Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடற்றொழில் அமைச்சருக்கு  வடக்கில் காத்திருக்கும் நெருக்கடிகள்

கலாநிதி சூசை ஆனந்தன்

இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களின்  அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் புதிதாக   பதவியேற்றிருக்கின்றார். வட பகுதியில் மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வருகின்ற பல நெருக்கடிகளுக்கு சுமுகமான தீர்வினை வழங்குவதில் உறுதியாக உள்ளதாக அமைச்சர் யாழில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆயினும் இது அவருக்கு இலகுவாவானதாக இருக்கப் போவதில்லை.

fish-1-1024x508.jpg

இந்திய மீனவர் விவகாரம் இந்தியாவுடன் தொடர்பானது, தென்பகுதி மீனவர் விவகாரம் சிறிலங்கா அரசுடன் தொடர்பானது. அமைச்சரோ தமிழர். கடந்த கால அமைச்சரும் தமிழராகவே இருந்துள்ளார். இருவரும் கடற்றொழிலுடன் சம்பந்தப்பட்டவர்களாக  இருந்ததில்லை. இருக்கவேண்டிய அவசியமும் இல்லையெனினும் தமிழர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என   சர்வதேசத்தை ஏமாற்றிய, ஏமாற்றும் அரசினது உத்திகள் இவை எனக் கருதலாம். முக்கிய விடயமான இந்திய மீனவர் விகாரத்தை தமிழ் அமைச்சரைக் கொண்டே மோதவிட்டுள்ளது அரசு.

அதேவேளை தென்பகுதி மீனவர் விவகாரத்தை சிங்கள அதாவது  சிங்கள அரசோடு அமைச்சரை முரண்பட வைக்கலாம். இதனை இவர் விரும்பப் போவதில்லை. இதனால் இப்பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதில் சவால்களை சந்திக்கவே நேரிடும். முன்னைய அமைச்சரின் இந்திய மீனவர் விடயமும் தென்பகுதி மீனவர் விடயம்  மற்றும் மீனவர் மீள்குடியேற்ற விவகாரம் போன்றவை மறந்துபோன விடயமாகவே இருந்தது. புதிய அமைச்சர் என்ன செய்யப் போகிறாரோ தெரியாது?.இது விடயத்தில் அவர் சவால்களை சந்திக்க வேண்டிய வாய்ப்புக்கள் நிறையவே உண்டு.

பிரச்சினைகள்

முக்கியமாக இந்திய மீனவர் அத்துமீறல் விவகாரம் தென்பகுதி மீனவர் விவகாரம், மீனவர் மீள்குடியேற்றம், சட்டபூர்வமற்ற மீன்பிடி முறைகள், நீரில் வளர்ப்பு , ஆழ்கடல் மீன்பிடி தொடர்பான விடயங்கள் இதில் முக்கியமானவையாகும். கடந்த காலத்து அமைச்சர்களாக இருந்த பலராலும் வடபுல மீனவர்களின் மேற்கூறிய நெருக்கடிகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகள் எவற்றையும் தீர்த்து வைப்பதில் வெற்றி கண்டதில்லை. புதியவர் எந்தளவுக்கு இத்தகைய நெருக்கடிகளுக்கு தீர்வைக் கண்டுபிடிப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்திய மீனவர் விவகாரம்

இந்திய மீனவர்கள் வடக்கே இலங்கை – இந்திய ஆள்புல கடல் எல்லைகளை மீறி மீன்பிடியில் ஈடுபடுவதும், தடை செய்யப்பட்ட இழுவை மடிகளைப் பயன்படுத்துவதும் முக்கியமானவையாகும். ஆள்புல எல்லையினை மீறி தமிழக மீனவர்கள் வடபுல கடற்பரப்பினுள் வருவதானது நாட்டின் இறைமையை மீறுகின்ற ஓர் செயற்பாடாகும். இவை இந்திய மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் தெரியாத விடயமல்ல. அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கே உரியது. ஆயினும் இதுவரையில் இவ்வாறான ஓர் அத்துமீறல் நடவடிக்கைகளை தடுப்பதில் இந்திய அரசு தவறியே வந்துள்ளது. அரசு மட்டத்தில் பல தடவைகள் இது குறித்து பேசப்பட்டாலும் மீனவர் ஊடுருவலை  தடுக்க பழுதடைந்த பஸ்களை பாக்கு நீரிணையில் அமிழ்த்தியதைத் தவிர, தீர்வு எதனையும் இதுவரை எட்ட முடியவில்லை. தமிழக மீனவர்களுக்கு வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளபோதிலும் அதற்காக சர்வதேச நியமனங்களை அப்பகுதி மீனவர் மீறுவது ஏற்புடையதல்ல.

மேலும் வடபுலத்தில் ஏற்கனவே போரினால் மிக மோசமாகப் பாதிப்புற்ற ஐம்பதாயிரம் மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்துடன் சம்பந்தப்பட்ட விடயமாக இருப்பதையும் மறந்துவிடக் கூடாது. மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென இலங்கை அரசை இந்தியா கோருவது நகைப்புக்கிடமானது.

மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டியது இந்தியாவே தவிர, இலங்கை அல்ல. அத்துடன் சூழலுக்கு அச்சுறுத்தலையும் வள அழிவுக்கு காரணமாகவும் உள்ள இழுவைமடிப் பிரயோகம் பிரதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதையும் இந்தியா மறந்து விடலாகாது.கைது செய்யப்படும் மீனவர்களை சடுதியாக விடுவிப்பதில் காட்டும் வேகம் பிரச்சினையை தீர்ப்பதில் காட்டுவதில்லை.

இழுவைமடி தடையை கட்டாயமாக அமுற்படுத்தல்

2017 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை கடந்தகால அரசு நடைமுறைப்படுத்த தவறியிருந்தது. இதற்கான காரணம் ஏன்? என்பது புரியவில்லை. தடைச் சட்டம்  முறையாக அமுற்படுத்தப்பட்டிருப்பின் இந்த மீனவர் விவகாரம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்க முடியும். ரணில் ஆட்சியில் கூட இது சாத்தியமாகவில்லை.வாக்கு வங்கி அரசியலும் லஞ்ச ஊழலுமே இதற்கு தடையாக அமைந்திருந்தது. ஆகவே புதிய அரசு உள்ளூரில் தடை செய்யப்பட்டுள்ள குறித்த இழுவைமடியினை முற்றிலுமாக பயன்படுத்துவதை தடை செய்யும் சட்டத்தை அமுற்படுத்துவது அவசியம்.பொருளாதாரம் நலிவுற்ற நிலையிலிருந்த இலங்கையை மீட்க இந்தியா ஆற்றியிருந்த நிலையில், இந்தியாவுடன் மீனவர் விவகாரத்தை கையாளுவதென்பது சவாலானதாகவே அமையும்.தடையினை அமுல்படுத்துவது இந்தியாவும் இழுவைமடி தடையினை மேற்கொள்ள தூண்டுதலாக அமையலாம்.

தென்பகுதி மீனவர் உள்வருகை

வடபுல கடலோரங்களில் தென்பகுதி மீனவர்கள் பருவ காலங்களில் வந்து குடியேறிய மீன்பிடியில் ஈடுபட்டு வருவதானது நீண்டகாலமாக இடம்பெற்று வருகிறது. இதனால் உள்ளூர் மீனவர்களுக்கும் தென்பகுதி மீனவர்களுக்குமிடையே சச்சரவுகள் அடிக்கடி ஏற்பட்டு வருவதானது தீராத பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. முக்கியமாக மன்னாரில் சவுத்பார், சிலாவத்துறை, தலைமன்னார் பியர் ஆகிய இடங்களிலும் முல்லைத்தீவில் கொக்கிளாய், நாயாறு ஏரிப்பகுதிகளிலும் வடமராட்சி கிழக்கிலும் மீனவர்களுக்கிடையிலே இன மோதல்களை உருவாக்கி விட்டுள்ளது.

இடம் பெயர்ந்து வருவோர் பெரும்பான்மைச் சமூகத்தை  சேர்ந்தவர்களாக இருப்பதினால் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் உதவிகளுடன் பாரம்பரியமான தமிழ் கிராமங்களை அவர்கள் ஆக்கிரமித்து மீன்பிடியில் வல்லாதிக்கம் செய்து வருகின்றனர். இதனால் ஏரி மீன்பிடி கரைவலைப்பாட்டு மீன்பிடியாளர்கள் பெரும் துன்பங்களையும் இராணுவ கெடுபிடிகளையும் சந்தித்து வருகின்றனர். புதிய அரசு இது விடயத்தில் அக்கறையுடனும் சரியான பொறிமுறையூடாக நீதியைப் பெற்றுத் தரவேண்டும்.

மீனவர் மீள்குடியேற்றம்

போரின்போது இடம்பெயர்ந்த பல மீனவ குடும்கள் யுத்தம் முடிந்து தசாப்தம் கடந்தும் இதுவரை தமது சொந்த இருப்பிடம் திரும்பவில்லை. தமிழ் நாட்டிலும் வேறு இடங்களிலும் தற்காலிகமாக தங்கியுள்ள மீனவர்கள் தமது சொந்த இடம் திரும்பி மீண்டும் தமது வாழ்க்கையைத் தொடர ஏற்பாடு செய்யப்படவேண்டும். யாழில் வலி.வடக்கின் பலபகுதிகளும் முல்லைத்தீவில் கருநாட்டுக் கேணி,கொக்குத் தொடுவாய், கொக்கிளாய், நாயாறு சார்ந்துள்ள பகுதிகள், மன்னாரில் முள்ளிக்குளம் போன்ற இடங்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை. தேசிய பாதுகாப்பு என காரணம் கூறி இராணுவம் அப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது.தேசிய பாதுகாப்பு என்பது மக்களின் பாதுகாப்பே தவிர மக்களின் இருப்பிட ஆக்கிரமிப்பு அல்ல.

யுத்த சூழல் எதுவுமற்ற சூழலில் மக்கள் குடியிருப்பை ஆக்கிரமித்துவிட்டு தேசியப் பாதுகாப்புக்கே எனக் கூறுவதை ஏற்க முடியாது. அது தேசிய ஆக்கிரமிப்பாகவே கருதப்படும்.நிலங்களை ஆக்கிரமித்துள்ளதுடன், அவர்களது நிலங்களில் விவசாயம் செய்து வியாபாரம் பண்ணுவது, பாடசாலைகள் நடத்துவது போன்றவை  நகைப்புக்கிடமானது. கண்துடைப்புக்காக ஒருசில வீதிகளை விடுவிப்பது, முகாம்களை மூடுவது சரியல்ல. அவை ஏமாற்று வேலைகள் போலவே தெரிகிறது.மேலும் படையினருக்கு காணிகள் தேவையென அடம்பிடித்து நிற்பதும் சரியல்ல.வடக்கில் அனுர அரசுக்கு பெருமளவில் மக்கள் ஆதரித்து வாக்களித்துள்ளனர். அந்த நம்பிக்கையை மேற்குறித்த நெருக்கடிகளை தீர்ப்பதன் மூலமே நிறைவேற்ற முடியும். இது விடயத்தில் சிக்கல்கள் இருப்பது புரியாததல்ல.எனினும் நாளடைவில் படிப்படியாக இத்தகைய பிரச்சினைகளுக்கு புதிய அரசு தீர்வுகாண வேண்டும் என்பது மக்களின் அவாவாகும்.

முறையற்ற ( IUU ) மீன்பிடிச் செயற்பாடுகள்

சட்டபூர்வமற்ற, பதிவு செய்யப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பீடிச் செயற்பாடுகளான டைனமெட் வெடி வைத்து, மீன்பிடித்தல் சுருக்குமடி பயன்படுத்தல், ஒளிபாய்ச்சி மீன்பிடித்தல், அகலச் சிறகுவலைகள் பயன்படுத்தல், முறையற்ற வகையில் கடல் அட்டைப் பண்ணைகள் வைத்தல், குழைவைத்து மீன்பிடித்தல் போன்ற செயற்பாடுகள் மீள் ஒழுங்குபடுத்தப்படுவது அவசியம். வள முகாமைத்துவம், கண்காணிப்பு, விழிப்பணர்வு நடவடிக்கைகள் எவையும் இங்கு இல்லை. மேற்குறித்த விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.

ஆழ்கடல் மீன்பிடி

வடக்கில் ஆழ்கடல் வள வாய்ப்புக்கள் உண்டு. ஆயினும் அதனை அடைந்து கொள்வதில் அதற்கான உள்ளீட்டு வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. துறைமுகம், இறங்கு துறை, மூலதனம், தொழில் நுட்பம், பயிற்சி வசதிகள் போன்றன பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. இவை குறித்து அமைச்சு அதிக கவனம் செலுத்துவதும் அவசியம்.

பவளப்பாறைகள் அழிவு

மன்னார் குடாக் கடலில் Gulf of Mannar- அமைந்துள்ள பல கி.மீ.நீளமான பவளப் பாறைகள் தமிழ்நாட்டிலிருந்து வருகின்ற பாரிய இழுவைப்படகுகளாலும்.டைனமெட் பாவனையாலும் அடித்து நொருக்கப்பட்டு வருகின்றன. அரிப்புத் திட்டு, வங்காலை, சிலாவத்துறை திட்டுக்கள், அலைத் தடுப்பு சுவர்கள் போல கடலில் அமைந்திருந்தன. அவை மேற்குறித்த மீன்பிடிச் செயற்பாடுகள் காரணமாக அழிவடைந்தமையினால் அதனைச் சார்ந்துள்ள கரையோரம் அரித்தலுக்குள்ளாகி வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளன.

அரிப்பு முதல் சவுத்பார் வரையிலான கரையோரங்கள் மிக மோசமாகப் பாதிக்குள்ளாகியிருக்கின்றன.அத்துடன் கண்டல் மரங்கள் வெட்டப்பட்டு கடலில் மீன்கள் ஒருங்கு சேர்வதற்கான செயற்கைத் தளமாக உருவாக்கப்படுகின்றன. அவ்விடங்களில் ஒருங்கு சேரும் மீன்கள் டைனமெட் வெடி வைத்துக் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக கண்டல் அழிவும் சிற்றளவு மீன்பிடி ஒழுங்கும் சீரழிகின்றன. கரையோரங்களில் கடற்படையினர் இருந்தும் பயனில்லை. சுற்றுச்சூழல் அதிகாரசபை, மீபா என்னும் கடல்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை போன்றவை இருந்தும் இவைகளினால் மேற்குறித்த அனர்த்தங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகவே புதிய அமைச்சர் இதுவிடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனக் கோருகின்றோம்.விடியலைத் தேடி ஏங்கி நிற்கும் வடபுல மீனவர்களுக்கு அனுர ஆட்சியிலிருந்தேனும் விடிவு கிட்டுமா? புதிய அமைச்சர் சவால்களை வெற்றி கொள்வாரா?

 

https://thinakkural.lk/article/312924

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா நீங்களே  பார்த்துக்கோங்க என்று சிறீதர் தியேட்டர் அண்ணவிடம் கொடுக்கிறாரோ தெரியாது..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.