Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Semmani.jpeg?resize=600%2C361&ssl=1

செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன்.

அழகிய இலங்கைத் தீவு இந்து சமுத்திரத்தின் முத்து மட்டுமல்ல, காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகமுடய ஒரு தீவுந்தான்.இலங்கைத் தீவு தேரவாத பௌத்தத்தின் பெருமைக்குரிய சேமிப்பிடம் மட்டுமல்ல, உலகில் மனிதப் புதைகுழிகள் அதிகமுடைய ஒரு தீவுந்தான். சிங்கள மத்தியில் உள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான கலாநிதி ஜயலத் மற்றும் சுனிலா அபய சேகர போன்றவர்களின் வார்த்தைகளில் சொன்னால் அழகிய இலங்கைத் தீவு காணாமல் போனவர்களை மறக்க முற்படும் ஒரு தீவுந்தான். ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டத்தில் இருந்து தொடங்கி கடந்த 5 நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழர்,சிங்களவர்கள்,முஸ்லிம்கள் என்று ஆயிரக்கணக்கானவர்கள் கொன்று புதைக்கப்பட்ட ஒரு தீவு.யாருக்குமே சரியான கணக்குத் தெரியாது.புத்த பகவானைத் தவிர.

இதுவரை 23 புதை குழிகள் கிண்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆகப் பிந்தியதுதான் செம்மணி. செம்மணிக்கு ஓர் இனப் பரிமாணம் உண்டு. அதனால்தான் அது இப்பொழுது பேசு பொருளாக மாறியிருக்கிறது. மேலும் ஐ நா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வரும்பொழுது செம்மணி கிண்டப்பட்டமை என்பது மற்றொரு முக்கியத்துவம். அதனால் அதற்கு உலகப் பிரசித்தம் கிடைத்திருக்கிறது. மூன்றாவது, முக்கியமானது. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. எனவே தமக்குரிய அரசியல் நீதிக்காக போராடிக் கொண்டிருக்கும் மக்கள் என்ற அடிப்படையில் செம்மணியை ஒரு விவகாரமாக மாற்ற வேண்டிய தேவை தமிழ்த் தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலில் உண்டு.

இதனால் செம்மணி விவகாரம் முதலாவதாக தமிழ் மக்களை தேசிய உணர்வோடு ஒருங்கிணைத்து வருகிறது.இரண்டாவதாக இனப்பிரச்சினை மீதான சர்வதேசக் கவனத்தை ஈர்த்து வருகிறது.அனைத்துலக ஊடகங்கள் அது தொடர்பாக செய்திகளை வெளியிடத் தொடக்கி விட்டன.புலம் பெயர்ந்த தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் அதைப் பேசு பொருளாக்கியிருக்கிறார்கள்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரையிலும் செம்மணி அகழ்வுக்கு ஒரு கோடியே இருபது லட்ஷம் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் தொடர்ந்தும் தேவையான நிதி வழங்கப்படுமா? அதோடு அணையா விளக்கு போராட்டமும் உட்பட தமிழ்த் தேசியக் கட்சிகள் கேட்பதுபோல இந்த விடயத்தில் அனைத்துலக சமூகத்தின் மேற்பார்வையை;அனைத்துலக சமூகத்தின் நிபுணத்துவ உதவியை அரசாங்கம் பெற்றுக் கொள்ளுமா? குறிப்பாக ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகையின் பின்னரான அரசியற் சூழலில் தேசிய மக்கள் சக்தி செம்மணி தொடர்பில் எப்படி நடந்து கொள்ளும்?

முதலாவதாக அது,தேசிய மக்கள் சக்தியானது உண்மையை வெளியே கொண்டு வருவதில் எந்த அளவுக்கு உண்மையாக உழைக்கும் என்பதில் தங்கியிருக்கிறது. இரண்டாவதாக அது,அவ்வாறு வெளிக்கொண்டு வரப்படும் உண்மையானது தென்னிலங்கையில் இனவாதத்தை புதிய கட்டத்துக்கு உயிர்ப்பிக்குமா இல்லையா என்ற விடயத்திலும் தங்கியிருக்கிறது .

முதலாவது விடயத்தை நான் ஏற்கனவே இப்பகுதியில் எழுதியிருக்கிறேன். தனது இரண்டு ஆயுதப் போராட்டங்களின் போதும் காணாமல் ஆக்கப்பட்ட தனது சொந்தத் தோழர்களுக்காக ஜேவிபி நீதி கேட்கவில்லை. ஆயிரக்கணக்கான இளையோர் அவ்வாறு கொல்லப்பட்டார்கள்; காணாமல் ஆக்கப்பட்டார்கள்.ஜேவிபி அவர்களுக்காக நீதி கேட்கவில்லை. ஏனென்றால் அவ்வாறு நீதி கேட்டால் எந்தப் படைத் தரப்பை அவர்கள் இறுதிக் கட்டப் போரில் யுத்த வெற்றி நாயகர்களாகக் கட்டியெழுப்பினார்களோ அதே படைத்தரப்பை அவர்கள் குற்றவாளிகளாக நீதிமன்றங்களில் நிறுத்த வேண்டி வரும். அவ்வாறு செய்வதற்கு ஜேவிபி தயாரில்லை. நாட்டின் யுத்த வெற்றி நாயகர்களை யுத்தக் குற்றவாளிகளாக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு ஜேவிபி தயாராக இருக்காது.அதனால்தான் கடந்த தசாப்தங்களில் கிண்டப்பட்ட மனிதப் புதைக்குழிகளின் விடயத்தில் ஜேவிபி உண்மையை வெளியே கொண்டு வரத் தேவையான போராட்டங்களை முன்னெடுக்கவில்லை.

உதாரணமாக கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு முன்பு மாத்தளையில் ஒரு பெரிய மனிதப் புதை குழி கண்டுபிடிக்கப்பட்டது.அது கண்டுபிடிக்கப்பட்ட காலம் 2012. மாத்தளை பொது ஆஸ்பத்திரிக்கு புதிய கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக நிலத்தை அகழ்ந்த பொழுது அங்கே எலும்புக்கூடுகள் வெளிப்பட்டன. அதைத்தொடர்ந்து அப்பிரதேசம் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் கிண்டப்பட்டது.அதன்போது மொத்தம் 158 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.அக்காலகட்டத்தில் அதற்கு எதிராக அனுரகுமார குரல் எழுப்பியதாக ஒரு ஞாபகம்.அது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகவும் வெளிவந்தது.ஆனால் அது ஒரு விவகாரமாகத் தொடர்ந்து பேசப்படவில்லை. கிண்டப்பட்ட புதை குழிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளியே கொண்டு வரப்படவில்லை.

அவற்றை வெளியே கொண்டு வருவதற்காகப் போராட வேண்டிய ஜேவிபி உரிய தீவிரத்தோடு போராடவில்லை. அக்காலகட்டத்தில் மதிப்புக்குரிய மனித உரிமை ஆர்வலர் ஆகிய சுனிலா அபயசேகர, மாத்தளை புதை குழி தொடர்பாக “சண்டே டைம்ஸ்” பத்திரிகைக்கு ஒரு நேர்காணலை வழங்கியிருந்தார். அதில் அவர் கூறுகிறார்,”இதுவே லத்தீன் அமெரிக்க நாடாக இருந்தால் தம் உறவினர்களின் எச்சங்களைத் தேடி ஆயிரக்கணக்கில் மக்கள் குவிவார்கள். ஆனால் இலங்கையிலோ நிலைமை அவ்வாறு இல்லை.” என்ற பொருள்படக் கூறிக் கவலைப்பட்டிருந்தார்.அதற்குக் காரணம் என்ன? அந்தப் புதை குழிகளுக்குள் புதைக்கப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டு வருவதற்காகப் போராட வேண்டிய அமைப்பு அப்பொழுது போராடவில்லை என்பதுதான்.

இவ்வாறு கொன்று புதைக்கப்பட்ட தன் தோழர்களுக்காக;கொன்று எரிக்கப்பட்ட;கொன்று கடலில் வீசப்பட்ட தன் தோழர்களுக்காக, நீதி கேட்காத ஓரமைப்பு தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கும் என்று எப்படி எதிர்பார்ப்பது? இந்த விடயத்தில் ஜேவிபியை அடித்தளமாகக் கொண்டிருக்கும் என்பிபி இனவாதத்தின் பக்கம்தான் நிற்கும். இது முதலாவது.

இரண்டாவது,செம்மணி விவகாரம் தென்னிலங்கையில் இனவாதிகளுக்கு புதிய வாய்ப்புகளை வழங்குமா இல்லையா என்பது. ஏற்கனவே நாம் பார்த்தபடி இனவாதத்தின் பக்கம் நிற்கும் என்பிபி தனது படை வீரர்களை காட்டி கொடுக்காது. அவர்களை விசாரணைக் கூண்டில் நிறுத்தாது.எனினும் ஒரு அரசாங்கம் என்ற அடிப்படையில் ஐநாவுக்கும் அனைத்துலக சமூகத்துக்கும் பொறுப்புக்கூற வேண்டும் என்ற ஒரு காரணத்துக்காக,என்பிபி ஒரு தோற்றத்துக்காவது விசாரணைகளை முன்னெடுப்பது போல காட்டிக் கொள்ளும். ஆனால் அதற்கும் அடிப்படை வரையறைகள் இருக்கும்.

ஏற்கனவே கடந்த ஐநா கூட்டத் தொடரில் வெளியுறவு அமைச்சராகிய விஜித ஹேரத் அனைத்துலகப் பொறிமுறையை நிராகரித்திருக்கிறார். இந்நிலையில் அனைத்துலக உதவியை கேட்பது; ஐநாவின் மேற்பார்வை போன்ற விடயங்களுக்கெல்லாம் என்பிபி ஒத்துக்கொள்ளாது. மாறாக உள்நாட்டு நீதிபரிபாலனக் கட்டமைப்புக்கூடாக விவகாரங்களைக் கையாள முற்படக் கூடும். ஆனால் அங்கேயும் வரையறைகள் இருக்கும்.தமிழ் மக்களுக்கு நீதியாக நடந்து கொள்வதாகக் காட்டிக் கொள்ளப்போய், அதன் விளைவாக, தெற்கில் இனவாதிகளுக்கு புதிய எரிபொருளை வழங்க என்பிபி விரும்பாது. செம்மணி தொடர்பான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையோடு நடக்கும்போது வெளிவரக்கூடிய உண்மைகள் படைத்தரப்புக்குப் பாதகமாக மாறுமாக இருந்தால், தென்னிலங்கையில் இனவாதிகள் புதிய பலத்துடன் மேல் எழுவார்கள்.தமது யுத்த வெற்றி நாயகர்களை என்பிபி காட்டிக் கொடுக்கப் பாக்குறது என்று கூச்சலிடுவார்கள்.இது எதிர்காலத்தில் தனது தேர்தல் வெற்றிகளைப் பாதிக்கும் என்று என்பிபி பயப்படுமாக இருந்தால் செம்மணி தொடர்பான விசாரணைகள் ஒரு கட்டத்துக்கு மேல் நகராது.

ஏற்கனவே யுத்த வெற்றி நாளைக் கொண்டாடும் பொழுது அதில் யுத்த வெற்றி நாயகர்களை விழிக்கும் பொழுது அனுர பயன்படுத்திய வார்த்தைகள் தொடர்பில் தென்னிலங்கையில் இனவாதிகள் மத்தியில் விமர்சனங்கள் உண்டு. இத்தகையதோர் பின்னணியில், படைத் தரப்பை விசாரணை செய்வதற்கு என்.பி.பி. முன்வராது.

என்.பி.பி.க்கு கிடைத்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்பது புரட்சிகரமான பெரும்பான்மை அல்லவென்று நான் அடிக்கடி இப்பகுதியில் எழுதியிருக்கிறேன்.அது பெருமளவுக்கு சிங்கள பௌத்த வாக்குகள்தான். இந்த அடிப்படையில் சிந்தித்தால்,தேசிய மக்கள் சக்தியானது சிங்கள பௌத்த மனோ நிலையின் கைதிதான்.எனவே அவர்கள் ஒரு கட்டத்துக்கு மேல் செம்மணி அகழ்வாராச்சியை அனுமதிக்க மாட்டார்கள்.

அண்மையில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டுக்கு வந்த பொழுது, சிங்களம் மற்றும் ஆங்கில ஊடகங்கள் அதுதொடர்பாக பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை என்ற ஒரு தொகுக்கப்பட்ட பார்வை உண்டு. ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகையையொட்டி விமல் வீரவன்ச வழமை போல இனவாதத்தைக் கக்கினார். ஆனால் அவரைவிட வேறு யாரும் அது தொடர்பாக பெரிய அளவில் கதைத்ததாகத் தெரியவில்லை. அதனை எப்படிப் பார்ப்பது? தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது முன்னய அரசாங்கங்களின் ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை முடுக்கி விட்டிருக்கிறது. ஒரு தொகுதி முன்னாள் அரசியல் பிரதானிகள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இந்தக் கைது நடவடிக்கைகளின் மீது தென்னிலங்கையில் உள்ள ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கவனம் அதிகமாகக் குவிக்கப்பட்டிருப்பதும் ஒரு காரணம் என்று சிங்கள ஊடகவியலாளர்கள் கூறுகிறார்கள்.

அதேசமயம் தனது இலங்கை விஜயத்தின் முடிவில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தனது உத்தியோகபூர்வ ஊடகச் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் உள்நாட்டு விசாரணையை ஊக்குவிப்பவைகளாகக் காணப்படுகின்றன. அதுபோலவே அவருடைய வருகையின் பின்னணியில் இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஐநாவின் மீதான நம்பிக்கையை மேலும் குறைத்திருக்கின்றன.ஐநா உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையைத்தான் அதிகம் ஊக்குவிப்பதாகத் தெரிகிறது. இது என்பிபி அரசாங்கத்துக்குச் சாதகமானது, என்றாலும் அந்த விசாரணைகளின் முடிவில் வெளிப்படும் உண்மைகள் யுத்த வெற்றி நாயகர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துமாக இருந்தால்,அதை என்பிபி அனுமதிக்காது. அதாவது இலங்கைத் தீவின் உள்நாட்டு நீதி பரிபாலனக் கட்டமைப்பின் விரிவைப் பரிசோதிக்கும் ஆகப் பிந்திய விவகாரமாக செம்மணி காணப்படுகிறது.

https://athavannews.com/2025/1438904

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணிக்கு நீதி?

516780561_10064800513608228_471124813657

அணையா விளக்கு போராட்டம் மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு கொண்டு வந்தது. போராட்டதின் கோரிக்கைகள் அடங்கிய பட்டயத்தை அவர் பெற்றுக்கொண்டார். அக்கோரிக்கைகளில் முதலாவதாகக்  காணப்படுவது,செம்மணியும் உட்பட மனிதப் புதைகுழிகளை அகழ்ந்து ஆராயும் பொழுது ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் மேற்பார்வையையும் நிபுணத்துவ உதவியையும் கேட்டிருக்கிறது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்துள் இயங்கும் ஓர் அலுவலகமானது இலங்கையை பொறுப்புக்கூறவைப்பதற்கு தேவையான சான்றுகளையும் சாட்சிகளையும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சேகரித்து வருகிறது. அந்த அலுவலகத்தின் மேற்பார்வையையும் நிபுணத்துவ உதவியையும் கேட்டிருப்பதன்மூலம் அணையா விளக்கு போராட்டமானது  மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளுக்கு அனைத்துலக பொறிமுறையையும் நிபுணத்துவத்தையும்  கோரி நிற்கின்றது. அதாவது, உள்நாட்டு பொறிமுறையை நம்பவில்லை என்று பொருள்.

ஐநாவில் 2021ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அந்த அலுவலகம்  ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் பெயர் “ஸ்ரீலங்காவை பொறுப்பு கூற வைப்பதற்கான நிகழ்ச்சி திட்டம்”(OSLAP) இதன்படி சான்றுகளையும் சாட்சிகளையும் அவர்கள் சேகரித்து வருகிறார்கள்.ஆனால் அந்த அலுவலகத்தைச்  சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு இன்றுவரை விசா வழங்கப்படவில்லை.ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய  வருகைக்குப்பின் அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கப்படுமா ?

ஆனால்  தன்னுடைய இலங்கை வருகையின் இறுதியில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் ஊடகங்கள் மத்தியில் ஆற்றிய உரையில் என்ன சொன்னவர் தெரியமா? “இறுதியிலும் இறுதியாக இது இலங்கை அரசின் பொறுப்பாகும், அதோடு,இந்த முன்னெடுப்பு இலங்கையின் தேசிய உடமை  என்பது முக்கியம்.மேலும் இது சர்வதேச வழிமுறைகளால்,உதவிகளால் பூர்த்தி செய்யப்படலாம்,”அதாவது அவருடைய உத்தியோகபூர்வ நிலைப்பாட்டில்,அவர் உள்நாட்டுப் பொறிமுறையைப் பலப்படுத்துவது பற்றியே பேசுகிறார்.அப்படியானால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஐநாவில் இயங்கிவரும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் அந்த அலுவலகத்தின் பொருள் என்ன?அது உள்நாட்டுப் பொறிமுறையைப் பலப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றா?ஆனால் அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் வர விசா இல்லையே?

சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான அந்த அலுவலகத்தில் அடிப்படைப் பலவீனங்கள் உண்டு.இப்படி ஒரு பொறிமுறை உருவாக்கப்படவிருக்கிறது என்பதனை ஊகிகித்து 2021 ஆம் ஆண்டு ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு சிவில் சமூகங்கள் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒன்றிணைத்தன.மூன்று கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தியதன் விளைவாக ஒரு கூட்டுக்கடிதம் 2021 ஜனவரி மாதம் ஐநாவுக்கு எழுதப்பட்டது.

அந்தக் கடிதத்தில் இரண்டு முக்கிய விடயங்கள் கேட்கப்பட்டன.ஒன்று, பொறுப்புக் கூறலை ஐநா. மனித உரிமைகள் பேரவையிடமிருந்து  ஐநா பொதுச் சபை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதைப் பின்னர்  அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும்.இரண்டாவது கோரிக்கை, மேற்சொன்ன பொறிமுறையானது குறிப்பிட்ட காலஎல்லைக்குள் அதன் செயற்பாடுகளை முடிக்கும் விதத்தில் வினைத்திறன் மிக்கதாக இருக்க வேண்டும்.அந்த பொறிமுறைக்குரிய செயற்படு காலத்தை 6 மாதங்கள் அல்லது ஒரு ஆண்டாகக் குறைக்கும்படி கஜேந்திரகுமார் வலியுறுத்தினார்.அக்கூட்டுக் கடிதம் அனுப்பப்பட்ட பின் தமிழரசுக் கட்சி அந்தக் கடிதத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அப்பொழுது குற்றஞ்சாட்டியது.

அக்கூட்டத் தொடரின் முடிவில் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் 46/1 இன்படி ஒரு பொறிமுறை அதுதான் மேற்படி அலுவலகம் (OSLAP) உருவாக்கப்பட்டது. ஆனால் அது தமிழ்த் தரப்பு கேட்டிருந்த ஒரு பொறிமுறை அல்ல.அதில் பின்வரும் அடிப்படைப் பலவீனங்கள் இருந்தன. முதலாவதாக,அது ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்துக்கு உள்ளே இயங்கும் ஒரு நிகழ்ச்சி திட்டம்தான். அதாவது கூட்டுக் கடிதத்தில் கேட்டதுபோல பொறுப்புக்கூறலை அவர்கள் மனிதஉரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போகவில்லை. இரண்டாவது அதற்கு ஆறு மாத அல்லது ஒரு வருட கால நிர்ணயம் செய்து அதன் நடவடிக்கைகள் வேகப்படுத்தப்படவில்லை. பதிலாக இன்றுவரை அது இயங்குகின்றது.இப்படித்தான் இருக்கிறது தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கூட்டாக முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு ஐநாவின் பதில் வினை. அது தமிழ் மக்கள் கேட்டதை விட,எதிர்பார்த்ததைவிட பலவீனமான ஒரு பொறிமுறை என்ற போதிலும் அப்பொறிமுறையைச் சேர்ந்த அலுவலர்கள் நாட்டுக்குள் வந்து சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கை அரசாங்கங்கள் விசா வழங்கவில்லை.

இப்படிப்பட்டதோர் அரசியல் மற்றும் ராஜதந்திர பின்னணிக்குள் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை மீது அழுத்தங்களளைப் பிரயோகிக்கும் விதத்தில் வார்த்தைகளைப் பிரயோகிக்காமல் விட்டது, அவருடைய அலுவலகத்துக்குள் இயங்கும் அந்தப் பொறிமுறையை அவரே பலவீனப்படுத்துவதாக அமையுமா?

516513374_10160952023076949_709430378817

அது ஒரு பலவீனமான கட்டமைப்புத்தான். எனினும் அந்த அலுவலகமானது நீதிக்கான  தமிழ் மக்களின் போராட்டத்துக்குள்ள அனைத்துலகப் பரிமாணத்தை மேலும் பலப்படுத்தியிருக்கிறது.ஏனென்றால் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பது என்பது இப்பொழுது ஓர் அனைத்துலக நடைமுறையாக மாற்றப்பட்டிருக்கிறது.எனவே  சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் விடயத்தில் தமிழ்மக்கள் அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்குத் தேவையான அனைத்துலக நிலைமைகள் இப்பொழுது ஒப்பீட்டளவில் பலமாக உள்ளன.

மேலும் அந்த அலுவலகம் சேகரித்துவரும் சான்றுகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில்தான் அண்மை ஆண்டுகளில் அமெரிக்காவிலும் கனடாவிலும் பிரித்தானியாவிலும் குறிப்பிட்ட சில படைப் பிரதானிகளுக்கும் படை அலுவலர்களுக்கும் எதிராகப் பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இங்கேயும் தமிழ்த்  தரப்பு நோக்கு நிலையில் இருந்து ஒரு கேள்வி உண்டு. அந்தப் படைப்பிரதானிகள் தாங்களாக அதைச் செய்யவில்லை அவர்களுக்கு உத்தரவிட்ட,அதற்கு வேண்டிய அரசியல் தீர்மானத்தை எடுத்த,அரசுக் கட்டமைப்பு உண்டு.அந்தக் கட்டமைப்பைக் குற்றஞ்சாட்டும் ஒரு நிலை இன்று வரை ஐநாவிலோ அல்லது மேற்கு நாடுகளின் ராஜதந்திர வட்டாரங்கள் மத்தியிலோ ஏற்படவில்லை. அதாவது இனப்படுகொலையைச் செய்தது ஒரு அரசுக் கட்டமைப்பு.இன அழிப்பு என்பது அந்த அரசுக் கட்டமைப்பின் கொள்கையாக இருந்தது என்ற அடிப்படையில் அந்த அரசுக் கட்டமைப்பைத் தான் விசாரிக்க வேண்டும்.அதற்கு எதிராகத்தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் தரப்பு கேட்கின்றது.ஆனால் அப்படி ஒரு வளர்ச்சி ஐநாவிலும் ஏற்படவில்லை,மேற்கு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியிலும் ஏற்படவில்லை.

எனினும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில்  சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு அது தமிழ் மக்கள் கேட்டதை விடப் பலவீனமானது என்ற போதிலும் அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது ஒரு முன்னேற்றம்தான்.

இப்படிப்பட்டதோர் பின்னணியில்தான்,செம்மணியும் உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் தமிழ்மக்கள் தமது சக்திக்கேற்ப சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் DNA பரிசோதனைகளைச் செய்வதற்கும் பொருத்தமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது.செம்மணி தொடர்பில் மட்டுமல்ல தமிழ் மக்களிடம் பெரும்பாலான விடயங்களில் விஞ்ஞான பூர்வமாகத் தொகுக்கப்பட்ட தரவுகள் உண்டா? தன்னை பலிகடா ஆக்கிய தனது உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஒரு ராணுவ சார்ஜன் சொன்ன சாட்சியத்தை வைத்துதான் செம்மணியில் நானூறுக்கும் குறையாத உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்த விடயத்தில் செம்மணியில் எத்தனை பேர் புதைக்கப்பட்டார்கள் என்பதனை அதற்குரிய துறைசார் நிபுணர்கள் கண்டுபிடிக்கட்டும்.அதேசமயம்,செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்ற அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்பான தரவுகளைத் திரட்டவேண்டியது தமிழ் மக்களுடைய பொறுப்பு.அவ்வாறான தரவுகளைத் திரட்டும் கட்டமைப்புகள் எத்தனை தமிழ் மக்கள் மத்தியில் உண்டு?

ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 16 ஆண்டுகளின் பின்னரும், மிகப் பலமான ஒரு புலம்பெயர்ந்த  சமூகத்தைக் கொண்டிருந்த போதிலும்,  தமிழர்களால் ஏன் அவ்வாறான தரவுகளைத் திரட்டும் பொதுக் கட்டமைப்புக்களை உருவாக்க முடியாதிருக்கிறது?குறைந்தபட்சம் டிஜிட்டல் பரப்பிலாவது அவ்வாறு ஒரு பொதுவான தகவல்திரட்டும் வேலையைத் தொடங்கலாம்.இதுவிடயத்தில் அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்ற மனிதஉரிமைகள் தகவல் பகுப்பாய்வு அமைப்பின் (Human Rights Data Analysis Group: HRDAG) நிபுணத்துவ உதவியைக் கேட்கலாம்.

இன அழிப்புக்கு எதிரான நீதியைக் கோரும் போராட்டம் என்று கடந்த பதினாறு ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.நீதிக்கான போராட்டத்தை எங்கேயிருந்து தொடங்க வேண்டும்? குற்றச் செயல்களை, குற்றவாளிகளை  நிரூபிப்பதற்குத் தேவையான தகவல்களைத் திரட்டுவதில் இருந்துதான் அதைத்  தொடங்கவேண்டும்.அதற்குரிய கட்டமைப்புகள் எத்தனை தமிழ்மக்கள் மத்தியில் உண்டு ?

போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அல்லது கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விடையங்களை இப்பொழுதும் ஞாபகத்தில் வைத்திருக்கும் உறவினர்கள் கிராமங்கள் தோறும் உண்டு. அவ்வாறு உறவினர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில்தான் செம்மணிக்கு அருகே நாவற்குழியில் 1996ஆம் ஆண்டு ஒரு சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட 24தமிழர்களுக்கு நீதி கேட்டு ஒரு வழக்கு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் தொடுக்கப்பட்டது.அந்த வழக்கின் விளைவாகத்தான் அந்த வழக்கை முன்னெடுத்த சட்டவாளர் கலாநிதி குருபரனுக்கு எதிராக நிர்ப்பந்தங்கள் பிரயோகிக்கப்பட்டு முடிவில் அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீங்கினார். நாட்டை விட்டும் சிறிது காலம் விலகியிருந்தார்.இப்பொழுது அந்த வழக்கு ஒரு தென்னிலங்கை சட்டவாளரால் முன்னெடுக்கப்படுகின்றது. நிலைமாறு கால நீதியின் கீழ் உள்நாட்டு நிதியின் விரிவை பரிசோதிக்க முற்படும் வழக்குகளில் அதுவும் ஒன்று.

உள்நாட்டுப் பொறி முறையே பொருத்தமானது என்று கூறும் அரசாங்கத்துக்கும் உள்நாட்டுப் பொதுமுறையை அனைத்துலக தராதரத்துக்கு பலப்படுத்த வேண்டும் என்று கூறும் ஐநா அதிகாரிகளுக்கும் உள்நாட்டுப் பொறிமுறையின் இயலாமையை நிரூபிக்கத் தேவையான வழக்குகளைத் தமிழ் மக்கள் தொடுக்கலாம். கிரிசாந்தியின் விடயத்தில் அப்போது இருந்த அரசாங்கம் தான் நீதியாக நடந்து கொள்வதாகக் காட்டிக்கொள்ள முற்பட்டதன் விளைவாக,அதனால் தண்டிக்கப்பட்ட ஒரு படை ஆள் அரசுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கினார்.அந்த  வாக்குமூலம்தான் செம்மணியை வெளியே கொண்டு வந்தது. எனவே உள்நாட்டு நீதியின் விரிவைப் பரிசோதிப்பதற்கும் உள்நாட்டு நீதியின் போதாமைகளை உணர்த்துவதற்கும் வழக்குகளைத் தொடுப்பதற்கு சட்டச் செயற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.தமிழ் மக்கள் மத்தியில் அதற்கு தேவையான எத்தனை சட்டச் செயற்பாட்டு அமைப்புக்கள் உண்டு?

தமிழ் சட்டவாளர்கள் அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள்.அரசியல் செயல்பாட்டாளர்களாக மனிதஉரிமை செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். ஆனால் சட்டச் செயற்பாட்டு மையங்கள் என்று பார்த்தால் மிகக்குறைவு. கொழும்பை மையமாகக் கொண்ட சட்டவாளர் ரட்ணவேலும் அவருடைய அணியும் செம்மணியில் நிற்கிறார்கள்.இந்த விவகாரத்தில் மட்டுமல்ல சரணடைந்தபின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வழக்குகளையும் பெருமளவுக்கு ரட்ணவேல்தான் கையாண்டு வருகிறார்.அவருடைய மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான மையம் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள போற்றுதலுக்குரிய சட்டச் செயற்பாட்டு அமைப்பாகும்.

அதனால்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது,தமிழ்ப் பொது வேட்பாளரைத் தெரிவு செய்யும் சந்திப்பில் முதலில்  பரிசீலிக்கப்பட்டது சட்டத்தரணி ரட்ணவேல்தான்.ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார்.பொது வேட்பாளருக்காக உழைத்த மக்கள் அமைப்போடு சிவில்சமூக செயற்பாட்டாளராகிய சட்டத்தரணி புவிதரன் இணைந்து வேலை செய்தார். குருபரன் சில குறிப்பிட்ட உதவிகளைச் செய்தார்.எனினும் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய சட்ட உதவி மையங்கள்,சட்டச் செயற்பாட்டு மையங்கள்  எத்தனை உண்டு?

இத்தனைக்கும் நீதி கேட்டுப் போராடும் ஒரு மக்கள் கூட்டம். நீதிக்கான போராட்டம் என்பது குற்றம் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதில் இருந்துதான் தொடங்குகின்றது.அதற்கு வேண்டிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.அதன்மூலம் முதற்கட்டமாக உள்நாட்டு நீதியின் விரிவை பரிசோதிப்பதற்கான வழக்குகளைத் தொடுக்கலாம்.உள்நாட்டு நீதியின் போதாமை நிருபிக்கப்படும்போது அனைத்துலக நீதிப் பொறிமுறைக்கான தேவை மேலும் நிரூபிக்கப்படும்.அனைத்துலக அளவில் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு அலுவலகம்-அது பலவீனமானது என்ற போதிலும்-ஓர் அனைத்துலக யதார்த்தமாக மாறியிருக்கிறது.அது தமிழ் மக்களுக்குப் பலமானது.

தமிழ் மக்கள் நீதிக்காகப் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டு கற்பனையில் திளைக்காமல் கட்டமைப்பு சார்ந்து  சிந்திக்க வேண்டும்.முதலில் விஞ்ஞானபூர்வமாகத் தகவல்களைத் திரட்டும் தளங்களைத் திறக்க வேண்டும். இரண்டாவதாக,சட்டச் செயற்பாட்டு அமைப்புகளை உருவாக்க வேண்டும். தமிழ் மக்கள்  கட்டமைப்புச்  சார்ந்து சிந்திக்க வேண்டும்.கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.அதாவது தேசத்தைக் கட்டியெழுப்பத் தேவையான கட்டமைப்புகள்.

https://www.nillanthan.com/7526/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.