Jump to content

தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான்; தேர்தலைப் பகிஷ்கரிப்பதே சிறந்த வழி - கஜேந்திரகுமார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
16 SEP, 2024 | 07:09 PM
image

(நா.தனுஜா)

தமிழ் மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும், ஒற்றையாட்சியை வலியுறுத்தும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கும் பட்சத்தில், தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கான சகல சதித்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என எச்சரித்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எனவே தமிழ்த்தேசியக் கொள்கைக்கு உண்மையாக இருப்பதற்கான வாய்ப்பு எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமாக மாத்திரமே சாத்தியமாகும் எனச் சுட்டிக்காட்டியுள்ளார். 

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இம்முறை ஜனாதிபதித்தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என வலியுறுத்திவரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு குறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் இன்று  திங்கட்கிழமை (16) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.    

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது,    

இம்முறை ஜனாதிபதித்தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கவேண்டும் என்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு பற்றி நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இருப்பினும் இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் நான் இங்கு இருந்திருந்தால் எனது நிலைப்பாடு வேறானதாக இருந்திருக்கும் என்று சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு சில கருத்துக்கள் பகிரப்பட்டுவருகின்றன.   

இருப்பினும் 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் கொள்கை ரீதியில் சில விடயங்களை நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். குறிப்பாக 2009 உடன் தமிழ்த்தேசிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்தவிட்டதாகவே சிங்கள தேசம் நம்பியது. சிங்கள தேசியவாதத்தின் ஊடாக தமிழ்த்தேசியவாதத்தை முடிவுக்குக்கொண்டுவந்துவிடலாம் என நம்பப்பட்ட சூழலில், நாம் அதனை நிராகரித்து தமிழ்த்தேசிய தொடர்பான நிலைப்பாட்டை உறுதியாகக் கடைப்பிடித்துவந்திருக்கிறோம்.   

அந்த வகையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்காமல், அதேநேரம் தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்தி, சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிக்காட்டக்கூடிய ஒரேயொரு தேர்தல் ஜனாதிபதித்தேர்தல் மாத்திரமேயாகும். ஏனெனில் இத்தேர்தலின் ஊடாக நாம் அடைந்துகொள்ளப்போவது எதுவுமில்லை. எனவே இத்தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் ஊடாக சிங்கள தேசியவாதம் உச்சத்தில் இருக்கையில் தமிழ்த்தேசியவாதம் மூலம் வலுவான அழுத்தத்தைப் பிரயோகிக்கமுடியும்.  

அடுத்ததாக எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழ் பொதுக்கட்டமைப்பினரால் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் தமிழர்களுக்கு சாபக்கேடாக இருக்கின்ற 13 ஆவது திருத்தத்தை ஆதரித்தவர்களும், ரணில் விக்ரமசிங்கவே சிறந்த ஆட்சியாளர் எனக் கூறியவர்களுமே தற்போது அந்தப் பொதுக்கட்டமைப்பில் இருக்கிறார்கள்.  

எனவே அவர்கள் பொதுவேட்பாளரைக் களமிறக்குவதன் ஊடாக தமிழ்த்தேசியத்தைக் கைவிட்டு, ஒற்றையாட்சிக்குள் 13 ஆவது திருத்தத்தை முன்னிலைப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க முயற்சிக்கிறார்கள். எனவே தமிழ் மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிப்பதும், ஒற்றையாட்சியை வலியுறுத்தும் சிங்கள வேட்பாளருக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான். பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கும் பட்சத்தில், தேர்தலுக்குப் பின்னர் தமிழ்த்தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கான சகல சதித்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்பதை இப்போதே கூறிவைக்கிறோம்.  

அதேபோன்று இங்கு நாம் பூகோள அரசியல் சூழலையும் கருத்திற்கொள்ளவேண்டும். மேற்குலக நாடுகளும், இந்தியாவும் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டுவதையே விரும்புகின்றன. ஆனால் ரணில் விக்ரமசிங்கவை தமிழ் மக்களுக்கு சாதகமானவராகக் காண்பித்துவந்த நிலை மாறியிருக்கும் தற்போதைய சூழ்நிலையில், அவருக்கு தமிழர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை இந்தியாவும், மேற்குலகமும் புரிந்துகொண்டிருக்கிறது.   

ஆகவே ஏனைய வேட்பாளர்களுக்கு அளிக்கப்படக்கூடிய வாக்குகளை ரணில் விக்ரமசிங்கவுக்கு அளிக்கச்செய்வதிலும் அல்லது ரணிலுக்குக் கிடைக்காத வாக்குகள் ஏனைய வேட்பாளர்களுக்கும் கிடைக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதையும் இலக்காகக்கொண்டு சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 

இவ்வாறானதொரு பின்னணியிலேயே இதுவரையில் சமஷ்டி என்ற வார்த்தையை உச்சரிக்காமல் இருந்த தமிழரசுக்கட்சி, இம்முறை தேர்தலில் சமஷ்டியை வலியுறுத்தி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருக்கிறது. எனவே இன்றளவிலே தமிழ்த்தேசியக் கொள்கைக்கு உண்மையாக இருப்பதற்கான வாய்ப்பு எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலைப் பகிஷ்கரிப்பதன் மூலமாக மாத்திரமே சாத்தியமாகும். ஆகவே இனிவருங்காலங்களில் தமிழர்களை எவ்வகையிலும் ஏமாற்றமுடியாது என்பதை இந்தத் தேர்தலில் காண்பிக்கவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/193863

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சைக்கிள் சப்போட்டர்ஸ் எவருமே இல்லையா இங்கு? என்ன கொடுமை ஜோதிகா இது!👀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றையாட்சிக்கு வாக்களிப்பதென்றால்; ஏதோ ஒரு சிங்களகட்சிக்கு தானே வாக்களிப்பது? இங்கு, இன்னும் ஒரு இனமுண்டு, அவர்களுக்கும் அரசியல் அதிகாரம், கனவு, உரிமை, சுதந்திரம் உண்டு, இதுவரை அது ஏற்றுகொள்ளப்ப்டாதத்தினாலேயே இன்று அதற்கான தேவையேற்படுள்ளது எனக்காட்டுவதே பொதுவேட்பாளரின் தோற்றம். இங்க ஒற்றையாட்சி எங்கே வந்தது? எங்களையும் சமஉரிமையாய் நடந்து இல்லையில் உனக்கு எதற்கு எங்களின் வாக்கு என்பதே இங்கு உணர்த்தப்படுகிறது. ஆளாளுக்கு ஏதோ விளக்கம் அளிக்கிறார்கள். ஆனால், மக்களின் தேவையில், இழப்பில் உடனிருக்க, ஆறுதலளிக்க, கேட்க யாருமில்லை. தேர்தல் வந்தால்; கனைக்க வந்துவிடுவார்கள்.       

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.