Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

232140.jpg

நமது உடல் வலிமைபெற வேண்டுமானால் தொடர்ச்சியான உடற்பயிற்சிகள் அவசியம் என்பது நாம் அறிந்ததே. அதுபோலவே மனரீதியாக நம்மை வலுப்படுத்திக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?. அதற்கென்று நாம் செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத சில பழக்கங்கள் இருக்கவே செய்கின்றன. முக்கியமாக நாம் சிக்கல்களை எதிர்கொள்ளும் கடினமான நேரங்களில் இந்த மனவலிமையே அவற்றை வெற்றிகரமாக கடந்துசெல்ல உதவுகின்றது. இதன்மூலமே வாழ்வின் உண்மையான வெற்றியையும் மகிழ்ச்சியையும் நம்மால் பெறமுடிகின்றது.

மனவலிமை அதிகரிக்கும்போது நமது ஒட்டுமொத்த அணுகுமுறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதன்மூலம் நமது வாழ்க்கையின் தரத்தினையும் மேம்படுத்திக்கொள்ள முடிகின்றது. இதற்கான வழிமுறைகளைச் சொல்கிறது உளவியலாளர் “அமி மோரின்” அவர்களின் படைப்பான இந்தப் புத்தகம். மனவலிமையுடன் இருப்பவர்கள் செய்யாத பதிமூன்று விஷயங்களை இதில் விவரித்துள்ளார் ஆசிரியர். செய்யக்கூடிய விஷயங்களை சொல்வதற்கு மத்தியில் செய்யக்கூடாத விஷயங்களை சொல்லியிருப்பது ஆசிரியரின் மாறுபட்ட பார்வையைக் காட்டுகின்றது.

எது மனவலிமை?

அனைவருமே அவரவருக்கான குறிப்பிட்ட அளவு மனவலிமையுடனேயே இருக்கிறோம். இதில் மனவலிமை உடையவர்கள் அல்லது மனம் பலகீனமானவர்கள் என்றெல்லாம் ஒன்றுமில்லை. ஆனால், நாம் கொண்டிருக்கும் மனவலிமையை மேம்படுத்திக் கொள்வதற்கான களம் எப்போதுமே இருக்கவே செய்கின்றது என்ற அடிப்படை உண்மையை நினைவில் வைக்கவேண்டியது அவசியம். நமது எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் நடத்தைகள் ஆகியவற்றை சீராக்குவதற்கான திறனை செம்மைப்படுத்துவதே மனவலிமையின் மேம்பாட்டிற்கான வழி. நம்மிடமுள்ள முரண்பாடான எண்ணங்களை சரியாக கண்டறிந்து, அதற்குப் பதிலாக மிகவும் யதார்த்தமான எண்ணங்களை மாற்றியமைக்க வேண்டும். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நமது நடத்தையானது நேர்மறையான முறையில் இருக்கவேண்டும். நமது உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும், அப்போதுதான் உணர்வுகளின் கட்டுப்பாட்டுக்குள் நாம் வராமல் இருக்கமுடியும்.

தேவையற்ற பரிதாபம்!

வலிகளும் துன்பங்களும் இல்லாத வாழ்க்கையே இல்லை என்பது நாம் அறிந்ததே. நமக்கு ஏற்படும் துன்பத்திற்காகவோ அல்லது சிக்கலுக்காகவோ நமக்கு நாமே பரிதாபப்பட்டுக் கொள்ளக்கூடாது என்கிறார் ஆசிரியர். மனோதிடம் உள்ளோர் இச்செயலை செய்வதில்லை. இந்த சுய இரக்கமானது உண்மையில் நமக்கு அழிவைத்தரக்கூடிய ஒன்றே. ஆம் நமது பொறுப்புகளை தவிர்ப்பதற்கான காரணங்களை கொடுக்கக்கூடியதாகவும் இது உள்ளது. இதனால் புதிய பிரச்சினைகள் உருவாகிறதே தவிர, இருக்கின்ற பிரச்சினைகள் தீரப்போவதில்லை. மேலும், சுய இரக்கமானது அதிகப்படியான எதிர்மறை உணர்வுகளை தோற்றுவித்து, நமது மனோபலத்தை சிதைத்துவிடும் தன்மையுடையது.

பயமறியா மாற்றம்!

மனவலிமை உடையவர்கள் மாற்றத்தைக்கண்டு விலகிச்செல்வதோ அல்லது பயப்படுவதோ இல்லை. மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தவறும்போது நமது தனிப்பட்ட வளர்ச்சி பெருமளவில் பாதிப்படைகின்றது. வித்தியாசமான மாறுபட்ட புதிய செயல்பாடுகள் இல்லாதபோது நமது வாழ்க்கை சலிப்படைகிறது. இதனால் நம்மால் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடிவதில்லை. இது சரியில்லை, என்னால் முடியாது, இது கடினமானது போன்ற எதிர்மறை எண்ணங்களை அறவே விட்டொழித்து மாற்றத்திற்கு நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.

கட்டுப்பாட்டில் கவனம்!

தனது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைக் குறித்து மனவலிமை உடையவர்கள் கவலைப்படுவதில்லை என்கிறார் ஆசிரியர். அனைத்தையும் நமது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும் என்ற முயற்சி கவலையிலேயே முடியும். இம்மாதிரியான விஷயங்களை குறித்து சிந்திப்பதே நேரத்தையும் ஆற்றலையும் வீணடிக்கும் செயல். மேலும் இதனால் மற்றவர்களின் மீதான தவறான மதிப்பீடு மற்றும் உறவுகளில் சேதம் போன்ற விஷயங்களுக்கு அடித்தளமிட்டுவிடும் ஆபத்தும் உள்ளது. உதாரணமாக நமது அலுவலகத்தில் நமக்கான பணியை நம்மால் சிறப்பாக செய்யமுடியுமே தவிர, அதை அங்கீகரிக்குமாறு நிர்வாகத்தையோ அல்லது மேலாளரையோ நம்மால் வற்புறுத்த முடியாது. நமது பணி மட்டுமே நம் கட்டுப்பாட்டில் உள்ள செயல். அதற்கான அங்கீகாரம் என்பது நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயம்.

பழையன கழிதல்!

நிகழ்கால வாழ்க்கையை நேற்றைய முடிந்துபோன விஷயங்களில் மனவலிமையுடையோர் தொலைத்துவிடுவதில்லை. இன்றைய நமது சூழ்நிலை மகிழ்ச்சியற்றதாக உள்ள நிலையில், தன்னிச்சையாக நமது மனம் முந்தைய மகிழ்ச்சியான நினைவுகளை அசைபோட ஆரம்பித்துவிடுவது வாடிக்கையே. ஆனால் இது பல உபாதைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றது. மாற்றவே முடியாத முடிந்துபோன விஷயங்களினால், மாற்றமுடிந்த நிகழ்கால நிகழ்வுகளை இழந்துவிடுகிறோம். மேலும், நமது திட்டமிடுதல், திறன், அணுகுமுறை போன்றவற்றிலும் பெரும்பாதிப்பினை ஏற்படுத்திவிடுகின்றது. ஆக பழையன கழிதலே, புதியன புகுதலுக்கான வழி என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

மீண்டும் மீண்டும்!

மனவலிமை உடையோர் தாங்கள் செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வதில்லை. ஒருமுறை செய்த தவறை தொடர்ந்து செய்வது பலவிதமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கின்றது. தவறுகளை கண்காணிப்பதிலேயே தொடர்ந்து இருந்துவிடும் நிலையில், நம்மால் இலக்கினை நோக்கி முன்னேறிச்செல்ல முடியாத சூழல் ஏற்படுகின்றது. மேலும் குறிப்பிட்ட எந்தவொரு பிரச்சனைக்கும் நீடித்த தீர்வு என்ற ஒன்று கிடைப்பதில்லை. சரியான திட்டமிடல், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி போன்ற நற்பண்புகளும் தடைப்பட்டுவிடுகின்றன. ஒருமுறை தவறு ஏற்படும்போது அதை சரியாக ஆராய்ந்து, அதற்கான மாறுபட்ட சிறப்பான தீர்வை கண்டறிந்தால் மட்டுமே அதே தவறு மறுமுறை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

தேவையற்ற பொறாமை!

நாம் என்ன செய்கிறோம், நமக்கான இலக்கு என்ன என்பதையெல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு, மற்றவர்களின் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி அவர்களது வெற்றியின்பால் பொறாமை கொள்வது என்பது, மனவலிமை உடையவர்களால் செய்யப்படாத முக்கிய செயலாகப் பார்க்கப்படுகிறது. ஆம். இந்த மனநிலையானது, மிக எளிதாக நமது ஒட்டுமொத்த வாழ்வினையும் ஆக்கிரமிக்கும் ஆற்றலுடையது. மேலும் இது நமது தனிப்பட்ட செயல்பாடுகளின் மீதான கவனத்தை தடுத்துநிறுத்தி நமக்கான வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. மன அமைதி குறைதல், கவனக்குறைவு, மதிப்பிழப்பு, மனஸ்தாபம் போன்ற எதிர்மறை நிகழ்வுகளும் பொறாமையினால் நமக்கு கிடைக்கும் பரிசுகளே.

விடாமுயற்சி!

தோல்விக்குப் பிறகான தங்களது முயற்சிகளை மனவலிமையுடையவர்கள் நிறுத்திக்கொள்வதில்லை. தோல்வியானது ஏற்றுக்கொள்ளமுடியாதது, எல்லாமே எனது தவறுகளே, தோல்வியால் மற்றவர்கள் என்னை ஏற்றுக்கொள்வதில்லை, வெற்றிக்கான விஷயம் என்னிடமில்லை, ஒருமுறை தோல்வியடைந்தால் பின்னர் வெற்றிபெறமுடியாது போன்ற எண்ணங்களே விடாமுயற்சிக்கான தடைகள் என்பதை கவனத்தில்கொண்டு அவற்றை அறவே நீக்கிவிடவேண்டும். என்னால் தோல்வியை திறம்பட கையாளமுடியும், தோல்வியானது வெற்றிக்கான பயணத்தின் ஒரு பகுதியே, தோல்விகளிலிருந்து என்னால் கற்றுக்கொள்ள முடியும், தோல்வியானது எனது முயற்சிக்கான சவால், தோல்வியை தாண்டிவருவதற்கான ஆற்றல் என்னிடமுள்ளது போன்ற எண்ணங்களே விடாமுயற்சிக்கான விதைகள் என்பதை கவனத்தில் கொண்டு அவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

பயிற்சி முக்கியம்!

வெறுமனே புத்தகத்தைப் படிப்பதனால் மட்டுமே நம்மால் எந்த விஷயத்திலும் ஒருபோதும் நிபுணத்துவம் பெறமுடியாது. விளையாட்டு வீரர்கள் தங்களது விளையாட்டு பற்றிய நுணுக்கங்களை படித்து தெரிந்துக்கொள்வதால் மட்டுமே, அவர்களால் சிறந்த போட்டியாளர்களாக மாறிவிட முடியாது. மற்ற இசைக்கலைஞர்களின் இசையை கேட்பதனால் மட்டுமே, ஒருவரால் தனது இசைத்திறனை அதிகரித்துக்கொள்ள முடியாது. இவற்றையெல்லாம் தாண்டிய பயிற்சியே ஒருவரை அவரவர் துறையில் சிறந்து விளங்கச்செய்கிறது. அதுபோலவே எந்தவொரு விஷயமானாலும் அது செயல்பாட்டிற்கு வரும்போது மட்டுமே நீடித்த வெற்றியைப் பெறமுடியும்.

p.krishnakumar@jsb.ac.in

https://www.hindutamil.in/news/business/232140--5.html

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதிகம் கோபபடாமல் இருந்தாலே மனவலிமை தானாக வந்துவிடும். 

கோபம் அதிகம் இருந்தால் அதிக நட்பு வட்டம் இருக்காது, இருக்கும் கொஞ்சமும் புட்டுக்கிட்டு போகும்.

உடலாலும் மனதாலும் எதிரிகள் அதிகமாகும் , எதிரிகள் அதிகமானால் எந்த மனவலிமை இருந்தாலும் அம்மஞ்சல்லிக்கு பிரயோசனம் இல்லை என்பதே அடியேனின் எண்ணம். 

எதிரிகள் அதிகம் இல்லையென்றால் எந்த சபைக்கும் கெளரவமாய் போய் வரலாம், நம்முடன் அதிக நட்பு கொண்டிராதவன்கூட நமக்கொரு பிரச்சனையென்றால் பரிந்து பேச வருவான்.

எடுத்ததுக்கெல்லாம் கோபம் கொண்டு தகராறு வளர்ப்பவர்களின் நண்பர்கள்கூட பொறுத்த நேரத்தில் காய் வெட்டிவிடுவார்கள்.

  • Like 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.