Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

'வைகறை' ரவி சமூக, சூழற் பிரக்ஞை மிக்க ஆளுமையாளர்! - வ.ந.கிரிதரன் -

- வ.ந.கிரிதரன் -
 

spacer.png

           - 'வைகறை' ரவி ( ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை) -

வைகறை பத்திரிகையை வெளியிட்டு வந்தவர் ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை.  வைகறைக் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு, புகலிடத் தமிழ் இலக்கியத்துக்கு  வளம் சேர்த்த பத்திரிகைகளிலொன்று.  அதன் ஆசிரியர்களில் ஒருவராகவுமிருந்தார்.அதன் காரணமாகவே ரவி  பொன்னுத்துரை என்றறியப்பட்டவர். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். நண்பர் ஐங்கரநேரன் பொன்னுத்துரையின் சகோதரர் என்பதைப் பின்னரே அறிந்தேன்.  அவரது மறைவுச் செய்தியினை முகநூல் கிரி செல்வரத்தினம் அறியத்தந்தார். இரமணியும் தன் முகநூற் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். எதிர்பாராத இழப்புகளில் ஒன்று ரவி பொன்னுத்துரையின் இழப்பு.  அவரது இழப்பால் துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தவர், உறவினர்கள் , நண்பர்கள் துயரை நானும் பகிர்ந்துகொள்கின்றேன். 

ரவி பொன்னுத்துரை சிறந்த புகைப்படக் கலைஞர். அவரது முகநூற் பதிவுகளில் அவர் பகிர்ந்துகொள்ளும் இயற்கையின் வனப்பை வெளிப்பை, உயிர்த்துடிப்பை வெளிப்படுத்தும் புகைப்படங்களே அதற்குச் சான்று. கனடாவில் 'நடு'  இதழின்ஐம்பதாவது இதழ் வெளியீட்டு நிகழ்வு நடந்தபோது, நிகழ்வுக் காட்சிகளைப் புகைப்படங்களாக்கிப் பகிர்ந்திருந்தார். எனக்கும் அனுப்பியிருந்தார். சூழலியாளர். சமூகப் பிரக்ஞை மிக்கவர்.

இத்தருணத்தில் வைகறையில் எனது படைப்புகள் வெளியிட்டதையும் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.மீண்டும் என் ஆழ்ந்த இரங்கல்.


என்னைக் கவர்ந்த அவரது முகநூற் பதிவொன்று..

spacer.png

அண்மையில் நான் இரண்டு வாரங்கள் Costa Rica பூர்விக குடிகளுடன் தங்கி வேலை செய்யவேண்டிய ஒரு தேவை இருந்தது. அங்கு  மூத்த தலைவர் ஒருவருடன் பேசும் பொழுது அவர் கூறினார்:

"நீண்ட காலனித்துவ  வரலாறு எங்கள்  சமூகத்தின் ஒழுக்கம், அரசியல் மற்றும் பொருளாதார அடித்தளங்களை நொருக்கி இருந்தது. எம் சமூகத்தின் பெருமைகளை (sense of community pride) நீர்மூலம் செய்து இருந்தது. அடுத்த அடுத்த தலைமுறைகள் சமூகத்தின் மீதான நம்பிக்கையை இழந்தார்கள். தனது பெருமையை இழந்த சமூகம், ஒரு சமூகமாக  திரள்வது சாத்தியம் இல்லாத விடயம். இழந்த பெருமையை எப்படி உருவாக்குவது என்பது பற்றி  நாம் சிந்தித்தோம். அந்த பெருமையை மீட்டு எடுத்தோம். அது எமது சமூகத்துக்குள் செய்யவேண்டிய முக்கிய விடயமாக இருந்தது.  அது இலகுவாக இருக்கவில்லை. நாம் பிரிந்து இருந்தோம். பிரிக்கபட்டு இருந்தோம். 

உதாரணமாக எமது பிரதேசத்தில் ஒரு வைத்தியசாலையை  நீண்ட போராட்டங்களின் மூலம் Costa Rica அரசு, மற்றும் சில அமைப்புகளின்  உதவியுடன் உருவாக்கி  இருந்தோம். ஆனால் எங்கள் சமூகத்தில் இருந்து ஒரு நோயாளிகளும் வரவில்லை. அதை காரணம் காட்டி Costa Rica அரசும் தொடச்சியான வளங்களை, வசதிகளை செய்து தர மறுத்தது.  நாங்கள் எங்கள்  சமூகத்தில் இருந்து சில இளையவர்களை  கியூபா அரசின் உதவியில் மருத்துவம் கற்பதற்காக  அனுப்பினோம்.  அவர்களுக்கு சில நிபந்தனைகள் வைத்தோம். படித்து முடிந்தவுடன்  எமது வைத்திய சாலையில் குறைந்தது 5 வருடம் வேலை செய்யவேண்டும் என்று. அதில் சிலர் எங்கள்  நிபந்தனைகளின்படி  மருத்துவ கல்வியை முடித்துவிட்டு எங்கள் பிரதேச வைத்தியசாலைக்கேய்  வந்தார்கள். சிலர் இங்கு வரவில்லை. வந்தவர்களால் எமது மக்கள் மெது மெதுவாக எமது பிரதேசத்தில் உள்ள வைத்திய சாலையை நோக்கி வர தொடங்கினார்கள். 

இன்று இந்த வைத்தியசாலை மேற்கு  - பாரம்பரிய வைத்திய முறைகளை உள் அடக்கிய தரமான வைத்தியசாலையாக - எமது மக்கள் நம்பிக்கையுடன் சிகிச்சைக்கு அணுக கூடிய வைத்திய சாலையாக வளர்த்துள்ளது. இப்படி தான் மெது மெதுவாக நாங்கள், எங்கள்  பிரதேசத்தை கணிசமான அளவு முன்னகர்த்தி உள்ளோம். பொருளாதார வளங்களை எங்கள் பிரதேசங்களில் உருவாக்கி இருக்கிறோம். இது இன்னும் முழுமையானது இல்லை. ஆனால், மூத்தவர்களாக எங்களுக்கு நம்பிக்கை இருக்கு - எங்கள் அடுத்த தலைமுறைகள் பெருமையுடன் மேலும் முன்னேறும் என்று. எம் சமூகத்தின் பெருமையை நாம் மீட்டு எடுத்து இருக்கிறோம். எமது சமூக அரசியல் விடுதலைக்கு எம் சமூகத்தின் பெருமையை மீட்டு எடுப்பது முன் நிபந்தனையாக இருந்தது".

 

https://www.geotamil.com/index.php/2021-02-14-02-16-26/8935-2025-01-25-17-48-49

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டிசே இளங்கோவின் முகநூலில் இருந்து..

 

இரவி (கனடா) இலங்கைக்குச் சென்றபோது காலமாகிவிட்டார் என்பதை இன்னமும் நம்பமுடியாது இருக்கின்றது. ஒரு காலத்தில் நான், இரவி, போல் அவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கின்றோம். அந்தக்காலங்களில் நாம் அடிக்கடி கோப்பிக்கடைகளில் சந்திப்பதோடு, பல இடங்களுக்கு சேர்ந்து பயணித்தும் கொண்டிருந்தோம். இவர்கள் என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்பதால் எப்போதும் என்னில் தனிப்பட்ட கவனமெடுத்து என்னைப் பத்திரமாகக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.   அந்தக் காலங்களில் என் தனிப்பட்ட வாழ்வின் தளம்பல்கள் பற்றிப் பகிரும் நண்பர்களாக இவர்களே இருந்தார்கள். பின்னர், காலத்தின் நீட்சியில் சில காரணங்களால் எமக்குள் இடைவெளிகள் ஏற்பட்டபோது, அதையும்  வாழ்வின் இயல்பென எடுத்து நகரவும் செய்திருந்தோம். 

இதையெழுதும் இந்தக் கணத்திலும் இரவி நம்மிடையே இல்லையென்பதை மனம் மறுதலிக்கவே செய்கிறது. 

கீழே வருவது இரவியின் பிறந்தநாள் ஒன்றின்போது எழுதியது.
------------------------------------------------------------------
இரவியை அவரது பெயரால் தனிததுச் சொன்னால் நிறையப் பேருக்குத் தெரியாது. செல்வத்தை 'காலம்' செல்வம் என்று அழைப்பது போல, இரவியை 'வைகறை' இரவியெனச் சொன்னால்தான் அவர் யாரென்று பலருக்கு விளங்கும். 'வைகறை' கனடாவிலிருந்து வெளிவந்த முக்கியமான பத்திரிகை. எனக்கு 'வைகறை'யுடனும், இரவியுடனும்  உறவு எப்படி மலர்ந்தென்பதே சற்றுச் சுவாரசியமானது. நமது சினிமாக் காதல்களில் முதலில் சண்டைபிடித்து பிறகு காதல் வருவதுபோல, எனக்கும் இலக்கியம்/அரசியல் சார்ந்து வந்த அநேக நட்புக்கள் முரணிலிருந்து தொடங்கி பிறகுதான் நட்பாக முகிழ்ந்திருக்கின்றன. அப்படித்தான் எனக்கும் 'வைகறை'யோடான உறவும் தொடங்கியது.

எனது கதையொன்றை ('கதைசொல்லியும், Gang Fights'ம்?) 'வைகறை' தாமாகவே தேர்ந்தெடுத்துப் பிரசுரித்திருந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தபோதும், கதையின் தொடர்ச்சி இன்னொரு பக்கத்தில் தொடர்வதைச் சரியாகக் குறிப்பிடாததில் சற்றுக் கோபம் வந்து (பத்திரிகையில் இருந்த தொடர்பிலக்கத்திற்கு) அழைத்தேன். கவனயீனம் காரணமாக பிழையாகிவிட்டது என மன்னிப்பைக் கோரியபடிதான் இரவி முதன்முதலாகப் பேசியது ஞாபகம். பிறகு, வைகறையில் தொடர்ந்து எழுதும்படியும், காரியாலயத்திற்கு வந்து சந்திக்கும்படியும் அவர் அழைப்பு விடுத்ததும் கடந்த காலம்.

கனடாவில் பத்திரிகை நடாத்தி இலாபமீட்டியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் 'வைகறை' நின்றபோது இரவிக்கு நிறையக் கடன்கள் இருந்தது என்பது தெரியும். அதுவல்ல முக்கியம், வைகறை வந்துகொண்டிருந்த காலத்தில் அரசியல் காரணங்களால் வைகறை மிரட்டப்பட்டிருந்ததும், சிலர் தம்மை வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்ததும், காரின் கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டதுமென பல்வேறு அழுத்தங்களினூடாகவே பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. ஒருமுறை இங்கிருக்கும் ஒரு தமிழ் வைத்தியர் மீது வேற்றின நோயாளியினால் பாலியல் துஷ்பிரயோக முறைப்பாடு செய்யப்பட்டபோது, மற்றப் பத்திரிகைகள் எல்லாம் அதைப் பிரசுரிக்கத் தயங்கி பின்வாங்கியபோது, எவ்விதத் தயக்கமுமின்றி அந்தச் சம்பவத்தை 'வைகறை' வெளிச்சம் போட்டுக் காட்டியது. அந்தச் செயதி பிரசுரிக்கப்பட்ட காரணத்தாலேயே பல்வேறு இடங்களில் 'வைகறை' கடைகளிலிருந்து பலவந்தமாக தூக்கியெறியப்பட்டுமிட்டிருக்கிறது. இவ்வாறு ஒருமுறையல்ல, வேறு சில சந்தர்ப்பங்களிலும் பிரதிகள் கடைகளிலிருந்து அகற்றப்பட்டிருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் இரவி தனிப்பட்ட பேச்சிலே எம்மோடு உரையாடியிருக்கின்றாரேயன்றி 'வைகறை'யில் பொதுப்படையாக இந்தச் சம்பவங்கள் எதையும் எழுதியதுமில்லை. 

உண்மையில், இந்த நிதானமே வைகறையை அதை நடத்தியவர்களின் அரசியல் பிடிக்காதபோதும், பல்வேறு மாற்றுக் கருத்துடையவர்களையும் வாசிக்க வைத்திருக்கின்றது. அதை நேரடியாக நானும் நண்பர்களும் பல்வேறிடங்களில் கேட்டிருக்கின்றோம்/ கேள்விப்பட்டுமிருக்கின்றோம். ஒரு பத்திரிகையை நடத்துவது மட்டுமில்லை, அதில் எழுதப்படும் கருத்துக்களுக்கும் பொறுப்பெடுத்துக்கொள்ளும் அறம் சார்ந்த விடயங்களிலும் 'வைகறை' மிகுந்த கவனம் காட்டியிருக்கின்றது. எத்தனையோ நல்ல கட்டுரைகளை பிரசுரிக்க விரும்பியும், எமது போராட்டம் சார்ந்து 'பாஸிசம்' போன்ற (அதன் அர்த்தத்தை எவ்வகையில் பாவிப்பதென்ற கிஞ்சித்தும் அக்கறையில்லாத பலரே நம் அரசியல் கருத்தாளர்கள் என்பது வேறுவிடயம்) சொற்கள் பாவிக்கப்பட்ட கட்டுரைகளைப் பிரசுரிக்காமலே தவிர்த்துமிருக்கின்றார். 

இயன்றளவு நமது கருத்துக்களை, நம்மோடு முரண்படுபவர்களையும் பொறுமையாக வாசிக்க வைக்கவேண்டுமென வைகறை நிறைய பாடுபட்டிருக்கின்றது. 'வைகறை'யின் இந்த  நிதானமான அணுகுமுறையை நானிங்கே வந்த வேறெந்தப் பத்திரிகையிலும் பார்த்ததில்லை. ஆகவேதான் பல்வேறுபட்ட அரசியல்/இலக்கிய கருத்துக்களையுடைய எல்லோராலும் தயக்கமின்றி வைகறையில் எழுத முடிந்திருக்கின்றது. எழுதப்பட்ட ஆசிரியத்துவம் (editorial) எல்லாம் மிகவும் கவனம் எடுத்தே எழுதப்பட்டிருக்கினறன. அவ்வாறிருந்தும் சிலவேளைகளில் ஆசிரியத்துவம் தவறாக விளங்கப்பட்ட சில சந்தர்ப்பங்களில் இன்னும் கவனமாக நாம் அதை எழுதியிருக்கலாமென இரவி சொல்லிக் கவலைப்பட்டதும் எனக்கு நினைவிலுண்டு.

வைகறை சார்ந்து இரண்டு  தனிப்பட்ட என் அனுபவங்களை நான் சொல்லியாக வேண்டும். வைகறையில் கட்டுரைகள், பத்திகள் போல சிறுகதைகளுக்கும், கவிதைகளுக்குமென தனிப்பக்கங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஒவ்வொருமுறையும் யாரேனும் கவிஞரொருவரின் நான்கைந்து கவிதைகளோடு அவர்களைப் பற்றிய அறிமுகம் வந்துகொண்டிருக்கும். அவ்வாறு என் கவிதைகள் வெளிவநத்போது, அதற்குப் பொறுப்பாயிருந்தவர் - என் வலைப்பதிவிலிருந்து- வெட்டி ஒட்டியபோது சில கவிதைகள் மாறி வெட்டி ஒட்டப்பட்டு பிரசுரமாயிருந்தன. பத்திரிகையைக் கடையில் எடுத்தவுடனேயே இவ்வாறு வந்திருப்பதைக் கண்டு - வழமை போல இரவிக்கு தொலைபேசியில் அழைத்து- இப்படி கவனமில்லாது பிரசுரிப்பதென்றால் அதைவிடப் பிரசுரிக்காமலே இருந்தாலே நல்லது, அதுவே கவிதைக்கு தரும் மரியாதையாக இருக்குமென தாறுமாறாய்ப் பேசியதும் நினைவிலிருக்கிறது. அடுத்த வாரம் கவிதைகள் உரிய முறையில் -தவறுக்கு மன்னிப்புக் கேட்டு - பிரசுரமாயிருந்தன. அது போல பாலஸ்தீனம் பற்றிய என் கட்டுரையில் இஸ்ரேலிய மக்கள் அனைவரையும் குற்றஞ்சாட்டும் தொனியிருப்பது அவ்வளவு சரியில்லை, இஸ்ரேலிய அரசு என மாற்றட்டுமா என - ஒரு வார்த்தையாயினும்- என்னிடம் அனுமதி கேட்டு மாற்றியிருந்த பத்திரிகைப் பண்பு அவ்வளவு எளிதில் எல்லோருக்கும் வாய்க்காது. இவ்வாறான காரணங்களே இது எங்கள் 'வைகறை' என உணரச் செய்திருக்கின்றது போலும்.

ஒருகட்டத்தில் 'வைகறை' நின்றபோது, உடனே எதற்காகவது எதிர்வினை எழுதிப் பிரசுரிப்பதற்கு எங்களுக்கென  ஒரு பத்திரிகை இல்லையேயென பல தடவைகள் கவலைப்பட்டதுண்டு. அதேபோல 'வைகறை' நின்றபின், வேறு சில பத்திரிகைகளிலிருந்து எழுத அழைப்பு வந்தபோதும், அவை சார்ந்த கருத்துநிலைக்காக மட்டுமின்றி, வைகறை போல எதையும் எழுதுவதற்கு பூரண சுதந்திரம் தரப்படுமா என்கின்ற தயக்கங்களினாலும் பிற பத்திரிகைகளில் எழுத அவ்வளவாய் விரும்பியதுமில்லை.

இரவியைப் பற்றியெழுத வந்து இறுதியில் 'வைகறை'யைப் பற்றியே நிறைய எழுதவேண்டியதாகிவிட்டது. இரவி ஏதோ ஒரு இயக்கத்தில் சேரப்போய் பிறகு வேறு இயக்கத்தில் சேர்ந்தவர் என்பதும், நாமெல்லாம் நீங்கள் அப்படிச் சொன்னாலும், அந்த இயக்கத்திற்காய் உளவு பார்க்கத்தான் இந்த இயக்கத்தில் சேர்ந்தனீர்கள் என அடிக்கடி நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. இரவி இயக்கத்திலிருந்த நண்பர்களோடு முல்லைத்தீவுக் காட்டிற்குள் புகையில்லாது சமைத்த கதை எங்களிடையே பிரசித்தமானது. 

சிலவற்றை எவ்வளவு முயன்றாலும்  ஏற்கனவே முடிந்தவற்றை மீளக் கொண்டுவருதல் என்பது கடினமானது. எனினும் 'வைகறை' ஏதேனும் ஒருவடிவத்தில் மீள வந்தால் மகிழ்ச்சியாகவே இருக்கும். 'வைகறை'யில் எழுதியவன் என்பதில் எப்போதும் எனக்குப் பெருமையுண்டு. 

*************

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

474843464_122181069164114056_79214750025

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கிருபன் said:

வைகறை' ரவி சமூக, சூழற் பிரக்ஞை மிக்க ஆளுமையாளர்

large.IMG_8063.jpeg.9096d58b3179bb10ddef

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏எதிர்வரும் வார விடுமுறையில் கனடாவில் தான் இவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நடக்க இருக்கிறது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.