Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக இன்று  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தன்னறம் இலக்கிய விருது – 2024

jeyamohanNovember 10, 2024

1%E0%AE%83-780x1024.jpg

ஷோபா சக்திக்கு வாழ்த்துக்கள்

ஜெ

எண்பதுகளின் காலகட்டத்திலேயே எழுதத் தொடங்கிய எழுத்தாளர் ஷோபா சக்தி, அப்போதிருந்து இன்று வரையிலான நாற்பதாண்டு காலகட்டத்தில் சுய வாழ்வு அலைக்கழிக்கபட்ட காலங்களின் இருள் பாதை நெடுகிலும் வாழவனுபவங்களைக் கதைகளாக்கி விதைத்து வருபவர். எழுத்தைக் கடவுளாகவும் சாத்தானாகவும் நம்புகிறவார்.  சென்று சேர்ந்த எல்லா நிலங்களிலும் அவர் சுமந்தலையும் நிலத்தின் ரத்தம் செறித்தக் கதைகளை சொல்லி வருகிறார்.

தொண்ணூறுகளின் காலகட்டத்தில் இருந்து குறிப்பிடத் தகுந்த பங்களிப்பையும், தீவிரமான செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு புனைவுப் பரப்பில் தனக்குரிய தனி பயணத்தை கொண்டிருப்பவர். அகதி வாழ்வு, நீங்காத அலைச்சல், அடையாளத் துயர், கதை, மொழி, அரசியல் ஆகிய உயிர்நிலைகளில்   ஷோபா சக்தியின் செயல்கள் தன்னை நிலைநிறுத்திக் கொள்கின்றன. அது நிலங்களைத் தாண்டி தன் அலைக்கழிப்பை இலக்கியத்தின் மூலம் முற்றளித்து, யுத்தத்தின் ரத்த சாட்சியாக தன்னை முன்னிறுத்தும் கலை நேர்மையின் பாங்கு உடையது. சமகால அரசியலும் இலக்கிய அழகியலிலும் காலத்தின் உண்மையுணர்வை அலைச்சலின் மொழியால் நிழல் படிமமாக புனைவில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதனால், சின்னஞ்சிறிய தீவுகளில் இருந்து உலகளாவிய அடையாளம் கொண்ட சுய வாழ்வின் மீதுள்ள நெருக்கடியை எந்த ஒப்பனைகளும் இன்றி புனைவுகளில் நம்மால் சந்திக்க முடிகிறது. சமூகத்தின் கூட்டுப் உணர்வான மௌனத்தின் அவல ஆழங்களை அனுபவப் பகிர்வாக முன்வைக்கும் ஷோபா சக்தி அவர்களின் புனைவுகளை நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் பங்களிப்பாகக் கருதுகிறோம்.

கொரில்லா, பாக்ஸ் கதைகள், இச்சா, ம், ஸலாம் அலைக் ஆகிய புதினங்களையும் தமிழின் மிக முக்கியச் சிறுகதைகள் கட்டுரைகள் பலவற்றையும் எழுதித் தந்திருக்கிறார். பதிப்பாசிரியராக சில அவசியமான படைப்புகளை வெளியீட்டும் வருகிறார்.

தமிழ்ப்படைப்புலகில் தவிர்த்துவிட முடியாத எழுத்துப்படைப்புகளைத் தந்து, இவ்வாழ்வுக்கு நேர்மறைக்கோணம் அளிக்கும் முன்னோடி இலக்கிய ஆளுமைகளைக் கொண்டாடி மனமேந்தும் வாய்ப்பாகவும், சமகால இளம் வாசிப்பு மனங்களுக்கு அப்படைப்பாளிகளை இன்னும் அண்மைப்படுத்தும் செயலசைவாகவும் தன்னறம் இலக்கிய விருது’  வருடாவருடம் வழங்கப்படுகிறது. இதுவரையில் எழுத்தாளர் யூமா வாசுகி (2020) , எழுத்தாளர் தேவிபாரதி (2021), எழுத்தாளர் சு.வேணுகோபால் (2022), கவிஞர் பாலைநிலவன்(2023) ஆகிய ஆளுமைகளுக்கு அவர்களின் இலக்கியப் பங்களிப்பினை பணிந்து வணங்கி இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. விருதுடன் இணைந்து விருது பெரும் ஆசிரியரின் படைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பும் அச்சிடப்பட்டு ஆயிரம் இளம் வாசிப்பு மனங்களுக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

2024ம் ஆண்டுக்கான தன்னறம் இலக்கிய விருது நவீன தமிழ் இலக்கியத் தளத்தில் படைப்பு நேர்மையுடன் வாழ்வின் பரிணாமங்களை எழுதியும் பேசியும் வரும் எழுத்தாளர் ஷோபாசக்தி அவர்களுக்கு சென்றடைவதில் அகநிறைவு கொள்கிறோம்.

~

நன்றியுடன்,

தன்னறம் நூல்வெளி

 

https://www.jeyamohan.in/208120/

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, கிருபன் said:

தன்னறம் இலக்கிய விருது – 2024

ஷோபா சக்திக்கு வாழ்த்து

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஷோபாசக்தியை நாமும் வாழ்த்துகின்றோம் . ........!  💐 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தன்னறம் இலக்கிய விருது : 2024

கிரிசாந்
தன்னறம் இலக்கிய விருது : 2024

மெய்யிலேயே ஈழத்தின் முதன்மையான இலக்கிய சாதனை ஷோபா சக்தியில் நிகழ்ந்தது. தன் கதைகளைச் சற்றே நீளமான அரசியல் துண்டுப்பிரசுரங்கள் எனச் சொல்லும் தற்பகடிக் கலைஞன் ஷோபா. தமிழீழம் எனும் பெருவேட்கை நெருப்பெரிந்த காலத்தில் அதன் உளச்சான்றை நோக்கியெழுந்த முதன்மையான கலைக்குரல். அறங்களை மாபெரும் கூட்டு உணர்ச்சிகள் பலவேறாக வகைப்படுத்துகின்றன. ஒன்றில் பொருந்துவது பிறிதில் பிழைப்பது. அறங்களை ஆக்குதலும் விரித்தலும் விவாதித்தலும் மறு விசாரணை புரிவதை இலக்கியம் தான் விழைந்தோ விழைவின்றியோ நிகழ்த்தியே ஆவது.

தன்னை முழுமையாகத் தன் எழுத்திற்கு அளித்தல். தன் கலைக்கு அளித்தல். தான் நம்பும் அறங்களுக்கு அளித்தல் என்பது முழுமையான அம்சங்களைக் அக் கலைக்கும் கலைஞனுக்கும் அளிப்பவை. ஷோபா சக்தி எழுத்திற்கு அப்பாலும் கலைஞன் என்ற தருக்கில் நின்றமைவதும் ஈர்ப்பதும் அந்த அம்சங்களின் விசையாலேயே. அவர் சொல்லும் அரசியல் என்பது அன்றாடங்களின் தத்துவார்த்த அரசியல் என்பதல்ல என்பது எனது புரிதல். அறங்களும் மானுட வாழ்வும் தீராது மோதிக்கொள்ளும் களங்களின் நுண்மையில் ஒளிந்திருக்கும் பகடியை அவர் காண்கிறார். அல்லது அவரது கலை அதை நிகழ்த்துகிறது. வாழ்க்கையை அதற்கு வெளியிலிருந்து நோக்குபவரின் புன்னகை அவரது எழுத்துகளில் மின்மினிப்பூச்சிகளின் பச்சையொளியெனப் பூசியிருப்பது அதையே.

நம் காலத்தில் தமிழில் எழுதுபவர்களில் முதன்மையான சிறுகதை எழுத்தாளர் ஷோபா சக்தியென்பதே எனது மதிப்பீடு. நாவல் எனும் வடிவத்தில் அவர் எழுதியவை முக்கியமானவை எனினும் ஒருவரது ஆளுமையும் அவரது மேதமையும் ஒன்றிலேயே கூர்முனை முற்றி எழும். தேர்ந்த கொல்லனின் இழைத்து இழைத்துப் பழகிய விரல்களால் தொட்டு நுணுக்கப்படும் பொன்னென மொழியை அளைபவர். அவரில் நவீன தமிழின் உரைநடை புதிய உச்சங்களை அடைந்தது. அவ்வகையில் அவரது பல முக்கியமான சிறுகதைகள் மானுட வாழ்வை விளையாட்டென்றாக்கி தீவிரம் கொண்டதாக்கி அங்கிருந்து தெறித்து மிதந்து எழும் கணங்களை அளிப்பவை.

ஈழத்தின் முதன்மையான எழுத்தாளரும் நாடகக் கலைஞரும் திரைக்கலைஞரும் ஆகிய எங்கள் மூத்தவருக்கு “தன்னறம் இலக்கிய விருது 2024” அவரது பங்களிப்பை ஏற்று கெளரவிப்பது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. விருதுகளுக்கோ மரியாதைகளுக்கோ அப்பால் நின்று மெல்லிய புன்னகையுடன் சிறுவனைப் போல உடல் ஒசிந்து இந்த விளையாட்டை நோக்கும் எங்கள் மண்ணின் பெருங்கலைஞனுக்கு வாழ்த்துகள்.
 

 

https://kirishanth.com/archives/2094/



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.