Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள்

 
ரஜினிகாந்த்: தலைமுறைகள் கடந்தும் சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்க காரணம் என்ன?

Getty Images

தலைமுறைகள் கடந்தும் ரஜினிகாந்த் 'சூப்பர் ஸ்டாராக' நிலைத்து நிற்கிறார் 

"பலரும் அற்புதங்களை நம்புவதில்லை, ஆனால் அற்புதங்கள் நிகழ்கின்றன. ஒரு சாதாரண பேருந்து நடத்துனர் மிகப்பெரிய மனிதர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொள்வது ஓர் அற்புதம் தான்."

கடந்த 2013ஆம் ஆண்டு என்டிடிவி ஊடக விருது (Greatest Global Living Indian Legends) வழங்கும் விழாவில், அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையால் விருது வாங்கிய பிறகு நடிகர் ரஜினிகாந்த் கூறிய வார்த்தைகள் இவை.

கடந்த 1975ஆம் ஆண்டில், 'அபூர்வ ராகங்கள்' எனும் திரைப்படத்தில், சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமான ஒரு நடிகர், பிறகு வில்லன், கதாநாயகன், 'சூப்பர் ஸ்டார்', என பரிணாமங்கள் எடுத்து, 2023இல் 'ஜெயிலர்' எனும் ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த ஒரு திரைப்படத்தைக் கொடுத்து, இன்றும் 'சோலோ ஹீரோவாக' (Solo hero) நிலைத்து நிற்பதை அவர் கூறியது போலவே 'அற்புதம்' என்றே விவரிக்கலாம். 

இன்று அவர் தன் 74வது பிறந்த நாளை (டிச. 12) கொண்டாடி வருகிறார். 

 

தமிழ் சினிமாவை நிச்சயமாக ரஜினிகாந்திற்கு முன்-பின் என பிரிக்கலாம். பல தமிழ் சினிமா நடிகர்களிடம் அவரது ஸ்டைல் மற்றும் நடிப்பின் தாக்கம் இருப்பதை நம்மால் திரையில் பார்க்க முடிகிறது.

தென்னிந்தியா மட்டுமல்லாது, வடஇந்தியாவில் கூட நன்கு அறியப்பட்ட நடிகராகவே ரஜினிகாந்த் இருக்கிறார். திரையில் அறிமுகமாகி 49 ஆண்டுகளைக் கடந்தும் அவர் முன்னணி நடிகராக, 'சூப்பர் ஸ்டாராக' நிலைத்து நிற்பது எப்படி?
 

'முத்து' படத்தில் செய்த வித்தியாசங்கள்

 

நடிகர் ரஜினியின் வெற்றிக்கு, அவர் ஒரு இயக்குநரின் நடிகராக இருப்பதும், தமிழ் சினிமா ரசிகர்கள் குறித்த அவரின் புரிதலும் தான் காரணம் என்று கூறுகிறார் நடிகர் மற்றும் இயக்குநர் ரமேஷ் கண்ணா.

'முத்து', 'படையப்பா', 'கோச்சடையான்' போன்ற திரைப்படங்களில் நடிகர் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள இவர், பல திரைப்படங்களின் கதை விவாதங்களிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

"ரஜினி, பெரும்பாலும் கதை விவாதங்களில் கலந்துகொள்வார். முன்னர் எல்லாம் பிறமொழி திரைப்படங்களை ரீமேக் செய்யும்போது, அதை அப்படியே எடுத்து வைப்பார்கள். ஆனால் ரஜினி, தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு ரீமேக் செய்யவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்," என்கிறார் ரமேஷ் கண்ணா.

கடந்த 1995ஆம் ஆண்டில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி நடித்து வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற 'முத்து' திரைப்படம், மோகன்லால் நடிப்பில் வெளியான 'தென்மாவின் கொம்பத்' (1994) எனும் மலையாளத் திரைப்படத்தின் தழுவல். இரு திரைப்படங்களின் திரைக்கதையிலும் அதிகளவு வித்தியாசங்களை நம்மால் காண முடியும்.

ரமேஷ் கண்ணா

RameshKanna/Facebook

நடிகர் ரஜினியின் வெற்றிக்கு, அவர் ஒரு இயக்குநரின் நடிகராக இருப்பது முக்கிய காரணம் என்கிறார் ரமேஷ் கண்ணா

"படையப்பா திரைப்படத்தின் கதை விவாதத்தின் போது, ஒரு காட்சி பிடிக்கவில்லை என சொன்னபோது, அதை அவர் ஏற்றுக்கொண்டார். அது சில 'பஞ்ச் டயலாக்குகள்' கொண்ட மாஸான ஒரு காட்சி. அதில் மாற்றம் சொன்னபோது, எந்த 'ஈகோவும்' இல்லாமல் ஒப்புக்கொண்டார்." என்கிறார் ரமேஷ் கண்ணா.

கதை, திரைக்கதை முடிவாகி, படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகு, இயக்குநர் என்ன சொல்கிறாரோ, அதை அப்படியே கேட்டு நடிப்பதும், அதை இன்றுவரை பின்பற்றுவதும் தான் அவரது வெற்றிக்குக் காரணம் என தான் நினைப்பதாக கூறுகிறார் ரமேஷ் கண்ணா.

 

 

ரஜினிகாந்தின் திரை பிம்பம்

 

'ரஜினிகாந்தின் திரை பிம்பம்'

Getty Images

'கபாலி' படத்திற்கு பிறகு ரஜினியின் பாணியில் ஒரு மாற்றம் ஏற்பட்டது என்கிறார் எழுத்தாளர் தீபா 

நடிகர் ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையை 'அண்ணாமலை திரைப்படத்திற்கு முன்-பின்' என இரண்டாக பிரித்துப் பார்த்தால், அவரது வெற்றிக்கான பாதை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என புரியும் என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா. இவர் சினிமா குறித்து 'ஒளி வித்தகர்கள்', 'கதை டூ திரைக்கதை' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். 

"அண்ணாமலை திரைப்படத்தில், ஒரு சாதாரண, நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அப்பாவி மனிதன், பணக்காரர்களால் ஏமாற்றப்படுகிறான். பிறகு அந்த அப்பாவி, யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு முன்னேறி, வெற்றி அடைகிறான்."

"அண்ணாமலை திரைப்படம் பெரும் வெற்றி பெற்ற பிறகு, ரஜினி தேர்ந்தெடுத்த கதைகள் பெரும்பாலும் 'ஒரு வெகுளியான அல்லது நல்ல மனம் கொண்ட ஒருவன், வாழ்க்கையில் துரோகத்தைச் சந்தித்த பிறகும் கூட, எப்படி பல சாதனைகளைச் செய்கிறான் அல்லது அதிலிருந்து மீண்டு வருகிறான்' என்பதை அடிப்படையாகக் கொண்டவையே" என்கிறார் ஜா.தீபா.

ஜா.தீபா குறிப்பிடுவது போன்ற கதாபாத்திர வடிவமைப்புகள் அல்லது கதைகளை, அண்ணாமலைக்கு பிறகு வந்த உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, சிவாஜி, கோச்சடையான், லிங்கா போன்ற திரைப்படங்களில் நம்மால் காண முடியும்.

அதேபோல, 'தென்மாவின் கொம்பத்' திரைப்படத்தில், 'முத்து' படத்தில் வருவது போன்ற 'ஜமீன்தார்' (ரஜினிகாந்த்) கதாபாத்திரமோ, அவர் தனது உறவினரால் (ரகுவரன் ஏற்று நடித்திருந்த 'ராஜசேகர்' எனும் கதாபாத்திரம்) ஏமாற்றப்படுவது போன்றோ காட்சிகள் இருக்காது.

ஜா.தீபா

Deepa/Instagram

நடிகர் ரஜினிகாந்தின் திரைவாழ்க்கையை 'அண்ணாமலை திரைப்படத்திற்கு முன்-பின்' என பிரிக்கலாம் என்கிறார் எழுத்தாளர் ஜா.தீபா

"மற்ற கதாநாயகர்களை விட இதுபோன்ற கதைகளை அதிகம் தேர்ந்தெடுத்து நடித்தது ரஜினி தான். ஒரு சாமானியன் நினைத்தால் எந்த எல்லைக்கும் செல்ல முடியும், இது மக்களுக்குப் பிடித்த 'ஒன்லைன்'. அதையே தனது பாணியில் திரையில் காட்டியது, ரஜினியின் புத்திசாலித்தனம் தான்" என்கிறார் தீபா.

நடிகர் ரஜினி, 'அண்ணாமலைக்கு' பிறகு, தனது திரைப்படங்களின் கதை குறித்து மிகவும் கவனமாக இருந்தார் என்று கூறும் தீபா, "அவர் தீர்மானித்த கதைகளில் சறுக்கியது என்று பார்த்தால் 'பாபா' மட்டும் தான். இயக்குநர்களும் அவருக்கு ஏற்றவாறு திரைக்கதை எழுதினர். 'கபாலி' படத்திற்கு பிறகு தான் இந்தப் பாணியில் ஒரு மாற்றம் ஏற்பட்டது" என்கிறார்.

 

 

ரஜினி படங்களில் பெண் கதாபாத்திரங்கள்

 

ரஜினியின் திரைப்படங்களில் பெண்கள்

Getty Images

ஒருகட்டத்தில் ரஜினியின் திரைப்படங்களில் பெண்கள் சித்தரிக்கப்பட்ட விதம், தனக்கு கவலையை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார் ஜீவ சுந்தரி

எழுத்தாளரும், பெண்ணிய ஆய்வாளருமான பா. ஜீவ சுந்தரி, "அவருக்கு எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் ரஜினி தான் வெளிப்படுவார். அதை வெறும் ஸ்டைல் என்று கூறி விட முடியாது. அவர் ஒரு நல்ல நடிகர். எனவே, ஸ்டைலுடன் கூடிய நடிப்பு தான் மக்களை ஈர்த்தது, ஈர்க்கிறது என்று சொல்லலாம்" என்கிறார். 

பா. ஜீவ சுந்தரி தமிழ் சினிமா குறித்து 'ரசிகை பார்வை' உள்ளிட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 

'முள்ளும் மலரும்' திரைப்படத்தை உதாரணமாகக் கூறும் பா. ஜீவ சுந்தரி, "அந்தப் படம் ஒரு நாவலிலிருந்து எடுக்கப்பட்டது. நாவலை படித்தால், நிச்சயம் 'காளி' கதாபாத்திரத்தை வெறுப்பீர்கள். அவன் பெண்களை மதிக்க மாட்டான், எல்லோரிடமும் கோபப்படுவான், எப்போதும் 'குடி' என்று இருப்பான். ஆனால், அதே 'காளியை' திரையில் ரஜினி நடிப்பில் பார்த்தால், வெறுக்க முடியாது. அதுதான் அவரது பலம்" என்கிறார்.

ஆனால், ஒருகட்டத்தில் ரஜினியின் திரைப்படங்களில் பெண்கள் சித்தரிக்கப்பட்ட விதம் தனக்குக் கவலையை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார் ஜீவ சுந்தரி.

எழுத்தாளர் பா. ஜீவ சுந்தரி

Jeeva Sundari / Facebook

ரஜினியின் ஸ்டைலுடன் கூடிய நடிப்பு தான் மக்களை ஈர்த்தது, ஈர்க்கிறது என்று சொல்லலாம் என்கிறார், பா.ஜீவ சுந்தரி 

"ஆண்களின் பார்வையில் இருந்து தான் தமிழ் சினிமாவின் பெண் கதாபாத்திரங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. ரஜினியின் பல திரைப்படங்களில், படித்த அல்லது பணக்கார பெண்கள் திமிரானவர்களாக சித்தரிக்கப்பட்டனர். அவர் அந்தப் பெண்களை திருத்துவது போல காட்சிகள் இருக்கும்." என்று ஜீவ சுந்தரி கூறுகிறார்.

இதை எழுத்தாளர் ஜா.தீபாவும் சுட்டிக்காட்டுகிறார். "அது 90களுக்கு முன்புவரை படித்த பெண்கள் குறித்து சமூகத்தில் இருந்த பிம்பம், அதைத்தான் அவரது திரைப்படங்கள் பிரதிபலித்தன. அப்போது பிற நடிகர்களின் படங்களிலும் இது இருந்தது."

"ஆனால், இப்போது அதே ரஜினியின் 'கபாலி', 'காலா' திரைப்படங்களில் வந்த பெண் கதாபாத்திரங்களை பார்த்தால், அவர் காலத்திற்கு ஏற்றாற்போல கதைகளைத் தேர்ந்தெடுக்கிறார் என்பது புரிகிறது. அதுவும் அவரது வெற்றிக்கு முக்கிய காரணம்" என்று கூறுகிறார் தீபா.

 

 

மற்ற நடிகர்களிடமிருந்து வேறுபடுவது எங்கே?

 

மதன் கார்க்கி

Madankarky/Instagram

ரஜினிகாந்த் நடித்த எந்திரன் மற்றும் 2.0 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் வசனங்களில் பங்காற்றியுள்ளார் மதன் கார்க்கி

பிபிசி தமிழிடம் பேசிய பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் மதன் கார்க்கி, "நடிகர் ரஜினிகாந்திற்கு இருப்பது போல பலதரப்பட்ட ரசிகர்களை வேறு நடிகருக்கு பார்ப்பது சிரமம் தான். 'தலைமுறை இடைவெளி' என்று சொல்வோம், ஒரு தலைமுறைக்கு பிடித்தது மற்றொரு தலைமுறைக்கு பிடிக்காது. ஆனால், ரஜினி விஷயத்தில் மட்டும் இது நேர்மாறாக உள்ளது" என்கிறார்.

இந்தியிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். குறிப்பாக 80கள் மற்றும் 90களில், பாலிவுட் திரைப்படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாது முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

அதில் குறிப்பிடத்தக்கது 'ஹம்' (Hum) எனும் திரைப்படம். 1991இல் வெளியான இத்திரைப்படத்தில் கதாநாயகன் அமிதாப் பச்சன். அவரது சகோதரராக 'குமார் மல்ஹோத்ரா' எனும் முக்கியக் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இவ்வாறு பிறமொழி திரைப்படங்களில் நடித்ததும், எந்த மாதிரியான திரைப்படங்களை, கதாபாத்திரங்களை மக்கள் விரும்புவார்கள் என்பதை புரிந்துகொள்ள அவருக்கு உதவியது என்கிறார் மதன் கார்க்கி.

ரஜினிகாந்த் நடித்த எந்திரன் மற்றும் 2.0 திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் வசனங்களில் பங்காற்றியுள்ள மதன் கார்க்கி, 2.0 திரைப்படத்தில் எழுதிய ஒரு வசனம், 'I'm the only one, Super One. No Comparison'. அதை நடிகர் ரஜினியின் திரைப்பயணத்தைக் குறிக்கவே எழுதியதாக மதன் கார்க்கி கூறுகிறார்.

"தனது ஸ்டைல் மற்றும் நடிப்புத் திறனை மட்டும் நம்பாமல், தனது பலதரப்பட்ட ரசிகர்களை திருப்திப்படுத்த நல்ல கதை மற்றும் திரைக்கதை அவசியம் என்பதை அவர் உணர்ந்துள்ளார். இந்த இடத்தில் தான் மற்ற 'மாஸ் ஹீரோக்களிடம்' இருந்து ரஜினிகாந்த் வேறுபடுகிறார். அதனால் தான் நிலைத்தும் நிற்கிறார்" என்கிறார் மதன் கார்க்கி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.


https://www.bbc.com/tamil/articles/cg52d94mg4go?at_campaign=ws_whatsapp

  • கருத்துக்கள உறவுகள்

75 வது வயதை நோக்கி ரஜனிகாந்த்

அந்த வயது ஒரு மனிதனின் 100% ஆயுட்காலம்,  99%மான மனிதர்கள் 100 வயதுவரை வாழ்வதில்லை,

அதுக்கு பின்னரெல்லாம் பெரும்பாலானோருக்கு சும்மா பெயருக்கு நடமாடி திரியும் மனித உடம்பு.

இந்த வயதில் உச்சத்திலிருந்தபடி நூறு கோடிகளில் சம்பளம் வாங்கும் முதலும் கடைசியுமான இந்திய ஹீரோ ரஜனியாகத்தானிருப்பார். இப்போது ஒப்பந்தமாகிருக்கும் படங்களை பார்த்தால் இன்னும் மூன்று வருடம் நடிக்க வாய்ப்பிருக்கு.

கமலும் அதே தளத்திலிருந்தாலும், ரஜனியைவிட 4 வயசு இளையவர் இன்னும் 5 வருடத்தின் பின்னர் ரஜனிபடம் போல் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக இருப்பாரோ தெரியவில்லை ஏனென்றால் இப்போதே அந்த நிலையில் அவர் இல்லை.

ஸ்டைல் நடிப்பில் ரஜனிதான் ஆரம்பம் என்றில்லை, பழைய படங்களில் ஸ்டைலில் சிவாஜிதான் அனைவருக்கும் முன்னோடி.

எங்கள் தங்கராஜா, வசந்தமாளிகை, தங்கப்பதக்கம் போன்ற படங்களில் ஸ்டைலில் பின்னுவார் சிவாஜி.

அதுவும் நல்லதொரு குடும்பம் பாடலில் ஆடிக்கொண்டே பாடிக்கொண்டு ஒரே பாடலில் அத்தனை ஸ்டைலும் முக பாவம் , நடனத்தில் சிவாஜியைபோல் இன்றுவரை யாரும் காட்டியதில்லையென்றும் சொல்லலாம்.

அதேபோல்தான் வசந்தமாளிகை , 

இன்னும் சொல்லபோனால்  யாரடி நீமோகினி பாடலில் இருந்தே  சிவாஜியின் நடை ஸ்டைலை ரஜனி கொப்பி அடித்தாரோ என்று எண்ண தோன்றும்.

 

சினிமா என்பது பொழுது போக்கு , அதை தனியே சீரியசுக்கு பாவிக்க கூடாது என்பதில் ரஜனி தெளிவாக இருந்தார் .

தியேட்டருக்கு வந்தால் வயசு வித்தியாசம் இன்றி அனைவரும்  சிரிச்சு விசிலடிச்சு குஷியாகி வீட்டுக்கு போகணும் என்பதை தனது கொள்கையாக வைத்திருக்கிறார் .

அதில் அவர்பெற்ற அசைக்க முடியாத வெற்றி இன்றுவரை தொடர்கிறது.

ரஜனி ரசிகனை சூடாக்கி சில்லறை பார்க்க தெரிந்த மனிதன்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, valavan said:

ரஜனி ரசிகனை சூடாக்கி சில்லறை பார்க்க தெரிந்த மனிதன்.

அதுவே தான். எம்ஜிஆர் திரைக்கு வெளியேயும் அதே பிம்பத்தை வைத்திருக்க வேண்டிய ஒரு நிலையில் இருந்தார். ஆனால் ரஜனி திரை வேறு, தன் சுயம் வேறு என்று காட்டியும், அவர் ஒரு அசைக்க முடியாத சக்தியாக தமிழ் சினிமாவில் இருந்தார் என்பது பெரும் ஆச்சரியமே.

ரஜனியின் திரை வாழ்க்கை மாறியது போலவே, தமிழ் சினிமாவின் போக்கும் ரஜனியால் மாறியது. 

எம்ஜிஆர், சிவாஜி ஆதிக்கத்தின் பின்னர் 70களின் நடுப்பகுதியில் இருந்து தமிழ் சினிமா வேறு ஒரு திசையை நோக்கி நகர ஆரம்பித்திருந்தது. ஆனால், ரஜனியின் 'முரட்டுக்காளை' மற்றும் கமலின் 'சகலகலா வல்லவன்' தமிழ் சினிமாவை மீண்டும் பழைய பாதையிலேயே போக வைத்தது. ஷங்கர் இதற்கே வண்ணம் தீட்டினார்.

மணிரத்னம் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ஆங்கிலப் படங்களின் தாக்கத்தினால், இந்தப் போக்கிலிருந்து வெளியேற முயன்றார். ஓரளவிற்கே அவரால் தமிழ் சினிமாவை ரஜனி போன்ற கதாநாயகர்களிடமிருந்து விடுவிக்க முடிந்தது.  

பாலா வந்த பின்னர் தமிழ் சினிமா மாறியது. பாலா போல பலர் வந்தனர், வந்து கொண்டிருக்கின்றனர். நாயகர்களின் பிம்பங்களையும் தாண்டி மாற்றுச் சினிமாக்கள் இன்று பலவும் வந்து நன்றாக ஓடுகின்றன. புதிய முயற்சிகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. அத்துடன் ரஜனியும், விஜய்யும் நிற்கின்றார்கள். 

பான் - இந்திய திரைப்படங்கள் இன்று ரஜனி போன்ற நட்சத்திர நடிகர்களுக்கு ஒரு அளவுகோலாகிவிட்டது. அல்லு அர்ஜூனாவின் 'புஷ்பா - 2' எட்டு நாட்களில் ஆயிரம் கோடி வசூல் என்பது புதுச் சாதனை. எந்த தமிழ் நடிகரும், ரஜனி உட்பட, 1000 கோடி வசூலை இன்னும் எட்டவில்லை. அமீர் கான், பிரபாஸ், ஷாரூக், அல்லு அர்ஜூன் என்று இது இன்னொரு வரிசை. ரஜனியோ, விஜய்யோ இதில் இல்லை. இன்றைய நிலையில் இவர்கள் வரவும் முடியாது. 

தமிழ் சினிமா ஆயிரம் கோடி வசூல் கொண்டு வரும் ஒரு புதிய நட்சத்திரத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றது....................  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜினி எனும் சிவாஜி ராவ்  உலக  அதிசயமுமல்ல, அபூர்வமுமல்ல வானத்தில் இருந்து குதித்தவருமல்ல....👈

சினிமாவை சினிமா கொட்டகைகளுடன் விட்டு வராமல்  நடு வீட்டுக்குள் கொண்டுவந்தது மட்டுமல்லாமல் அதை அரசியலாகிக்கியதன் விளைவுதான் ரஜனி எனும் போலி மனிதனின் ராஜபோக ராச்சியம்.

தமிழ்நாட்டிற்கிற்கு கிடைத்த சாபம் சினிமா மோகம். அதை கெட்டியாக பிடித்தவர்களில் சிவாஜிராவ் அவர்களும் ஒருவர். 😂

சுருக்கமாக சொல்லப்போனால் ரஜனி ஒரு வியாபாரப்பொருள்.அவ்வளவுதான். அதை விட்டு சிவாஜிராவ் அவர்களை தூக்கிப்பிடிக்கும் அளவிற்கு திறமைசாலி அல்ல.👈

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.