Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தேசிய மக்கள் சக்தி போன்ற சக்திகளை தமிழ் இளைஞர்கள் நாடிச்செல்லும்  காரணம் என்ன? – மட்டு.நகரான்

November 12, 2024

இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் திருவிழா வடக்கு கிழக்கிலும் இடம்பெற்றுவருகின்றது. தமிழர்களின் உரிமைப்போராட்டம் திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்ட நிலையில் இலங்கையின் பாராளுமன்ற தேர்தலின் மூலம் தமிழர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம் என்ற வகையில் தொடர்ச்சியான பிரசாரங்கள் வடகிழக்கில் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நாட்டில் தமிழர்கள் பௌத்த பேரின வாதத்தினால் நசுக்கப்பட்டபோது அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் வெடித்த நிலையில் தொடர்ச்சியாக தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பும் நிலைமைகள் காரணமாக இந்த நாட்டில் தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்று சர்வதேசம் வரையில் பேசப்படும் நிலையில் எந்த உரி மைக்காக இழப்புகளை எதிர்கொண்டோமோ அந்த உரிமையினை அந்த சமூகம் மறந்துசெல்லும் நிலைமையினை இலங்கையின் இந்த தேர்தல் களம் வெளிப்படுத்தி நிற்பதை காணமுடிகின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியமானது மரணப்படுக்கையில் இருக்கும் நிலைமையே காணப்படுகின்றது.தமிழ் தேசிய அரசியலின் வாக்கு அரசியலை முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்படும் செயற்பாடு கள் காரணமாக இன்று தமிழ் தேசிய அரசியல் மரணப்படுக்கைக்கு செல்லும் நிலையேற் படுத்தப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலையில் இளம் சமூகத்தினர் மத்தியில் அபிவிருத்தி அரசியல் அல்லது தேசிய அரசியல் நிகழ்ச்சி திட்டங்கள் விதைக்கப்பட்டாலும் ஆரம்பத்தில் தேசிய அரசியல் தொடர்பில் அலையொன்று காணப்பட்டாலும் காலப்போக்கில் அந்த அலை யானது குறைந்துவருவதை காணமுடிகின்றது.கிழக்கின் தற்போதைய நிலைமையினை உணர்ந்த நிலையிலேயே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

இன்றைய நிலையில் கிழக்கில் தமிழர்களின் இருப்பினை தக்கவைக்க வேண்டுமானால் தமிழ் தேசிய அரசியல் உறுதிப்படுத்தப்படவேண்டும்.கிழக்கினைப் பொறுத்த வரையில் தமிழர்களின் அரசியல் இருப்பினை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் மட்டுமே செயற்பட்டுவந்தது.இந்த நிலைமையே இன்றும் காணப்படுகின்றது.இவ்வாறான நிலையிலேயே கிழக்கில் தமிழ் தேசிய அரசியலின் இருப்பு என்பது மிக முக்கியம் என்பதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம்.

ஆனால் கிழக்கில் தமிழ் தேசிய அரசி யலுக்குள் ஏற்பட்டுள்ள வாக்கு அரசியல் போட்டி மற்றும் கட்சிகளுக்கு இடையே கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் என்பது கிழக்கில் தமிழர்களின் அரசியல் இருப்பினை கேள்விக்குட்படுத்துமா என்ற வகையில் சென்று கொண்டிருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் இன்று முன்னெடுக் கப்படும் பாராளுமன்ற தேர்தலுக்கான செயற்பாடுகள் குறித்து பார்க்கவேண்டியது கட்டாய மாகும். குறிப்பாக தமிழ் தேசிய அரசியல் செயற் பாடுகளை இங்கு பார்க்கவேண்டியது காலத்தின் கட்டாயமாக பார்க்கின்றேன்.

குறிப்பாக கிழக்கிலும் இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அலையொன்று இளையோர் மத்தியில் ஏற்பட்டுள்ளதுடன் சில கற்ற சமூகமும் இதற்கு பின்னால் உள்ளதை காணமுடிகின்றது.இந்த கோஷ்டி தமிழ் பேசும் மக்கள் தங்களின் பாராளு மன்ற பிரதிநிதித்துவத்தை காப்பது தொடர்பில் சிந்தித்துச் செயற்படுவதை, புதிய புரட்சி மாற்றக் கோஷ்டியினர், இனவாத சிந்தனை என்று விமர்சிக்கிறார்கள்.

இலங்கையின் அரசியல் வரலாறு முழுவதும், புரட்சிகர சிந்தனைகளைப் பேசிய இடதுசாரிக் கட்சிகளில் அநேகமானவை பேரினவாத அரசி யலுக்குள் சிக்கிக் சீரழிந்திருக்கின்றன. நாட்டையும் சீரழித்திருக்கின்றன. அதிக தருணங்களில் புரட்சி, புதிய மாற்றங்கள் என்று பேசிய இடதுசாரி இயக்கங்கள் எல்லாமும் அதிகாரத்துக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் தூக்கிச் சுமந்திருக் கின்றன.

தேசிய மக்கள் சக்தியின்   கடந்த கால வரலாறும் அப்படித்தான் இருக்கின்றது. ஜே.வி.பி.யாக இருந்து, அவர்கள் பேசாத இனவாதம் என்று ஏதுமில்லை. இன்றைக்கு முகமூடிகளை அணிந்து வந்து நின்று, புதிய புரட்சி மாற்றம் குறித்துப் பேசினாலும், அவர்களின் அடிப்படை சிந்தனையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கின்றது; அடுத்து ஆட்சி நடத்தப் போவது ரில்வின் சில்வா, விஜித ஹேரத், கேடி லால்காந்த தரப்பினரின் சிந்தனைதான்.

அது, மிக ஆபத்தான பேரினவாத – அடிப்படைவாதம் நிறைந்தது. அதுபோக, அந்தக் கட்சியில் யார் வெற்றி பெற்றாலும், அவர் களை தூக்கியெறியும் முடிவை, ஜே.வி.பி எடுத்து விட்டால், அதற்கு எதிராக யாராலும் போராட முடியாது. அந்தக் கட்சியின் கட்டமைப்பு அப்படித்தான் இருக்கிறது. ஆகவே, தமிழ் பேசும் மக்கள், புதிய மாற்றம் என்கிற மாய வலைக் குள் சிக்கி தங்களது பிரதிநிதித்துவத்தினை வீணாக்காமலிருக்கவேண்டியது அவசியமாகும்.இது தொடர்பிலான பூரண தெளிவுபடுத்தல் இளையோர் மத்தியில் முன்னெடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இன்று கிழக்கில் தமிழ் தேசிய அரசியல் வாதிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள போட்டி அரசியல் என்பது தமிழ் தேசிய அரசியலை கேள்விக்குட்படுத்திவருவதுடன் இளையோர் மத்தியிலும் கேள்விக்குட்படுத்திவருகின்றது. இதன்காரணமாகவே இன்று தமிழ் தேசிய அரசியலுக்கு பதிலாக தேசிய மக்கள் சக்தி போன்ற சக்திகளை தமிழ் இளைஞர்கள் நாடிச்செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்று தமிழ் தேசிய அரசியலுக்குள் போட்டியிடுவோர் பெருமளவான பணத்தை செலவிட்டு தமது வாக்கு அரசியலை முன்னிறுத் திவருவதானது எதிர்கால சமூகத்திற்கு பிழையான வழிகாட்டல்கள் காட்டப்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.பெருமளவான பணத் தினை செலவிட்டு சமூக ஊடக பிரசாரங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.எனினும் மட்டக் களப்பு மாவட்டத்தினை தவிர கிழக்கின் ஏனைய திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் என்பது கேள்விக்குறியாகவே இருந்துவருகின்றது.

தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இலங்கை தமிழரசுக்கட்சி,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றிற்கு இடையே போட்டி அரசியல் நிலவிவருகின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கிழக்கில் மிகக்குறைந்த வாக்குகளையே பெறும் என்பதுடன் இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையே கடும்போட்டி நிலவுகின்றது.கிழக்கில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தவேண்டி யவர்கள் இன்று பிரிந்து நின்று தமிழ் தேசிய அரசியலை கேள்விக்குட்படுத்திவருகின்றனர்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை பொறுத்த வரையில் விடுதலைப்புலிகள் நீக்க பிரசாரத்தினையே அதிகளவில் கிழக்கில் முன்னெடுத்துவருவதை காணமுடிகின்றது.கடந்த காலத்தில் பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்டவர்கள்,அரசாங்க கட்சிகளுடன் இணைந்து தமிழ் தேசிய அரசியலுக்கு எதிராக செயற் பட்ட பலர் இன்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரசாரப்பீரங்கிகளாக மாற்றம்பெற்றுள்ளதே பல்வேறு சந்தேகங்களை கிழக்கில் தோற்றம்பெற்றுள்ளது.

குறிப்பாக கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினராகயிருந்து பிள்ளையானு டன் இணைந்து செயற்பட்டு வந்த புஸ்பராஜ ஜன நாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைமை வேட்பாளராக அம்பாறை மாவட்டத்தில் நியமிக் கப்பட்டுள்ளார்.இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத் தில் கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் பிள்ளையானின் கட்சியில் வேட்பாளராக பெயரிடப்பட்டு பிரசாரங்களை முன்னெடுத்த குருக்கள் ஒருவர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட் பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தின் ஆரம் பத்தில் யுத்ததில் தமிழ் மக்களின் விடிவுக்காக மடிந்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டே பிரசார கூட்டங்கள் நடைபெறுகின்றன.ஆனால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பிரசாரக்கூட்டங்களில் மாவீரர்கள் என்ற பெயர் உச்சரிப்பதற்கே பின் னடிக்கும் நிலைமைகள் காணப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்பில் கிழக்கு தமிழ் மக்களுக்கு நம்பிக்கை யிழக்கும் நிலைமையே காணப்படுகின்றது.தமிழ் தேசிய பரப்பில் தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தினையும் மாவீரர்களையும் யாரும் பிரித்துப்பார்க்கமுடியாது.அதனை தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள்.

இவ்வாறான நிலைமையிலேயே கிழக்கு மாகாணத்தில் தேர்தல் பணிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளது.அரசாங்க தரப்பு ஏனைய தரப்பின ரின் கடுமையான பிரசாரங்களுக்கு மத்தியில் தமிழ் தேசிய பரப்பின் பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் சிறந்த வேட்பாளர்களை தெரிவுசெய்து கிழக்கு மாகாணத்தின் இருப்பினை உறுதிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

 

https://www.ilakku.org/தேசிய-மக்கள்-சக்தி-போன்ற/



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.