Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"உனக்காக் காத்திருக்கேன் [14 பெப்ரவரி 2025 ]" 
[காதலர் தினம் கொண்டாடும் உறவுகளுக்காக]

 

வடமாகாணத்தில் உள்ள அரச நிறுவனங்களின் கட்டட நிர்மாண, மீள்நிர்மாண, புனர்நிர்மாண மற்றும் பராமரிப்பு தொடர்பான சேவை வழங்கும் கட்டட திணைக்களத்தில் ஒரு இளம் பொறியியலாளராக ஆராமுதன் அன்று கடற்கரை வீதி, குருநகரில் அமைந்துள்ள பணிமனைக்கு முதல் முதல் 01 பெப்ரவரி 2020, வேலையில் சேர, தனது தற்காலிக வதிப்பிடத்தில் இருந்து புறப்பட்டான். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வரை இலகுவாக சென்றவன், அதன் பின் கொஞ்சம் தடுமாறினான். அப்பொழுது மாணவர்கள் கடக்க தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தவன், தனக்கு பக்கத்தில் ஸ்கூட்டரில், தனது கடிகாரத்தை பார்த்து முணுமுணுத்துக் கொண்டு இருந்த அந்த பெண்ணிடம் ' ஹலோ மேடம், எப்படி கட்டட திணைக்களத்திற்கு போவது?' என்று வழி கேட்டான்.


அவள் அவனை திரும்பி பார்க்காமலே, எனக்கு வேலைக்கு நேரமாகி விட்டது, முதலாம் குறுக்கு தெருவில் திரும்பி, அம்மன் ஆலயத்தில் இடது பக்கம் திரும்பி கடற்கரை வீதியால் போகலாம் என்று கூறியபடியே வேகமாக போய் விட்டாள். என்றாலும் அது அவனுக்கு போதுமானதாக இருந்தது. அவன் அங்கு பணிப்பாளரை சந்தித்து, முறைப்படி வேலையை பாரம் எடுத்த பின் தனக்காக ஒதுக்கிய அலுவலக அறைக்கு, கட்டட திணைக்கள பணிப்பாளருடன் சென்றான். பணிப்பாளர் அவனுக்கு ஜூனியர் கிளார்க் மற்றும் தட்டச்சராக அவனுக்கு பணிபுரியப் போகிற நறுமுகையையும், சிவலிங்கம் என்ற பியூனையும் அறிமுகப் படுத்தினார், என்ன ஆச்சரியம், வேலைக்கு நேரமாகி விட்டது என்று விரைவாக சென்றவள் தான் இவள். ஆனால் அவன் அதைக் காட்டிக் கொள்ளவில்லை. என்றாலும் அவளுக்கு அது புரிந்து விட்டது என்பது, பணியாளர் சென்ற கையேடு. 'சாரி சார்' என்று அவள் உடனடியாக கூறி விட்டு, தன் இருக்கைக்கு போனது அவனுக்கு சொல்லாமல் சொன்னது.  


ஆராமுதன் இது புது வேலை என்பதால், தன் பணியை சரியாக, ஒழுங்காக, விரைவாக ஆரம்பிக்க முன்னைய வேலைகளை, அதன் இன்றைய நிலையை அலசுவதிலும், நேரடியாக கள நிலவரத்தைப் போய் பார்ப்பதிலும் முழுமூச்சாக இருந்தான். அதனால் அவன் தன் அலுவலக அறையில் முதல் இரு கிழமையும் தங்கியது மிக மிக அரிதாக இருந்தது. அதனால் ஆரமுதனும் நறுமுகையும் அதன் பின் பெரிதாக சந்தித்து கொள்ளவில்லை. நறுமுகை, தன் பெயருக்கு ஏற்ப அன்பு என்ற நறுமணம் வீசும் மலர் மொட்டுவாக, ஆனால் வேலையில், தன் கருத்தில் உறுதியாகவும் இருப்பவள். இதனால் சிலர் தலைக்கனம் பிடித்தவள் என்றும் கூட கூறுவார்கள். அதற்கு அவளது அழகும் ஒரு காரணம் தான்!. 

இரு கிழமைக்கப் பின், ஆராமுதன், தனது வேலைகளைப் பற்றி சரியாக புரிந்து ஒழுங்கு படுத்திக் கொண்ட பின், கொஞ்சம் ஆறுதலாக தனது அடுத்த அடுத்த வேலைத் திட்டங்களைப் பற்றி, தனது அலுவலக அறையில் சாவகாசமாக ஆய்வு செய்து கொண்டு இருந்தான். அது 14 பெப்ரவரி 2020, ஒரு கணம் அவன் நறுமுகையை சில குறிப்புகளை கொடுத்து தட்டச்சு செய்ய அழைப்பதற்காக நிமிர்ந்தான். அவளும் சிறிய புன்னகையுடன் ' சார், ஏதாவது வேலையா?' என்று கேட்டாள். அப்ப தான் அவன் அவளை முழுதாகப் பார்த்தான்.  


   
'முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளது ஒன்று உண்டு'  


மலரப் போகின்ற மொட்டில் இருக்கும் மணம் போல இப்பெண்ணினது நகைமொக்குள் ஒரு குறிப்பு உண்டு என்று அவன் மனம் அவனுக்கு சொல்லியது. காதல் வயப்படாத ஆணோ பெண்ணோ கிடையாது. இது மனிதன் தோன்றிய காலம் முதல் உள்ள மனித இனத்துக்கே உள்ள தனி இயல்பு. காதல் உங்களை கடக்கவில்லை என்றாலும், காதலை நீங்கள் கடக்கவில்லை என்றாலும் வாழ்ந்ததுக்கான அர்த்தம் குறைவு என்று என்றோ ஒரு நாள் அவன் படித்த வரிகள் அந்த குறிப்பில் அவன் உணர்ந்தான். காதல் உச்சரிக்க, உணர சுகமானது, பட்டாம் பூச்சிகள் பறக்க, தேனீக்கள் ரீங்காரம் பாட, மலரினும் மென்மையாக தொடங்கி, பல சந்தோசத் தருணங்களை அள்ளித் தரும் என்று சங்க இலக்கியத்தில், இன்றைய சினிமா டூயட் பாடல்களில் பார்த்துள்ளான். ஆனால் பலருக்கு அது வாழ கடினமானது என்பது அப்பொழுது அவனுக்குத் தெரியாது.  

அவள் தன் குறிப்பு புத்தகத்துடன் அவன் அருகில் வந்தாள். அவன்  அப்படியே ஒரு கணம் கண் அசையாமல் அவளை பார்த்துக்கொண்டே இருந்தான். நீண்ட காலம் தனியாக, எந்த காதலிலும் விழாமல் தானும் தன்பாடுமாக இருந்த அவள், இன்று எனோ தடுமாறி விட்டாள். அவளின்  அந்த திடீர் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் அவளுக்கு இருந்தது. அவள் தனக்குள் தானே சிரித்துக் கொண்டாள். அவள் தன்னை சமாளித்துக் கொண்டு, “ஹலோ சார், நான் ரெடி” என்றாள். அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த அவன் ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.  
“ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து மண்ணிற்கு கொண்டு வந்தான்! ஏன் அவள் கூட இன்னும் அவனில் இருந்து தன் கண்ணை எடுக்கவில்லை. கடமை என்ற ஒரு வார்த்தையில் அவள் கட்டுண்டு குறிப்பு புத்தகத்துடன் நின்றாலும், தன் கண்களை அவன் மீதிருந்து அவளால் எடுக்கவே முடியவில்லை. அதெப்படி ஒருவனைப் பார்த்தவுடன் காந்தம் போல் மனம் அவனிடம் சென்று ஒட்டிக் கொள்ளும்? அவளுக்கு அது புரியவும் இல்லை. தன் உடலின் ஒவ்வொரு அணுவிலும் பூக்கள் பூத்திருப்பது போல, அதிகாலை குளிரில் ஆற்றில் முங்கி எழும்போது வருமே ஒரு சில்லிட்ட உணர்வு அது போல, அனைவரும் உறங்கிய பின் நாம் மட்டும் விழித்திருந்து ரசிக்கும் நிலவு தரும் சுகம் போல, அவளுக்குள் ஒரு உணர்வு ஊசலாடிக்கொண்டு இருந்தது. அது தான் உண்மையில் காதலர்களாக மாறிய முதல் சந்திப்பு! அதுவும் இன்று 14 பெப்ரவரி, காதலர் தினம்!

அவன் தன்னை அறியாமலே 'மகிழ்வான காதலர் தினம்' என்று அவளுக்கு வாழ்த்தினான். அவளும் இதுவரை கொஞ்சம் தன்பாட்டில், மற்றவர்கள் 'தலைக்கனம் பிடித்தவள்' என்று கூறும் அளவு இருந்தவள், அவன் சொல்லி முடிக்க முன்பே, அவளும் 'ஹாப்பி வேலன்டைன் டே சார்' என்றாள். 

   
அதன் பின், வேலைத்தளத்தில் எசமான் [பாஸ்] மற்றும் அலுவலக ஊழியராகவே தொடர்ந்து கடமைக்கு இடைஞ்சல் இல்லாமல் இருந்தாலும், கடமை நேரத்துக்குப் பின், அவர்கள் இருவரும் குருநகர் கடற்கரையில் இருந்த ஒரு பழைய ஆலமரத்தின் கீழ் சந்திப்பது வழமையாகி விட்டது. விரைவில் அவர்கள் இருவரும் ஆழமாக காதலித்தனர். அவர்களின் பிணைப்பு ஒவ்வொரு நாளும் வலுவடைந்தது, ஆனால் வாழ்க்கையில் திருப்பங்கள் சொல்லிக் கொண்டு என்றும் வருவதில்லை. ஆராமுதனுக்கு வெளிநாட்டில் உயர் படிப்புக்கான, அவனாலேயே நம்பமுடியாத, ஒரு வாய்ப்பு தானாக கிடைத்தது. அந்த நேரம் தான் நறுமுகையை விரைவிலேயே பிரியப் போகிறேன் என்ற கவலை அவனை வாட்டியது. ஆனால் இது வாழ்வின், அறிவின் முன்னேறத்துக்குத் தானே, சென்று வாருங்கள், நான் என்றும் உங்களுக்காக காத்திருப்பேன் என்று உறுதி வழங்கி, அவனுக்குத் தைரியம் கொடுத்தாள். பின்  "நான் என்றும் உனக்காக் காத்திருக்கேன்" அவள் முணுமுணுத்தபடி அவனின் தோளில் உரிமையுடன் மௌனமாக சாய்ந்தாள். 

அவன் அவளின் முகத்தை கையில் ஏந்தி, அவளையே அசையாமல் பார்த்தான். அந்த  ஒரு பார்வை என்ன செய்துவிடும்? அம்மாவின் பார்வை அணைத்துக் கொள்ளச் சொல்லும். அப்பாவின் பார்வை ஆசி தந்து செல்லும். ஆசானின் பார்வை அடங்கி அமரச் சொல்லும். ஆனால் இவன் பார்வை அவளுக்குள் பல மாற்றங்கள் நிகழ்த்தியது. அவனின் அந்த ஒற்றைப் பார்வை என்னவெல்லாமோ நினைவுகளைத் தட்டி எழுப்பி, உணர்வுகளை அவளுக்கு ஆர்ப்பரிக்கச் செய்தது. முழு நிலவைத் தீண்டி விடத் துடிக்கும் கடலலையின் கரங்கள் போல, அவள் மேல் பட்ட காற்று அவனைத் தீண்டி விட கொஞ்சம் கொஞ்சமாய் நீண்டு கொண்டிருந்தது. 

"ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள்
நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே;
இனையள் என்று அவட் புனை அளவு அறியேன்;
சில மெல்லியவே கிளவி;
அனை மெல்லியல் யான் முயங்குங்காலே."

அழகாக ஒடுங்கிய அடர்த்தியான கூந்தலை உடையவள், பிறை போல் வளைந்த வாசனை நெற்றியை உடைய சின்னப் பெண், சுவையான குளிர்ந்த நீரைப் போன்றவள் என் நறுமுகை , அவளைப் பிரிந்தால் வருத்தம் தருகிறாள், அவள் இப்படி பட்டவள் தான் என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை , அவளைப் பற்றி சொல்ல வார்தையில்லை. கொஞ்சம் தான் பேசுகிறாள், ஆனால் திரும்ப திரும்ப அவள் பேச்சை கேட்க வேண்டும் என்று தோணுகிறது, அணைக்கும் போது மென்மையான இலவம் பஞ்சால் செய்யப்பட்ட தலையணை போல் மென்மையாக இருக்கிறாள். அவன் மனம் நறுமுகையை வர்ணனை என்ற மலர்களால் பூசை செய்துகொண்டு இருந்தது. 

'திரும்பி வருவேன்' என்று அவன் உறுதியளித்து அவள் கண்ணீரை துடைத்து விடை பெற்றான். மாதங்கள் வருடங்களாக மாறியது, நறுமுகை தனது வேலையை அலுவலகத்தில் இன்னும் ஒரு பொறியியலாளரின் கீழ் விடா முயற்சியுடன் தொடர்ந்தாலும், அவளுடைய இதயம் அவனையே நினைத்து ஏங்கியது. அவள் அடிக்கடி அவர்கள் இருவரும் வழமையாக சந்திக்கும் பழைய ஆலமரத்தின் அருகே உட்கார்ந்து, அவர்கள் பகிர்ந்து கொண்ட தருணங்களை நினைவு கூர்ந்தாள். ஆராமுதன் தொடக்கத்தில் அடிக்கடி தொலை பேசியில் தொடர்பு கொண்டாலும், பின் அவனின் ஆராச்சி, மேற்படிப்பு கடுமையாக கடுமையாக தொடர்பு குறையத் தொடங்கியது. 

அவனுக்கு அந்த பல்கலைக்கழகத்திலேயே ஆராய்ச்சி அறிஞர் மற்றும் விரிவுரையாளர் பதவி கிடைத்தது. அதனால் அவன் அங்கேயே நிரந்தர குடியுரிமையும் பெற்றான். அவனின் ஆராச்சிக்கு துணையாக மேற்படிப்பு படிக்கும் அந்த நாட்டு இளம் பெண்ணும் அவனுடன் சேர்ந்து பணியாற்றினாள். இருவரும் ஆராச்சி நிமித்தம் நெருக்கமான நண்பர்களாகவும் மாறினார். ஒரு முறை நறுமுகை, ஆராமுதனுக்கு தொலைபேசி எடுத்த பொழுது, அந்த வெளிநாட்டு பெண்ணே மறுமொழி கொடுத்தாள். பின் ஆரமுதன் தொடர்பு கொள்வான் என்று கூறி உடனடியாக துண்டித்து விட்டாள். இதனால் உணர்ச்சிகளின் சூறாவளி அவள் மீது வீசியது. அவனின் வெற்றிகளுக்காக அவள் பரவசமடைந்தாதாலும், அவளுடைய இதயத்தின் வலிக்கு அது உதவ முடியவில்லை. அவனுக்கு  ஏதாவது சொல்ல வேண்டும், அவனிடம் கேட்க வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது. திருப்பவும் அழைப்புவிட எனோ அவள் தயங்கினாள். ஆனால் அவனிடம் இருந்து ஒரு நாளாகியும் அழைப்பு வரவில்லை . எனவே அன்று இரவு, அவள் ஒரு இதயப்பூர்வமான கடிதத்தை அவனுக்கு எழுதினாள்:

"என் அன்பான ஆராமுதனுக்கும் மரியாதைக்குரிய என் சார்க்கும்,
எங்கள் அழகிய யாழ் நகரத்தில் சூரியன் உயர்ந்த பனை மரங்களுக் கூடாக மறையும் போது, உங்கள் சாதனைகளை மற்றும் நல்ல ஆய்வு, விரிவுரை பணியையும் நினைத்து என் இதயம் பெருமிதம் கொள்கிறது. என்றாலும் உறக்கம் என்னை கவ்வ பலவேளை மறுக்கிறது.  நீங்கள் இல்லாதது எனக்கு பொறுமையையும் சகிப்புத் தன்மையையும் கற்றுக் கொடுத்தது என்றாலும், அது என் மனதை ஆறுதல் படுத்தவில்லை. குறைந்து போகும் தொடர்பும் உங்கள் பிஸியான வாழ்க்கையும் எமக்கிடையில் இடை வெளியைக் கூட்டினாலும், நாம் இருவரும் ஒன்றாக ஆலமரத்தடியில் பகிர்ந்து கொண்ட நினைவுகளையும், நாம் நெய்த கனவுகளையும், நாங்கள் அளித்த வாக்குறுதிகளையும் நான் இன்னமும் மிகவும் மதிக்கிறேன்.

வாழ்க்கை நம்மை தனித்தனி பாதையில் அழைத்துச் சென்றாலும் என் இதயம் உறுதியாக உள்ளது. உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். ஆனால் இதை நினைவில் வையுங்கள், நீங்க எவ்வளவு தூரத்திற்கு போனாலும் எவ்வளவு காலம் எடுத்தாலும், எங்கள் காதல் மலர்ந்த எங்கள் ஆலமரத்தின் கீழ், நான் உனக்காக காத்திருப்பேன்.

இன்று 14 பெப்ரவரி 2025, காதலர் தினம். இன்றாவது என் எண்ணம் மலரும் என்று எண்ணுகிறேன் 


'ஹாப்பி வேலன்டைன் டே'


என்றும் மாறாத அன்புடன்,
நறுமுகை"

அவள் உறையை மூடியபோது, அவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. அவள் ஆலமரத்திற்குச் சென்று, கடிதத்தை அதன் தண்டுகளில் பொருத்தி, சலசலக்கும் இலைகளை நோக்கி, "நான் உனக்காக் காத்திருக்கேன்" என்று கிசுகிசுத்தாள். ஆனால் அவள் கடிதம் போட்டுவிட்டு ஸ்கூட்டரில் ஏறமுன்பு, அவளுக்கு தொலை பேசியில் ஒரு குறும் செய்தி ஒன்று வந்தது. 

"அன்புள்ள என் நறுமுகைக்கு, இந்த காதலர் தினத்தில் , நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன், நான் உன்னைக், அன்று போல் இன்றும்  காதலிக்கிறேன். ஏனென்றால் நீ எனக்கு வேண்டும் என்பதால் அல்ல, உண்மையில் நீ எனக்கு வேண்டும் என்பதால், நான் உன்னைக் காதலிக்கிறேன், அதை நீ உணர்வாய் என்று எண்ணுகிறேன்!" என்று அமெரிக்க சமூக உளவியலாளர் எரிக் ஃப்ரோம் (Erich Fromm) இன் புகழ் பெற்ற வசனம் அதில் இருந்தது [Immature love says: "I love you because I need you." Mature love says: "I need you because I love you.”] 


'ஹாப்பி வேலன்டைன் டே, மை ஸ்வீட் கேர்ள்!'


  
மேலும் "ஆனால் நான் என் ஆராச்சியில் மூழ்கி விட்டால் என்னையே மறந்து விடுகிறேன். அது தான் என் பலவீனம், நல்ல காலம் என்னுடைய உதவி ஆராய்ச்சியாளர் எமிலி நான் பட்டினியா இருக்காமல் கவனித்துக் கொண்டார். மூன்று ஆண்டுகள் எப்படியோ ஓடிவிட்டது. இப்ப நாலாவது ஆண்டை நிரந்தர வேலையுடன் தொடர்கிறேன். எனவே விடுதலை எடுத்து உன்னிடம் விரைவில், அந்த எங்கள் ஆலமரத்திற்கு வருவேன், உன்னைக் கூட்டிப்போக"


அன்புடன் உன்,
ஆராமுதன்"

அவள் முகத்தில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. அவள் மெதுவாக கிசுகிசுத்தாள், "நீங்கள் திரும்பி வருவீர்கள் என்று எனக்குத் தெரியும், "நான் உனக்காக் காத்திருக்கேன்". அந்த நேரம் பார்த்து, பக்கத்து தேநீர் கடையில் இருந்து  “என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை, சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை” என்று இசைஞானியின் பாடல் ஒலித்தது. ஆரமுதனே தன்னை நினைத்து பாடுவதாக அது அவள் மனதுக்கு ஒரு ஆறுதல் கொடுத்தது !

நன்றி  


          
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்

473741108_10227969670129876_1996693483529149490_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=uy7bUX4G9ukQ7kNvgGOzTbG&_nc_oc=AdjRe5j6sBTCmhAZaqT6bPSB974GEbBayyv6tKhg5Y9JNOzWkKlHpJDmGsojyaxXGsU&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=Al2RwG7QkbSC_gtlKrJcx9j&oh=00_AYB9wBFHZJ1RXzCafv3FbE-sz8uiAX1rH--N121lnRyjvA&oe=67B4DEEC

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, kandiah Thillaivinayagalingam said:

அவள் முகத்தில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

அவள் முகத்தில் வழிந்தது. வாசித்த எனக்கோ ஆறாய் ஓடியது. ஏனென்றால் நானும் ஒருத்தியின் காதலன்.😌❤️

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான ஒரு காதல்கதை ஐயா ..........!

நீங்கள் குறிப்பிட்ட அந்த ஆலமரம் குருநகரில் அரசமரக் கூட்டுத்தாபனத்தின் மர டிப்போவில் இருந்து சிறிது தூரத்தில் இருப்பதுதானே . ....... நானும் லொறியை டிப்போவில் லோட் இறக்க விட்டுட்டு அங்கே அந்த ஆலமரத்தின் கீழ் சென்று ஆறுதலாய் இருப்பதுண்டு . ....... ஒருவேளை நறுமுகையையும் நான் சந்தித்திருக்கலாம் . .........! 😁

நல்ல கதை நன்றி ஐயா . ........!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.