Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Published By: DIGITAL DESK 7   01 OCT, 2024 | 10:47 AM

image
 
பாகம் 1

டி.பி.எஸ். ஜெயராஜ் 

அமெரிக்க பத்திரிகையாளர் எட்கார் சினோவின் ' சீன வானில்  சிவப்பு நட்சத்திரம்  ' (Red Star over China ) என்ற நூல்தான்  கட்டுரைக்கு இந்த தலைப்பை  வைப்பதற்கு தூண்டுதல் அளித்தது. சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங்குடனும் செஞ்சேனையுடனும் தனது ஊடாட்டம் பற்றிய உயிர்களையுடைய விபரிப்பாக அமைந்த அந்த முதலில் 1937 ஆம் ஆண்டில் பிரசுரமானது. மாவோ என்று அறியப்பட்ட மாவோ சேதுங்கைப் பற்றி அந்த நேரத்தில் மேற்குலகில் பெரிதாகத் தெரியாது.

பல வருடங்கள் கழித்து மாவோவின் தலைமையில் கம்யூனிஸ்டுகள் சீனாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ' சீன வானில்  சிவப்பு நட்சத்திரத்தின் ' பிரதிகள்  பிரமிக்கத்தக்க அளவில் பெரும் எண்ணிக்கையில் உலகெங்கும் விற்பனையானது. சீனாவின் புதிய கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் பற்றி ஒரு உள்நோக்கைப் பெறுவதற்கு அந்த்நூல் பேராவலூடன் வாசிக்கப்பட்டது.

இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க ஒரு அர்த்தத்தில் இன்று இலங்கை வானில்  எழுந்திருக்கும்  சிவப்பு நட்சத்திரம்  அல்லது இடதுசாரி நட்சத்திரமே. அநுரா அல்லது ஏ.கே.டி. என்று பிரபல்யமாக அறியப்பட்ட திசாநாயக்க  2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இலங்கையின் ஒனபதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அவர் செப்டெம்பர் 23 ஆம் திகதி பதவியேற்றார்.

WhatsApp_Image_2024-10-01_at_09.45.00.jp

55 வயதான திசாநாயக்க ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) யினதும் தேசிய மக்கள் சக்தியினதும் தலைவர்.  ஒரு தீவிரவாத இயக்கமாக இருந்து பிறகு அரசியல் கட்சியாக மாறிய ஜே.வி.பி. ஆறு தசாப்த கால வரலாற்றைக் கொண்டது.

தேசிய மக்கள் சக்தி, ஜே.வி.பி.யையும் வேறு 21 அமைப்புக்களையும் உள்ளடக்கிய இடதுசாரிப் போக்குடைய ஒரு பரந்த  கூட்டணியாகும். இந்த அமைப்புக்களில் சிறிய கட்சிகள், தொழிற் சங்கங்கள், உரிமைகள் குழுக்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புகள் அடங்குகின்றன.  ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியாகும். திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில்  திசையறிகருவி சின்னத்தில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.

தேர்தலில் வெற்றி  பெற்ற நாளில் இருந்து சர்வதேச ஊடகங்கள் (மேற்கத்தைய மற்றும் இந்திய ஊடகங்கள்) திசாநாயக்கவை மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட்   லெனினிஸட், சோசலிஸ்ட்,  நவ மார்க்சிஸ்ட், இடதுசாரி, மத்திய இடது அரசியல்வாதி என்று பலவாறாக வர்ணித்து வருகின்றன. சில இந்திய விமர்சகர்கள் அவருக்கு ' இந்திய விரோதி ' என்றும்  ' தமிழர் விரோதி ' என்றும் நேர்மையற்ற முறையில் நாமகரணம் சூட்டுகின்றனர்.

எனது நோக்கில் திசாநாயக்க நிச்சயமாக இடதுசாரிக் கோட்பாடுகளுக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு இடதுசாரி. ஆனால், பாரம்பரிய அர்த்தத்தில் ஒரு மார்க்சிஸ்ட் என்று அழைக்கமுடியுமா என்பது எனக்கு சந்தேகமே.

சில காலத்துக்கு  முன்னர் ட்ரம்ப் என்ற ஒரு பேர்வழி  " வெள்ளை மாளிகையை " அசிங்கப்படுத்துவதற்கு   முன்னதாக  அந்தக் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதிகள் பரவலாக பெருமளவுக்கு  மதிக்கப்பட்டனர். பல அமெரிக்க ஜனாதிபதிகளின் வாழ்க்கைச் சரிதைகள் வாசித்துச் சுவைக்கப்பட்டன. பலர்  ஆபிரகாம் லிங்கனையே  சிறந்த அமெரிக்க ஜனாதிபதியாக நோக்குவர். அடிமை முறையை ஒழிப்பதற்கும் அடிமைகளின் தளைகளை அறுத்து அவர்களை விடுவிப்பதற்கும் உள்நாட்டுப் போர் ஒன்றையே நடத்தும் அளவுக்கு அவர் சென்றார்.

லிங்கன் மிகவும் எளிமையான பின்புலத்தைக் கொண்ட ஒரு மனிதர். அமெரிக்காவின் அதியுயர்ந்த பதவிக்கு அவரின் உயர்வு  " மரக் கொட்டகையில் இருந்து வெள்ளை மாளிகைக்கான " ஒரு கதை என்று அழைக்கப்படும். அதே போன்றே திசாநாயக்கவும் கூட இலங்கையின் முதல் குடிமகனாக வந்திருக்கும் ஒரு சாதாரண மனிதரே.  அவரின் குறிப்பிடத்தக்க உயர்வையும் கூட "  மண்வீட்டில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு "  வந்த ஒரு காவியம் என்று வர்ணிக்க முடியும். இந்த பின்னணியில்தான்  இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவை  இந்த பத்தி  இரு பாகங்களாக  ஆராய்கிறது.

தம்புத்தேகம வாழ்க்கை 

திசாநாயக்க முதியான்சலாகே அநுரா குமார திசாநாயக்க 1968 நவம்பர் 24 ஆம் திகதி பிறந்தார். அவரின் பிறந்த இடம் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் கலேவெல ஆகும்.அவரின் பெற்றோர்கள் கண்டிய கொவி பௌத்த சாகியத்தைச் சேர்ந்தவர்கள். திசாநாயக்கவும் அவரது மூத்த சகோதரியும் சிறுவர்களாக இருந்தபோது குடும்பம் வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்டதுக்கு குடிபெயர்ந்தது. சில வருடங்கள் கெக்கிராவையில் வாழ்ந்த பிறகு குடும்பம் அதே மாகாணத்தின் தம்புத்தேகமவுக்கு நகர்ந்தது.

தம்புத்தேகம அநுராதபுரம் நகரில் இருந்து  25 கிலோமீட்டர்கள் தொலைவிலும்  தலைநகர் கொழும்பில் இருந்து 190 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்திருக்கும் ஒரு விவசாயப் பிரதேசமாகும். திசாநாயக்க தனது ஆரம்பக்கல்வியை காமினி மகா வித்தியாலயத்திலும் இரண்டாம் நிலைக் கல்வியை தம்புத்தேகம மத்திய கல்லூரியிலும் நிறைவுசெய்தார். அவரே தம்புத்தேகம மத்திய கல்லூரியில் இருந்து பல்கலைக்கழக பிரவேசம் செய்த முதல் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

திசாநாயக்கவின் தந்தையார் ஒரு விவசாயத் தொழிலாளி.  பல வருடங்களுக்கு பிறகு அவருக்கு நில அளவையாளர் திணைக்களத்தில் ஒரு அலுவலக உதவியாளராக நிரந்தரமான தொழில் வாய்ப்பு கிடைத்தது. சில சந்தர்ப்பங்களில் நில அளவையாளர்கள் களவேலைக்கு செல்லும்போது தந்தையார் உபகரணங்களை தூக்கிச்செல்லும் வேலையையும் செய்தார். குடும்பப் பெண்மணியான தாயாருக்கு நெல் விதைப்பு மற்றும் அறுவடைக் காலங்களில் ஒழுங்காக வேலை கிடைக்கும்.

தம்புத்தேகமவுக்கு வந்த பிறகு ஆரம்ப வருடங்களில் குடும்பம் பெரும் பணக் கஷ்டத்துக்குள்ளானது. அவர்களது வீட்டுக்கு மின்சார வசதி கிடையாது. இளம் திசாநாயக்க இரவு வேளைகளில் மண்ணெண்ணெய் குப்பி விளக்கின் வெளிச்சத்தில்தான் படிக்கவேண்டியிருந்தது. குடும்ப வருமானத்துக்கு உதவுவதற்காக  தாயார் இனிப்புப் பலகாரங்கள் தயாரிப்பார். மகன் அவற்றை எடுத்துச் சென்று அருகாமையில் உள்ள தம்புத்தேகம புகையிரத நிலையத்தில் யாழ்தேவி, உத்தரதேவி மற்றும் ரஜரட்ட போன்ற நீண்டதூர ரயில்களின் பயணிகளுக்கு விற்பனை செய்வார். பாடசாலை விடுமுறை நாட்களில் திசாநாயக்க குழிவெட்டுபவராக பகுதிநேர வேலை செய்தார்.

குடும்பத்துக்கு பொருளாதாரக் கஷ்டம் இருந்த போதிலும், திசாநாயக்க திறமை  மிகுந்த  ஒரு மாணவனாக பிரகாசித்தார். பாடங்களை புரிந்துகொள்வதில் மிகுந்த ஆற்றலையும் நுட்பநுணுக்கமான விடயங்களை எளிதில் கிரகித்துக் கொள்ளும் திறமையும் கொண்டவராக அவர் இருந்தார். நல்ல நினைவாற்றலும் அவருக்கு இருந்தது. பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்துக்கு தம்புத்தேகம மத்திய கல்லூரியில் இருந்து தெரிவான முதல் மாணவன் என்ற வகையில் அந்த பாடசாலைக்கு அவர் பெருமை சேர்த்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு சில வாரங்கள் முன்னதாக அந்த கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் அவரை கௌரவித்தனர். அந்த நிகழ்வு ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கிடைக்கவிருந்த வெற்றிக்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது.

ஆர்வமிக்க வாசகர்

திசாநாயக்க தனது மாணவ காலத்திலும் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலும்  ஒரு ஆர்வமிக்காவாசகர். இப்போதும் தான். சில வருடங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய அவரிடம் விரும்பிய நூல்கள் குறித்து கேட்கப்பட்டது. லியோ டால்ஸ்ராயின் ' போரும் சமாதானமும் ' , மார்க்சிம் கோர்க்கியின் ' தாய் ' , மகிந்த பிரசாத் மாசிம்புல எழுதிய 'செங்கோட்டன் ', மோகன் ராஜ் யடவலவின் ' 'ஆதரனீய விக்டோரியா' ஆகியவை அவர் குறிப்பிட்டவற்றில் சில நூல்கள். பல சிறுகதைகளையும் தான் விருப்பி வாசித்ததாக அவர் கூறினார்.

தனது பாடசாலை நாட்களில் டாக்டர் ஆபிரஹாம் கோவூரின் படைப்புக்களை வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். தென்னிந்திய மாநிலமான கேரளாவில் திருவல்லா என்ற பகுதியைச் சேர்ந்த டாக்டர் கோவூர் இலங்கைக்கு குடிபெயர்ந்து கல்கிசை சென். தோமஸ் கல்லூரியில் பல வருடங்கள் ஆசிரியராக கடமையாற்றினார். பகுத்தறிவாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த்அவர் மூடநம்பிக்கைகள், போலிச் சாமியார்கள் மற்றும் மதங்களின் பெயரால் இடம்பெறும் போலித்தனங்களுக்கும் எதிராக பெருமளவு நூல்களை எழுதினார்.

மாபெரும் சிந்தனையாளர்களினதும் அரசியல் தலைவர்களினதும் சரிதைகளையும் சுயசரிதைகளையும் திசாநாயக்க நன்கு சுவைத்துப் படிப்பார். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், காந்தி, டிட்டோ, காஸட்ரோ மற்றும் கிளின்ரோ ஆகியோரின் சரிதைகள் திசாநாயக்கவின் வாழ்வை வளப்படுத்திய மகத்தான மனிதர்களின் நூல்களில் முக்கியமானவை.  அந்த நேர்காணலில் அவர் மேலும் கூறுகையில் " எனது வாழ்க்கையை பல நூல்கள் மாற்றியமைத்தன.சோவியத் ரஷ்யாவின் இலக்கியங்களினால் குறிப்பாக  நாவல்கள் , சிறுகதைகளினால் நான் மிகவும் ஆழமாக ஆகர்சிக்கப்பட்டேன். அந்த காலகட்டத்தின் இலக்கியங்கள் எமது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின" என்று குறிப்பிட்டிருந்தார்.

வாசிப்பின் மீதான திசாநாயக்கவின் காதலையும்  நூல்கள் தனது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய அவரின் மதிப்பையும் வைத்துக்கொண்டு  அவரை  வெறுமனே ஒரு புத்தகப்பூச்சி என்று நினைத்துவிடக் கூடாது. அவருக்குள் இருக்கின்ற ஒரு ' மெய்வல்லுனரை "  மக்கள் நேரிலும் தொலைக்  காட்சிகளிலும் பார்த்திருப்பார்கள். சுறுசுறுசுறுப்பாக நடந்துவந்து மேடைகளில் அவர் ஏறுகின்ற பாங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. அவரது இந்த உடல்தகுதியின் தோற்றுவாய் அநுராதபுரத்தின் தண்ணீரில் தங்கியிருக்கிறது.

நல்ல நீச்சல் வீரர்

திசாநாயக்க வேகமும் உரமும் கொண்ட நல்ல நீச்சல் வீரர். தனது மாணவ காலத்தில் அவர்  அநுராதபுரத்தில் உள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த திஸ்ஸவேவ, அபயவேவ,  நுவரவேவ ஆகிய மூன்று வாவிகளில் நீந்துவார். முதலாவது நூற்றாண்டில் வலகம்பா மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட நுவரவேவவின் முழுமையான மூன்று கிலோ மீட்டர்கள் நீளத்தையும் திசாநாயக்க அடிக்கடி நீந்தி முடிப்பார்.

அரசியல் செயற்பாட்டாளராக மாறிய பிறகு திசாநாயக்க இலங்கை பூராவும் பயணம் செய்தார். எங்கெல்லாம்  குளங்கள், வாவிகள் மற்றும் ஆறுகள் இருக்கின்றனவோ அங்கு  சாத்தியமான வேளைகளில் அவர் நீச்சலில் இறங்குவதற்கு தவறுவதில்லை. "நான் நீச்சலை மிகவும் விரும்புபவன். சராசரியாக  சுமார் இரு கிலோமீட்டர்கள் நீந்துவேன்.  அதனால் எனக்கு ஒரு நீச்சல் தடாகம் போதாது. உண்மையைச் சொல்கிறேன், எனக்கு நீச்சல் தடாகங்களைப் பிடிப்பதில்லை" என்று அவர் ஒரு தடவை நேர்காணலில் கூறினார்.

நீச்சலும் வாசிப்பும் படிப்பும் நிறைந்த அமைதியான கிராமப்புற வாழ்க்கையில் இருந்து திசாநாயக்க தனது பதினகவைகளின் இறுதி வருடத்தில் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். 1987 ஆம் ஆண்டு போரையும் சமாதானத்தையும் கொண்டதாக இருந்தது. அதுவே திசாநாயக்கவின் வாழ்வை முற்றுமுழுதாக மாற்றியமைத்த ஆண்டாகவும் அமைந்தது. அதற்கு பிறகு நடந்தவற்றை விளங்கிக்கொள்வதற்கு வரலாற்றை ஒரு தடவை திரும்பிப்பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்திய --  இலங்கை சமாதான உடன்படிக்கை

இலங்கையின் இனநெருக்கடி பல வருடங்கள் நீடித்த  கொடூரமான ஒரு ஆயுதமோதலாக மாறியது.  முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன ஜே.ஆர். ஜெயவர்தனவும் கொழும்பில் 1987 ஜூலை 29 ஆம் திகதி  இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். போர்நிறுத்தம் ஒன்று பிரகடனம் செய்யப்பட்டது. அமைதியைப் பேணுவதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்திய இராணுவம் இந்திய அமைதிகாக்கும் படை என்ற பெயரில் நிலைகொண்டது.

இலங்கை ஆயுதப்படைகளுக்கும் ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாதக் குழுக்களுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதன் மூலம் சமாதானத்தை ஏற்படுத்தும் மெச்சத்தக்க குறிக்கோளுடனேயே ராஜீவ் -- ஜெயவர்தன உடன்படிக்கை கைச்சாத்திடப்ப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று நிலைத்து நிற்கக்கூடிய ஒரு சமாதானத்தை கொண்டுவருவதற்கு பதிலாக, இந்திய - இலங்கை உடன்படிக்கை மேலும் வன்முறைக்கும் இரத்தக்களரிக்கும் வழிவகுத்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்து மீண்டும் போரைத் தொடங்கியது. விரைவாகவே வடக்கிலும் கிழக்கிலும் இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு எதிராக விடுதலை புலிகள் முழு அளவிலான கெரில்லப்போரை தொடுத்தனர்.

றோஹண விஜேவீர 

அதேவேளை றோஹண விஜேவீர தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுனயும்  (ஜே.வி.பி. ) இந்திய --  இலங்கை உடன்படிக்கையை எதிர்த்து தென்னிலங்கையில் ஆயுதப் போராட்டத்தில்  ஈடுபட்டது. பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவியில் இருந்தபோது 1971 ஆம் ஆண்டில்  ஜே.வி.பி.  ஆயுதக்கிளர்ச்சி ஒன்றை தொடங்கியது. பல நாடுகளின் உதவியுடன் அந்த கிளர்ச்சியை அரசாங்கம் ஈவிரக்கமற்ற முறையில் கொடூரமாக நசுக்கியது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்களன சிறையில் அடைக்கப்பட்டனர். இது முதலாவது ஜே.வி.பி. கிளர்ச்சி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.

1977 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம்  ஜே.வி.பி. மீதான தடையை நீக்கி  விஜேவீர உட்பட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த இயக்கத்தின் உறுப்பினர்களை விடுதலை செய்தது. ஜே.வி.பி. மீண்டும் அரசியல் நீரோட்டத்தில் பிரவேசித்தது.விஜேவீர 1982 அக்டோபர் ஜனாதிபதி தேர்தலிலும்  போட்டியிட்டு மூன்றாவதாக வந்தார். ( ஐக்கிய தேசிய கட்சி முதலாவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாவதாகவும் வந்தன )  இலங்கை அரசியலில் ஒரு மூன்றாவது சக்தியாக  " புதிய இடது " ஜே.வி.பி." மேலெழுந்தது போன்று தோன்றியது.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பல அமைச்சர்களின் அந்தரங்க ஆதரவுடன் 1983 ஜூலையில் நாடுபூராவும் தமிழர்களுக்கு எதிராக இனவன்செயல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அந்த வன்செயல்களுக்கு ஜே.வி.பி.பொறுப்பென்று தவறாகக் குற்றஞ்சாட்டி  ஜனாதிபதி ஜெயவர்தன  அந்த கட்சியை தடைசெய்தது. ஜே.வி.பி. தலைமறைவு இயக்கமாக செயற்படத் தொடங்கியது. விஜேவீர உட்பட தலைவர்களும் தலைமறைவாகினர்.

ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி 

ஆனால், இந்திய -- இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு வடக்கிலும் கிழக்கிலும் இந்திய அமைதிகாக்கும் படை நிலை கொண்டபோது   ஜே.வி.பி. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டது. கடந்த காலத்தில் இந்திய மன்னர்கள் இலங்கை மீது நடத்திய பல்வேறு  படையெடுப்புகள் பற்றிய பழைய அச்சங்களை மீண்டும் கிளறிய ஜே.வி.பி. சிங்கள பெரும்பான்மை மாகாணங்களில் இந்திய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை தொடங்கியது. அது ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி என்று அழைக்கப்பட்டது.

1987 ஆம் ஆண்டில் ஜே.வி.பி. இரண்டாவது கிளர்ச்சியை தொடங்கியபோது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் அதிகப் பெரும்ப்னமையா வாழும் பிரதேசங்களில் அந்த இயக்கத்துக்கு  உறுப்பினர்கள் இருக்கவில்லை. அதனால் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஏழு மகாணங்களிலிலேயே அதன் ஆயுதப்போராட்ட நடவடிக்கைகள இடம்பெற்றன.

ஜே.வி.பி.யின் இந்திய எதிர்ப்பு இராணுவப் பிரிவுக்கு தேசபக்த மக்கள் இயக்கம் ( தேசப்பிரேமி ஜனதா வியாபாரய ) என்று பெயரிடப்பட்டது. மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கே தேசபக்திக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. தேசபக்த மக்கள் இயக்கத்தின் தளபதிக்கு கீர்த்தி விஜேபாகு என்று இயக்கப்பெயர் கொடுக்கப்பட்டு வரலாற்று சம்பவங்கள்  நினைவு மீட்டப்பட்டன.

பத்தாவது நூற்றாண்டில்  மன்னர்களான  இராஜராஜ சோழனுக்கும் இராஜேந்திர சோழனுக்கும் எதிராக இளவரசர் கீர்த்தியே போராடினார். ருஹுணு இளவரசரான அவர் இறுதியில்  பொலன்னறுவையில் இருந்து சோழ படையெடுப்பாளர்களை விரட்டி தன்னை விஜேபாகு மன்னன் என்று முடாசூடிக் கொண்டார். தேசபக்த மக்கள் இயக்கத்தின் தளபதி கீர்த்தி விஜேபாகுவின் உண்மையான பெயர் சமான் பியசிறி பெர்னாண்டோ.  மொரட்டுவையில் லுணாவ பகுதியைச் சேர்ந்த அவர் களனி பல்கலைக்கழக பட்டதாரி.

ஜே.வி.பி.யில் இணைவு 

இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் தான் 19 வயதான அநுரா குமார திசாநாயக்க 1987 ஆம் ஆண்டில் தனது ஒன்றுவிட்ட சகோதரன் சுனில் இரத்நாயக்கவுடன் சேர்ந்து ஜே.வி.பி.யில் இணைந்துகொண்டார். திசாநாயக்க ' சுனில் ஐயா ' என்று அழைத்த அந்த சகோதரன்  அவரின் வாழ்க்கையில் பெரும் செல்வாக்கைச் செலுத்தினார். தாய்நாட்டுக்காக தாங்கள் ஜே.வி.பி.யில் இணையவேண்டும் என்று திசாநாயக்கவை நம்பவைத்தவரே அந்த சுனில்தான்.

அரவிந்த என்ற அநுரா 

அநுரா குமார திசாநாயக்க ஜே.வி.பி.யில் இதைந்தபோது அவர் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருந்தார். சில மாதங்களுக்கு பிறகு திசாநாயக்கவுக்கு பேராதனை பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்தது. அவர் கண்டிக்கு சென்று தனது மூன்றாம் நிலைக் கல்வியை ஆரம்பித்தார். 

ஆனால் அவர் தனது கூடுதலான நேரத்தை தலைமறைவு அரசியல் நடவடிக்கைகளிலேயே செலவிட்டார். "அரவிந்த ' என்ற இயக்கப் பெயருடன் ஜே.வி.பி./ தேசப்பிரேமி ஜனதா வியாபாரயவுக்கு  ஆதரவான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். ஜே.வி.பி.யின் பல்வேறு அமைப்புக்களிடையே தகவல்களைக் கொண்டுசெல்லும் பணிகளை தூதருக்குரிய பணிகளை அவர் செய்தார்.

ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலம் நீடித்தது. அதில் ஜே.வி.பி.யினாலும்  பொலிசார், பரா இராணுவம் மற்றும் படைகள் மேற்கொண்ட கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளினாலும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அரசின் முகவர்களினால் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பு படைகளினாலும் அரசின் ஏனைய முகவர்களினாலும் கொல்லப்மட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் நம்பகமான மதிப்பீடுகள் கிடைக்கவில்லை எனினும் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் உத்தியோகபூர்வ விபரங்கள் இருக்கின்றன.

அந்த மூன்று வருட காலப்பகுதியில் 487  அரசாங்க சேவையாளர்கள், 342 பொலிஸ்காரர்கள், 209 பாதுகாப்பு படையினர், 16  அரசியல் தலைவர்கள் 4,945 குடிமக்கள் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தொகையில் 30 பௌத்த பிக்குகள், இரு கத்தோலிக்க மதகுருமார், 52 பாடசாலை அதிபர்கள், நான்கு மருத்துவர்கள், 18 பெருந்தோட்ட அத்தியட்சகர்கள் மற்றும் 27  தொழிற் சங்கவாதிகளும் அடங்குவர். அதில் 93 பொலிஸ்காரர்கள் மற்றும் 69 படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் கூட அடங்குவர்.

அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை 

ஜே.வி.பி.யினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாதத்துக்கு இணையாக அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளும் அமைந்தன. அரச பயங்கரத்தினால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களில் திசாநாயக்கவின் ஒன்றுவிட்ட சகோதரன் சுனில் அடங்குவார்.

சுனில் ஐயா கைதாகி சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்தார். அரவிந்த என்ற திசாநாயக்க பேராதனையை விட்டு தப்பியோடி தலைமறைவானார்.  அவர் தேடப்படும் ஒருவராக இருந்தார். அரசியலில் ஈடுபாடு இல்லாத அவரின் குடும்பம் தங்களது மண்வீட்டில் இருந்து ஒரு எளிமையான  கல்வீட்டுக்கு குடிபெயர்ந்தது. அரவிந்தவுக்கு ஒரு எச்சரிக்கையாக அரசின் முகவர்கள் அந்த வீட்டுக்கு தீவைத்துக் கொளுத்தியதாக கூறப்பட்டது.

திசாநாயக்க மேராதனையில் கல்வியை இடையில் நிறுத்தி தலைமுறைவு வாழ்க்கைக்கு சென்றார். பெரிதாக வெளியில் தலைகாட்டாமல் அவர் இடத்துக்கு இடம் சென்று வந்ததாக ஜே.வி.பி. வட்டாரங்களில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது. அந்தக் காலப்பகுதியே அவரது வாழ்க்கையில் மிகவும் ஆபத்தான கட்டமாக இருந்தது.

றோஹண விஜேவீர, உபதிஸ்ஸ கமநாயக்க உட்பட பெரும்பாலான சிரேஷ்ட ஜே.வி.பி. தலைவர்கள்  பிடிக்கப்பட்டு கொலை செய்ப்பட்டனர். சிரேஷ்ட தலைவர்களில் சோமவன்ச அமரசிங்க மாத்திரமே உயிர்தப்பி இந்திய உதவியுடன் ஐரோப்பாவுக்கு தப்பிச்சென்றார். ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி முற்றுமுழுதாக நசுக்கப்பட்டது. 

களனி பல்கலைக்கழகம் 

நிலைவரம் தணியத் தொடங்கியது. எந்தவிதமான தொடர்புமின்றி ஒரு வருடத்துக்கும் கூடுதலான காலமாக தலைமறைவாக இருந்த பிறகு திசாநாயக்க வெளியில் வந்து  சமூகத்தில் மீண்டும் இணைந்துகொண்டார். ' அரவிந்தவின் ' அத்தியாயம் அத்துடன் முடிவுக்கு வந்தது. திசாநாயக்க தனது கல்வியை மீண்டும் ஆரம்பித்தார். இந்த தடவை களனி பல்கலைக்கழகத்துக்கு மாற்றம் பெற்று அங்கு கல்வியை தொடர்ந்தார்.

தலைவிதி 

ஜே.வி.பி.க்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான நடவடிக்கைகளில் இருந்து தப்பிய திசாநாயக்கவுக்கு எதிர்காலத்தில் பெரிய ஒரு பாத்திரத்தை வகிப்பதற்கு விதி எழுதப்பட்டிருந்தது போன்று தோன்றியது. இதிகாசத்தில் வரும் பீனிக்ஸ் பறவையைப் போன்று சாம்பலில் இருந்து  ஜே.வி.பி. வெளிக்கிளம்பியது.

திசாநாயக்க படிப்படியாக உயர்ந்து ஜே.வி.பி.யினதும் அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினதும் தலைவராக வந்தார். தற்போது அவர் இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி. இடதுசாரித் தாரகை இலங்கை மேலாக எழுந்திருக்கிறது. இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை இரண்டாவது பாகத்தில் பார்ப்போம்.

https://www.virakesari.lk/article/195194

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடந்த காலத்தை விடுங்கள், இவரின் எதிர்கால வாழ்க்கை மறுபடியும் இப்படி எழுதப்படுமானால் வாழ்த்தப்படக்கூடியது. எங்கள் வலி, தாகம் யாரும் சொல்லாமலே அவருக்கு விளங்கியிருக்க வேண்டும். அப்போது அரசு எதை செய்திருக்க வேண்டுமென போராடினாரோ, அதை அவர் மக்களுக்கு செய்து நிரூபிக்க வேண்டும் தாங்கள் செய்த போராட்டம் நிஞாயமானதென.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/10/2024 at 03:27, ஏராளன் said:

அந்த வன்செயல்களுக்கு ஜே.வி.பி.பொறுப்பென்று தவறாகக் குற்றஞ்சாட்டி  ஜனாதிபதி ஜெயவர்தன  அந்த கட்சியை தடைசெய்தது

ஆஹா ஆஹா ....கட்டுரையாளர் ஆட்டைக்கடித்து மாட்டைகடித்து ஜெ.வி.பி...நற்சான்றிதழ் வழங்கின்றார்....இந்த 83 இனக்கலவரத்திற்கு முக்கிய பங்கு அவர்களுக்கும் உண்டு....உயிர்களுக்கு சேதம் விளைவிக்கவில்லை ஆனால் உடமைகள் ,வியாபார ஸ்தாபனங்கள் ...மற்றும் இந்திய வியாபார கொம்பனிகள் போன்றவற்றை திட்டமிட்டு அழித்த பெருமை ஜெ.வி.பி இனருக்கு உண்டு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜே.வி.பி.யில் அநுர குமாரவின் வளர்ச்சி 

09 OCT, 2024 | 03:10 PM
image
 
பாகம் 2
டி.பி.எஸ். ஜெயராஜ்

லங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பரபரப்பான நிகழ்வுகள் பலப்பல நிறைந்த ஆரம்ப வாழ்க்கையைப் பற்றி  இந்த கட்டுரைத் தொடரின் முதல் பாகத்தில் கடந்தவாரம் எழுதியிருந்தேன். இந்த இரண்டாவது பாகத்தில் ஜனதா விமுக்தி பெரமுனவுக்குள் (ஜே.வி.பி.) ஒரு அரசியல் தலைவராக அவரின் படிப்படியான சீரான வளர்ச்சி குறித்து பாராப்போம்.

கடந்த வாரத்தைய பத்தியில் குறறிப்பிட்டதைப் போன்று ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி ரணசிங்க பிரேமதாச அரசாங்கத்தினால் ஈவிரக்கமற்ற முறையில் நசுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமற்போகச் செய்யப்பட்டார்கள். மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் பாதுகாப்புக்காக நாட்டை விட்டு தப்பியோடினார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கைதாகி  கொலை செய்யப்படக்கூடிய ஆபத்தில் இருந்து தப்பிய அதேவேளை  தங்களது அடையாளங்களை மாற்றி வேவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தார்கள். இலங்கையில் தொடர்ந்தும் தங்கியிருந்து கைதுசெய்யப்படுவதில் இருந்து தப்பி தலைமுறைவு வாழ்க்கைக்கு சென்றவர்களில் அநுரவும் ஒருவர்.

ஜே.வி.பி.யின் தாபகத் தலைவர் விஜேவீர,  இரண்டாவது தலைவர் சமான் பியசிறி பெர்னாண்டோ, மூன்றாவது தலைவர் லலித் விஜேரத்ன ஆகியோர் 1989 - 90 காலப்பகுதியில் அரசினால் கொலை செய்யப்பட்ட ஜே.வி.பி.யின் 14  உயர்மட்டத் தலைவர்களில் அடங்குவர்.  சிறி ஐயா என்ற சோமவன்ச அமரசிங்க மாத்திரமே  உயிர்தப்பி வாழ்ந்த ஒரேயொரு உயர்மட்டத் தலைவரும் அரசியல் குழு வின் உறுப்பினருமாவார். அவர் பிறகு ஜே.வி.பி.யின் நான்காவது தலைவராக வந்தார்.  1990ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு தப்பியோடிய சோமவன்ச அங்கிருந்து தாய்லாந்துக்கு சென்றார். அந்த நாட்டில் இருந்து  இத்தாலிக்கு மாறிய அவர் பிரான்ஸில் அரசியல் தஞ்சம் கோரினார்.

சோமவன்ச அமரசிங்க

பல்வேறு ஐரோப்பிய நாடுகளிடையே மாறிமாறி பயணம் செய்த சோமவன்ச அமரசிங்க புலம்பெயர் சிங்கள சமூகத்தவர்கள் மத்தியில் ஜே.வி.பி.யின் கிளைகளை அமைத்தார். அங்கிருந்து அவர் இலங்கையில் இயங்காமல் இருந்த உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு அனேகமாக அழிந்துபோயிருந்த ஜே.வி.பிக்கு புத்துயிர் கொடுக்கும் ஔிவுமறைவான செயற்பாடுகளை தொடங்கினார்.  அவர்  பிரான்ஸில் இருந்தும் ஐக்கிய இராச்சியத்தில்  இருந்தும் இங்குள்ள இரகசிய  உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டு  நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தார். அதேவேளை, பாதுகாப்பு நிலைவரமும் தளரத் தொடக்கியது. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த உறுப்பினர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் ஜே.வி.பி. மீதான தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருந்தது.

1993 மே மாதம் பிரேமதாசவின் மரணத்துக்கு பிறகு ஜே.வி.பி.யை பொறுத்தவரை வசதியாக அமையக் கூடியதாக அரசியல் காலநிலை மாறியது. 1994ஆம் ஆண்டில் சோமவன்ச அமரசிங்க  இலங்கை திரும்பி அமைதியான முறையில் ஜே.வி.பி.யை மீள ஒழுங்கமைக்கத் தொடங்கினார். பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டபோது ஜே.வி.பி. தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட இயக்கமாகவே இருந்தது.

அதனால் சோமவன்ச ஸ்ரீலங்கா முற்போக்கு முன்னணி என்ற  ஒரு  அமைப்பை ஆரம்பித்தார். அந்த அமைப்பு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரம் போட்டியிட்டு 15,309 வாக்குகளைப் பெற்றது. ஜனித் விபுலகுண பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார். ஆனால், அவர் உடனடியாகவே பதவியில் இருந்து விலகவே  நிஹால் கலப்பதி  அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினராக வந்தார்.

1994  ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஆதரவாக வேலை செய்தது. அவர் ஜனாதிபதியாக வந்ததும்  ஜே.வி.பி. மீதான தடையை நீக்கினார். அதையடுத்து ஜே.விபி. அரசியல் செயற்பாடுகளை  மீண்டும் பகிரங்கமாக முன்னெடுக்கத் தொடங்கியது. சோமவன்ச அமரசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ்  ஜே.வி.பி. 1995 ஆம் ஆண்டில் அதன் தேசிய மகாநாட்டை தங்காலையில் நடத்தியது.

களனி பல்கலைக்கழகம் 

அதேவேளை, அநுர தனது மூன்றாம் நிலைக்கல்வியை மீண்டும் தொடங்கினார். 1992ஆம் ஆண்டில் களனி பல்கலைக்கழகத்தில் மாணவனாக இணைந்த அவர் தனது பல்கைலைக்கழக நாட்களில் மிகவும் அமைவடக்கமாக இருந்தார் என்றபோதிலும், மாணவர்கள் சங்க நடவடிக்கைகளில் பங்கேற்றார். ரியூட்ரிகளில் கற்பிப்பதிலும் அவர் ஈடுபட்டார்.

சோமவன்சவுடனும் தொடர்பில் இருந்த அநுர அவரிடமிருந்து அந்தரங்க தகவல்களை ஏனைய ஜே.வி.பி. உறுப்பினர்களுக்கு தெரிவித்துவந்தார். தனது கல்வியை நிறைவு செய்துகொண்ட அநுர 1995ஆம் ஆண்டில் மௌதீக விஞ்ஞானத்தில் பட்டத்தைப் பெற்றார். முழு நேர வேலைவாய்ப்பு ஒன்றைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அவர் முழுநேர அரசியலுக்கு திரும்பினார்.

முன்னர் கூறியதைப் போன்று சோமவன்ச இலங்கைக்கு திரும்பி ஜே.வி.பி.க்கு புத்துயிர் கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அநுரவை  விரும்பிய சோமவன்ச அவரின் விவேகம், ஆற்றல் மற்றும் கொள்கை உறுதிப்பாட்டினால் பெரும் கவரப்பட்டார். அநுரவை அவர் தனது அரவணைப்பில்  எடுத்துக்கொண்டார்.

அநுரவின் துரித எழுச்சி 

தங்காலை தேசிய மகாநாட்டுக்கு பிறகு ஜே.வி.பி.யின் ஆதரவுடனான சோசலிச மாணவர்கள் சங்கம் மீள ஒழுஙகமைக்கப்பட்டது. அதன் தேசிய அயைப்பாளராக அநுரா நியமிக்கப்பட்டார். அதன் பிறகு ஜே.வி.பி.யின் படிநிலைகளுக்குள் அவர் துரிதமாக உயர்வடைந்தார். 1996ஆம் ஆண்டில் ஜே.வி.பி.யின் மத்திய குழுவின் உறுப்பினராக வந்த அவர் இரு வருடங்களில் 1998ஆம் ஆண்டில் சகல வல்லமையும் பொருந்திய ஜே.வி.பி. அரசியற்குழுவுக்கு நியமிக்கப்பட்டார்.

ஜே.வி.பி.யின் மூன்றாவது கட்டம்

1971ஆம் ஆண்டில் ஜே.வி.பி. முன்னெடுத்த ஆயுதக் கிளர்ச்சி ஒரு சோசலிசப் புரட்சியை நோக்கமாகக் கொண்டது. 1987 - 90 காப்பகுதியில் அதன் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சி "இந்திய ஆக்கிரமிப்புக்கு" எதிரான தேசபக்த எதிர்ப்பை நோக்கமாகக் கொண்டது. அதற்கு பிறகு இப்போது அதன் மூனாறாவது கட்டம். அந்த கட்டத்தில் ஜே.வி.பி. காயப்பட்டு உருக்குலைந்த ஒரு அமைப்பாக இருந்தது.

அரசினால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து மக்கள் கவலையுடன் மக்கள் கிலி கொண்டிருந்த போதிலும் கூட, ஜே.வி.பி. செய்த அட்டூழியங்கள் பற்றியும் அச்சமடைந்தவர்களாகவே இருந்தனர். ஜே.வி.பி.யின் பயங்கரம் தலைவிரித்தாடிய காலம் மக்கள் மனதைவிட்டு அகலாமல் அப்படியே இருந்தது. அதனால் ஜே.வி.பி. அதன் மீள் எழுச்சியை முன்னெடு்பதற்கு புதிய ஒரு அரங்கு தேவைப்பட்டது.

இலங்கைப்படைகள் தமிழீழ விடுதலை புலிகளுடன் போரில் ஈடுபட்டிருந்தன. சோமவன்ச தலைமையிலான ஜே.வி.பி. இலங்கைத் தேசியவாதம் மற்றும் நாட்டுப் பிரிவினைக்கு எதிர்ப்பு என்ற போர்வையில் ஒரு சிங்கள பேரினவாதப் போக்கை கடைப்பிடித்தது. போரை ஆதரித்த ஜே.வி.பி. அதற்கு பல்வேறு வழிகளிலும் உதவியாகச் செயற்பட்டது. ஆயுதப்படைகளுக்கு ஆட்திரட்டல்களைச் செய்வதற்கான பிரசாரங்களை அது தீவிரமாக முன்னெடுத்தது. படைவீரர்களுக்கு மனத்தைரியத்தை ஊக்குவிப்பதற்காக போரின் முன்னரங்கப் பகுதிகளுக்கு  ஜே.வி.பி. யின் தலைவர்கள் விஜயம் செய்தார்கள்.

தேர்தல்களில் போட்டி 

எதிர்மறையான அரச எதிர்ப்பு படிமத்தில் இருந்து ஒரு நேர்மறையான அரச ஆதரவு படிமத்துக்கு தன்னை மாற்றிக்கொள்ளும் ஒரு முயற்சியில் ஜே.வி.பி. ஒரு புத்தமைவாக்கத்துக்கு உள்ளாகிக் கொண்டிருந்த வேளையில் அது கிரமமாக தேர்தல்களில் போட்டியிடத் தொடங்கியது. இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கைக்கும் அரசியலமைப்புக்கான 13வது திருத்தத்துக்கும்  எதிரானதாக இருந்தபோதிலும், ஜே.வி.பி. மாகாணசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்கு எதிரானதாக இருக்கவில்லை. மாநகர சபைகள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கான தேர்தல்களிலும் அது போடாடியிட்டது. தேர்தல்களில் போட்டியிட்டதன் மூலம் ஜே.வி.பி.அதன் ஆதரவுத்தளத்தை விரிவாக்கிக் கொண்டது. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களாக வந்ததன் மூலம் ஜே.வி.பி.யின் முக்கியஸ்தர்கள் ஒரு அங்கீகாரத்தைப் பெறக்கூடியதாக இருந்தது.

பாராளுமன்ற தேர்தல்கள்

அதற்கு பிறகு அவர்கள் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிடுவதில் நாட்டம் காட்டினார்கள். 2000 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஜே.வி.பி. 518,774 வாக்குகளைப் பெற்றது. இரு நியமன உறுப்பினர்கள் உட்பட பத்து உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகினர். 2001 பாராளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி.க்கு 815, 353 வாக்குகள் கிடைத்தன. பாராளுமன்றத்துக்கு சென்ற 16 உறுப்பினர்களில் 13 பேர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள். மூவர் தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்பட்டவர்கள்.

 ஏற்கெனவே கூறப்பட்டதைப் போன்று  அநுர இப்போது ஜே.வி.பி.யின் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பினர். சோசலிச மாணவர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளரான  அவர் கட்சியின் மத்திய குழு மற்றும் அரசியற்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார். மாணவர்கள் சங்கத்தின் அமைப்பாளர் என்ற வகையில் அவர் மிகுந்த செல்வாக்குடையவராக விளங்கினார். ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்வதில் ஜே.வி.பி.யின் முக்கியமான ஆதரவுச் சக்தியாக மாணவர்கள் விளங்கினர். அநுரவின் வழிகாடடலில் ஜே.வி.பி. ஆதரவு மாணவர்கள் சங்கம் கணிசமானளவுக்கு விரிவடைந்து பெரும்பாலான பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும்  தன்னை நிறுவிக் கொண்டது.

எனவே ஜே.வி.பி. தேர்தல்களில் போட்டியிட்டபோது அநுரவுக்கு தேசியப்பட்டியலில் இடம் வழங்கப்பட்டது. ஒரு மாவட்டத்துக்கான வேட்பாளராக மட்டுப்பட்டு நிற்காமல் நாட்டின் சகல பாகங்களிலும் அவர் பிரசாரங்களில் ஈடுபடுவதற்கு வசதியாகவே அவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டது. மிகுந்த ஆற்றல்மிக்க ஒரு பேச்சாளராக வெளிக்கிளம்பிய அநுர கற்பனாவாத வெற்று ஆரவார உரைகளை நிகழ்த்தியவர் அல்ல. கூறவேண்டிய விடயத்தை நேரடியாகவே கூறி நியாயத்தை மக்களுக்கு விளங்கவைப்பதில் மிகுந்த ஆற்றலை அவர் வெளிப்படுத்தினார். சில சந்தர்ப்பங்களில் அவர் உணர்ச்சிமயப்பட்டவராகவும் பேசுவார்.

தேசிய பட்டியல் எம்.பி.

2000ஆம் ஆண்டில் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்ட அநுர முதற்தடவையாக பாராளுமன்ற பிரவேசம் செய்தார். இரண்டாவது தடவையும் அவர் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மிகவும் விரைவாகவே அவர் தன்னை பாராளுமன்றத்தில்  ஆளுமைத்திறன் கொண்ட பேச்சாளராகவும் ஆற்றல் மிகு விவாதியாகவும் நிரூபித்தார். 

2001ஆம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தமோதிலும், அவரது கட்சியான பொதுஜன முன்னணி பாராளுமன்ற தேர்தலில் இரண்டாவதாகவே வந்தது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 4,086,026 வாக்குகளைப் பெற்று 109 ஆசனங்களைக் கைப்பற்றியது. சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான பொதுஜன முன்னணி 3,330,815 வாக்குகளுடன்  77 ஆசனங்களைப் பெற்றது. ஜே.வி.பி. 815, 353 வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களை தனவசமாக்கியது. பொதுஜன முன்னணியினதும் ஜே.வி.பி.யினதும் வாக்குகளை ஒன்றாகச் சேர்த்தால்  ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி இரண்டாவது இடத்துக்கே தளளப்பட்டிருக்கும் என்பது வெளிப்படையானது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் ஜே.வி.பி. 

இந்த கணிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 2004 பாராளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி.யுடன் கூட்டணி ஒன்றை அமைத்தார். கொழும்பில் இருந்த வெளிநாட்டு தூதுவர் ஒருவரும் இந்த கூட்டணி உருவாவதற்கு அனுசரணையாகச் செயற்பட்டார். அதையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு அங்கமாக ஜே.வி.பி. 2004 பொதுத்தேர்தலில் போட்டியிட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 4,223,970 வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் 105 ஆசனங்களைக் கைப்பற்றியது. 3,504,200 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசிய முன்னணி 82 ஆசனங்களை தனதாக்கிக்கொண்டது.

2004 பொதுத்தேர்தலில் ஜே.வி.பி. பாராட்டத்தக்க ஒரு வெற்றியைப் பெற்றது.  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் பட்டியல்களின் அங்கமாக  ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜே.வி.பி.யின் மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தங்களது வேட்பாளர்களுக்கு உச்சபட்ச எண்ணிக்கையில் விருப்பு வாக்குகள் கிடைப்பதற்கு ஜே.வி.பி.யினர் கடுமையாகப் பாடுபட்டனர். அதன் விளைவாக அந்த கட்சிக்கு பாராளுமன்றத்தில் 39 ஆசனங்கள் கிடைத்தன.

அமைச்சராக அநுர

அநுரகுமார திசாநாயக்கவுக்கு 2004ஆம் ஆண்டு ஒரு மைல்கல்லாக அமைந்தது.2004 ஏப்ரில் தேர்தல் அவரது தேர்தல் ஞானஸ்நானமாக விளங்கியது. குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் பட்டியலில் போட்டியிட்ட அவர் 153, 868 விருப்பு வாக்குகள் பெற்றுத் தெரிவானார். ஜனாதிபதி திருமதி குமாரதுங்க அமைச்சரவையை அமைத்தபோது ஜே.வி.பி.க்கு நான்கு அமைச்சுக்கள் ஒதுக்கப்பட்டன. அநுர விவசாய, கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

காலநடை வளர்ப்பும் விவசாயமும் அநுராவின் இதயத்துக்கு நெருக்கமான துறைகள் என்பதால் அந்த அமைச்சைப் பெற்றதில் அவர் பெரும் மகிழ்ச்சியடைந்தார். மிகவும் திறமையாக தனது கடமைகளைச் செய்த அவர் நாட்டின் விவசாயத்துறைக்கும் கால்நடை வளர்ப்பு துறைக்கும் புத்துயிர் அளிக்கப் பாடுபட்டார். ஆனால், நிகழ்வுப் போக்குகள் துரதிர்ஷ்டவசமாக வேறுபட்ட ஒரு திருப்பத்தை எடுத்தன. அநுராவின் அமைச்சர் பொறுப்புக் கடமைகள் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தன. அவரும் ஏனைய ஜே.வி.பி. சகாக்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர்முன்னணி அரசாங்கத்தில் வகித்த பதவிகளைத் துறந்தனர்.  ஜே.வி.பி.யின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும  அரசாங்கத்தில் இருந்து வெளியேறினர்.

2004 சுனாமி 

நடந்தது இதுதான். 2004 டிசம்பரில் சுனாமி இயற்கை அனர்த்தத்தின் வடிவில் நாடு பயங்கரமான பேரிடரை அனுபவித்தது.  பெருமளவில் மரணங்கள், அழிவுகள், இடம்பெயர்வுகள் இடம்பெற்றன. விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டின்  கீழ் இருந்த பிராந்தியங்களின் பரந்தளவு கரையோரப் பகுதிகளும் சுனாமியால்  பாதிக்கப்பட்டன.  அதேபோன்று வடக்கு, கிழக்கின் வேறு கரையோரப்பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகின.  சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களினதும் பகுதிகளினதும் புனர்வாழ்வுக்கும் புனரமைப்புக்கும் 300 கோடி அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதற்கு சர்வதேச உதவி வழங்குநர்கள் தயாராயிருந்தனர். பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் பிராந்தியங்களுக்கும் உதவுவதற்கு பணம் ஒப்புரவான முறையில் செலவிடப்படவேண்டும் என்பது கடுமையான ஒரு நிபந்தனையாக முன்வைக்கப்பட்டது.

 ஜனாதிபதி திருமதி குமாரதுங்க நோர்வேயின் அனுசரணை ஊடாக விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தார். வழமைக்கு மாறான விடுதலை புலிகளுடன் கூட்டுக் கட்டமைப்பு ஒன்று அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டது.  சுனாமிக்கு பின்னரான  செயற்பாட்டு முகாமைத்துவ கட்டமைப்பு  [Post - Tsunami Operational  Management Structure (P - TOMS) ]  என்று அது அழைக்கப்பட்டது.  வெளிநாட்டு உதவியின் ஊடாக பெறப்படும் நிதி விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் பகுதிகளுக்கும் ஒப்புரவான முறையில் விநியோகிக்கப்படுவதற்கு  வசதியாகவே அந்த கட்டமைப்பு நிறுவப்பட்டது. அது அரசாங்கத்தினதும் விடுதலை புலிகளினதும் ஒரு கூட்டுப் பொறிமுறையாகும்.

ஜே.வி.பி. எதிர்ப்பு 

ஆனால், சோமவன்ச அமரசிங்க தலைமையிலான ஜே.வி.பி. அந்த சுனாமி உதவிக் கட்டமைப்பை கடுமையாக எதிர்த்தது. ஜே.வி.பி. அதன் சொந்த கடந்த காலத்தை மறந்து விடுதலை புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று வர்ணித்ததுடன் அந்த கட்டமைப்பு அந்த இயக்கத்தை அரசாங்கத்துக்கு நிகரானதாக நோக்குவதாக கண்டனம் செய்தது.  முன்னதாக விடுதலை புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான போர் நிறுத்தத்தையும் ஒஸ்லோ அனுசரணையுடனான பேச்சுவார்த்தைகளையும் ஜே.வி.பி. எதிர்த்தது. அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2002ஆம் ஆண்டில் சமாதான முயற்சிகளை முன்னெடுத்தபோது விடுதலை புலிகளுடனான பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக ஜே வி.பி. பெரிய ஆர்ப்பாட்ட இயக்கங்களை ஏற்பாடு செய்தது.

சுனாமி உதவிக் கட்டமைப்பு  நடைமுறைக்கு வந்தபோது திருமதி குமாரதுங்க அரசாங்கம் அதைக் கைவிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஜே.வி.பி. 2005 ஜூன் 15ஆம் திகதியை காலக் கெடுவாகவும் விதித்தது. அதற்கு ஜனாதிபதி திருமதி குமாரதுங்க மறுத்தபோது 2005  ஜூன் 16 ஜே.வி.பி. அரசாங்கத்தில் இருந்து வெளியேறியது. அநுரகுமார திசாநாயக்க உட்பட நான்கு அமைச்சர்களும் தங்களது பதவிகளில் இருந்து விலகினர். " எமது பணிகளை பூர்த்திசெய்ய முடியாத நிலையில் ஆழ்ந்த கவலையுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து வெளியேறுவதை நாம் அறிவிக்கிறோம்" என்று செய்தியாளர்கள் மகாநாட்டில் ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க கூறினார்.

அடிப்படை உரிமைமீறல் மனு 

அதற்கு பிறகு ஜே.வி.பி.யின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட சுனாமி உதவிக் கட்டமைப்பு உடன்படிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை தாக்கல் செய்தனர்.  அந்த கட்டமைப்புக்கு எதிராக இடைக்காலத்தடை ஒன்று  விதிக்கப்பட வேண்டும் என்ற தங்களது  கோரிக்கைக்கு அநுரா குமார திசாநாயக்க உட்பட  ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர்கள் மனுவில் ஐந்து காரணங்களைக் குறிப்பிட்டிருந்தனர்.

மனுவை விசாரணை செய்த அன்றைய பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு சுனாமி உதவிக் கட்டமைப்பு உடன்படிக்கையின் முக்கியமான செயற்பாட்டுப் பிரிவுகளுக்கு எதிராக இடைக்காலத்தடை உத்தரவைப் பிறப்பித்தது.2005 நவம்பரில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததால் சுனாமி உதவிக் கட்டமைப்பு செயற்பட முடியாமல் போய்விட்டது.

உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத்தடை உத்தரவை வரவேற்ற ஜே.வி.பி.யினர்  கூட்டுக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதை தாங்களே தடுத்து  நிறுத்தியதாக கூறினர். ஜே.வி.பி.யின் அன்றைய பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்ச " பஸ்ஸுக்கு சக்கரங்கள் இல்லை" என்று கூறி அவலத்தில் மகிழ்ச்சி கண்டார்.

மகிந்தவுக்கு ஆதரவு

அதையடுத்து ஜே.வி.பி. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தது. ஆனால், மகிந்த ராஜபக்சவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்ட ஜே.வி.பி. 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் அவரை ஆதரித்தது. அவர் வெற்றி பெறுவதற்கு ஜே.வி.பி. பெரிதும் உதவியது. 19 வருடங்கள் கழித்து இப்போது ஜே.வி.பி. தானாகவே ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. 

குறுகிய ஒரு காலப்பகுதியில் (2004 - 05) அமைச்சரவை அமைச்சராக இருந்த அநுரகுமார திசாநாயக்க இப்போது இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி. ஜே.வி.பி.க்குள்ளும் பரந்தளவில் நாட்டிற்குள்ளும் அநுராவின் அரசியல் உயர்வை பற்றிய கதையை இந்த கட்டுரையின் மூன்றாவது மாகத்தில் பார்ப்போம்.

https://www.virakesari.lk/article/195845

  • கருத்துக்கள உறவுகள்
Posted

'தோழர் அநுர' பத்து வருடங்களுக்கு முன்னர் ஜே.வி.பி.யின் ஐந்தாவது தலைவராக வந்தபோது.....!

image

பாகம் 3

டி பி.எஸ். ஜெயராஜ் 

அது 1969ஆம் ஆண்டு. 31 வயதான தாய் தனது ஆறு மாத ஆண் குழந்தையின் ஜாதகத்தை எழுதுவிப்பதற்காக பிரபலமான ஒரு சோதிடரின் சேவையை நாடினார். முன்னைய வருடத்தில் குழந்தை பிறந்த நேரத்தில் இருந்த கிரக நகர்வுகளின் அடிப்படையில் சில கணிப்பீடுகளைச் செய்த சோதிடர் தாயாரை பெரு வியப்புடன் பார்த்து "உங்கள் மகனுக்கு அவனது விதியில் ஒரு இராஜயோகம் இருக்கிறது. அவன் ஆளப்பிறந்தவன். அவன் ஒரு நாள் இந்த நாட்டை ஆட்சி செய்வான்" என்று கூறினார்.  தாயாருக்கு மகிழ்ச்சிதான். ஆனால், ஆச்சரியம். அவர் குறைந்த வருமானத்தைக் கொண்ட ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 'எவ்வாறு எனது மகன் ஆட்சியாளராவான்?' அவருக்கு ஆச்சரியம்.

அந்த குழந்தை வளர்ந்து பையனாகி 12வது பிறந்த தினத்தைக் கொண்டாடியபோது தாயார் ஒரு புதிய பிரச்சினையை எதிர்நோக்கினார். அவரது மகன் பௌத்த பிக்குவாக வரவேண்டும் என அந்த கிராமத்தின் விகாராதிபதி விரும்பினார். அந்த பையனின் நல்லொழுக்கம், விவேகம் மற்றும் நடத்தையினால் அந்த விகாராதிபதி பெரிதும் கவரப்பட்டார். ஆனால் நீண்ட யோசனைக்கு பிறகு பெற்றோர் மறுத்துவிட்டார்கள். அந்த முடிவை எடுக்கும்போது தாயார் சோதிடர் கூறிய இராஜயோகத்தைப் பற்றியே முக்கியமாக நினைத்தார்.

55 வருடங்கள் கழித்து சோதிடர் கூறியது உண்மையாகியது. அந்த பையன் பெரிய ஆளாக வளர்ந்து இறுதியில் நாட்டின் பிரதம ஆட்சியாளராக வந்துவிட்டான். அது வேறு யாருமல்ல... 2024 செப்டெம்பர் 21ஆம் திகதி இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திசாநாயக்கவே. 

நாட்டின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அவர் தெரிவு செய்யப்பட்ட நாள் முதல் அநுராதபுரம் மாவட்டத்தின் தம்புத்தேகமவில் உள்ள திருத்தியமைக்கப்பட்ட அவரது எளிமையான வீட்டுக்கு பத்திரிகையாளர்கள், யூரியூபர்கள் உட்பட பெருவாரியான வெளியாட்கள் வருகை தந்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அந்த வீட்டில் தங்கியிருப்பதில்லை என்ற போதிலும், இப்போது  அவரின் தாயார் சீலாவதியும் மூத்த சகோதரி சிறியலதாவும் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களும் அதில்  வசிக்கிறார்கள். முன்கூட்டியே அறிவிக்காமல் வருகை தருவோரை மிகவும் நேச உணர்வுடன் விருந்தோம்புகிறார்கள். 86 வயதான தாயாரை ஊடகவியராளர்கள் அடிக்கடி பேட்டி காண்கிறார்கள். அவரும் தனது மகனின் இளமைக்காலத்தைப் பற்றி பேசுவதில் பெருமையடைகிறார். இந்த பேட்டிகளிலேயே தாயார் மகனின் இராஜயோகம் பற்றியும் அவனை பிக்குவாக்க விரும்பிய பௌத்த விகாராதிபதி பற்றியும் விபரங்களை கூறினார்.

இரு வாரங்களுக்கு முன்னர் வெளியான "அநுரகுமார திசாநாயக்க; இலங்கை வானில் இடதுசாரி நட்சத்திரம்" என்ற தலைப்பில் அமைந்த இந்த கட்டுரைத் தொடரின் முதல் பாகத்தில் நான் அநுரவின் இளமைக்காலத்தை பற்றி எழுதியிருந்தேன். அதில் நான் அவருக்கு வாசிப்பிலும் நீச்சலிலும் இருந்த பேரார்வத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். சீலாவதி அம்மையாரும் கூட தான் வழங்கிய பேட்டிகளில் அவற்றைப் பற்றி கூடுதல் விபரங்களை கூறினார். அநுர தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள 'நாராச்சியாவ' குளத்தில் தான் நீச்சல் பழகினார். நீந்துவதில் எப்போதும் அவருக்கு ஆர்வம். தனது மகன் தீவிரமான ஒரு வாசகன் என்றும் சாப்பிடும்போது கூட ஒரு புத்தகத்தையோ அல்லது பத்திரிகையையோ வாசித்துக்கொண்டிருப்பார் என்றும்  தாயார் கூறினார். வாசிப்பதற்கு அநுர விரும்பித் தெரிவுசெய்தது  வீட்டு வளவில் வளர்ந்திருந்த தேமா (அரலிய)  மரத்தையேயாகும். அந்த மரத்தின் ஒரு கிளையில் அமர்ந்திருந்து புத்தகங்களை அவர் வாசிப்பார். படிப்பதற்கு அவரை தான் ஒருபோதும் நிர்ப்பந்திக்க வேண்டியிருந்ததில்லை என்று தாயார் கூறுகிறார்.

ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சிக் காலகட்டத்தில் தாங்கள் எதிர்நோக்கிய தொல்லைகள் பற்றியும் அநுரவின் தாயார் பேசினார். அநுரவின் ஒன்றுவிட்ட சகோதரன் எவ்வாறு சித்திரவதைக்குள்ளாகி  கொலைசெய்யப்பட்டார் என்பதையும் நீண்டகாலமாக அநுர கைதாகாமல் எவ்வாறு தப்பி வாழ்ந்தார் என்பதையும் சீலாவதி விபரித்தார்.  தந்தையார் ரண்பண்டா திசாநாயக்க மரணமடைந்தபோது இறுதிச்சடங்குக்காக அநுர வீட்டுக்கு வருவார் என்று எதிர்பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் அருகாமையில் உள்ள பகுதிகளில் காத்திருந்தார்கள். அவ்வாறு தனக்கு ஒரு  வலை விரிக்கப்படும் என்பதை எதிர்பார்த்த அநுர அங்கு வரவில்லை. சொந்த தந்தையாரின் இறுதிச் சடங்குகளில் கூட அவரால் பங்கேற்க முடியாமல் போய்விட்டது என்று சீலாவதி கவலையுடன் கூறினார்.

அநுரகுமார திசாநாயக்கவை பற்றி இந்த கட்டுரையை நான் எழுதத் தொடங்கியபோது   இரு பாகங்களுடன் மாத்திரம்  நிறைவு செய்து கொள்வதற்கே  உத்தேசித்திருந்தேன். ஆனால், கட்டுரை  வாசகர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கட்டுரையின் வீச்செல்லையை விரிவுபடுத்தி எழுதுமாறு பல வேண்டுகோள்கள் வந்தன. அதனால் அநுர மீதான கவனக்குவிப்பு மேலும் தொடருகிறது.

இரு வாரங்களுக்கு முன்னர் வெளியான இந்த கட்டுரையின் முதலாவது பாகத்தில் நிகழ்வுகள் பல நிறைந்த அநுரவின் ஆரம்பகால வாழ்க்கையை ஓரளவு விபரங்களுடன் எழுதினேன். 

கடந்த வாரம் வெளியான இரண்டாம் பாகத்தில் ஜனதா விமுக்தி பெரமுனவுக்குள் (ஜே.வி.பி.) ஒரு அரசியல் தலைவராக அவரது சீரான வளர்ச்சி எவ்வாறு அமைந்தது என்பதை ஓரளவு விரிவாக  எழுதினேன். இந்த மூன்றாவது பாகத்தில் ஜே.வி.பி.யின் தலைவராக அவர் அடைந்த உயர்வு பற்றி விபரிக்கவிருக்கிறேன்.

சோமவன்ச அமரசிங்க

1fb1b734-9ea4-4dd2-a0b2-a503bb59ee91__1_

முன்னர் குறிப்பிடப்பட்டதை போன்று ஜே.வி.பி. 1965இல் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து 1989 வரை 23 வருடங்களாக வசீகரமான அதன் தாபகர் றோஹண விஜேவீரவினாலேயே தலைமைதாங்கப்பட்டு வந்தது. முதலாவது ஜே.வி.பி. தலைவர் விஜேவீர, இரண்டாவது தலைவர் சமான் பியசிறி பெர்னாண்டோ, மூன்றாவது தலைவர் லலித் விஜேரத்ன - இவர்கள் மூவரும் 1989 - 1990 காலப்பகுதியில் அரசினால் கொல்லப்பட்ட 14 ஜே.வி.பி. தலைவர்களில் அடங்குவர். உயிர் தப்பியிருந்த ஒரே சிரேஷ்ட தலைவர் சிறி ஐயா என்ற சோமவன்ச அமரசிங்க மாத்திரமே. அவர் 1990 ஜனவரியில் ஜே.வி.பி.யின் நான்காவது தலைவராக வந்தார்.

சோமவன்ச அமரசிங்கவின் தலைமைத்துவத்தின்  கீழ் ஜே.வி.பி.க்கு அதன் மீளெழுச்சிக்காக புதியதொரு கொள்கை தேவைப்பட்டது. இலங்கைப் படைகள் தமிழீழ விடுதலை புலிகளுடன் போரில் ஈடுபட்டிருந்தனர். இலங்கை தேசப்பற்று மற்றும் நாட்டுப் பிரிவினைக்கு எதிர்ப்பு என்ற போர்வையில் ஜே.வி.பி. சோமவன்சவின் தலைமையின் கீழ் சிங்களப் பேரினவாத போக்கு ஒன்றைக் கடைப்பிடித்தது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை ஆதரித்த பல்வேறு வழிகளில் போர் முயற்சிகளுக்கு முழுமையாக உறுதுணையாக இருந்தது. 

சோமவன்ச அமரசிங்கவின் கீழ் ஜே.வி.பி. எந்த வகையான சமாதான முன்முயற்சியையும் முற்றுழுழுதாக எதிர்க்கின்ற ஒரு போர்விரும்பி அமைப்பாக விளங்கியது. விடுதலைப்புலிகளுடனான சமாதான முயற்சிகள் தொடர்பில் ஜே.வி.பி. மிகவும் முறைப்பான ஒரு கடும் நிலைப்பாட்டை எடுத்தது. ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் சமாதான முயற்சிகளை  அது எதிர்த்தது. அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கீழான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 2022ஆம் ஆண்டில்  விடுதலைப்புலிகளுடன் சமாதான முயற்சி ஒன்றில் பிரவேசித்தபோது ஜே.வி.பி. அதை எதிர்த்தது. சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக அது பல ஆர்ப்பாட்டங்களையும் பொதுக் கூட்டங்களையும் நடத்தியது. நோர்வே வகித்த அனுசரணையாளர் பாத்திரத்தையும் அது கடுமையாக எதிர்த்தது. ஒஸ்லோ அதன் மத்தியஸ்த முயற்சிகளை  நிறுத்தவேண்டும் என்று ஜே.வி.பி. தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்தது.

இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையின் அடிப்படையிலான தீர்வொனறைக் காண்பது தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் காணப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கையை ஜே.வி.பி. கண்டனம் செய்தது.  ஒரு இடைக்கால ஏற்பாடாக உள்ளக சுயாட்சி அதிகார சபையை (Internal Self - Governing Authority) அமைப்பதற்கான யோசனையை விடுதலைப்புலிகள் முன்வைத்த போது ஜே.வி.பி. அதற்கு எதிராக சுவரொட்டி இயக்கம் ஒன்றை முன்னெடுத்தது.

2004ஆம் ஆண்டில் ரணில் விக்கிரமசிங்கவின்  அரசாங்கம் தேர்தலில் தோற்கடிக்கப்படுவதை உறுதிசெய்வதன் மூலமாக சமாதான முயற்சிகளை குழப்பியடிப்பதற்கு ஜே.வி.பி. உறுதிபூண்டது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் அணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது. விக்கிரமசிங்க தோற்கடிக்கப்பட்டார். அந்த தேர்தலில் ஜே.வி.பி.க்கு பாராளுமன்றத்தில் 39 ஆசனங்கள் கிடைத்தன. அநுர குமார திசாநாயக்க உட்பட ஜே.வி.பி.யின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவின் அரசாங்கத்தில் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். அநுர விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி, நீர்ப்பாசன அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

சுனாமி உதவிக் கட்டமைப்பு

ஆனால், சுனாமியினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் கரையோரப் பகுதிகளுக்கு வெளிநாட்டு நிதியைப் பகிர்ந்தளிப்பதற்காக மரபுக்கு மாறான கட்டமைப்பு ஒன்றை நிறுவுவதற்கான யோசனையை முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க  முன்வைத்தபோது ஜே.வி.பி.யின் அமைச்சர்கள் பதவி விலகியதுடன் அதன்  39 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறினர். அந்த உத்தேச கட்டமைப்பு சுனாமிக்கு பின்னரான செயற்பாட்டு முகாமைத்துவ கட்டமைப்பு [Post - Tsunami Operational Management Structure (P - TOMS)] என்று அழைக்கப்பட்டது. அது  அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான ஒரு கூட்டுப் பொறிமுறையாகும்.

அந்த சுனாமி உதவிக் கட்டமைப்பை ஜே.வி.பி. கடுமையாக எதிர்த்தது. அநுர உட்பட ஜே.வி.பி.யின் 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் அதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரணை செய்த அன்றைய பிரதம நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு சுனாமி உதவிக் கட்டமைப்புக்கான  உடன்படிக்கையின் முக்கியமான செயற்பாட்டு பிரிவுகளை கட்டுப்படுத்தி இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது.  அதையடுத்து அந்த கட்டமைப்பை முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இடைக்காலத் தடையுத்தரவை வரவேற்ற ஜே.வி.பி.  கூட்டுப் பொறிமுறை நடைமுறைப்படுத்தப்படுவதை வெற்றிகரமாக தடுத்துவிட்டதாக கூறியது. சுனாமி உதவிக் கட்டமைப்பு தொடர்பான ஜே.வி.பி.யின் கதையை கடந்த வாரம் வெளியான இந்த கட்டுரையான இரண்டாம் பாகத்தில் காலவரிசைப்படி விபரித்திருந்தேன்.

வடக்கு - கிழக்கு இணைப்பு 

ஜே.வி.பி. அதன் இந்த நடவடிக்கைகளை எல்லாம் பிரிவினைவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்ப்பது என்ற அடிப்படையில் நியாயப்படுத்திய அதேவேளை, இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம் செய்யப்பட்ட வடக்கு,  கிழக்கு மாகாணங்களின் தற்காலிக இணைப்பு மீதான விரோதத்தையும்  பெரியளவில் வெளிக்காட்டியது.

"வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இலங்கையின் தமிழ் பேசும் மக்களின்  வரலாற்று ரீதியான வாழ்விடங்களாக இருந்து வந்திருக்கின்றன. இந்த பிராந்தியத்தில் இதுவரை காலமும் அவர்கள் ஏனைய இனக்குழுக்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்" என்று சமாதான உடன்படிக்கையின் 1.4 பந்தி கூறுகிறது. இணைப்பை தொடரவேண்டுமானால் ஒரு வருடத்துக்கு பிறகு கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட முறையில் இரு மாகாணங்களும் தற்காலிகமாக இணைக்கப்பட்டன. போர் முடிவின்றித் தொடர்ந்த காரணத்தினால் சர்வஜன வாக்கெடுப்பை அரசாங்கங்கள் தொடர்ச்சியாக ஒத்திவைத்துவந்தன.

வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிராக ஜே.வி.பி. ஒரு கடும்போக்கை கடைப்பிடித்தது. ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் இணைப்புக்கு  வெளிப்படையாக எதிர்ப்பை காட்டியதற்கு புறம்பாக ஜே.வி.பி. எதிர்ப்பை தீவிரப்படுத்துவதற்காக வேறு அமைப்புக்களையும் உருவாக்கியது. பரந்தளவில் கருத்தரங்குகளும் பொதுக்கூட்டங்களும் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதுடன் இலட்சக்கணக்கான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

வடக்கு -  கிழக்கு இணைப்புக்கு எதிரான நீணடதொரு பிரசார இயக்கத்துக்கு பிறகு ஜே.வி.பி. 2006ஆம் ஆண்டில் நீதிமன்றத்தையும் நாடியது. வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைக்கப்பட்டு ஒரு தனியான தமிழ் பேசும் மாகாணம் உருவாக்கப்பட்டதை ஆட்சேபித்து ஜே.வி.பி. இலங்கை உயர்நீதிமன்றத்தில் மூன்று அடிப்படை உரிமைமீறல் மனுக்களை தாக்கல் செய்தது. 

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வசந்த பியதிஸ்ஸ, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜேசேகர, சம்மாந்துறையைச் சேர்ந்த ஒரு அரசாங்க சேவையாளரான ஏ.எஸ்.எம். புஹாரி ஆகியோரே மனுதாரர்கள்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை மக்களினால் தெரிவு செய்யப்படும் ஒரு சபையினால் நிருவகிக்கப்படும் ஒரு நிருவாக அலகாக்குவதற்காகவும் அதற்காக அந்த மாகாணங்களை இணைப்பதற்காகவும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆ்.ஜெயவர்தனவினால்  1988 செப்டெம்பர் 2ஆம் திகதியும் 8ஆம் திகதியும் செய்யப்பட்ட பிரகடனங்களை செல்லுபடியற்றவை என்று அறிவிக்குமாறு உயர்நீதிமன்றத்தை ஜே.டி.பி.யின் மனுதாரர்கள் கோரினர்.

பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, நீதியரசர்கள் நிஹால்  ஜயசிங்க, என்.கே. உடலாகம, நிமால் காமினி அமரதுங்க,  ரூபா பெர்னாண்டோ ஆகிய ஐவரைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு செல்லுபடியற்றது என்று தீர்ப்பளித்தது. 23 பக்கங்களைக் கொண்ட அந்த தீர்ப்பில் அவர்கள் 1987ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க மாகாண சபைகள் சட்டத்தின்  பிரிவு 31 (1) (பி )யில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகளில் எந்த ஒன்றுமே நிறைவேற்றப்படாத போதிலும், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் இரு மாகாணங்களையும் இணைத்தார் என்று கூறியிருந்தனர். மோதல் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என்பதும் சகல தீவிரவாத குழுக்களும் ஆயுதங்களைக் கையளிக்கவேண்டும் என்பதுமே அந்த இரு நிபந்தனைகளுமாகும். இணைப்பு என்பது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை விட மிகையானதாகும் என்று உயர்நீதிமன்றம் கூறியது.

எனவே, தமிழர்கள் சம்பந்தப்பட்ட சில விவகாரங்களில் ஜே.வி.பி. கடந்த காலத்தில் மிகுந்த கடும்போக்கை கடைப்பிடித்தது என்பதை காணக்கூடியதாக இருந்தது. தங்களது இந்த போக்கு சாதாரண தமிழர்களுக்கு எதிரானது அல்ல. விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்கும் எதிரானது என்று ஜே.வி.பி. நியாயம் கற்பித்தது.தேசத்தின் சுயாதிபத்தியத்தைப் பாதுகாத்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தாங்கள் கடமைப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூறினர். ஆனால், மெய்யாகவே  தமிழர்களுக்கு விரோதமானது என்று அழைக்கப்படக்கூடிய கொள்கை ஒன்றை ஜே.வி.பி. கடந்த காலத்தில் கடைப்பிடித்தது என்பது மறுதலிக்க முடியாத கேள்விக்கு இடமின்றிய  உண்மையாகும்.

இந்த விவகாரங்களில் எல்லாம் அநுர குமார திசாநாயக்க வகித்த பங்கு என்ன என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. ஜே.வி.பி.  அந்த நேரத்தில் தன்னை ஒரு மார்க்சிஸ்ட் என்று பிரகடனப்படுத்திக் கொண்ட அதேவேளை பெருமளவுக்கு சிங்கள கடும்போக்காளராகவும் இருந்த சோமவன்ச அமரசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் இருந்தது. இந்த விவகாரங்களில் அவருக்கு ஒரு இடதுசாரி என்பதை விடவும் கூடுதலான அளவுக்கு தீவிரமான சிங்கள தேசியவாதியாக இருந்த விமல் வீரவன்ச நன்றாக உதவினார். அந்த நாட்களில் இந்த விவகாரங்களில் அநுரவின் பெயர் பெரிதாக அடிபடவில்லை. உட்கட்சி விவாதங்களில் இந்த நடவடிக்கைகளை  அவர் எதிர்த்துப் பேசினாரா என்பது தெரியவில்லை. ஆனால்  சுனாமி உதவிக்கட்டமைப்புக்கு எதிரான வழக்கில் அவரும் ஒரு மனுதாரர் என்பது உண்மை. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பை எதிர்ப்பதிலும் அவர் கட்சியின் கொள்கையை பின்பற்றினார்.

ஜே.வி.பி.யின் கடந்த காலமும் நிகழ்காலமும்

ஜே.வி.பி.யின் இந்த சர்ச்சைக்குரிய கடந்த காலம் அதன் தலைமையிலான தற்போதைய தேசிய மக்கள் சக்தியிடமிருந்து கணிசமானளவுக்கு வேறுபடுகிறது. நாளடைவில் ஜே.வி.பி. தன்னை மாற்றியமைத்துக்கொண்டிருக்கக்கூடியது சாத்தியமே. 

தேசிய மக்கள் சக்தி என்பது ஜே.வி.பி.யின் மாற்றியமைத்து மெருகூட்டப்பட்ட ஒரு வடிவமே.  அநுர குமார திசாநாயக்க ஒரு கெட்டியான கோட்பாட்டுப் பிடிவாதமுடையவராக அன்றி நெகிழ்வுத்தன்மையுடன் நடைமுறைச் சாத்தியமான கொள்கைகளை கடைபிடிக்கும் ஒருவராக கருதப்படுகிறார். அவரின் போக்கின் பிரகாரம் கட்சியும் அதன் கொள்கைகளை மாற்றியமைத்திருக்கக்கூடியது சாத்தியமே. கடந்த காலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு ஜே.வி.பி.யை கண்டனம் செய்வது நியாயமற்றது.

தற்போது அநுர குமார திசாநாயக்க இலங்கை மக்களின் குறிப்பாக இளைய தலைமுறையினரின் அன்புக்குரியவராக விளங்குகிறார். ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மக்கள் மத்தியில் பெருமளவு செல்வாக்கைக் கொண்டதாக இருக்கிறது. இத்தகைய பின்புலத்தில் ஜே.வி.பி.யின் கடந்தகால நெறிகெட்ட அம்சங்கள் அலட்சியப்படுத்தப்பட வோ, கண்டும் காணமால் விடப்படவோ அல்லது பேசாமல் தவிர்க்கப்படவோ கூடியவை அல்ல. புதிய ஜே.வி.பி.யையும் அதன் தலைவர் அநுரவையும் ஏற்றுக்கொண்டு வரவேற்கின்ற அதேவேளை, அண்மைய கடந்த காலத்தை நாம் மறந்துவிடவும் கூடாது. 

வரலாற்றில் இருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படலாம். அதன் காரணத்தினால் தான் இந்த பத்திகளில் ஜே.வி.பி.யின் கடந்த காலத்துக்கு பெருமளவு இடம் ஒதுக்கப்பட்டது.

விமல் வீரவன்சவின் பிளவு

5166b037-b7db-4c29-a98e-82b8698ddd0d.jfi

சோமவன்ச அமரசிங்கவின் தலைமையின் கீழான ஜே.வி.பி. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் நேச அணியாக விளங்கிய அதேவேளை எதிரணியிலேயே தொடர்ந்தும் இருந்தது. ஆனால், ஜே.வி.பி.யில் ஒரு பிளவு ஏற்பட்டது. அதையடுத்து அந்த கட்சிக்கும் மகிந்த அரசாங்கத்துக்கும் இடையிலான உறவுகள் கசப்படையும் நிலை ஏற்பட்டது. ஜே.வி.பி.யின் பிரபலமான பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச 2008 மார்ச்சில் கட்சியின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டுக்கொண்டார். ஊழல் உட்பட பல்வேறு குற்றச் செயல்களில் அவர் ஈடுபட்டதாகக் கூறி ஜே.வி.பி.யின் நிறைவேற்றுக்குழு வீரவன்சவை இடைநிறுத்தியது. தனது விசுவாசிகள் சிலருடன் ஜே.வி.பி.யில் இருந்து வெளியேறிய வீரவன்ச  2006 மே 14ஆம் திகதி தேசிய சுதந்திர முன்னணி என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். அந்த வருடம் டிசம்பரில் புதிய கட்சி அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டதை அடுத்து வீரவன்ச ஒரு அமைச்சரவை அமைச்சரானா்.

பிளவுக்கு  காரணமாக இருந்தவர்கள் என்று மகிந்தவையும் அவரின் சகோதரர் பசிலையும் சந்தேகித்த ஜே.வி.பி. அவர்கள் மீது கடும் ஆத்திரமடைந்தது. " தற்போதைய அரசியல் சூழ்நிலையில் புதிய அரசியல் கட்சிக்கான எந்த ஒரு தேவையும் இல்லை" என்று அநுர குமார திசாநாயக்க கூறியதாக ஊடகங்கள் அந்த நேரத்தில் செய்தி வெளியிட்டன.

பொன்சேகாவுக்கு ஆதரவு

விடுதலைப் புலிகளுடனான போர் 2009 மே நடுப்பகுதியில் முடிவுக்கு வந்ததற்கு பிறகு இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கும் ஆளும் ராஜபக்ஷக்களுக்கும் இடையில் வேறுபாடுகள் தோன்றத் தொடங்கின. இறுதியில் பொன்சேகா 2010 ஜனாதிபதி தேர்தலில் எதிரணியின் பொதுவேட்பாளராக மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துப் போட்டியிட்டார். ராஜபக்ஷவுக்கு எதிராக பொன்சேகாவை ஆதரித்து ஜே.வி.பி. தீவிரமாக பிரசாரம் செய்தது. ஆனால், பொன்சேகா தோல்வியடைந்தார்.

2010 பாராளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி. சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய  கூட்டணியின் அங்கமாக போட்டியிட்டது.  அந்த கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் ஏழு ஆசனங்கள் கிடைத்தன. ஜே.வி.பி. நான்கு ஆசனங்களை பெற்றது.  அநுர தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 2004 பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அங்கமாக 39 ஆசனங்களைக் கைப்பற்றிய ஜே.வி.பி. 2010ஆம் ஆண்டில் நான்கு ஆசனங்களுக்கு வீழ்ச்சி கண்டது. ஒரு விசித்திரமான திருப்பமாக, வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அந்த தேர்தலில் ஜே.வி.பி.யை விடவும் கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றியது.

குமார் குணரத்தினம் 

997baa90-027f-4a3d-9cd2-eb0c8233ec38.jfi

2012ஆம் ஆண்டில் ஜே.வி.பி.யில் இன்னொரு பிளவு ஏற்பட்டது. சோமவன்ச அமரசிங்கவின் தலைமைத்துவம் பாணி குறித்து ஜே.வி.பி. செயற்பாட்டாளர்களில் ஒரு குழுவினர் மத்தியில் பெருமளவு வெறுப்புணர்வு காணப்பட்டது. ஜே.வி.பி. அதன் புரட்சிகர குணாம்சத்தை இழந்து பாரம்பரியமான பூர்ஷுவா (முதலாளித்துவ)  கட்சி ஒன்றின் குணாதிசயங்களைப் பெறத் தொடங்குவதாக அவர்கள் உணர்ந்தார்கள். அந்த அதிருப்தியாளர்கள் குழுவுக்கு நொயல் முதலிகே என்ற பெயரில் அவுஸ்திரேலியாவில் இருந்த குமார் என்ற  பிரேம்குமார் குணரத்தினம் தலைமை தாங்கினார்.  

இந்த அரசியல் முரண்பாடுகள் ஜே.வி.பி. தலைவர் சோமவன்சவுக்கும் பிரேம்குமாருக்கும் இடையில் கடுமையான மோதல்களுக்கு வழிவகுத்தது. இந்த உட்கட்சிச் சண்டையில் அநுர குமார சோமவன்சவை ஆதரித்தார். தீவிரவாதப்  போக்குடையவர்கள் கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சி ஒன்றை அமைத்தார்கள்.

புதிய முன்னரங்க சோசலிஸ்ட் கட்சியை (Frontline Socialist Party)  ஆரம்பித்து வைப்பதற்காக நொயல் முதலிகே என்ற குணரத்தினம் அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை  திரும்பினார். அரசாங்கத்தின் ஏஜண்டுகளினால் கடத்தப்பட்ட அவர் "காணாமல்" போனார். ஆனால் ஜே.வி.பி.க்குள் குமார் குணரத்தினம் என்ற பெயர் கொண்ட ஒரு நபர் கிடையாது என்று அநுர குமார கூறினார். அவ்வாறு கூறியது அவருக்கு என்றென்றைக்குமே அவப்பெயர். அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் முயற்சியின் விளைவாக  இறுதியில் குமார் விடுதலை செய்யப்பட்டார்.  முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி 2008  ஏப்ரலில் தொடங்கப்பட்டது. ஜே.வி.பி.யின் பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர் அணிகளைச் சேர்ந்த கணிசமான எண்ணிக்கையினர் வெளியேறி புதிய கட்சியில் இணைந்தனர்.  பெருமளவு உறுப்பினர்கள் முன்னரங்க சோசலிஸ்ட் கட்சியில் சேர்ந்ததால் சிறிது காலம் ஜே.வி.பி.யின் ஊடகப்பிரிவு மூடப்பட்டிருந்தது.

புத்தம் புதிய தலைவர்

வீரவன்ச தலைமையிலான பிளவு பல சிங்கள தேசியவாதிகளையும் குணரத்தினத்தின் தலைமையிலான பிளவு பல புரட்சிகர சோசலிஸ்டுகளையும் ஜே.வி.பி.யிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டன. ஜே.வி.பி.யில் எஞ்சிவிடப்பட்டவர்கள் சிங்கள தேசியவாதத்துக்கும  புரட்சிகர சோசலிசத்துக்கும் இடையிலான "மிதவாதிகளாகவே" இருந்தார்கள். ஜே.வி.பி. அதன் ஊக்கத்தையும் உயிர்த்துடிப்பையும் இழக்கத் தொடங்கி அதன் முன்னைய வடிவத்தின் ஒரு கேலிச்சித்திரமாக மாறிக்கொண்டுவந்தது. ஒரு அரசியல் சக்தியாக பிழைத்திருக்க வேண்டும் என்றால் புதிய தலைவர் ஒருவரின் கீழ் ஜே.வி.பி.க்கு புதியதொரு செல்நெறி தேவைப்படுகிறது என்பது  பெருமளவுக்கு தெளிவாகத் தெரியத் தொடங்கியது.

தான் பதவியில் இருந்து இறங்கவேண்டிய தேவையை புரிந்துகொண்ட மூத்த தலைவர் சோமவன்ச அமரசிங்க விரைலில் ஓய்வுபெறப்போவதாக சூசகமாக அறிவிக்கத் தொடங்கினார். அவருக்கு பிறகு தலைவர் யார் என்பதே கேள்வி. கே.டி.லால்காந்த, ரில்வின் சில்வா, விஜித ஹேரத், சுனில் ஹந்துனெத்தி,  பிமால் இரத்நாயக்க, அநுர குமார திசாநாயக்க என்று அடுத்து தலைவராக வரக்கூடிய பலர் இருந்தார்கள். இவர்களில் பொதுச் செயலாளரான ரில்வின் சில்வாவே புதியதலைவராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஜே.வி.பி.யின் 17வது தேசிய மகாநாடு 2014 பெப்ரவரி 2ஆம் திகதி நடைபெற்றது. தலைவர் பதவியில் இருந்து இறங்கிய சோமவன்ச அமரசிங்க தன்னை பதிலீடு செய்வதற்கு அநுர குமார திசாநாயக்கவை பிரேரித்தார். அது ஏகமனதாக மகாநாட்டில் அங்கீகரிக்கப்பட்டது. அநுர குமாரவின் ஆற்றல்களை நன்றாக புரிந்துகொண்ட சோமவன்ச தனக்கு பிறகு தலைவராக்குவதற்காக அவரை வளர்த்துவந்தார்.

ஜே.வி.பி.யின் வரலாற்று பயணம்

 பத்து வருடங்களுக்கு முன்னர் 2014ஆம் ஆண்டில் அநுர குமார திசாநாயக்க ஜே.வி.பி.யின் ஐந்தாவது தலைவராக வந்தார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் ஜே.வி.பி. முன்னெடுத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார  தெரிவாகுவதற்கு வழிவகுத்தது. இது ஏன், எவ்வாறு நடந்தது என்பதை இந்த கட்டுரையின் நான்காவதும் இறுதியானதுமான பாகத்தில் பார்ப்போம்.

https://www.virakesari.lk/article/196240

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நட்சத்திரம் தொடர்ந்து பிரகாசிக்க எம்பெருமான் புத்தன் அருள் கிடைக்கட்டும்...

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அநுரகுமார திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியின் உருவாக்கமும்

image

பாகம் 4

டி.பி.எஸ். ஜெயராஜ் 

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்வை பற்றிய எனது கட்டுரைத் தொடரின் நான்காவது பாகம் இதுவாகும். 

முதலாவது பாகத்தில் நிகழ்வுகள் நிறைந்த அவரது ஆரம்ப வாழ்க்கையையும் இரண்டாவது பாகத்தில் ஜனதா விமுக்தி பெரமுன ( ஜே வி.பி.) வுக்குள் அவரின் படிப்படியான சீரான வளர்ச்சி பற்றியும் மூன்றாவது பாகத்தில்  ஜே.வி.பி.யின் தலைமைத்துவத்துக்கு அவரின் உயர்வு பற்றியும் எழுதியிருந்தேன். 

இந்த நான்காவது பாகத்தில் திசாநாயக்கவின் தலைமையில்  ஜே.வி.பி. எவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலையைத்துவ கட்சியாக மாற்றம் பெற்றது என்பதை விளக்குகிறேன்.

அநுரா குமார திசாநாயக்கவின் வாழ்வில் 2014 பெப்ரவரி 2 ஆம் திகதி ஒரு முக்கியமான தினமாகும். அந்த தினத்தில் தான் ஜே.வி.பி.யின் 17 வது தேசிய மகாநாடு நடைபெற்றது. 

கட்சியின் தலைமைத்துவத்தில் ஏற்பட்ட மாற்றமே அந்த மகாநாட்டின் சிறப்பாக அமைந்தது. 24 வருடங்களாக ஜே.வி.பி.யின் தலைவராக இருந்து வந்த சோமவன்ச அமரசிங்க பதவியில் இருந்து இறங்கினார். 

அநுரா அல்லது ஏ.கே.டி. என்று பிரபலமாக அறியப்பட்ட அநுரா குமார திசாநாயக்க ஜே.வி.பி.யின் புதிய தலைவராக வந்தார்.

சோமவன்ச தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெறப் போகின்றார் என்பது மகாநாட்டுக்கு முன்னதாகவே பொதுவாக தெரிய வந்தது. 

எதிர்காலத் தலைவர் யார் என்பதே தெரியாமல் இருந்தது. புதிய தலைவராக வரக்கூடியவர்கள் என்று கே.டி.லால்காந்த, ரில்வின் சில்வா, விஜித ஹேரத், சுனில் ஹந்துன்னெத்தி, பிமால் இரத்நாயக்க மற்றும் அநுரா குமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்கள் பரவலாக அடிபட்டன.

இவர்களில் ரில்வின் சில்வாவே பெரும்பாலும் புதிய தலைவராக தெரிவாவார் என்று நம்பப்பட்டது.

ஜே.வி.பி.யின் தலைவர் என்ற வகையில் தனது ஓய்வை அறிவித்த சோமவன்ச அமரசிங்க  புதிய தலைவராக அநுரா குமார திசாநாயக்கவின் பெயரை முன்மொழிந்தார். ரில்வின் சில்வாவே அவரை வழிமொழிந்தார். 

பிரேரணை ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. ரில்வின் சில்வாவும் விஜித ஹேரத்தும் முறையே பொதுச் செயலாளராகவும் பிரசாரச் செயலாளராகவும் மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர். 

தேசிய அயைப்பாளராக பிமால் இரத்நாயக்க தெரிவான அதேவேளை ஓய்வை அறிவித்த தலைவர் சோமவன்ச அமரசிங்க சர்வதேச விவகார செயலாளராக நியமிக்கப்பட்டார்.

தலைமைத்துவ மாற்றம் முரண்பாடு எதுவும் இல்லாததாக சுமுகமாக இடம்பெற்றதே முக்கியமாக குறிப்பிடத்தக்க அம்சமாக இருந்தது. இலங்கையில் பெரும்பாலான கட்சிகளில் நிலவும் உட்பூசலையும் குழுவாதத்தையும் அங்கு காணமுடியவில்லை. 

பல வருடங்களாக ஜே.வி.பி.யின் பெரும்பாலான உறுப்பினர்களின் நேசத்துக்குரியவராக அநுரா விளங்கி வந்ததால் எல்லோருக்கும் ஏற்புடையவராக இருந்தார். 

2008 ஆம் ஆண்டில் விமல் வீரவன்ச குழுவினரதும் 2012 ஆம் ஆண்டில் குமார் குணரத்தினம் குழுவினரதும் பிளவுகளை அடுத்து கட்சி ஓரளவுக்கு பலவீனப்பட்டு உறுப்பினர்கள் மத்தியில் உறுதி குன்றிப் போயிருந்தது. புதிய ஒரு தலைவரின் கீழ் புதிய ஒரு செல்நெறி ஜே.வி.பி.க்கு அவசியமாக தேவைப்பட்டது. அநுரா குமார திசாநாயக்க அதற்கு மிகவும் பொருத்தமானவராக தெரிந்தார்.

இரு முக்கியமான தேர்தல்கள்

தலைமைத்துவப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் அநுரா குமார திசாநாயக்க 2015 ஆம் ஆண்டில் இரு முக்கியமான தேர்தல்களுக்கு முகங்கொடுத்தார். 

ஒன்று 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தல். மற்றையது 2015 ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தல். அன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் முட்டை அப்ப இரவு விருந்தில் பங்கேற்ற பிறகு அங்கிருந்து வெளியேறிய அன்றைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திராபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடாடார்.

2010 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா போட்டியிட்டார். அவர் தோல்லியடைந்தார். மற்றைய எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து ஜே.வி.பி. பொன்சேகாவுக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்தது. 

2010 பாராளுமன்ற தேர்தலில் ஜே வி.பி. சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் அங்கமாக போட்டியிட்டது. 

அந்த கூட்டணிக்கு கிடைத்த ஏழு ஆசனங்களில் நான்கு ஆசனங்களை ஜே.வி.பி. பெற்றுக் கொண்டது. அநுரா தேசிய பட்டியல் மூலமாகவே பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

2015 ஆண்டில் ஜே.வி.பி.யின் புதிய தலைவர் அநுரா ஜனாதிபதி தேர்தலில் வேறுபட்ட ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடித்தார். 2010 ஆண்டில் செய்தததைப் போன்று கூட்டு எதிரணியின் தேர்தல் பிரசாரங்களில் ஜே வி.பி. இணைந்து கொள்ளவில்லை. 

அதேவேளை, மூன்றாவது பதவிக் காலத்துக்கு ஜனாதிபதியாக வருவதற்கான மகிந்த ராஜபக்சவின் முயற்சியை ஜே வி.பி. மிகவும் உறுதியாக எதிர்த்தது. எதிக்கட்சிகளின் பொது வேட்பாளரான சிறிசேனவை நேரடியாக ஆதரிக்காத அதேவேளை ராஜபக்சவுக்கு எதிராக தீவிரமான ஒரு  பிரசாரத்தை தனியாக முன்னெடுத்ததன் மூலமாக ஜே.வி.பி.  முறைமுகமான ஆதரவை வழங்கியது. 

ஜே.வி.பி. நடத்திய கூட்டங்களில் பேச்சாளர்கள் ராஜபக்சவை மிகவும் கடுமையாக தாக்கினார்கள். சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறு மக்களை ஜே.வி.பி. கேட்கவில்லை.ஆனால் ராஜபக்சவுக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டது. அந்த ஜனாதிபதி தேர்தலில் சிறிசேன வெற்றி பெற்றார்.

2015 ஆகஸ்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றபோது ஜே.வி.பி. 2010 ஆண்டில் கடைப்பிடித்த நிலைப்பாட்டில் இருந்து மீண்டும் விலகியது. எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஒன்றில் இணைந்து கொள்வதற்கு பதிலாக தனியாகப் போட்டியிட்டது. 

2000 ஆண்டிலும் 2001 ஆம் ஆண்டிலும் பாராளுமன்ற தேர்தல்களில் தனியாகப் போட்டியிட்ட கடந்த காலத்துக்கு ஜே.வி.பி. திரும்பியது. 2004 ஆம் ஆண்டிலும் 2010 ஆண்டிலும் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களிலேயே கூட்டணி ஒன்றின் அங்கமாக ஜே வி.பி. போட்டியிட்டது.

2015 பாராளுமன்ற தேர்தலே அநுராவின் தலைமையின் கீழ் ஜே.வி.பி. முகங்கொடுத்த முதல் பாராளுமன்ற தேர்தலாகும். சகல தேர்தல் மாவட்டங்களிலும் போட்டியிட்ட ஜே.வி.பி.543, 944 வாக்குகளை ( 4.8 சதவீதம் ) வாக்குகளைப் பெற்றது. 

அதற்கு கிடைத்த ஆறு ஆசனங்களில் நான்கு ஆசனங்கள் மக்கள் தெரிவுசெய்தவை,  மற்றைய இரண்டும் தேசியப்பட்டியல் ஆசனங்கள். கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அநுரா 65,966 விருப்பு வாக்குகளைப் பெற்று  வெற்றியடைந்தார்.

ஐக்கிய அரசாங்கம் 

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஜே.வி.பி.யும் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருந்தது. நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் என்ற வகையில்  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாப்பில் இருந்த ஏற்பாடு ஒன்று காரணமாக மைத்திரிபால சிறிசேன  அந்த கட்சியின் தலைவராக வரக்கூடியதாக இருந்தது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி சிறிசேன தலைமையிலான சுதந்திர கட்சியுடன் உடன்படிக்கை ஒன்றுக்கு வந்து விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்ட " ஐக்கிய அரசாங்கம் " (Unity Government ) ஒன்று அமைக்கப்பட்டது. சுதந்திர கட்சி பெயரளவில் அரசாங்கத்தில் பங்காளியாக இருந்தாலும், மகிந்த ராஜபக்சவுக்கு விசுவாசமான ஐம்பதுக்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள்  ஒரு  எதிர்க்கட்சியாகவே இயங்கினார்கள். 

ஆனால் அவர்களை அன்றைய சபாநாயகர் கரு ஜெயசூரிய உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கவில்லை.

அதனால் ஒரு விசித்திரமான திருப்பமாக தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஜே.வி.பி.யுமே  பிரதான எதிர்க்கட்சிகளாக கருதப்பட்டன. 

கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன்  எதிர்க்கட்சி தலைவராக வந்தார். ஜே.வி.பி.யின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக நியமிக்கப்பட்டார். 

இந்த வழமைக்கு மாறான நிலைவரம் ரணிலை பதவி நீக்கிவிட்டு அவரின் இடத்துக்கு பிரதமராக மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதி சிறிசேன நியமித்த 2018 அக்டோபர் 26 பாராளுமன்ற சதிமுயற்சிக்கு பிறகு மாறியது. 

ஆனால் இந்த நாடகபாணியிலான அரசியல் நிகழ்வு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து முடிவுக்கு வந்தது. அதற்கு பிறகு சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவியும் திசாநாயக்கவின் எதிர்க்கட்சி பிரதம கொறடா பதவியும் இல்லாமல் போனது. 

சிறிசேன விக்கிரமசிக்க நிருவாகத்தின் காலத்தில் இரு முக்கிய நிகழ்வுகள் இடம்பெற்றன. ஒன்று, புதிய அரசியலமைப்பை வரைவதற்காக  அரசியலமைப்பு சபை ஒன்று  ( Constitutional Assembly ) அமைக்கப்பட்டது. 

அதன் நடவடிக்கைகளில் ஜே.வி.பி. பங்கேற்று இடைக்கால அறிக்கை ஒன்றை தயாரிப்பதில் முழுமையாக ஒத்துழைத்தது. 

இந்த செயற்பாடுகளின்போது அநுரா தலைமையின் கீழ் ஜே.வி.பி. அதிகாரப்பரவலாக்கம் மற்றும் மாகாணசபைகள் தொடர்பிலான அதன் முன்னைய நிலைப்பாட்டை தளர்த்திக்கொண்டது என்பது கவனிக்கத்தக்கது. 

இப்போது ஜே.வி.பி. அதன் ஆட்சியில் அந்த முன்னைய அரசியலமைப்பு வரைவுச்  செயன்முறையை தொடர்ந்து முன்னெடுப்பதாக கூறியிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்க ஒரு விடயமாகும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தோற்றமும் 2018 உள்ளூராட்சி தேர்தல்களில் அதன் மகத்தான வெற்றியுமே இரண்டாவது முக்கிய நிகழ்வாகும். 

மகிந்தவும் அவரது விசுவாசிகளும் சுதந்திர கட்சியிலேயே தொடர்ந்து இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் சூழ்நிலையில் பசில் ராஜபக்ச தாமரை மொட்டு சின்னத்துடன் புதிய கட்சியை ( 2016 டிசம்பர் ) அமைத்தார். 

2018 உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட பொதுஜன பெரமுன 4,941, 952 (44.65 சதவீதம் ) வாக்குகளை பெற்றது. 

231 உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றிய பொதுஜன பெரமுனவில் இருந்து 3369 உறுப்பினர்கள்  தெரிவாகினர். 

ஐக்கிய தேசிய கட்சியையும் சுதந்திர கட்சியையும் புதிய கட்சி தோற்கடித்ததை அடுத்து நாட்டின் அரசியல் அதிகாரச்  சமநிலை மாறிவிட்டது என்பது  வெளிப்படையானது.

ஜே.வி.பி.யை பொறுத்தவரை, அந்த உள்ளூராட்சி தேர்தல்களில் குறிப்பிடத்தக்க அளவுக்கு  செயற்பாட்டை வெளிக்காட்ட முடியவில்லை. 693, 875 (6.27 சதவீதம் ) வாக்குகளை பெற்ற ஜே.வி.பி. யின் 431 உறுப்பினர்கள் பல்வேறு உள்ளூராட்சி சபைகளுக்கும் தெரிவானார்கள். ஒரு உள்ளூராட்சி சபையை தானும் அதனால் கைப்பற்ற முடியவில்லை.

ஜே.வி.பி.க்குள் சுயபரிசோதனை 

2015 பாராளுமன்ற தேர்தலிலும் 2018 உள்ளூராட்சி தேர்தல்களிலும் ஜே.வி.பி.யின் செயற்பாடுகள் ஒப்பீட்டளவில் மிகவும் பலவீனமானதாக இருந்ததால் கட்சிக்குள் ஒரு சுயபரிசோதனை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.

ஜே.வி.பி.யின் கூட்டங்களிலும் பேரணிகளிலும் மக்கள் பெருமளவில் கலந்துகொண்டார்கள். மக்கள் கூட்டம் மிகுந்த ஆதரவானதாகவும் காணப்பட்டது. 

என்றாலும் வாக்களிப்பு நேரத்தில் ஜே.வி.பி. மூன்றாவது இடத்துக்கே வந்தது. இறுதியில் அது ஒரு விளிம்புநிலைக் கட்சியாகி  இலங்கை அரசியலில் மூன்றாவது சக்தி என்று ஊடகங்களினால்  வர்ணிக்கப்படுவதனால்  ஆறுதலடையவேண்டியதைப் போன்று இருந்தது.

2015 , 2018 தேர்தல்களில் பலவீனமான செயன்பாட்டையடுத்து ஜே.வி.பி.யும் அதன் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவும் பெருமளவில் சுயபரிசோதனையில் ஈடுபட்டனர். 

ஜே.வி.பி. தலைவர்கள் குறிப்பாக திசாநாயக்க ஏனைய கட்சிகளைச் சேர்ந்த குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் புலம்பெயர் சமூகத்தில் உள்ள ஆதரவாளர்களுடன் கட்சியின் எதிர்காலம் குறித்து ஆராய்ந்தனர்.

முதலில் 1971 ஆம் ஆண்டிலும் பிறகு 1988 - 90 காலப்பகுதியிலும் முன்னெடுத்த ஆயுதக்கிளர்ச்சியின் பயங்கரமான அனுபவங்களுக்கு பிறகு புரட்சிகர வன்முறையில் நம்பிக்கை கொண்டதாகவோ அல்லது அந்த பாதையைப் பின்பற்றுவதில் ஆர்வம் கொண்டதாகவோ ஜே.வி.பி. இப்போது இல்லை. 

அது துப்பாக்கி குண்டை கைவிட்டு வாக்குச்சீட்டைக் கையில் எடுத்தது. சட்டபூர்வமான ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக அரசியல் அதிகாரத்தைப் பெறுவதையே ஜே.வி.பி. விரும்பியது. 

வாக்குகள் மூலமான வெற்றியிலேயே அது நாட்டம் காட்டியது. ஆனால், இலங்கை மக்கள் அந்த கட்சிக்கு பெருமளவில் திரண்டு வாக்களிக்கப் போவதில்லை. 

இரு பிரதான அரசியல் கட்சிகளுக்கும் அடுத்ததாக எப்போதுமே ஒரு மூன்றாவது இடத்தில் இருந்து கொண்டு மூன்றாவது அரசியல் சக்தி என்று அடையாளப்படுத்தப்படுவதே ஜே.வி.பி.யின் விதியாகிப் போனதா? இந்த நிலைவரத்தை எவ்வாறு மாற்றியமைக்க முடியும்? 

முற்போக்கு கட்சியொன்றின் தலைமையிலான கட்டணியில் ஜே.வி.பி. ஒரு அங்கமாக வேண்டும் என்று பலரும் யோசனை கூறினர். 

இடதுசாரிப் போக்குடைய கட்சிகளை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணி ஒன்றை ஜே.வி.பி. அமைக்க வேண்டும் என்று வேறு சிலர் யோசனை கூறினார். ஆனால், அந்த யோசனைகளை ஜே.வி.பி.யில் உள்ள பலர் விரும்பவில்லை. 

அவர்களில் அநுரா குமார திசாநாயக்க முக்கியமானவர். ஜே.வி.பி.  மற்றைய கட்சிகளுடன் கூட்டணியையோ அல்லது ஐக்கிய முன்னணியையோ அவர் விரும்பவில்லை. ஜே.வி.பி. பிரதான பாத்திரத்தை வகிக்கவேண்டுமே தவிர் கீழ்நிலைப்பட்ட பாத்திரத்தை வகிப்பதை திசாநாயக்க விரும்பவில்லை.

வெளிச்சக்திகளுடனான நீண்ட கலந்தாலோசனைகள் மற்றும் உட்கட்சி பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு பரந்தளவிலான ஒரு  கூட்டணியை   அல்லது முன்னணியை அமைப்பது என்று ஜே.வி.பி. தீர்மானித்தது. 

அத்தகைய கூட்டணியிலோ, முன் ணியிலோ ஜே.வி.பி. தனிமேம்பாடுடையதாகவும் மைய அதிகாரத்தைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடு. 

புதிய கட்டமைப்பில் சமத்துவமான பங்காளிகள் மத்தியில் முதலாவதாக தாங்கள் இருக்கவேண்டும் என்பதே அவர்களின் வெளிப்படையான விரும்பம். ஜே.வி.பி. அதன் அரசியல் கோட்பாட்டுக்கு விசுவாசமானதாக இருக்கும் அதேவேளை மையக் கொள்கையிலும் உறுதியானதாக இருக்கும். புதிய மொந்தையில் பழைய கள்ளு என்பதே அதன் அர்த்தம்.

ஜாதிக ஜன பலவேகய

அவ்வாறாக ஜாதிக ஜன பலவேகய ( தேசிய மக்கள் சக்தி ) பிறந்தது. 2019 ஜூலை 19 ஆம் திகதி அரசியல் செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கவாதிகள், கலைஞர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் கல்விமான்கள் என்று நூற்றுக்கணக்கானவர்கள் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் கூடினார்கள். அநுரா குமார திசாநாயக்க பிரேரணையை முன்மொழிந்தார். 

அதை ரில்வின் சில்வா வழிமொழிந்ததை தொடர்ந்து தேசிய மக்கள்   முறைப்படி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

அநுரா குமார திசாநாயக்கவே தேசிய மக்கள் சக்தியின் தலைவராகவும் தெரிவானார். அதன் பொதுச் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க. கலாநாதி ஹரிணி அமரசூரியவும் லால் விஜேநாயக்கவும் பிரதிச் செயலாளர்கள். பொருளாளர் எறங்க குணசேகர.

"அரசியல் கட்சிகள், இளைஞர் அமைப்புகள், மகளிர் குழுக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உட்பட பல்வகைப்பட்ட 21 குழுக்களை உள்ளடக்கிய செயலூக்கமிக்க ஒரு அரசியல் இயக்கமே தேசிய மக்கள் சக்தியாகும். 

2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய மக்கள் சக்தி முற்போக்கான ஒரு இலங்கையை உருவாக்கும் பொதுவான  நோக்கு ஒன்றைக் கொண்டது. 

"ஊழலற்ற, சேவை நோக்கம்கொண்ட, பொறுப்புக்கூறும் கடப்பாடுடைய  ஒளிவுமறைவற்ற அரசியல் கலாசாரத்தை வளர்ப்பதையும் நேர்மையான செல்வவளப் பகிர்வுக்கான பொருளாதார ஜனநாயகத்தை மேம்படுத்துவதையும் சகல சமூகங்களையும் அரவணைக்கும் ஒரு ஜனநாயக இலங்கை அடையாளத்துக்காக குரல் கொடுப்பதையும் தழுவியதே எமது மையக் குறிக்கோள்கள். 

"எமது வழிகாட்டில் குழு தொடக்கம் மாவட்ட நிறைவேற்றுக் குழுக்கள் வரை எமது அமைப்புமுறைக் கட்டமைப்பு சகல மட்டங்களிலும் மக்கள் குரல்களை வலுவூட்டி தேசத்தில் நேர்மறையான மாற்றத்துக்கான ஒரு சக்தியாக தேசிய மக்கள் சக்தியை கட்டிவளர்க்கும்" என்று தேசிய மக்கள் சக்தியைப் பற்றி அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் விபரிக்கப்பட்டிருக்கிறது.

தேசிய மக்கள் சக்தியின் தீர்மானங்களை எடுக்கும் பிரதம அமைப்பு தேசிய நிறைவேற்றுக்குழுவேயாகும். ஐம்பதுக்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்ட  அந்த தேசிய நிறைவேற்றுக்குழுவின் தலைவரும் அநுரா குமார திசாநாயக்கவே.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் ஞானஸ்நானம்

ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் ஞானஸ்நானத்தை  2019 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக் கொண்டது. முதல் தடவையாக அநுரா குமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். 

தேசிய மக்கள் சக்தியின் சின்னம் திசைகாட்டி கருவி. அதன் வேட்பாளருக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் ஐக்கிய இடதுசாரி முனானணியும் ஆதரித்தன. 

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் அசல் ஜே.வி.பி. கூட்டங்களைப் போன்றே இருந்தன. அநுராவை பார்க்கவும் அவரின் பேச்சைக் கேட்கவும் மக்கள் பெருமளவில் கூடினார்கள். என்றாலும் தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தையே தந்தன. வெறுமனே 418, 563 வாக்குகளை ( 3.15 சதவீதம் ) பெற்று அநுரா மூன்றாவதாக வந்தார்.

பத்து மாதங்கள் கழித்து 2020 பாராளுமன்ற தேர்தல் வந்தது. தேசிய மக்கள் சக்தி சகல மாவட்டங்களிலும் போட்டியிட்டது. அந்த தேர்தல் முடிவுகளும் அதற்கு பெரும் பாதிப்பாகப் போய்விட்டது. 

திசைகாட்டியினால் 445, 958 வாக்குகளை ( 3.84 சதவீதம்) வாக்குகளையே பெறக்கூடியதாக இருந்தது. இது 2015 பாராளுமன்ற தேர்தலில் ஜே.வி.பி. பெற்ற 543, 944 வாக்குகளையும் ( 4.84 சதவீதம் ) விட குறைவானதாகும்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அரைவாசியானது. 2015 ஆம் ஆண்டில் ஜே.வி.பி.க்கு ஆறு ஆசனங்கள் கிடைத்தன. அதில் நான்கு ஆசனங்கள் மக்களால் தெரிலானவை. மற்றைய இரண்டும்  தேசியப்பட்டியல் ஆசனங்கள். 

2020 ஆம் ஆண்டில் தேசிய மக்கள் சக்திக்கு மூன்று ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தன. இரு ஆசனங்கள் மக்களால் தெரிவானவை. மற்றையது தேசியப்பட்டியல் ஆசனம்.  கொழும்பு மாவட்டத்தில் அநுரா குமார திசாநாயக்கவுக்கு 49,814 விருப்பு வாக்குகள் கிடைத்தன. 

(2015 ஆம் ஆண்டில் அவருக்கு  65, 066 விருப்பு வாக்குகள்  கிடைத்தன.) கம்பஹாவில் வெற்றிபெற்ற விஜித ஹேரத்துக்கு 37, 008 விருப்பு வாக்குகள் கிடைத்தன. தேசியப்பட்டியல்  ஆசனத்துக்கு கலாநிதி ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டார்.

மூன்றாவது அரசியல் சக்தி அந்தஸ்து 

2019 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளும் 2020 பாராளுமன்ற தேர்தல் முடிவுகளும் தேசிய மக்கள் சக்தியாக தேர்தல்களில் போட்டியிடுவதன் மூலமான சிறப்பான செயற்பாட்டை வெளிக்காட்டுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் எதிர்பார்த்த பயன்களை தரவில்லை என்பதை வெளிக்காட்டின. 

எத்தகைய தேர்தல் தந்திரோபயத்தை கடைப்பிடித்தாலும், ஜே.வி.பி.யினால் அதன் வாக்கு வங்கியை அதிகரிக்க முடியவில்லை என்று தோன்றியது. ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியாக போட்டியிட்டால் என்ன, போட்டியிடாவிட்டால் என்ன அதனால் மூன்றாவது அரசியல் சக்தி என்ற அந்தஸ்தை ஒருபோதும் கடந்து செல்லமுடியாது என்று தோன்றியது.

அநுரா குமார திசாநாயக்கவின் தலைமைத்துவத்துக்கு அது உண்மையில் ஒரு சோதனைக்காலம். பாதகமான நெருக்குதல்களின் கீழ் வேறு ஆள் என்றால் தளர்ந்துபோயிருப்பார். 

ஆனால், நுவரவேவ வாவியின் முழுத் தூரத்தையும் நீந்திக்கடந்து திரும்பி வரக்கூடிய  ஆற்றல் கொண்ட ரஜரட்டை பொடியன் மிகுந்த நெஞ்சுரம்  கொண்டவன். நீரோட்டத்துக்கு எதிராக நீந்துவதற்கு அநுரா தயாரானார். அவர் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அணுகுமுறையை மாற்றியமைத்ததுடன் தனது அரசியல் படிமத்தையும் மீள மெருகேற்றினார்.

வரலாறு படைப்பு 

இந்த மாற்றங்கள் மக்களின் மனநிலையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவந்தன. இது இலங்கையின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது இடதுசாரி அரசியல்வாதி என்று அநுரா குமார திசாநாயக்க வரலாறு படைப்பதற்கு வழிவகுத்தது. இந்த வெற்றிக் கதையை  ஐந்தாவதும் இறுதியானதுமான பாகத்தில் பார்ப்போம்.

https://www.virakesari.lk/article/197579

  • கருத்துக்கள உறவுகள்
Posted

2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றியின் வாசனையை அநுர எவ்வாறு முகர்ந்து பிடித்தார்?

image

பாகம் 5

டி.பி.எஸ்.ஜெயராஜ்

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) வுக்கும் அதன் தலைவர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் 2019 நவம்பர்  ஜனாதிபதி தேர்தலும்  2020 ஆகஸ்ட் பாராளுமன்ற தேர்தலும் பெரிய ஏமாற்றமாகப் போய்விட்டது. ஒரு தந்திரோபாய நகர்வாகவே ஜே.வி.பி. அந்த இரு தேர்தல்களிலும் திசைகாட்டி புதிய சின்னத்தின் கீழ் புதியதொரு அரசியல் முன்னணியின் அங்கமாக  போட்டியிட்டது.  அந்த கட்சி தேசிய மக்கள் சக்தி என்ற பரந்த  ஒரு  முன்னணியை அமைத்துக்கொண்டது. பெயரளவில்  சமத்துவமான அமைப்புக்கள் மத்தியில் முதலாவதாக தோன்றினாலும், நடைமுறையில் தேசிய மக்கள் சக்தியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆதிக்கம் கொண்ட கட்சியாக அதுவே விளங்கியது.

ஒரேயொரு எளிமையான காரணத்துக்காகவே ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தி என்ற ஆடையை அணிந்துகொண்டது. தேர்தல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற அது விரும்பியது. ஆயுதப் போராட்டத்தின் மூலம் இலங்கை அரசைத் தூக்கியெறிய ஜே.வி.பி. இரு தடவைகள் முயற்சித்தது. இரு முயற்சிகளும் தோல்வியடைந்தன.

நூற்றுக் கணக்கான அர்ப்பணிப்புச் சிந்தையுடைய  செயற்பாட்டாளர்களை கொண்டிருந்த ஜே.வி.பி.யின் பொதுக் கூட்டங்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்துகொண்டாலும் கூட, குறிப்பிட்ட ஒரு  எல்லைக்கு அப்பால் தங்களால் வாக்குகளைப் பெறமுடியாமல் இருக்கிறது என்பதை செஞ்சட்டைத் தோழர்கள் கண்டுகொண்டார்கள். பாராளுமன்றத்தில் மூன்றாவது கட்சியாகவும் இலங்கை அரசியலில் நிலையான  மூன்றாவது சக்தியாகவும் இருக்கவேண்டியதே ஜே.வி.பி.யின் விதியாகிப் போய்விட்டது போன்று தோன்றியது.

அதனால் ஜே.வி.பி. அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி என்ற புதிய தோற்றத்தைக் காட்டிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. உள்ளடக்கம் ஒன்று தான் ஆனால் வடிவத்தில் அது வேறுபட்டதாக தோன்றும். தேசிய மக்கள் சக்தி என்ற தோற்றமாற்றம் இரு காரணங்களுக்காக ஜே.வி.பி.க்கு தேவைப்பட்டது.

முதலாவதாக, கடந்த காலத்தில்  ஜே.வி.பி.யின் அட்டூழியங்களை அனுபவித்த பழைய தலைமுறையினர்  அவற்றை மறந்து புதிய தேசிய மக்கள் சக்தியாக மறுசீரமைப்புக்குள்ளாகிவிட்டதாக அவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் ஜே.வி.பி. விரும்பியது. இரண்டாவதாக, வன்முறைக் கடந்த காலத்தை மறந்து முற்போக்கான தேசிய மக்கள் சக்தியாக மாற்றம் பெற்றுவிட்டதை காட்டுவதன் மூலமாக இளந் தலைமுறையினரை கவருவதற்கு ஜே.வி.பி. விரும்பியது.

புதிய மொந்தையில் பழைய கள்ளு

ஜே.வி.பி. நம்பிக்கையுடன் செயற்பட்டபோதிலும், 2019 ஆம் ஆண்டிலும் 2020 ஆம் ஆண்டிலும் தேர்த்களில் மிகவும் குறைந்தளவு வாக்குகளையே தேசிய மக்கள் சக்தியினால் பெறக்கூடியதாக இருந்தது. பெயரளவில் புதிய தேசிய மக்கள் சக்தியாக தோன்றினாலும், அது பழைய ஜே.வி.பி.யே, அதாவது புதிய மொந்தையில் பழைய கள்ளு என்றே அதை மக்கள் நோக்கினார்கள் போன்று தோன்றியது. மேலும், புதிய அவதாரமான தேசிய மக்கள் சக்தியுடன் ஒப்பிடும்போது ஜே.வி.பி.யாக  கூடுதல் வாக்குகளை பெற்றிருந்ததை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டின.

உதாரணமாக, ஜே.வி.பி.யின் தாபகத்தலைவர் றோஹண விஜேவீர 1982 ஜனாதிபதி தேர்தலில் 273, 428 ( 4.18 சதவீதம் ) வாக்குகளைப் பெற்றார். அதேபோன்று நந்தன குணதிலக 1999 ஜனாதிபதி தேர்தலில் 344, 173 ( 4.08 சதவீதம் ) வாக்குகளை பெற்றார். இருவரும் அந்த தேர்தல்களில் மூன்றாவதாக வந்தனர். அநுர குமார திசாநாயக்க 2019 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது 418, 553 (3.16 சதவீதம் ) வாக்குகளைப் பெற்றார்.

விஜேவீரவையும் குணதிலகவையும் விட அநுர கூடுதலான வாக்குகளைப் பெற்றபோதிலும், சதவீதம் குறைவானதாகவே இருந்தது. பல வருடங்களாக இடம்பெற்ற சனத்தொகை அதிகரிப்பை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது மற்றைய இருவரையும் விட அநுரா கூடுதலான வாக்குகளைப் பெற்றதை விளங்கிக்கொள்ள முடியும். ஆனால் சதவீதம் தேசிய மக்கள் சக்தி என்ற வேடத்தில் ஜே.வீ.பி.க்கான மக்கள் ஆதரவில் ஒரு குறைவு ஏற்பட்டிருந்ததையே வெளிக்காட்டியது. 

2020 பாராளுமன்ற தேர்தலில் அது மேலும் மோசமானதாக இருந்தது. தேசிய மக்கள் சக்தியினால் திசைகாட்டி சின்னத்தில் வெறுமனே 445,958 ( 3.84 சதவீதம் ) வாக்குகளை மாத்திரமே பெறக்கூடியதாக இருந்தது. இது 2015 ஆம் ஆண்டில் ஜே.வி.பி. பெற்ற 543,944 (4.87 சதவீதம்)  வாக்குகளையும் விட குறைவானதாக இருந்தது. பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அரைலாசியாகக் குறைந்தது.

2015 ஆம் ஆண்டில் ஜே.வி.பி.யின் நான்கு உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, தேசியப்பட்டியல் மூலம் இரு ஆசனங்கள் கிடைத்தன. மொத்தம் ஆறு உறுப்பினர்கள் பாராளூமன்றம் வந்தார்கள். 2020 ஆம் ஆண்டில் இருவர் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அதேவேளை தேசியப்பட்டியல் மூலம் ஒரு ஆசனம் கிடைத்தது.

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட அநுர 49,814 விருப்பு வாக்குகளை பெற்றார். 2015 ஆம் ஆண்டில் அநுரவுக்கு 65,066 விருப்பு வாக்குகள் கிடைத்த அதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட விஜித ஹேரத் 37, 008 விருப்பு வாக்குகளைப் பெற்றார். தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டார்.

அநுரவுக்கு எதிரான உணர்வு

தேசிய மக்கள் சக்தியாக தேர்தல்களில் போட்டியிட்ட ஜே.வி.பி.யின் பரிசேதனை எதிர்பார்த்த பயனைத் தரவில்லை. என்னதான் தேர்தல் தந்திரோபாயங்களை வகுத்தாலும், ஜே.வி.பி.யினால் அதன் வாக்குப்பங்கை அதிகரிக்க முடியவில்லை என்று தோன்றியது. தேசிய மக்கள் சக்தியாக போட்டியிட்டதோ இல்லையோ ஜே.வி.பி.யினால் மூன்றாவது சக்தி என்ற அந்தஸ்தில் இருந்து மேம்பட முடியவில்லை என்று தோன்றியது. இந்த நிலைவரங்களின் விளைவாக ஜே.வி.பி. அணிகளுக்குள் அநுராவுக்கு எதிராக சிறிய ஒரு எதிர்ப்புணர்வு தோன்ற ஆரம்பித்தது.

தேசிய மக்கள் சக்தி தந்திரோபாயம் ஒரு தோல்வி என்று பொதுச் செயலாளர் தலைமையிலான செல்வாக்குமிக்க ஜே.வி.பி முக்கியஸ்தர்கள் குழுவொன்று உணர்ந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்தது. தேசிய மக்கள் சக்கதியுடன் பிணைந்திருக்காமல் ஜே வி.பி. அதன் முன்னைய அந்தஸ்துக்கு திரும்ப வேண்டும் அவர்கள் விரும்பினார்கள்.

தேசிய மக்கள் சக்தியை அமைக்கும் யோசனையை பெரும் எண்ணிக்கையானவர்கள் ஆதரித்த போதிலும், அந்த யோசனையின் உந்துசக்தியாக இருந்தவர் அநுரவே. அது ஜே.வி.பி.யின் ஒரு கூட்டுத் தீர்மானமாக இருந்தாலும், அதை  செயல் முறையில் வழிநடத்தி சாத்தியமாக்கியதற்கு அநுரவே பெரிதும் பொறுப்பாக இருந்தார். அதனால், தேசிய மக்கள் சக்தி மீதான விமர்சனங்கள் மறைமுகமாக அநுராவை நோக்கியவையாகவே இருந்தன.

எதிர்ப்புக்கு மத்தியில் அநுரா பின்வாங்கவில்லை. தலைவர் என்ற வகையில் அதற்காக அவர் மெச்சப்பட வேண்டியவர். உட்கட்சி நெருக்குதலின் கீழ் தளர்ந்துபோவதற்கு பதிலாக  அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். தேசிய மக்கள் சக்தி அமைக்கப்பட்டு ஒருவருடமே கடந்திருக்கும் நிலையில், அந்த தந்திரோபாய மாற்றம் வெற்றியா தோல்வியா என்று தீர்ப்புக் கூறுவதற்கு மேலும் சில காலம் தேவை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய மக்கள் சக்தியாக மேலும்  கொஞ்சக்காலம் தொடர்ந்து பயணிப்போம் என்று அவர் வலியுறுத்தினார். தேசிய மக்கள் சக்தி கோட்பாட்டை எதிர்காலத்தில் பெரிய அளவில் ஆதரித்து ஊக்கமளிக்க  வேண்டியிருக்கும்  என்றும் என்றும் அநுர கூறினார். அவரின் நிலைப்பாட்டுக்கே வெற்றி கிடைத்தது. தேசிய மக்கள் சக்தியாக தொடருவதற்கு ஜே.வி.பி. இறுதியில் தீர்மானித்தது.

ஒரு எதிர்க்கட்சி என்ற கருத்துக் கோணத்தில் இருந்து பார்த்தபோது  அன்றைய நிலைவரம் மனச்சோர்வைத்  தருவதாகவே இருந்தது. மிகப்பெரிய பெரும்பான்மையுடன் கோட்டாபய ராஜபக்ச  ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். பாராளுமன்றத்தில் 146 ஆசனங்களை கைப்பற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சி மாறுவதற்கு தூண்டியதன் மூலமாக  மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டது.

பாராளுமன்றத்தில் அரசியலமைப்புக்கான 20  வது திருத்தத்தை நிறைவேற்றிக்கொண்ட ராஜபக்சாக்கள் 19 வது அரசியலமைப்புத் திருத்தத்தில் இருந்த பல நேர்மறையான  அம்சங்களைை நீக்கினார்கள். ராஜபக்சாக்களும் அவர்களை அடிவருடிகளும் அட்டகாசமாக ஆட்சி செய்தார்கள்.

துடிப்பில்லாத எதிர்க்கட்சி 

எதிர்க்கட்சி துடிப்பில்லாததாக இருந்ததால் ராஜபக்சாக்களுக்கு அது வசதியாகப் பே்ய்விட்டது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 2020 பாராளுமன்ற தேர்தலில் துடைத்தெறியப்பட்டது. அதில் இருந்து பிரிந்து வந்தவர்கள் சஜித் பிரேமதாச தலைமையின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தியை ( சமகி ஜன பலவேகய)  அமைத்தார்கள்.

அதற்கு பாராளுமன்றத்தில் 54 ஆசனங்கள் கிடைத்தன. பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக வந்தார். தமிழ், முஸ்லிம் கட்சிகள் அவற்றின் சமூகங்களை பாதித்த பிரச்சினைககளில் பிரதானமாக கவனத்தை செலுத்திய நிலையில் தேசிய கவனக்குவிப்பில் ஒரு வீழ்ச்சி காணப்பட்டது.

சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார். தனது கட்சியின் ஏனைய உறூப்பினர்களுக்கு போதுமான நேரத்தை ஒதுக்காமல் அனேகமாக சகல விடயங்களிலும் அவரே பேசினார். அவரது  உரைகளில் ஆழமோ தெளிவோ இருந்ததில்லை.

தந்தையாரின் பேச்சுக்களில் இருந்து முற்றிலும்  வேறுபட்டதாக இருந்தது. ரணசிங்க ஆற்றல்மிக்க ஒரு பேச்சாளர். தனது சிந்தனைகளை சபையோருக்கு உறுதியான முறையில் தெளிவாகச் சொல்வார். மறுபுறத்தில், அளவு கடந்தை  சொல் அலங்காரத்துடனான சஜித் பிரேமதாசவின் பேச்சு கேட்போரை கவருவதில்லை.

இத்தகைய சூழ்நிலையில், ஜே வி.பி./ தேசிய மககள் சக்தியின்  அநுர, ஹரினி, விஜித மூவரும் பாராளுமன்றத்தில் தங்களது திறமையை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக அநுர குமார திசாநாயக்க  ஒரு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் சிறப்பாகச் செயற்பட்டு அரசாங்கத்தின் தவறுகளையும் குறைபாடுகளையும் அம்பலப்படுத்தினார்.

நடப்பில் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக இருந்திருக்கலாம்,  ஆனால் மெய்யான எதிர்க்கட்சி தலைவராக அநுராவே காணப்பட்டார். இதை ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார். முன்னணி எதிர்க்கட்சி சக்தியாக அநுர வருவதற்கு சஜித் இடமளித்துவிட்டார் என்று அவர் கூறினார்.

முன்மாதிரியாக பசில் ராஜபக்ச 

தேசிய மக்கள் சக்தி பசில் ராஜபக்சவின் வழமுறையை பின்பற்றத் தொடங்கியது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை தொடங்கியபோது பசில் பாராளுமன்றத்தின் மீதோ அல்லது மாகாணசபைகள் மீதோ கவனத்தைச் செலுத்தவில்லை. மாறாக, அவர்  உள்ளூராட்சி சபைகளில் சமூகத்தின் அடிமட்டத்தில்  கிளைகளை அமைத்தார். வேட்பாளர்களாக நியமிக்கப்படக்கூடியவர்களை தெரிவுசெய்து தங்களின் " வாக்காளர்  தொகுதிகளை "  வளர்த்துக் கொள்வதற்கு அவர்களுக்கு வழிகாட்டினார்.

தேர்தல் சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றம் வட்டாரங்களில் இருந்து நேரடியாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுடன் மேலதிகமாக விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் உறுப்பினர்கள்   தெரிவு செய்யப்படுவதற்கு வழிவகுத்தது. தனது வேட்பாளர்களைக் கொண்டு விசேடமாக வாக்காளர்களை இலக்குவைக்க பசிலினால் இயலுமாக இருந்தது.

இந்த அணுகுமுறையின் விளைவாக, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பொதுஜன பெரமுனவினால் 2018 பெப்ரவரி உள்ளூராட்சி தேர்தல்களில் 5, 006, 837 (40.47 சதவீதம்) வாக்குகளைப் பெறக்கூடியதாக இருந்தது. அதனால் வட்டார அடிப்படையில் 3,265 உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கும் விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் இன்னொரு 181 உறுப்பினர்களுக்கும் பொதுஜன பெரமுன உரித்துடையதாகியது.

அந்த கட்சி அதன் தேர்தல் ஞானஸ்நானத்தில் நாடுபூராவும் 126 உள்ளூராட்சி சபைகளின் கடடுப்பாட்டை பெற்றது. மறுபுறத்தில் ஜே.வி.பி. அந்த உள்ளூராட்சி தேய்தலில் 710, 932 (5.75 சதவீதம் ) வாக்குகளைப் பெற்றது. வட்டார அடிப்படையில் ஜே.வி.பி.யின் ஒரேயொரு உறுப்பினர் மாத்திரமே தெரிவாகக் கூடியதாக இருந்தது. விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையில் அந்த கட்சியின் 433 உறூப்பினர்கள் தெரிவாகினர். நாட்டின் எந்தப் பாகத்திலுமே தனியொரு உள்ளூராட்சி சபையின் கட்டுப்பாட்டைக் கூட ஜே.வி.பி.யினால் பெறமுடியவில்லை.

2018 உள்ளூராட்சி தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் வெற்றி அநுராவுக்கு ஒரு உத்வேகமாக அமைந்தது. அடுத்த உள்ளூராட்சி தேர்தல்கள் 2022 ஆம் ஆண்டில் நடத்தப்பட வேண்டியவையாக இருந்தன. தேசிய மக்கள் சக்தி பொதுஜன பெரமுனவின் அணுகுமுறையைப் பின்பற்றுவதற்கு தீர்மானித்தது. பிரதேச மட்டத்தில் வட்டாரங்களை இலக்கு வைப்பதற்கு கட்சியின் கிளைகள் மீளக் கடடமைக்கப்பட்டன.

வீடுவீடாக கவனம் செலுத்தப்பட்டது. ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர்கள் திட்டமிட்ட முறையில் ஒவ்வொரு வீட்டுக்கு விஜயம் செய்து ஒவ்வொரு குடும்பத்தையும் அணுகினார்கள். அது ஒரு குறுகிய நோக்க அணுகுமுறை. ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் மோட்டார் சைக்கிள்களிலும் ஸ்கூட்டர்களிலும் வீடுகளுக்கு சென்று வந்தார்கள். இது மறுபுறத்தில்  இந்த இரு சக்கர வாகனங்களை வாங்குவதற்கு வெளிநாடொன்று நிதயுதவி செய்கிறது என்ற ஊகங்களுக்கு வழிவகுத்தது.

உள்ளூராட்சி தேர்தல்கள் ஒரு வருடம் தள்ளி 2023 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டன. முக்கியமான தினம் நெருங்கும்போது ஜே.வி.பி. சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஏழு மாகாணங்களில் பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளிலும்  தமிழ்பேசும் மக்கள் பெரும்பான்மையா வாழும் வடக்கிலும் கிழக்கிலும் குறிப்பிட்ட சில உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்கு தயாராகவும் விருப்பம் கொண்டும் இருந்தது.

அந்த நேரமளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக ரணில் வி்க்கிரமசிங்க பதவிக்கு வந்தார். புதிய ஜனாதிபதி உள்ளூராட்சி தேர்தல்கள் நடத்தப்படுவதை தடு்க்க சகல விதமான தந்திரங்களையும் கையாண்டார்.

உள்ளூராட்சி தேர்தல்ளை நடத்துவதற்கு உத்தரவிடக்கோரி தேசிய மக்கள் சக்தி நீதிமன்றத்தை நாடியது. பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் பாராளுமன்ற உறூப்பினர் சுனில் ஹந்துனெத்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் கலாநிதி நிஹால் அபேசிங்க ஆகியோர் 2023 மார்ச் 14 ஆம் திகதி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை தாக்கல் செய்தனர். 

சுதந்திரமானதும் நீதியானதுமான உள்ளூராட்சி தேர்தல்களை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டது. இது அந்த நேரத்திலேயே தேர்தல் வெற்றியின் நறுமணத்தை தேசிய மக்கள் சக்தி முகரத் தொடங்கிவிட்டது எனபதைக் காட்டியது. ஆனால், திட்டமிட்டபடி உள்ளூராட்சி தேர்தல்களை நடத்தப்படவில்லை.

அறகலய அனுபவம்

அதேவேளை, நாடு முன்னென்றும் இல்லாத வகையில் அறகலய ( போராட்டம் ) அனுபவமொனறைச் சந்தித்தது. பொதுவில் அரசாங்கத்துக்கு எதிராகவும் குறிப்பாக ராஜபக்சாக்களுக்கு எதிராகவும் மக்கள் மத்தியில் ஏற்பட்ட சீற்றத்தை ஜே.வி.பி.யும் தனக்கு வாய்ப்பாக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டியது. சஜித்தையும் விட அநுர காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுக்கு கூடுதலான அளவுக்கு ஏற்புடையவராக இருந்தார். அநுர காலிமுகத்திடலில் வரவேற்கப்பட்ட அதேவேளை சஜித் விரட்டியடிக்கப்பட்டார்.

ஆனால் அறகலயவை ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்ற முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி அதன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தலைமைத்துவ பாத்திரத்தை வகித்தது. போரட்டத்தை பொறுத்தரை  முன்னரங்க சோசலிஸ்ட் கட்சி ஜே.வி.பி.யை  மேவிவிட்டது. இறுதியில் கோட்டாபய பதவி விலக ரணில் ஜனாதிபதியாக வந்தார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது தனது கட்சிக்கு மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களே இருந்தபோதிலும், அநுராவும் போட்டியிட்டார். அந்த போட்டியில் இருந்து பின்வாங்கிய சஜித், டலஸ் அழகப்பெருமவை ஆதரித்தார். அதன் மூலமாக மீண்டும  சஜித் ஒரு பலவீனமான தலைவர் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.

ரணில் விக்கிரமசிங்க 134 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக தெரிவானார். அநுராவுக்கு மூன்று வாக்குகள் மாத்திரமே  கிடைத்த போதிலும், அரசியல் ரீதியில் அவர் சஜித்தை விடவும் கூடுதல் புள்ளிகளைத் தட்டிக்கொண்டார். அதன் மூலமாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர   ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் போது தான் ஒரு முக்கியமான வேட்பாளராக  இருக்கப்போதை  முன்னிலைப்படுத்திக் காட்டிக்கொண்டார்.

அதேவேளை சஜித்  உறுதிப்பாடும் அரசியல் துணிச்சலும் இல்லாததன் விளைவாக ஒரு பலவீனமான - தடுமாறுகிற அரசியல்வாதியாக நோக்கப்பட்டார். 2024 ஜனாதிபதி தேர்தல் ஒரு மும்முனைப் போட்டியாக இருக்கப்போகிறது என்பது அப்போதே தெரிந்தது.

ஜனாதிபதியாக ரணில் 

இலங்கை முன்னென்றும் இல்லாத வகையிலான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துக் கொண்டிருந்தபோது ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக ஆட்சிப்  பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அந்நிய செலாவணி அருகிப்போயிருந்த நிலையில்  பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. எங்கு பார்த்தாலும் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்துநின்றார்கள். ஆனால் விநியோகங்கள் கிடைக்கவில்லை அல்லது போதுமானவையாக இருக்கவில்லை. மின்சக்தி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகள் நாட்டை உண்மையில் முடங்கச் செய்திருந்தன. ரணிலிடம் என்னதான் குறைபாடுகள் இருந்தாலும், அவர் நெருக்கடியான ஒரு நேரத்தில் ஜனாதிபதியாக ஆட்சிப்  பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் மூலம் தனது துணிச்சலையும் பற்றுறுதியையும் வெளிக்காட்டினார்.

மேலும், உருப்படியான முறையில் ஜனாதிபதியாக செயற்படுவதற்கு  ராஜபக்சாக்களின் நல்லெண்ணத்திலும் பொதுஜன பெரமுனவின் ஆதரவிலும் தங்கியிருக்க வேண்டியிருந்ததால் விக்கிரமசிங்கவுக்கு  இடையூறுகள் இருந்தன. அவரது ஐக்கிய தேசிய கட்சிக்கு பாராளுமன்றத்தில் ஒரேயொரு உறுப்பினர் மாத்திரமே இருந்த காரணத்தினால் ராஜபக்சக்களின் தலைமையிலான " தாமரை மொட்டு " கட்சியின் உதவியுடன் கடமைகளை நிறைவேற்றுவதை தவிர விக்கிரமசிங்கவுக்கு வேறு தெரிவு இருக்கவில்லை. ஆனால் ரணில் அதை இலங்கையினதும் அதன் மக்களினதும் நீண்டகால நலன்களுக்காக பொறுத்துக்கொள்ள வேண்டிய ஒரு வசதியீனமாக கருதிச் செயற்பட்டார்.

பொருளாதாரப் பிரச்சினையை ஒரு தேசிய நெருக்கடியாக விக்கிரமசிங்க சரியான முறையில் அடையாளம் கண்டார். நெருக்கடியை எதிர்த்துப் போராடுவதற்கு ஐக்கியப்பட்ட தேசிய முயற்சி ஒன்றுக்கு அழைப்பு விடுத்தார். தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு பாராளும்னறத்தில் அங்கம் வகித்த அரசியல் கட்சிகளை அவர் திரும்பத் திரும்ப அழைத்தார். சகல கட்சிகளையும் உள்ளடக்கிய ஒத்துழைப்புச் செயற்பாடு அவசியம் என்பதை அவர் உணர்ந்தார். ஆனால், அவர் இடையறாது விடுத்த அழைப்புக்கள் தொடர்ச்சியாக அலட்சியம் செய்ப்பட்டன.

முன்னேற்றத்துக்கான சந்தர்ப்பம் 

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும், அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் பொருளாதார நெருக்கடியில் தாங்கள் அரசியல் ரீதியில் முன்னேறுவதற்கான வாய்ப்பைக் கண்டார்கள். விக்கிரமசிங்கவுடன் ஒத்துழைப்பதற்கு பதிலாக அவர்கள் விலகி இருந்துகொண்டு ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் விமர்சிப்பதிலேயே தீவிர நாட்டம் காட்டினர்.

பொருளாதார நெருக்கடியின் பாரதூரத்தன்மையை அவர்கள் குறைத்து மதிப்பிடவும் செய்தார்கள். நெருக்கடியின் தன்மையை  ஜனாதிபதி மிகைப்படுத்துகின்றார் என்று கூறி அநுர ஏளனமும் செய்தார். அநுரவைப் பொறுத்தவரை அது ஒரு பெரிய பிரச்சினையே அல்ல, ரணில் தான் அதை பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறார் என்று கருதினார்.

விக்கிரமசிங்க அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியதையும் தேசிய மக்கள் சக்தி கண்டனம் செய்தது. இலங்கையில் இடதுசாரிகள்  " பிரெட்டன் வூட்ஸ் இரட்டை " என்று அழைக்கப்டுகின்ற சர்வதேச நாணய திதியம் மற்றும் உலக வங்கி மீது வெறுப்புணர்வைக் கொண்ட வரலாற்றை உடையவை. இப்போது அந்த வெறுப்புக்கு  ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி புத்தூக்கம் கொடுத்தது. சர்வதேச நாணய நிதியத்தின் விளைவாக  மக்கள் குறிப்பாக சமூகத்தின் பின்தங்கிய பிரிவினர் இடர்பாடுகளை எதிர்நோக்கப் போகிறார்கள் என்று அவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு பதிலாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைச் சமூகத்திடம் இருந்து பெறக்கூடிய உதவிகளின் ஊடாக பொருளாதார பிரச்சினைக்கு தங்களால் தீர்வு காணமுடியும் என்று கூட  ஜே.வி.பி.யின் பொருளாதார ' மந்திரவாதி '  சுனில் ஹந்துனெத்தி கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியும் தேசிய மக்கள் சக்தியும் விக்கிரமசிங்க அரசாங்கத்துடன் ஒத்துழைக்கப் போவதில்லை என்பது விரைவாகவே தெளிவாகத் தெரிந்தது. ஒரு ஆரோக்கியமான விமர்சன ரீதியான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதற்கு பதிலாக எடுத்ததற்கெல்லாம் பிழை கண்டுபிடிக்கும் அணுகுமுறையை அவர்கள் கடைப்பிடித்தார்கள்.

அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரத்துக்கு மக்களின் ஒவ்வொரு பொருளாதார குறைபாடும் உச்சத்துக்கு பயன்படுத்தப்பட்டது. பொருட்கள் தாராளமாகக் கிடைப்பதை விக்கிரமசிங்கவினால் உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தபோதிலும், அவற்றை பெரும்பாலான மககளினால் வாங்க முடியாமல் இருந்தமை கூர்மையானஒரு பிரச்சினையாக விளங்கியது. வாழ்க்கைச் செலவு உயர்ந்துகொண்டு போனது, ஆனால் சம்பளங்கள் அதிகரிக்கவில்லை. தனவந்தர்கள் மேலும் தனவந்தர்களாகிக் கொண்டுபோக வறியவர்கள் மேலும் வறியவர்களானார்கள். நடுத்தர வர்க்கம் தாழ்வுற்றது.

அறகலய பேராட்டம்

ராஜபக்சக்களின் ஆட்சி தூக்கியெறியப்படுவதை துரிதப்படுத்தியதற்கு மேலதிகமாக அறகலய போராட்டம் பல விடயங்களை சாதித்தது. பொதுவில்  மக்கள் சக்தியினதும் குறிப்பாக இளைஞர் சக்தியினதும் வெற்றியை அது நிரூபித்தது. குடும்ப அரசியல் அதிகாரம், நெரூங்கியவர்களுக்கு சலுகை செய்யும் போக்கு மற்றும் ஊழலுக்கு எதிரான உணர்வை அது அதிகரித்தது.

முறைமையில் அல்லது தற்போதுள்ள ஒழுங்கில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்ற வேட்கையுடைய ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை  அறகலய வளர்த்து வளமாக்கியது.

மாறிவிட்ட சமநிலையை  கணக்கில் எடுத்த தேசிய மக்கள் சக்தி ஒரு ஆய்வுச் செயன்முறையை ஆரம்பித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் அறிய முடிந்தது. இதில் அநுர குமார திசாநாயக்க முக்கியமான பாத்திரத்தை வகித்தார். ஜனாதிபதி பதவியை இலக்குவைத்து பெரியளவில் தயாராவதன் மூலமாக தங்களது அரசியல் மேம்பாட்டுக்கு மிகவும் சாதகமான நிலைவரம் ஒன்று இருப்பதை ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி உணர்ந்தது.

ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தனியாக போட்டியிட வேண்டும் என்பதில் மீண்டும் அநுரா உறுதியாக இருந்தார். ஜனாதிபதி வேட்பாளராக அவரே களமிறங்குவார் என்பது ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று.

அதற்கு பிறகு தேசிய மக்கள் சக்தி 2024 ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகத் தொடங்கியது. ஜனாதிபதி விக்கிரமசிங்க உரிய காலத்தில் தேர்தலை நடத்துவாரா என்ற ஒரு சந்தேகம் இருந்தது. அவ்வாறு அவர் நடத்த முன்வராத பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலை அல்லது பாராளுமன்ற தேர்தலை நடத்தக் கோரி நாடுதழுவிய பாரிய அரசியல் போராட்த்தை முன்னெடுப்பதற்கும் தேசிய மக்கள் சக்தி தயாராக இருந்தது. ஆனால்,  ரணில் தேர்தலை நடத்துவதற்கே எப்போதும் உத்தேசித்திருந்ததால் எந்தவொரு போராட்டத்துக்கும் தேவை இருக்கவில்லை. அவர் அவ்வாறே செய்தார்.

வெற்றியின் கதை 

ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திசாநாயக்கவுக்கு ஆதரவாக பிரசாரங்களை தேசிய மக்கள் சக்தி விடாமுயற்சியுடன் முன்னெடுத்தது. ஜனாதிபதி தேர்தல் போட்டியில் வெற்றியின் நறுமணத்தை முகரத்தொடங்கிய அநுர இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தன்னை காட்சிப்படுத்தினார்.

இந்த ' கனவு ' 2024 செப்டெம்பரில் நனவாகியது. ஜனாதிபதி தேர்தலில் அநுராவின் வெற்றியின் மருட்சியூட்டும் கதையை அடுத்தவாரம் விரிவாக எழுதுவேன். அதுவே இந்த கட்டுரைத் தொடரின் இறுதிப்  பாகமாகவும் நிச்சயமாக அமையும்.

https://www.virakesari.lk/article/198000



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.