Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முழிக்கும் மொழி
---------------------------

large.ForeignLanguage.jpg

இருமொழிக் கொள்கையா அல்லது மும்மொழிக் கொள்கையா எது சரி, எந்த வழியில் போவது என்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இடத்தில்  வார்த்தைப் போர்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது வெறுமனே வார்த்தைப் போர்கள் தான். இந்தப் போர்க் களத்தில் நிற்கும் பெரும்பாலான முன்னணி தளபதிகளின் குடும்பங்களில் மும்மொழிக் கொள்கையே பின்பற்றப்படுகினறன. ஆனாலும் தமிழைக் காப்பதற்காக, தமிழை வளர்ப்பதற்காக தாங்கள் மும்மொழிக் கொள்கைக்கு எதிரானவர்கள் என்று இவர்கள் வெளியில் சொல்லிக் கொள்கின்றனர். இதில் பலரும் மும்மொழிகளும் படிப்பிக்கும் தனியார் பாடசாலைகளின் உரிமையாளர்களாகவும் கூட இருக்கின்றனர். 

வழமையான அரசியல் தான் இங்கேயும். மேடையில் ஏறி வாக்குகளுக்காகவும், கைதட்டலுக்காகவும் எதைப் பேச வேண்டும் என்று தெரிந்து அதையே பேசுவது, மேடையிலிருந்து இறங்கிய பின் தங்களின் குடும்ப நலன்களையும், தங்களின் வளமான எதிர்காலத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு, மேடையில் பேசியதற்கு முற்றிலும் எதிரான செயல்களில் ஈடுபடுவது என்பது ஜனநாயக அரசியலின் தவிர்க்க முடியாத ஒரு பக்கம். சர்வாதிகாரிகளுக்கு இந்த இரட்டை நிலைப்பாடுகள் தேவையில்லை. 

ஊரில் சிறுவயதில் ஒருமொழிக் கொள்கையுடனேயே என் இளமைக்காலம் கழிந்தது. அந்த ஒரு மொழி கூட எந்தப் பாடசாலையிலும் கற்றதால் வந்தது அல்ல. என்னுடைய அம்மாச்சியும், அம்மாவும், அப்பாவுமே அந்த ஒரே மொழியை எனக்கு கொடுத்தார்கள். அம்மாச்சி கதைகள் சொல்வார். ஸ்டீவன்  ஸ்பீல்பெர்க், ஜேம்ஸ் கமரூன் போன்றவர்களால் கூட அம்மாச்சியை நெருங்கமுடியாது. அவர் ஒரே சேலையையே தினமும் உடுத்திக் கொண்டே தமிழ் வார்த்தைகளால் பிரமாண்டங்களை உருவாக்கினார். பின்னர் ஊரில் இருந்த வாசிகசாலைகள் அம்மாச்சியின் இடத்தை நிரப்ப முயன்றன. தமிழ் சொற்களும், வசனங்களும் அவ்வாறே உள்ளே புகுந்தன.

தமிழையே சொல்லிக் கொடுக்காத பாடசாலைகளில் இன்னொரு மொழியை சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நான் போன எந்தப் பாடசாலையிலும் ஆங்கிலத்தை மருந்துக்கு கூட படிப்பிக்கவில்லை. என்னுடைய பாடசாலை நாட்களில் ஹாட்லிக் கல்லூரியில் படித்தவர்கள் சிலர் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கக்கூடும். ஆனால், பின்நோக்கிப் போய் நிதானமாகப் பார்த்தால், அவர்களுக்கும் உண்மை தெரியவரக்கூடும். அன்று ஆங்கில மொழியில் பரிச்சயம் வருவதற்கு வளரும் சூழலில் ஏதாவது சிறிய அளவில் தன்னும் ஒரு ஆங்கில புழக்கம் இருந்திருக்க வேண்டும் அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போயிருக்க வேண்டும். இவை அமையாவிடத்து ஆங்கிலமும் அமையாது.

சிங்கள மொழியின் நிலை இன்னும் பரிதாபம். அதைக் கற்றல் முற்றாகவே தடை செய்யப்பட்டிருந்தது. ஊரில் ஒரு இடத்தில் 'மேக்கட்ட கீயா......' என்று பெரிதாக தமிழில் எழுதப்பட்டிருந்தது. பல வருடங்களின் பின், ஊரை விட்டு வெளியே வந்த பின் தான், இவை சிங்கள மொழிச் சொற்கள் என்பது தெரியவே வந்தது. அது எழுதப்பட்டிருந்த இடத்திற்கு அருகில் இருந்த வீட்டில் ஒரு அக்கா இருந்தார். அப்போது அந்த அக்காவை ஒரு அண்ணன் விரும்பிக் கொண்டிருந்தார். அந்த அண்ணனின் நண்பர்கள் தான் இந்த சிங்கள மொழி வசனத்தை தமிழில் அங்கே எழுதியிருந்தனர். அவர்களுக்கு எப்படி சிங்கள மொழி தெரிய வந்தது என்றால் அவர்களில் சிலர் வெளிநாடு அல்லது கப்பலில் போவதற்காக கொழும்பிற்கு போய் வந்து கொண்டிருந்தார்கள். போகும் வழிப்பாதையில் வழித்துணையாக சிங்கள மொழியில் சில சொற்களையும், வசனங்களையும் தெரிந்து வைத்திருக்கின்றார்கள்.

நான் பின்னர் தேவை காரணமாக சிங்கள மொழியையும், ஆங்கிலத்தையும் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. ஒரு மொழியை வெறும் மொழியாகவே பார்க்கும் போது அது உண்டாக்கும் ஆச்சரியம் அளவில்லாதது. எப்படி இவை உண்டாகியிருக்கும், எப்படி சத்தங்களை வார்த்தைகளாக உருவாக்கினார்கள், எப்படி உணர்வுகளை வார்த்தைகளாக வெளிப்படுத்தினார்கள் என்பது மனிதர்களின் கூட்டு ஆற்றலுக்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டு. எந்த மொழியையும் மனிதர்களுடன், நிலத்துடன், வரலாற்றுடன், பண்பாட்டுடன் சேர்த்து பார்க்கும் போது பேதங்கள் வர ஆரம்பித்து, அவை பெரும் மோதல்களாவும் ஆகிக்கொண்டிருக்கின்றன. 

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை பாடசாலைகளில் புகுத்தும் போது, ஒரு மொழியைக் கொண்டு இன்னொரு மொழியை அழிக்க முற்படுகின்றார்கள் என்பதே இன்று சொல்லப்படும் பெரும் குற்றச்சாட்டு. உதாரணமாக, தமிழ் மொழியை இந்தி மொழியால் அழிக்கப் பார்க்கின்றார்கள் அல்லது தமிழ் மொழியை சிங்கள மொழியால் அழிக்கப் பார்க்கின்றார்கள் என்பன. ஆங்கிலத்திற்கு இந்தக் கட்டுப்பாடு அநேக நாடுகளில் இல்லை. ஆங்கிலம் இன்று உலக இணைப்பு மொழி ஆகிவிட்டது, ஆகவே ஆங்கில மொழியை இரண்டாவது மொழியாகக் கொண்ட இருமொழிக் கொள்கைக்கு பெரும்பாலான நாடுகளில், பிரதேசங்களில் எதிர்ப்புக் காட்டப்படுவதில்லை.

கோவாவில் இருக்கும் மக்கள் கொங்கணி என்னும் மொழியைப் பேசுகின்றார்கள். இவர்களில் ஒரு பகுதியினர் இப்பொழுது கர்நாடகாவில் வசிக்கின்றனர். இவர்கள் வசிக்கும் ஒரு பகுதியில் அந்தப் பிரதேசத்தின் பேச்சு மொழியாக துளு இருக்கின்றது. கன்னடம் கர்நாடக மாநிலத்தின் மொழி. இந்த மக்கள் மூன்று மொழிகளிலும் முதலில் பரிச்சயம் ஆகின்றனர். ஆண்கள் தங்கள் பகுதி பெண்களுடன் துளு மொழியிலும், ஆண்களுடன் கொங்கணி மொழியிலும், பிறருடன் கன்னடத்திலும் உரையாடுகின்றனர். இதைவிட ஆங்கிலமும், இந்தியும் பாடசாலைகளில் கற்றுக்கொள்கின்றார்கள். இந்த தகவல்களை அங்கிருந்த வந்த ஒரு நண்பன் சொன்னான். அவனுடைய ஆங்கில மொழித்திறனும் அபாரம். அவன் இந்தி மொழியையும் மிக நன்றாகப் பேசுகின்றான் என்றே வட இந்திய நண்பர்கள் சொன்னார்கள். அவனுக்கு தமிழும் ஓரளவு தெரிந்திருக்கின்றது. பழைய கன்னட மொழி அப்படியே தமிழ் தான், ஆனால் இதை இங்கு இருக்கும் வேறு எந்த தமிழர்களுக்கும் சொல்லாதே என்று அவன் எனக்கு சொன்னான்.

எத்தனை மொழிகளை சிறுவயதில் கற்க ஆரம்பிக்கலாம் என்பதில் பெரிய சிக்கல்கள் இல்லை என்றே தெரிகின்றது. மூன்று அல்லது நான்கு மொழிகளை கற்றுக் கொள்ளலாம் என்றே சொல்கின்றனர். இந்த மொழிகள் புழங்கும் சூழல் இருந்தால், இன்னும் மிக இலகுவாக இவைகளை கற்றுக் கொள்ளலாம் என்றும் சொல்கின்றனர், என்னுடைய கொங்கணி - துளு - கன்னட - ஆங்கில - இந்தி மொழிகள் தெரிந்த நண்பன் போல. அதிக மொழிகளை தெரிந்திருப்பதால் அது நல்ல வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதை விடவும் பல பயன்கள் உண்டு. உதாரணமாக, அதிக மொழிகள் தெரிந்திருப்பவர்களின் ஞாபக சக்தி அதிகமாக இருக்கும், சிக்கல்களுக்கு தீர்வுகளைக் காண்பதில் அதிக நெளிவுத்தன்மை இருக்கும் போன்றன.

இலங்கையில் கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய தேர்தலில் தமிழர் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டவர்கள் சிலர் மும்மொழி வல்லுநர்கள் என்றனர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் மூன்றும் தெரிந்த அவர்களால் ஏதாவது நல்லது நடக்கப் போகின்றது என்றும் சொல்லப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நடந்தது போல தெரியவில்லை. ஒரு வேளை அவர்கள் தங்களுக்கு மட்டும் தேவையானவற்றை தங்களின் திறமைகளின் ஊடாக பெற்றுக் கொண்டார்களோ என்னவோ. அரசியலில் பலதும் பொய்த்துப் போகின்றன.

எவரும் இன்னும் ஒரு மொழியை அறிந்து கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பத்தை தவற விடுவது சரியென்று தெரியவில்லை. அதுவும் வசதியுள்ளவர்களுக்கு இந்த வசதி கிட்டும் போது, வசதியில்லாதவர்கள் மட்டும் இதை புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம். மற்றும் உலகெங்கும் பத்து கோடிப் பேர்கள் வரையும், தமிழ்நாட்டில் மட்டும் ஒன்பது கோடிப் பேர்கள் வரையும் பேசும் தமிழ் மொழி இன்று இன்னொரு மொழியால் அழிந்து போகும் என்றால், பிரச்சனை உள்ளே வரும் அந்த புதிய மொழியால் இல்லை, அது எங்களில் என்று தானே அர்த்தம்.  

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தக் கட்டுரைக்குப் பதில் அல்ல;

நீங்கள் உரையாடலுக்கு எடுத்துள்ள விடயம் நீண்டநெடும் நீள அகலமும் ஆழமும் உள்ள ஒரு கருப் பொருள்.

சும்மா ஏதாவது பொத்தாம் பொதுவான கருத்துகளை இங்கு சொல்லலாமேயொழிய முற்று முழுதாக அணுகுவது எப்பிடி என்று தெரியவில்லை. இந்த உரையாடலின் கரு ஒரு விதையாக மனதுள் போய், அது மீண்டும் மீண்டும் மீளாய்வு செய்தாகிப் பெரும் விருட்சமாகும் போது நாம் எல்லோரும் இதை விட்டு வேறெங்கோ காலதேச வர்த்தமானங்களில் சென்றிருப்போம்.

அடுத்து,

கட்டாயம் எல்லோரும் முடிந்தளவு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும், ஆகக் குறைந்தது அதில் இருக்கும் சுவாரசியமான விடயங்களையாவது. பசிக்கு, வயிற்றுக்குள் நெருப்பு என்றும் இன்னொரு மொழியில் சொல்லுவார்கள் என்பது எவ்வளவு ஒரு திறப்பு. வடமொழியில் இருந்து எவ்வளவோ சொற்களைப் பாவிக்கிறோம், அவற்றின் மூலத்தைக் காண்பதில்லை.

உதாரணத்துக்கு ஜகத் என்பது நகரும் தன்மையைக் குறிப்பிடுவது. பிரபஞ்சத்தை ஜகம் என்கிறோம். அதன் மூல காரணம் அது எப்போதும் நகர்ந்து கொண்டிருப்பதால்.எவ்வளவோ திசைச் சொற்கள் நாம் புழங்குகின்றோம் ஆனால் அவற்றின் அர்த்தம் தெரியாமலே.

அரசியல்

தமிழ் நாட்டு மொழிப்போராட்டம் முக்கால்வாசி அரசியல் மட்டுமே. அதுவும் இப்போது தி மு க செய்வதெல்லாம் வெறும் கேலிக்கூத்து. தாய் மொழி முதன்மையாய் இருந்து கொண்டு மற்ற மொழிகளை மேலதிகமாகக் கற்பதனால் தமிழ் அழியப்போவதில்லை.

இடப்பெயர்வு என்பது பண்பாட்டுத் தற்கொலை, மொழி உள்ளடங்கலாக.

இந்தியா போன்ற மிகப்பெரும் நாடுகளில் உள்நாட்டு இடப்பெயர்விலேயே இது நடந்து விடும். சந்தர்ப்பங்களைப பொறுத்து எங்கிருந்தும் எங்கும் மக்கள் இடம் பெயர்ந்து முடிவிடத்தின் பண்பாட்டைத் தழுவிக்கொள்ளலாம். தமிழ் நாட்டிலேயே எவ்வளவோ வேற்று மாநிலத்தவர் தமிழைத் தம் தாய் மொழியாகக கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

கருணாநிதி குடும்பம் உள்ளடங்கலாக .

இலங்கை

நீர்கொழும்பு புத்தளம் மாவட்டங்களில் தமிழர் சிங்களவராய் மாறியிருப்பது கடந்த பல பத்தாண்டுகளில் கண்கூடாய்க் கண்ட மாற்றமாகும். அவர்களுக்குத் தமிழ் மொழி மூலமான கல்வி முற்றாக மறுக்கப்பட்டது. இது மொழித் திணிப்பு, கல்வி மற்றும் உதவித் திட்டங்கள் மூலமாகவும் தான் நடை பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இது நீங்கள் குறிப்பிட்ட மொழிக்கொள்கை விவாதத்திற்குள் இது வர மாட்டாது என்று நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, villavan said:

👍............

பல விடயங்களை தொட்டுச் சென்றிருக்கிறீர்கள், வில்லவன்............. ஒவ்வொன்றும் முக்கியமானவை.

இடப்பெயர்வுகளால் ஒரு பண்பாடே அழிக்கப்படும் என்பதற்கு நாங்களே வாழும் சாட்சியங்கள். 'ஒருவரின் மொழியை அழி, அது அவரின் தொடர்ச்சியையே நீ அழித்து போல.........' என்று சொல்வார்கள். இடப்பெயர்வுகளால் இதுவே தான் நடந்து கொண்டிருக்கின்றது. நீர்கொழும்பு, புத்தளத்தில் கூட உள்நோக்கிய சிங்கள மக்களின் மற்றும் வெளிநோக்கிய தமிழ் மக்களின் இடப்பெயர்வுகள் இந்த நிலையைத் தோற்றுவித்திருக்கின்றன.

சிலாபத்தில் இருக்கும் உடப்புக்கு போயிருக்கின்றேன். அந்த ஊர் அங்கே எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும் என்ற யோசனை அங்கே நிற்கும் போதே வந்தது. சுற்றிவர இருக்கும் எல்லா ஊர்களும் முற்று முழுதாக மாறிவிட்டன.

திருப்பூரில் ஏராளமான வட இந்திய மக்கள் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். சமீபத்தில் அவர்களின் பிள்ளைகள் அங்கிருக்கும் தமிழ் பாடசாலைகளில் தமிழில் கல்வி கற்பதை ஒரு செய்தியில் காட்டினார்கள். இப்படியே அவர்கள் அங்கேயே தங்கி விட்டால், அவர்களின் அடுத்த அடுத்த தலைமுறை தமிழ்மொழி மட்டும் பேசுபவர்களாக மாறிவிடுவார்கள்.

பர்மாவில் இராணுவ ஆட்சி வந்த ஆரம்பத்தில் தமிழ் பாடசாலைகள் தடைசெய்யப்பட்டன. அங்கு பர்மிய மொழி மட்டுமே ஒரேயொரு மொழியாக மாறியது.

இவை போன்றன பாடசாலைக் கல்வி தொடர்பான மொழிக்கொள்கை அல்ல. இவை ஒன்றில் பெரும்பான்மை அரசுகளின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள், அல்லது ஒரு மக்கள் திரள் ஒரு நல்ல வாழ்வைத் தேடிப் போய் அதற்கு கொடுக்கும் விலையாகவும் இது இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2025 at 14:37, ரசோதரன் said:

பர்மாவில் இராணுவ ஆட்சி வந்த ஆரம்பத்தில் தமிழ் பாடசாலைகள் தடைசெய்யப்பட்டன. அங்கு பர்மிய மொழி மட்டுமே ஒரேயொரு மொழியாக மாறியது.

என்னோடு பல நேபாளி பர்மியர்கள் வேலை செய்தனர், அவர்கள் எல்லோரும் பர்மிய மொழியில் தான் தமக்குள்ளே பேசிக்கொள்வார்கள். அவர்கள் எல்லாருமே மொழி ரீதியாக பர்மியர்களாக மாறி விட்டனர்.

80 க்கும் மேற்பட்ட வருடங்கள் ஏறத்தாழ முழு இலங்கையும் சோழ அரசின் கீழ் இருக்கும் போது நிறையப் பேர் தமிழுக்கு மாறி இருப்பார்கள், இல்லையா?

காலச்சக்கரத்தில் மாற்றம் மாறி மாறி வரும் போது சமயங்களும் மொழிகளும் மாறி மாறிச் செல்லும் போல. நாங்கள் தான் சிலவற்றைப் பிடித்துத் தொங்குகிறோம், ஆனால் எது நிரந்தரம்?

முதற் தலைமுறையில் எதிர்ப்பும் நினைவுகளும் ஒட்டியிருக்கும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தலை கால் தெரியாது தடுமாறித் தடம் மாறி விடும்.

DNA பரிசோதனைகளில் பல உண்மைகள் வெளிவந்தாயிற்று, ஆனால் அரசியல்/குறுகிய வட்டங்கள்/மூடத்தனம் என்பன எப்போதும் நிறையப் பின் தொடர்வோரைக் கொண்டிருக்கும் என்பது தான் நிதர்சனம்.

கூட்டமாக இருக்கும் மூடர்களின் பலத்தைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று ஜோர்ஜ் கார்லின் சொன்ன மாதிரி, எப்பவுமே அந்தக் கூட்டமும் அதை வைத்துப் பிழைப்பை நடத்தும் வர்க்கமும் தான் எல்லா இடமும் கோலோச்சுகிறார்கள். வட்டங்களின் விட்டம் மாறலாம், ஆனால் எல்லாம் கருந்துளைகள் தான்.😊

  • கருத்துக்கள உறவுகள்
On 8/3/2025 at 02:37, ரசோதரன் said:

திருப்பூரில் ஏராளமான வட இந்திய மக்கள் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். சமீபத்தில் அவர்களின் பிள்ளைகள் அங்கிருக்கும் தமிழ் பாடசாலைகளில் தமிழில் கல்வி கற்பதை ஒரு செய்தியில் காட்டினார்கள்.

செய்தி அறிந்து மகிழ்ச்சி அண்ணா ஆனால் பெயர் செந்தமிழ் சீமான் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மகன்களை தனியார் பாடசாலையில் ஆங்கில மூலம் கல்வி கற்பிக்கின்றார்கள் 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, villavan said:

வட்டங்களின் விட்டம் மாறலாம், ஆனால் எல்லாம் கருந்துளைகள் தான்.😊

ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பினால் கிடைத்த தகவல்கள் மூலம் நேற்று வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையை வாசித்து இருக்கின்றீர்கள் போல, வில்லவன்..............🤣.

எங்களின் பிரபஞ்சம் இன்னொரு பெரிய பிரபஞ்சத்தின் ஒரு கருந்துளைக்குள் இருக்கின்றதோ என்று அந்தக் கட்டுரையில் சந்தேகம் எழுப்பியிருந்தார்கள்..........🤨.

நீங்கள் சொல்லியிருப்பது போலவே, பல இடங்களிலும் இது ஒரு ஆதிக்க அல்லது அதிகாரப் போட்டியின் ஒரு பக்கமாகவே வெளிப்படுகின்றது. அதிகாரத்தை அடைவதற்கு, அடைந்ததை விஸதரிப்பதற்கு இது ஒரு இலகுவான வழியாகின்றது. மனிதர்களை மிக இலகுவாக உணர்ச்சிக் கொந்தளிப்பில் தள்ள மதங்களாலும், மொழிகளாலும், சில அடையாளங்களாலும் முடிகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விளங்க நினைப்பவன் said:

செய்தி அறிந்து மகிழ்ச்சி அண்ணா ஆனால் பெயர் செந்தமிழ் சீமான் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மகன்களை தனியார் பாடசாலையில் ஆங்கில மூலம் கல்வி கற்பிக்கின்றார்கள் 😂

வசதியுள்ளவர்களில் பெரும்பாலானோர் இதையே தான் அங்கு செய்கின்றார்கள். அங்கு சில தனியார் பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை பாலர் வகுப்புகளில் சேர்ப்பதற்கே வருடா வருடம் வரிசையில் நிற்பவர்கள் ஏராளமானோர். இந்த விடயத்தில் மொழிக்கொள்கை அங்கு ஒரு பொருட்டே அல்ல....................

ஆனால் இங்கு மதிய உணவு இடைவேளையின் போதும், தேநீர் இடைவேளைகளின் போதும், சந்திப்புகளிலும், அங்கு அரசியல் மேடைகளிலும் மொழிப்பற்றும், மொழி எதிர்ப்பும் அனலாகப் பறக்கும்...............🤣.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரசோதரன் said:

ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பினால் கிடைத்த தகவல்கள் மூலம் நேற்று வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையை வாசித்து இருக்கின்றீர்கள் போல, வில்லவன்..............🤣

இன்னும் இல்லை அண்ணை. சுவாரசியமாகத் தான் இருக்கிறது. பிரபஞ்சம் விரிந்துநகரும் வேகம் மற்றும் சார்பு வேகங்களைக் கணக்கில் எடுத்தால் இது உண்மையாயிருக்கக் கூட வாய்ப்புண்டு.

அரைகுறை எடுகோள்களுடனும் அறியாமையுடனும் கூடும் கூட்டங்கள் கருந்துளைகள் தானே, உள்ளுக்குள்ளே பொது அறிவுணர்வும் மனிதாபிமானமும் காணாமற் போய் விடும்.

ஒரு எல்லை வரைக்கும் அறியும் அறிவு நம் அறியாமையை அளவிடத் தானே...😁 டன்னிங் க்ரூகர் விளைவும் இதை மேலும் விளக்கக் கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மொழியை பரிட்சயமாக்கிக் கொள்ள சில காரணிகள் உள .......... அவையாவன ........!

1) நீங்கள் அரச உத்தியோகத்தர் எனில் இன்ன மொழி எழுத வாசிக்கத் தெரிந்தால் உங்களுக்கு மேலதிக கொடுப்பனவும் பதவி உயர்வும் உண்டு என அறிவிக்க வேண்டும் . ........... ( யாவரும் விழுந்தடித்துப் படிப்பார்கள் ) .

2) கடன் பட்டு வெளிநாட்டுக்கு வரவேண்டும் . .......... (கடனைக் கட்ட தினத்துக்கு 3 / 4 வேலை செய்தலும் அதற்காக அந்தந்த நாட்டு மொழிகளில் பேசுவதற்கு (எழுத வாசிக்க அல்ல ) தேர்ச்சி தானாக வந்துவிடும் ). ........ வேற வழி .........!

3) நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்நாட்டு பெண்ணை சிநேகிதியாக்கிக் கொள்ள வேண்டும் (வயது வித்தியாசத்தை கணக்கில் எடுக்கக் கூடாது .........நீங்கள் என்ன கலியாணமா செய்யப் போறீங்கள் ......இல்லைதானே ) அவளுடன் உணவகங்கள் , சினிமாக்கள், பூங்காக்கள் என்று ஊர் சுற்ற வேண்டும் . ........ இது கொஞ்சம் செலவு கூடியதுதான் ......... ஆயினும் சில நாட்களில் அந்தந்த நாட்டு ஸ்டைலில் அந்த ஊரவனே மெச்சும் அளவு உங்களுக்கு அந்த மொழி கைவசமாகி விடும் . .........!

எச்சரிக்கை : பெட்டையோடு சுத்துற ஜோர்ல ஊர் கடனை மறந்திடக் கூடாது . ......... அது வட்டி குட்டி என்று போட்டுக்கொண்டிருக்கும் . ........! 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

ஒரு மொழியை பரிட்சயமாக்கிக் கொள்ள சில காரணிகள் உள .......... அவையாவன ........!

பெட்டையோடு சுத்துற ஜோர்ல ஊர் கடனை மறந்திடக் கூடாது . ......... அது வட்டி குட்டி என்று போட்டுக்கொண்டிருக்கும் . ........! 😂

🤣.......................

சுவி ஐயாவிடம் பலப்பல அனுபவங்களும் இருக்கின்றன போல..............🤣.

நீங்கள் சொல்லியிருக்கும் மூன்று வழிகளும் சிறப்பானவையே............

15 hours ago, villavan said:

ஒரு எல்லை வரைக்கும் அறியும் அறிவு நம் அறியாமையை அளவிடத் தானே...😁 டன்னிங் க்ரூகர் விளைவும் இதை மேலும் விளக்கக் கூடும்.

டன்னிங் க்ரூகர்.........................!

ஐடியில் தேவையில்லாத ஆணிகளை கழட்டியும், அடித்தும் கொண்டும் இருக்கின்ற எங்களைப் போன்ற சிலர் கிடைக்கின்ற எல்லாவற்றையும் வாசித்துக் கொண்டு இருக்கின்றோம் போல.........🤣.

நிறையவே வாசித்திருக்கின்றேன், வில்லவன்......... பாதிப்பும் நிறையவே இருக்கின்றது..............😜.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2025 at 17:08, ரசோதரன் said:

வழமையான அரசியல் தான் இங்கேயும். மேடையில் ஏறி வாக்குகளுக்காகவும், கைதட்டலுக்காகவும் எதைப் பேச வேண்டும் என்று தெரிந்து அதையே பேசுவது, மேடையிலிருந்து இறங்கிய பின் தங்களின் குடும்ப நலன்களையும், தங்களின் வளமான எதிர்காலத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு, மேடையில் பேசியதற்கு முற்றிலும் எதிரான செயல்களில் ஈடுபடுவது என்பது ஜனநாயக அரசியலின் தவிர்க்க முடியாத ஒரு பக்கம். சர்வாதிகாரிகளுக்கு இந்த இரட்டை நிலைப்பாடுகள் தேவையில்லை. 

ஊருக்கடி பெண்ணே

உனக்கல்லடி கண்ணே.

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2025 at 17:08, ரசோதரன் said:

தமிழையே சொல்லிக் கொடுக்காத பாடசாலைகளில் இன்னொரு மொழியை சொல்லிக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. நான் போன எந்தப் பாடசாலையிலும் ஆங்கிலத்தை மருந்துக்கு கூட படிப்பிக்கவில்லை. என்னுடைய பாடசாலை நாட்களில் ஹாட்லிக் கல்லூரியில் படித்தவர்கள் சிலர் இதை ஏற்றுக்கொள்ள மறுக்கக்கூடும். ஆனால், பின்நோக்கிப் போய் நிதானமாகப் பார்த்தால், அவர்களுக்கும் உண்மை தெரியவரக்கூடும். அன்று ஆங்கில மொழியில் பரிச்சயம் வருவதற்கு வளரும் சூழலில் ஏதாவது சிறிய அளவில் தன்னும் ஒரு ஆங்கில புழக்கம் இருந்திருக்க வேண்டும் அல்லது தனியார் கல்வி நிலையங்களுக்கு போயிருக்க வேண்டும். இவை அமையாவிடத்து ஆங்கிலமும் அமையாது.

ரசோதரன் எனது நீண்டகால கேள்வி.

அந்தக் காலத்தில் கணிசமான சிங்களவர் காட்லிக் கல்லூரியில் படித்ததாக சொல்கிறார்கள்.

வடக்கில் எத்தனையோ பெயர்போன பாடசாலைகள் ஆங்கிலப் பாடசாலைகள் இருந்தும்

எப்படி ஏன் காட்லிக் கல்லூரியைத் தெரிவு செய்தார்கள்?

அவர்களது குடும்பங்களும் அங்கேயே இருந்தார்களா?

10 hours ago, suvy said:

) நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்நாட்டு பெண்ணை சிநேகிதியாக்கிக் கொள்ள வேண்டும் (வயது வித்தியாசத்தை கணக்கில் எடுக்கக் கூடாது .........நீங்கள் என்ன கலியாணமா செய்யப் போறீங்கள் ......இல்லைதானே ) அவளுடன் உணவகங்கள் , சினிமாக்கள், பூங்காக்கள் என்று ஊர் சுற்ற வேண்டும் . ........ இது கொஞ்சம் செலவு கூடியதுதான் ......... ஆயினும் சில நாட்களில் அந்தந்த நாட்டு ஸ்டைலில் அந்த ஊரவனே மெச்சும் அளவு உங்களுக்கு அந்த மொழி கைவசமாகி விடும் . .........!

ஆகா தலைவா நீங்க எங்கேயோ போயிட்டீங்க.

திருமணம் ஆனவர்கள் என்ன செய்யலாம் தலைவா?

நான் சாப்பாட்டுக் கடைகளில் வேலை செய்யவில்லையெ என்று இப்போதும் ஒரு குறையாகவே எண்ணுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ரசோதரன் எனது நீண்டகால கேள்வி.

அந்தக் காலத்தில் கணிசமான சிங்களவர் காட்லிக் கல்லூரியில் படித்ததாக சொல்கிறார்கள்.

வடக்கில் எத்தனையோ பெயர்போன பாடசாலைகள் ஆங்கிலப் பாடசாலைகள் இருந்தும்

எப்படி ஏன் காட்லிக் கல்லூரியைத் தெரிவு செய்தார்கள்?

அவர்களது குடும்பங்களும் அங்கேயே இருந்தார்களா?

கே.பி. ரத்நாயக்க போன்றோர் படித்திருக்கின்றார்கள், அண்ணா. இவை யாவும் ஆங்கில மொழிக் கல்வி இருந்த காலத்திலேயே நடந்தவை என்று நினைக்கின்றேன்.

ஹாட்லியில் மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதி இருக்கின்றது. அங்கே தனியாகவே இவர்கள் தங்கியிருக்கக்கூடும்.

இந்தப் பாடசாலை ஒரு காலத்தில் கல்விக்கு மட்டும் இல்லாமல், கடுமையான ஒழுக்க விதிகளை கொண்டதாகவும் இருந்தது. சில மிகப் பழைய அதிபர்களின் பெயர்களை உச்சரிக்கும் போதே ஒரு மரியாதையுடன் கூடிய பயம் தெரியும், உதாரணம்: அதிபர் பூரணம்பிள்ளை. இதன் காரணமாகவே இங்கு வந்திருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். அன்று யாழ் நகரில் இருந்த எந்தப் பாடசாலையை விடவும் இங்கு கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்திருக்கக்கூடும், அதை பல பெற்றோர்கள் விரும்பியும் இருக்கக்கூடும்.

சுயபாஷா கல்விக் கொள்கை வந்த பின், இப்படி வந்தவர்கள் மிகக்குறைவு அல்லது முற்றாகவே இல்லை என்று நினைக்கின்றேன்.

1970ம் ஆண்டுகளின் பிற்பகுதியிலிருந்து தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல்களாக வர ஆரம்பித்த பின் எந்தப் பாடசாலையுமே தப்பவில்லை. விதிவிலக்காக ஓரிரு ஆசிரியர்கள் மட்டுமே பாடசாலைகளிலும் கவனமெடுத்து படிப்பித்தார்கள். இந்தக் காலத்தில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து படிக்க வந்தவர்கள் தனியார் கல்வி நிலையங்களில், அதிலும் குறிப்பாக சில ஆசிரியர்களிடம் , படிக்கவே வந்தார்கள். பாடசாலைகள் அதே பழைய பெயர்களுடன் ஏனோ தானோ என்று இயங்கிக் கொண்டிருந்தன.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

ஒரு மொழியை பரிட்சயமாக்கிக் கொள்ள சில காரணிகள் உள .......... அவையாவன ........!

1) நீங்கள் அரச உத்தியோகத்தர் எனில் இன்ன மொழி எழுத வாசிக்கத் தெரிந்தால் உங்களுக்கு மேலதிக கொடுப்பனவும் பதவி உயர்வும் உண்டு என அறிவிக்க வேண்டும் . ........... ( யாவரும் விழுந்தடித்துப் படிப்பார்கள் ) .

2) கடன் பட்டு வெளிநாட்டுக்கு வரவேண்டும் . .......... (கடனைக் கட்ட தினத்துக்கு 3 / 4 வேலை செய்தலும் அதற்காக அந்தந்த நாட்டு மொழிகளில் பேசுவதற்கு (எழுத வாசிக்க அல்ல ) தேர்ச்சி தானாக வந்துவிடும் ). ........ வேற வழி .........!

3) நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்நாட்டு பெண்ணை சிநேகிதியாக்கிக் கொள்ள வேண்டும் (வயது வித்தியாசத்தை கணக்கில் எடுக்கக் கூடாது .........நீங்கள் என்ன கலியாணமா செய்யப் போறீங்கள் ......இல்லைதானே ) அவளுடன் உணவகங்கள் , சினிமாக்கள், பூங்காக்கள் என்று ஊர் சுற்ற வேண்டும் . ........ இது கொஞ்சம் செலவு கூடியதுதான் ......... ஆயினும் சில நாட்களில் அந்தந்த நாட்டு ஸ்டைலில் அந்த ஊரவனே மெச்சும் அளவு உங்களுக்கு அந்த மொழி கைவசமாகி விடும் . .........!

எச்சரிக்கை : பெட்டையோடு சுத்துற ஜோர்ல ஊர் கடனை மறந்திடக் கூடாது . ......... அது வட்டி குட்டி என்று போட்டுக்கொண்டிருக்கும் . ........! 😂

இன்னுமொரு வழி இருக்கிறது. Agents of Shield என்று ஒரு TV தொடர். பார்த்திருப்பீர்களோ தெரியாது. அதிலே ஒரு பெண் பாத்திரம். அவா சைனீஷ், நன்றாக ஆங்கிலம் கதைப்பா. ஒருமுறை, இன்னொரு பெண் அவவின் ஆங்கில உச்சரிப்பைச் சிலாகித்துக் கதைப்பா. அதற்கு அந்த சைனீஷ் பெண் சொன்ன விடயம்: தான் ஆங்கிலத்தை தெளிவாக உச்சரிக்கற்றுக்கொண்டது karaoke barல் என்று. அவ ஒவ்வொரு கிழமையும் பாரிற்குப் போய் ஆங்கிலப் பாடல்களைப் பாடிப்பாடி தனது உச்சரிப்பை மெருகேற்றிக் கொண்டதாக.

அது ஒரு tv தொடர் என்றாலும் அவா சொன்ன விடயம் மிக முக்கியமானது என்று நினைக்கிறேன். மொழியை அறிவது வேறு. அதைச் சரியாக உபயோகிப்பது வேறு. அதிலும் உச்சரிப்பு மிக மிக முக்கியம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, செம்பாட்டான் said:

நான் எழுதியது பகிடியாகத் தோன்றினாலும், சாதாரணமாக மிகவும் உண்மையான விடயங்கள் செம்பாட்டான் . ........ ! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.