Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரசோதரன் said:

👍.....................

நீங்கள் எழுதியிருப்பதை சில தடவைகள் மீண்டும் மீண்டும் கவனமாக வாசித்து புரிந்துகொள்ள முயன்றேன், வசீ. ஒரு தனிமனிதன் தன்னுடைய வளர்ச்சியாக எண்ணி ஒரு பாதையில் முன்னே போவதையே நான் முன்னர் குறிப்பிட்டிருந்தேன். நீங்கள் ஒரு செயற்பாட்டின் வளர்ச்சியை சொல்லியிருக்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன். யோசித்துப் பார்த்தால், ஆச்சரியமாக இருக்கின்றது. இவை இரண்டும் ஒன்று அல்ல என்பது மட்டும் இல்லை, இவை எதிர் எதிரானவை போன்றும் தோன்றுகின்றன.

செவ்விலக்கியங்கள், சாஸ்திரிய கலைகள் என்று சொல்லப்படுபவை உலகெங்கும் சாமானிய மக்களால் புரிந்து கொள்ளப்படக் கூடியவையோ அல்லது ரசிக்கப்படக் கூடியவையோ இல்லை. உதாரணமாக, கர்நாடக சங்கீதத்தை சொல்லலாம். சாமானிய மக்களால் ஒரு சாஸ்திரிய சங்கீதம் ஏன் ரசிக்கப்பட முடியாமல் இருக்கின்றது என்ற கேள்விக்கு, சாமானிய மக்களுக்கு அதில் பரிச்சயம் இல்லை, பயிற்சி இல்லை என்பதே சொல்லப்படும் காரணம். அதை ரசிப்பதற்கான பயிற்சியே ஒரு பெரும் முயற்சி என்கின்றனர். இதே தான் செவ்விலக்கியங்கள் என்று சொல்லப்படுபவைக்கும். ஆனாலும், இவைதான் ஒரு மொழியின், ஒரு கலாச்சாரத்தின், ஒரு மக்கள் கூட்டத்தின் பெருமைகளாக, அதன் தொடர்ச்சியை முன்கொண்டு செல்லுபவைகளாக கருதப்படுகின்றன. இங்கு ஒரு முரண்பாடு இருக்கின்றது போலத் தோன்றுகின்றது, ஆனால் இதில் முரணே இல்லை என்கின்றனர். ஒன்றிலிருந்து இன்னொன்று உருவாகும் என்கின்றனர். சாஸ்திரிய சங்கீதத்தில் இருந்து மெல்லிசை/திரையிசை உருவாவது போல, செவ்விலக்கியம் ஒன்றிலிருந்து கல்கியின் 'பொன்னியின் செல்வன்' உருவானது போல.

முதலில் அம்புலி மாமா, பின்னர் பட்டுக்கோட்டை பிரபாகர், பின்னர் சுஜாதா, பின்னர் பாலகுமாரன், அதன் பின்னர் புதுமைப்பித்தன், அசோகமித்திரன், உலக இலக்கியங்கள் என்று ஒரு பாதையில் போனது மட்டும் இல்லை, ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு போகும் போது, நாங்கள் கடந்து போவதை நிராகரித்துக் கொண்டும் தானே போகின்றோம். ஆனால், இதில் இருக்கும் ஒவ்வொருவரையும் அவர்கள் தான் இலக்கியவாதிகள் என்று சொல்லி அங்கேயே நிற்பவர்களும் ஏராளமாக இருக்கின்றார்கள். ஆகவே இலக்கியம் என்பதை, அதன் அழகியலை ஒரு சட்டத்துக்குள் வரையறை செய்து கொள்ள முடியாதோ என்று தான் தோன்றுகின்றது.

இடதுசாரி அல்லது தீவிர கொள்கைப் பிடிப்பாளர்களிடம் இருந்து வரும் ஆக்கங்கள் தட்டையானவை என்ற பொதுவான அபிப்பிராயம் இருக்கின்றது. மனிதர்களின் நுண்ணிய உணர்வுகளுக்கும், அகப் போராட்டங்களுக்கும் அங்கே இடமே இல்லை. அந்தக் கலைஞனின், எழுத்தாளனின் கொள்கைப் பிரகாரம் ஒரு நியாயம் அவர்களின் படைப்புகளில் இருக்கும், ஆனால் பெரும்பாலான மனித வாழ்க்கைகள் நுண்ணிய உணர்வுகளால் தானே ஆக்கப்பட்டவை. எமக்குள் தோன்றும் தரிசனங்களை எவ்வித மறைப்புகளும் இன்றி வெளிப்படுத்துவதற்கு சில சிந்தனைகள், கொள்கைகள் தடையாகவும் ஆகலாம். 

தனிப்பட்ட ரீதியில், நான் ஒரு வாசகனே. என்னால் வாசிக்க கூடிய நாள் வரையில் நான் ஒரு வாசகனாவே தான் இருக்கப் போகின்றேன் என்று தான் நம்புகின்றேன். சில வேளைகளில் 'சரி, இன்று ஏதாவது எழுதுவோம்...........' என்று மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுகின்றேன். சட்டியில் இருப்பது தான் வருவது போல, எழுத்தில் உள்ளிருப்பது அப்படியே வருகின்றது.  ஒரு சாதாரண மனிதனின் வாக்குமூலங்களாகவே இவைகளை நான் நினைக்கின்றேன்.

உங்களின் கேள்விகளும், கருத்துகளும், விளக்கங்களும் பல திசைகளிலும் சிந்திக்கத் தூண்டுபவை, வசீ.................❤️.    

சங்க காலத்தில் தமிழ் மக்கள் உயர்நிலியில் இருந்த்மையால் அந்த கால பிரதிபலிப்பாக வந்த இலக்கியங்கள் அக புற இலக்கியங்களாக வந்தன ஆனால் சங்கமருவிய காலத்தில் அன்னிய படை எடுப்பினால் மக்கள் வாழ்க்கை சிதைந்து மக்கள் வாழ்க்கை தடம் உரண்டு போன நிலையில் மக்களை நல்வழிப்படுத்துவதற்காக வந்த இலக்கியங்கள் அற இலக்கியங்களாக இருந்த்தன.

மக்களின் தேவை கருதிய இலக்கியங்கள் இயல்பாக அந்த மக்களின் தேவைகளை பிரதிபலிக்கின்றன, இயல்பாகவே இலக்கியவாதிகளுக்கு என கடமைகள் உள்ளது அதனை அவர்களது இலக்கியங்கள் பிரகிபலிக்கின்றன் அந்த இலக்கியங்கள் உள்ளதை அப்படியே கூறுகிறது அதாவது தான் சார்ந்த சமூகத்தினை பிரதிபலிக்கின்றன்.

யாழ் களம் அதற்கான ஒரு தளமாக இருந்து வருகிறது ஆனால் யாழ்கள எழுத்தாளர்கள் எவரும் ஒரு இலக்கியவாதிகளாக இதுவரை பரிணமிக்கவில்லை.

எமது சமூகம் இலங்கையிலும் உலகெங்கிலும் பல்வேறுபட்ட சமூக நெருக்கடிகளை சந்திக்கின்றன இது இக்காலத்திற்குரிய இலக்கியத்திற்கான தளமாக உள்ளது.

ஒரு எழுத்தாளருக்கு பிற சமூகத்தில் உள்ளவர்களை உருவக்கேலி செய்வதில் என்ன பிழை இருக்கிறது எனும் சந்தேகம் ஏற்படுகிறது,இன்னொரு எழுத்தாளருக்கு போரினாலும் பொருளாதாரத்தினாலும் நசிந்து போன இலஙகியில் உள்ள குழந்தகளின் கலை முயற்சிகளை வெளிநாட்டில் உள்ள தனது குழந்தைகளின் அரங்கேற்றத்திற்கான செலவு குறைந்த தெரிவாக தட்டிப்பறிப்பது தவறாக தெரியாத நிலையில் உள்ளார்.

எழுத்தாளர்கள் சமூக சிந்தனை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இடது சாரி சிந்தனையாளரளாக இருக்க வேஎண்டும் எனும் அவசியம் இல்லை, மக்களின் துயரம் புரியாதவர்களால் அவர்களுக்காக இலக்கியங்கள் உருவாக்க முடியாது, என்பதற்கான உதாரணமாக நான் முதலில் கூற மறுத்த உதாரணத்தினை குறிப்பிட்டுள்ளேன், அது அவர்களின் தவறல்ல அவர்களை பொறுத்தவரை அதனை அவர்கள் தவறாக உணராத நிலை காணப்படுகிற்து, அப்படியான நிலையில் எவ்வாறு ஒரு மக்கள் இலக்கியத்தினை படைக்க முடியும்?

  • Replies 76
  • Views 4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    பாடல் இரண்டு - செந்தூர பூவே செந்தூர பூவே --------------------------------------------------------------------------- ஊரில் பல பாடசாலைகள் இருந்தன. வீட்டுக்கு அருகிலேயே ஒரு பாடசாலை இருந்தது.

  • ஏதோ இந்த வரி நன்றாக இருப்பது போல உணர்கின்றேன், உங்கல் எழுத்துக்கள் நாளுக்கு நாள் முன்னேற்றம் காட்டுகிறது, கலை கலைக்காகவே என படித்தவர்களுக்குள் கும்மியடிக்கும் இலக்கிய வட்டத்திற்குள் புகாமல் எங்களை ப

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    எனக்கும் இப்படியான எண்ணம் வந்தது. ரசோதரன் யாழுக்கு கிடைத் பொக்கிசம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

எழுத்தாளர்கள் சமூக சிந்தனை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இடது சாரி சிந்தனையாளரளாக இருக்க வேஎண்டும் எனும் அவசியம் இல்லை, மக்களின் துயரம் புரியாதவர்களால் அவர்களுக்காக இலக்கியங்கள் உருவாக்க முடியாது, என்பதற்கான உதாரணமாக நான் முதலில் கூற மறுத்த உதாரணத்தினை குறிப்பிட்டுள்ளேன், அது அவர்களின் தவறல்ல அவர்களை பொறுத்தவரை அதனை அவர்கள் தவறாக உணராத நிலை காணப்படுகிற்து, அப்படியான நிலையில் எவ்வாறு ஒரு மக்கள் இலக்கியத்தினை படைக்க முடியும்?

இதையொட்டிய சில கருத்துகளும், நிகழ்வுகளும் என்னிடம் உண்டு, வசீ................. பின்னர் வேறு ஒரு தருணத்தில் எழுதலாம் என்றிருக்கின்றேன். இங்கு களத்தில் சும்மா விளையாட்டாக போகும் போக்கில் எதையும் எழுதிவிட முடியாதுள்ளது. முயற்சி எடுத்து, உள்வாங்கி, சிந்தித்து, நிதானமாக எழுதும் பலர் உள்ளனர்.............👍.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, vasee said:

யாழ் களம் அதற்கான ஒரு தளமாக இருந்து வருகிறது ஆனால் யாழ்கள எழுத்தாளர்கள் எவரும் ஒரு இலக்கியவாதிகளாக இதுவரை பரிணமிக்கவில்லை.

ஆரம்ப காலத்தில் யாழில் எழுதியவர்கள் சிலர் பின்னர் ஐரோப்பிய பத்திரிகைகளில் எழுதிவந்தனர்.

இப்போதும் யாரும் எழுதுகிறார்களோ தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

படைப்பாளியையும் நுகர்வோனையும் நூலிழையால் கோர்க்கும் படைப்பு எதுவும் இலக்கியமே என்பது என் தாழ்வான கருத்து. இதில் அழகியல், கருத்தியல் ஒத்துப் போகும் போது ஒரு  ஒத்திசைவு வரலாம். ஆனால் படைப்பாளிகள் எல்லாம் இலட்சிய வாயுக்கள் போல இருப்பார்கள் என்று எதிர்பார்க்க ஏலாது.  எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு சார்பு இருக்கும். ஜனரஞ்சகமாக எழுதப் போனால் அந்த இலக்கியம் நீர்த்துப் போனதாகத் தான் இருக்க முடியும்.  சம்பந்தமில்லாமல் ஏதோ எழுதி இருந்தால் மன்னியுங்கள் - எனது மனைவி சொல்லுறவநெடுக, நான் கதைக்கிற ஒண்டும் விளங்கல்லை எண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, villavan said:

🤣...................

இந்தச் சிரிப்பு உங்கள் வீட்டில் உங்களைப் பற்றி சொல்லுவதை நினைத்து, வில்லவன், ஏனென்றால் என் வீட்டிலும் இதுதான் நிலை. எழுதுவது, கதைப்பது எல்லாவற்றிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் இருக்கின்றது என்பார்.........🤣...............'லூசாடா நீ...............' என்று செல்லமாகக் குட்டுகள் பல வாங்கியிருக்கின்றேன்.

உங்களின் கருத்தை தாரளமாக முன்வையுங்கள், வில்லவன். நாங்கள் எல்லோருமே நட்புகள் தான், சமனாகவே எங்களை நினைத்துக் கொள்ளுங்கள், தாழ்மையாக சொல்ல வேண்டும் என்றில்லை...............👍.

எது இலக்கியம், எது இல்லை என்பது முடிவில்லாமால் போய்க் கொண்டிருக்கும் ஒரு விவாதம். புதுமைப்பித்தனையே குப்பை என்று ஒதுக்கித் தள்ளியவர்கள் அவரின் காலத்தில் வாழ்ந்த எழுத்தாளர்களும், விமர்சகர்களும். இன்று அவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டனர். ஆனால் நவீன தமிழின் பிதாமகன்களாக பாரதியும், புதுமைப்பித்தனுமே இன்று நிற்கின்றனர். இன்று இலக்கியமாக தெரிவது நாளை காணாமலும் போகக்கூடும் போல, அதே போலவே இன்று குப்பை என்று தோன்றுவது பின்னர் நிலைத்து இருக்கவும் கூடும் போல.................

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ரசோதரன் said:

இந்தச் சிரிப்பு உங்கள் வீட்டில் உங்களைப் பற்றி சொல்லுவதை நினைத்து, வில்லவன், ஏனென்றால் என் வீட்டிலும் இதுதான் நிலை. எழுதுவது, கதைப்பது எல்லாவற்றிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் இருக்கின்றது என்பார்.........🤣...............'லூசாடா நீ...............' என்று செல்லமாகக் குட்டுகள் பல வாங்கியிருக்கின்றேன்.

நீங்கள் இருவர் மாத்திரமல்ல.

பலருக்கும் வீட்டில் நிலமை இதுதான்.

யாழை பூட் மாட்டார்களா என்று ஏங்கித் தவிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ரசோதரன் said:

எழுதுவது, கதைப்பது எல்லாவற்றிலும் ஒரு பைத்தியக்காரத்தனம்

😁 same blood 😁

வான் கோ சாகும் வரை அவனால் அங்கீகாரம் அடைய முடியவில்லை. அதே போலத் தான் அனேக படைப்பாளிகளும்.. தமது காலத்தைக் கடந்து அவர்கள் படைப்புகள் இருந்த படியால் அவை மனிதக் கூர்ப்புக்காகக் காத்திருந்தன போலும். செவ்விலக்கியங்கள் எந்தக் காலத்துக்கும் பொருந்தும் கணிதச் சமன்பாடுகள் போல காலம் மாறினாலும் கோலம் மாறாமல் இருக்கின்றன.

Edited by villavan
spelling mistake

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
பாடல் மூன்று - புத்தம் புது காலை பொன்னிற வேளை
-----------------------------------------------------------------------------------
வீடியோ என்று சொல்லப்படும் சின்னத்திரையில் படங்களை ஓட விடும் காலம் அது. ஒரே இரவில் இரண்டு அல்லது மூன்று படங்களை அடுத்தடுத்து போடுவார்கள். அன்றைய நிலைக்கு பெரிய தொலைக்காட்சி என்பது 20 அங்குலங்களை விட சிறிது பெரிதாகவே இருந்ததாகவே ஞாபகம். ஒரு விசிஆர் கொண்டு வருவார்கள். அதை டெக் என்று சொல்வார்கள். அத்துடன் சில வீடியோ கேசட்டுகளும் வரும். இதைக் கொண்டு வருபவர்களும், இணைப்புகளைக் கொடுப்பவர்களும் விஞ்ஞானத்தின் உச்சியில் இருப்பவர்கள் போன்ற ஒரு பிரமை அன்று மனதில் இருந்தது. அதிலும் ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் வரும்  குறுக்கு கோடுகளை இல்லாமல் செய்பவர் இன்றைய நாசாவின் தலைமை விஞ்ஞானி போன்று அன்று தெரிந்தார்.
 
ஊரில் ஒரு சின்னப் பாடசாலை அல்லது சுற்றிலும் அடைக்கப்பட்ட வெறும் காணிக்குள் இந்த வீடியோ படக்காட்சி நடக்கும். பெரியவர்களுக்கு ஒரு கட்டணம், சின்னவர்களுக்கு ஒரு சின்னக் கட்டணம் என்று அனுமதியின் விலை இருக்கும். பின்னர் தமிழ்நாட்டில் இருந்து கேள்விப்பட்ட 'தரை டிக்கெட்' தான் இது. தமிழ்நாட்டில் கிராமங்களில் உள்ள கொட்டைகைகள் எனப்படும் தியேட்டர்களில் மண்ணைக் சின்னதாக குவித்துப் போட்டு அதன் மேல் அமர்ந்து திரையில் ஓடும் படங்களை ஒரு காலத்தில் பார்த்திருக்கின்றார்கள். இங்கும் எங்கு இடம் கிடைக்கின்றதோ அங்கு அமர வேண்டியதுதான்.
 
பல வீடுகளில் படிக்கும் பிள்ளைகளை இந்த மாதிரியான வீடியோ படங்கள் ஓடும் இடங்களுக்கு போக அனுமதிக்கமாட்டார்கள். என் வீட்டில் அனுமதி இலவசம் தான், ஆனால் காசு கொடுக்கமாட்டார்கள். என்ன படம் என்றாலும் பார்த்தே தீர வேண்டும் என்ற அவா இருந்த நாட்கள் அவை. ஒரு சினிமாப் பைத்தியம் போல. அந்த வயதில் என்னவென்றே விளங்கியிருக்காத 'அக்ரஹாரத்தில் ஒரு கழுதை' என்ற படத்தை கூட முதலில் இருந்து முடிவு மட்டும் பார்த்திருக்கின்றேன். 
 
மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் தான் என்ற நம்பிக்கையை ஆரம்பத்தில் கொடுத்த இடங்களில் ஒன்று இந்த வீடியோ காட்சிகள் நடைபெற்ற இடங்கள். அங்கே வாசலில் போய் அங்கேயே நிற்கவேண்டும். காசு கொடுத்துப் படம் பார்க்க வருபவர்களை எல்லாம் உள்ளே விடுவார்கள். பின்னர் அன்றைய முதலாவது படம் ஆரம்பிக்கும். படம் சிறிது ஓடிய பின், அங்கு இன்னமும் காத்துக்கொண்டு நிற்கும் என் போன்றோரை, இலவசமாக, உள்ளே விடுவார்கள். முதல் படத்தில் தான் ஒரு ஆரம்பப் பகுதியை பார்க்க முடியாது. ஆனால் மற்றைய படங்களை முழுவதும் பார்த்துவிடலாம். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்குப் போய் வசதியான ஒரு இடத்தை கூட பிடித்தும் விடலாம். ஒரு படம் முடியும் முன்னமே நித்திரையாகிப் போகின்றவர்களும் பலர் உண்டு. 'இது என்ன கண்றாவி...............' என்று எழும்பிப் போகின்றவர்களும் உண்டு. கடைசி வணக்கம் காணாமல் கண் மூடாத கூட்டங்களாக சிலர் உடன் இருப்பார்கள்.
 
ஒரு நாள் நாங்கள் வேதப் பள்ளிக்கூடம் என்று சொல்லும் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் வீடியோ காட்சி போட்டார்கள். வழமையான அதே நடவடிக்கைகள் தான். முதல் படத்தின் இடையில் உள்ளே விட்டார்கள். 'அலைகள் ஓய்வதில்லை' என்று கார்த்திக்கும் ராதாவும் ஊரை விட்டு அந்தப் படத்தின் முடிவில் ஓடினார்கள். 'ஓடிப் போன பின் தானே இருக்கின்றது வாழ்க்கை..........' என்று பெரியவர்கள் சொல்லிச் சிரித்தனர். வாழ்க்கையில் கஷ்டங்கள் எல்லாம் சின்னவர்களுக்கே, பெரியவர்கள் அவர்களின் இஷ்டப்படி வாழலாம், இவர்களுக்கு என்ன கஷ்டம் வந்து விடும், இவர்கள் ஏன் இப்படிச் சொல்கின்றார்கள் என்று அப்போது பொதுவான ஒரு எண்ணம் மனதில் இருந்தது.
 
அன்று இலங்கை வானொலியில் காலை 6:30 மணிக்கு செய்திகள் வாசிக்கப்படும். அதற்கு முன்னர் சில பாடல்களை ஒலிபரப்புவார்கள். இரண்டோ மூன்றோ பாடல்கள். இவை பெரும்பாலும் காலை நேரப் பொழுது பற்றிய பாடல்கள் அல்லது பக்திப் பாடல்களாக இருக்கும். 'அலைகள் ஓய்வதில்லை' என்னும் படத்திலிருந்து 'புத்தம் புது காலை பொன்னிற வேளை.......' என்று அந்தக் காலை நேரத்தில் கிறங்க வைக்கும் ஒரு பாடலை இடையிடையே ஒலிபரப்புவார்கள்.
 
ஆனால், நான் இந்தப் பாடலை அந்தப் படத்தில் பார்க்கவில்லை. நான் உள்ளே போகும் முன்னர் இந்தப் பாடல் முடிந்திருக்க வேண்டும் என்று தான் பல வருடங்கள் நினைத்து இருந்தேன். ஆனால் இளையராஜா இந்தப் பாடலை அந்தப் படத்திற்காக பதிவு செய்திருந்தார் என்றாலும், இந்தப் பாடல் அந்தப் படத்தில் இடம்பெறவே இல்லை என்ற தகவல் மிகவும் பிந்தியே எனக்கு தெரியவந்தது. காசு கொடுக்காமல் இலவசமாக ஒன்றை நுகர்ந்ததால் வந்த விளைவு இது என்றும் சொல்லலாம்.
 
கதை இத்துடன் முடியவில்லை. பின்னர் ஒரு புதுப்படம் ஒன்றில் ஒரு நடிகை, ராதா அல்ல வேறொரு நடிகை, ஒரு வீட்டுக்குள் இருந்து இந்தப் பாடலை பாடும் காட்சி இருந்தது. அதில் இரண்டு பிரச்சனைகள் இருக்கின்றன எனக்கு. ஒன்று, இந்தப் பாடல் எப்படி இந்தப் படத்தில் வந்தது என்று. இரண்டாவது, இந்தப் பாடலுக்கான என் மனதில் இருந்த காட்சியை இந்தப் புது இயக்குனர் சுக்குநூறாக உடைத்துப் போட்டாரே என்ற ஏக்கம்.
 
ஒரு பெண்  'புத்தம் புது காலை, பொன்னிற வேளை..........' என்று வீட்டுக்குள் இருந்து நடனமாடுவதை ஏற்றுக் கொள்வது இன்றுவரை சிரமமாகவே இருக்கின்றது. ஆகக் குறைந்தது, வீட்டுக்கு வெளியே நின்றாவது அந்த நடிகை இந்தப் பாடலுக்கு நடனமாடியிருக்கலாம் என்று தோன்றுகின்றது.
  • கருத்துக்கள உறவுகள்

பிந்தி வந்த படம் ஒன்றிலும் உந்தப் பாட்டைப் போட்டிருந்தார்கள். அதே அசெளகரியம் தான், பொருந்தவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

ஆரம்ப காலத்தில் யாழில் எழுதியவர்கள் சிலர் பின்னர் ஐரோப்பிய பத்திரிகைகளில் எழுதிவந்தனர்.

இப்போதும் யாரும் எழுதுகிறார்களோ தெரியாது.

புலிகளினுடன போர் காலகட்டத்தில் சிங்களவர்கள் இங்குள்ள பத்திரிகைகளில் புலிகளுக்கெதிரான பிரச்சார கருத்துக்களை எழுதி வந்தனர், அது வெறும் பிரச்சார கட்டுரைகள் ஆனால் அவை மிக தாக்கம் செலுத்தும் வகையில் எழுதியிருப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, vasee said:

புலிகளினுடன போர் காலகட்டத்தில் சிங்களவர்கள் இங்குள்ள பத்திரிகைகளில் புலிகளுக்கெதிரான பிரச்சார கருத்துக்களை எழுதி வந்தனர், அது வெறும் பிரச்சார கட்டுரைகள் ஆனால் அவை மிக தாக்கம் செலுத்தும் வகையில் எழுதியிருப்பார்கள்.

எம்மவர்கள் எழுதும் புலம் பெயர்ந்த இலக்கியங்களை புலம்பல் அல்லது கோஷம் என்று மிக இலேசாக ஒதுக்கித் தள்ளும் ஒரு போக்கு தமிழ்நாட்டு இலக்கியவாதிகளிடையே இருப்பதை அவதானித்து இருக்கின்றேன். இதை அவர்கள் இதே வார்த்தைகளை பயன்படுத்தியே எழுதி, சொல்லியிருப்பார்கள்.

தாய்மண்ணையும், சொந்தங்களையும் பிரிந்த ஒரு புலம்பல் அல்லாவிட்டால் வெறும் இலட்சிய கோஷங்கள் என்று வகைப்படுத்து விட்டு, இவை இலக்கியங்கள் இல்லை என்று விமர்சித்து இருக்கின்றார்கள். முக்கியமாக நாங்கள் எழுதும் கவிதைகளை, கவிஞர்களை பூச்சி மருந்து அடித்து அழிக்க வேண்டும் என்று ஒருவர் இலேசாகச் சொல்ல, அது பெரிய விவாதம் ஆனது. எங்களின் கதைகள், நாவல்களும் இந்த மதிப்பீட்டில் இருந்து தப்பவில்லை.

நாங்களும், எங்களின் பங்கிற்கு, புலம் பெயர்ந்த இடங்களில் இருந்து எழுதுபவைகளில் மிகப் பெரும்பானமை இந்த வகையே. அதிலும் கவிதைகள், இந்த இரு வகைகளையும் தவிர வேறு வகையானதை தேடி எடுப்பதே சிரமம்தான். 

சமீபத்தில், தமிழ் இலக்கிய உலகில் பிரபலமான இரண்டு எழுத்தாளர்களுக்கு இடையே பிரச்சனையாகிவிட்டது. இருவரும் பின்நவீனத்துவவாதிகள், ஒருவர் ஈழத்தவர், மற்றவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இருவருக்கும் வாசகர்கள் உள்ளனர். இருவரும் விருதுகளும் பெற்றவர்கள்.

தமிழ்நாட்டு இலக்கியவாதி ஈழத்து இலக்கியவாதியை ஒரு ஜூனியர் விகடன் நிருபர் என்றே பார்க்கலாம் என்றார். நடந்த சம்பவங்களை அப்படியே எழுதும் ஒரு சாதாரண நிருபர் இவர், இவர் எழுதுவது இலக்கியமே கிடையாது என்கின்றார்.

ஈழத்து இலக்கியவாதி தமிழ்நாட்டு இலக்கியவாதியை வெறும் பாலியல் எழுத்தாளார், போர்னோ ரைட்டர், என்று சொல்கின்றார். இவர் எழுதுவது பாலியல் வறட்சி உள்ளவர் ஒருவர் எழுதும் சாதாரண பாலியல் கதைகள், இவை இலக்கியமே கிடையாது என்கின்றார்.

இருவரின் ஆக்கங்களையும் நான் வாசித்திருக்கின்றேன்.   

செக்கோவின் கதை ஒன்றில் (குதிரைக்காரன் என நினைக்கிறேன்), ஒரு குதிரைக்காரர் தனது மகனின் இழப்பு பற்றி தனது வாடிக்கையாளர்களிடம் கூற முற்படும்போது அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சினை இருக்கும் அதுதான் உலக நியதி என்பதனை கதையினூடே கடத்தியிருப்பார் ஆனால் கதையின் முடிவினை அவர் தனது மகனின் இழப்பிற்கான இயலாமையினை வெளிப்படுத்துவதாக முடித்திருப்பார்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் உள்ள இலக்கியங்கள் அக்காலத்தினை பிரதிபலிக்கும் அக்காலத்தில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையினை பிரதிபலிக்கும், சங்க காலத்தில் இருந்த காதல் அக்காலத்து இலக்கியத்தில் பிரதிபலிக்கும், இக்காலத்து இலக்கியத்தில் இக்கால காதல் இருக்கும், இலக்கியங்கள் ஒவ்வொரு காலத்தின் வரலாற்று சாட்சியாகும், இலக்கிய படைப்பாளிகள் மக்களின் வாழ்க்கையினையே பிரதிபலிக்கின்றார்கள்.

மார்டின் விக்கிரமசிங்க எனும் பெரும்பான்மை இன எழுத்தாளரின் அடிமைகள் எனும் கதை ஒரு அடுமட்ட சாதாரண மாட்டுக்காரரின் வாழ்க்கை அதில் ஏற்பட்ட விபத்து அது அவரது வாழ்க்கையில் ஏற்படுத்துகிற தாக்கம் அவரை சூழ உள்ள நிகழ்வு மனிதர்கள், மாடு என தொடர்கிறது அது கண்ணுக்கு தெரியாத இழையாக சமூகத்தில் அவரது நிலை, அவருக்கு கீழே இருக்கும் மாட்டின் நிலை மந்தர்கள் ஒருவருக்கொருவர் ஒரு சமூக கட்டமைக்குள் கட்டவைக்கப்பட்டுள்ளனர் என்பதனை அதன் தலையங்கத்தினை பார்க்காவிட்டால் புரியாது, அந்த கதையின் கருப்பொருள் அடிமைகள் ஆனால் அது கதையினை வாசிக்கும் போது புரியாது ஏன் கதைக்கு அடிமைகள் என பெயரிட்டார் என சிந்திக்க தூண்ட வைப்பதே கதாசீயர் நோக்கம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, vasee said:

மார்டின் விக்கிரமசிங்க எனும் பெரும்பான்மை இன எழுத்தாளரின் அடிமைகள் 

இந்தக் கதையை சிறுவனாக இருக்கும் போது ஒரு தடவை வாசித்திருக்கின்றேன். எங்கே என்று சரியாக ஞாபகம் இல்லை. அந்த நாட்களில் ஊரில் இருக்கும் ஒரு வாசிகசாலையில் ஒரு நீளமான சஞ்சிகை ஒன்று இடைக்கிடையே போடுவார்கள். அது ஒரு சிற்றிதழ் என்று நினைக்கின்றேன். அதில் தான் இந்தக் கதை இருந்திருக்கவேண்டும். இந்தக் கதையை பின்னர் தேடி இருக்கின்றேன், ஆனால் அகப்படவில்லை. ஒரு மழைநாளில் ஒரு நாய் சுருண்டு படுத்திருப்பது போல ஒரு சித்திரம் இந்த கதையைப் பற்றி மனதில் இன்றும் இருக்கின்றது. ஒவ்வொருவரும் இன்னொருவரின் அடிமைகள் என்று அன்று தோன்றியது போல...........  

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ரசோதரன் said:

சிறிய வயது பாட புத்தகத்தில் என்பதாக கருதுகிறேன் (தவறாக இருக்கலாம்), மேலே கருத்து எழுதும் போது அவசரமாக எழுதவேண்டியதாக போய் விட்டது, காரணம் குழந்தைகளுக்கு பாடசாலை விடுமுறை வெளியே போகவேண்டும் 5 நிமிடம் அவகாசம் கேட்டு எழுதும் போது பக்கத்திலிருந்து கேள்வி கேட்டு கொண்டிருந்தமையால் சரியாக எழுத முடியவில்லை, இப்போது வீட்டிற்கு வந்துவிட்டாலும் வேலையாக உள்ளதால் முன்னர் எழுதியதனை மீண்டும் சரிபார்த்து பின்பு பதில் எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 28/1/2025 at 09:13, vasee said:

யாழ் களம் அதற்கான ஒரு தளமாக இருந்து வருகிறது ஆனால் யாழ்கள எழுத்தாளர்கள் எவரும் ஒரு இலக்கியவாதிகளாக இதுவரை பரிணமிக்கவில்லை.

சாத்திரி ஒரு நாவலாசிரியர்.

சுமே அன்ரியும் எழுதுவா.

இன்னும் ஓரிருவர் உளர் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

இந்தக் கதையை சிறுவனாக இருக்கும் போது ஒரு தடவை வாசித்திருக்கின்றேன். எங்கே என்று சரியாக ஞாபகம் இல்லை. அந்த நாட்களில் ஊரில் இருக்கும் ஒரு வாசிகசாலையில் ஒரு நீளமான சஞ்சிகை ஒன்று இடைக்கிடையே போடுவார்கள். அது ஒரு சிற்றிதழ் என்று நினைக்கின்றேன். அதில் தான் இந்தக் கதை இருந்திருக்கவேண்டும். இந்தக் கதையை பின்னர் தேடி இருக்கின்றேன், ஆனால் அகப்படவில்லை. ஒரு மழைநாளில் ஒரு நாய் சுருண்டு படுத்திருப்பது போல ஒரு சித்திரம் இந்த கதையைப் பற்றி மனதில் இன்றும் இருக்கின்றது. ஒவ்வொருவரும் இன்னொருவரின் அடிமைகள் என்று அன்று தோன்றியது போல...........  

இந்த கதை என்னையும் மிகவும் பாதித்த கதை குறிப்பாக் அந்த மாட்டின் மீது அன்பு செலுத்துபவராக மாட்டுக்காரர் குறிப்பிடப்படுவார், அந்த மாடும் அவரது உயிரினை காப்பாற்றியிருக்கும், ஆனாலும் மாட்டுக்காரர் ஊரவர்க்கு ஒரு அடிமை போல, அதே போல அந்த மாடு அவருக்கு அடிமை எனும் கருத்தினை அந்த சின்ன வயதில் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாமல் இருந்துள்ளது.

வாசிப்பவர்கள் ஒவ்வொருவரும் ஆபிரகாம் லிங்கன் போல உணரும் ஒரு தருணத்தினை கதாசிரியர் கடத்தியிருப்பார், அதற்கு நானும் விதிவிலக்கில்ல நீங்களும் விதிவிலக்கில்லை என்பதனை பதின்ம வயதிற்கு முன்னர் படித்த ஒரு கதை இத்தனை ஆண்டுகாலமும் மனதில் மறக்காமல் அதன் தாக்கம் உள்ளதனை குறிப்பிடலாம்.

1 hour ago, goshan_che said:

சாத்திரி ஒரு நாவலாசிரியர்.

சுமே அன்ரியும் எழுதுவா.

இன்னும் ஓரிருவர் உளர் என நினைக்கிறேன்.

அவர்களது ஆக்கங்களையும் வாசித்திருக்கின்றேன்.

ரசோதரன், குறிப்பிட மறந்து விட்டேன் நீங்கள் கூறியது போல ஒவ்வொருவரும் இன்னொருவரின் அடிமை என்பதே அந்த கதையின் கரு அதனை மேலோட்டமாக கதையினை வாசித்தால் புரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/1/2025 at 14:01, ரசோதரன் said:

அன்று இலங்கை வானொலியில் காலை 6:30 மணிக்கு செய்திகள் வாசிக்கப்படும். அதற்கு முன்னர் சில பாடல்களை ஒலிபரப்புவார்கள். இரண்டோ மூன்றோ பாடல்கள். இவை பெரும்பாலும் காலை நேரப் பொழுது பற்றிய பாடல்கள் அல்லது பக்திப் பாடல்களாக இருக்கும். 'அலைகள் ஓய்வதில்லை' என்னும் படத்திலிருந்து 'புத்தம் புது காலை பொன்னிற வேளை.......' என்று அந்தக் காலை நேரத்தில் கிறங்க வைக்கும் ஒரு பாடலை இடையிடையே ஒலிபரப்புவார்கள்.

பாடசாலை காலத்தில் எனது வகுப்பில் சிறப்பாக படிக்கும் ஒரு மாணவர் இருந்தார், அவர் ஆசிரியர்களிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக செய்கின்ற செயல்கள் கோமாளித்தனமாக எரிச்சல் ஊட்டுவதாகவும் இருக்கும், அவர் கவிதைகள் எழுதிகிறேன் என படம் காட்டுவார், ஒரு முறை என்னிடம் அவர் எழுதிய கவிதை என ஒரு கவிதையினை காட்டினார், அது ஏதோ காதல் கதை போல் இருந்தது பதில் சொல்லாமல் அவரை பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டேன்.

எமது வகுப்பிற்கு தொண்டராசியராக பாடசாலை படிப்பினை முடித்துவிட்டு ஒரு பெண்மணி  பணியேற்றிருந்தார், வகுப்பு தொடங்கியது அவரிடம் அதே கவிதையினை அந்த மாணவர் கொடுத்தார், அதனை வாசித்துவிட்டு அவர் கேட்டார் விழியில் விழுந்து  இதயம் நுழைந்து எனும் அலைகள் ஓய்வதில்லை பாடலை கொப்பியடித்திருக்கிறாயா என😁

அவர் சொன்ன பிறகே உணர்ந்தேன் உண்மையில் அந்த பாடலை சில சொற்களை மாற்றி அந்த கவிதையினை எழுதியிருக்கிறார் என.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, vasee said:

பதில் சொல்லாமல் அவரை பார்த்துவிட்டு நகர்ந்துவிட்டேன்.

பாடசாலை நாட்களை விட இன்று அதிக இக்கட்டான சந்தர்ப்பங்களில் சிக்கி விடுகின்றோம். இன்று எத்தனையோ நண்பர்கள், தெரிந்தவர்கள், அறிந்தவர்கள் புத்தகங்களாகவே பதிப்பித்துக் கொடுக்கின்றார்கள். அனுபவங்களும், ரசனைகளும் வேறுவேறாக இருப்பதாலோ என்னவோ, பலதையும் ஓரிரு பக்கங்களுக்கு மேல் தாண்ட முடிவதில்லை. ஆனால் சில நாட்களின் பின், கொடுத்தவர்கள் எப்படி இருக்கின்றது என்னும் போது, என்ன சொல்வதென்றே தெரிவதில்லை. 

இது எல்லாவற்றையும் ஒரேயடியாக நிராகரிகரிப்பது என்றில்லை. நான் முன்பும் சொல்லியிருந்தது போல,  இருபது வருடங்களின் முன் அளவில் ஒரு ஈழத்துப் பெண் எழுத்தாளரின் சிறுகதைகளை வாசித்து விட்டு, இப்படியும் எழுதலாமா என்று ஆச்சரியப்பட்டிருக்கின்றேன். மிகவும் நன்றாக, சில புதிய கோணங்களை எழுதியிருந்தார்.

சில ஆக்கங்களுக்கு, படைப்புகளுக்கு ஒரு தார்மீக ஆதரவு கொடுக்கப்பட வேண்டும் என்ற ஒரு தரப்பும் இருக்கின்றது. ஒரு வகுப்பு நண்பன் ஒருவன் ஒரு கவிதை எழுதிக் கொடுத்து, அது எப்படியிருக்கின்றது என்று கேட்டால்.......................... அங்கே தான் இந்த தார்மீக உணர்வும் வரவேண்டும் போல, நண்பனின் கவிதை என்னவாக இருந்தாலும்..................🤣.   

  • கருத்துக்கள உறவுகள்
On 28/1/2025 at 19:01, ரசோதரன் said:

வீடியோ என்று சொல்லப்படும் சின்னத்திரையில் படங்களை ஓட விடும் காலம் அது. ஒரே இரவில் இரண்டு அல்லது மூன்று படங்களை அடுத்தடுத்து போடுவார்கள். அன்றைய நிலைக்கு பெரிய தொலைக்காட்சி என்பது 20 அங்குலங்களை விட சிறிது பெரிதாகவே இருந்ததாகவே ஞாபகம். ஒரு விசிஆர் கொண்டு வருவார்கள். அதை டெக் என்று சொல்வார்கள். அத்துடன் சில வீடியோ கேசட்டுகளும் வரும். இதைக் கொண்டு வருபவர்களும், இணைப்புகளைக் கொடுப்பவர்களும் விஞ்ஞானத்தின் உச்சியில் இருப்பவர்கள் போன்ற ஒரு பிரமை அன்று மனதில் இருந்தது. அதிலும் ஓடிக் கொண்டிருக்கும் படங்களில் வரும்  குறுக்கு கோடுகளை இல்லாமல் செய்பவர் இன்றைய நாசாவின் தலைமை விஞ்ஞானி போன்று அன்று தெரிந்தார்.

நாங்களும் இதே மாதிரி ரிவியும் டெக்கும் வாடகைக்கு எடுத்து ஒரு வீட்டு முற்றத்தில் போடுவோம்.

இரண்டு மூன்று நாட்கள் முதலே அதற்கான ஒழுங்கும் செய்து ஊர் முழுவதும் செய்தியை பரப்பிவிடுவோம்.

கட்டணங்கள் எவ்வளவு வாங்கினோம் என்பதை மறந்து விட்டேன்.

குடும்பத்தில் ஒருவருக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு சிறிது தள்ளுபடி.

பழைய நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள்.

விஞ்ஞானிகள் போல மட்டுமல்ல

அந்தப் பகுதியில் மசிந்திக் கொண்டு நிற்பவர்களையும் உள்ளுக்கு போறதென்றால் போ இல்லாவிட்டால் மாறுமாறு என்று கலைத்து விடுவோம்.

தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

அவர் சொன்ன பிறகே உணர்ந்தேன் உண்மையில் அந்த பாடலை சில சொற்களை மாற்றி அந்த கவிதையினை எழுதியிருக்கிறார் என.

கொப்பி அடிப்பதை புகழ் பெற்ற கவிஞர்களே செய்கிறார்கள்.

தொழிலாளி திரைப்படத்தில், கவிஞர் ஆலங்குடி சோமு, “ஆண்டவன் உலகத்தின் முதலாளி அவனுக்கு நான் ஒரு தொழிலாளி..” என்றொரு பாடல் எழுதியிருந்தார். ரஜினி படத்தில், “ ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி..” என வைரமுத்து எழுதியிருப்பார்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரசோதரன் said:

கவிஞர்களை பூச்சி மருந்து அடித்து அழிக்க வேண்டும் என்று ஒருவர்

வி.மா., மேற்குறிப்பிட்டவருடைய கவிதா, காலேட்சபங்களை போட்டு மிதித்திருப்பார்.  வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு 🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, villavan said:

வி.மா., மேற்குறிப்பிட்டவருடைய கவிதா, காலேட்சபங்களை போட்டு மிதித்திருப்பார்.  வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு 🤣.

🤣..............

விக்ரமாதித்தன் அண்ணாச்சி ஒரு புயல் போன்ற ஆளுமை. அவருடைய ஆக்கங்களை வாசிக்கும் போது, சில வேளைகளில், உரு/சாமி வந்துவிடுமோ என்று ஒரு பயமும் வரும்..............

அவர் மீது எல்லோருக்கும் ஒரு பயமும் இருந்தது. அவரின் வீட்டில் இருந்தவர்கள் தான், 'என்ன இந்த மனுஷன் இப்படி விளங்காம போயிட்டுதே.................' என்று பலகாலம் நினைத்திருந்தார்களாம் என்று வாசித்திருக்கின்றேன்...............😜

  • கருத்துக்கள உறவுகள்

விமலாதித்த மாமல்லன் அண்ணை.

இவர் நீங்கள் குறிப்பிட்ட பின்னவீனப் புரட்சியாளரையும் பிரித்து மேய்ந்துள்ளார், பல முறை 😁.

Edited by villavan
updated content.

  • கருத்துக்கள உறவுகள்

சா…இப்படி ஒரு திரி யாழில் ஓடி கனகாலம்….

டிவி டெக் எடுத்து பார்த்த அதே சிறுவன் கோஷானாக பாதி விளங்கியும், பாதி விளங்காமலும் பார்த்துகொண்டிருக்கிறேன்🤣 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, villavan said:

விமலாதித்த மாமல்லன் அண்ணை.

இவர் நீங்கள் குறிப்பிட்ட பின்னவீனப் புரட்சியாளரையும் பிரித்து மேய்ந்துள்ளார், பல முறை 😁.

👍.....

நன்றி வில்லவன்.

விமலாதித்த மாமல்லனை நான் மறந்தே போயிருந்தேன். நீங்கள் இப்பொழுது குறிப்பிட்ட பின், மிக விரைவாக அவருடைய விபரங்களை தேடிப் பார்த்தேன். அவருடைய சில சிறுகதைகளை வாசித்திருக்கின்றேன். ஆனால் விமர்சனக் கட்டுரைகளை வாசித்ததில்லை என்றே நினைக்கின்றேன்.

முன்பு 'வினவு' ஒரே குழுமமாக இருந்த போது, அதில் வாரா வாரம் இந்தப் பக்கம் இருப்பவர்களை கும்மி வைத்திருப்பார்கள். தீவிர இடதுசாரிகளின் எழுத்துநடை மிகப் பிரபலமானது தானே..............🤣. யாழ் களம் எல்லாம் ஒன்றுமேயில்லை அவர்களுடைய 'எழுத்து அடிகள்' முன்னால்..............

தேவநேயப் பாவாணரின் வழிவந்த தனித்தமிழ் குழுமத்தில் ஒரு நண்பன் இருக்கின்றான். ஊரில் என்னுடன் ஒன்றாகப் படித்தவன் தான். அப்பொழுதெல்லாம் அவனுக்கு தமிழில் எந்த ஆர்வமும் சுத்தமாக இருக்கவில்லை. பின்னர் வாழ்க்கையில் ஏதேதோ நடந்து, இப்பொழுது தனித்தமிழ் என்று வாழ்கின்றான். இந்தக் குழுமமும் எழுத்தில் எதிராளிகளைத் தாக்குவது என்று முடிவெடுத்தால், மரண அடி தான் அடிக்கின்றார்கள். நான் இந்தப் பின்நவீனத்துவவாதிகளின் ரசிகன் என்று சொல்லி, எனக்கும் இடைக்கிடை அடிப்பான் என் நண்பன். நம்மளையும் மதித்துதானே மிதிக்கின்றான் என்று நட்பை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்...................🤣.

விமலாதித்த மாமல்லனின் விமர்சனக் கட்டுரைகளை தேடி வாசிக்கின்றேன்.............👍.  

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.