Jump to content

பிரதான  ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும்  இனப்பிரச்சினையும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரதான  ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும்  இனப்பிரச்சினையும்

  — வீரகத்தி தனபாலசிங்கம் — 

  மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களினதும்  தேர்தல் விஞ்ஞாபனங்கள் கடந்த வாரம் வெளியாகின. 

முதலில் ஆகஸ்ட் 26 தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க ‘வளமான தேசம், அழகான வாழ்க்கை’ என்ற தலைப்பில் தனது  விஞ்ஞாபனத்தை வெளியிட்டார். அடுத்து ஆகஸ்ட் 29 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ‘ரணிலுடன் இலங்கைக்கு வெற்றிகரமான ஐந்து வருடங்கள்’ என்ற தலைப்பிலும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ‘சகலருக்கும் வெற்றி’ என்ற தலைப்பிலும் தங்களது  விஞ்ஞாபனங்களை வெளியிட்டனர். 

 இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கான தங்களது  திட்டங்களுக்கு விஞ்ஞாபனங்களில் முன்னுரிமை கொடுத்திருக்கும்  மூவரும்  நாடும் மக்களும்  எதிர்நோக்குகின்ற பெரும்பாலும்  சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்பதற்கான  யோசனைகளையும்  முன்வைத்திருக்கிறார்கள். ஆனால், அந்த நீண்ட விஞ்ஞாபனங்களை  சாதாரண மக்கள் அமைதியாக இருந்து முழுமையாக  வாசிப்பதில் அக்கறை காட்டுவார்கள் என்பது சந்தேகமே. 

தனது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் கடந்த இரு வருடங்களாக முன்னெடுத்துவரும் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடருவதை தவிர பொருளாதார மீட்சிக்கு வேறு வழியே கிடையாது என்பதே ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் உறுதியான நிலைப்பாடு. அந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மற்றைய இரு பிரதான வேட்பாளர்களினாலும் ஒழுங்கான முறையில் முன்னெடுக்கமுடியாது என்ற அர்த்தத்தில் பேசிவரும் அவர் தனக்கு ஐந்து வருடகாலத்துக்கு ஆணை தருமாறு நாட்டு மக்களைக் கேட்கிறார்.

 பிரேமதாசவும் அநுரா குமாரவும் கூட சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை சில திருத்தங்களுடன் தொடர்ந்து முன்னெடுக்கப் போவதாக  கூறுகின்ற அதேவேளை,  மக்களைப் பெரிதும் வதைக்கின்ற வரிகளைக் குறைப்பது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள். அதனால் எவர் புதிய  ஜனாதிபதியாக வந்தாலும், பொருளாதார நெருக்கடியைப் பொறுத்தவரை அவரின் செயற்பாடுகள் சர்வதேச  நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை பின்பற்றியதாகவே  அமையப்போகிறது என்பது தெளிவானது. 

  புதிய அரசியலமைப்பு மற்றும் தேசிய இனநெருக்கடியுடன் தொடர்புடைய பிரச்சினைககள் குறித்து  மூன்று தலைவர்களும்  விஞ்ஞாபனங்களில் கூறியிருப்பதை சுருக்கமாக நோக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம். 

 ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு வெகு முன்னதாகவே மூன்று வேட்பாளர்களும்  இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தங்கள் நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். விஞ்ஞாபனங்களிலும்  அவர்கள்  அதே நிலைப்பாடுகளையே குறிப்பிட்டிருக்கிறார்கள்.

 புதிய அரசியலமைப்பு ஒன்றை தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம் கொண்டு வரும் என்று அநுரா குமார நீண்ட நாட்களாக கூறிவந்திருக்கின்ற போதிலும், அது தொடர்பில் அவர் விஞ்ஞாபனத்தில் கூறியிருப்பது எவரும் எதிர்பார்க்காததாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான அரசாங்க காலத்தில் (2015 –2019) முன்னெடுக்கப்பட்ட  அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை துரிதமாக நிறைவு செய்து புதிய அரசியலமைப்பின் மூலமாக அனைத்து மக்களும் ஆட்சியில் பங்கேற்கக்கூடியவாறு ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனம், மாவட்டம்  மற்றும்  மாகாணத்துக்கு அரசியல் ரீதியானதும் நிருவாக ரீதியானதுமான அதிகாரங்களை பகிர்ந்தளிக்கப்போவதாக தேசிய மக்கள் சக்தியின் விஞ்ஞாபனம் கூறுகிறது.   அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் குறித்து நேரடியாக அதில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அதேவேளை ஜனாதிபதி விக்கிரமசிங்க 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் தங்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் அடிப்படையில் அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பரவலாக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

 மாகாண சபைகளிடம் இருந்து மத்திய அரசாங்கம் திரும்பப் பெற்றுக்கொண்ட அதிகாரங்கள் மீண்டும் மாகாணசபைகளுக்கு கொடுக்கப்படும் என்றும் மாகாணசபைகளுக்கான பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் தீர்மானிக்கும் பொறுப்பு புதிய பாராளுமன்றத்திடம்  ஒப்படைக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருக்கிறார்.

தேசிய நல்லிணக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கும் ஜனாதிபதி உண்மை கண்டறிதல் மற்றும் நல்லிணக்கச் சட்டம் நிறைவேற்றப்படுவதுடன் காணாமல் போனோர் தொடர்பான நவாஸ் ஆணைக்குழுவின் அறிக்கையும்  நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார். 

 ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் பிரேமதாச  மதத்தலைவர்கள், பாராளுமன்ற அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து புதிய அரசியலமைப்பு ஒன்று கொண்டுவரப்படும் என்றும் தற்போதைய அரசியல் முறைமையை  பாராளுமன்ற முறைமைக்கு மாற்றுவதுடன் ஒரே நாட்டின் கீழ் 13 வது திருத்தத்தின் அடிப்படையில் கூடுதல்பட்ச அதிகாரப்பரவலாக்கம் உறுதிசெய்யப்படும் என்றும்  கூறுகிறார்.

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றப்படும் வரை 13 வது திருத்தம் உட்பட தற்போதைய அரசியலமைப்பு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் ;  மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளப்பெறப்படமாட்டாது. அதற்கு பதிலாக மாகாண மட்டத்தில் அபிவிருத்திப் பணிகள் பலப்படுத்தப்படும் என்றும் பிரேமதாச வாக்குறுதியளித்திருக்கிறார்.

மூன்று தலைவர்களும் புதிய அரசியலமைப்பை கொண்டுவரப்போவதாக கூறியிருக்கும் அதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை  ஒழிப்பு குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

 தங்களது அரசாங்கம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துக்கட்டி பாராளுமன்ற ஆட்சிமுறையை நிலைநாட்டுவதுடன் நிறைவேற்று அதிகாரமற்ற ஜனாதிபதி பதவியை உருவாக்கும் என்று அநுரா குமார கூறியிருக்கும் அதேவேளை, ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் தெரிவாகும் புதிய பாராளுமன்றத்திடம் ஒரு வருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பை வரையும் பொறுப்பு ஒப்படைக்கப்படும் என்று விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டுமா இல்லையா என்பதை புதிய பாராளுமன்றமே தீர்மானிக்கவேண்டும் என்றும் ஜனாதிபதி கூறியிருக்கிறார். இது ஒன்றும் அவர் புதிதாக கூறுகின்ற விடயம் அல்ல. பிரேமதாசவும் அநுரா குமாரவும்  ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பு குறித்து தீர்மானிக்கும் பொறுப்பு மக்களின் புதிய ஆணையுடன் தெரிவாகும் அடுத்த பாராளுமன்றத்திடமே ஒப்படைக்கப்படவேண்டும் என்று பல மாதங்களுக்கு முன்னரேயே கூறிவந்திருக்கிறார்கள்.

முன்னாள் பிரதம நீதியரசர் பிரியசெத் டெப் தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்மொழிவுகளின் அடிப்படையில் புதிய தேர்தல் நடைமுறையை புதிய பாராளுமன்றம் அறிமுகப்படுத்தும்;  மாகாணசபை பிரதிநிதிகளையும் சிவில் சமூக உறுப்பினர்களையும் கொண்டதாக அமைக்கப்படும் இரண்டாவது அரசாங்க சபை ( Second State Council ) மாகாணசபைகள்  அவற்றின் அதிகாரங்களை  நடைமுறைப்படுத்துகின்றன என்பதை கண்காணிக்கும் என்று விக்கிரமசிங்கவின் விஞ்ஞாபனம் கூறுகிறது.

ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு மற்றும் புதிய அரசியலமைப்பு குறித்து சுமார் மூன்று தசாப்த காலமாக பேசப்பட்டு வருகின்ற போதிலும், இதுவரையில் அது தொடர்பிலான எந்த முயற்சியும் ஒப்பேறவில்லை. மூன்று பிரதான வேட்பாளர்களும் என்னதான் விஞ்ஞாபனங்களில் வாக்குறுதியளித்தாலும்,  அது விடயத்தில் அவர்களின் அரசியல் நேர்மை குறித்து மக்களுக்கு நிச்சயமாக வலுவான சந்தேகம்  இருக்கிறது. அத்துடன் தற்போதைய அரசியல் நிலைவரங்களையும் அரசியல் கட்சிகளுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஆதரவின் மட்டங்களையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது புதிய அரசியலமைப்பை வரைவது போன்ற பொறுப்புமிகுந்த பணிகளை நிறைவேற்றக்கூடிய அளவுக்கு  பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகளிடையே கருத்தொருமிப்பைக் காண்பது சாத்தியமாக இருக்குமா என்பது முக்கியமான ஒரு கேள்வி.

 தேசிய இனநெருக்கடியுடன் தொடர்புடைய பிரச்சினைகளைப் பொறுத்தவரை, மூன்று தலைவர்களும்  பெரும்பாலும் ஒரேவிதமான நிலைப்பாட்டையே  வெளிப்படுத்தப்படுத்தியிருப்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகுவதற்கு முன்னரேயே அவர்கள் தங்களது இந்த நிலைப்பாட்டை பகிரங்கமாகக் கூறினார்கள். 

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் இந்த தடவை பிரதான அரசியல் கட்சிகளின் அல்லது கூட்டணிகளின் பிரசாரங்களில்  பெரும்பாலும்  இனவாதமற்ற ஒரு போக்கை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. 2019 ஜனாதிபதி தேர்தலின்போது காணப்பட்ட சூழ்நிலையில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. 

தமிழ் அரசியல் கட்சிகள் ஒப்பீட்டளவில் பிரயோசனமான முறையில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு ஒன்று இன்றைய  சூழ்நிலையில் இருக்கிறது. ஆனால், அதைப் பயன்படுத்துவதில் அக்கறை காட்டாமல் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் இருப்பது துரதிர்ஷ்டவசமானது.

 தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டிமுறையின் அடிப்படையிலான நிரந்தரத் தீர்வைக் கோரிநிற்கும் பெரும்பாலான வடக்கு,கிழக்கு தமிழ்க் கட்சிகள் அதற்கு முதற்படியாக 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தைக் கேட்பது மாத்திரமல்ல அவ்வாறு செய்வதற்கு கொழும்புக்கு நெருக்குதலைக் கொடுக்குமாறு புதுடில்லியையும் கேட்கின்றன.

 அவ்வாறு கேட்பதுடன் மாத்திரம் தங்களது பொறுப்பு முடிந்துவிடுகிறது  என்று தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் நினைக்க முடியாது.13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தை  நிர்ப்பந்திப்பதற்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களை பயன்படுத்துவதற்கு அவர்கள் ஒன்றிணைந்து செயற்படவும் வேண்டும். அதற்கு இசைவான சூழ்நிலையை உறுதி செய்வதற்கு அரசியல் தந்திரோபாயத்தை கையாள வேண்டும். 

 தற்போது மூன்று பிரதான வேட்பாளர்களும் 13 வது திருத்தத்துக்கு அனுகூலமான  நிலைப்பாட்டை எடுத்திருப்பதால் அவர்களுடன் தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி அவர்களில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் மற்றைய இருவரும் அந்த  திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படக்கூடிய எதிர்கால  முயற்சிகளை எதிர்க்காமல் இருப்பதற்கான  உத்தரவாதத்தைப் பெறவேண்டும். இன்றைய சூழ்நிலையில் அது ஒரு விவேகமான  தந்திரோபாயமாக இருக்கமுடியும். 

இந்த கட்டுரையாளர் ஒன்றும் 13 வது திருத்தத்தின் ரசிகர் இல்லை. ஆனால்,  நிலையான தீர்வாக அமையக்கூடிய சமஷ்டி ஏற்பாட்டை நோக்கிய பயணத்தில்  முதற்படியாக அந்த திருத்தத்தை கருதும் தமிழ்க்கட்சிகள் அத்தகையதொரு தந்திரோபாயத்தை கடைப்பிடிப்பதில்  என்ன தவறு இருக்கப் போகிறது? 

இலங்கை அரசியலமைப்பில் இருக்கின்ற ஒரேயொரு அதிகாரப்பரவலாக்கல் ஏற்பாடான 13 வது திருத்தத்தை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று கூறுகின்ற பிரிவினரும் தமிழ் அரசியல் சமுதாயத்திற்குள் கணிசமாக இருக்கிறார்கள். எதிர்காலத்தில் கொழும்பு அரசாங்கம் ஒன்று அந்த திருத்தத்தை ஒழித்துவிட்டால் அதைப் போன்ற  அல்லது அதையும் விட குறைவான ஏற்பாடுகளுடன் கூடிய ஒன்றை மீண்டும் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கக்கூடிய அரசியல் வல்லமை இன்று தமிழ் மக்களிடம் இருக்கிறதா? இந்த கேள்விக்கு  இதுவரை பதில் இல்லை. கனவுலக அரசியல் செய்வது சுலபம். ஆனால் நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறைகளைப் பற்றி சிந்திப்பதே இன்று தமிழ் மக்களுக்கு முக்கியமானது.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை நிறைவுசெய்து புதிய அரசியலமைப்பை கொண்டுவருவது குறித்து அநுரா குமார தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த செயன்முறையின் போது 13 வது திருத்தத்தில் உள்ள ஏற்பாடுகளையும் விட மிகவும் விரிவான அதிகாரப்பரவலாக்கல் யோசனைகள் குறித்து ஆராயப்பட்டதாக அன்றைய எதிர்க்கட்சி தலைவர் காலஞ்சென்ற இரா. சம்பந்தனும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் அடிக்கடி கூறினார்கள். அதனால் 13 வது திருத்தத்தைப் பற்றி இனிமேலும் பேசிக்கொண்டிருக்கவேண்டியதில்லை என்பதும் அவர்களது எண்ணமாக இருந்தது. ஆட்சிமாற்றம் காரணமாக  துரதிர்ஷ்டவசமாக அந்த அரசியலமைப்பு வரைவுச்  செயன்முறையை தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் பிரதமர் விக்கிரமசிங்க இடைக்கால அறிக்கை அறிக்கை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

 இடையில் நின்றுபோன அந்த செயன்முறையை நிறைவு செய்யப் போவதாக தேசிய மக்கள் சக்தி கூறியிருப்பதால் அவர்களின் விஞ்ஞாபனத்தில் 13 வது திருத்தம் குறித்து பிரத்தியேகமாக குறிப்பிடப்படாதது ஒரு குறைபாடு அல்ல என்ற அபிப்பிராயத்தைக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள்.

ஆனால், மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக 13 வது திருத்தம் கூட ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்துவந்த சூழ்நிலையில் அந்த திருத்தத்துக்கு அப்பால் செல்வது குறித்த எதிர்பார்ப்புக்களை தமிழ் அரசியல் கட்சிகள் வளர்த்து வந்திருக்கின்றன. அதற்கு இந்தியாவின் தலையீட்டை கடுமையாக எதிர்த்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இந்தியாவை அவமதிப்பதற்காக 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு கையாண்ட ஒரு தந்திரோபாயமே முதல்  காரணம்.

பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் இந்தியப் படைகளின் வெளியேற்றத்துக்கு பிறகு மீண்டும் உள்நாட்டுப்போர் மூண்ட சூழ்நிலைகளில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான வழிவகைகளை ஆராய்வதற்கு  அன்றைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள முனசிங்க தலைமையில் ஒரு பாராளுமன்ற தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. அதில் இருந்தே 13 வது திருத்தத்துக்கு அப்பால் செல்லமுடியும் என்ற நம்பிக்கை தமிழ்க்கட்சிகளுக்கு ஏற்படத் தொடங்கியது. 

உண்மையில் அந்த திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு பிரேமதாச கையாண்ட ஒரு தந்திரோபாயமே அதுவாகும். அதற்கு பின்னரும் சந்திரிகா குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரும் 13  வது திருத்தம் ஒழுங்காக  நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்துகொண்ட அதேவேளை  வேறு முயற்சிகளை முன்னெடுத்தனர். ஆனால் எதுவுமே நிறைவுபெறவில்லை. பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி பிரதிதிதித்துவக் குழுவின் அறிக்கையை மகிந்த ராஜபக்ச ஒருபோதும் வெளியிடவில்லை. 

இந்த அனுபவங்களை எல்லாம்  படிப்பினையாக எடுத்துக் கொண்டு 13 வது திருத்தமாவது  தற்போதைக்கு  முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்யக்கூடிய தந்திரோபாயத்தை தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் கடைப்பிடிப்பதே விவேகமானது. 

ஆனால்,  இந்தக்கருத்து வடக்கில் கனவுலக அரசியல் செய்யும்  ஒரு பிரிவினரின்  பரிகாசத்துக்கு  உள்ளாகும் என்பதில் சந்தேகமில்லை. 

( ஈழநாடு )

 

https://arangamnews.com/?p=11182

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரியநேந்திரனின் தேர்தல் விஞ்ஞாபனம் என்ன? 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.