*வெனிசுலா விவகாரமும் இடதுசாரிகளும்
*ஆங்கில பாடநூல் தவறுக்காக பிரதமர் ஹரிணிக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இடதுசாரிகள், தமிழ் வரலாற்று பாடநூல்களில் பௌத்த சமய திணிப்பு மற்றும் சிங்கள மொழிபெயர்ப்பு பாடநூல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லையே!
*இடதுசாரி நாடுகளில் புலிகளை அமெரிக்க கைக் கூலி என்று பொய்ப் பிரச்சாரம் செய்த தயான் ஜயதிலக.
*சுயநிர்ணய உரிமையை மறுத்து ”ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம்” என்று மட்டுப்படுத்தும் இடதுசாரிகள்...
-- --- -----
வகுப்பு ஆறுக்குரிய கல்விச் சீர்திருத்தத்தில் ஏற்பட்ட சில தவறுகளுக்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை மையப்படுத்தி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் மற்றும் சில எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கோசம் எழுப்புகின்றனர்.
ஆக, இது பலவீனமாக இருக்கும் எதிர்க்கட்சிகளின் அரசியல் நாடகம் என்பது கண்கூடு. அதாவது, மாணவர்களின் எதிர்கால நலன் நோக்கில், இந்த எதிர்க்கட்சிகள் செயற்படவில்லை. மாறாக அடுத்த ஆட்சியை கைப்பற்றும் நோக்கம் கொண்டவை என்பது பகிரங்கமானது.
ஆனால், கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள இடதுசாரிகள், சில கம்யூனிசிட்டுகள் ஹரிணிக்கு ஆதரவாக பேசுவது தான் இங்கே வேடிக்கை. குறிப்பிட்ட சில தமிழ் இடதுசாரிகளும் இதில் அடங்குகின்றனர்.
குறிப்பாக, ஆங்கில பாடநூலில் அச்சிடப்பட்டுள்ள, இயற்கைக்கு மாறான LGBTO எனப்படு்ம் ஓரினச் சேர்க்கை முறையை முற்போக்கான சிந்தனை என்றும் சில இடதுசாரிகள் வாதிடுகின்றன.
அத்துடன், வெனிசுலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்தமைக்கு எதிராகவும் இந்த இடதுசாரிகள் சில தமிழ் இடதுசாரி இயக்கங்களுடன் சேரந்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கின்றனர்.
ஆனால், இந்த குறிப்பிட்ட இடதுசாரிகள், கம்யூனிஸ்ட் வாதிகள் ஏன் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க மறுக்கின்றனர்?
குறிப்பாக, 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சில சம்பவங்கள் பின்வருமாறு-
(1) தமிழ்மொழி, சைவ சமயம் ஆகிய இரண்டு பாடநூல்களையும் தவிர, ஏனைய அனைத்துப் பாடநூல்களும் சிங்கள மொழியில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இதனால் சிங்கள மொழிச் சொல்லாதிக்கங்கள் பாடநூலில் காணப்படுகின்றன.
பாடநூல் தயாரிப்பு பற்றிய சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப, ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு பாடநூல்கள் மொழியெர்க்க முடியாது என வரலாற்றுத்துறை பேராசிரியர் புஸ்பரட்ணம் பல கூட்டங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
(2) வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் பௌத்த மயமாக்கல். அதுவும் தையிட்டடி விகாரை தொடர்பாக பல எதிர்ப்பு போராட்டங்கள் தொடராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
(3) 2019 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மொழி மூல வரலாற்று பாடநூலில் முற்று முழுதாக பௌத்த சமய வரலாறுகளும் யாழ்ப்பாண இராஜ்ஜியம் உள்ளிட்ட தமிழ் மன்னர் வரலாறுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
(4) 1978 ஆம் ஆண்டில் இருந்து அதாது ஈழப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற அத்தனை சம்பவங்களும் புதிய மகாவம்சமாக தொகுக்கப்பட்டுள்ளன.
அதில் தமிழர்கள் இலங்கையில் வந்தேறு குடிகள் என்றும், பௌத்த சமயம் பற்றிய திரிபுபடுத்தல்களும், வடக்கு கிழக்கு பௌத்த பிரதேசம் எனவும் மிகைப்படுத்தப்பட்டுள்ளது.
(5) தற்போது நடைமுறையில் உள்ள வரலாற்று பாடநூலுக்குரிய ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் கை நூலில், 1978 இல் இருந்து 2010 ஆம் ஆண்டு காலப் பகுதி, அதாவது போர் நடைபெற்ற கால சம்பவங்கள் மகாவம்சம் என மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ளது.
(6) தமிழர்களின் ஆயுதப் போராட்டம் பயங்கரவாதம் என்றும், சீனா, கொரியா போன்ற நாடுகளின் கப்பல்களை புலிகள் கடலில் மூழ்கடித்ததால் புலிகள் அழிக்கப்பட்டார்கள் என்றும் கற்பனையில் பொய்யான வரலாறுகள் புதிய மகாவம்சத்தில் எழுதப்பட்டுள்ளன.
((7) கொழும்பை மையப்படுத்திய அரச தொல்லியல் திணைக்கள பிரதான இணையத் தளத்தில் ஈழத்தமிழர்கள் பற்றிய வரலாற்று ஆவணச் சின்னங்கள் இல்லை. அத்துடன் இலங்கைத்தீவு பற்றிய சிங்கள மயப்பட்ட வரலாறுகள் அத்தனையும் சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மாத்திரமே உண்டு.
இவ்வாறு தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வருகிற அநீதிகள் பற்றிய பல ஆதாரங்கள் உண்டு. ஆனால், இவை பற்றியெல்லாம் கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் - சிங்கள இடதுசாரிகள் பேசுவதில்லை.
ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட வீரர்களாக தங்களை காண்பிப்பர். சிங்களவர்கள், ஈழத்தமிழர், முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கத்தால் இழைக்கப்பட்டு வரும் அநீதி என்ற பொதுச் சொல்லாடலில், இந்த இடதுசாரிகள், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை கோரிக்கையை மழுங்கடித்து வருகின்றனர்.
ஆனால் சிங்கள இடதுசாரிகள், இடதுசாரி சோசலிச கொள்கையுடைய தென் அமெரிக்க, நாடுகளுக்குச் சென்று, இலங்கைத்தீவு ஒரு சோசலிச நாடு என்றும், விடுதலைப் புலிகள் அமெரிக்க சிஐஏயின் கைக் கூலிகள் எனவும் பிரச்சாரம் செய்து, அந்த அரசுகளை இலங்கைக்குச் சாதகமாக மடைமாற்றியிருந்தன.
வெனிசுலா நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் (Hugo Chávez) விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதற்கு, இடதுசாரித் தன்மை கொண்ட, இலங்கை இராஜதந்திரியான தயான் ஜயதிலக பிரதான காரணமாவார்.
அமெரிக்க இடதுசாரியான வழக்கறிஞர் ஈவா கொலிங்கர் (Eva Golinger) விடுதலைப் புலிகளை அமெரிக்க கைக் சூலி என்று விமர்சனம் செய்து வெனிசுலா, கியூபா போன்ற நாடுகளை புலிகளின் அரசியல் விடுதலை போராட்டத்திற்கு எதிராக திசை திருப்பினார்.
அதற்கு தயான் ஜயதிலக கியூபாவில் இலங்கைக்கான தூதுவராக இருந்த தமரா குணரெட்னம் ஆகியோர் காரணமாக இருந்தனர்.
ஆனால், 1997 ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தை அமெரிக்கா தடை செய்திருந்தது. செய்திருந்தது. ஆனால், அமெரிக்கா தனது லாப நோக்கில் புலிகளை தடை செய்தது என்ற பிரச்சாரங்களை இவர்கள் முன்னெடுத்து, தென் அமெரிக்க இடதுசாரி கொள்கை கொண்ட நாடுகளை புலிகளுக்கு எதிராகத் திருப்பினர்.
வெனிசுலா ஜனாதிபதி ஹுகோ சாவேஸ் 2013 ஆம் ஆண்டு மே மாதம், 58 வயதில் உயிரிழந்ததும், நிக்கோலஸ் மதுரோ வெனிசுலாவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். ஆனால் ஹகோ சாவேஸ், தமிழர்களுக்கு எதிராக கையாண்டு வந்த அதே உத்தியை தான், மதுரோவும் கையாண்டார்.
இப் பின்புலம் தெரியாத காரண காரியத்தாலேயே, ஈழத்தமிழர்கள் பலர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவினால் கைது செய்யப்பட்டபோது, அவருக்கு எதிரான பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டிருக்கின்றனர்.
ஆகவே, தயான் ஜயதிலக போன்ற இராஜதந்திரிகள் இடதுசாரித் தன்மை கொண்ட நாடுகளில் இலங்கையை, சோசலிச நாடாகவும் மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவ கொள்கை மற்றும் கலப்புமுறை பொருளாதார தன்மை கொண்ட நாடு என்ற முறையிலும் கற்பிதம் செய்து புலிகளுக்கு எதிராக பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டனர்.
2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலிலும் இப் பிராச்சாரம் தொடராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது பற்றி தமிழ் இடதுசாரிகளுக்கும் நன்கு புரியும்.
தங்களை தூய இடதுசாரிகளாக காண்பித்துக் கொண்டும், ”அநீதி”, ”ஒடுக்குமுறை” ஆகியவற்க்கு மாத்திரம் எதிரான போராட்டகளை நடத்தி, அதன் ஊடாக சிங்கள இடதுசாரிகள் எவ்வளவு நுட்பமாகத் தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையின் தரத்தைக் குறைத்து மதிப்பிடுகின்றனர் என்பதையும், தமிழ் இடதுசாரிகள், முற்போக்குச் சிந்தனையாளர்கள் மற்றும் யதார்த்த அரசியல் பற்றி பேசுவோம் என்று வாதிடும் தமிழர்கள் மூடி மறைக்கின்றனர்.
இந்த இடதுசாரிகளின் நேர்மையற்ற அரசியல் செயற்பாடுகள் பற்றி தமிழர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
அதேவேளை, முள்ளிவாய்க்காலில் இறுதிப் போரில் பல உயிர்கள் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஐக்கிய நாடுகள் சபை அமைதிகாத்தது. ஆனால் கவலை வெளியிட்டது.
அத்துடன் ஏதோ ஒரு மனட்சாட்சியின் பிரகாரம், ஐநா பாதுகாப்புச் சபையை கூட்ட முற்பட்டபோது, அமெரிக்க - இந்திய அரசுகள் அதனைத் தடுத்தன. இது பற்றியெல்லாம் கண்டித்து, கொழும்பை மையமாகக் கொண்ட இடதுசாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை.
(அமரர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன, சிறிதுங்க ஜயசூரிய மற்றும் செந்திவேல் ஆகியோரை மையப்படுத்திய இடதுசாரிகள் பலமாகக் கண்டித்தார்கள். சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி வருகின்றனர்)
அதேவேளை, 2009 இல் போர் முடிவடைந்து, 2010 இல் ஐநா நியமித்த நிபுணர்குழு, முள்ளிவாய்காலில் பொதுமக்கள் கொல்லப்பட்ட போது, ஐநாவும் சர்வதேசமும் தடுக்கத் தவறியதாக அறிக்கையில், சுட்டிக்காட்டியிருந்தது.
அதேபோன்று, காசாவில் இஸ்ரேல் படுகொலைகளை செய்தபோதும், ஐநா அமைதிகாத்தது. நிவாரண உதவிகளை மாத்திரம் அனுப்பியது. கவலை வெளியிட்டது. ஆனால் கண்டனம் தெரிவிக்கவில்லை.
ஆனால், ஹமாஸ் இயக்கம், இஸ்ரேல் மீது 2023 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நடத்திய தாக்குதலை ஐநா பலமாக கண்டித்திருந்தது.
இப் பின்னணியில் தான்--
வெனின்சுலா நாட்டின் ஜனாதிபதியை அமெரிக்கா , சர்வதசச் சட்டங்கள் - நியமங்களுக்கு மாறாக கைது செய்து, தமது நாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தியமை, ஏனைய சிறிய நாடுகளுக்குப் பாரிய அச்சுறுததல் என்று உரக்கக் கூற வேண்டும். அத்துடன், இது அரசு அற்ற ஏனைய தேசிய இனங்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஒடுக்குமுறையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இலங்கை - இஸ்ரேல் போன்ற அரசுகள், தமது ஆட்சிக்கு உட்பட்ட தேசிய இனங்களை மேலும் ஒடுக்கவும், ’ஐநா விதிகள், சர்வதேசச் சட்டங்கள் போன்றவற்றை மீறி, தமது அரசு என்ற கட்டமைக்குள் அந்த தேசிய இனங்களை மேலும் அடக்கி ஆளவும் அமெரிக்கச் செயற்பாடு வழிவகுத்துள்ளது.
உதாரணமாக --
2012 ஆம் ஆண்டில் இருந்து, ஜெனீவா மனித உரிமைச் சபையின் தீர்மானங்கள் எதனையும் இலங்கை அரசு உரிய முறையில் நடைமுறைப்படுத்தவில்லை.
2024 ஆம் ஆண்டில் இருந்து சர்வதேச நீதிமன்றத்தின் எந்த ஒரு உத்தரவுகளையும் இஸ்ரேல் அரசு அமல்படுத்த விரும்பவில்லை. மாறாக காசா மீது தொடர்ந்து இன அழிப்பு போரை இஸ்ரேல் நடத்துகிறது.
ஆகவே, இலங்கை - இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு மேலும் ஒரு துணிச்சலை அமெரிக்கச் செயற்பாடு கொடுத்துள்ளது.
ஆகவே, இடதுசாரிகள் காசா, வெனிசுலா போன்ற வெளிநாடுகளில் நடக்கும் இன ஒடுக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பது போன்று. ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை 1920 ஆம் ஆண்டில் இருந்து நடத்தி வரும் அநீதிகளுக்கு எதிராகவும் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் குரல் எழுப்ப வேண்டும்.
அதற்கு தமிழ் இடதுசாரிகள்-
கம்யூனிஸ்ட்வாதிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-
https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0S9YX23yRiTie8nJocaEhSyuDPbvraEZb4Nh6QHvVdEre9f92aowoeot6QXtDQ2iAl&id=1457391262
By
ஈழப்பிரியன் ·