Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏவியோ ஃபார்மா, ஓபியாய்டு, மருந்து நிறுவனம், பிபிசி ஐ, மும்பை

படக்குறிப்பு, மும்பையில் செயல்படும் ஏவியோ ஃபார்மா எனும் மருந்து உற்பத்தி நிறுவனம், பல்வேறு வணிக பெயர்களில் மாத்திரைகளை தயாரித்து, சட்டபூர்வமான மருந்துகள் போல் தோற்றமளிக்கும் வகையில் அவற்றை உற்பத்தி செய்கின்றன

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பிபிசி ஐ விசாரணைகள்

  • பதவி, பிபிசி உலக சேவை

  • 9 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய மருந்து நிறுவனம் ஒன்று, உரிமம் பெறாத, தீவிர போதை பழக்கத்துக்கு உள்ளாக்கும் ஓபியாய்டுகளை (ஓபியம் செடியிலிருந்து தயாரிக்கப்படும் வலி நிவாரண மற்றும் சட்ட விரோத மருந்துகள்) தயாரித்து, அவற்றை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்து, அங்கு பெரும் பொது சுகாதார நெருக்கடியை உண்டாக்குகிறது என்று பிபிசி ஐ (BBC Eye) நடத்திய புலனாய்வு விசாரணையில் தெரியவந்துள்ளது.

மும்பையில் செயல்படும் ஏவியோ ஃபார்மாகியூட்டிகள்ஸ் எனும் மருந்து உற்பத்தி நிறுவனம் பல்வேறு வணிக பெயர்களில் மாத்திரைகளை தயாரித்து, சட்டபூர்வமான மருந்துகள் போன்று தோற்றமளிக்கும் வகையில் அவற்றை உற்பத்தி செய்கின்றன. ஆனால், அவை அனைத்தும் ஒரே மாதிரியான ஆபத்தான கலவையைக் கொண்டுள்ளன.

அதில் டேபெண்டடால் என்ற சக்திவாய்ந்த மருந்துப்பொருள் மற்றும் காரிஸோப்ரோடால் என்ற மிகவும் அடிமையாக்கக்கூடிய தசை தளர்த்தி போன்றவை உள்ளன. மேலும், இது ஐரோப்பாவில் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த மருந்துகளை உலகில் வேறு எங்கும் பயன்படுத்த உரிமம் கிடையாது. இது சுவாசக்கோளாறுகள் மற்றும் வலிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் அறியப்படுகின்றது. இவற்றை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் உயிரிழப்பும் ஏற்படலாம். இத்தனை ஆபத்துகள் இருந்தாலும், இந்த மருந்துப் பொருட்கள் பல்வேறு மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளின் தெருக்களில் விற்கப்படும் பிரபலமான போதைப் பொருட்களாக உள்ளன. ஏனென்றால், அவை மிக மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்றன.

கானா, நைஜீரியா, கோட் டிவோயர் போன்ற நாடுகளின் தெருக்களில், ஏவியோ நிறுவனத்தின் முத்திரையிடப்பட்ட பாக்கெட்டுகளில் இம்மருந்துகள் விற்பனைக்குக் கிடைப்பதை பிபிசியின் உலக சேவை கண்டறிந்துள்ளது.

இந்தியாவில் உள்ள ஏவியோவின் தொழிற்சாலையில் இருந்த போதைப் பொருட்களைக் கண்டறிந்த பிபிசி, ஒருவரை உளவு பார்க்க, ரகசியமாக அந்த தொழிற்சாலைக்குள் அனுப்பியது. அவர், ஆப்பிரிக்க தொழிலதிபராக தன்னைக் காட்டிக்கொண்டு, நைஜீரியாவுக்கு போதை மருந்துகளை விற்க விரும்புவதாகக் கூறினார்.

பிபிசி மேற்கு ஆப்பிரிக்காவின் சந்தையில் கண்ட அதே ஆபத்தான தயாரிப்புகளை, ஏவியோ நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான வினோத் ஷர்மா எடுத்துக் காட்டும் காட்சிகளை, ஒரு மறைமுக கேமராவைப் பயன்படுத்தி பிபிசி படம் பிடித்தது.

மறைமுகமாக பதிவு செய்யப்பட்ட காட்சிகளில், அந்த உளவாளி வினோத் ஷர்மாவிடம், நைஜீரியாவில் "இந்த தயாரிப்பை விரும்பும்" இளைஞர்களிடம் விற்கத் திட்டமிட்டு இருக்கிறேன் என்று கூறுகிறார்.

ஷர்மா அதற்கு சிறிதும் சளைக்காமல், "சரி" என பதிலளிக்கிறார்.

பின்னர், இவற்றைப் பயன்படுத்துபவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று மாத்திரைகள் எடுத்துக்கொண்டால், "ஓய்வு கிடைக்கும்" என்றும், அவர்கள் "(போதையின்) உச்ச நிலையை அடையலாம்" என்பதையும் ஒப்புக்கொள்கிறார்.

சந்திப்பின் முடிவில், "இது ஆரோக்கியத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்" என்று கூறும் ஷர்மா, "இப்போதெல்லாம், இது தான் வியாபாரம்" என்றும் தெரிவித்தார்.

Play video, "ஆபத்தான போதை மருந்துகளை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அதிகளவில் அனுப்புவது யார்?", கால அளவு 14,47

14:47

p0kspjch.jpg.webp

காணொளிக் குறிப்பு, ஆபத்தான போதை மருந்துகளை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அதிகளவில் அனுப்புவது யார்?

கோடிக்கணக்கான இளைஞர்கள் பாதிப்பு

அந்த தொழிற்சாலையில், கலவை மருந்துகள் நிரப்பப்பட்ட பெரிய பெட்டிகள் ஒன்றின் மேல் ஒன்றாக, கூரையின் உயரத்துக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

வினோத் ஷர்மா தனது மேசையில், டேபெண்டடால்-காரிஸோப்ரோடால் கலவையுடன் கூடிய மாத்திரை பாக்கெட்டுகளை அடுக்கி வைத்திருந்தார். அவற்றுள் மிகவும் பிரபலமான டாஃப்ரோடோல் உட்பட, டிமாகிங் மற்றும் சூப்பர் ராயல்-225 போன்ற பல்வேறு பெயர்களில், அந்த நிறுவனம் சந்தைப்படுத்துகிறது.

இந்தத் தொழில், மேற்கு ஆப்பிரிக்கா முழுவதுமுள்ள பல லட்சக்கணக்கான இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்து, அவர்களின் திறனை அழித்துக்கொண்டிருக்கின்றது.

கானாவின் வடக்கு பகுதியிலுள்ள டமாலே நகரத்தில், பல இளைஞர்கள் சட்டவிரோத மருந்துப் பொருட்களை எடுத்துக்கொள்வதால், அந்த நகரின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான அல்ஹசன் மஹாம், உள்ளூரைச் சேர்ந்த சுமார் 100 பேரை கொண்ட தன்னார்வக்குழுவை உருவாக்கியுள்ளார்.

போதைப்பொருள் விற்பனையாளர்களை தேடித் பிடித்து, இந்த மாத்திரைகளை வீதிகளிலிருந்து அகற்றுவது அவர்களது முக்கியப் பணியாக உள்ளது.

"நெருப்பில் மண்ணெண்ணெய் ஊற்றினால் எப்படிப் பற்றிக் கொள்கிறதோ, அதேபோல இந்த ஓபியாய்டுகள், அவற்றை தவறாக பயன்படுத்துபவர்களின் புத்திசாலித்தனத்தை அழிக்கின்றன" என்று மஹாம் தெரிவித்தார்.

"இவை எங்களுடைய வாழ்க்கையையே வீணடித்துவிட்டன" என்று டமாலேயில் போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவர் அதை இன்னும் எளிமையாகக் கூறுகிறார்.

இருசக்கர வாகனங்களில் ஏறிச் சென்ற அந்த தன்னார்வக் குழுவினரை, பிபிசியின் குழு பின்தொடர்ந்து சென்றது.

ஒரு போதைப்பொருள் ஒப்பந்தத்தைப் பற்றி தகவல் கிடைத்த நிலையில், டமாலேயின் மிகவும் ஏழ்மையான பகுதியில் சோதனை தொடங்கியது.

அவர்கள் செல்லும் வழியில், ஒரு இளைஞர் மயக்கத்தில் சரிந்து கிடந்தார். உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, அவர் இந்த மருந்துகளை உட்கொண்டிருந்தார் என அறியப்படுகின்றது.

ஏவியோ ஃபார்மா, ஓபியாய்டு, மருந்து நிறுவனம், பிபிசி ஐ, மும்பை

படக்குறிப்பு, டமாலேயில் உள்ள அந்த தன்னார்வ குழுவினர், அந்த இளைஞர் டாஃப்ரோடால் மாத்திரைகளை எடுத்திருக்கக்கூடும் எனக் கருதினர். சோதனையில் அந்த மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன

அந்த வியாபாரி பிடிபட்டபோது, அவர் டாஃப்ரோடால் என்று பெயரிடப்பட்ட பச்சை மாத்திரைகள் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பையை எடுத்துச் சென்றார். பாக்கெட்டுகளில் ஏவியோ மருந்து நிறுவனத்தின் தனித்துவமான முத்திரை அச்சிடப்பட்டிருந்தது.

ஏவியோவின் மாத்திரைகள் டமாலேயில் மட்டுமல்ல, மற்ற இடங்களிலும் பெருந்துயரத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இதேபோன்ற ஏவியோ நிறுவனத்தின் பிற தயாரிப்புகள் கானாவின் வேறு இடங்களில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டதை பிபிசி கண்டறிந்தது.

நைஜீரியா மற்றும் கோட் டிவோயர் தெருக்களிலும் ஏவியோ நிறுவனத்தின் மாத்திரைகள் விற்பனைக்கு உள்ளன என்பதற்கான ஆதாரங்களையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். போதையின் உச்ச நிலையை அடைவதற்காக, அங்குள்ள இளைஞர்கள் அவற்றை மதுபானத்தில் கலந்து குடிக்கிறார்கள்.

ஏவியோ மருந்து நிறுவனம் மற்றும் அதன் இணை நிறுவனமான வெஸ்ட்ஃபின் இன்டர்நேஷனல் ஆகியவை, கோடிக்கணக்கான இந்த மாத்திரைகளை கானா மற்றும் பிற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்புகின்றன என்று பொதுத்தளத்தில் கிடைக்கும் ஏற்றுமதி தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

22.5 கோடி மக்கள்தொகை கொண்ட நைஜீரியா இந்த மாத்திரைகளுக்கு மிகப்பெரிய சந்தையாக உள்ளது. நைஜீரியாவின் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி, சுமார் 40 லட்சம் நைஜீரியர்கள் சில வகையான போதை மருந்துகளை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர் என்று அறியப்படுகின்றது.

நைஜீரியாவின் போதைப்பொருள் மற்றும் சட்ட அமலாக்க முகமையின் (NDLEA) தலைவர் பிரிக் ஜெனரல் முகமது புபா மார்வா, "இந்த வலி நிவாரணி மருந்துகள் (ஓபியாய்டுகள்) எங்கள் இளைஞர்களையும், எங்கள் குடும்பங்களையும் அழித்துவிட்டன, நைஜீரியாவின் ஒவ்வொரு சமூகத்திலும் இது புகுந்துவிட்டது" என்று பிபிசியிடம் கூறினார்.

ஏவியோ ஃபார்மா, ஓபியாய்டு, மருந்து நிறுவனம், பிபிசி ஐ, மும்பை

படக்குறிப்பு, கானாவின் டமாலேயில் நடந்த சோதனையில், ஏவியோ நிறுவனத்தின் பெயர் பொறிக்கப்பட்ட டாஃப்ரோடால் மாத்திரை பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன

டிரமடாலுக்கு மாற்றாக வந்த மாத்திரைகள்

2018 ஆம் ஆண்டில், இந்த வலி நிவாரணி மருந்துகளை விற்பனை செய்வது குறித்து 'பிபிசி ஆப்பிரிக்கா ஐ' மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து, தெருவில் போதை மருந்துகளாக விற்பனையாகி, பரவலாகத் தவறாகப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மருந்தான டிரமடாலை நைஜீரிய அதிகாரிகள் கட்டுப்படுத்த முயன்றனர்.

மருந்துச் சீட்டு இல்லாமல் டிரமடாலை விற்பனை செய்வதை அரசாங்கம் தடை செய்தது. மேலும், மருந்துகளைப் பயன்படுத்துவதற்கான உச்சவரம்பின் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனையடுத்து, சட்டவிரோத மாத்திரைகளின் இறக்குமதியை அரசு கட்டுப்படுத்தியது. அதே நேரத்தில், இந்திய அதிகாரிகள் டிரமடாலின் ஏற்றுமதி விதிமுறைகளை கடுமையாக்கினர்.

இந்த கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, வெகு விரைவாகவே ஏவியோ மருந்து உற்பத்தி நிறுவனம், தசை-தளர்ச்சி மருந்தான காரிஸோப்ரொடாலுடன் கலந்து, டேபண்டடால் அடிப்படையிலான இன்னும் வலிமையான புதிய மருந்துப்பொருளை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது.

போதை மாத்திரைகளை ஏற்றுமதி செய்வோர், இந்த புதிய கலவை மாத்திரைகளை டிரமடாலுக்கு மாற்றாகவும், கடுமையான கண்காணிப்பை தவிர்ப்பதற்காகவும் பயன்படுத்துவதாக மேற்கு ஆப்பிரிக்க அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

தனது தொழிற்சாலையில் பணிபுரியும் 'விஞ்ஞானிகளால்' வெவ்வேறு மருந்துகளை ஒன்றிணைத்து 'ஒரு புதிய தயாரிப்பை' உருவாக்க முடியும் என்று வினோத் சர்மா பிபிசியின் ரகசிய கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்.

ஓபியாய்டு மருந்துகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

ஏவியோ நிறுவனம் அறிமுகப்படுத்திய புதிய மாத்திரைகள், முந்தைய டிரமடாலுக்கு மாற்றாக வந்தவையாக இருந்தாலும், இன்னும் அதிக ஆபத்தானவையாக உள்ளன.

இந்தியாவின் பெங்களூருவில் உள்ள தேசிய மனநல மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனத்தில் உதவி பேராசிரியராக பணிபுரியும் டாக்டர் லேகன்ஷ் ஷுக்லா கூறுகையில், ஆழ்ந்த உறக்க நிலை உட்பட, "ஒரு வலி நிவாரண மாத்திரை அளிக்கும் விளைவுகளை, டேபண்டடால் தருகிறது" என்றார்.

"அது ஒருவரை மூச்சுவிடக்கூட முடியாத அளவுக்கு ஆழ்ந்த உறக்கத்துக்குக் கொண்டுசெல்லலாம். இதுதான் அந்த வலி நிவாரணி மாத்திரையை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் ஆபத்தான நிலை," என்று அவர் விளக்கினார்.

"அத்துடன், இன்னொரு பொருளான காரிஸோப்ரோடால் சேர்க்கப்படுகிறது, இது ஆழ்ந்த உறக்கத்தையும், தளர்வையும் அளிக்கிறது. இது மிகவும் ஆபத்தான கலவையாகத் தெரிகிறது." என்றார்.

காரிஸோப்ரோடால் ஒருவரை அடிமைப்படுத்தக்கூடிய பண்புகளைக் கொண்டுள்ளது என்பதால் ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

இது அமெரிக்காவில் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால், மூன்று வாரங்கள் வரை என்ற குறுகிய காலத்துக்கு மட்டுமே அதனை பயன்படுத்த அனுமதி உள்ளது.

இதைப் பயன்படுத்துவதை நிறுத்தும்போது ஏற்படும் அறிகுறிகளில், கவலை, உறக்கமின்மை மற்றும் மாயத்தோற்றங்கள் தென்படுவது போன்றவை அடங்கும்.

ஏவியோ ஃபார்மா, ஓபியாய்டு, மருந்து நிறுவனம், பிபிசி ஐ, மும்பை

படக்குறிப்பு, நைஜீரிய அதிகாரிகள் தாங்கள் கைப்பற்றிய சட்டவிரோத மருந்துகளை, பெரும்பாலும் வலி நிவாரண மருந்துகளை, லாகோஸில் உள்ள ஒரு கிடங்கில் சேமித்து வைத்துள்ளனர்

டேபண்டடால் உடன் சேர்க்கப்படும்போது, சாதாரண வலி நிவாரண மருந்துகளைக் காட்டிலும், அந்த மருந்துகளை பயன்படுத்துவதை நிறுத்தும்போது ஏற்படும் அறிகுறிகள் இன்னும் 'கடுமையானவையாக' இருக்கின்றன. இது "மிகுந்த வேதனை தரும் அனுபவமாக இருக்கும்," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த கலவையின் செயல்திறனைப் பற்றி மனிதர்களிடத்தில் நடத்தப்பட்டுள்ள எந்த சோதனை குறித்தும் தனக்கு எதுவும் தெரியவில்லை என்றும் கூறினார்.

மேலும், வரையறுக்கப்பட்ட அளவுகளில் பயன்படுத்த சட்டப்பூர்வமாக அனுமதி உள்ள டிரமடாலைப் போன்றில்லாமல், டேபண்டடால்-காரிஸோப்ரோடால், "சரியான மருந்து சேர்க்கையாகத் தோன்றவில்லை" என்றார்.

"இந்த கலவையை எங்கள் நாட்டில் பயன்படுத்துவதற்கு உரிமமும் இல்லை" என்றும் தெரிவித்தார்.

மருந்துகளை ஏற்றுமதி செய்ய விரும்பும் நாட்டின் தர நிலைகளை பூர்த்தி செய்யாவிட்டால், மருந்து நிறுவனங்களால் இந்தியாவில் அவற்றை சட்டபூர்வமாகத் தயாரித்து, ஏற்றுமதி செய்ய முடியாது.

ஏவியோ நிறுவனம், கானாவுக்கு டேபண்டடால் மற்றும் அதற்கு இணையான தயாரிப்புகளை அனுப்புகிறது.

கானா தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தகவலின் படி, டேபண்டடால் மற்றும் காரிஸோப்ரோடால் கலவையுடன் கூடிய இந்த மருந்து அங்கு அங்கீகரிக்கப்படாததும் சட்டவிரோதமானதும் ஆகும்.

எனவே, டாஃப்ரோடாலை கானாவுக்கு அனுப்புவதன் மூலம், ஏவியோ நிறுவனம் இந்திய சட்டத்தை மீறுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளை வினோத் சர்மாவிடமும், ஏவியோ மருந்து நிறுவனத்திடமும் நாங்கள் முன்வைத்தோம். ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை.

உலகளாவிய பொது சுகாதாரத்துக்கான அதன் பொறுப்பை இந்திய அரசு அங்கீகரிப்பதாகவும், இந்தியா ஒரு பொறுப்பான மற்றும் வலுவான மருந்து ஒழுங்குமுறை அமைப்பைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதில் உறுதியுடன் இருப்பதாகவும், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு எங்களிடம் தெரிவித்தது.

அதுமட்டுமல்ல, இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு செய்யப்படும் ஏற்றுமதிகள் கவனத்துடன் கண்காணிக்கப்படுகின்றன என்றும், சமீபத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

மேலும், இந்தியாவின் முயற்சிகளை ஆதரிக்க, இறக்குமதி செய்யும் நாடுகளும் வலுவான கட்டுப்பாட்டு அமைப்புகளை கொண்டிருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட பிற நாடுகளுடன் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளதாகவும், தவறுகளைத் தடுக்கும் நோக்கில் அவற்றுடன் இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளதாகவும் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் எந்த மருந்து நிறுவனத்தின் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

ஏவியோ ஃபார்மா, ஓபியாய்டு, மருந்து நிறுவனம், பிபிசி ஐ, மும்பை

படக்குறிப்பு, டமாலே நகரில் நடந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட, ஏவியோ நிறுவனம் தயாரித்த டாஃப்ரோடால் உள்ளிட்ட போதை மருந்துகளை கானாவின் தன்னார்வக் குழு எரித்து அழித்தது

உரிமம் இல்லாத வலி நிவாரண மருந்துகளை தயாரித்து ஏற்றுமதி செய்யும் ஒரே இந்திய நிறுவனம் ஏவியோ மட்டும் அல்ல.

மற்ற மருந்து நிறுவனங்கள் இதே போன்ற மருந்துகளை உற்பத்தி செய்வதையும், வெவ்வேறு பெயர்களில் இந்த மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்கா முழுவதும் பரவலாகக் கிடைக்கின்றன என்பதையும் பொதுத்தளத்தில் கிடைக்கும் ஏற்றுமதித் தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகளவில் மில்லியன் கணக்கான மக்கள் சார்ந்திருக்கும் உயர்தர பொது மருந்துகளையும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய தடுப்பூசிகளையும் தயாரிக்கின்ற, வேகமாக வளர்ந்து வரும் இந்திய மருந்துத் துறையின் நற்பெயரை இந்த உற்பத்தியாளர்கள் சேதப்படுத்துகின்றனர்.

மேலும் இந்த தொழில்துறையின் ஏற்றுமதிகள் வருடத்துக்கு குறைந்தது 28 பில்லியன் டாலர்கள் (22 பில்லியன் யூரோ) மதிப்புடையவை என்றும் அறியப்படுகின்றது.

அந்த தொழிற்சாலைக்குள் ரகசியமாக சென்றவர் (பாதுகாப்புக்காக அவருடைய அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது), ஷர்மாவுடனான சந்திப்பு குறித்து பேசுகையில், "நைஜீரிய செய்தியாளர்கள் இந்த வலி நிவாரண மருந்துப் பொருட்களின் நெருக்கடியைப் பற்றி 20 ஆண்டுகளாக செய்தி வெளியிட்டு வருகின்றனர். ஆனால், இறுதியாக, ஆப்பிரிக்காவில் நெருக்கடி ஏற்படுத்தியுள்ள மூல காரணமாக உள்ள ஒருவரை, இவற்றைத் தயாரித்து, கப்பலில் எங்கள் நாடுகளுக்கு சரக்குப் பெட்டகங்களில் அனுப்பும் ஒருவரை, நேருக்கு நேர் சந்தித்தேன். இது எவ்வளவு கேடு விளைவிக்கிறது என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆனால், அவருக்கு எந்த கவலையும் இல்லாதது போல் காட்சியளித்தார். இதை வெறும் 'தொழில்' என விவரித்தார்" என்கிறார்.

கானாவின் டமாலே நகரத்தில், பிபிசியின் குழு உள்ளூர் பணிக்குழுவுடன் சேர்ந்து இறுதியாக ஒரு சோதனை மேற்கொண்டது. அப்போது இன்னும் அதிகளவிலான ஏவியோ நிறுவனத்தின் டாஃப்ரோடால் மருந்துகள் கைப்பற்றப்பட்டன. அன்று மாலை, அவர்கள் பறிமுதல் செய்த அந்த போதைப்பொருட்களை எரிக்க உள்ளூர் பூங்காவில் கூடினார்கள்.

"அனைவரும் பார்க்கும்படி திறந்த வெளியில் நாங்கள் அதை எரிக்கிறோம்," என்று தலைவர்களில் ஒருவரான ஜிக்கே கூறினார்.

அவற்றைப் பெட்ரோலில் ஊறவிட்டு தீ வைத்துவிட்டு, தொடர்ந்து பேசிய அவர், "எனவே, இது விற்பனையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் வழங்கப்படும் ஒரு எச்சரிக்கை. நீங்கள் பிடிபட்டால், உங்கள் மருந்துகளை எரிப்போம்" என்றார்.

ஆனால், தீப்பிழம்புகள் சில நூறு டாஃப்ரோடால் பாக்கெட்டுகளை அழித்தபோதும், இந்த விநியோகச் சங்கிலியின் உயர் நிலையில் உள்ள 'விற்பனையாளர்களும், விநியோகஸ்தர்களும்' ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், இந்தியாவில் இருந்துகொண்டு இன்னும் கோடிக்கணக்கான மருந்துகளை உற்பத்தி செய்து, மனிதர்கள் அடையும் பெருந்துன்பத்தின் மூலம் லாபம் அடைந்து பணக்காரர்களாகிக் கொண்டிருப்பர்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

YouTube பதிவின் முடிவு

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwyged5nyv9o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போதைப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்ட மாத்திரைகளைத் தடை செய்த இந்தியா

ஏவியோ ஃபார்மாகியூட்டிகள்ஸ், பிபிசி ஐ, புலன் விசாரணை

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்திய மருந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று குறித்து பிபிசி ஐ நடத்திய புலனாய்வுக்குப் பிறகு, இந்திய அரசு டேபெண்டடால் மற்றும் காரிஸோப்ரோடால் ஆகிய மருந்துகளை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏவியோ ஃபார்மசூட்டிகல் என்று அழைக்கப்படும் மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்படும் நிறுவனம் முறையான உரிமம் இன்றி போதைக்கு அடிமையாக்கும் மருந்துகளை தயாரித்து வருகிறது என்று பிபிசி புலனாய்வில் தெரிய வந்தது.

இந்த நிறுவனம் தயாரித்த மருந்துகள் சட்டத்திற்கு புறம்பாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பெரிய அளவில் சுகாதாரப் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

மருத்துவ ரீதியாக குறிப்பிட வேண்டும் என்றால் இந்த மருந்துகள் ஓபியாடுகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஓபியத்தில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகளான இவை போதைக்கு அடிமையாக்கும் தன்மைகளை கொண்டவை.

இந்திய அரசு கூறியது என்ன?

பிபிசி இந்தச் செய்தியை வெளியிட்ட பிறகு, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாடு அமைப்பின் இயக்குநரகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் மருந்து கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

அதில், "சமீபத்தில் டேபெண்டடால் மற்றும் காரிஸோப்ரோடால் சேர்மங்களை உள்ளடக்கிய மருந்துகள் போதைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும், அதை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

போதைப் பொருட்களின் சாத்தியப் பயன்பாடு மற்றும் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, டேபெண்டடால் மற்றும் காரிஸோப்ரோடால் சேர்மங்களைச் சேர்த்த மருந்துகளைத் தயாரிக்கவும், ஏற்றுமதி செய்யவும் வழங்கப்பட்ட தடையில்லா சான்று அனைத்தும் திரும்பப் பெறப்படுகிறது. இந்த உத்தரவு உடனே அமலுக்கு வருகிறது," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மத்திய மற்றும் மகாராஷ்டிரா அரசின் மருந்து கண்காணிப்பாளர்கள் ஏவியோ நிறுவனத்தின் உற்பத்தி மையம் மற்றும் மருந்து கிடங்கு ஆகியவற்றில் ஆய்வு நடத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அங்கே உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து மருந்துகளும் கைப்பற்றப்பட்டன. மருந்து உற்பத்தி உடனடியாக நிறுத்தப்பட்டது.

Play video, "ஆபத்தான போதை மருந்துகளை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அதிகளவில் அனுப்புவது யார்?", கால அளவு 14,47

14:47

p0kspjch.jpg.webp

காணொளிக் குறிப்பு, ஆபத்தான போதை மருந்துகளை மேற்கு ஆப்பிரிக்காவுக்கு அதிகளவில் அனுப்புவது யார்?

மகாராஷ்டிராவில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது?

மகாராஷ்டிரா அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், "ட்ரமடோல், டேபெண்டடால், காரிஸோப்ரோடால் போன்ற மருந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு நைஜீரியா, கானா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கே அந்த மருந்துகள் போதைப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகிறது," என்று பிபிசி பிப்ரவரி 21ஆம் தேதியன்று வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

"அந்த செய்திக்காக மகாராஷ்டிரா மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஏவியோ நிறுவனத்திற்குள் சென்று பிபிசி புலனாய்வு மேற்கொண்டது. அந்த நிறுவனம் டேபெண்டடால் மருந்துகளை ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது என்பது அப்போது தெரிய வந்துள்ளது."

"பிபிசி செய்தி வெளியானதைத் தொடர்ந்து, மத்திய மற்றும் மாநில மருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் கூட்டாகச் சேர்ந்து அந்த நிறுவனத்தின் உற்பத்தி மையம் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் சோதனை மேற்கொண்டு உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். அங்கே உற்பத்தி செய்யப்பட்டு, வைக்கப்பட்டிருந்த மருந்துகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டன. மேலும், உற்பத்தி உடனடியாக முழுமையாக நிறுத்தி வைக்கப்பட்டது."

ஏவியோ ஃபார்மாகியூட்டிகள்ஸ், பிபிசி ஐ, புலன் விசாரணை

பட மூலாதாரம்,GOVERNMENT OF INDIA

படக்குறிப்பு,மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாடு அமைப்பின் இயக்குநரகம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படும் மருந்து கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

''மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1950இன் கீழ் விளக்கம் கேட்டு அந்த நிறுவனத்திற்கு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. எந்த பாரபட்சமும் இன்றி நேர்மையாக இந்த விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், "2025ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதியன்று மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் டேபெண்டடால், காரிஸோப்ரோடால் மற்றும் அதுபோன்ற மருந்துகளை உற்பத்தி செய்யவும் ஏற்றுமதி செய்யவும் வழங்கப்பட்ட தடையில்லா சான்றுகளை ரத்து செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. மகாராஷ்டிர அரசின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிர்வாகம், நெறிமுறைகளின் கீழ் ஏற்கெனவே நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது'' என்கிறது அந்த அறிக்கை.

"இதுபோன்ற சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு நாட்டின் புகழுக்குத் தீங்கு விளைவிப்பது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிரா அரசு தயார் நிலையில் உள்ளது. மத்திய அரசுக்குத் தேவையான முழு ஒத்துழைப்பை மாநில அரசு வழங்கியுள்ளது," என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி புலன் விசாரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது என்ன?

ஏவியோ ஃபார்மாகியூட்டிகள்ஸ், பிபிசி ஐ, புலன் விசாரணை

படக்குறிப்பு, மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1950இன் கீழ் விளக்கம் கேட்டு ஏவியோ நிறுவனத்திற்கு குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மருந்து உற்பத்தி நிறுவனமான ஏவியோ பார்மசூட்டிக்கல்ஸ் பல்வேறு பெயர்களில் பலதரப்பட்ட மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது. அது மட்டுமின்றி அந்த நிறுவனம் அந்த மாத்திரைகளை, சட்டத்திற்கு உட்பட்டு தயாரிக்கப்படும் மாத்திரைகளைப் போன்றே 'ஃபேக்' செய்கிறது.

ஆனால் அவை அனைத்திலும் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவுக்கும் சக்தி வாய்ந்த ஓபியாடுகளான டேபெண்டடால் மற்றும் தசை தளர்த்தியான காரிஸோப்ரோடால் இடம் பெற்றுள்ளன.

காரிஸோப்ரோடால் மருந்து மிகவும் ஆபத்தானது என்பதால் அவை ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த மருந்துகளின் கலவையைப் பயன்படுத்த உலகில் எங்கும் உரிமம் இல்லை. இதைப் பயன்படுத்துவது சுவாசக் கோளாறு, வலிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். அதிகமாக பயன்படுத்தும்போது உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

இத்தனை அபாயங்கள் இருந்தாலும்கூட மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஓபியாடுகள் போதைப் பொருட்களாக பிரபலம் அடைந்துள்ளன. அவை மிகவும் எளிதில், மலிவு விலையில் கிடைப்பதுதான் அதற்குக் காரணம்.

கானா, கோட் டிவோயர் மற்றும் நைஜீரியாவின் தெருக்களில் ஏவியோ முத்திரை அடங்கிய பாக்கெட்டுகளில் இந்த மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை பிபிசி உலக சேவை கண்டுபிடித்தது.

இந்த போதைப் பொருட்களைப் பற்றி அறிந்துகொள்ள பிபிசி ரகசியமாக ஒருவரை உளவு பார்க்க ஏவியோவின் தொழிற்சாலைக்குள் அனுப்பியது.

உள்ளே சென்ற அவர், தன்னை ஒரு ஆப்பிரிக்க தொழிலதிபராக அடையாளப்படுத்திக் கொண்டார். மேலும் நைஜீரியாவுக்கு ஓபியாடுகளை அனுப்ப விரும்புவதாகவும் தெரிவித்தார்.

ஏவியோ ஃபார்மாகியூட்டிகள்ஸ், பிபிசி ஐ, புலன் விசாரணை

படக்குறிப்பு, நைஜீரிய அதிகாரிகள் தாங்கள் கைப்பற்றிய சட்டவிரோத மருந்துகளை, பெரும்பாலும் வலி நிவாரண மருந்துகளை, லாகோஸில் உள்ள ஒரு கிடங்கில் சேமித்து வைத்துள்ளனர்

ரகசிய கேமராவில், அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான வினோத் ஷர்மா, பிபிசி மேற்கு ஆப்பிரிக்காவில் பார்த்த அதே தீங்கு விளைவிக்கும் மருந்துகள் குறித்து விளக்கம் அளிப்பதை பிபிசி பதிவு செய்தது.

மறைமுகமாகப் பதிவு செய்யப்பட்ட காட்சிகளில், அந்த உளவாளி வினோத் ஷர்மாவிடம், நைஜீரியாவில் "இளைஞர்கள் மத்தியில் பிரபலமடைந்திருக்கும் இந்த மாத்திரைகளை" விற்கத் திட்டமிட்டு இருக்கிறேன் என்று கூறுகிறார்.

அதற்கு ஷர்மா வெறுமனே "சரி" என்று மட்டும் தெரிவிக்கிறார். மேலும் இந்த மாத்திரைகளில் இரண்டு அல்லது மூன்றை எடுத்துக் கொண்டால் எவ்வாறு "ஓய்வாகவும்", (போதையின்) உச்சநிலையையும் உணரலாம் என்பதையும் விளக்கினார்.

அந்தச் சந்திப்பின் முடிவில் ஷர்மா, "இந்த மருந்துகள் அவர்களின் ஆரோக்கியத்திற்குக் கேடானது. ஆனால் இதுவொரு தொழில்," என்று கூறினார்.

இதே தொழில்தான் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான இளைஞர்களின் ஆரோக்கியத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்கி, அவர்களின் திறனை அழிக்கிறது.

பிபிசி ஐ இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து வினோத் ஷர்மா மற்றும் ஏவியோ பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனத்திடம் கேட்டபோது அவர்கள் அதற்குப் பதில் ஏதும் அளிக்கவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce98glxnvego

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஏராளன் said:

இந்திய மருந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று குறித்து பிபிசி ஐ நடத்திய புலனாய்வுக்குப் பிறகு, இந்திய அரசு டேபெண்டடால் மற்றும் காரிஸோப்ரோடால் ஆகிய மருந்துகளை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

தனியே தடை செய்தால் போதுமா?

1)இழுத்து மூடணும்.

2)இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

3) இலங்கைக்கும் இந்தியாவில் இருந்தே போதைப் பொருள் கடத்தப்படுகின்றன.இதையும் கட்டுப்படுத்தணும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.