Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின்  மனச்சாட்சியும்

May 21, 2025

அறுபது வயதில் ஜே.வி.பி.யும் ஜனாதிபதி அநுராவின்  மனச்சாட்சியும் 

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) ஆரம்பிக்கப்பட்டு கடந்த வியாழக்கிழமையுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைந்தன. காலஞ்சென்ற என். சண்முகதாசன் தலைமையிலான இலங்கை  கம்யூனிஸ்ட் கட்சியின் (சீனச்சார்பு) வாலிபர் இயக்கத்தின் ஒரு முக்கிய தலைவராக விளங்கிய ரோஹண விஜேவீர முரண்பாடுகள் காரணமாக கட்சியில் இருந்து  விலகி 1965  மே 14 ஆம் திகதி ஜே.வி.பி. யை தாபித்தார். 

அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இரு தடவைகள் ஆயுதக்கிளர்ச்சிகளை முன்னெடுத்து இரத்தக் களரிகளை கடந்து வந்த ஜே.வி.பி.  ஜனநாயக அரசியலில் பிரவேசித்த பிறகு அதன் ஐந்தாவது தலைவரான அநுரா குமார திசாநாயக்கவின் தலைமையில் தேசிய மக்கள் சக்தி என்ற புதிய அவதாரமாக கடந்த வருடம் ஆட்சியதிகாரத்துக்கு வந்தது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு அவசியமான 50 சதவீதத்துக்கும் அதிகமான  வாக்குகளை பெறாமல்  திசாநாயக்க  நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவிக்கு வந்த போதிலும், இரு மாதங்களுக்கு பிறகு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமான ஆசனங்களைக் கைப்பற்றி சாதனை படைத்தது. 

இலங்கை அரசியல் வரலாற்றில் அரசாங்கத்தை அமைத்த  முதல் இடதுசாரி கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ கட்சியான ஜே.வி.பி. அரச அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆறு தசாப்தங்கள்  காத்திருக்க வேண்டியிருந்தது. மூன்று வருடங்களுக்கு முன்னர் இதே காலப்பகுதியில் மூண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் கிளர்ச்சியே தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வருவதற்கு வசதியான  அரசியல்  நிலைவரத்துக்கு வழிவகுத்தது.  தெற்காசியாவில் நேபாளத்துக்கு பிறகு  ஆயுதக் கிளர்ச்சி செய்த அரசியல் இயக்கம் ஒன்று ஜனநாயக தேர்தல் மூலம் அதிகாரத்துக்கு வந்த இரண்டாவது நாடாக இலங்கை விளங்குகிறது.

தலைமறைவாக இயங்கிய புரட்சிகர இயக்கம் என்ற நிலையில் இருந்து மக்களினால் தெரிவு செய்யப்பட்ட  ஆளும் கட்சி என்ற நிலைக்கான  ஜே.வி.பி.யின் பயணம் இலங்கையின் அரசியல் நிலக்காட்சியை மாற்றியமைத்தது. அதன் வெற்றி நாட்டின் அரசியலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புடைபெயர்வை பிரதிபலித்தது. இத்தகைய ஒரு  பின்புலத்தில், ஏழு மாதகாலமாக பதவியில் இருந்தவரும் நிலையில் ஜே.வி.பி. அதன் 60 வது வருட நிறைவை கடந்த வாரம் கொண்டாடியது. 

கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற பேரணியில் ஜனாதிபதி திசாநாயக்க ஜே வி.பி. ஒரு அரசியல் சக்தியாக தொடருவதற்கு மனச்சாட்சி, துணிச்சல் மற்றும் நடைமுறை அரசியல் அறிவு ஆகியவை முக்கியமான பாத்திரத்தை வகித்தன என்று குறிப்பிட்டிருந்தார். தனது கட்சியின் கொந்தளிப்பான பயணம் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கள் முக்கிய கவனத்துக்குரியவையாக இருக்கின்றன.

“ஜே.வி.பி.யின்  வரலாறு பூராவும் எமது மனச்சாட்சியே எமக்கு சரியான பாதையை காட்டியது. மனச்சாட்சியே எதிர்காலச் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கும்  எமக்கு துணிச்சலை கொடுத்தது. எமது மனச்சாட்சியின் காரணமாகவே உயர்ந்தவர்கள் என்று கருதப்பட்ட சகலரையும்  விடவும் நாம் மேம்பட்டு நிற்கிறோம். எமது மனச்சாட்சியின் அடிப்படையிலேயே நாம் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். 

“துரோகங்களுக்கு மத்தியிலும் கூட எமது மனச்சாட்சியின் அடிப்படையில் பணியாற்றுவோம் என்ற உத்தரவாதத்தை மக்களுக்கு நாம் வழங்குகிறோம். மற்றைய எந்தவொரு அரசியல் முகாமிடமும் இல்லாத வெல்லமுடியாத துணிச்சல் எமது கட்சியிடம் இருக்கிறது. குறைபாடுகளையும் தவறுகளையும்  ஒத்துக்கொண்டு எம்மைத் திருத்திக் கொள்வதற்கு போதுமான துணிச்சல் எம்மிடம் இருக்கிறது. சொல்லொணா இடர்பாடுகளுக்கும் சிக்கல்களுக்கும் மத்தியில் பணியாற்றுவதற்கான துணிச்சல் எம்மிடம் இருக்கிறது.

“எமது அரசியல் பயணத்தை  நிறுத்துவதற்கு வழிவகுத்த பல சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால், பயணத்தை இடைவிடாமல் தொடருவதற்கு எமக்கு துணிச்சல் இருந்தது. கொந்தளிப்புகளின்  ஊடாக எமது கட்சியின் வெற்றிக்கு துணிச்சலே வழிவகுத்தது. அத்தகைய வலிமை வேறு எந்த கட்சியிடமும் கிடையாது.  எமது முகாம் வெற்றியை நோக்கிய  பயணத்தை தொடருவதற்கு  நடைமுறை அறிவும்  முக்கியமான ஒரு பாத்திரத்தை வகித்தது. வெற்றி தொலைவில் இருப்பதாக தோன்றிய ஒரு நேரத்தில் அதைச் சாதிப்பதற்கு நடைமுறை அறிவு எமக்கு உதவியது.

“சவால்களை எதிர்நோக்கவேண்டி வந்தாலும் கூட கொந்தளிப்புக்கு மத்தியிலும் கப்பல் சரியான பயண இலக்கை அடையும். எமது கட்சியின் உறுப்பினர்கள் பெரும் கொடுமைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளானார்கள். எமது கட்சி  மனிதகுலத்தின் நன்மைக்காக தியாகங்களைச் செய்த வரலாற்றைக் கொண்டது.  உண்மைக்கு முகங்கொடுப்பதற்கு நாம் தயாராயிருப்பதால், எமது முகாம் வெல்ல முடியாத ஒரு சக்தியாக மாறியிருக்கிறது. வெற்றிக்காக சளைக்காமல் பணியாற்றுவதற்கு நாம் தயாராயிருக்கிறோம்” என்று ஜனாதிபதி கூறினார்.

ஜனாதிபதி  கூறியதை சுருக்கமாகச் சொல்வதானால், மனச்சாட்சியும் துணிச்சலும் நடைமுறை அறிவுமே ஜே.வி.பி.யின் வெற்றியின் தூண்கள். இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது ஜே.வி.பி. அதிகாரத்துக்கு வரக்கூடியதாக இருந்தது உண்மையிலேயே ஒரு வரலாற்று சாதனை என்பதை மறுக்க இயலாது. ஆனால், அது இன்று எந்தளவுக்கு இடதுசாரி இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை பின்பற்றுகின்றது என்ற ஒரு முக்கிய கேள்வி இருக்கிறது. 

முதன்முறையாக ஆட்சியதிகாரத்துக்கு வந்த ஒரு இடதுசாரிக் கட்சி என்ற வகையில் ஜே.வி.பி. தலைமையிலான  அரசாங்கத்தின் ஏழு மாதகால நிருவாகத்தை அதன் முழுமையான செயலாற்றலையும் மதிப்பிடுவதற்கு அளவுகோலாக பயன்படுத்ததுவது பொருத்தமானதல்ல. ஆனால், அதன் இதுவரையான ஆட்சி எதிர்காலத்தில்  அது மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் எந்தளவுக்கு  வல்லமையைக் கொண்டதாக செயற்படும் என்பதை மதிப்பிடுவதற்கு ஓரளவுக்கு போதுமானது  எனலாம். 

இலங்கையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் போன்று நாட்டின் சகல இனமக்களினதும் சகல பிராந்தியங்களினதும் பெருமளவு ஆதரவுடன் வேறு எந்தவொரு அரசாங்கமும் முன்னர் பதவிக்கு வந்ததில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கு, கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர ஏனைய மாவட்டங்களில் கூடுதலான ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியதைப் போன்று முன்னர் எந்தவொரு தென்னிலங்கை கட்சியும்  சாதித்துக் காட்டியதில்லை. நாடு தழுவிய ஆணையை தாங்கள் பெற்றிருப்பதாக ஜனாதிபதி திசாநாயக்கவும் அரசாங்க தலைவர்களும் எப்போதுமே பெருமையாகக் கூறுவதற்கு தவறுவதில்லை. 

ஆனால், தங்களுக்கு கிடைத்திருப்பது ஒரு பல்லின சமூகத்தின் ஆணை என்பதை மானசீகமாகப்  புரிந்து கொண்டு அரசாங்க தலைவர்கள் எந்தளவுக்கு சகல சமூகங்களையும் அரவணைக்கும் ஒரு ஆட்சிமுறையை முன்னெடுப்பதில் நாட்டம் காட்டுகிறார்கள் என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகிறது. இந்த இடத்தில் தங்களது அரசியல் பயணத்தை வழிநடத்தியதாக ஜனாதிபதி திசாநாயக்க கூறும் மனச்சாட்சி குறித்து நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. 

பாரம்பரியமான இடதுசாரி இயக்கத்தின் மீதான அதிருப்தியும் 1960 களின் நடுப்பகுதியில் ஜே.வி.பி.யின் தோற்றத்துக்கு ஒரு முக்கியமான காரணி என்று கூறப்படுவதுண்டு. அதே போன்று பாரம்பரியமான அதிகார வர்க்க அரசியல் கட்சிகள் மீதான மக்களின் வெறுப்பே அறுபது வருடங்களுக்கு பிறகு ஜே.வி.பி.யை ஆட்சியதிகாரத்துக்கு கொண்டுவந்திருக்கிறது. இந்த ஆறு தசாப்த காலகட்டத்தில் நாட்டைச் சின்னாபின்னப்படுத்திய முக்கியமான சகல நெருக்கடிகளில்  இருந்தும் முறையான படிப்பினையை பெற்றுக் கொண்டவர்களாக ஜே.வி.பி.யின் தலைவர்கள் தங்களது அரசாங்கத்தின் கொள்கைகளையும் அணுகுமுறைகளையும் வகுக்க வேண்டும். அது விடயத்தில் அவர்களிடம் பாரிய கரிசனைப்  பற்றாக்குறை காணப்படுகிறது. 

முறைமை மாற்றத்தையும் புதிய அரசியல் கலாசாரத்தையும் கொண்டுவரப் போவதாகவும் இனவாதத்தையும் மதத்தீவிரவாதத்தையும் மீண்டும் தலைகாட்ட அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறுவதை கேட்கும்போது இனிப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், தீர்மானங்களை மேற்கொள்ளும் அரசாங்க அமைப்புகளுக்கு நியமனங்களைச் செய்வதற்கு கடைப்பிடிக்கப்படும் அணுகுமுறை தொடக்கம் சிறுபான்மைச் சமூகங்களின்  பிரச்சினைகளை கையாளுவது வரை அரசாங்கத்திடம் ஆரோக்கியமான மனமாற்றத்தை காணமுடியவில்லை. 

மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த  சிக்கலான தேசிய இனப்பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தியினால் குறுகிய காலத்திற்குள் தீர்வைக் கண்டுவிட முடியும் என்று எவரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்த பிரச்சினைக்கு நாளடைவில் அரசியல் தீர்வொன்றை காண்பதற்கு முன்னைய அரசாங்கங்களை விடவும் வேறுபட்ட அணுகுமுறையை  புதிய அரசாங்கம் கடைப்பிடிப்பதில் நாட்டம் காட்டும் என்பதற்கான எந்தவிதமான அறிகுறியையும் கூட காணமுடியாமல் இருப்பது கவலைக்குரியது. 

உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து இன்றுடன் சரியாக பதினாறு வருடங்கள் நிறைவுபெறுகின்றன. அந்த கொடிய போரின் விளைவாக வடக்கு, கிழக்கில் தோன்றிய பல்வேறு மனிதாபிமானப் பிரச்சினைகளை கையாளுவதில் கூட தேசிய மக்கள் சக்தியிடம் வேறுபட்ட ஒரு அணுகுமுறையைக் காணமுடியாமல் இருக்கிறது. 

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக முன்னெடுக்கப்பட்ட இதுவரையான சகல முயற்சிகளையும் எதிர்த்துநின்ற ஒரு கடந்த காலத்தை ஜே. வி.பி. கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை காலமும் அந்த பிரச்சினை தொடர்பில் கடைப்பிடித்துவந்த கொள்கைகளிலும் அணுகுமுறைகளிலும் மாற்றங்களைச்  செய்யாமல்  புதிய அரசியல்  கலாசாரம் பற்றி உரத்துப் பேசுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

பாரம்பரியமாக தமிழ் தேசியவாத கட்சிகளுக்கு வாக்களித்துவந்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவற்றை பெருமளவுக்கு நிராகரித்து தேசிய மக்கள் சக்தியை ஆதரித்தார்கள். அந்த  மக்களுக்கு எதிர்காலம் குறித்து ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி திசாநாயக்க சரியான சமிக்ஞையைக் காண்பிக்காததன் விளைவை உள்ளூராட்சி தேர்தல்களில் காணக்கூடியதாக இருந்தது. இந்த கருத்தை தமிழ்த் தேசியவாத அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் எல்லாவற்றையும் நிராயப்படுத்துவதாக வியாக்கியானம் செய்யத் தேவையில்லை. 

ஆனால், தென்னிலங்கையில் எதிர்ப்புகள் கிளம்பும் என்பதற்காக எவ்வளவு காலத்துக்குத்தான் இனப்பிரச்சினைக்கு நியாயபூர்வமான ஒரு அரசியல் தீர்வைக் காண்பது தொடர்பில் அரசாங்கங்களும் பெரும்பான்மையின சமூகமும் மாறாத நிலைப்பாட்டுடன் நியாயமற்ற முறையில் நடந்துகொள்ளப் போகின்றன? சிறுபான்மைச் சமூகங்களின் நியாபூர்வமான அரசியல் அபிலாசைகளுக்கு எதிராக தென்னிலங்கைச் சமூகத்தில் காணப்படும் கடுமையான உணர்வுகளை மேலும் வலுப்படுத்தக்கூடிய அணுகுமுறைகளை அல்ல,  இனப்பிரச்சினைக்கு  தீர்வைக் காணவேண்டிய அவசியத்தை அந்த மக்களுக்கு உணர்த்துவதற்கும் அவர்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்குமான நடவடிக்கைகளிலலேயே தேசிய மக்கள் சக்தி இறங்க வேண்டும். அதற்கு முதலில் ஜே.வி.பி. தலைவர்கள் தங்களது பழைய  நிலைப்பாடுகளை மாற்ற வேண்டும். இந்த இடத்தில் மீண்டும் மனச்சாட்சி குறித்து அவர்களுக்கு  நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. 

தென்னிலங்கையில் கடும்போக்கு சிங்கள தேசியவாத சக்திகள் மீண்டும் வலுவான முறையில் வெளிக்கிளம்புவதற்கு  சந்தர்ப்பங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட  பெரும்பான்மையினவாத அணிதிரட்டல்கள் இறுதியில்  தென்னிலங்கைச் சமுதாயத்துக்கும் கூட பாதகமாக அமைந்த வரலாற்றுப் பாடத்தை  அடிப்படையாகக் கொண்டு  மக்களுக்கு  சரியான பாதையைக்  காட்டுவதற்கு  தேசிய மக்கள் சக்தி அரசியல் துணிச்சலை வெளிக்காட்ட வேண்டும்.  தங்களை வெற்றிக்கு வழிநடத்திய மனச்சாட்சி, துணிச்சல் மற்றும் நடைமுறை அறிவை இந்த விடயத்திலும் ஜனாதிபதியும் அரசாங்கமும் வெளிக்காட்ட வேண்டும். 

இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலைகாட்டுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என்று ஓயாமல் கூறிக்கொண்டிருக்கும் ஜனாதிபதி திசாநாயக்க மீண்டும் நாட்டின் இனப்பிளவின் இருமருங்கிலும்  தேசியவாத அரசியல் உணர்வுகள் கூர்மையடையக்கூடிய  சூழ்நிலை தோன்றியிருப்பதை கவனத்தில் எடுத்து மீண்டும் இனமோதல்களுக்கு வழிவகுக்கக்கூடிய நிகழ்வுப்போக்குகளை தடுப்பதற்கான தலையாய  பொறுப்பைக் கொண்டிருக்கிறார். அதற்கு ஜே.வி.பி.யை வெற்றிக்கு வழிநடத்திய மனச்சாட்சி,  துணிச்சல் மற்றும் நடைமுறை அறிவை பயன்படுத்த வேண்டும். கிடைக்கின்ற  வரலாற்றுச் சந்தர்ப்பத்தை தவறவிட்ட  தலைவர்களின் வரிசையில் அவரும் இணைந்துவிடக் கூடாது.

https://arangamnews.com/?p=12035

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இனப்பிளவின் இருமருங்கிலும்  தேசியவாத அரசியல் உணர்வுகள் கூர்மையடையக்கூடிய  சூழ்நிலை தோன்றியிருப்பதை கவனத்தில் எடுத்து மீண்டும் இனமோதல்களுக்கு வழிவகுக்கக்கூடிய நிகழ்வுப்போக்குகளை தடுப்பதற்கான தலையாய  பொறுப்பைக் கொண்டிருக்கிறார். அதற்கு ஜே.வி.பி.யை வெற்றிக்கு வழிநடத்திய மனச்சாட்சி,  துணிச்சல் மற்றும் நடைமுறை அறிவை பயன்படுத்த வேண்டும். கிடைக்கின்ற  வரலாற்றுச் சந்தர்ப்பத்தை தவறவிட்ட  தலைவர்களின் வரிசையில் அவரும் இணைந்துவிடக் கூடாது.

சிங்களத்தினது எந்தத் தலைமையும் துணியாத, தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை ஏற்கும் ம.வி.மு(JVP) என்ற தே.ம.ச(NPP) வருமானால் அதுவே இதுவரை உலகில் நடைபெற்ற அரசியல் மாற்றங்களுள் மிகப்பெரிய மாற்றமாக வரலாற்றில் பதிவாகும். ஆனால், சிங்களத் தலைமைகள் யாவும் சிங்களவரிடம் நற்பெயர் பெறத் தமிழரை ஒடுக்குவதில் பின்னிற்காதோர். எனவே இவரும் பத்தோடு பதினொன்றாக மனச்சாட்சி, துணிச்சல் மற்றும் நடைமுறை அறிவை பயன்படுத்தமாட்டாரென்பதை நகர்வுகள் பதிவுசெய்கின்றன.

தமிழீழ தேசிய விடுதலை முன்னணி(NLFT) இந்த அமைப்பினது நிறுவனரும் இந்தக் காலஞ்சென்ற என். சண்முகதாசன் அவர்களா? உறவுகள் யாருக்காவது தெரிந்தால் தெளிவுபடுத்துங்கள்.

இந்த அமைப்பு 1984 காலப்பகுதியில் ஒரு 'அரசியல் திட்டம்' என்றொரு தொகுப்பை வெளியிட்டிருந்தது. அதனை அவர்கள் மக்களுக்கு விநியோத்திருந்தார்கள். சில நல்ல விடயங்களும் இருந்ததாக நினைவு.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2025 at 17:00, கிருபன் said:

மனச்சாட்சியும் துணிச்சலும் நடைமுறை அறிவுமே ஜே.வி.பி.யின் வெற்றியின் தூண்கள்

ம், ஏமாந்து களைத்த மக்களை ஏமாற்றி பதவியில் அமர்ந்ததே ஜே .வி. பியின் வெற்றி. தமிழ் மக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே கையளிப்போம் என்றார்கள், அதுபற்றிய உரையாடலின் நடுவே வெளியேறினார்கள், இனவழிப்பு ஒன்று நடைபெறவே இல்லை என்கிறார்கள், உண்மையை கதைத்தால் சட்டத்தால் அடக்குவோம் என அச்சுறுத்துகிறார்கள், நேரம் ஒரு கதை, ஆளுக்கொரு பேச்சு பேசுகிறார்கள். இதுதான் இவர்களின் கள்ள மனச்சாட்சி, கோழைத்தனம். இதனை துணிச்சல் என பிதற்றுகிறார்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.