Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

எனக்கு ஏற்பட்டுள்ள நேர வசதி இன்மையால் எழுத்தாவணங்கள் படைப்பதை இந்தாண்டு முடிவுடன் நிறுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளேன். ஆயினும் ஏற்கனவே படைத்தவற்றை தொடர்ந்து இற்றைப்படுத்த மட்டும் செய்வேன். எனினும் படிமங்களை தொடர்ந்தும் ஆவணப்படுத்துவேன்.

இதற்கு முதல் - நான் செய்ய வேண்டும் என்று எனது மனதில் எண்ணி வைத்திருந்த அத்தனை ஆவணத் தலைப்புகளையும் அதனை செய்ய வேண்டிய முறை மற்றும் தகவல் திரட்டும் வழி ஆகியவற்றை இங்கே எழுதி வைத்துச் செல்கிறேன். என்பின் அதனை செய்ய எண்ணுவோர் இதனை வாசித்து இதில் வழிகாட்டப்பட்டுள்ளவாறோ அல்லது அதை விட மேம்பட்ட முறையிலோ ஆவணத்தை படையுங்கள். எவர் குத்தினும் அரசியானால் சரியே!

இந்த வழிகாட்டல்கள் யாவும் உரையாடல் முறையில் அறிவுறுத்தலாக எழுதப்பட்டுள்ளன. இதனை எடுத்துச் செய்ய விரும்புவோர் ஒரு இனத்தின் வரலாற்றை எழுதுகிறோம் என்ற எண்ணத்தோடு சிரத்தை எடுத்துச் செய்யுங்கள்.

 

1) அணிநடை உடை:

புலிகளின் படைத்துறையின் அனைத்துக் கிளைகளும் அணிநடையின் போது தமது படையணி/ பிரிவு/ படை/ அணி - யிற்கான நிறங்களைக் கொண்ட இடைப்பட்டிகள் (wasit band), கழுத்துக்குட்டை (neck scarf), வரைகவி (berat), வரித்தோல் கொண்ட நெடுஞ்சப்பாத்து (படைத்துறைக் கிளையின் வரியின் நிறத்தில் இருக்கும். சிறுத்தைப்படையினரும் தம் சீருடையின் பாணியில் அணிந்திருப்பர்.) ஆகியவற்றை அணிந்திருப்பர். சிறுத்தைப்படையின் மூவணிகளும் கூடுதலாக "குத்துக்கத்தி" ஒன்றினை பளுவில் கொண்டிருப்பர். 

இதனை நீங்கள் ஆவணப்படுத்தும் போது இரண்டாம், மூன்றாம், நான்காம் ஈழப்போர் என்று ஒவ்வொரு கட்டத்திற்கும் ஆவணப்படுத்தல் வேண்டும். அப்போதுதான் படிமுறை வளர்ச்சியினை நோக்க இயலும். எதிர்கால ஆராச்சிகளுக்கும் வரலாறு திரித்தலை தவிர்ப்பதற்கும் உதவிகரமாக இருக்கும்.

இதற்கான தகவல்களை புலிகளின் படிமங்களை உற்று ஆராயுமிடத்தில் கண்டெடுக்கலாம். அதற்கு நீங்கள் யாழில் நான் ஆவணப்படுத்தியுள்ள படிம ஆவணங்களை பாவிக்கலாம்.

 

 

2) ஈழப்போரில் அழிக்கப்பட்ட சிங்கள வான்கலங்கள்

இதனை நீங்கள் செய்யும் போது ஆண்டுகள் அடிப்படையில் செய்யுங்கள். போர் அடிப்படையில் செய்வது உகந்ததன்றென்பது எனது கருத்தாகும்; ஒவ்வொரு ஆண்டும் வான்கலங்கள் அழிக்கப்பட்டும் சேதமடையச் செய்யப்பட்டும் வந்தன. எனவே ஆண்டுகள் அடிப்படையில் செய்வதே உகந்ததாகும்.

இதற்கான ஆவணப்படுத்தல் பாணிக்கான எண்ணக்கரு வேண்டுமெனில் - நான் இதே போன்று சிங்களவரினதும் சிறிலங்காச் சார்புக் கடற்கலங்களுக்கும் செய்த கீழுள்ள ஆவணத்தை ஒருதடவை காணவும். அதனைக் காணுமிடத்து உங்களுக்கு கண்டிப்பாக ஒரு எண்ணக்கரு தோன்றும்.

இந்த வான்கலங்கள் பற்றிய தகவல்களை புலிகளின் ஏடுகள், தமிழ்நெற், புதினம், உதயன் (தனியார் ஏடுகளில் இதை மட்டும் பாவிக்கவும்) ஆகியவற்றிலிருந்து திரட்டலாம். மேலதிக தகவல்களுக்கு சண்டே ரைம்ஸையும் வாசித்தறியலாம் (அப்போது ஒன்றிற்கு இரண்டு தடவை கவனமாக வாசித்தல் வேண்டும்.).

சிங்களவரால் கைப்பற்றப்பட்ட ஏவுகணை செலுத்திக் கோதுகள் யாவும் இரத்மலானை வானூர்தி அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஏலுமெனில் அவற்றின் படிமங்களையும் இணைக்கவும்.

 

3) சிங்களக் குடியேற்றம் 

1948 தொட்டு ஒவ்வொரு நாளும் தமிழீழத்தின் எந்தெந்தப் பரப்புகளில் சிங்களக் குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதையும் நாம் ஆவணப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் போது அது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் சேர்த்திருத்தல் வேண்டும். ஆதாரங்களை சேர்க்கும் போது IEEE பாணியில் செய்தல் வேண்டும். அதுவே இது போன்ற சிக்கலுக்குரிய முக்கிய ஆவணங்களுக்கு சிறந்த முறையாகும்.

இதை செய்வதால் நாம் எவ்வளவு நிலப்பரப்பினை இழந்துவந்துள்ளோம் என்பதை எம்மால் நோக்க இயலுவதோடு எமது எதிர்கால தலைமுறைக்கு எமது கடந்த கால தலைமுறை வாழ்ந்த நிலங்களை அறியவும் அவர்கள் அத்தீவின் ஆதிக்குடிகளாக இருந்து எப்படி விரப்பட்டார்கள் என்பதை பறைசாற்றவும் இது உதவும்.

ஆவணப்படுத்தும் போது சேர்த்திருக்க வேண்டியவை: 

  1. எந்தத் திட்டத்தின் அடிப்படையில் குடியேற்றம் நிகழ்ந்தது

  2. பாதிக்கப்பட்ட ஊரின் அன்றை தமிழ்ப் பெயரும் தற்போதைய சிங்கள மொழிப் பெயரும்

  3. நாள் & நேரம்

  4. எத்தனை பேர் முதலில் குடியேற்றப்பட்டனர்

  5. நிகழ்வு விரிப்பு (இங்கு IEEE பாணியில் ஆதாரங்கள் சேர்த்திருத்தல் இன்றியமையாததொன்றாகும்)

  6. படிமங்கள்

  7. குடியேற்றத்தின் போது கொல்லப்பட்ட தமிழர்கள், வன்புணர்ப்பட்ட தமிழ்ப்பெண்கள் ஆகியோரின் எண்ணிக்கை 

  8. இதால் பாதிக்கப்பட்ட அயல் தமிழ் ஊர்கள்

  9. விரட்டப்பட்ட தமிழர்கள் எங்கெல்லாம் ஏதிலிகளாக சென்றனர்

  10. ஆதாரங்கள்

 

4) தமிழீழ நடைமுறையரசிற்குட்பட்ட ஆட்புலங்கள்:

ஒவ்வொரு ஈழப்போரிலும் புலிகளின் ஆளுகைக்குட்பட்ட ஆட்புலங்களை (மீட்டு தமது ஆளுகைக்குள் வைத்திருந்த நிலப்பரப்பு) சரியாக ஆவணப்படுத்தல் வேண்டும். இது கொஞ்சம் கடினமான வேலை என்பதை நான் நன்கறிவேன். இருந்தாலும் நாம் இதை செய்வதால் - புலிகளுக்குப் பின்னான காலத்தில் சிங்களக் குடியேற்றத்தால் ஒரு ஊர் பாதிக்கப்பட்டு அங்கு எமது தேசத்தவர் வாழ்ந்ததிற்கான சுவடே இல்லாமல் போயிருப்பினும் முன்னாளில் புலிகளின் ஆட்சிக்குட்பட்டதென்பதாவது வரலாற்றிலிருக்கும், குறிப்பாக எல்லையோர சிற்றூர்கள்.

இதைச் செய்யும் போது அவ்வூர் எச்சமரால் மீட்கப்பட்டது என்பதையும், அச்சமரில் மாவீரரானோர் எத்தனை பேர் (ஏலுமெனில் அவர்தம் தரநிலையுடனான இயக்கப்பெயர்) என்பதெல்லாம் எழுதப்பட்டிருத்தல் வேண்டும். மேலும் அது எத்தனை ஆண்டுகள் எம்மவரின் கட்டுப்பட்டிற்குள் இருந்தது, பின்னர் மீளவும் எப்போது வன்வளைக்கப்பட்டது, வன்வளைப்பின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை என்ன என்பதெல்லாம் ஆவணப்படுத்த வேண்டும். சில வேளைகளில் அது மீளவும் மீட்கப்பட்டிருக்கும்; ஓயாத அலைகள் மூன்று ஐந்து கட்டங்களாக சுழன்றடித்த போது இடிமுழக்கம், சூரிய கதிர் - 1, உண்மை வெற்றி - 1,2,3 , வெற்றியுறுதி, போர்முழக்கம்- 1,2,3,4,5 , நீர்சிந்து - 1,2 போன்ற படைய நடவடிக்கைகள் மூலம் சிங்களவரால் வன்வளைக்கப்பட்ட தமிழூர்கள் எல்லாம் மீட்கப்பட்டன. இவற்றில் சில அடைகல் என்று பெயர் சூட்டப்பட்ட நடவடிக்கைகள் மூலம் சிங்களவரால் மீளவும் வன்வளைக்கப்பட்டன. இவையும் ஆவணப்படுத்தப்படல் வேண்டும்.

 

5) புலிகளின் தரை வழி வலிதாக்குதல்கள் மற்றும் வலுவெதிர்ப்புகள்

இதை மூன்றாகப் பிரிக்கவும். ஒன்று கரந்தடித் தாக்குதல்கள் எனவும் மற்றையது புலனாய்வு நடவடிக்கைகள் எனவும் மற்றையதை மரபுவழி வலிதாக்குதல்கள் (offenses) மற்றும் வலுவெதிர்ப்புகள் (defenses) என்றும் பிரித்து ஆவணப்படுத்தவும்.

ஏறத்தாழ முற்றாக ஆவணப்படுத்துவதென்பது ஏலாத விடையம் என்று எண்ணுகிறேன். இருப்பினும் முயன்றால் எதுவும் முடியும் என்பதை மனதில் நிறுத்தி இந்த வரலாற்றை ஆவணப்படுத்ததும். முயற்சியாளர்களால் கண்டிப்பாக முடியும். 

 

6) மூழ்கடிக்கப்பட்ட & சேதப்பட்ட கடற்புறாக்கள் மற்றும் கடற்புலிகளின் கடற்கலங்கள்

மேலே குறிப்பிட்டதைப் போன்று ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்ற சமர்களில் மூழ்கடிக்கப்பட்ட மற்றும் சேதப்பட்ட கடற்புறாக்கள் மற்றும் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் ஆகியவற்றின் கடற்கலங்களை நீங்கள் ஆவணப்படுத்த வேண்டும். அதில் எமது கலங்கள் (ஆழிக்கப்பல்கள், சண்டைப் படகுகள், வழங்கல் படகுகள், இடியன்கள்) சேதப்பட்டிருந்தாலோ அல்லது மூழ்கடிக்கப்பட்டிருந்தாலோ மட்டும் அந்தச் சமர் தொடர்பில் ஆவணப்படுத்தவும். மற்றும்படி அது தேவையற்றதாகும், இத்தலைப்பைப் பொறுத்த மட்டில்.

மேலும், மூழ்கடிக்கப்பட்ட புலிகளின் ஆழிக்கப்பல்களை (மற்றும் சில முக்கிய வள்ளங்களையும்) மட்டும் நான் ஆவணப்படுத்தியுள்ளேன். தேவைப்படின் இதையெடுத்து மென்மேலும் விரிவாக்குங்கள்.

 

 

7) கடற்சமர்கள்

இதற்குள் சிங்களவருடன் எமது கடற்புலிகளும் கடற்புறாக்களும் பொருதிய கடற்சமர்களை நீங்கள் ஆவணப்படுத்த வேண்டும். நான் ஏறத்தாழ 85% விழுக்காட்டை "புலிகளால் தாக்கப்பட்ட சிறிலங்காச் சார்புக் கடற்கலங்கள்" என்ற தலைப்பில் ஆவணப்படுத்தியுள்ளேன். அதற்குள் ஒரு கடற்சமரில் சிங்களவரின் கடற்கலமொன்று மூழ்கடிக்கப்பட்டிருந்தாலோ அல்லது சேதமடைந்திருந்தாலோ அல்லது கைப்பற்றப்பட்டிருந்தாலோ அந்தச் சமர் தொடர்பாக என்னால் திரட்டக்கூடிய தகவல்களை திரட்டி ஆவணப்படுத்தியுள்ளேன். ஒரு வேளை சிங்களவருக்கு மேற்குறிப்பிட்ட இழப்புகள் ஏற்படவில்லையெனில் அச்சமரை நான் ஆவணப்படுத்தவில்லை. 

ஆகவே இதைச் செய்ய விரும்புவோர் நான் விட்டதெல்லாவற்றையும் ஆவணப்படுத்துங்கள். பின்னர் என்னுடையதையும் உங்களுடையதையும் ஒன்றாக்கி "தமிழீழக் கடற்சமர்கள்" என்ற பெயரில் வெளியிடுங்கள், தனி ஆவணமாக. அதற்குள் மூழ்கடிக்கப்பட்ட எம்மவரின் கலங்கள் தொடர்பான தகவல்களும் இருத்தல் நன்றாகும்.

 

8 ) சிங்களப் படையினரால் கொல்லப்பட்ட முஸ்லிம் பொதுமக்கள்

சிங்களப் படையினரால் கொல்லப்பட்ட முஸ்லிம் பொதுமக்களின் செய்திகள் யாவும் உதயன் நாளேட்டிற்குள்ளும் ஈழநாதம் நாளேட்டிற்குள்ளும் உள்ளன (1990 ஜூன் முதல் செப்டெம்பர் வரை). அவற்றை நீங்கள் தேடியெடுத்து ஆவணப்படுத்த வேண்டும்.

 

9) சேகரிக்கப்பட வேண்டிய திரைப்படங்கள் : 

  • அக்கினிப் பறவைகள் பாகம் - 1,2 (2003, 2004 ம் ஆண்டு முறையே வெளியிடப்பட்டது)

  • ஒளி படைத்த கண்

  • மண் பற்று

 

10) சேகரிக்கப்பட வேண்டிய புத்தகங்கள் : 

  1. வன்னிச் சமர்க்களம்

    • இது தமிழீழ வரலாற்றில் மிகவும் முதன்மை வாய்ந்த புத்தகமாகும். ஜெயசிக்குறுயில் இருந்து ஓயாத அலைகள் மூன்றின் ஐந்து கட்டங்களையும் தாண்டி தென்மராட்சியிலிருந்து புலிகள் வெளியேறும் வரையிலான அத்தனை சமர்களங்களினதும் அச்சொட்டான முழு விரிப்பினைக் கொண்ட புத்தகம்! இது 900 சொச்சம் பக்கங்களைக் கொண்டது ஆகும்.

  2. போரும் வாழ்வும்

    • போராளிகளை பொதுமக்கள் தம் சிறகுகளினுள் வைத்து எப்படிப் பாதுகாத்தார்கள் என்பதை பற்றிய புத்தகம் இது.

  3. திகிலும் திரிலும்

    • இது ஆனையிறவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்துப் போரளிகளினது பயணப் பட்டறிவுகள் பற்றிய புத்தகமாகும். இப்புத்தகம் எழுதிய போது எழுத்தாசிரியரும் போராளிகளோடே பயணம் செய்தார். அப்போது தன்னால் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் தன்னைச் சுட்டுக்கொன்றுவிட்டு செல்லும்படி கூறிய ஒரு தேசப்பாற்றாளர் இவராவார். இப்புத்தகத்தில் பிரதேசவாதத்தை இவர் விதைத்தார் என்றும் இவர்மேல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  4. கிழக்குப் போர்முனை

    • தென் தமிழீழச் சமர்க்களங்கள் பற்றியவை.

  5. களத்தில் சில நிமிடங்கள் 

    • முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளில் (Forward Defence Lines) நிற்கும் போராளிகளை நேரடியாகச் சந்தித்து அவர்களின் பட்டறிவுகளை எழுத்தில் கொண்டுவந்த நூல் இதுவாகும்.

  6. மௌனப் புதைகுழிக்குள் பாகம்-2

    • சோனகர்களாலும் சிங்களவர்களாலும் தென் தமிழீழத்தில் குறிப்பாக மட்டு- அம்பாறையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் பற்றிய நூல்.

  7. Saitanic Force Volume 2, 3 - இந்திய வல்லூறுகள் எம்மவரிற்கிழைத்த நாசங்களை பட்டியலிடும் நூலின் பிற பகுதிகள். ஏறத்தாழ 2000 ஆயிரம் பக்கங்கள் கொண்ட மூன்று பாகங்களாக வெளிவந்த நூல். இதன் முதற்பாகம் மட்டுமே இப்போது காணக்கிடைக்கிறது.

  8. தவிபு 'சிறப்பு உறுப்பினர்' கா.வே.பாலகுமாரன் அவர்கள் சிங்களத்தில் எழுதிய இரு நூல்களான 'மௌனித்திருந்தவர் மனக்குரல்' (ஹன்டக் நெத்தியங்கே ஹதவத்த சக்ஷிய) & 'வன்னியிலிருந்து ஒரு மடல்' (வன்னிய சிட்ட லியம)

  9. மீண்டும் யாழ் மண்ணில் பதிந்த எம் தடங்கள் (போராளி சங்கர் அவர்களால் எழுதப்பட்டது, ஆனையிறவு & தென்மராட்சி மீட்பு தொடர்பில்)

 

11) மீள உருவாக்கப்பட வேண்டிய புத்தகம்: 

உதிக்கும் திசையில் உன்னத பயணம் - தலைநகரில் சிங்களப் படைத்துறை, சிங்கள மற்றும் முஸ்லிம் ஊர்காவல்படையினர், சிங்கள மற்றும் முஸ்லிம் காடையர்கள் ஆகியோரால் தமிழர்களுக்கு ஏற்பட்ட கரூரங்கள் மற்றும் பாதிப்புகள் தொடர்பில் தேசத்துரோகி மாத்தையா உள்ளிட்ட வி.பு. மக்கள் முன்னணியினர் சென்று தாம் கண்டவற்றை பதிவாக்கினர். பின்னர் அதனை கட்டுரையாக வெளியிட்டனர். அதனை ஈழநாதத்தின் செய்தியாசிரியராக இருந்த - பெயர் நினைவில்லை -  பின்னாளில் புத்தகமாக்கி வெளியிட்டார். இன்று இப்புத்தகம் இல்லை.

குலை நடுங்கும் கொடூரங்கள் நிரம்பிய 1990ம் ஆண்டின் பிற்பகுதிய திருமலை மாவட்ட மக்களின் வாழ்வு பற்றிய சாட்சிகளை பதிவாக்ககொண்ட கட்டுரையிது. மீளவும் புத்த்காமாக பதிப்பிக்க வேண்டியதாகும். 

இது ஈழநாதம் நாளேட்டில் 2/11/1990 முதல் 11/12/1990 வெளிவந்துள்ளது. 

இதனை நூலாக்கி விற்கும் போது நீங்கள் செய்த உழைப்பிற்கும் ஊதியமும் வரும், வரலாற்றை மீளவும் உருவாக்கியதாகவும் இருக்கும். 

மாத்தையா என்றவுடன் துரோகி எழுதியது என்று பாராமல் அதன் அதிமுக்கிய உள்ளுடுவனை எண்ணிப்பார்த்து அதை வெளிக்கொணர எத்தனிக்கவும். 


12) உருவாக்கப்பட வேண்டிய புத்தகம்:

  1. "தமிழ் அலை" என்ற மட்டக்களப்பில் இருந்து மாதம் இருமுறை மட்டும் வெளிவந்த ஏட்டில் மட்டு-அம்பாறையில் மாவீரரான 200இற்கும் மேற்பட்ட போராளிகளின் வரலாறுகள் உள்ளன. இதனை எடுத்து நூலாக்குதல் அவசியமானதாகும். அத்தனை மாவீரரினதும் வரலாறுகளும் விடுபடக் கூடாது. மிக அரிய இதழிதுவாகும். பிரதேசவாத்தோடு ஒருநாளும் தொழிற்படாதீர்கள்.

 

13) உண்டாக்கப்பட வேண்டிய வலைத்தளங்கள்:

  • நூல்களிற்கான வலைத்தளம்

ஈழத் தமிழ் தேசத்தின் வரலாற்றைக் கூறும் அத்தனை நூல்களையும் சேகரித்து அதனைக் கொண்டு ஒரு வலைத்தளத்தை உண்டாக்கவும். அதில் இந்நூல்களின் ஒரு பதிவினை போட்டு அதன் மூலம் நாம் எமது தலைமுறைகள் பிற இன மக்களிற்கு எமது போராட்டத்தின் நியாப்பாடுகளை கற்பிக்கலாம்.

இவ்வலைத்தளத்தை உண்டாக்கும் போது கீழ்க்கண்டவற்றை நினைவில் கொள்ளவும்:

  1. எந்தவொரு காலத்திலும் தலைவரின் படத்தையோ அல்லது புலிகளின் எந்தவொரு படத்தையோ இதில் வெளியிடக்கூடாது. ஏனெனில் அது புலிகளின் பரப்புரை வலைத்தளம் என்று படிமத்தை உருவாக்கி அவ்வலைத்தளத்தின் குறிக்கோளை நீர்த்துப் போகச் செய்யும். பரப்புரை வலைத்தளம் என்ற பட்டப் பெயர் கிடைக்குமானால் நாயிலும் எவரும் மதியார் என்பது நினைவிருக்கட்டும். பரப்புரைக்கான எந்தவொரு அடையாளமுமற்றதாக இருத்தல் இன்றியமையாததாகும்.

  2. ஏற்கனவே உள்ள புலிகள் சார் பரப்புரை வலைத்தளங்களின் ஒரு பக்கமாக இல்லாமலும் இருத்தல் வேண்டும்

  3. பிற புலிகள் சார் பரப்புரை வலைத்தளங்களிற்கான கொழுவிகளையும் இதன் பக்கங்களில் கொண்டிருத்தல் கூடாது. அதாவது பரப்புரையுடானான எத்தொடர்பும் இதற்கு இருக்கக் கூடாது.

  4. தமிழரின் அரசர்களின் சின்னங்கள், தமிழ் புலவர்களின் சின்னங்கள் என்று எமது பண்பாட்டிற்கான எந்தவொரு அடையாளங்களும் அதிலிருக்கக் கூடாது. முற்றிலும் நவீனமாக இருத்தல் வேண்டும்.

  5. இன்னும் சாலச் சொல்லப்போனால் தமிழ்நெற்றின் வடிவமைப்பில் இருத்தல் சாலச் சிறந்தது. 

அறிவிலித்தனமாக சிந்திக்காமல் - தலைவரின் படம் இருந்தால் தான் நல்லம் ... வள வள - எனாமல் குறிக்கோளை அடையும் பாதையைப் பற்றி சிந்திக்கவும், இதை உருவாக்க முயல்வோர். 

இதற்கான சில நூல்களை எனக்கு முன் சிலர் ஆவணப்படுத்த முயற்சித்துள்ளனர். அவர்களிடத்திலிருந்து நான் பெற்ற நூல்களை கீழே உள்ள திரியில் கொடுத்துள்ளேன். விரும்பியோர் பாவிக்கவும்:

 

  • சமர்களிற்கான வலைத்தளம்:

தரை, கடல், வான், மற்றும் புலனாய்வு நடவடிக்கைகள் என்று எம்மவரின் சமர்களை மட்டும் பட்டியலிடும் வலைத்தளம் ஒன்றை உண்டாக்கவும்.

உண்டாக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டியவை:

  1. இதன் முகப்பிலும் புலிகளினதோ அல்லது தலைவரினதோ படிமங்களை போடக்கூடாது. விரும்பின் எம்மவரின் நிழல் தோற்ற படிமங்கள் (மாலைக்காட்சிகளில் தெரியும் கறுப்படித்த படங்கள்) ஐ பாவிக்கலாம். 

  2. இதுவும் தமிழ்நெற்றின் வடிவமைப்பில் இருத்தல் உகந்தது.

  3. இதன் சமர்களை பட்டியலிடும் போது அச்சமர் தொடர்பான காணொளிகள் படிமங்களையும் பதிவேற்றவும், சரியாக அறிந்திருப்பின் மட்டும். அதனைப் பதிவேற்றும் போது எழிய ஈழத்தமிழ் தேசத்தைச் சார்ந்த புலி வணிகர்களுகே உரிய நாறல் குணமான படிமங்கள் மற்றும் நிகழ்படங்களுக்கு மேல் தமது வலைத்தளத்தின் பெயரையும் முத்திரையையும் தற்புகழிற்காக பதிவேற்றும் நசல் பழக்கத்தை விட்டெறியவும், தயவு கூர்ந்து!

 

14) தமிழருக்கு சிறைகளில் செய்யப்பட்ட சித்திரவதை

சிங்களவரால் சிறையில் போடப்பட்டு சித்திரவதைக்கு உள்ளான தமிழர்கள் (போராளிகள், பொதுமக்கள்) பட்ட வேதனைகள் எல்லாவற்றையும் நாம் முழுமையாக ஆவணப்படுத்த வேண்டும்... வெறும் சித்திரவதைகளை மட்டும் செய்ய வேண்டும். குறிப்பாக என்ன மாதிரியான சித்திர வதைகளை இவர்கள் சந்திக்க நேரிட்டது என்பதை முற்றாக ஆவணப்படுத்த வேண்டும்.

இதன் தொடக்க முயற்சியாக தலைநகர் திருமலையிலிருந்த சூடைக்குடா சித்திரவதை முகாமில் நடைபெற்ற சித்திரவதைகளை நான் ஆவணப்படுத்தியுள்ளேன், முதல் தர அனுபவத்தில்:

இதே போன்று எல்லாவற்றையும் பிறர் செய்ய வேண்டும். பின்னவர் இவற்றைக்கொண்டு சித்திரவ்தைகளுக்கென்று தனி வலைத்தளம் உண்டாக்க வேண்டும்.

 

----------------------------------------------------------------------------

 

 

இவ்வளவுதான் நான் எனது மனதில் எண்ணியிருந்தவை. அத்தனையையும் இன்று எழுதிவிட்டேன். 

உங்களுக்கு முழுமையான தகவல்கள் தெரியவில்லையாயின் இது முழுமையான ஆவணமன்று என்பதை முதல் வரியில் எழுதிவிட்டு மேற்கொண்டு செல்வது உகந்ததாகும்.

இவற்றை எல்லாவற்றையும் வடிவாக ஆசறுதியாக ஆராய்ந்து சிறப்பாக ஆவணப்படுத்துங்கள். ஒன்றைக் கூட தவற விடாமல் செய்ய வேண்டும். கவனம் இன்றியமையாததொன்றாகும்.

இதனை மேற்கொண்டு வரலாறாக்கி இதைவிட இன்னும் பல வரலாற்று நூல்கள் கட்டுரைகளை எமது தலைமுறைகள் ஈழப்போர் தொடர்பில் பதிக்கும் என்று முழுமையான நம்பிக்கை எனக்குள்ளது. 

 

"தமிழீழமே தமிழர் தாகம்"

 

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to ஈழப்போர் தொடர்பில் ஆக்கப்பட வேண்டிய ஆவணங்களின் பட்டியல்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இவை தவிர உதிரிகளாக செய்யக் கூடியவற்றையும் இங்கே எழுதிவைக்கிறேன்.

  • கண்டுபிடிக்கப்பட வேண்டிய தனிப் பாடல்கள்:

நாமெல்லாம் மண்ணின் மைந்தர்கள் (ஜெயதிலக பண்டார என்ற சிங்களவரால் 2004ம் ஆண்டு பொங்கு தமிழின் போது வவுனியாவில் வைத்துப் பாடப்பட்டதாகும். சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பாடினார்)

 

 

  • கண்டுபிடிக்கப்பட வேண்டிய இறுவட்டுகள் (albums)

நீண்டகாலமாக காணக்கிடைக்காதவை:

  1. இசையருவி

  2. சிவந்த மண்

  3. தமிழ் சொந்தங்கள்

  4. தாயகத் தலைவன்

  5. புயலாகும் புது ராகங்கள்

  6. விடுதலைத்தீ

  7. வீழமாட்டோம்

 

 சிலம்பம் அமைப்பினரால் வெளியிடப்பட்ட முதலாவது மற்றும் நான்காவது (வெளியிடப்பட்டுள்ளது என்று நம்பப்படுகிறது) இறுவட்டினைக் கண்டுபிடிக்க வேண்டும்.


Edited by நன்னிச் சோழன்

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

ஈழநாதத்தினுள் பல தொடர்கட்டுரைகள் உள்ளது. அவை எமது விடுதலையின்பாற்பட்டன. அவற்றை எடுத்து ஆரேனும் நூலாக்குங்கள்.

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.