Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சேனாதி : மார்ட்டின் ரோட்டுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே தத்தளிக்கும் ஆவி?

IMG-20250131-WA0011-ccc.jpg

1965க்குப் பின்னரான காலகட்டம் என்பது இலங்கை முழுவதிலும் தீவிரமான அரசியல் நிலைப்பாடுகள் கருக்கொண்ட ஒரு காலகட்டம் ஆகும். சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஆயுதப் போராட்டத்திற்கான கருக்கள் உற்பத்தியாகிய ஒரு காலகட்டம். இக்கால கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் மாவை. இப்போதுள்ள தமிழரசு கட்சித் தலைவர்களில் நீண்ட காலம் சிறையிருந்தவர் மாவைதான்.

இப்படிப்பார்த்தால் ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரான மிதவாத அரசியல், ஆயுதப் போராட்ட காலகட்ட மிதவாத அரசியல், ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான மிதவாத அரசியல் ஆகிய மூன்று காலகட்டங்களின் ஊடாகவும் வந்தவர் மாவை.

அதனால்தான் ஆயுதப் போராளிகள் மத்தியில் அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள். தமிழ் மிதவாத தலைமைகளுக்கும் ஆயுதப் போராட்ட அமைப்புகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் அதிகரித்த காலகட்டங்களிலும் மாவை ஆயுதப் போராட்டத்தால் அதிகம் அச்சுறுத்தப்படவில்லை. அதற்கு அவருடைய குண இயல்பே காரணம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சியை கூட்டமைப்புக்குள் கொண்டுவர உழைத்தவர்களில் மாவை முக்கியமானவர்.  நோர்வேயின் அனுசரணையோடான சமாதான முயற்சிகள் நடந்த காலகட்டத்தில், வன்னியிலிருந்த கருநிலை அரசு, ஒப்பீட்டளவில் நம்பிக் கதைக்கின்ற தமிழரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவராக மாவை காணப்பட்டார்.

உயரமானவர்; பெருந்தேகி; பொறுமைசாலி; யாராலும் எளிதாக அணுகப்படக் கூடியவர்; யாரையும் பகைக்க விரும்பாதவர். எல்லாவற்றையும் எல்லாரையும் சமாளித்துக் கொண்டு போகக்கூடியவர். அதுதான்-சமாளிப்பு-அவருடைய பலம். அதுதான் அவருடைய பலவீனமும்.

2009க்குப் பின்னரான தமிழ் அரசியல் என்பது ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான ஒரு மிதவாத அரசியல். அது ஆயுதப் போராட்டத்தில் இருந்து கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் புதிய நிலைமைகளைக் கையாள்வதற்கான ஒரு புதிய பண்புருமாற்றத்தைக் (transformation) கோரி நின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது அவ்வாறு ஆயுதப் போராட்டத்தில் ஏற்பட்ட பண்புரு மாற்றத்தைப் பிரதிபலிப்பாகவும் இருந்தது. ஆனால் 2009 இற்குப் பின்னரான பண்புருமாற்ற அரசியலுக்குத் தலைமை தாங்க சம்பந்தரால் முடியவில்லை. சேனாதியாலும் முடியவில்லை. “சேனாதி” அப்படித்தான் சம்பந்தர் அவரை அழைப்பார்.

ஆயுதப் போராட்டமானது சிங்கள மக்களைப் பகை நிலைக்குத் தள்ளி விட்டது என்று சம்பந்தர் நம்பினார். எனவே சிங்கள மக்களின் பயத்தை, சந்தேகங்களை நீக்குவதன் மூலம்தான் ஒரு புதிய யாப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணலாம் என்றும் அவர் நம்பினார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர் கட்சிக்குள் புதியவர்களைக் கொண்டு வந்தார். தன்னுடைய வழிக்குக் குறுக்கே நின்றவர்களை அகற்றினார். அல்லது அவர்கள் அகன்று போகத் தேவையான நிலைமைகளை ஏற்படுத்தினார்.

ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான மிதவாத அரசியலைக் குறித்து சரியாகவோ அல்லது பிழையாகவோ சம்பந்தரிடம் ஒரு தீர்மானம் இருந்தது. சம்பந்தர் இழுத்த இழுப்புக்கெல்லாம் சேனாதி விட்டுக் கொடுத்தார். அதனால்,சம்பந்தரின் தவறுகளுக்கு அவரும் பங்காளியானார்.

சம்பந்தர் கூட்டமைப்பின் தலைவராக தோல்வி அடைந்த பொழுது சேனாதி தமிழரசு கட்சியின் தலைவராக தோல்வியடைந்தார். சம்பந்தரிடம் நல்லதோ கெட்டதோ தலைமைத்துவ பண்பு இருந்தது. ஆனால் மாவை சேனாதிராஜாவிடம் அது இருக்கவில்லை. சமாளிப்பதால் அவர் பெரும்பாலானவர்களுக்கு விருப்பமானவராக இருந்தார். ஆனால் கட்சியைக் கட்டிக் காக்க முடியவில்லை.

இறுதி நாட்களில் நினைவு தடுமாறிய பொழுதுகளில் அவர் தன்னுடைய மகனுக்கு கூறிய வசனங்களில் ஒன்று “வழக்குக்குப் போக வேண்டும். ஃபைல்களை  எடுத்து வை” என்பதுதான். ஒரு மூத்த மிதவாதி அவருடைய மரணத் தறுவாயில் நீதிமன்றம், வழக்கு என்று தத்தளிக்கும் மனதோடு உலகை விட்டுப் போயிருக்கிறார். மார்ட்டின் ரோட்டுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையில்  அவருடைய ஆவி தத்தளிக்குமா? இரண்டு அணிகளாகப்  பிளவடைந்த ஒரு கட்சியை அவர் விட்டுப் போயிருக்கிறார். இப்பொழுது கூட்டமைப்பும் இல்லை தமிழரசுக் கட்சியும் ஒரு கட்டுக்கோப்பான நம்பிக்கையூட்டும் அமைப்பாக இல்லை.

கட்சியின் தலைவராக மாவை தன்னுடைய தலைமைத்துவத்தை நிரூபித்திருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. இன்னொரு விதமாகச் சொன்னால் அவரால் செய்ய முடியவில்லை. ஏனென்றால் அவரிடம் ஆயுதப் போராட்டம் ஒன்றுக்குப் பின்னரான மிதவாத அரசியலை வழிநடத்தத் தேவையான தரிசனங்களும் இருக்கவில்லை; கொள்ளளவும் இருக்கவில்லை. சம்பந்தரிடமும் இருக்கவில்லை. இப்போது உள்ள பெரும்பாலான தலைவர்களிடமும் அது இல்லை.

facebook_1738388411959_72913294698341393

மாவையின் தோல்வி என்பது தமிழ் மிதவாத அரசியலின் தோல்வியும்தான். ஏனென்றால், ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரான பண்புருமாற்ற அரசியலுக்குத் தலைமை தாங்கத் தேவையான மிதவாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் போதிய அளவுக்கு எழுச்சி பெறவில்லை. ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரான மிதவாத அரசியல் எனப்படுவது ஆயுதப் போராட்டத்திற்கு தலைகீழாக எழுச்சி பெற்றிருக்கிறது. ஆயுதப் போராட்டத்தில் அர்ப்பணிப்பும் தியாகமும்தான் அடிப்படைத் தகுதிகளாக இருந்தன. ஆனால் 2009க்குப் பின்னரான மிதவாத அரசியலானது பெருமளவுக்குப் பிழைப்பாக மாறிவிட்டது. இந்தச் சீரழிவுக்கு மாவையும் பொறுப்பு.

கட்சிக்குள் துணிச்சலான முடிவுகளை அவர் எடுத்திருந்தால் தமிழரசுக் கட்சி இப்படி ஒரு சீரழிவுக்கு வந்திருக்காது. அவருடைய சமாளிக்கும் பண்பு கட்சியைச் சிதைத்தது மட்டுமல்ல, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் அவரைத் தோற்கடித்து விட்டது. சில ஆண்டுகளுக்கு முன் கடைசியாக அவர் எனது வீட்டுக்கு வந்தபோது அவரிடம் சொன்னேன் “அண்ண ஒரு சன்நியாசி மாதிரி முடிவெடுங்கோ. இனி நாடாளுமன்றத்துக்கோ அல்லது மாகாண சபைக்கோ போறதில்ல என்று முடிவெடுங்கோ. அப்படிப்பட்ட ஆசைகள் இல்லையென்றால் நீங்கள் யாருக்கும் பணியவோ, அல்லது யாரோடும் சுதாகரிக்கவோ வேண்டியிராது. ஆசைகளில்லாமல் ஓரு சந்நியாசி போல தமிழரசுக் கட்சியை கட்டியெழுப்புவதுதான் ஒரே பணி என்று உழையுங்கோ. அப்படி உழைத்தால் கட்சியும் உருப்படும் உங்களுடைய பெயர் ஏன்றென்றும் மதிக்கப்படும்” என்று. பதில் சொல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார். அதற்குப்பின் அவர் என்னிடம் வருவதில்லை.

பொது வேட்பாளருக்காக 2019 ஆம் ஆண்டு அவரை நல்லூர் சின்மயா மிஷினில் சந்தித்த பொழுது அவர் பொது வேட்பாளரை ஆதரிக்கத் தயங்கினார். அவரோடு வந்த சிவிகே சிவஞானம் தமிழ் மக்கள் பேரவைக்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்தார். ஆனால் கடந்த நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆண்டு தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுக்குமாறு மாவையைக் கேட்டபோது அவர் சொன்னார்.. ”பொது வேட்பாளர் ஏன் தேவை என்பதற்கு நீங்கள் கூறக்கூடிய காரணங்களை விட 10 மேலதிக காரணங்களை நான் கூறுவேன்” என்று. தேர்தல் பிரச்சாரத்தின் கடைசிக் கட்டத்தில் அவர் பொது வேட்பாளருக்கு ஆதரவாக, வெளிப்படையாகக் காணப்பட்டார். அது கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனினும் சுமந்திரன் அணியை எதிர்த்து அவர் துணிச்சலாக வெளிப்படையாக எடுத்த முடிவு அது.

அவருக்கு நெருக்கமாக இருந்தவரும் பின்னர் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டவருமாகிய மன்னாரைச் சேர்ந்த சிவகரன் கூறுவதுபோல வழிப்போக்கர்கள் கட்சிக்குள் தங்களைப் பலப்படுத்திக்கொண்டு விட்டார்களா? ஆனால் உண்மையான பொருளில் அவர்கள் வழிப்போக்கர்கள் அல்ல. அவர்களைச் சம்பந்தரே  தனது வழியைப் பலப்படுத்துவதற்காகக் கட்சிக்குள் கொண்டு வந்தார். அவர்கள் மிக நீண்ட மிதவாதப் பாரம்பரியத்தைக் கொண்ட மாவையை அவருடைய சொந்தக் கட்சிக்குள்ளேயே தோற்கடித்து விட்டார்கள். அவருடைய வயதில் அரை மடங்கு வயதை கொண்ட கட்சி உறுப்பினர்கள் அவரை அவமதித்தார்கள். ஆனால் அவருடைய உடலுக்கு பெரும்பாலும் எல்லாக் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் மதிப்பளித்தார்கள்.

சம்பந்தரைப் போலவே மாவையும் ஒரு தோல்வியுற்ற தலைவராகவே இறந்தார். ஆனால் சம்பந்தர் அளவுக்கு அவர் தமிழ்த் தேசிய ஆன்மாவுக்குத் தூரமானவர் அல்ல.

 

https://www.nillanthan.com/7138/

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலவை மறைத்த மின்மினிகள்!

Vhg பிப்ரவரி 01, 2025
1000434465.jpg

மட்டுநேசன்

 

சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக  தமிழ்த்தேசியம் என்ற பெயரில் எவரும் பேசவோ நினைக்கவோ கூடாது என எண்ணும் தரப்புகளின் ஆட்டத்துக்கு தமிழ்த்தேசிய ஊற்றுக் கண்களில் ஒன்றாக விளங்கிய மாவை சேனாதிராஜா பலியாகிவிட்டார்.

தமிழ்த்தேசியம், போராட்டக்களம் என்பன தொடர்பாகப் பங்களித்தவர்களை 3 வகையாகத் தலைவர் வகைப்படுத்தியிருக்கிறார். உணர்வால் வந்தவர்கள், உணர்வூட்டப்பட்டு வந்தவர்கள், உணர்வின் விளைவால் வந்தவர்கள். இதில் மாவை அண்ணன் முதலாவது வகையைச் சேர்ந்தவர். 1973 ஆம் ஆண்டு போராட்ட நடவடிக்கைகளுக்கான பங்களிப்புக்காக சிறையில் அடைக்கப்பட்டவர் அவர். மொத்தமாக 7 ஆண்டுகள் இனத்துக்காக, மொழி அடையாளத்துக்காக சிறையில் வாடவேண்டிய நிலை ஏற்பட்டது. தமிழரசுக் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மட்டக்களப்பில் மாவைக்கும் கட்சிச் செயலருக்கும் அளிக்கப்பட்ட வரவேற்பில் இவர் உரையாற்றியபோது சிறையில் தான் தடுத்துவைக்கப்பட்டிருந்தவேளை வேறுசில கைதிகள் தன்னைத் தாக்கமுற்பட்டபோது பிரபல எழுத்தாளர் எஸ்.பொவின் மகன் அநுர தலையிட்டு தன்னைக் காப்பாற்றினாரென நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

அவர் முதல் முறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட காலத்தில் கிழக்கு  மக்களின் ( குறிப்பாக அம்பாறை) நலனைக் கருத்திற்கொண்டு பணியாற்றினார்.

இறுதியுத்தத்தின் பின்னர்  மாவீரர் நாள் தொடர்பான விடயங்களிலும் ஆர்வமாக இருந்தார். அரசைப் பொறுத்தவரை இதனை வடக்குப் பிரச்சினை என்றவாறு திசைதிருப்ப முயன்றது.  இந்தப் போராட்டத்தில் தமிழர், இஸ்லாமியர், சிங்களவர் என 3 மூன்று இனத்தவர்களும் பங்கெடுத்துள்ளனர். இந்த மாவீரர்களின் பெற்றோர் கௌரவிக்கப்பட வேண்டியவர்களே என்ற நிலைப்பாட்டிலிருந்த இவரது கனவுகள் எதிர்காலத்தில் சாத்தியமாகுமென நம்புகிறோம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளரை ஆதரித்தார் இவர். தேசமாகத் திரள்வோம் என்ற கோஷத்தை முன்வைத்த பொதுவேட்பாளரின் பக்கமே இவர் நிற்கமுடியும். ஏனெனில் 1973 இல் இருந்தே தமிழ்த்தேசியத்துக்காகப் பாடுபட்டவரால் அப்படித்தான் சிந்திக்கமுடியும். கிளிநொச்சியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

பொதுவேட்பாளரின் பணிமனைக்குச்சென்று அவரை ஆசீர்வதித்தார். இறுதி யுத்தம் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் தேவையில்லை, இனப்படுகொலை என்பதை சர்வதேசத்தில் நிரூபிக்கப் போதுமான சான்றுகள், ஆதாரங்கள் இல்லை என்று வாதிடும் தரப்பால் இதனைச் சகிக்க முடியவில்லை.

வடக்கு மாகாணசபையில் இனப்படுகொலை என்ற தீர்மானத்தை முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரன் கொண்டுவந்தார். இதனைச் சகிக்கமுடியாத சுமந்திரன் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு  வர ஏற்பாடு செய்தார். இனத்தின்  எதிர்காலத்தைவிட தமது அரசியல் எதிர்காலமே முதன்மையானது எனச் சிந்தித்தோர் சுமந்திரனைத் திருப்திப்படுத்தும் விதமாகச் செயற்பட்டனர்.

நடுநிலையாக நின்று சிந்தித்துச் செயற்படவேண்டிய சபை முதல்வர் சுமந்திரனைக் குளிரப்பண்ணுவதற்காக  நிறைவேற்றப்பட்ட பிரேரணையை ஆளுநரிடம் கையளித்தார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மக்கள் போராட்டங்களையும் சுமந்திரனின் அரசுத் தரப்பு விசுவாதத்தையும் உணர்ந்துகொண்ட சம்பந்தன் ஐயா அந்தத் தீர்மானம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாமெனக் கேட்டுக்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து சபைமுதல்வரை வரவழைத்த ஆளுநர்  அந்தத் தீர்மானத்தைத்  திரும்பக் கையளித்தார். அவ்வேளை இது முதலமைச்சருக்கான நியமனம் என அவர் வேடிக்கையாகக் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகின. நாங்கள் பெரும்பான்மையுடன் நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தை நீங்கள்  எப்படித் திரும்பப்பெறச் சொல்லமுடியும் என சி.வி.கே சிவஞானம், ப.சத்தியலிங்கம் , சயந்தன் போன்ற எவரும் சம்பந்தன்   ஐயாவிடம் கேட்கத் துணியவில்லை. சம்பந்தன்  ஐயா இன்னொரு காரியத்தையும் செய்தார்.  முதலமைச்சரின் நூல் வெளியீட்டு விழா வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு தனது நிலைப்பாட்டை குறிப்பால் உணர்த்தினார். அசடுவழிய சுமந்திரனும் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார். 

கடந்த வருடம் சுமந்திரன், சம்பந்தன் ஐயாவைப் பழிதீர்க்கும் நோக்கில் உங்களுக்கு வயதாகிவிட்டது,  பதவி விலகுங்கள் என்றார். எதுவும் நடக்கவில்லை. சாகும்வரை பதவியிலேயே இருந்தார்.

பொதுவேட்பாளரை ஆதரித்த மாவை ஐயாவைப் பழிதீர்க்க 18 பேர் கையொப்பமிட்டு அவர் பதவி துறக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். ப. சத்தியலிங்கமும் ,சி.வி.கேயும் உங்களை சுமந்திரன் பதவியிலிருந்து விலக்கிவிடுவார் என்று கடும் தொனியில் எச்சரித்ததாகவும் செய்திகள் வெளியாகின. தான் எந்த வழியில் எத்தனை ஆண்டுகள் தமிழ்த்தேசியத்திற்காக உழைத்தபோதும் யுத்தத்தின்பின் கட்சிக்குள் கொண்டுவந்த சுமந்திரன் தன்னைப் பதவி நீக்குவதா என்று நினைத்தால் மனஉளைச்சல் வரும்தானே. எப்படியோ இந்த 18 பேரும் அவரது சாவுக்குக் காரணமாகிவிட்டனர்.

சரி! நல்லாட்சி ஆட்சிக்காலத்தில் ஏக்கிய ராஜ்ஜிய தீர்வுத்திட்டத்தைக் கொண்டுவர சுமந்திரன் தலைகீழாக நின்றார். இது நிறைவேறாவிடில் தான் அரசியலிலிருந்து விலகிவிடுவேன் என்று சபதமெடுத்தார். நல்லாட்சியும் போய், கோத்தா அரசு,ரணில் அரசும் போயிற்று. அரசியலிலிருந்து விலகுவதற்கு தான் எழுதிய கடிதம் பாதியிலேயே உள்ளது என்று சொன்ன சுமந்திரன் அந்தக் கடிதத்தைப் பூர்த்திசெய்ய இதுதான் தருணம் எனக் கையொப்பமிட்டுள்ள (சுமந்திரனைவிட) 17 பேரும் அவருக்குக் கடிதம் எழுதுவார்களா? பூனைக்கு மணி கட்டுவது யார்?

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை   உடைத்துவிடாதீர்கள் என மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டம் உட்பட ஒவ்வொரு தடவையும் மாவை அண்ணா பல்வேறு வழிகளிலும் சொல்லிப் பார்த்தார். ஆனால் என்ன நோக்கத்துக்காக கட்சிக்குள் சுமந்திரன் காலடி எடுத்து வைத்தாரோ அதைச் செய்துவிட்டார். தலைவரின் வேண்டுகோளின்படியே தான்  உறங்குநிலையில் இருந்த தமிழரசுக் கட்சியை இயங்கு நிலைக்குக் கொண்டுவந்தார் மாவை. இன்று அந்தக் கட்சியிலிருந்தே அவரைச் சுமந்திரன்  விலக்கிவிடுவார் என்று சத்தியலிங்கமும் சிவஞானமும் சொல்கிறார்கள் என்றால் யாரை நோவோம்? யாரிடத்தில் எடுத்துரைப்போம்?

அரசியல் காரணத்துக்காகச் சிறையிலடைக்கப்பட்டபின்  விடுதலையானோரில் சிலருக்கு  அன்றைய இளைஞர்கள் இரத்தத் திலகமிட்டு வரவேற்றனர். இவ்வாறு திலகமிடப்பட்டு வரவேற்கப்பட்டவர்களில்  ஒருவர் மாவை அண்ணர். இந்த வரலாற்றை இந்தப்  18 பேருக்கும் எடுத்துரைக்க யார் முன்வருவார்?

“முதலில் கட்டளைகளை ஒழுங்காக நிறைவேற்றும் சிப்பாய்தான் பின்னர் ஆளுமையுள்ள கட்டளைத் தளபதியாக மிளிரமுடியும்” இது தலைவரின் வாக்கு. சம்பந்தன் ஐயா கட்சிக்குள் தொண்டனாக  எப்போதும்  இருந்திராத ஒருவரான சுமந்திரனை படிமுறையாக உள்ளூராட்சி, நாடாளுமன்றத்  தேர்தல்களில் நிறுத்தாமல் நேரடியாகத் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார். அன்றிலிருந்தே சுமந்திரன்  தன்னை ஒரு குட்டி இளவரசனாகக் கற்பனைசெய்து ஆணையிட்டு வந்தார். அவர் வளர்ந்த சூழ்நிலையும் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானது. இன்று கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு அதுவே காரணம். ஒவ்வொருவரினதும் தேசியத்துக்கான பங்களிப்பின் பெறுமதி அது புரியப்பட்ட காலத்தைப் பொறுத்தே கணிப்பிடவேண்டும். மாவை அண்ணாவின் பங்களிப்பை சுமந்திரன்  புரியாததன் விளைவே இன்றைய இழப்பு. சரி! கட்சியின் மரணத்தையாவது தடுக்க இனியாவது சி.வி.கே. முயல்வாரா? இல்லையேல் சுமந்திரனின் ஆணையை நிறைவேற்றும் சிப்பாயாகத்தான் தொடர்ந்தும் இருப்பாரா?

 

https://www.battinatham.com/2025/02/blog-post_46.html

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, கிருபன் said:

சம்பந்தன் ஐயா கட்சிக்குள் தொண்டனாக  எப்போதும்  இருந்திராத ஒருவரான சுமந்திரனை படிமுறையாக உள்ளூராட்சி, நாடாளுமன்றத்  தேர்தல்களில் நிறுத்தாமல் நேரடியாகத் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பினார். அன்றிலிருந்தே சுமந்திரன்  தன்னை ஒரு குட்டி இளவரசனாகக் கற்பனைசெய்து ஆணையிட்டு வந்தார். அவர் வளர்ந்த சூழ்நிலையும் தமிழ்த்தேசியத்துக்கு எதிரானது. இன்று கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு அதுவே காரணம். ஒவ்வொருவரினதும் தேசியத்துக்கான பங்களிப்பின் பெறுமதி அது புரியப்பட்ட காலத்தைப் பொறுத்தே கணிப்பிடவேண்டும். மாவை அண்ணாவின் பங்களிப்பை சுமந்திரன்  புரியாததன் விளைவே இன்றைய இழப்பு. சரி! கட்சியின் மரணத்தையாவது தடுக்க இனியாவது சி.வி.கே. முயல்வாரா? இல்லையேல் சுமந்திரனின் ஆணையை நிறைவேற்றும் சிப்பாயாகத்தான் தொடர்ந்தும் இருப்பாரா?

அருமையான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

இவை எல்லாவற்றிற்க்கும் காரணம் முன்னோக்கு சிந்தனையில்லாத சர்வாதிகாரி சம்பந்தனே! தன்னோடு தோளோடு தோளாக நின்ற மாவையரை அவர் மதித்ததேயில்லை. சொல்லப்போனால், சுமந்திரனுக்கு முன்னாலேயே அவரை கடிந்துள்ளார். சம்பந்தன் மேல் உள்ள மரியாதை, வயதுக்கு கொடுத்த மதிப்பு, கட்சி உடைந்து போகக்கூடாது என்கிற எண்ணம் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டார். அவ்வாறே ஏனைய உறுப்பினர்களும் சம்பந்தனை பகைக்காமல் நடந்து கொண்டனர். அதை அவர்களின் பலவீனமாகவும், தான் ஏதோ சாணக்கியன் போலவும் நடந்துகொண்ட சம்பந்தர். தனக்குப்பின் கட்சியை அநாதரவாக விட்டுச்சென்ற முட்டாள். அதை சுமந்திரன் என்கிற பேராசை பிடித்த ஊழல்வாதி சாதகமாக பயன்படுத்திக்கொண்டார். எந்த இலட்சியம், திறமை இல்லாத இரண்டு நரிகள் சிங்கத்தின் வாலோடு வால் இணைத்துக்கொண்டு திரியுதுகள். இவர்களுக்கு எதிராக அம்பு திரும்பும்போது புலம்புவதை தவிர வேறுவழியிருக்காது. சுமந்திரனை இவர்கள் பாதுகாத்து காப்பாற்றியதும் அவரின் அடுத்த இலக்கு இவர்கள்தான். சுமந்திரனுக்கு பதவியாசை மட்டுமல்ல, அவருக்கு இருப்பது தன்னைவிட அறிவாளியில்லை என்கிற ஒரு மனநோய். 

  • கருத்துக்கள உறவுகள்
On 2/2/2025 at 08:40, கிருபன் said:

அவரிடம் ஆயுதப் போராட்டம் ஒன்றுக்குப் பின்னரான மிதவாத அரசியலை வழிநடத்தத் தேவையான தரிசனங்களும் இருக்கவில்லை; கொள்ளளவும் இருக்கவில்லை. சம்பந்தரிடமும் இருக்கவில்லை. இப்போது உள்ள பெரும்பாலான தலைவர்களிடமும் அது இல்லை.

கட்டுரையாளர் காந்த கண்ணன்🤣 - பெரும்பாலான தலைவர்களிடம் இந்த இயலுமை இல்லை என்கிறார்.

அப்ப ஒரு சிலரிடம் இருக்கிறது?

அவர்கள் யார்?

கட்டுரையாளர் அடையாளம் காட்டுவாரா?

காட்டினால் நாமும் அந்த பெரும் தலைவரை ஆதரித்து தமிழ் தேசியத்தை வளர்க்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.