Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லிணக்கம் 

                      - சுப.சோமசுந்தரம்

          சென்ற ஞாயிறன்று (17-11-2024) பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் ஜமாத்துல் உலமா சபையினர் நடத்திய சமய நல்லிணக்க மாநாட்டில் ஆசிரியர்களுக்கான அமர்வில் பேசும் நல்வாய்ப்பு அமைந்தது. (வழக்கம் போல்) மதிய உணவு வேளை நெருங்கும் பொழுது எனக்குக் கிடைத்த வாய்ப்பை இயன்றவரை சுருக்கமாகப் பயன்படுத்திக் கொண்டேன்.
              பொதுவாக தமிழ்நாட்டில், குறிப்பாக கிறித்தவர்களும் இஸ்லாமியர்களும் கணிசமான எண்ணிக்கையில் வாழும் திருநெல்வேலி, பாளையங்கோட்டை சுற்று வட்டாரங்களில் சமய நல்லிணக்கம் என்பது தொன்று தொட்டே வரமாக அமைந்த ஒன்று. எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு உராய்வுகள் நிகழ்ந்திருக்கலாம். அவை உடனே சரி செய்யப்பட்டிருக்கும். எனினும் முன் எப்போதும் இல்லாத அளவு சிறிது காலமாகச் சில சமூக விரோத அமைப்புகள் தங்கள் சிறுமதியினால் தமிழ் மண்ணில் கூட சமய நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயற்சி செய்து தோற்கின்றனர். அவர்களை எப்போதும் தோற்கடிக்க ஆசிரியர் பெருமக்களான நமது பங்களிப்பு இக்காலத்தில் மிகவும் அவசியமாகிறது.
                சமய நல்லிணக்கத்தைப் பெருமையுடன் பறைசாற்றும் நாம் வெட்கித் தலைகுனியும் இடமும் உண்டென்றால், அது சாதியம். சாதிய அடையாளம் நமக்கான அவமானம் என்பதை மாணாக்கர் மனதில் இளமையிலேயே பசுமரத்தாணி போல் பதிய வைப்பது நம் முன் இருக்கும் தலையாய கடமை. எங்கள் இளமைக் காலத்திலும் சாதி இல்லாமல் இல்லை. ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற தலைவர்கள்தம் சீரிய பணியால் சாதியம் சிறிது சிறிதாக மழுங்கி வந்த காலம் அது. எப்படியோ சாதி வெறி மீண்டும் தலை தூக்குவது இன்றைய சமூக அவலம். எங்களுடன் படித்த நண்பர்கள் இன்ன சாதியர் என்று பெரும்பாலும் நாங்கள் அறிந்திருக்கவில்லை. இன்றோ மாணவர்கள் தங்களுக்குள் மட்டுமல்லாமல், தங்கள் ஆசிரியர்களும் இன்னின்ன சாதியினர் என்று ஆவலுற்று அறிந்து வைத்திருக்கிறார்கள். நமது ஆசிரியர்கள் வெற்றி பெற்ற இடத்தில் ஆசிரியர்களாகிய நாம் தோற்றுப் போனதையே இது காட்டுகிறது. மீண்டும் பழைய வெற்றியை நிலை நாட்டுவது நம் பொறுப்பாகிறது. சாதி எனும் தளத்தில் அவர்கள் கொண்டாடும் வேற்றுமை சிறிது சிறிதாக மதம் எனும் தளத்திலும் பரவும் அபாயம் உண்டு. பெரியார் சமயத்தைப் புறந்தள்ளியது கூட, அது சாதியத்திற்கு இட்டுச் செல்கிறது என்பதாலேயே ! எனவே சாதி ஒழிப்புடன் சமய நல்லிணக்கம் பேசுவதும் தவிர்க்க முடியாததே ! ஒன்று, உற்ற பிணிக்கு மருந்து; மற்றொன்று, வருமுன் காப்பது.
               எங்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஒருவர் சொல்வது உண்டு -  "மாணாக்கர்க்கு உங்கள் பாடங்களைச் சொல்லித் தருவதுடன் சமூகத்திற்குத் தேவையான நல்ல கருத்துகளையும் அவ்வப்போது சொல்லுங்கள். ஏனெனில் இப்போதெல்லாம் நாம் நல்லொழுக்க வகுப்பு என்று தனியாக நடத்துவதில்லை" என்று. எனவே மாணவர் சமூகத்திற்கு சொல்லித் தருவோம் : "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற திருமந்திரத்தை ; அதே பொருளில், "அவரே ஏக இறைவன்" என அறிவிக்கும் அவ்வல் கலிமாவை ; கலிமா என்பது இஸ்லாமியரின் ஐந்து கடமைகளில் தலையாயது என்பதை.
           இஸ்லாமியரின் மற்றொரு கடமையான (ரமலான்) நோன்பில், நோன்பு திறக்கும் போது மார்க்க பேதமின்றி, ஏழை-செல்வந்தர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் விருந்துக்கு அழைக்கும் இஸ்லாத்தை எடுத்துரைப்போம். அதே சமநிலைக் கண்ணோட்டத்தில், "ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்" எனப் போதிக்கும் திருமூலரைக் காட்டுவோம்.
          ரோமன் கத்தோலிக்கரின் மானிட சமத்துவத்திற்கு அவர்கள் உருவாக்கிய என்னைப் போன்ற மாணவர்களே சான்று. அங்கு பயிலும் காலத்தில், "நான் இந்து; அவன் கிறித்தவன்" என்று ஒருபோதும் நாங்கள் உணர்ந்ததில்லை. புரொட்டஸ்டன்ட் கிறித்துவரின் சமய ஒற்றுமை உணர்விற்கு அந்த நூற்றாண்டு மண்டபத்தின் எதிரே அமைந்த கல்லறையில் உறங்கும் இரேனியஸ் அடிகளே சாட்சி. தாம் ஆரம்பித்த ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சாதி பேதமின்றி, மதப் பாகுபாடின்றி அனைத்து மாணாக்கரும் ஓரிடத்தில் அமர்ந்து பயில வேண்டும், உண்ண வேண்டும் என்பதில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே உறுதியாக நின்று சமத்துவப் புரட்சி செய்தவர் இரேனியஸ் அடிகள்.
             சமூக நல்லிணக்கத்தை அவரவர் சமயங்களே வலியுறுத்துகின்றன என்பதை ஆசிரியராகிய நாம் மாணவர் சமுதாயம் விளங்கச் செய்வோம். மீண்டும் வெல்வோம். ஆசிரியர் வென்றால்தான் சமூகம் வெல்லும்; அவர் தோற்றால் சமூகம் தோற்றுப் போகும்.

 

பின்வரும் முகநூல் இணைப்பில் இக்கட்டுரையோடு நான் பேசிய ஒளிப்பதிவையும் இணைத்துள்ளேன் :

https://www.facebook.com/share/p/1AXBekspxj/

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, சுப.சோமசுந்தரம் said:

ஆசிரியர் வென்றால்தான் சமூகம் வெல்லும்; அவர் தோற்றால் சமூகம் தோற்றுப் போகும்.

❤️.....................

எனக்கு கிடைத்த சில ஆசிரியர்களை நினைக்கவைத்து விட்டீர்கள்.

நாங்கள் அன்று அங்கே வாழ்ந்த, வளர்ந்த சூழ்நிலையில் பாடத்திட்டத்தை படிப்பித்து முடிப்பதே ஆசிரியர்களுக்கு முடியாத ஒரு காரியம். அதனாலோ என்னவோ, ஒரு ஆசிரியரைத் தவிர வேறு எந்த ஆசிரியரும் எந்த விதமான அறம் சார்ந்த கருத்துகளையோ அல்லது பொதுவான எந்த விடயங்களையும் வகுப்பில் சொன்னதாகவோ அல்லது விவாதித்ததாகவோ நினைவில் இல்லை. சில ஆசிரியர்கள் பாடத்திட்டத்தை மிகவும் நன்றாக படிப்பித்தார்கள்.

உயர்தர கணித ஆசிரியர் ஒருவர் மட்டும் மு. வரதராசனாரின் எழுத்துகளை அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருந்தார். அந்த வயதில் நாங்கள் வழி தவறி விடுவோம், நாங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றே அவர் அவற்றை சொன்னார் என்றே நினைக்கின்றேன்.      

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரசோதரன் said:

உயர்தர கணித ஆசிரியர் ஒருவர் மட்டும் மு. வரதராசனாரின் எழுத்துகளை அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருந்தார். அந்த வயதில் நாங்கள் வழி தவறி விடுவோம், நாங்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றே அவர் அவற்றை சொன்னார் என்றே நினைக்கின்றேன்.      

எல்லா இடங்களிலும் கணித ஆசிரியர்தாம் இலக்கியமும் அறமும் பேசுவார் போல !  குறிப்பாக 'உயர்தர கணித ஆசிரியர்' என்று நீங்கள் குறித்ததால், கணிதமும் நன்கு சொல்லித் தந்திருப்பார்.😀

          நான் ஒரு கணித ஆசிரியர் என்பதால், மேலே குறித்தவை நீங்கள் ஒரு புன்னகையுடன் கடந்து செல்லவே ! (I request you to take my remarks regarding mathematics in a lighter vein). மற்றபடி நல்லவை பேசும் நல்லாசிரியர் என்பவர் எந்தத் துறை சார்ந்தும் அமையலாம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனக்கும் தெளிவாகக் கணிதமும், அறமும், இலக்கியமும் சொல்லித் தந்த என் குருநாதர் ஒரு கணிதப் பேராசிரியர் என்பது ஒரு தற்செயல் நிகழ்வு. 

         இவ்வளவு சொன்ன நான் இன்னொரு தற்செயல் நிகழ்வையும் சொல்கிறேன். அந்த என் குருநாதர் 1950 களில் தமிழ்நாட்டில் வேலை கிடைக்காமல் சிறிது காலம் கொழும்புவில் தற்காலிகப் பணியில் இருந்தவர். ஆரம்பக் கல்வியில் எனக்கு சிறப்பாக ஆங்கிலம் சொல்லித் தந்த ஆசிரியை கொழும்புவில் பணி செய்து வந்தவரே ! (அதற்காக எனது ஆங்கிலம் எவ்வளவு சிறந்தது என்று தயவுசெய்து சோதித்துப் பார்க்க வேண்டாம்).

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சுப.சோமசுந்தரம் said:

எல்லா இடங்களிலும் கணித ஆசிரியர்தாம் இலக்கியமும் அறமும் பேசுவார் போல !  குறிப்பாக 'உயர்தர கணித ஆசிரியர்' என்று நீங்கள் குறித்ததால், கணிதமும் நன்கு சொல்லித் தந்திருப்பார்.😀

🤣🤣......................

நீங்கள் எழுதியதை வாசித்து சிரித்துவிட்டு, திரும்பவும் வாசித்தேன். 'உயர்தர சைவ உணவு........' என்று எங்கள் ஊர்களில் சில கடைகளில் மதிய நேரத்தில் ஒரு அறிவிப்பு போடுவார்கள், அதே போல இருந்தது நான் எழுதியிருந்தது...............🤣.

பிளஸ் - 1, பிளஸ் - 2 வகுப்புகளை இலங்கையில் உயர்தர வகுப்புகள் என்போம். அதற்கு முன்னர் வரும் 10ம் வகுப்பை சாதாரணதர வகுப்பு என்போம். 

சில வருடங்களின் முன் என்று நினைக்கின்றேன். தமிழில் கலைச்சொற்களை உருவாக்குதலும், அதை பயன்பாட்டில் கொண்டு வருதலும் என்ற பொருளில் ஒரு கட்டுரையை வாசித்திருந்தேன். இலங்கை ஒரு காலத்தில் இதில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருந்தது. இன்று அப்படியில்லை...............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.