Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
07 OCT, 2024 | 12:57 PM
image

வீரகத்தி தனபாலசிங்கம் 

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்காக அலைந்த களைப்பு போவதற்கு முன்னதாக அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. குறிப்பாக, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் தோல்வியடைந்தவர்களின் கட்சிகள் தோல்வியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு முன்னதாக மீண்டும் தேசிய தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது.

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் பிரசாரங்களின்போது நாட்டு மக்களுக்கு உறுதியளித்ததைப் போன்று பதவியேற்ற மறுநாளே பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு உத்தரவிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய நியமனப்பத்திரங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நிறைவடைகின்றன. தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவிருக்கிறது.

தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்த மக்களிடம் திசாநாயக்க தனது ஆட்சியை உறுதியான  முறையில் முன்னெடுப்பதற்கு வசதியாக தேசிய மக்கள் சக்தி பலம்பொருந்திய  அரசாங்கத்தை அமைப்பதற்கு  பாராளுமன்ற தேர்தலில் அமோகமான வெற்றியைத்  தருமாறு கேட்பார். 

 ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்த முறையின் அடிப்படையில் நோக்கும்போது  பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்திக்கு அறுதிப்பெரும்பான்மைப் பலம் கிடைப்பது சாத்தியமில்லை என்று முன்கூட்டியே மதிப்பீடுகளை வெளியிடுகிறவர்களும்  இருக்கிறார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மூன்று பிரதான வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகள் பாராளுமன்ற தேர்தலில் அவர்களின் கட்சிகளுக்கு கிடைக்கப்போவதில்லை. அதனால் அந்த மதிப்பீடுகள்  பெருமளவுக்கு  பொருத்தமானவை அல்ல. அத்துடன்  இரு தேசிய தேர்தல்களிலும் ஒரே மாதிரியான காரணிகள் முழுமையாகச் செல்வாக்கு செலுத்துவதில்லை. 

ஜனாதிபதி திசாநாயக்க ஐம்பது சதவீதமான வாக்குகளை பெறமுடியவில்லை என்றபோதிலும், மக்கள் மாற்றம் ஒன்றுக்காகவே அவருக்கு வாக்களித்தார்கள். மாற்றத்துக்கான வேட்பாளராக திசாநாயக்கவை அடையாளம் கண்டு வெற்றிபெறவைத்த மக்கள் அவர் உறுதியான அரசாங்கத்தை அமைத்து தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு  போதுமான ஆதரவை தேசிய மக்கள் சக்திக்கு   வழங்குவார்கள் என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுபவரின் கட்சியே அரசாங்கத்தை அமைக்கக்கூடியதாக பாராளுமன்ற தேர்தல்களில் மக்கள் வாக்களிப்பது வழமையாகும். அதுவும் இந்த தடவை பாரம்பரியமான அரசியல் அதிகார வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மீது மக்கள் கடுமையான வெறுப்பைக் கொண்டிருக்கும் பின்புலத்தில்  ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு இரு வாரங்களுக்கு முன்னர் கிடைத்த வாக்குகளையும் விடவும் கூடுதலான வாக்குகள் தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்ற தேர்தலில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் தாராளமாக இருக்கின்றன.

2019 ஜனாதிபதி தேர்தலில் 3.16 சதவீதமான  வாக்குகளைப் பெற்ற திசாநாயக்க இந்த தடவை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஐம்பது சதவீதமான வாக்குகளைப் பெறுவதற்கு பிரமாண்டமான பாய்ச்சலை செய்வது சாத்தியமில்லை என்றே பரவலாக நம்பப்பட்டது. ஆனால் அரசியல் என்பது கணிதம் அல்ல சமூக விஞ்ஞானம் என்று  கூறிய திசாநாயக்க நாட்டில் பரவலாக தேசிய மக்கள் சக்திக்கு  அதிகரித்துவந்த பெரும்  ஆதரவின் அடிப்படையில் தனது வெற்றியில் திடமான  நம்பிக்கை கொண்டவராகவே இருந்தார்.

இரு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி திசாநாயக்க சாதித்துக்  காட்டியதைப் போன்று இலங்கையின்  முன்னைய வேறு எந்த அரசியல் தலைவரும் செய்ததில்லை என்று கூறினால் அது மிகையில்லை. முன்னைய ஜனாதிபதி தேர்தலில் தனக்கு கிடைத்த வாக்குகளின் சதவீதத்தை விடவும் 14 மடங்கு பாய்ச்சலை ஒரு ஐந்து வருடங்களுக்குள் செய்து அவர் சாதித்த  வெற்றி இலங்கையில் மாத்திரமல்ல, உலகின் வேறு பாகங்களிலும் கூட முன்னென்றும் கண்டிராததாகும் என்றுகூட  சில அவதானிகள் வர்ணிக்கிறார்கள்.

ஐக்கிய முன்னணி என்ற பழைய வாகனம்  இல்லாமல் இடதுசாரி கட்சியொன்றினால் தேர்தலில் வெற்றிபெற  முடியும் என்று காட்டிய பெருமையும் ஜனாதிபதி திசாநாயக்கவையே சாரும். கடந்த நூற்றாண்டில் மிகவும் பெரிய கட்சியாக விளங்கிய ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக இடதுசாரி கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தே  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியைப்  பிடிக்கக்கூடியதாக இருந்தது. அந்த கட்சி ஒருபோதும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு அதிகாரத்துக்கு வந்ததில்லை. பழைய இடதுசாரி கட்சிகள் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு சுதந்திர கட்சியுடனான கூட்டணியையே நம்பியிருந்தன.

அந்த இடதுசாரி கட்சிகள் எல்லாம் வரலாறாகிவிட்ட நிலையில் இன்று தேசிய மக்கள் சக்தி தனியாக நின்று தேர்தலில் வெற்றி பெறக்கூடிய ஒரு சக்தியாக மாறியிருப்பது இலங்கை அரசியலில் ஒரு மைல்கல்லாகும். தேசிய மக்கள் சக்தியின்  கொள்கைகள் குறித்து பல்வேறு அபிப்பிராயங்கள் இருக்கலாம். அது வேறு விடயம். ஆனால், இங்கு அதன் தேர்தல் சாதனை மீதே கவனம் செலுத்தப்படுகிறது.

ஐக்கிய தேசிய கட்சியையோ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையோ அல்லது ராஜபக்சாக்களின  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவையோ பிரதான கட்சிகள் என்று இனிமேல் அழைப்பது பொருத்தமில்லை. அவை  தற்போதைய சூழ்நிலையில் இலங்கை அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தக் கூடியவையாக இல்லை. கூட்டணி அமைப்பதற்கு இந்த கட்சிகளைத் தேடி மற்றைய கட்சிகள் வந்த காலம்போய் இப்போது மற்றைய கட்சிகளைத் தேடி  இவற்றின் தலைவர்கள் ஓடுகிறார்கள். ஆனால் அவர்களுடன் கூட்டணி அமைக்க குறிப்பிடத்தக்க செல்வாக்கு மிக்க வேறு எந்த கட்சியும் முன்வருவதாகவும்   இல்லை.

ஆளும் கட்சியாக தேசிய மக்கள் சக்தியும் பிரதான எதிர்க்கட்சியாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் வெளிக்கிளம்பியிருக்கும் புதியதொரு அரசியல் கோலத்தையே இன்று காண்கிறோம். 

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனடியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டுச் சேருவதற்கு அழைப்பு விடுத்தது. பிரேமதாசவும் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி தேர்தலில் பெற்ற வாக்குகளை சேர்த்துப்பார்க்கும்போது இரு கட்சிகளும் கூட்டணி சேர்ந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அடுத்த அரசாங்கத்தை அமைக்கலாம் என்ற  எதிர்பார்ப்பே அதற்கு காரணமாகும்.

ஆனால், பிரேமதாச அந்த அழைப்பை நிராகரித்து விட்டார். விக்கிரமசிங்க தலைவர் பதவியில் இருந்து விலகினால் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய தேசிய கட்சியை தாங்கள் பொறுப்பேற்கத் தயாராயிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் சில தலைவர்கள் கூறினார்கள். இனிமேல் தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை என்று விக்கிரமசிங்க அறிவித்திருந்தாலும்,  கட்சியின் தலைமைத்துவத்தை உடனடியாக அவர் கைவிடுவார் என்று எதிர்பார்க்கமுடியாது. ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டணியை தவிர்ப்பதற்காகவே அவர் இணங்கமுடியாத அந்த நிபந்தனையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் முன்வைத்தனர் போலும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உட்பட பல கட்சிகளில் இருந்து  வெளியேறிவந்து ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவை ஆதரித்தவர்கள்  பாராளுமன்ற தேர்தலில்  புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவிருப்பதாக கூறப்பட்டது  ஆனால்,  மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரான முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் வேறு பலரும்  மக்கள் ஐக்கிய சுதந்திர கூட்டணி என்ற பெயரில் வேறு ஒரு பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானத்திருப்பதாக பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதியில் ஐக்கிய தேசிய கட்சியும் வேறு குழுக்களுமே சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் என்று தெரிகிறது.

ராஜபக்சாக்களை கைவிட்டு விக்கிரமசிங்கவுடன் சேர்ந்தவர்களினால் ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கணிசமான  அளவு வாக்குகளைப் பெற்றுக்ககொடுக்க முடியவில்லை. ராஜபக்சாக்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்ததைப் போன்றே அவர்களுடன் சேர்ந்தவர்களும் மக்களினால் கடுமையாக வெறுக்கப்படுகிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக வெளிக்காட்டின.

இதனிடையே, முன்னாள் அமைச்சர்கள் சிலர்  பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருப்பதற்கு முடிவெடுத்திருக்கிறார்கள். ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர்  ருவான் விஜேவர்தன,  உதவி தலைவர் அகில விராஜ் காரியவாசம் போனறவர்களும் கூட  தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அவர்கள் எல்லோரும் தங்களது அரசியல் எதிர்கால வாய்ப்புக்களுக்காக ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவின் வெற்றியை மாத்திரமே நம்பிக்கொண்டிருந்தார்கள். அவர் தோல்வியடைந்ததும்  அவர்களின் எதிர்பார்ப்புகள் சிதறடிக்கப்பட்டுவிட்டன.

எதிரணிகளுக்குள் தோன்றியிருக்கும் குழப்பநிலை தேசிய மக்கள் சக்திக்கு முன்னரை விடவும் அனுகூலமான அரசியல் சூழ்நிலையைத் தோற்றுவிக்கின்றன. குறுகிய காலத்துக்குள் பாராளுமன்ற தேர்தலை அறிவித்ததன் மூலம் ஜனாதிபதி திசாநாயக்க எதிரணிக் கட்சிகளை தடுமாற வைத்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

இது இவ்வாறிருக்க, பொதுவாழ்வில் ஒரு தூய்மையைப் பேணவேண்டும் என்றும் மக்களின் நலன்களுக்கே முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றும்  அக்கறை கொண்டவர்களை  பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்வதற்கு இந்த தடவை மக்களுக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இதுவரையில் அதிகாரத்தில் இருந்த சகல கட்சிகளும் ஊழல்தனமான அரசியல்வாதிகளினால் நிறைந்து கிடக்கின்றன.  அவர்களில் பெரும்பான்மையானவர்களை தவிர்த்துவிட்டு முற்றிலும் புதியவர்களை  வேட்பாளர்களாக நியமிப்பது அந்த கட்சிகளைப் பொறுத்தவரை சாத்தியமில்லை. 

ஆனால், தேசிய மக்கள் சக்தி அனேகமாக முற்றிலும் புதியவர்களை வேட்பாளர்களாக நியமிக்கக்கூடிய வாய்ப்பு தாராளமாக இருக்கிறது. நல்ல கல்வித்தகைமையும் மக்களின் நலன்களில் அக்கறையும் கொண்ட இளம் வேட்பாளர்களை களமிறக்குவதில்  தேசிய மக்கள் சக்தி அக்கறை காட்டும் என்பது நிச்சயம். இதுகாலவரையில் அவர்கள் ஆட்சியதிகாரத்தில் இருக்காத காரணத்தால் அத்தகைய  புதிய  வேட்பாளர்களை அடையாளம் காண்பதிலும் அவர்களுக்கு சிரமமில்லை.

அதனால், மற்றைய கட்சிகளும் புதிய முகங்களை களத்தில் இறக்குவதற்கு நிர்ப்பந்திக்கப்படலாம். ஆனால் அந்த கட்சிகளை  விடவும் அது விடயத்தில்  தேசிய மக்கள் சக்தி  பெருமளவுக்கு அனுகூலமான நிலையில் இருக்கிறது.   

பொதுவில் அரசியல்வாதிகளை பழிபாவத்துக்கு அஞ்சாத ஒரு கூட்டமாகவே மக்கள் பார்க்கிறார்கள். இரு வருடங்களுக்கு முன்னர் மக்கள் கிளர்ச்சியின்போது ராஜபக்சாக்களும் அவர்களுடன் இருப்பவர்களும் மாத்திரமல்ல, 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் வீட்டுக்கு போகவேண்டும் என்று மக்கள் குரலெழுப்பியதை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். 

மிகவும் சுலபமாக குறுகிய காலத்திற்குள்  பெருமளவு சொத்துக்களை குவிக்கக்கூடிய ஒரு மார்க்கமாக  இன்று அரசியல் விளங்குகிறது. அந்த கெடுதியான அரசியல் கலாசாரத்தை  மாற்றுவததை நோக்கிய  முதற்படியாக எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை மக்களினால் நிச்சயமாக பயன்படுத்தமுடியும்.

இது இவ்வாறிருக்க, வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் ஐக்கியம் பற்றி உரத்துப்பேசிய வண்ணம்  தொடர்ந்து பிளவுபட்டுக்கொண்டு போகின்றன. எந்தவொரு கட்சிக்குள்ளும்  ஒழுங்கு  கட்டுப்பாடு என்பது மருந்துக்கும் கிடையாது. கட்சிகளின் உண்மையான நிலைப்பாட்டை எவர் பேசுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியாமல் தமிழ் மக்கள் தடுமாறுகிறார்கள். 

ஏற்கெனவே சிதறுப்பட்டுக் கிடக்கும் இலங்கை தமிழ் அரசியல் சமுதாயம் ஒன்றுபடுவதற்கான எந்த சாத்தியத்தையும் எதிர்பார்க்க முடியாது. தலைவர்கள் எனப்படுவோரின்  அகம்பாவமே தலைதூக்கி நிற்கிறது.

இலங்கை தமிழ் மக்களின் இன்றைய நிலைப்பாட்டை தென்னிலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கூறுவதற்காக ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்திய தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பு என்ற இயக்கத்திற்குள் தேர்தல் முடிந்து இரு வாரங்களுக்குள்ளாகவே பாராளுமன்ற தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பில்  முரண்பாடுகள் தோன்றிவிட்டன.

இலங்கை தமிழர் அரசியலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும் என்ற விபரீதமான முனைப்புடன் செயற்படும் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் உள்ள சில குழுக்களும் தனவந்தர்களும் வடக்கு, கிழக்கு அரசியலை ஊழல்தனமானதாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். 

அடுத்த பாராளுமன்றத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு கட்டுறுதியான ஒரு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகக்கூடிய ஆபத்து இருக்கிறது.

காலம் வேண்டி நிற்பதற்கு ஏற்றமுறையில் உருப்படியான எந்த  அணுகுமுறையையும் கடைப்பிடிக்காமல்  வெறுமனே தீவிர தேசியவாத சுலோகங்களை உச்சரித்துக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் மீது மக்கள் கடுமையாக வெறுப்படைந்திருக்கிறார்கள். 

தென்னிலங்கையில் மக்கள் பாரம்பரியமான அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் நிராகரிக்கத் தொடங்கியிருப்பதைப் போன்று வடக்கு, கிழக்கிலும் ஒரு நிராகரிப்பு காலத்தின் தேவையாகிறது.

ஒரு மாற்றமாக பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது குறித்து தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் சிந்திக்கத் தொடங்கியிருப்பது ஒன்றும் இரகசியம் அல்ல.

https://www.virakesari.lk/article/195674

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஏராளன் said:

ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களுக்காக அலைந்த களைப்பு போவதற்கு முன்னதாக அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. குறிப்பாக, பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களில் தோல்வியடைந்தவர்களின் கட்சிகள் தோல்வியின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு முன்னதாக மீண்டும் தேசிய தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது.

களைப்பாக இருந்தால் போய் களைப்பாறுங்கள்.

அடுத்தவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

மக்களுக்கு சேவை செய்பவன் ஒரு போராளி மாதிரி எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டும்.

Posted
2 hours ago, ஏராளன் said:
07 OC

தென்னிலங்கையில் மக்கள் பாரம்பரியமான அரசியல் கட்சிகளையும் தலைவர்களையும் நிராகரிக்கத் தொடங்கியிருப்பதைப் போன்று வடக்கு, கிழக்கிலும் ஒரு நிராகரிப்பு காலத்தின் தேவையாகிறது.

 

https://www.virakesari.lk/article/195674

முற்றிலுமாக, சுமந்திரன், கஜேந்திரன், டக்கிளஸ், விக்கினேஸ்வரன் உட்பட அனைவரையும் தமிழ் மக்கள் நிராகரிக்கத் தொடங்க வேண்டும். இவர்களால் இந்த 15 வருடங்களில் எந்த நன்மையும் ஏற்படவில்லை, என்பதுடன் இவர்களின் புழுத்துப் போன, வங்குரோத்து அரசியலால் தமிழ் இளைய சமுதாயம், அரசியலை விட்டே தூர விலகி நிற்கின்றது.

இவர்களுடன் சேர்ந்து, தாயக அரசியலில் இருந்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் செல்வாக்கும் முற்றாகத் களையப்படல் வேண்டும். இன்றிருக்கும் தமிழ் அரசியல்வாதிகளை நிராகரிப்பதன் மூலமே இது சாத்தியமாகும்.

அனைவரும் நிராகரிக்கப்பட்டு, மீண்டும் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிப்பதே தமிழ் மக்களுக்கு நன்மை தரும்.

இயற்கை வெற்றிடங்களை நிரப்பாமல் விடுவதில்லை. 
 

  • Like 6
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, நிழலி said:

தாயக அரசியலில் இருந்து புலம்பெயர் தமிழ் அமைப்புகளின்

அமைப்புகள் என்று அழுத்திச் சொல்லுங்கள் ... புலம்பெயர் மக்கள் என்று யாரும் நினைத்துக்கொள்ள கூடாது.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.