணைந்து நின்றது. மட்டுமல்ல, இனப்பிரச்சினையைப் பற்றிய புரிதலும் அங்கே ஓரளவு காணப்பட்டது. அல்லது அதைப்பற்றிப் பேச வேண்டும் என்ற உணர்வு அங்கே இருந்தது.

ஆகவே அதையொட்டி,  அதற்குப் பின் வரவிருந்த தேசிய அரசாங்கம் என்பதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு அனைவரும் செயலாற்ற முன்வந்திருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு சஜித்தும் அநுரவும் ஏனைய தமிழ், முஸ்லிம், மலையகக்கட்சிகளும் சம்மதிக்கவில்லை. எல்லோருக்கும் இனவாதம் தேவைப்பட்டது. அதை விட்டு அரசியல் செய்து பழக்கமில்லை. இதனால் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்குப் பின்னின்றனர். அவர்கள் சொன்ன காரணங்கள், ஏற்றுக் கொள்ள முடியாதவெறும் சாட்டுகளே. அதிலொன்று, ரணிலை நம்பமுடியாது. அவர் சூழ்ச்சிக்காரர். ராஜபக்ஸக்களை (திருடர்களை) காப்பாற்றுபவர். அவர் வெளிச்சக்திகளின் நிகழ்ச்சிகளுக்காகச் செயற்படுகின்றவர் போன்றனவாகும். 

இதிலும் உண்மையுண்டு. ஆனால், ஏற்புடையதல்ல. ஏனென்றால் – 

ஒன்று, வெளிச்சக்திகள் ரணிலை மட்டுமல்ல, அதிகாரத்திலிருப்போரையும் அதிகாரத்திற்கு வெளியே இருப்போரையும்தான் கையாள – கைப்பொம்மைகளாக வைத்திருப்பதற்கு முயற்சிக்கின்றன. சஜித் பிரேமதாசா, அநுரகுமார திசநாயக்க, சுமந்திரன், மனோ கணேசன், ஹக்கீம், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சந்திரகுமார் போன்றவர்களைப் பிற நாட்டுத் தூதர்கள் சந்திக்கிறார்கள். 

தங்களுக்குப் பொழுது போகவில்லை என்பதற்காகவா இந்தச் சந்திப்பையெல்லாம் ஒவ்வொரு நாட்டுத் துதுவர்களும் நடத்துகின்றனர்?

அல்லது இவர்கள் இந்தத் தூதர்களைச் சந்திப்பது ஏதோ அன்புறவு காரணமாகவா?

எல்லாவற்றுக்குப் பின்னும் நிகழ்ச்சி நிரல்களுண்டு. 

ஆகவே பிறருடைய நிகழ்ச்சி நிரல்கள் எப்போதுமிருக்கும். அது யார் அதிகாரத்துக்கு வந்தாலும் தொடரும். அதிகாரத்தில் இல்லாத சக்திகளையும் அவர்கள் நாடிபிடித்துப் பார்ப்பர்.

எனவே இதை ஒரு காரணமாகச் சொல்லித் தப்ப முடியாது. 

அப்படித்தான் ரணிலை நம்ப முடியாது என்பதும். அவர் ஒரு சூழ்ச்சிக்காரர். சேர்ந்திருப்போரையே அணைத்துக் கெடுத்து விடுவார். கட்சிகளை உடைப்பதில் வல்லவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. 

அரசியலில் போட்டியிருக்கும். இந்த மாதிரிச் சூழ்ச்சிகளும் இருக்கும். 

அரசியலென்பதே போட்டிகளின் களம்தான். முரண்பாடுகளின் இயக்கம்தான். சூழ்ச்சிகள் இடையறாது நிகழும் ஆட்டமே.

ஆகவே அதற்கேற்ற காய்நகர்த்தல்களும் காய் வெட்டுகளும் நடக்கும். ஒரே கட்சிக்குள், ஒரே அமைப்புக்குள், ஒரே அணிக்குள் கூட இதெல்லாம் நடந்து கொண்டுதானிருக்கின்றன. 

அப்படியில்லாத ஒரு அணியை – ஒரு கட்சியை யாராவது காட்டுங்கள் பார்க்கலாம். 

தங்கள் அணிக்குள் வெட்டுக்குத்துகளும் குழிபறிப்புகளும் முரண்பாடுகளுமிருப்பதைப் போலவே வெளியிலும் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏன், இப்படிச் சொல்வோர் தமது அணிக்குள்ளும் வெளியிலும் போட்டியாளர்களை முறியடிப்பதற்கும் வெட்டியெறிவதற்கும் முயற்சிப்பதில்லையா?

எனவே ரணில் விக்கிரமசிங்கவைப் பற்றிய இந்தக் குற்றச் சாட்டுகளும் ஏற்புடையவையில்லை.

ஆகவே இந்த மாதிரியான சிறுபிள்ளைத்தனமான சாட்டுப்போக்குகளைக் கடந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்குச் சஜித்தும் அநுரவும் முன்வந்திருக்க வேண்டும். இருவரும் இளைய தலைமுறையினர். அப்படி இருவரும் வந்திருந்தால், உரிய பொறுப்புகளை ஏற்றுத் திறம்படச் செயற்பட்டிருந்தால், தங்களுடைய செயற்பாட்டுத்திறனால் இன்று மிகப் பெரிய ஆளுமைகளாக மிளிர்ந்திருப்பர். நாடும் கணிசமான அளவுக்கு மீண்டிருக்கும்.

வயோபதிரான, ஒற்றையாளான ரணில் விக்கிரமசிங்கவை களத்திலிருந்தே அப்புறப்படுத்தியிருக்க முடியும். அவருடைய பலத்தையும் ஒளிவட்டத்தையும் இல்லாதொழித்திருக்க முடியும். 

ஆனால் நடந்தது என்ன?

ஒற்றையாளான – தனியனான –  ரணில், முதிய வயதில் தனிக்காட்டு யானையாக மெல்ல மெல்லச் சூழலைத் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பதவியே இல்லாமல் தன்னுடைய வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தவர், கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாடுமுழுக்கச் சென்று தன்னை நிலைப்படுத்தினார்.  

இதற்கு வாய்ப்புக் கொடுத்தால் அவர் அதைச் செய்யத்தானே செய்வார்!

அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவரில்லை. பின் கதவு வழியாக வந்தவர் என்ற பரிகாசமெல்லாம் அரசியலில் எடுபடாது. நீங்கள் களத்தில் நிற்கிறீர்களா இல்லையா என்பதே முக்கியமானது. 

ஜனாதிபதியாகப் பதவியேற்று ரணில் களத்தில் நின்றதே அவர் இன்று போட்டிக்குரிய வேட்பாளராக  மாறிருப்பதற்கான காரணம்.

2020 இல் ரணில் தோற்றுப்போன ஒருவர். அவரிடம் கட்சியும் இருக்கவில்லை. வெற்றியும்  இருக்கவில்லை. ஏறக்குறைய அரசியலுக்கு முழுக்குப் போடும் நிலையில் இருந்தார்.

இன்று?

சவாலுக்குரிய போட்டியாளராக – ஒரு இளைஞரைப்போல களத்தில் நிற்கிறார்.

செடியை முளையிலேயே கிள்ளாமல் விட்டால், அல்லது நமக்கு வாய்ப்புக் கிட்டும்போது அதைக் கை விட்டால் பிறகு அது நம்மையே பதம் பார்த்து விடும். 
 

https://arangamnews.com/?p=11123

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி நேரத்தில் பல போட்டியாளர்கள் ரணிலுக்கு ஆதரவாகப்  போட்டியிலிருந்து விலகுவார்கள். 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.