Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம் ; தேசத் திரட்சியே வேண்டும்

01__3_.jpg

பிரதமர் ஹரினி மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு வருகை தந்துள்ளார்.50 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கும்பாபிஷேக வைபவத்தில் அவர் விருந்தினராக வரவேற்கப்பட்டுள்ளார். அங்கே தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரையும் காண முடியவில்லை.

மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குத் தமிழ் மக்களின் போராட்டத்தில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. 1968 ஜூன் மாதம் சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் போராடி வெற்றி பெற்ற கோவில் அது. அந்தப் போராட்டத்திற்கு கலாநிதி சண்முகதாசன் தலைமையிலான சீன சார்பு கொம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது;வெற்றி பெற்றது. ஆனால் இங்குள்ள முரண் என்னவென்றால் அந்தப் போராட்டத்தில் கொம்யூனிஸ்ட் கட்சி போராடும் தரப்பின் பக்கம் நின்று தலைமை தாங்கியது.தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தராகிய சுந்தரலிங்கம் ஒடுக்கும் தரப்பின் பக்கம் நின்றார். குறிப்பிட்ட சில சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது என்ற தரப்பின் பக்கம் சுந்தரலிங்கம் நின்றார்.

அவர் அடங்காத் தமிழன் என்று அழைக்கப்பட்டவர். எனினும் சமூக விடுதலை இல்லாத தேசிய விடுதலை என்பது விடுதலையே அல்ல என்ற அடிப்படை விளக்கம் அவரிடம் இருந்திருக்கவில்லை. ஆனால் இது நடந்து கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளின் பின் 1976ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபொழுது சமூக விடுதலை இல்லாமல் தேசிய விடுதலை இல்லை என்ற கொள்கை விளக்கம் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம்  உருவாகியிருந்தது.எனினும் இப்பொழுதும்கூட தமிழ்த்தேசிய முகமூடி அணிந்திருக்கும் பலரிடம் இந்த விளக்கம் இல்லை. அல்லது அது அவர்களுடைய வாழ்க்கை முறையாக இல்லை.

சீன சார்புக் கொமியுனிஸ்ராகிய சண்முகதாசன்(சண்) தமிழர்களுடைய விடுதலைப் போராட்டம் தொடர்பில் விமர்சனங்களைக் கொண்டிருந்தாலும் தெளிவான ஆதரவு நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார். கட்சியின் இளையோர் அணிக்குத் தலைவராக இருந்த ரோகன விஜயவீர 1964இல் கட்சியிலிருந்து பிரிந்து 1965இல் ஜேவிபியை உருவாக்கினார். “ஜேவிபி ஒர் அரைப்பாசிச, இனவாத அமைப்பு” என்று  சண்குகதாசன் குற்றம் சாட்டினார்.ஜேவிபியின் முதலாவது  கொழும்புக் கூட்டத்திலேயே அதன் வகுப்புவாதத்தை அம்பலப்படுத்தி சண்முகதாசனின் கட்சியின் தோழர்கள் துண்டுப் பிரசுரம் விநியோகித்தார்கள்.பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டபோது சண் பின்வருமாறு கூறினார்…“பழைய இடதுசாரிக்  கட்சிகள் இந்திய விஸ்தரிப்பு வாதத்தை எதிர்க்கத் தவறியதால் வகுப்புவாத, அரைப் பாசிச ஜேவிபி சிங்கள இனத்தின் இரட்சகராகத் தோன்றி இந்திய விஸ்தரிப்பு வாதத்தை எதிர்த்தது. அரசாங்க எதிர்ப்பு, தமிழர் எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு உணர்வுகளை ஜேவிபி நன்கு பயன்படுத்திக் கொண்டது” இத்தகவல்களை சண் எழுதிய “ஒரு கம்யுனிச போராளியின் அரசியல் நினைவுகள்” என்ற நூலின் 332ஆம் பக்கத்தில் காணலாம்.

ரோகண விஜயவீர உருவாக்கிய ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இப்பொழுது ஆட்சி செய்கின்றது.1965இல் ஜேவிபி உருவாக்கப்பட்டு மூன்று ஆண்டுகளின் பின் மாவிட்டபுரம் ஆலய பிரவேசப் போராட்டம் இடம்பெற்றது.இப்படிப்பட்டதோர் பின்னணியில், பிரதமர்  ஹரிணி மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு வந்தது. தற்செயலானதா ?அல்லது திட்டமிடப்பட்டதா?

பிரதமர் ஹரிணி அவருடைய வடக்கு விஜயத்தின் போது அவர் எங்கெங்கே போகிறார் என்று பார்த்தால் தமிழ்த்தேசிய நிலைப்பாடு தொடர்பாக விமர்சனங்களை கொண்ட அல்லது தமிழ்த்தேசிய நிலைப்பாடு தொடர்பில் முழு உடன்பாடு இல்லாத இடங்கள், நபர்களைத் தேடிச் அவர் செல்வது தெரிகிறது.

ஹரிணி மட்டுமல்ல அரசாங்கத்தின் பிரதானிகள் அடிக்கடி வடக்குக்கு வருகிறார்கள். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சபைகளை கைப்பற்றும் நோக்கத்தோடு தீயாக வேலை செய்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் அவர்களுக்கு கொடுத்த வெற்றி அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.அந்த வெற்றியை அவர்கள் வெளியரங்கில் குறிப்பாக டெல்லியிலும் ஐநாவிலும் ஒரு மக்கள் ஆணையாக காட்டி பேசுகிறார்கள். இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழ் மக்கள் தங்களுக்கு ஆணை வழங்கியிருப்பதாக அதை வியாக்கியானப்படுத்துகிறார்கள்.கடந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ். தேர்தல் தொகுதியில் கிளிநொச்சியில் மட்டும் தமிழரசுக் கட்சிக்கு ஓர் ஆசனம் கிடைத்தது.ஆனால் யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனம்கூட கிடைக்கவில்லை.தேசிய மக்கள் சக்திக்கு மொத்தம் மூன்று ஆசனங்கள் கிடைத்தன. அந்த வெற்றியை அடுத்த கட்டத்திற்கு விஸ்தரிப்பதன் மூலம் தமிழ் மக்களின் ஆணை தமக்கே அதிகம் உண்டு என்று அவர்கள் நிரூபிக்க முயற்சிக்கிறார்கள்.கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பின் தமிழ் தரப்பு எனப்படுவது தமிழ் தேசிய தரப்பு மட்டுமல்ல என்ற ஒரு வாதத்தை அவர்கள் முன்வைத்து வருகிறார்கள். அந்த வாதத்தை மேலும் பலப்படுத்துவதற்காக அவர்களுக்கு உள்ளூராட்சி சபைகளில் வெற்றி தேவைப்படுகிறது.

அந்த வெற்றியை நோக்கி அவர்கள் தீயாக வேலை செய்கிறார்கள். 34 ஆண்டுகளின் பின் பலாலி வீதியைத்  திறந்ததும் அந்த நோக்கத்தோடுதான்.ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 15 ஆண்டுகளின் பின்னர் தான் ஒரு பிரதான வீதியை  அதுவும் யாழ்குடா நாட்டின் நெஞ்சை ஊடறுத்துச் செல்லும் ஒரு வீதியைத்  திறக்க முடிகிறது என்றால் யுத்தத்தில் அவர்கள் பெற்ற வெற்றியின் பொருள் என்ன? போருக்கு பின்னரான அரசியல் என்பதன் பொருள் என்ன? நிலை மாற்றம் என்று ஐநா கூறுவதன் பொருள் என்ன? 15 ஆண்டுகளின் பின்னரும் கூட அந்தப் பாதையை முழுமையாக திறக்க முடியவில்லை என்பதைதான் அந்தப் பாதை வழியே நிறுத்தப்பட்டிருக்கும் அறிவிப்பு பலகை காட்டுகின்றது.அந்தப் பலகையில் பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

Untitled-84-1.jpg


காலை 6:00 மணியிலிருந்து பிற்பகல் 6:00 மணி வரையிலும் தான் அந்த பாதையைப் பயன்படுத்தலாம்.பயணிகள் பேருந்துகள் தவிர ஏனைய கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. வாகனங்களை இடையில் நிறுத்தவோ திருப்பவோ கூடாது. வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில்தான் பயணம் செய்ய வேண்டும். வாகன சாரதிகள் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் கைவசம் வைத்திருக்க வேண்டும். அந்த வழியால் யாரும் நடந்து போக முடியாது. அந்த வழியில் இரு புறங்களிலும் உள்ள உயர் பாதுகாப்பு வலையத்தை யாரும் படம் எடுக்க முடியாது. இவைதான் விதிகள்.இந்த விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவித்தல் கூறுகின்றது.

எந்த சட்டத்தின் அடிப்படையில் அந்த அறிவித்தல் பலகை அங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்று சுமந்திரன் கேள்வி கேட்டிருக்கிறார்.

அந்த அறிவிப்பு ஏறக்குறைய போர்க்காலத்தை நினைவு படுத்துவது. ஒரு போர்க்காலத்தில் அப்படிப்பட்ட பாதையால் போகும்போது அவ்வாறான நிபந்தனைகள் விதிக்கப்படுவதுண்டு.ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த15 ஆண்டுகளின் பின்னரும் அவ்வாறான நிபந்தனைகளை விதிப்பதன் பொருள் என்ன? நாடு யாருக்குப் பயப்படுகின்றது? உயர் பாதுகாப்பு வலையங்கள் இல்லாத பாதுகாப்பான ஒரு நாட்டை ஏன் சிங்கள பௌத்த அரச கட்டமைப்பால் கட்டியெழுப்ப முடியவில்லை? சிங்கள பௌத்த அரச சிந்தனை அல்லது மகாவம்சம் மனோநிலை எனப்படுவது எப்பொழுதும் தற்காப்பு உணர்வோடு எதிரிக்கு எதிரான அச்சத்தோடு முள்ளுக் கம்பிகளுக்குள் இருப்பதுதானா?

தேர்தல் காலத்தில் பாதை திறக்கப்பட்டமை தேர்தல் நோக்கங்களைக் கொண்டதா என்று வழக்கறிஞர் கே.எஸ்.ரட்னவேல் கேள்வி எழுப்பி உள்ளார். கொழும்பில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் அவர் அவ்வாறு கேட்டிருக்கிறார். தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மதிப்புக்குரிய ஒரு சட்டச் செயற்பாட்டாளர் அவர்.

ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல்களை முன்னிட்டு தமிழ்ப் பகுதிகளில் காணப்பட்ட சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதையும் வீதித் தடைகள் அகற்றப்பட்டதையும் குறிப்பாக பலாலி பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தூரமான ஒரு பகுதி விடுவிக்கப்பட்டதையும் இங்கு நினைவூட்ட வேண்டும்.

ஆனால் அவ்வாறு திறக்கப்பட்ட பெரும்பாலான வீதித் தடைகளும் சோதனைச் சாவடிகளும் பின்னர் மீண்டும் தேர்தல்கள் முடிந்ததும் முளைத்து விட்டன. குறிப்பாக ஆனையிறவு மண்டை தீவின் நுழைவாயில்,புங்குடு தீவின் நுழைவாயில், வன்னியில் உள்ள சோதனைச் சாவடிகள் போன்ற பல சோதனைச் சாவடிகள் அல்லது வீதித் தடைகள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன.சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐநாவின் வதிவிடப் பிரதிநிதியிடம் இது தொடர்பாக சிவில் சமூகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

articles_fiKb6dY0w8bg6DsogG01.webp

தேர்தல் நோக்கங்களுக்காக அரசாங்கம் பாதைகளை திறக்கின்றது. தேர்தல் தேவைகளுக்காக அரச வளங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் வெற்றியை இலக்காக வைத்து அதாவது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஆணையை மேலும் உறுதிப்படுத்தி பலப்படுத்த வேண்டும் என்ற இலக்கோடு தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் வடக்கு கிழக்கில் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்கள்.

“வெற்றி நமதே ஊர் எமதே” என்பது தேசிய மக்கள் சக்தியின் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான தமிழ்க் கோஷமாகக காணப்படுகிறது. உள்ளூராட்சி மன்றத்  தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு அது எதிர்பார்க்கும் வெற்றிகள் கிடைக்குமாக இருந்தால் தமிழ் மக்கள் தங்களை ஒரு தேசமாகக் கருதவில்லை;தங்களை ஒரு தேசிய இனமாகக்  கருதவில்லை என்று அரசாங்கம் வெளி உலகத்துக்குக் கூறப்போகிறது. தமிழ் மக்கள் இன அழிப்புக்கு எதிராக நீதியைக் கேட்கவில்லை; ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் ஒரு தீர்வைக் கேட்கவில்லை என்றும் கூறப்போகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த்  தேசியக்  கட்சிகள் மீது கொண்ட வெறுப்பினால் தமிழ் மக்கள் ‘தெள்ளும் வேண்டாம் நாயும் வேண்டாம்’ என்று தீர்மானித்து  வாக்களித்தார்கள்.ஆனால் தேசமும் வேண்டாம் என்று தீர்மானித்து வாக்களிக்கவில்லை என்பதை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நிரூபிக்க வேண்டும். 

 

ஆதவன் இணையத் தளத்தில் 13.04.2025 பிரசுரிக்கப்பட்ட கட்டுரையின் திருத்தப்பட்ட வடிவம்  

https://www.nillanthan.com/7320/?fbclid=IwY2xjawJrqvNleHRuA2FlbQIxMQABHlRwaQyhqEnRbW5xpLLVXHARk8luHBz247bVlkUAHIz2oVQnX5m8_htqCxws_aem_DEPeUDz19oSAcTSEjw5kTg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nunavilan said:

ஆனால் அவ்வாறு திறக்கப்பட்ட பெரும்பாலான வீதித் தடைகளும் சோதனைச் சாவடிகளும் பின்னர் மீண்டும் தேர்தல்கள் முடிந்ததும் முளைத்து விட்டன. குறிப்பாக ஆனையிறவு மண்டை தீவின் நுழைவாயில்,புங்குடு தீவின் நுழைவாயில், வன்னியில் உள்ள சோதனைச் சாவடிகள் போன்ற பல சோதனைச் சாவடிகள் அல்லது வீதித் தடைகள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன.சில மாதங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த ஐநாவின் வதிவிடப் பிரதிநிதியிடம் இது தொடர்பாக சிவில் சமூகங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

சிங்கள இனவாதத்தின் அடிமடியில் கனம் அதிகம்.இன்றல்ல நாளை அல்ல என்றோ ஒரு நாள் இவர்களை எதிர்த்து நிற்க முடியாது என்ற அச்சம் சிங்களத்திற்கு ஒவ்வொரு நிமிடமும் இருக்கும். ஈழத்தமிழினத்தின் வலிமையை பார்த்து நன்றாகவே பயப்பிடுகின்றார்கள்.

அதெல்லாவற்றையும் விட..... ஈழத்தமிழருக்கு தெரியாத உண்மை ஒன்று சிங்கள உள்ளக இராஜதந்திரிகளுக்கு தெரிந்திருக்கலாம். யார் கண்டார்?

  • கருத்துக்கள உறவுகள்
On 16/4/2025 at 07:19, nunavilan said:

கலாநிதி சண்முகதாசன் தலைமையிலான சீன சார்பு கொம்யூனிஸ்ட் கட்சி தலைமை தாங்கியது;வெற்றி பெற்றது.

தமிழ் டோழரின் தலமையின் கீழ் செயல்பட விருப்பமில்லாமல் சிங்கள‌ டோழர் தனி கட்சி உருவாக்கியிருப்பார் ...

On 16/4/2025 at 07:19, nunavilan said:

காலை 6:00 மணியிலிருந்து பிற்பகல் 6:00 மணி வரையிலும் தான் அந்த பாதையைப் பயன்படுத்தலாம்.பயணிகள் பேருந்துகள் தவிர ஏனைய கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. வாகனங்களை இடையில் நிறுத்தவோ திருப்பவோ கூடாது. வாகனங்கள் குறிப்பிட்ட வேகத்தில்தான் பயணம் செய்ய வேண்டும். வாகன சாரதிகள் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் கைவசம் வைத்திருக்க வேண்டும். அந்த வழியால் யாரும் நடந்து போக முடியாது.

ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் செல்லும் பொழுது இல்லாத பாதுகாப்பு இராணுவ முகாமுக்கு இருக்கு ....அதாவது இன்றுமொர் தமிழ் பயங்கரவாத தாக்குதல் நடை பெறலாம் என சிங்கள ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர் .....அடுத்த பொது தேர்தலுக்கு முன் இந்த அறிப்பு பலகை அகற்றப்படுமா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.