Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கூகுள்

பட மூலாதாரம்,SHIVAUN AND ADAM RAFF

படக்குறிப்பு, ஷிவான் ராஃப் மற்றும் அவரது கணவர் ஆடம், கூகுளுக்கு எதிராக நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தினர்.
  • எழுதியவர், சைமன் டுலெட்
  • பதவி, பிபிசி செய்தியாளர்

"எங்கள் தளத்தை கூகுள் இணையத்தில் இருந்து மறையச் செய்துவிட்டது" என்று ஒரு முக்கியமானக் குற்றச்சாட்டை ஷிவான் ராஃப் மற்றும் அவரது கணவர் ஆடம் ராஃப் ஆகியோர் முன்வைத்துள்ளனர்.

பிரிட்டனை சேர்ந்த ஷிவான் ராஃப் - ஆடம் ராஃப் தம்பதி 2006 ஆம் ஆண்டு, ஜூன் மாதத்தில், நல்ல ஊதியம் வரும் வேலையை விட்டுவிட்டு, `ஃபவுண்டெம்’ (Foundem) என்ற 'விலை ஒப்பீட்டு’ இணையதளத்தைத் தொடங்கினர்.

பொதுவாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களை தொடங்கும் தொழில்முனைவோருக்கு அதன் முதல் நாள் உற்சாகமும், அச்சமும் நிறைந்ததாக இருக்கும். ஆனால், ஷிவான் மற்றும் ஆடமுக்கு முதல் நாளே மோசமாக இருந்தது.

இருவரும்` Foundem’ என்னும் இணையதளத்தை தொடங்கியபோது, அடுத்தடுத்த நாட்களில் தங்கள் ஸ்டார்ட்அப்பிற்கு பெரிய பிரச்னை வரப்போகிறது என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

கூகுள் ஸ்பேம் ஃபில்டர்கள் ஏற்படுத்திய பாதிப்பு?

கூகுள் தேடுபொறியின் தானியங்கி ஸ்பேம் ஃபில்டர்களில் ஒன்றின் காரணமாக `ஃபவுண்டெம்’ இணையதளம் மீது கூகுள் சர்ச் பெனால்டி (`Google search penalty’) விதிக்கப்பட்டது. இது அவர்களின் இணையதளத்தின் வணிகத்தை பாதித்தது.

விலை ஒப்பீடு பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ராஃப் தம்பதியினரின் `ஃபவுண்டெம்’ இணையதளம், ஷாப்பிங் செய்பவர்கள் வெவ்வேறு விற்பனையகங்களில் விலை ஒப்பீட்டை தெரிந்து கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதன்படி பயனர்கள் விலை ஒப்பீடு தொடர்பான தகவல்களை பெற `ஃபவுண்டெம்’ லிங்க்-ஐ கிளிக் செய்து அதில் பட்டியலிட்டிருக்கும் பொருட்களை கிளிக் செய்யும் போது ராஃப் தம்பதிக்கு வருவாய் வரும்.

ஆனால், கூகுள் விதித்தக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்த செயல்பாடு பாதிக்கப்பட்டது. இணையதளத்தில் இருந்து பணம் சம்பாதிப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. மேலும், விலை ஒப்பீடு மற்றும் ஒப்பீடு ஷாப்பிங் தொடர்பான கூகுள் தேடல் முடிவுகளின் பட்டியலில் `ஃபவுண்டெம்’ மிகவும் பின்தங்கியது.

"எங்கள் இணையதளத்தை நாங்கள் கண்காணித்துக் கொண்டிருந்தோம். கூகுள் தேடலில் அவை எவ்வாறு தரவரிசை செய்யப்படுகின்றன என்பதை பார்த்தபோது, அவை அனைத்தும் உடனடியாக வீழ்ச்சியடைந்ததைக் கவனித்தோம்" என்று ஆடம் கூறுகிறார்.

 

கூகுளுக்கு எதிரான நீடித்த சட்டப் போராட்டம்

ஃபவுண்டெம் தளத்தின் முதல் நாள் திட்டமிட்டபடி போகவில்லை. இது 15 ஆண்டுகளாக நீடித்த சட்டப் போராட்டத்திற்கு வழிவகுத்தது.

தம்பதியினரின் சட்டப்போராட்டத்தின் இறுதியில் கூகுளுக்கு 2.4 பில்லியன் பவுண்டுகள் (ஏறக்குறைய 26 ஆயிரம் கோடி ரூபாய்) அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் கூகுள் தனது சந்தை ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் நம்பப்பட்டது.

பிரிட்டன் தம்பதியின் நீடித்த சட்டப் போராட்டம் :  கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் உலகளாவிய ஒழுங்குமுறையில் இந்த வழக்கு வரலாற்று தருணமாக பார்க்கப்பட்டது.

ஜூன் 2017இல் வெளியிடப்பட்ட அந்த தீர்ப்பை எதிர்த்து கூகுள் ஏழு ஆண்டுகள் போராடியது. இந்த ஆண்டு செப்டம்பரில், ஐரோப்பாவின் உயர் நீதிமன்றமான `ஐரோப்பிய நீதிமன்றம்’ கூகுளின் மேல்முறையீடுகளை நிராகரித்தது.

அந்த இறுதித் தீர்ப்பிற்குப் பிறகு, ரேடியோ 4 இன் தி பாட்டம் லைனிடம் ஷிவான் மற்றும் அடாம் கொடுத்த முதல் நேர்காணலில், தங்கள் இணையத்தளத்திற்கு ஏற்பட்ட தடங்கலை ஆரம்பத்தில் சிறிய பிரச்னை தான் என்று நினைத்ததாக விளக்கினர்.

55 வயதான ஷிவான் கூறுகையில், “ஆரம்பத்தில் எங்கள் இணையதளத்தை கூகுள் ஸ்பேம் என்று தவறாக கருதியிருக்கலாம் என்று நினைத்தோம். சரியான இடத்தில் புகார் அளித்தால், இந்த தவறு சரி செய்யப்படும் என நினைத்தோம்.” என்றார்.

ஆடம் (58) பேசுகையில், "இணையதளத்துக்கு பயனர்கள் வரவில்லை எனில், டிராஃபிக் ஏற்படாது (Website Traffic). எனவே வருவாயும் வராது” என்றார்.

 

அந்தத் தம்பதியினர் இணையதளத்தின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்கக் கோரி கூகுளுக்குப் பல கோரிக்கைகளை அனுப்பினர். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், எதுவும் மாறவில்லை என்றும், தங்களுக்கு எந்தப் பதிலும் வரவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

இதற்கிடையில், அவர்களின் இணையதளம் மற்ற தேடுபொறிகளில் (search engine) எந்த பிரச்னையும் இன்றி தரவரிசையில் இருந்தது. ``ஆனால் மக்கள் பெரும்பாலும் கூகுள் தேடுபொறியை தான் பயன்படுத்துகிறார்கள்" என்பது ஷிவானின் கருத்து.

அதன் பின்னர், கூகுளால் தங்கள் வலைதளம் மட்டும் பாதிக்கப்படவில்லை என்பதை தம்பதியினர் அறிந்து கொண்டனர். 2017 ஆம் ஆண்டில் கூகுள் தவறிழைத்தது உண்மை எனக் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டபோது, கெல்கு (Kelkoo), டிரிவாகோ (Trivago) மற்றும் யெல்ப் (Yelp) உள்ளிட்ட 20 நிறுவனங்கள் கூகுள் மீது குற்றம்சாட்டி இருந்தன.

கூகுள் நிறுவனம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முன்னதாக, சூப்பர் கம்ப்யூட்டிங் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆடம், ஒரு நாள், தனது அலுவலகத்திற்கு வெளியே சிகரெட் புகைத்துக்கொண்டிருந்த போது, திடீரென ஃபவுண்டெம் இணையதளத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு வந்ததாக அவர் கூறுகிறார்.

விலை ஒப்பீட்டு இணையதளங்கள் ஆரம்ப நிலையில் இருந்த காலம் அது. அந்த நேரத்தில், ஒவ்வொரு இணையதளமும் ஒரு குறிப்பிட்ட தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்றது. ஆனால், ஃபவுண்டெம் இவை அனைத்திலிருந்தும் வேறுபட்டது. இங்கு வாடிக்கையாளர்களுக்கு ஆடைகள் முதல் விமானங்கள் வரை பல வகையான பொருட்களின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஷிவான் பல உலகளாவிய பிராண்டுகளுக்கு மென்பொருள் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். "எங்கள் இணையதளம் தனித்துவமாக வடிவமைக்கப்பட்டிருந்தது" என்று அவர் புன்னகையுடன் கூறுகிறார்.

 

ஐரோப்பிய ஆணையத்தின் தீர்ப்பு

ஐரோப்பிய ஆணையம் 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட தீர்ப்பில், கூகுள் தனது சொந்த ஒப்பீட்டு ஷாப்பிங் சேவையை தேடல் (google search) முடிவுகளில் சட்டவிரோதமாக ஊக்குவித்ததும், இதனால் இதுதொடர்பான இணையதளங்களை பின்னுக்குத் தள்ளியதும் கண்டறியப்பட்டது.

``பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஃபவுண்டெம் நிறுவப்பட்ட காலத்தை திரும்பிப் பார்க்கும்போது, கூகுள் வேண்டுமென்றே இவ்வாறு செய்யும் என்பதை நாங்கள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அந்த சமயத்தில் இதுபோன்ற இணையதளங்கள் மிகவும் குறைவு” என்று ஆடம் கூறுகிறார்.

அத்தம்பதியினர் 2008 ஆம் ஆண்டின் இறுதியில், ஏதோ தவறு இருப்பதாக சந்தேகிக்கத் தொடங்கினர். கிறிஸ்துமஸுக்கு மூன்று வாரங்களுக்கு முன்பு தம்பதியினருக்கு அவர்களின் இணையதளம் திடீரென மெதுவாகிவிட்டதாக எச்சரிக்கை செய்தி வந்தது.

இதுபற்றி ஆடம் சிரித்துக்கொண்டே கூறுகையில், “முதலில் சைபர் தாக்குதல் என்று நினைத்தோம், ஆனால் உண்மையில் அனைவரும் எங்கள் இணையதளத்தைப் பார்க்கத் தொடங்கி இருந்தனர். டிராஃபிக் அதிகமானதால், தளம் மெதுவாகிவிட்டது” என்றார்.

ஃபவுண்டெம்

பட மூலாதாரம்,FOUNDEM

சேனல் 5 இன் தி கேட்ஜெட் ஷோவில் பிரிட்டனின் சிறந்த விலை ஒப்பீட்டு இணையதளமாக ஃபவுண்டெம் தளத்தைப் பெயரிட்டது.

ஷிவான் கூறுகையில், "அந்த எச்சரிக்கை செய்தி மிகவும் முக்கியமானது. அதற்குப் பிறகு நாங்கள் கூகுளைத் தொடர்புகொண்டு, 'கூகுள் பயனர்களுக்கு எங்கள் இணையதளம் தெரியவில்லை. கூகுள் தேடலில் எங்கள் இணையதளம் மறைக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்களுக்கும் எங்களுக்கும் எந்தப் பலனும் இல்லை' என்று கூறினோம்” என்று விவரித்தார்.

"அப்போதும் கூகுள் எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. அதன் பிறகு தான் நாங்கள் நீதியை பெற போராட வேண்டும் என்பதை உணர்ந்தோம்" என்கிறார் ஆடம்.

ராஃப் தம்பதியர் பத்திரிகையாளர்களிடம் சென்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால், அதில் பெரிதாக பலன் கிடைக்கவில்லை. இதற்குப் பிறகு, ஆடம் இதுதொடர்பாக, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரஸ்ஸல்ஸ் ஒழுங்கமைப்புகளிடம் வழக்கை முன்வைத்தார்.

இதற்குப் பிறகு, இந்த விவகாரம் ஐரோப்பிய ஆணையத்திடம் சென்றது. 2010-ம் ஆண்டு விசாரணை தொடங்கியது. தம்பதியினர் பின்னர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஒரு அறையில் ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் தங்கள் முதல் சந்திப்பை நடத்தினர்.

அந்த நேரத்தை நினைவு கூர்ந்த ஷிவான், "ஒழுங்குமுறை அதிகாரி என்னிடம் கேட்ட ஒரு விஷயம் என்னவென்றால், இது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தின் செயல்பாடு தொடர்பான பிரச்னை. ஆனால் இவ்வாறு புகார் வருவது இது தான் முதல்முறை. இப்படி நடந்ததாக இதுவரை யாருமே வரவில்லையே” என்றார்.

ஷிவான் மேலும் பேசுகையில் "எங்களும் மட்டும் தான் இப்படி நடந்திருக்கிறது என 100% உத்தரவாதத்துடன் சொல்ல முடியாது. வழக்கு தொடுக்க மக்கள் பயப்படுகிறார்கள் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். ஏனெனில் இணையத்தில் உள்ள அனைத்து வணிகங்களும் கூகுளில் இருந்து அவர்கள் பெறும் டிராஃபிக்கை சார்ந்துள்ளது." என்றார்.

"காயப்படுத்துபவர்களை நாங்கள் விரும்பவில்லை"

ஒழுங்குமுறை ஆணையம் இருந்த கட்டடத்திலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்துள்ள பிரஸ்ஸல்ஸில் உள்ள ஹோட்டல் அறையில் தம்பதியினர் தங்கியிருந்தனர். ஷிவான் மற்றும் ஆடம் தங்களது தீர்ப்புக்காக காத்திருந்தனர். அவர்கள் மட்டுமின்றி மற்ற ஷாப்பிங் இணையதளங்களும் காத்திருந்தன.

ஒழுங்குமுறை ஆணையர் மார்கிரேத் வெஸ்டேஜர் இறுதியாக முடிவை அறிவித்தார். முடிவு அறிவிக்கப்பட்டது, ஆனால் உடனடியாக அவர்கள் கொண்டாடவில்லை. காரணம் இந்த முடிவை ஐரோப்பிய ஆணையம் விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்வதில் அனைவரின் கவனமும் குவிந்தது.

 

" கூகுள் எங்களுக்கு இப்படியொரு விஷயத்தை செய்திருப்பது அவர்களுக்கு துரதிருஷ்டவசமாகிவிட்டது" என்கிறார் ஷிவான்.

"நாங்கள் இருவரும் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும் என்ற உத்தரவாதமற்ற நம்பிக்கையை நாங்கள் கொண்டிருந்தோம். நாங்கள் உண்மையில் காயப்படுத்துபவர்களை (bullies) விரும்புவதில்லை," என்று அவர் கூறினார்.

கடந்த மாதம் இந்த வழக்கில் கூகுள் தோல்வியடைந்த போதிலும், ராஃப் தம்பதியின் போராட்டம் இன்னும் ஓயவில்லை.

பிரிட்டன் தம்பதியின் நீடித்த சட்டப் போராட்டம் :  கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கூகுளின் அணுகுமுறை இன்னும் மாறவில்லை என்றும் ஐரோப்பிய ஆணையம் இந்த விஷயத்தை விசாரித்து வருகிறது என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

இந்த ஆண்டு மார்ச் மாதம், ஐரோப்பிய ஆணையம் அதன் புதிய டிஜிட்டல் சந்தைகள் சட்டத்தின் கீழ் கூகுளின் முதன்மை நிறுவனமான `ஆல்பாபெட்’ (Alphabet) மீது விசாரணையைத் தொடங்கியது.

கூகுள் தேடல் முடிவுகளில் கூகுள் இன்னும் அதன் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறதா என்பதை அறிவதே இதன் நோக்கமாக இருந்தது.

 

கூகுள் தரப்பு விளக்கம்

கூகுள் செய்தித் தொடர்பாளர், "ஐரோப்பிய நீதிமன்றத்தின் முடிவு 2008 மற்றும் 2017க்கு இடையில் தயாரிப்பு முடிவுகளை நாங்கள் எவ்வாறு காட்டினோம் என்பது பற்றியது தான்." என்றார்.

அவர் மேலும் கூறுகையில் : "ஐரோப்பிய ஆணையத்தின் முடிவுக்கு இணங்க 2017 இல் நாங்கள் செய்த மாற்றங்கள் ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகச் செயல்பட்டன. 800க்கும் மேற்பட்ட ஒப்பீட்டு ஷாப்பிங் சேவை இணையதளங்களுக்கு பில்லியன் கணக்கான கிளிக்குகள் பதிவானது."

"எனவே , ஃபவுண்டெம் நிறுவனர்களை கூற்றுக்களை நாங்கள் தொடர்ந்து கடுமையாக எதிர்ப்போம், மேலும் இந்த வழக்கை நீதிமன்றம் பரிசீலிக்கும் போதும் அதைச் செய்வோம்" என்று அவர் கூறினார்.

ராஃப் தம்பதியினர் கூகுளுக்கு எதிராக ஒரு சிவில் வழக்கையும் தாக்கல் செய்துள்ளனர், இது 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் விசாரிக்கப்பட உள்ளது.

ஆனால், ராஃப் தம்பதி இறுதியில் வழக்கில் வெற்றி பெற்றிருந்தாலும், அது அவர்களுக்கு அதிக பலனைத் தராது. ஏனெனில், 2016 இல் ஃபவுண்டெம் இணையத்தளத்தை மூட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டது.

கூகுளுக்கு எதிரான இந்த நீண்ட போராட்டம் தம்பதியருக்கும் கடினமாக இருந்தது என்கின்றனர். ஆடம் கூறுகையில், "இந்த போராட்டம் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தால், நாங்கள் இதைச் செய்ய முடிவு செய்திருக்க மாட்டோம்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தத் தம்பதியினர் துணிவாக இறுதிவரை போராடியிருக்கின்றனர் . ........ பாராட்டுக்கள் . .....!  👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.