Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விரட்டப்பட வேண்டியவர்கள் விடுதலைக்கு எதிரான சக்திகளே!

June 29, 2025

விரட்டப்பட வேண்டியவர்கள் விடுதலைக்கு எதிரான சக்திகளே!

— கருணாகரன் —

யாழ்ப்பாணம் செம்மணி – சிந்துபாத்தி மயானப் பகுதியில் கண்டறியப்பட்டுள்ள மனிதப் புதைகுழி, தமிழ்ச் சமூகத்தை மட்டுமல்ல, மனித விழுமியங்களைக் குறித்துச் சிந்திக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. அங்கே முடிவற்ற நிலையில் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இன்னும் எத்தனை எலும்புக் கூடுகள் மீட்கப்படும் என்று தெரியவில்லை. உண்மையில் அவை எலும்புக் கூடுகள் அல்ல. உயிருடன் கொல்லப்பட்ட மனிதர்களேயாகும்! 

இதுவரை மீட்கப்பட்டவற்றில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்களுடைய எலும்புக்கூடுகளும் உள்ளன. இது மேலும் அதிர்ச்சியையும் சமூகக் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இவை அரசியல் ரீதியான படுகொலைகளுக்குள்ளானவை என்றே கருதப்படுகிறது. அரசியல் ரீதியான படுகொலை என்றால், யுத்தத்தில் ஈடுபட்ட இருதரப்பு மோதல்களினால் ஏற்பட்ட கொலையினாலோ அது போன்ற நிகழ்வுகளினாலோ அல்ல. அப்படியிருந்தாலும் அது தவறு. ஏனென்றால், யுத்தத்தின்போது அதில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளுடைய உடல்களை படையினரும் படையினரின் உடல்களை விடுதலைப்புலிகளும் சர்வதேச அமைப்புகளுடாகப் பரிமாறிக் கொண்டனர். 

அப்படியென்றால், இது விதிமுறைகளுக்கு அப்பால், படுகொலை செய்யப்பட்டோரின் உடல்களே. இந்தப் படுகொலைகள் ஏதோ ஒரு வகையில் பழிவாங்கும் அரசியலின் விளைவாக நடந்தவையே!அப்படியென்றாலும் கூட சிறுவர்கள் கொல்லப்படுவதற்கான காரணம் என்ன? என்ற கேள்வி எழுகிறது. இதுதான் கூடிய கவனத்தை இங்கே குவிக்கிறது. 

இதனால் இப்பொழுது கண்டெடுக்கப்பட்டு வரும் இந்த எலும்புக் கூடுகளும் இந்த மனிதப் புதைகுழியும் இதுவரையிலும் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடுகளையும் புதைகுழிகளையும் விட,  அரசியல் ரீதியாக முக்கியத்துவமுடையனவாக மாறக் கூடிய சாத்தியங்கள் உண்டு. 

ஏற்கனவே இதைப்போல வடக்குக் கிழக்கிலும் தெற்கில் சூரியகந்த போன்ற இடங்களிலும் பல எலும்புக் கூடுகளும் புதைகுழிகளும் கண்டறியப்பட்டன. அவை அந்தந்தக் காலகட்டத்தில் அதிர்வையும் அரசியல் ரீதியாகச் சில கவனத் தூண்டல்களையும் ஏற்படுத்தியதுண்டு. 

ஆனால், பிறகு அவையெல்லாம் மெல்ல நீர்த்து, மறைந்து போனதே வரலாறு. சரியாகச் சொன்னால், அவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் போராட்டங்களை நடத்தியவர்களே நன்மைகளைப் பெற்றனர். உதாரணமாக சூரியகந்த புதைகுழியைத் தூக்கி, அரசியல் செய்த மகிந்த ராஜபக்ஸ, அடுத்த 20 ஆண்டுகள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றிருந்தார். அந்த அதிகாரத்தின் மூலம் ராஜபக்ஸ குடும்பத்தையே கட்டியெழுப்பினார். 

ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியோ நிவாரணமோ கிடைக்கவில்லை. அவர்கள் மறக்கடிக்கப்பட்டனர். மகிந்த ராஜபக்ஸ அதிகாரத்துக்கு வந்தபோது, இந்தப் புதைகுழிகளில் எலும்புக்கூடுகளாக்கப்பட்டவர்களுக்கும் அவர்களுடைய உறவினர்களுக்கும் நீதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதை ராஜபக்ஸவினர் செய்யவில்லை. 

அதைப்போல கிளிநொச்சி தொடக்கம் கொக்குத்தொடுவாய் வரையான புதைகுழிகள் – எலும்புக் கூடுகளை வைத்துத் தமிழ்த் தரப்புகள் தாராளமாக அரசியல் ஆதாயங்களைப் பெற்றுக் கொண்டன. அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மாகாணசபையின் பிரதிநிதிகளாகவும் கட்சிகளின் முக்கியஸ்தர்களாகவும் தம்மை உயர்த்திக் கொண்டனர். 

பாதிக்கப்பட்ட மக்களுக்கோ எந்த நீதியும் கிடைக்கவில்லை. 

ஆக தமிழ் – சிங்களம் ஆகிய இரண்டு சூழலிலும் ஒரே நிலைமைதான் நீடிக்கிறது. 

ஆனால், இப்பொழுது கண்டறியப்பட்டு வரும் சிந்துபாத்தி மயான எலும்புக் கூடுகளும் புதைகுழியும் இதையெல்லாம் கடந்த முக்கியத்துவத்தைப் பெறக் கூடிய வாய்ப்புகள் அதிகமுண்டு. அதற்கொரு முக்கிய காரணம், இப்போதுள்ள ஆட்சியாளர்களாகும். 

1.   இப்பொழுதுள்ள NPP ஆட்சியாளர்களும் முன்பு இதேபோன்ற எலும்புக் கூடுகள் – மனிதப் புதைகுழிகளின் துயர வரலாற்றினால் பாதிக்கப்பட்டவர்களே. ஆகவே, அவர்களுக்கு இதனுடைய தாற்பரியம் என்னவென்று – எப்படியானது என்று புரியும். அதனால்தான் இந்தப் புதைகுழி அகழ்வுக்கு அவர்கள் தாராளமாக ஒத்துழைப்பை வழங்குகிறார்கள். மட்டுமல்ல, இதையொட்டி நடைபெறுகின்ற போராட்டத்தைக் குழப்பாமல், இடைஞ்சல்களைச் செய்யாமல், தாங்களும் நேரில் பங்கேற்க விளைகிறார்கள். 

ஆனால், இவ்வாறான சூழலில் முந்திய ஆட்சியாளர்கள் அப்படி நடந்து கொள்ளவில்லை. பல்வேறு இடைஞ்சல்களையும் நெருக்கடிகளையும் ஏற்படுத்தினார்கள். இவ்வாறான விவகாரத்தை முன்னிலைப்படுத்திப் போராடியவர்களையும் நீதி கோரியவர்களையும் அச்சுறுத்தினார்கள்.

ஆனால் NPP அரசாங்கம் இதனை வேறு விதமாக அணுக முற்படுகிறது. அது தன்னை ஒரு நீதிக்குரிய அமைப்பாக உலக அரங்கிலும் வரலாற்றிலும் ஸ்தாபிக்க விரும்புகிறது. இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். அதாவது, அரசாங்கமே இந்தப் பிரச்சினையைக் குறித்து கவனம் எடுத்து, குற்றவாளிகளைத் தேடக்கூடிய – தண்டிக்கக் கூடிய ஒரு சூழல் உருவாகியுள்ளது. அவ்வாறு இல்லாது விட்டாலும் இந்தப் புதைகுழி – எலும்புக் கூட்டு விவகாரம் அரசியல் முக்கியத்துவமுடையதாக மாறுவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்கிறது. இது சர்வதேச ரீதியாகவும் கவனத்தை உருவாக்கும். ஆகவே எந்த வகையிலும் இதொரு நல்வாய்ப்பான விளைவையே தரக்கூடியதாக உள்ளது. 

2.   முந்திய ஆட்சியாளர்களின் காலத்தில் இவ்வாறான புதைகுழி விடயத்தை அவர்கள் கையில் எடுக்கத் துணியவில்லை. அது அவர்களுடைய கையையே சுடக்கூடியது. மட்டுமல்ல, அவர்களே அவற்றோடு சம்மந்தப்பட்டவர்களாகவும் ஏதோ ஒரு வகையில் இருந்தனர். அல்லது அதைக் கண்டிக்க முடியாத நிலையில் இருந்தனர். அவ்வாறானோர் (அத்தகைய தரப்பினர்) ஊழல், அதிகார துஸ்பிரயோகம் போன்றவற்றுக்காகத் தண்டிக்கப்பட்டு வருகின்றனர். அவற்றோடு இந்த விடயங்களும் சேரும்போது, அவர்களின் மீது நடவடிக்கையை எடுப்பதற்கு NPP அரசாங்கத்துக்கு உதவியாக இருக்கும். 

3.   இப்பொழுதுள்ள தேசிய மக்கள் சக்தியினருக்கு இந்தப் புதைகுழிகள் பிரச்சினையில்லை. அவர்கள் இந்த விடயங்களுடன் சம்மந்தமில்லாதவர்கள். மட்டுமல்ல, இதுவரையிலும் அதிகாரத்தில் இருக்காதவர்கள். ஆகவே துணிகரமாக இதனை அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாதகமாகவே கையாள முற்படுவர். என்பதால் எந்த விதமான அச்சமும் தயக்கமும் இல்லாமல் NPP அரசாங்கம் நேர்மையாக இந்தப் பிரச்சினையைக் கையில் எடுப்பதற்கான சாத்தியங்கள் அதிகமுண்டு. 

வேண்டுமானால் இதனோடு தொடர்புபட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டால், அது படைத்தரப்பினராக இருந்தால் மட்டுமே அரசாங்கத்துக்குச் சற்று நெருக்கடி ஏற்படும். அதுவும் ‘படைத்தரப்பில் கை வைக்கக் கூடாது‘ என்று குற்றவாளிகளைப் பாதுகாக்க விரும்பும் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு இதை ஒரு ஆயுதமாகப் பாவிக்க முற்படலாம். அப்படி எதிர்க்கட்சிகள் பிரச்சினையை திசை திருப்ப முற்பட்டால், அதுவும் NPP அரசாங்கத்துக்கு வாய்ப்பாகவே அமையும். சர்வதேச அரங்கில் அத்தகைய தரப்புகளை அம்பலப்படுத்துவதற்கு. 

இதேவேளை குற்றங்களோடு தொடர்புடையவர்கள் கண்டறியப்பட்டு,  நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்படுவது தவிர்க்க முடியாதது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவும் வெளிப்படைத்தன்மையாகவும் இருந்தால் அந்தப் பிரச்சினையைக்  கூட வெற்றிகரமாகவே கையாளக் கூடியதாக இருக்கும். 

அதற்கு இப்பொழுது இந்த மனிதப் புதைகுழி முழுமையாக அகழப்பட்டு, முழுமையான விவரம் கண்டறியப்பட வேண்டும். அடுத்த கட்டமாக மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்படி ஆய்வு மேற்கொள்ளப்பட்டால்தான் இந்தப் படுகொலை எந்தக் காலகட்டத்தில் நடந்தது? அந்தக் காலகட்டத்தில் என்ன நடந்தது என்பதையெல்லாம் கண்டறியக் கூடியதாக இருக்கும். எந்தக் காலகட்டத்தில் நடந்தது என்று கண்டறியப்பட்டால் ஏறக்குறையக் குற்றவாளிகளைக் கண்டு பிடித்து விடலாம். 

அதைக் கண்டறிவதற்கு கண்டெடுக்கப்படும் எலும்புக் கூடுகள் தொடர்பான பகுப்பாய்வுகள் மிக அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. அந்த ஆய்வுகளின் முடிவுகள் வரும்போது நிச்சயமாக இப்போதையும் விட மேலும் கொந்தளிப்பான அரசியல் சூழல் உருவாகும். ஏனென்றால், அந்த முடிவுகள் ஓரளவுக்குக் கொலையாளிகளை இனங்காண உதவும் – இனங்காட்டும் என்பதால். 

இப்பொழுதே எலும்புக் கூடுகளின் எண்ணிக்கை, அவற்றின் தோற்ற அமைவு போன்றவற்றைச் சரியாகக் கவனித்து, கடந்த கால வரலாற்றைத் தோண்டிப் பார்த்தால் யாருடைய எலும்புக் கூடுகளாக இருக்கும் என்ற ஒரு கணிப்புக்கு வர முடியும். ஆனாலும் பகுப்பாய்வுதான் வலுவானது. சட்டரீதியானது.

இதேவேளை இந்த எலும்புக் கூடுகளையும் மனிதப் புதைகுழிகளையும் நேரில் பார்ப்பதற்கும் இதையிட்டு இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அணையா விளக்குப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்திப்பதற்குமாக ஐ.நா  மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் வோல்கர் டேர்க் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் (OHCHR) பிரதிநிதிகள் குழுநேரில் விஜயம் செய்தது. 

அதொரு முக்கியமான நிகழ்ச்சியே. 

ஆனால், இதையெல்லாம் பாதிக்கப்பட்டோருக்குச் சாதகமாக வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, இதன்போது அங்கே நடத்தப்பட்ட  முட்டாள்தனமான எதிர்ப்பு நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் பாழடித்துள்ளன. 

நடைபெற்ற போராட்டத்துக்கு தமது ஆதரவைத் தெரிவிப்பதற்காகச் சென்ற அரசியல் தலைவர்களையும் மக்கள் பிரதிநிதிகள் சிலரையும் அங்கே கூடிய சில விசமிகள் எதிர்த்துத் தடுக்கவும் தாக்கவும் முற்பட்டுள்ளனர். தமது அரசியல் உள்நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவர்கள் இப்படித் தவறான முறையில் – குறுக்கு வழியில் செயற்பட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் சில மணிநேரம் குழப்பங்கள் உருவாகின. 

மட்டுமல்ல, இது இந்தப் போராட்டத்தை முன்னெடுத்த நல்ல சக்திகளின் நல் நோக்கத்தையும் பரந்த தன்மையையும் சிதறடித்துள்ளது. நிச்சயமாக இந்தச் செயல் தவறானது. 

இதற்கு அவர்கள் பயன்படுத்த விளைந்தது, தியாகி – துரோகி என்ற பழைய – உளுத்துப்போன அரசியல் முறைமையை. துரோகி – தியாகி என்ற பிரிப்பினால் – அந்த விபரீத விளையாட்டினால் –  ஈழத் தமிழ்ச் சமூகம் பேரழிவைச் சந்தித்துப் பின்னடைந்துள்ளது. இந்த அனுபவ உண்மையை இன்னும் புரிந்து கொள்ளாமல், தங்களைப் புனிதர்களாகக் கட்டமைத்துக் கொள்வதற்காக  எதிர்த்தரப்பைத் துரோகியாக்கும் முட்டாள் வேலையை இன்னும் செய்ய முயற்சிக்கின்றனர் சிலர். இவர்கள் வரலாற்றைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் மூடர்களாகும்.  

பாதிக்கப்பட்ட மக்களுடைய போராட்டத்தில் பங்கேற்பதற்கும் அதற்கு ஆதரவளிப்பதற்கும் அனைத்துத் தரப்புக்கும் உரிமை உண்டு. அதைத் தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஒரு நியாயமான போராட்டத்தில் அனைத்துத் தரப்பும் இணைவது வெற்றியையே அளிக்கும். 

ஆனால், தமிழ்த்தேசியவாத அரசியலில் சில சக்திகள் தமது ஆதிக்கத்தை நிலைப்படுத்திக் கொள்வதற்காக தாமே சுத்தமான தரப்பு என்ற போர்வையில் இத்தகைய ஜனநாயக மறுப்பைச் செய்ய முயற்சிக்கின்றன. ஏனைய சக்திகளின் பங்கேற்பையும் ஆதரவையும் விலக்க முற்படுகின்றன. அதனுடைய உச்ச வெளிப்பாடு செம்மணியில் அரங்கேறியிருக்கிறது. 

இதில் கவனிக்க வேண்டியது –கண்டனத்துக்குரியது  என்னவென்றால், இந்தப்போராட்டத்தில் பங்கேற்பதற்கு தமிழரசுக் கட்சியின் தலைவர்சி.வீ.கே. சிவஞானமும் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் சென்றபோது அதே கட்சியைச் சேர்ந்தவர்களிற் சிலர் எதிர்ப்புக் காட்டியுள்ளனர். இந்த எதிர்ப்பை அவர்கள் கட்சிமட்டத்தில் காட்டியிருக்க வேண்டுமே தவிர, இப்படிப் பொது வெளியில் காட்டியிருக்கக் கூடாது. மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட மக்களுடைய போராட்டத்தைப் பலவந்தமாகப் பறித்துத் தங்களுடைய கையில் எடுத்துத் தங்களுடைய அரசியல் லாபநட்டக் கணக்கைப் பார்த்திருக்கக் கூடாது என்ற பொது அபிப்பிராயம் உருவாகியுள்ளது. இது தொடர்பாக தமிழரசுக் கட்சி, குறித்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது அவசியம். அதேவேளை இவர்களைப் பொதுச் சமூகம் கண்டிக்க வேண்டும். 

அதைப்போல இந்தப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் கே. சந்திரசேகர் சென்றிருக்கிறார். கூடவே யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களைப் பிரதிநிதித்துப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன், இளங்குமரன் ஆகியோரும் சென்றனர். அவர்களையும் இந்தக் குழப்பிகள் இடைஞ்சற்படுத்தியுள்ளனர்.

இதுவரையில் இவ்வாறு நடைபெறுகின்ற மக்கள் போராட்டங்கள் எதிலும் அரசாங்கத்தரப்பினர் எவரும் கலந்து கொள்வதில்லை. அவர்களுடைய கைகள் சுத்தமில்லை என்பதால் அவர்கள் அதைத் தவிர்த்து வந்தனர். அல்லது அது தமக்கு நெருக்கடியைத் தரும் என்பதால் விலகி நின்றனர்.  வரலாற்றில் முதற்தடவையாக தேசிய மக்கள் சக்தியே ஆட்சியாளர்களாகவும் இருந்து கொண்டு, மக்களுடைய நியாயமான போராட்டத்திலும் கலந்து கொண்டது. 

இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலைக் கொடுப்பதோடு, அவர்களுடைய உணர்வுகளின் அடிப்படையில் நாம் இந்தப் பிரச்சினையை நியாயமான முறையில் கையாள்வோம் என்ற சேதியையும் சொல்வதாக இருந்தது. 

ஆகவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதொரு நல்லவாய்ப்பாகவே அமைந்தது. ஆனால், இதைப் புரிந்துகொள்ளாத, புரிந்து கொள்ளமுடியாத, புரிந்து கொள்ளமறுக்கின்ற தமிழ்த்தேசியவாத முத்திரை குத்திய சிலர் இதையும் எதிர்த்தனர். 

அப்படியென்றால் இந்தப்பிரச்சினைக்கு எங்கிருந்து, எவ்வாறான  நீதியை இவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டேர்க்கோ இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் உள்நாட்டுப் பொறிமுறையின் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டுச் சென்றுள்ளார். அவரைக் கடந்து எந்தத் தரப்பு இவ்வாறான பிரச்சினைகளுக்கு பொருத்தமான – தகுதியான நீதியை வழங்கும்? 

வழமையைப்போல அரசாங்கத்தை எதிர்த்து நின்றால், சர்வதேச சமூகம்தான் நீதியை வழங்க வேண்டும் என்றால், வழமையைப்போல இந்தப் பிரச்சினையும் (இந்த எலும்புக்கூடுகள் மற்றும் மனிதப்புதைகுழிகள் விவகாரமும்) நீர்த்து மறைந்து போகும். இதை வைத்து நாடகமாடும் அரசியல்வாதிகள் சிலர் மட்டும் ஆதாயத்தைப் பெறுவர். 

ஆகவே மக்கள் இதைக்குறித்துத் தெளிவாக இருப்பது அவசியமாகும். போலிகள், நடிகர்கள், நாடகமாடிகளைக் குறித்து எச்சரிக்கை கொள்ள வேண்டும். அவர்களையே விரட்டி அடிக்க வேண்டும். ஏனெனில் விடுதலை என்பது அநீதிக்கு எதிரானது. தவறானவர்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு அதைப் பெறவே முடியாது. 

https://arangamnews.com/?p=12127

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.