Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

trump.jpg?resize=720%2C375&ssl=1

ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா புதிய திட்டம்!

சீனா, ரஷ்யாவை எதிர்கொள்ள ‘கோல்டன் டோம்’ எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்க ஜனதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

சீனா மற்றும் ரஷ்யாவால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்கும் நோக்கில், ‘கோல்டன் டோம்’ எனப்படும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் அமைக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

இந்த பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு 175 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1432614

  • கருத்துக்கள உறவுகள்

"கோல்டன் டோம்"- வான் தாக்குதல்களிலிருந்து அமெரிக்காவை பாதுகாக்க புதிய திட்டம்

டொனால்ட் டிரம்ப், கோல்டன் டோம் , அமெரிக்க வான் பாதுகாப்பு, இரும்பு டோம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பெர்ன்ட் டெபஸ்மேன் ஜூனியர்

  • பதவி, பிபிசி செய்திகள்

  • 21 மே 2025

எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் "கோல்டன் டோம்" ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான வடிவமைப்பை அமெரிக்கா தேர்வு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். மேலும், தமது பதவிக்காலம் முடியும் போது அந்த அமைப்பு செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

ஜனவரியில், டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்ற சில நாட்களுக்குப் பிறகு, அவர் ஒரு புதிய வான் பாதுகாப்பு அமைப்புக்கான தனது திட்டங்களை அறிவித்தார்.

பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் போன்ற "அதி நவீன" வான்வழி அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாக்க இந்த அமைப்பு உருவாக்கப்படுகின்றது.

ஆரம்ப கட்டமாக, இந்த திட்டத்துக்கு 25 பில்லியன் டாலர் (18.7 பில்லியன் யூரோ) புதிய பட்ஜெட் மசோதாவில் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் எதிர்காலத்தில், இதற்கான மொத்தச் செலவு இதைவிட கணிசமாக அதிகரிக்கும் என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது.

தற்போது உள்ள பாதுகாப்பு அமைப்புகள், அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எதிரிகளிடம் உள்ள அதிநவீன ஆயுதங்களை எதிர்க்கும் அளவுக்கு மேம்பட்டதாக இல்லை என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

விண்வெளிப் படையின் ஜெனரல் மைக்கேல் குட்லின் இந்த திட்டத்தை மேற்பார்வையிடுவார் என்றும் அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஜெனரல் குட்லின் தற்போது விண்வெளிப் படையில் விண்வெளி நடவடிக்கைகளுக்கான துணைத் தலைவராக உள்ளார்.

டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற ஏழு நாட்களுக்குள், வான்வழித் தாக்குதல்களைத் தடுக்கவும், அவற்றை எதிர்கொள்ளவும் உதவும் ஒரு அமைப்புக்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.

இது அமெரிக்கா எதிர்கொள்ளும் "மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்களில் ஒன்று" என வெள்ளை மாளிகை தெரிவித்தது.

செவ்வாயன்று அதிபர் அலுவலகத்தில் பேசிய டிரம்ப், இந்த அமைப்பு நிலம், கடல் மற்றும் விண்வெளி முழுவதும் "அதி நவீன" தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும்.

இதில் விண்வெளி அடிப்படையிலான சென்சார்கள் மற்றும் தடுப்புக் கருவிகளும் அடங்கும் என்றார்.

மேலும் இந்த அமைப்பில் சேர கனடா விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில்,அப்போதைய கனட பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேர் வாஷிங்டனுக்கு பயணம் செய்தபோது, இந்த 'டோம்' திட்டத்தில் பங்கேற்க கனடா ஆர்வமாக இருப்பதாக கூறினார்.

அது "அர்த்தமுள்ளதாக" இருப்பதாகவும், "தேசிய நலனுக்காக" இருக்கும் என்றும் கூறிய அவர்,

"பிராந்தியத்தில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பதை கனடா அறிந்திருக்க வேண்டும்" என்றும், ஆர்க்டிக் பகுதிகளில் வரவிருக்கும் அச்சுறுத்தல்களை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்த அமைப்பு "உலகின் மறுபக்கத்திலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளையோ அல்லது விண்வெளியில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளையோ இடைமறித்து தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும்" என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

டொனால்ட் டிரம்ப், கோல்டன் டோம் , அமெரிக்க வான் பாதுகாப்பு, இரும்பு டோம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த அமைப்பு 2011 முதல் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளை தடுக்கும் இஸ்ரேலின் இரும்பு டோம் பாதுகாப்பு அமைப்பால் கவரப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், கோல்டன் டோம் அதை விட பல மடங்கு பெரியது.

ஒலியின் வேகத்தை கடந்து இயங்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் மற்றும் விண்வெளியிலிருந்து ஏவுகணை குண்டுகளை வீசக்கூடிய சுற்றுப்பாதை குண்டுவீச்சு அமைப்புகள் (ஃபோப்ஸ் என அழைக்கப்படுவது) போன்ற பரவலான அச்சுறுத்தல்களை எதிர்க்கும் வகையில் இது வடிவமைக்கப்படுகிறது.

"அவை அனைத்தும் வான்வெளியில் இருந்து அகற்றப்படும்," என்று கூறிய டிரம்ப், அதன் "வெற்றி விகிதம் 100% க்கு மிக அருகில் உள்ளது." என்று தெரிவித்தார்.

டொனால்ட் டிரம்ப், கோல்டன் டோம் , அமெரிக்க வான் பாதுகாப்பு, இரும்பு டோம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன், அல்லது அவை வானில் பறக்கும் தருணத்தில் என பல்வேறு கட்டங்களில் அவற்றைத் தடுக்கும் திறனை அமெரிக்காவுக்கு அளிப்பதே, கோல்டன் டோம் அமைப்பின் நோக்கம் என அமெரிக்க அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர்.

இந்த அமைப்பின் பல்வேறு அம்சங்கள் அனைத்தும் ஒரே மைய கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாயன்று, இந்தத் திட்டத்திற்கு ஆரம்பகட்ட முதலீடாக 25 பில்லியன் டாலர் தேவைப்படும் என்றும், மொத்தமாக 175 பில்லியன் டாலர் வரை செலவாகும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

ஆரம்பகட்ட முதலீடான 25 பில்லியன் டாலர் என்பது, வரிகளுக்கான அவரது 'ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் மசோதாவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த மசோதா இன்னும் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை.

ஆனால், அமெரிக்க காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகம் (Congressional Budget Office) தெரிவித்துள்ளபடி, அந்த அமைப்பில் விண்வெளி சார்ந்த பகுதிகளுக்கு மட்டும் 20 ஆண்டுகளில் அரசாங்கத்துக்கு 542 பில்லியன் டாலர் வரை செலவாகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் சீனா உருவாக்கிய புதிய ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது உள்ள பாதுகாப்பு அமைப்புகள் மேம்படவில்லை என்று பென்டகன்(அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை) அதிகாரிகள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர்.

"உண்மையில், தற்போது முழுமையான அமைப்பு எதுவும் இல்லை," என்று டிரம்ப் செவ்வாயன்று அதிபர் அலுவலகத்தில் கூறினார்.

"சில வகையான ஏவுகணைகள், சில பாதுகாப்பு அமைப்புகள் மட்டும் தான் உள்ளன. ஆனால் ஒருங்கிணைந்த முழுமையான அமைப்பு எதுவும் இல்லை... இதுபோன்ற திட்டம் இதுவரை எப்போதும் இருந்ததில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க பாதுகாப்பு உளவுத்துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஏவுகணை அச்சுறுத்தல்கள் எதிர்காலத்தில் "அளவிலும் , நுட்பத்திலும் அதிகரிக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவும் ரஷ்யாவும், அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள "இடைவெளிகளை பயன்படுத்த" புதிய ஏவுகணை அமைப்புகளை தீவிரமாக வடிவமைத்து வருகின்றன என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyrrd3j25eo

  • கருத்துக்கள உறவுகள்

கோல்டன் டோம்: ஆகாயத்தில் இருந்து வரும் ஏவுகணைகளை கூட முறியடிக்கும் கனவு சாத்தியமா?

அமெரிக்கா, கோல்டன் டோம், டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோல்டன் டோம் திட்டத்தை அறிவித்தார் டிரம்ப்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பெர்ன்ட் டெபஸ்மேன் ஜேஆர்

  • பதவி, பிபிசி நியூஸ்

  • இருந்துவெள்ளை மாளிகை

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சமீபத்தில் அமெரிக்காவுக்கு கோல்டன் டோம் என்கிற பாதுகாப்பு கவசத்தை உருவாக்கப் போவதாக சமீபத்தில் டிரம்ப் அறிவித்திருந்தார்.

அமெரிக்காவுக்கு மேல் ஒரு சிறிய அணுகுண்டு வெடித்தால் கூட அது பேரழிவான முடிவுகளைக் கொண்ட ஒரு மின்காந்த துடிப்பை (electromagnetic pulse) உருவாக்கும். விமானங்கள் வானத்தில் இருந்து கீழே விழும். கையில் இருக்கும் மின்சாதனங்கள் தொடங்கி மருத்துவ உபகரணங்கள், நீரியல் அமைப்புகள் என அனைத்தும் பயனற்றதாகிப் போகும்.

அப்படி ஒன்று நிகழ்ந்தால் அமெரிக்கா 1,000 ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் என்கிறார் வடக்கு கரோலினா மாகாணத்தின் மான்ட்ரீட் கல்லூரியில் உள்ள எழுத்தாளரும் ஆயுத ஆராய்ச்சியாளருமான வில்லியம் ஃபோர்ட்ஸ்சென்.

"நாம் 100 ஆண்டுகள் பின்னோக்கி செல்ல மாட்டோம். நாம் அனைத்தையும் இழந்து விடுவோம், அதனை எவ்வாறு மறுகட்டுமானம் செய்வது என நமக்குத் தெரியாது. இது நாம் 1,000 ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வதற்கு சமமாகும். நாம் அனைத்தையும் ஆரம்பத்தில் இருந்து தொடங்க நேரிடும்" என்றார் அவர்.

இந்த அனுமானமான, அதே நேரம் சாத்தியமான அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த தலைமுறை ஏவுகணை பாதுகாப்பு கவசமான "கோல்டன் டோம்" என்பதை முன்னிறுத்தியுள்ளார்.

அமெரிக்கா, கோல்டன் டோம், டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்கா கோல்டன் டோம் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

இத்தகைய கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் எனப் பல வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிற நிலையில், அதற்கான அதிக செலவினம் மற்றும் தளவாட சிக்கல்கள் ஆகியவை டிரம்பின் திட்டத்திற்குச் சவாலாக இருக்கும்.

"அமெரிக்காவுக்கான அயர்ன் டோம்" என முதலில் பெயரிடப்பட்டிருந்த இந்தத் திட்டம் தொடர்பான அரசாணை, அடுத்த தலைமுறை ஆயுதங்களின் அச்சுறுத்தல் என்பது அமெரிக்காவிற்கு மிகவும் தீவிரமான, சிக்கல் நிறைந்த, காலப்போக்கில் பேரழிவை உருவாக்கக் கூடியதாக மாறியுள்ளது என விவரித்துள்ளது.

வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்ட மூலோபாய மற்றும் சர்வதேச கல்வி மையத்தைச் சேர்ந்த ஏவுகணை பாதுகாப்பு வல்லுநரான பாட்ரிக்ஜா பாசில்சிக், ஏற்கெனவே உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகள் வட கொரியா போன்ற நாடுகள் பயன்படுத்தும் கண்டங்களுக்கு இடையேயான பாலிஸ்டிக் ஏவுகணைகளை (ஐசிபிஎம்) எதிர்கொள்ள தயாரிக்கப்பட்டவை என்று பிபிசியிடம் தெரிவித்தார்.

சக்தி வாய்ந்த நாடுகளான ரஷ்யாவும், சீனாவும் கடல் கடந்துள்ள எதிரிகளையும் தாக்கும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் அதிக முதலீடு செய்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ள அச்சுறுத்தல்களில் ஹைபர்சோனிக் ஆயுதங்கள் ஒலியின் வேகத்தை விடவும் வேகமாக சென்று தாக்குதல் நடத்தும திறன் படைத்தது. இவை அளவில் சிறிதாக இருந்தாலும் பெரும் சேதத்தை விளைவிக்கக் கூடியவை.

"நம்முடைய எதிரிகள் நீண்ட தூரம் தாக்கும் திறன்களில் முதலீடு செய்து வருகின்றனர். அவை நாம் இத்தனை வருடங்களாக எதிர்கொண்டு வரும் நம்முடைய சாதாரண ஏவுகணைகள் போன்றவை அல்ல" என்றார் பாசில்சிக்.

கோல்டன் டோம் எவ்வாறு இருக்கும்?

அமெரிக்கா, கோல்டன் டோம், டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோல்டன் டோம்

தற்போது ஆரம்ப கட்டத்தில் இருக்கும் கோல்டன் டோம் எவ்வாறு இருக்கும் என வெள்ளை மாளிகை மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சில தகவல்களை வழங்கியுள்ளனர்.

கடந்த மே 20, டிரம்பைத் தொடர்ந்து பேசிய பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் இந்த அமைப்பு "விண்வெளி சார்ந்த சென்சார்கள் மற்றும் இண்டர்செப்டர்கள் போன்றவற்றையும் உள்ளடக்கி நிலம், கடல் மற்றும் விண்வெளியைக் கடந்து" பல அடுக்குகள் கொண்டிருக்கும் என்று மட்டும் தெரிவித்தார்.

இந்த அமைப்பு பூமி மட்டுமல்லாது, விண்வெளியில் இருந்தும் கூட ஏவப்படும் ஏவுகணைகளை தடுத்து நிறுத்தும் திறன் கொண்டிருக்கும் என்றார் டிரம்ப். இந்தத் திட்டத்தின் பல அம்சங்கள் புளோரிடா, இண்டியானா மற்றும் அலாஸ்கா எனத் தொலைதூர பிரதேசங்களில் அமைந்திருக்கும்.

கோல்டன் டோம் என்பது ஏற்கெனவே கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளைக் குறிவைத்து அமைக்கப்பட்டிருக்கும் கட்டமைப்பின் மீதே உருவாக்கப்படும் என விண்வெளிப் படை ஜெனரலும் இந்தத் திட்டத்தின் மேற்பார்வையாளருமான மைக்கேல் குட்லின், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். இந்த புதிய அமைப்பு கப்பல்களில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் இதர அச்சுறுத்தல்களை கண்டறிந்து தடுக்கும் பல அடுக்குகளைச் கொண்டிருக்கும். இதன்மூலம் ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன்பாக அல்லது ஏவப்பட்ட பிறகும் அதனை எந்த நிலையிலும் தடுத்து நிறுத்த முடியும்.

தற்போது அமெரிக்க ஏவுகணை பாதுகாப்பு மையம் அலாஸ்கா மற்றும் கலிபோர்னியாவில் உள்ள குறுகிய தூர ஏவுகணை தாக்குதல்களை தடுக்க வடிவமைக்கப்பட்ட 44 தரை சார்ந்த இண்டர்செப்டர்களைச் (interceptors - ஏவுகணைகளை இடைமறித்து நிறுத்தும் அமைப்பு) சார்ந்தே உள்ளது.

அமெரிக்க நிலப்பரப்பை ரஷ்யா அல்லது சீனா தாக்கினால் அதனைத் தடுப்பதற்கு தற்போது உள்ள அமைப்பு போதுமானதாக இருக்காது என வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இரு நாடுகளும் நூற்றுக்கணக்கான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் கப்பல்களில் ஏவப்படும் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளைச் சேர்த்து தங்களின் ஆயுதங்களை விரிவுபடுத்தியுள்ளன.

"தற்போதைய வான் பாதுகாப்பு அமைப்பு வட கொரியாவுக்காக உருவாக்கப்பட்டுள்ளது என நியூ அமெரிக்க பாதுகாப்பு மையத்தின் பாதுகாப்பு வல்லுநரான முனைவர் ஸ்டேசி பெட்டிஜான் தெரிவித்துள்ளார். "இவற்றால் ரஷ்யா அல்லது சீனாவிடம் உள்ள ஆயுதங்களை இடைமறிக்க முடியாது" என்றார்.

நம்மை நோக்கி வருகின்ற ஏவுகணைகளுக்கு எதிராக குறைந்தபட்ச பாதுகாப்பை வழங்கக்கூடிய நூற்றுக்கணகான அல்லது ஆயிரக்கணக்கான விண்வெளி சார்ந்த தளங்கள் தேவைப்படும் என அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வு அலுவலகம் (சிபிஓ) தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் அயர்ன் டோம் ஒரு உதாரணமா?

அமெரிக்கா, கோல்டன் டோம், டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்ரேல் பயன்படுத்தி வரும் அயர்ன் டோம் அமைப்பைத் தான் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

டிரம்ப் கோல்டன் டோம் பற்றிய தன்னுடைய திட்டத்தை மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டு நாடாளுமன்ற கூட்டத்தில் வெளிப்படுத்தினார். அதைப்பற்றி குறிப்பிடுகிற போது, "இஸ்ரேல் அதை வைத்துள்ளது, மற்ற இடங்களிலும் அது உள்ளது, அமெரிக்காவும் அதை வைத்திருக்க வேண்டும்" என்றார்.

2011-ல் இருந்து ஏவுகணைகள் மற்றும் எறிகணைகளை இடைநிறுத்த இஸ்ரேல் பயன்படுத்தி வரும் அயர்ன் டோம் அமைப்பைத் தான் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இஸ்ரேலின் அயர்ன் டோம் குறுகிய தூர அச்சுறுத்தல்களைத் தடுக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளது. டேவிட்ஸ் ஸ்லிங் மற்றும் அரோ என்கிற இதர அமைப்புகள், இரான் மற்றும் ஏமனில் இருந்து ஹூதிக்கள் செலுத்தும் பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தடுக்கின்றன.

அயர்ன் டோம் என்பது காஸா அல்லது தெற்கு லெபனானில் இருந்து வரும் எறிகணைகளை எதிர்கொள்ள உருவாக்கப்பட்டது என்கிறார் பாசில்சிக்.

கோல்டன் டோம் என்பது அதையும் கடந்து தொலைதூர ஏவுகணைகளையும் கண்டறியும் என்றார் அவர். அதனைச் சாத்தியமாக்க வெவ்வேறு திறன்களை ஒருங்கே சேர்க்க வேண்டிய தேவை உள்ளது என்றார்.

மேலும் அவர், "இவை அனைத்தையும் சேர்த்து கையாளும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பைப் பார்ப்பதற்கு நான் ஆவலாக இருக்கிறேன்" தெரிவித்த அவர், தற்போது அதுபோன்ற எதுவும் இல்லை என்றும் கூறினார்.

கோல்டன் டோமை உருவாக்க முடியுமா?

அமெரிக்கா, கோல்டன் டோம், டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோல்டன் டோமை விளக்கும் சந்திப்பில் டிரம்ப் உடன் அதிகாரிகள்

அந்த அமைப்பை உருவாக்குவது சிக்கலானது மற்றும் அதிக செலவு பிடிக்கக் கூடியதும் கூட.

கோல்டன் டோம் தன்னுடைய பதவிக் காலத்திற்குள் முடிக்கப்படும் என டிரம்ப் தெரிவித்தார். அதற்கு மொத்தமாக 175 பில்லியன் டாலர் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் முதல்கட்ட முதலீடாக 25 பில்லியன் டாலர்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் டிரம்பின் மதிப்பீடு சிபிஓவின் மதிப்பீட்டுடன் தொடர்பில்லாமல் இருக்கிறது. அவர்களின் மதிப்பீட்டின்படி 20 ஆண்டுகளில் விண்வெளி சார்ந்த அமைப்புகளுக்கு மட்டுமே 542 பில்லியன் டாலர்கள் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மொத்த செலவு அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட்டின் பெரும்பகுதியாகும் என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

முனைவர் பெட்டிஜான் இதனைச் சாத்தியமற்றது என்கிறார். மேலும் அவர், "இது மிகவும் சிக்கலானது, இதில் பல அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவை உள்ளது. இதன் ஒவ்வொரு கட்டமும் அதன் ஆபத்துகள், செலவுகள் மற்றும் கால அளவைக் கொண்டுள்ளன"

"மேலும் அவசரம் காட்டுவதால் கூடுதல் செலவாவதுடன் ஆபத்துகளையும் சேர்க்கும். நீங்கள் நன்றாக மதிப்பீடு செய்யப்படாத ஒன்றை உற்பத்தி செய்யப் போகிறீர்கள். அதில் தோல்விகள் ஏற்படும், நீங்கள் உற்பத்தி செய்யும் எதுவானாலும் அதில் பெரிய மாறுதல்கள் தேவைப்படும்" என்றார் அவர்.

கோல்டன் டோம் உருவாக்கம் என்பது புதிய ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என்கிற அச்சமும் எழுந்துள்ளது. அமெரிக்காவின் எதிரிகள் அதனை தகர்ப்பதற்கான வழிகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளை அதிகப்படுத்தி வருகின்றனர்.

இந்தத் திட்டம், விண்வெளியை ஒரு போர்க்களமாக மாற்றும் ஆபத்துகளை அதிகரித்துள்ளது என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

ஆனால் அமெரிக்க பாதுகாப்பு கொள்கையை ஆய்வு செய்பவர்கள் இந்தக் கவலைகளை பெரிதாக்க வேண்டாம் என்கின்றனர். சாத்தியமான எதிரிகள் தங்களுடைய தாக்கும் திறன்களில் ஏற்கெனவே அதிகம் முதலீடு செய்து வருவதாக அவர்கள் வாதிடுகின்றனர்.

கோல்டன் டோம் என்பது நம்முடைய எதிரிகள் போடும் கணக்குகளை மாற்ற முயற்சிக்கிறது என்கிறார் பாசில்சிக். மேலும் அவர், "உள்நாட்டு வான் மற்றும் ஏவுகணைப் பாதுகாப்பை மேம்படுத்துவது நம்மை எந்தக் காரணத்திற்காகவும் தாக்க நினைப்பவர்களின் நம்பிக்கையை குறைக்கும்" என்கிறார்.

பகுதியளவு முடிக்கப்பட்ட கோல்டன் டோம் கூட அச்சமூட்டும் காட்சிகள் நிகழாமல் தடுக்கும் என்கிறார் ஃபோர்ட்ஸ்சென். மேலும் அவர், "நான் பெருமூச்சு விடுவேன். நமக்கு அத்தகைய அமைப்பு தேவை. அதற்கு கோல்டன் டோம் தான் பதில்" என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cdj9zy94dj7o

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சீனா, ருசியா போன்றவை மாட்டிக்கொள்ளாது.

star war திட்டம் அந்த நேரத்தில் தொழில்நுட்ப சாத்தியம் இல்லை என்று தெரிந்து பெரிய ஆரவாரத்துடன் தொடங்கப்பது, சோவியத்தை அதுக்குள் இழுத்து பணம் , பொருளாதாரத்தை சிக்கவைத்து, பொருளாதாரத்தை குலைய வைபத்துக்கு.

பகுதியாக அது நடந்தது என்பதும்.

இதிலும் அப்படியான நோக்கங்கள் இருக்கலாம்.

சிலவேளைகளில், மாட்டுவது அமெரிக்க / மெத்திற்காகவும் இருக்கிருப்பதன் சாத்தியக்கூறுகள் இருக்கிறது.

ஏனெனில், சீன, ருசியா இடமும் சம மட்டத்திலான தொழில்நுட்பம் / தேர்ச்சி, பணம், வளம் .. இதில் இருப்பது.

தொழில்நுட்பம் எப்போதும் சீரான ஒரே கோட்டில் வளர்வது அல்ல.

சிலவேளை, அவர்கள், குறைந்த செலவில், வினைத்திறன் கூடிய பாதுகாப்பு கோளத்தை அமைக்கும் வாய்ப்புகளும் இருக்கிறது.

மறுவாளாமாக, யார் இப்போது ஒரு நாட்டை அழிப்போம் என்று நிற்பதும், அததற்கான பலத்தை கொண்டு இருப்பதும்?

அமெரிக்கா ஈரானை.

மேற்கின் சேட்டை விடும் காலம் முடிவுக்கு வந்து விட்டது.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

'விண்வெளியில் அணு ஆயுதப் போர்' - அமெரிக்காவை எச்சரிக்கும் வட கொரியா

"கோல்டன் டோம்"

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, "கோல்டன் டோம்" ஏவுகணை கேடயத்திற்கான திட்டத்தை வட கொரியா விமர்சித்துள்ளது

கட்டுரை தகவல்

  • எழுதியவர், கீலீ ங்

  • பதவி, பிபிசி செய்திகள்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்காவின் எதிர்கால "கோல்டன் டோம்" ஏவுகணை கேடயத்திற்கான திட்டத்தை வட கொரியா விமர்சித்துள்ளது. இந்த முயற்சி "விண்வெளியை அணு ஆயுதப் போர் களமாக மாற்றும் சாத்தியங்கள் உள்ளதாக" வட கொரியா கூறியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஆட்சிக்காலத்தின் இறுதியில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள பாதுகாப்பு அமைப்பு, அமெரிக்காவிற்கு "அடுத்த தலைமுறை" வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் பாலிஸ்டிக் மற்றும் சீர்வேக (cruise missiles - தானாகவே வழிநடத்தி செல்லக் கூடியவை) ஏவுகணைகளும் அடங்கும்.

வட கொரிய வெளியுறவு அமைச்சகம் இந்தத் திட்டத்தை "சுயநீதி மற்றும் ஆணவத்தின் உச்சம்" என்று சாடியதாக வட கொரியாவின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

"விண்வெளியை ராணுவமயமாக்க... எதுவும் செய்யத் தயாராக" இருப்பதாக அமெரிக்காவை வட கொரியா குற்றம் சாட்டியது, மேலும் இந்தத் திட்டம் "உலகளாவிய அணு ஆயுத மற்றும் விண்வெளி ஆயுதப் போட்டியை" தூண்டக்கூடும் என்றும் எச்சரித்தது.

வட கொரியா, அமெரிக்காவை எதிரியாகக் கருதுகிறது, அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான கூட்டு ராணுவப் பயிற்சிகளை கண்டித்து வருகிறது.

அமெரிக்கா, கோல்டன் டோம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்கா கோல்டன் டோம் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கோல்டன் டோம், வட கொரியாவின் அணு ஆயுதக் கிடங்கை "கணிசமாக பலவீனப்படுத்தக்கூடிய" ஒரு அச்சுறுத்தலாக வட கொரியா கருதுகிறது என்று கொரியா தேசிய ஒருங்கிணைப்பு நிறுவனத்தின் மூத்த ஆய்வாளர் ஹாங் மின், AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

"அமெரிக்கா தனது புதிய ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தை நிறைவு செய்தால், அதை எதிர்க்க அல்லது ஊடுருவுவதற்கு வட கொரியா மாற்று வழிகளை உருவாக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார்.

2022ஆம் ஆண்டில், தன்னை ஒரு அணு ஆயுத நாடாக அறிவிக்கும் சட்டத்தை வட கொரியா இயற்றியது, மேலும் அது அண்மை ஆண்டுகளில் பல்வேறு பாலிஸ்டிக் மற்றும் சீர்வேக ஏவுகணைகளை பரிசோதித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஹைப்பர்சோனிக் (ஒலியை விட 5 மடங்கு வேகமாக பயணிக்கும் ) திறனுடன் கூடிய புதிய இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக வட கொரியா கூறியது, இது "பசிபிக் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு போட்டியாளர்களையும் நம்பத்தகுந்த முறையில் கட்டுப்படுத்தும்" என்றும் அந்நாடு கூறியது.

அமெரிக்காவின் கோல்டன் டோம் திட்டத்தை விமர்சிக்கும் சீனாவுடன் வட கொரியாவும் இணைகிறது. கடந்த வாரம் கோல்டன் டோம் பற்றி "தீவிரமாக கவலை கொண்டுள்ளது" என்று சீனா கூறியது, இது "வலுவான தாக்குதல் விளைவுகளைக்" கொண்டுள்ளது என்று கூறியது.

"அமெரிக்கா முதலில்" என்ற கொள்கையைப் பின்பற்றும் அமெரிக்கா, தனக்கான முழுமையான பாதுகாப்பைத் தேடுவதில் வெறித்தனமாக உள்ளது" என்று சீனாவின் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளது. "இது அனைத்து நாடுகளின் பாதுகாப்பையும் சமரசம் செய்யக்கூடாது என்ற கொள்கையை மீறுகிறது மற்றும் உலகளாவிய மூலோபாய சமநிலை மற்றும் நிலைத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது."

அமெரிக்காவின் வரையறுக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்துவது அவசியம் என்று பல ஆய்வாளர்கள் நம்புகிறார்கள், ஆனால் சிலர் கோல்டன் டோமை உருவாக்கும் செயல்முறை தொழில்நுட்ப ரீதியிலான சவால்களுடன் அரசியல் சவால்களையும் எதிர்கொள்ளக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.

அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் கோல்டன் டோம் தயாரிப்பு மொத்த செலவு, அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட்டின் பெரும் பகுதியை எடுத்துக் கொள்ளும்.

புதிய பட்ஜெட் மசோதாவில் முதல்கட்டமாக $25 பில்லியன் (£18.7 பில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது. இது, பல தசாப்தங்களாக செலவிடப்பட்ட தொகையைவிட 20 மடங்கு செலவாகும் என்று அமெரிக்க அரசு மதிப்பிட்டுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly3l270we3o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.