Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2924 : வென்றவை தோற்றவை – நிலாந்தன்.

2024 : வென்றவை தோற்றவை – நிலாந்தன்.

இந்த ஆண்டின் தொடக்கத்திலும் முடிவிலும் நடந்த இரண்டு தேர்தல்கள் தமிழ் அரசியலின் சீரழிவை வெளியே கொண்டு வந்தன.இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தலானது தமிழ் அரசியலில் சீரழிவை குறிப்பாகத் தமிழரசுக் கட்சியின் சீரழிவை வெளியே கொண்டு வந்தது.

இந்த ஆண்டின் இறுதியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்த் தேசிய அரசியலின் இயலாமையை வெளியே கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில், தமிழ்த் தேசியத் தரப்பின் பிரதிநிதித்துவம் மேலும் குறைந்திருக்கிறது.

இந்த ஆண்டின் தொடக்கமே தேர்தல்தான். கட்சித் தலைவரை தேர்தல்மூலம் தெரிந்தெடுப்பது கட்சி ஜனநாயகத்தைச் செழிப்பாக்கும். எனினும் தமிழரசுக் கட்சி தன் தலைவரை தேர்தல்கள்மூலம் தெரிந்தெடுக்கும் ஒரு பாரம்பரியத்தைக் கொண்டிருக்கவில்லை.அந்த அடிப்படையில் சுமந்திரன்தான் கட்சியின் தலைவராக வந்திருக்க வேண்டும்.ஏனென்றால் சம்பந்தர் அவரைத்தான் தன்னுடைய வாரிசாக வளர்த்தார்.ஆனால் சுமந்திரன் ஜனநாயக வழிமுறைமூலம் தன் பலத்தைக் காட்ட விரும்பினார்.எனினும் அது அவருடைய பலவீனத்தைத்தான் காட்டியது.அவர் தோற்கடிக்கப்பட்டார். அதன் விளைவாக கட்சி இப்பொழுது நீதிமன்றத்தில் நிற்கின்றது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த அந்த தேர்தல் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சியின் உட்பகையை வெளியே கொண்டு வந்தது. தமிழரசுக் கட்சி எந்தளவுக்குத் தூர்ந்து போய் உள்ளது என்பதனை அது வெளிப்படுத்தியது.

அதேபோல இந்த ஆண்டின் இறுதியில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல், தமிழ்த் தேசிய அரசியல் எந்தளவுக்குத் தோற்றுக் கொண்டிருக்கிறது என்பதைக் காட்டியது.

சுமந்திரன் தோற்கடிக்கப்பட்டதை;டக்ளஸ்,பிள்ளையான்,அங்கஜன் போன்றவர்கள் தோற்கடிக்கப்பட்டதை;தமிழரசு கட்சிக்கு அதிக ஆசனங்கள் கிடைத்ததை,வெற்றியாகக் காட்டமுடியும். ஆனால் ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய அரசியலில் ஆசனங்கள் குறைந்துவிட்டன.அது ஒப்பீட்டளவில் தோல்வி. தமிழ் மக்கள் நாடாளுமன்றத்தில் ஒரு தேசமாக, பலமாக இல்லை.

இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம்.ஆண்டின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரையிலும் தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவை வெளிப்படுத்தும் இரண்டு தேர்தல் நடந்திருக்கின்றன.இந்த இரண்டு தேர்தல்களும் தமிழ் மக்கள் இன அழிப்புக்கு எதிராக நீதியை பெறத் தேவையான பலத்தை பெருக்கிக் கொள்ள முடியாதிருக்கிறார்கள் என்பதனை வெளியே கொண்டுவந்தன.

எனினும் இந்த இரண்டு தேர்தல்களுக்கும் இடையில் ஒரு தேர்தல் வந்தது.அது ஜனாதிபதித் தேர்தல்.அதில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் முன்னிறுத்தப்பட்டார். அவருக்கு கிடைத்த வாக்குகள் ஏறக்குறைய 2,26,000.அது ஒரு அடிப்படை வெற்றி.கட்சிகளைக் கடந்து தமிழ்மக்களை ஒரு தேசமாகத் திரட்ட போகிறோம் என்று கூறி ஒரு மக்கள் அமைப்பு அந்தத் தேர்தலைக் கையாண்டது.ஏழு கட்சிகளை வைத்து கட்சிகளைக் கடந்த ஒரு வாக்குத் திரட்டியை ஏற்படுத்தலாம் என்று அந்த அமைப்புத் திட்டமிட்டது. அதற்கென்று ஒரு பொதுக் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பொதுக் கட்டமைப்புக்குள் கட்சிகளும் மக்கள் அமைப்பின் பிரதிநிதிகளும் அடங்கியிருந்தனர்.

கட்சிகளைக கடந்து மக்களைத் திரட்டலாம் என்ற நம்பிக்கையை தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தின.இங்கு ஒரு உதாரணத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும்.தேர்தல் பரப்புரைக்காக பிரம்மாண்டமான கூட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட பொழுது,குடாநாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து மக்களைக் கொண்டுவரும் பேருந்துகளுக்கு சிறிய தொகைப் பணம் வழங்கப்பட்டது. எரிபொருட் செலவு,சாரதி மற்றும் வழிநடத்தினருக்கான சிற்றுண்டி,தேனீர் செலவுகள். இவ்வாறு வலிகாமம் பகுதியில் இருந்து மக்களைக் கொண்டு வந்த ஒரு பேருந்து உரிமையாளரிடம் செலவுப் பணத்தை கொடுத்த பொழுது, அவர் அதை வாங்க மறுத்து விட்டார்.”15 ஆண்டுகளாக கட்சிகளுக்குத்தான் ஆட்களை ஏற்றி இறக்குகிறேன். இதுதான் முதல் தடவை இப்படி ஒரு கூட்டத்துக்கு ஆட்களைக் கொண்டு வருவது. வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களை இப்படி ஒன்றாக ஒரு கூட்டத்துக்கு அழைத்துக் கொண்டு வருவது என்பது புதியது. 2009க்கு முந்திய நினைவுகளை அது மீட்டியது. எனக்கு நீங்கள் விருப்பம் என்றால் எரிபொருள் செலவு மட்டும் தாருங்கள்” என்று கேட்டார். கட்சி கடந்து தமிழ் மக்களைத் திரட்டும்போது மக்கள் மத்தியில் எவ்வாறு எழுச்சி ஏற்பட்டது என்பதனை காட்டும் ஒரு உதாரணம் அது.

அதுபோலவே ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தோடு மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச்சபை கிராமங்கள் தோறும் சிறிய மற்றும் பெரிய மக்கள் சந்திப்புகளை நடத்தியது.இந்த சந்திப்புகளில் 75 விகிதமானவற்றில் ஒரு விடயம் திரும்பத் திரும்ப மக்களால் கூறப்பட்டது. என்னவென்றால், “கட்சிகளோடு வராதீர்கள், மக்கள் அமைப்பாக வாருங்கள், கட்சிகள் வேண்டாம்” என்பதே அது.

ஆனால் மக்கள் அமைப்பு தேர்தலை நேரடியாகக் கையாள விரும்பவில்லை. அதற்குரிய கட்டமைப்புப் பலமும் இருக்கவில்லை. எனவே கட்சிகளோடு இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கியது.அந்தப் பொதுக் கட்டமைப்பு தமிழ்த் தேசிய வரலாற்றில் ஒரு புதிய அனுபவம்.கட்சிகளும் மக்கள் அமைப்பும் இணைந்து ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையை எழுதிச் செயல்படுவது என்பது.

ஏற்கனவே தமிழ் மக்கள் பேரவையும் அவ்வாறான ஓர் அனுபவந்தான். ஆனால் அங்கே புரிந்துணர்வு உடன்படிக்கை எழுதப்படவில்லை. தமிழ் மக்கள் பேரவை ஓய்ந்தபின் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு உருவாகியது. அது தேர்தலில் ஒரு ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி வெற்றியும் பெற்றது.கிழக்கிலிருந்து வந்த ஒரு வேட்பாளருக்கு வடக்கில் சுமார் ஒன்றரை லட்சம் மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன.

ஒரு பெரிய ஊடகத்தின் முதலாளி மக்கள் அமைப்பிடம் சொன்னார் “கிழக்கில் இருந்து கொண்டு வரும் ஒரு வேட்பாளருக்கு வடக்கில் வாக்களிப்பார்களா?” என்று. “ஒரு பத்தாயிரம் வாக்குகள் கிடைக்குமா” என்று கேட்டார்.ஆனால் அவர் எதிர்பார்த்ததை விட 20 மடங்கு வாக்குகள் கிடைத்தன.

தமிழ்ப் பொது வேட்பாளர் கடந்த 15 ஆண்டு கால தேர்தல் அரசியலில் தமிழ் மக்களுக்கு ஒரு புது அனுபவம். தமிழ்ப் பொது வேட்பாளரை இந்தியாவின் புரஜக்ட் என்று கூறி நிராகரித்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இப்பொழுது சிவில் சமூகங்கள் முன் கை எடுத்ததனால் உருவாகிய திரட்சி என்ற பொருள்பட அதை வியாக்கியானம் செய்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளை தேசியவாத வாக்குகள் என்று கஜேந்திரகுமார் கூறுகிறார்.அது காலத்தால் பிந்திய ஞானம்.கஜேந்திரக்குமாரை அந்த அணிக்குள் இணைப்பதற்கு தமிழ் மக்கள் பொதுச்சபை கடுமையாக உழைத்தது.ஆனால் கஜேந்திரன் ஒரு சந்திப்பின்போது சொன்னார் “இந்த விடயத்தில் நீங்கள் வென்றால் நாங்கள் எங்களிடம் இப்பொழுது இருக்கும் இரண்டு ஆசனங்களையும் இழந்து விடுவோம் என்பது எங்களுக்கு தெரியும்.அதைத் தெரிந்து கொண்டுதான் தாங்கள் பொது வேட்பாளரை எதிர்க்கிறோம்.” என்று.

சிறீதரன் சொன்னார் “மக்களமைப்பு சுயேட்சையாக வேட்பாளர்களை இறக்கப் போவதாக எமது ஆதரவாளர்கள் கதைக்கிறார்கள்” என்று. ஒரு மூத்த அரசியல்வாதி மற்றொரு மூத்த அரசியல்வாதி மற்றொரு கட்சியின் தலைவரிடம் கூறினாராம் “இவங்கள் வெற்றி பெற்றால் நாங்கள் இல்லாமல் போய் விடுவோம்” என்று.

சுமந்திரன் அதனை மூர்க்கமாக எதிர்த்தார். அதை ஒரு கேலிக் கூத்து என்று வர்ணித்தார். மக்கள் அமைப்பைக் கடுமையாக எச்சரித்தார். தமிழ்ப் பொது வேட்பாளருக்கு விழும் வாக்குகள் அனைத்தும் “வீணாய் போகும் வாக்குகள்” என்று எச்சரித்தார்.அதனை அவர் சஜித்தின் கூட்டத்தில் பேசும்போது சொன்னார்.

தமிழ் ஊடகங்களிலும் ஒரு பகுதி தமிழ்ப் பொது வேட்பாளருக்கு எதிராக இருந்தது. ஊடகவியலாளர்களில் சிறு பகுதியினர் எதிராக இருந்தார்கள். ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் முகநூலில் எழுதினார் “கட்டுரை எழுதுவது வேறு தேர்தலில் வேட்பாளர் நிறுத்தி வெல்வது வேறு இரண்டும் ஒன்று அல்ல” என்று. தமிழ் மக்கள் பொதுச்சபையைச் சேர்ந்த கருத்துருவாக்கிகளை சில ஊடகவியலாளர்களும் சில யூடியூப் வெறுப்பர்க்களும் எதிரியைவிடக் கேவலமாக சிறுமைப்படுத்தினார்கள்.

தமிழ்ப் பொது வேட்பாளரைக் கண்டு தமிழ் அரசியல்வாதிகளில் ஒரு பகுதியினர் பயந்தார்கள். பெரும்பாலான சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் பயந்தார்கள். அல்லது உஷார் அடைந்தார்கள். “நாடு முழுவதும் மாற்றத்துக்காக நிற்கும் பொழுது நீங்கள் மட்டும் அதற்கு எதிராக போகப் போகிறீர்களா” என்று அனுர கேட்டார்.தமிழ் பொது வேட்பாளரை உங்களால் நிறுத்த முடியாது. முடியுமானால் நிறுத்திக்காட்டுங்கள் என்று ரணில் விக்கிரமசிங்க விக்னேஸ்வரனிடம் சொன்னார்.”தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது பொதுவான பேரழிவு”என்று சஜித் எச்சரித்தார்.

ஆனால் எல்லாவிதமான எதிர்ப்புகளையும் தாண்டி தமிழ்ப் பொது வேட்பாளர் வடக்கையும் கிழக்கையும் இணைத்தார்.தமிழ் தேர்தல் வரலாற்றில் ஒரு தனி நபருக்கு கிடைத்த ஆகக்கூடிய வாக்குகளை அவர் வென்றார்.

எனினும் பொது வேட்பாளருக்கு கிடைத்த அடிப்படை வெற்றியை கொண்டாட முடியவில்லை. தேர்தல் முடிந்த சில நாட்களில் அடுத்த தேர்தல் அறிவிக்கப்பட்டது.அடுத்த தேர்தலை கையாள்வதற்கு மக்கள் அமைப்பு தயாராக இருக்கவில்லை.

மக்கள் அமைப்புக்குள் இருவேறு கருத்துக்கள் கிளம்பின. அதனால் மக்கள் அமைப்புக்குள் முரண்பாடுகள் ஏற்பட்டன.மக்கள் அமைப்பு தேர்தலைக் கையாளாத ஒரு பின்னணியில்,வெற்றிபெற்ற சின்னத்தைத் தாங்கள் சுவிகரிப்பது என்று பொதுக் கட்டமைப்புக்கள் இருந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்தது. அது பொதுக் கட்டமைப்புக்கான புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு மாறானது.அதன் விளைவாக கட்சிகளுக்கும் மக்கள் அமைப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு சோதனைக்கு உள்ளாகியது. சங்குச் சின்னத்துக்கு ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வாக்குகள் நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கவில்லை.ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைக்கப்படாத கட்சிகள் மீண்டும் சிதறின. அதிகரித்த அளவில் சுயேச்சைகள் தோன்றின.தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குத் தண்டனையாக அமைந்தன.

அரசாங்கத்துக்கும் தமிழரசுக் கட்சிக்கும் ஒரே அளவு ஆசனங்கள்.தமிழ்த் தேசிய ஆசனங்களின் மொத்த தொகை மேலும் வீழ்ச்சியடைந்தது. ஆனால் தமிழரசுக் கட்சி தனிக் கட்சியாக அதிக ஆசனங்களைப் பெற்றது. அந்த வெற்றியைக் கொண்டாட முடியாது. ஏனென்றால் தேசியவாத அரசியல் என்பது ஒரு மக்களை தேசமாகத் திரட்டுவது.ஆகப் பெரிய திரளாகத் திரட்டுவது. அவ்வாறு திரட்டப்படாத காரணத்தால்தான் இம்முறை தமிழ்த் தேசிய ஆசனங்களின் மொத்த தொகை குறைந்தது.தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில் தமிழரசுக் கட்சியும் உட்பட எல்லாக் கட்சிகளும் தோல்வியடைந்து விட்டன.

எனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழரசு கட்சிக்குள் நடந்த தேர்தலும் ஆண்டின் முடிவிலும் நடந்த இரண்டு தேர்தல்களும் தமிழ்த் தேசிய அரசியலின் சீரழிவுகளை வெளியே கொண்டுவந்தன.எனினும் செப்டம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டலாம் என்ற நம்பிக்கைகளைப் பலப்படுத்தியது. இந்த ஆண்டில் தமிழ் மக்களுக்கு கிடைத்த குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ஒரனுபவம் அது. கட்சிகளைக் கடந்து மக்களைத் திரட்டலாம் என்ற நம்பிக்கைகளை அது புதுப்பித்தது. அந்த அனுபவத்தின் தொடர்ச்சியாக உழைத்தால் மட்டும்தான் புதிய ஆண்டில் தமிழ் மக்கள் வெற்றி பெறலாம்.

https://athavannews.com/2024/1414409

  • கருத்துக்கள உறவுகள்

புதிய ஆண்டைத் திட்டமிடுவது - நிலாந்தன்

modi.webp

இந்த ஆண்டில் என்ன கிடைத்ததோ அதிலிருந்துதான் அடுத்த ஆண்டு தொடங்கும். இந்த ஆண்டு என்ன கிடைத்தது? இரண்டு தேர்தல்கள் நடந்தன. இரண்டு தேர்தல்களின் விளைவாகவும் என்பிபி மிகப்பெரிய பலத்தோடு ஆட்சிக்கு வந்திருக்கிறது. இது முதலாவது.

இரண்டாவது,ஜனாதிபதி தேர்தலில் முன்னிறுத்தப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் தமிழ்த் தேர்தல் வரலாற்றில் ஒரு வேட்பாளர் பெற்ற ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்றார். கட்சிகளைக்கடந்து தமிழ்மக்களைத் தேசமாகத் திரட்டலாம் என்ற முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியது.

மூன்றாவது,நாடாளுமன்றத் தேர்தலில்,தமிழ்மக்கள் மத்தியில் இருந்தும் என்பிபிக்கு ஆதரவு கிடைத்திருக்கிறது. அதன்மூலம் தமிழ்மக்கள் தங்களை இலங்கையராகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று என்பிபியின் தமிழ் ஆதரவாளர்கள் கூறத்தொடங்கி விட்டார்கள்.

நாலாவது,நாடாளுமன்றத்தில் தமிழ்மக்கள் ஒரு தேசமாக மேலும் மெலிந்து போயிருக்கிறார்கள்.

ஐந்தாவது,தமிழ்த் தேசியவாதம் பேசும் கட்சிகள் தமிழ்மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதிலும் வெற்றி பெறவில்லை;தங்களைக் கட்சிகளாகத் திரட்டுவதிலும் வெற்றி பெறவில்லை.ஒப்பீட்டளவில் அதிக ஆசனங்களை வென்ற தமிழரசுக் கட்சியானது நீதிமன்றத்தில் நிற்கிறது. எனவே ஒரு கட்சியாக அது தோல்வி யடைந்து விட்டது. ஆனால் தமிழ்மக்கள் வேறு வழியின்றி அதற்கு வாக்களித்திருக்கிறார்கள்

இவைதான் இந்த ஆண்டில் தமிழ்மக்களுக்கு கிடைத்தவற்றுள் முக்கியமானவை.இவற்றின் தேறிய விளைவுகளே வரும் ஆண்டைத் தீர்மானிக்கும்.

தமிழ்மக்கள் ஒரு தேசமாக நாடாளுமன்றத்தில் மெலிந்து போயிருக்கும் ஓர் அரசியல் சூழலில் மூன்றில்இரண்டு பெரும்பான்மையை பெற்றிருக்கும் என்.பி.பி அரசாங்கம் இனப்பிரச்சினையை எப்படி அணுகும்?

பேராசிரியர் ஜெயதேவ உயாங்கொட பின்வருமாறு கூறுகிறார்..” இந்தியாவால் அறிமுகப்படுத்தப்படட  அதிகாரப் பரவலாக்கல் உரையாடலையும் என்பிபி தவிர்த்து ஒதுக்குகின்றது. ஐநாவின் முகவரமைப்புக்களினாலும் உள்ளூர் மற்றும் உலகளாவிய  மனிதஉரிமைக் குழுக்களினாலும் ஊக்குவிக்கப்படும் முரண்பாடுகளுக்கான தீர்வு,நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல் போன்றவற்றுக்கான  லிபரல் போக்குடைய சமாதான உரையாடல்களையும்  என்பிபி தவிர்த்து ஒதுக்குகிறது.” அதாவது இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை பிராந்திய மற்றும் சர்வதேச மயநீக்கம் செய்ய அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று உயாங்கொட கூறுகிறார்.

அதேசமயம் அண்மையில் இந்தியாவுக்குச் சென்ற ஜனாதிபதி அனுர அங்கு பின்வருமாறு பேசியிருக்கிறார்.”இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் ஒரு போதுமில்லாதவாறு வெளிப்படுத்தப்பட்ட மக்கள் ஆணை, எமது நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்பக்கூடிய அரசியல் மாற்றத்திற்கான விதைகளை விதைத்துள்ளது. வடக்கு,தெற்கு,கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய திசைகளில் அமைந்துள்ள அனைத்து மாகாணங்களிலும் உள்ள பல்வேறு சமூகங்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்களும் இந்த மக்கள் ஆணைக்கு பங்களித்தனர்.”அதாவது தமிழ்மக்களின் ஆணை தனக்கு உண்டு என்று ஜனாதிபதி கூறுகிறார். அதன்மூலம் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஆணை தனக்கு கிடைத்திருப்பதாக அவர் கூறவருகிறார்.

அவருடைய இந்திய விஜயத்தின் போது இந்தியா உத்தியோகபூர்வமாக 13ஆவது திருத்தத்தைப்பற்றி எதுவும் கூறவில்லை. பதிலாக யாப்பை முழுமையாக நிறைவேற்றுமாறுதான் கேட்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தல்களை வைக்குமாறும் கேட்கப்பட்டிருக்கிறது. 13இன் மீதான அழுத்தத்தை இந்தியா குறைத்திருப்பது ஒரு கொள்கை மாற்றமாக ஒரு பகுதி ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் கடந்த 15ஆண்டுகளிலும் இந்தியா 13ஐ அழுத்திக் கூறிவந்தாலும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த தேவையான அழுத்தங்களை கொழும்பின் மீது பிரயோகித்திருக்கவில்லை. இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவிடமிருந்து வரக்கூடிய அழுத்தங்கள் தொடர்பான பயம் சிங்களத் தலைவர்களுக்கு எப்பொழுதோ இல்லாமல் போய்விட்டது.

நாட்டில் அதிகரித்துவரும் சீனாவின் பிரசன்னமானது சிங்களத் தலைவர்களின் பேர பலத்தை கூட்டியிருக்கிறது என்பதே உண்மைநிலை. கொழும்பை இறுக்கிப் பிடித்தால் அது சீனாவை நோக்கிச் சாய்ந்துவிடும் என்று ஏனைய தரப்புகள் பயப்படுவதை சிங்களத் தலைவர்கள் தமக்குரிய பேர வாய்ப்பாகக் கருதுகிறார்கள்.

தேர்தல் முடிந்த கையோடு வடக்கு கிழக்குக்கு வந்த முதலாவது தூதுவர் சீனத் தூதுவர்தான்.அவர் வழமையாக தமிழர்கள் மத்தியில் இனப்பிரச்சினை தொடர்பாக உரையாடுவதில்லை. ஆனால் இம்முறை வழமைக்கு மாறாக யாழ் ஊடக அமையத்தில் உரையாற்றும்போது தேர்தல் முடிவுகளை வரவேற்றுக் கதைத்திருக்கிறார். குறிப்பாக தமிழ்மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களித்ததை அவர் பாராட்டியிருக்கிறார். அதன்மூலம் அவர் சொல்லாமல் சொல்லவருவது என்னவென்றால், தமிழ்மக்கள் என்பிபி அரசாங்கத்தை நம்புகிறார்கள், எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இந்தியாவோ, ஐநாவோ, ஐரோப்பிய ஒன்றியமோ,அமெரிக்காவோ தலையிடுவதற்கான தேவைகள் குறைந்துவிட்டன என்பதுதான்.

Scrabble-1-773991-1-1024x384.jpg

இவ்வாறு பேராசிரியர் உயாங்கொடவும் சீனத்துதுவரும் கூறியவற்றைத் தொகுத்துப்பார்த்தால் கிடைக்கும் சித்திரம் மிகத்தெளிவானது. இனப்பிரச்சினையை பிராந்திய மயநீக்கம் அல்லது சர்வதேச மயநீக்கம் செய்ய முற்படும் சக்திகள் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் உற்சாகமடைந்திருக்கின்றன.

ஆனால்,தேசிய இனப்பிரச்சினைகள் உள்நாட்டுப் பிரச்சினைகள் அல்ல. அவை சாராம்சத்தில் பிராந்திய மற்றும் அனைத்துலகப் பிரச்சினைகள்தான். உள்நாட்டுப் பிரச்சினை ஒன்றின் மீது வெளிச் சக்திகள் தலையீடு செய்யும்போதே தேசிய இனப்பிரச்சினைகள் பூதாகரமாகின்றன. எனவே எல்லாத் தேசிய இனப்பிரச்சினைகளுக்கும் அனைத்துலகத் தீர்வுதான் உண்டு. உள்நாட்டுத் தீர்வு கிடையாது. திம்புவில் தொடங்கி ஜெனிவா வரையிலும் அதுதான் இலங்கை இனப்பிரச்சினையின் யதார்த்தம். இந்த யதார்த்தத்தை அதன் பிரயோக வார்த்தைகளில் சொன்னால்,மூன்றாவது தரப்பு ஒன்றின் மத்தியஸ்தம் அல்லது அழுத்தம் இல்லாமல் இனப்பிரச்சினையைத் தீர்க்க முடியாது.

ஆனால் கடந்த 15ஆண்டுகால அனுபவங்களின் அடிப்படையில் சொன்னால்,தமிழ்த் தரப்பு பலவீனமடைந்து செல்லும் ஒரு பின்னணியில், மூன்றாவது தரப்பை இனப்பிரச்சினையில் இருந்து நீக்குவது ஒப்பீட்டளவில் இலகுவாகி வருகிறது.

அதாவது,பேச்சுவார்த்தக்கான தமிழ்த் தரப்பின் பேரபலம் குறைந்து வருகிறது என்பதைத்தான் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் நிருபித்திருக்கின்றன. வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் அதேவிதமான தேர்தல் முடிவுகள் கிடைத்தால் தமிழ்மக்கள் ஒரு தரப்பாக மேலும் பலவீனப்படுவார்கள். அந்த வெற்றி தரும் உற்சாகத்தில் அரசாங்கம் ஒரு புதிய யாப்புக்கான தயாரிப்பு வேலைகளை முடுக்கிவிட முடியும்.

எனவே இன்னும் சில மாதங்களுக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுமாக இருந்தால்,தமிழ்த் தரப்பு இப்பொழுதே திட்டமிட வேண்டும். தேர்தல் அறிவிக்கும் வரை காத்திருந்து தேர்தல் கால ஐக்கியங்களுக்கு போவதைவிடவும் தேர்தலுக்கு முன்னரே தமிழ்மக்கள் தங்களை ஐக்கியப்படுத்த வேண்டும்.இதை அதன் பிரயோக வார்த்தைகளில் சொன்னால்,தேர்தல் தேவைகளுக்காக ஐக்கியத்தை உருவாக்காமல் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஐக்கியத்தை,தேசத்தைத் திரட்டுவதற்கான ஐக்கியத்தைக் குறித்து தமிழ்க்கட்சிகள் சிந்திக்கவேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான சிவில்சமூக யதார்த்தத்தின்படி கட்சிகளை அவ்வாறு ஒன்றிணைக்கும் வேலைகளில் சிவில்சமூகங்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அரிதாகவே தெரிகின்றன. கட்சிகள் தங்களாக ஐக்கியப்பட வேண்டும்.

அந்த அடிப்படையில்தான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தீர்வை நோக்கிய ஐக்கியத்துக்கான முன்னெடுப்புகளைப் பார்க்கவேண்டும். அது ஒரு சுடலை ஞானம் தான். தேசமாக மெலிந்த பின் ஏற்பட்ட ஞானம். எனினும்,தேர்தல் முடிவுகளில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் முன்னணி சிந்திக்குமாக இருந்தால் அதை வரவேற்கலாம்.

ஆனால் தமிழரசுக் கட்சிக்குள் வளர்ந்துவரும் உட்பகையானது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஐக்கியத்திற்கான அழைப்பை சவால்களுக்கு உட்படுத்தும். தமிழ்மக்கள் பேரவையின் முன்மொழிவின் அடிப்படையில் தீர்வு முயற்சிகளை எதிர்கொள்ள வேண்டும் என்று தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்திருக்கிறது. ஆனால் சுமந்திரன் தெரிவிக்கும் கருத்துக்கள் அந்த அழைப்பை வரவேற்பவைகளாக இல்லை.

சுமந்திரன் இப்பொழுதும் கட்சிக்குள் செல்வாக்கு மிக்கவர் போலவே காணப்படுகிறார். சிறீதரன் கட்சியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாதவராகவும் காணப்படுகிறார். எனவே தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் தலைமைத்துவ முரண்பாடானது, புதிய யாப்புருவாக்க முயற்சிகளிலும்,உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் உண்டு. முன்னணியின் ஐக்கிய முயற்சிகளின் அடுத்த கட்டமானது, தமிழரசுக் கட்சியின் தலைமையை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதிலும் தங்கியுள்ளது.

அது மட்டுமல்ல, ஜனநாயகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் ஒரு கூட்டாக என்ன முடிவை எடுக்கப்போகிறது? ஜனாதிபதித் தேர்தலில் ஒரு பொது வேட்பாளரை முன்னுறுத்திய தமிழ்த்தேசியப் பொது கட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் தமிழ்மக்கள் பேரவையின் முன்மொழிவை வரவேற்று எழுதப்பட்ட வாசகங்களை ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ள சில கட்சித் தலைவர்கள் நீக்குமாறு கேட்டார்கள்.அதற்கு அவர்கள் கூறிய காரணம் பேரவைக்குள் தாங்கள் இருக்கவில்லை என்பதாகும்.

இப்படிப்பட்டதோர் பின்னணியில், தமிழ்மக்கள் பேரவையின் முன்மொழிவின் அடிப்படையில் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகள் எந்தளவு தூரம் வெற்றி பெறும் என்பதனை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். அவ்வாறு வெற்றி பெற்றாலும் அது தேசத்தை திரட்டுவதற்கான ஒரு முழுமையான ஐக்கியமாக இருக்கமுடியாது. ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த அனுபவம் அத்தகையதே. தமிழ் மக்களை வாக்காளர்களாக,விசுவாசிகளாக,பக்தர்களாக, வெறுப்பர்களாகப் பிரித்து வைத்திருப்பது கட்சிகள்தான்.

அவ்வாறு பிரித்து வைத்திருந்ததன் தோல்விகரமான விளைவுகளினால் கட்சிகள் தங்களுக்கு இடையே ஏதாவது ஓர் ஐக்கியத்துக்கு போக முயற்சிக்கக்கூடும். ஆனால் அதுமட்டும் தேசத்தைத் திரட்ட உதவாது.அது ஒரு தொடக்கமாக இருக்கலாம்.தமிழ்ப்பொது வேட்பாளரை முன்நிறுத்திக் கிடைத்த அனுபவம் அதுதான்.

எனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழரசுக் கட்சிக்குள் நடந்த தேர்தலும் ஆண்டின் முடிவிலும் நடந்த நாடாளுமன்றத் தேர்தலும் தமிழரசியலின் சீரழிவைக் காட்டின. எனினும் செப்டம்பர் மாதம் நடந்த ஜனாதிபதித் தேர்தல் கடந்த 15ஆண்டுகால தமிழ் அரசியலில் ஒரு புதிய அனுபவத்தை கொடுத்திருக்கிறது. தமிழ்மக்கள் எப்பொழுதும் தேசமாகத் திரள்வதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதே அந்தச் செய்தி. அதுதான் இந்த ஆண்டின் நற்செய்தியும்கூட. அந்த நற்செய்தியில் இருந்து திட்டமிட்டால் அடுத்த ஆண்டை ஒரு வெற்றி ஆண்டாக மாற்றலாம்.

 

https://www.nillanthan.com/7038/

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.