Jump to content

Recommended Posts

பதியப்பட்டது
suren-2.png
 

‘அந்தஸ்து அல்லாது ஒருவருடைய செயற்பாடுகளே விழுமியத்தைத் தீர்மானிக்கிறது’ – சுரேன் சுரேந்திரன்

 
 

அமரபுர மஹாநாயக்கர் நியமன வைபவத்தில் பேச்சு

அமரபுர மஹா நிக்காயா பீடத்தின் அதிபதியாக வணக்கத்திற்குரிய கலாநிதி மதம்பகம அஸாஜி திஸ்ஸ தேரர் நியமனம் பெற்ற வைபவம் டிசம்பர் 07, 2024 அன்று பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. மத மற்றும் மதிப்பிற்குரிய சமூகத் தலைவர்கள் கலந்துகொண்ட இவ்வைபவத்தில் லண்டன் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் திரு சுரேன் சுரேந்திரன் அவர்கள் விசேட விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இவ்வைபவத்தில் உரையாற்றிய திரு சுரேந்திரன் “ஒரு பெளத்த அதியுயர் பீடத்தின் மஹாநாயக்கராக எமக்கு மிக நெருங்கிய தேரர் நியமிக்கப்படும் வைபவத்தில் கலந்துகொள்வதற்காக நான் லண்டனிலிருந்து வந்து கலந்துகொள்வது எனக்கு மிக மகிழ்ச்சியைத் தருகிறது” எனத் தெரிவித்தார். தொடர்ந்து இவ்வைபவத்தில் அவர் உரையாற்றும்போது:

“எனது சிங்களம் திருப்தியளிக்கக்கூடியதாக இல்லாவிட்டாலும் நான் இம்மொழியில் பேச எத்தனிக்கிறேன். புத்த பகவானால் போதிக்கப்பட்ட சமத்துவத்தையும் அரவணைப்பையும் எடுத்துக்காட்டும் வகையில், வேறெந்த தமிழருக்கும் கிடைக்காத, இம்மேடையில் பேசுவதற்கான இப்பாக்கியத்தை எனக்களித்தமைக்காக நான் பெருமைப்படுகிறேன். புத்த பகவானின் போதனைகளில் ஒன்றான வாசல சூத்திரத்தில் குறிப்பிட்டபடி “ஒருவருடைய உண்மையான விழுமியம் அவரது சமூக அல்லது குல அந்தஸ்துகளை வைத்து அல்லாது அவரது செயற்பாடுகளை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது” .

Suren-1024x655.jpg

“தேரருடனான எனது ஈடுபாடு பெப்ரவரி 2010 இல், பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற உலகத்தமிழர் பேரவை அங்குரார்ப்பண நிகழ்விலேயே ஆரம்பமானது. இலங்கையில் நடைபெற்று முடிந்த போரின் இரத்த ஆறுகள் இன்னும் வற்றிப்போகாத ஒரு காலத்தில், வெள்ளை வான்களில் கடத்தப்பட்டு அப்பாவி மக்கள் காணாமலாக்கப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இந்நிகழ்வு நடந்தது என்பதை நான் இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன். இப்படியான காலகட்டத்தில் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவென நாம் தேரரை அழைக்கும்போது அதை நாம் எடுத்த ஒரு துணிச்சலான நடவடிக்கையாகவே நினைத்தோம். ஆனாலும் இலங்கையிலிருந்து இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் எமது சமூகத்தின் முன்னர் எங்களோடு தோளோடு தோளாக நின்று தேரர் சமத்துவம் பற்றிப் பேசியது தான் உண்மையான துணிச்சல் என நான் கருதுகிறேன்.

“தர்மசக்தி என்னும் பல்மத அமைப்பின் மூலம் சகவாழ்வையும், சமத்துவத்தையும் முன்னெடுப்பதில் அவர் ஆற்றிய பணியும் ‘இமாலயப் பிரகடனத்தின்’ உருவாக்கத்தில் அவர் ஆற்றிய பங்கும் சமத்துவத்தை முன்னெடுக்க அவர் பேச்சளவில் அல்லாது செயலிலும் காட்டியமைக்கான உதாரணங்கள் என்பேன்.

“சமத்துவத்தில் முழுமனதாக நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு மதத் தலைவரின் வெற்றியைக் கொண்டாடும் ஒரு நிகழ்வில் பங்குபற்றவும் பேசவும் கிடைத்த வரலாற்றுச் சந்தர்ப்பத்திற்காக நானும் எனது சமூகமும் நன்றியுடையவர்களாக இருப்போம் எனக்கூறி இவ்வுரையை முடித்துக்கொள்கிறேன், நன்றி” எனத் தெரிவித்தார்.

https://marumoli.com/அந்தஸ்து-அல்லாது-ஒருவரு/

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.