Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

14 JUL, 2025 | 03:59 PM

image

டி.பி.எஸ். ஜெயராஜ்

இலங்கையில் முக்கியமான அரசியல் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட முதல் சம்பவம் 1959 செப்டெம்பரில்  இடம்பெற்றது. பதவியில் இருந்த பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, தல்துவ சோமராம தேரோ என்ற பௌத்த பிக்குவினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது நாடு அதிர்ச்சியில் உறைந்தது. அதையடுத்து வந்த வருடங்களில் இனப்பிளவின் இருமருங்கிலும் மேலும் பல அரசியல் படுகொலைகள் இடம்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது. தமிழீழ விடுதலை புலிகள் உட்பட பல்வேறு தமிழப் போராளிக் குழுக்களினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசியல் வன்முறை, ஜனதா விமுக்தி பெரமுனவின்  ( ஜே.வி.பி.) வன்முறை மற்றும் அரசினாலும் அதன் அமைப்புக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட எதிர் வன்முறைகளில் பல வருடங்களாக பெரும் எண்ணிக்கையான அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 

தமிழ் அரசியல் தலைவர்  அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13 ஆம் திகதி கொல்லப்பட்ட சம்பவம்  இலங்கையின்  அரசியல் படுகொலைகளின் வரலாற்றில் முக்கியமான ஒரு அத்தியாயமாகும். யாழ்ப்பாணத்தில் பண்ணாகத்தைச் சேர்ந்தவரான அமிர்தலிங்கம் 1927 ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிறந்தார். ஈழத்துக்காந்தி என்று அறியப்பட்ட -- பெருமதிப்புக்குரிய தமிழ்த் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் பிரதம ' தளபதியாக ' பல வருடங்கள் செயற்பட்ட அமிர்தலிங்கம்  மக்கள் வசீகரமும் ஆற்றலும் கொண்ட ஒரு அரசியல்வாதியாவார். 

சட்டத்தரணியான அமிர்தலிங்கம் 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 1970 ஆம் ஆண்டு வரை இலங்கை தமிழரசு கட்சியின்  வட்டுக்கோட்டை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1973 ஆம் ஆண்டுவரை தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் காங்கேசன்துறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1983 ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராகவும் பதிவி வகித்த அவர், 1989  ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.

இந்திய இராணுவம் 

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும் 1987 ஜூலை 29 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திட்ட  இந்திய -- இலங்கை சமாதான உடன்படிக்கையை தொடர்ந்து இந்திய அமைதிகாக்கும் படை என்று அறியப்பட்ட இந்திய இராணுவம் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டது. இந்திய இராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் விரைவாகவே போர் மூண்டது. அதேவேளை, இலங்கையில் இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தை சிங்களவர்களில் பலரும் கூட வெறுத்தார்கள். இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தை எதிர்த்து ஜே.வி.பி.யும் வன்முறைப் போராட்டத்தை தொடங்கியது. 

முன்னர் பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாச ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு பிறகு 1988 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதியாக வந்தார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்துவது என்பது பிரேமதாசவின் முக்கியமான  தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து பிரேமதாச வழக்கத்துக்கு மாறான ஒரு நடவடிக்கையை எடுத்தார். வேறுபட்ட காரணங்களுக்காக என்றாலும், ஜனாதிபதி பிரேமதாசவும் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்று விரும்பியதனால் அவர்கள் இருவரினதும் நலன்கள் சங்கமித்தன. 

ஆனால், இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள்  நடைமுறைப்படுத்தப்படும் வரை, இலங்கையில் இந்திய இராணுவம் தொடர்ந்தும் நிலகொண்டிருக்க வேண்டும் என்று தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் போன்ற பல தமிழர்கள் விரும்பினர். அந்த சமாதான உடன்படிக்கைதான் மாகாணசபைகள் அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது.

இந்திய இராணுவம் திருப்பியனுப்பப்பட வேண்டும் என்று பிரேமதாச அரசாங்கமும் விடுதலை புலிகளும் விரும்பிய அதேவேளை,  அமிர்தலிங்கம் அதை எதிர்த்தார். அந்த கட்டத்தில் இந்திய இராணுவம் திருப்பியனுப்பப்படக் கூடாது என்று 1989 ஜூனில் அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் கடுமையாக வாதிட்டார். அமிர்தலிங்கத்தின் அரசியல் நம்பகத்தன்மை மற்றும் மதிப்பின் விளைவாக அகிம்சைவழி அரசியல் தலைவரான அவரின் அபிப்பிராயத்துக்கு சர்வதேச மட்டத்தில் செல்வாக்கு இருந்தது. 

WhatsApp_Image_2025-07-14_at_12.32.25_PM

துரோகிப் பட்டம் 

தமிழ் இளைஞர்கள் அமிர்தலிங்கத்தை மாபெரும் தலைவராக மதித்துப் போற்றிய காலம் ஒன்று இருந்தது. 1976 ஆம் ஆண்டில் தமிழீழம் என்று அழைக்கப்பட்ட தனிநாடு ஒன்றுக்கான கோரிக்கையை பிரசாரப்படுத்துவதில் அவர் தலைமைப் பாத்திரத்தைை வகித்தார். ஆனால், பிறகு அமிர்தலிங்கம் தமிழீழக் கோரிக்கையை தணித்து ஐக்கியப்பட்ட ஆனால், ஒற்றையாட்சி அல்லாத இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டில் நாட்டம் காட்டினார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் அமிரை துரோகி என்று அழைத்தனர். இந்திய இராணுவம் தொடர்பான அவரின் நிலைப்பாடு காரணமாக அமிர்தலிங்கம் மீதான  விடுதலை புலிகளின் பகைமை மேலும் அதிகரித்தது.

இத்தகைய ஒரு பின்புலத்திலேயே, 36 வருடங்களுக்கு முன்னர் அமிர்தலிங்கம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கொலை நடந்த நேரத்தில் நான் கனடாவில் இருந்தேன். ஆனால், காலஞ்சென்ற எம். சிவசிதம்பரம், கலாநிதி நீலன் திருச்செல்வம், திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், திருமதி சரோஜினி யோகேஸ்வரன், மருத்துவர் பகீரதன் அமிர்தலிங்கம், வீரசிங்கம் ஆனந்தசங்கரி, பி. சூசைதாசன் மற்றும் சோமசுந்தரம் (மாவை ) சேனாதிராஜா  போன்ற தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியுடன் தொடர்புடைய பலருடன் வெவ்வேறு நேரங்களில் அந்த சம்பவம் குறித்து நான் பேசினேன். அவர்களுடனான  சம்பாஷணைகள், நேர்காணல்கள் மற்றும் ஊடகச்செய்திகளை அடிப்படையாக வைத்து அமிர்தலிங்கத்தின் கொலை தொடர்பாக ஏற்கெனவே நான் விரிவாக எழுதியிருந்தேன்.

ஜூலை 13 ஆம் திகதி (கடந்த ஞாயிற்றுக்கிழமை)  அமிர்தலிங்கத்தின் 36 வது நினைவுதினம் வந்துபோனதால் எனது முன்னைய எழுத்துக்களின் உதவியுடன் அவரின் கொலைச் சம்பவத்தை மீட்டுப்பார்க்கிறேன்.

342/ 2 புல்லேர்ஸ் வீதி 

அமிர்தலிங்கமும் அவரது மனைவி மங்கையர்க்கரசியும் பௌத்தாலோக மாவத்தை / புல்லேர்ஸ் வீதியில் 342/2  ஆம் இலக்க இல்லத்தில் வசித்துவந்தனர். ஆடை உற்பத்தி தொழில்துறையில் ஈடுபட்ட மன்னாரைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது அந்த வீடு. அமிர்தலிங்கத்தையும் மனைவியையும் தவிர, தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் எம்.சிவசிதம்பரம், முன்னாள் யாழ்ப்பாண தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வி. யோகேஸ்வரன், அவரது மனைவி சரோஜினி, தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் இளைஞர் பிரிவின் தலைவரான மாவை சேனாதிராஜா ஆகியோரும் அந்த வீட்டில் ஒன்றாக தங்கியிருந்தனர்.

காமினி திசாநாயக்க அமைச்சராக இருந்தபோது தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தலைவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தார். மகாவலி அமைச்சைச் சேர்ந்த சில பொலிஸ் அதிகாரிகள் அந்த தலைவர்களின் பாதுகாப்புக்காக பணிக்கமர்த்தப்பட்டனர்.

அதேவேளை, விடுதலை புலிகள் முன்னாள் யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுடன் தொடர்புகளை ஏற்படுத்தத் தொடங்கினர். தமிழர்களின் ஐக்கியம் குறித்து ஆராய்வதற்காக அமிர்தலிங்கத்துடன் சந்திப்பு ஒன்றுக்கு யோகேஸ்வரன் ஏற்பாடு செய்யவேண்டும் என்று விடுதலை புலிகள் விரும்பினர். அது தொடர்பாக யோகேஸ்வரன் அமிர்தலிங்கத்துடனும் சிவசிதம்பரத்துடனும் பேசி  சந்திப்புக்கான அவர்களின் சம்மதத்தை பெற்றுக் கொண்டார். விக்னா என்ற அலோசியஸ், அறிவு என்ற சிவகுமார் ஆகிய இரு விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களே யோகேஸ்வரனுடன் தொடர்பில் இருந்தவர்கள். அமிர்தலிங்கம் தங்கியிருந்த புல்லேர்ஸ் வீதி வீட்டிலேயே சந்திப்பை நடத்தலாம் என்று யோகேஸ்வரன் புலிகளுக்கு அறிவித்தார்.

WhatsApp_Image_2025-07-14_at_12.32.24_PM

அலோசியஸ்

1989 ஜுலை 13  ஆம் திகதி காலை 10 மணியளவில் யோகேஸ்வரனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட அலோசியஸ் புல்லேர்ஸ் வீதி வீட்டில் சந்திப்பை நடத்துவதற்கான யோசனைக்கு தங்களின் இணக்கத்தை தெரிவித்தார். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அது குறித்து அமிர்தலிங்கத்துக்கும் சிவசிதம்பரத்துக்கும் யோகேஸ்வரன் அறிவித்தார்.

ஆனால், கொழும்பில் இருந்த அன்றைய இந்திய உயர்ஸ்தானிகர் லெக்கான் லால் மெஹ்ரோத்ரா தாஜ்சமுத்ரா  ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்துபசாரத்தில் இரு தலைவர்களும் கலந்துகொள்ள வேண்டியிருந்தது ஒரு தடையாக இருந்தது. மாலை 6 மணிக்கு விடுதலை புலிகளைச் சந்திப்பதற்கு தயாராயிருக்குமாறும் அதற்கு பிறகு இந்திய தூதுவரின் இரவு விருந்துபசாரத்துக்கு செல்லுமாறும  இரு தலைவர்களையும் யோகேஸ்வரன் வேண்டிக்கொண்டார். அதற்கு அவர்கள் இருவரும் இணங்கிக் கொண்டார்கள்.

அலோசியஸிடமிருந்து மாலை 4 மணியளவில் யோகேஸ்வரனுக்கு இரண்டாவது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அலோசியஸும் விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் யோகி என்ற நரேந்திரனும் சந்திப்பில் கலந்துகொள்ளும் சாத்தியம் இருந்தது. முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை போன்று மாலை 6 மணிக்கு அல்ல, மாலை 6.30 மணிக்கும் 7 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே விடுதலை புலிகள் சந்திப்புக்கு வருவார்கள் என்று அலோசியஸ் அறிவித்தார்.

யோகேஸ்வரன் 

அலோசியஸ் ஒரு வேண்டுகோளையும் விடுத்தார். தங்களிடம் ஆயுதங்கள் இருக்கிறதா இல்லையா என்று பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்வது யோகியின் தரத்தில் உள்ள ஒரு தலைவரை அவமதிப்பதாக அமையும் என்பதால் அவ்வாறு சோதனை எதையும் செய்யக்கூடாது என்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூறிவைக்குமாறு யோகேஸ்வரனிடம் அலோசியஸ் கேட்டுக் கொண்டார்.  பேச்சுக்களில் யோகி பங்கேற்கும் சாத்தியம் குறித்து யோகேஸ்வரனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவர் உடனடியாக  பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த சப் - இன்ஸ்பெக்டர் தம்பிராஜா கந்தசாமியிடம் பேச்சுக்களில் பங்கேற்கவிருக்கும் விடுதலை புலிகள் குழுவினரை அவமதிப்பதாக அமையும் என்பதால் அவர்களை சோதனை செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தினார். "இந்த பயல்களை நம்பமுடியாது சேர்" என்று  கூறி கந்தசாமி ஆட்சேபித்தார். விபரீதமாக எதுவும் நடக்காது என்று அவரிடம் யோகேஸ்வரன் உறுதியளித்தார்.

விடுதலை புலிகளின் மூத்த தலைவர் ஒருவர் பேச்சுக்களில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் அவமதிக்கப்படுவதாக உணரக்கூடாது என்றும் யோகேஸ்வரன் கூறினார். "அவர்கள் எங்களது விருந்தினர்கள் என்பதால் அவர்களை மிகுந்த மரியாதையுடன் நாம் நடத்தவேண்டும். அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தால் எதிர்காலத்தில் எம்மிடம் அவர்கள் வரமாட்டார்கள். எமது பேச்சுக்கள்  முறிவடைந்துவிடும்" என்று யோகேஸ் கூறினார். கந்தசாமி தயக்கத்துடன் இணக்கி தனக்கு கீழ் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதன் பிரகாரம் அறிவுறுத்தினார்.

யோகேஸ்வரனும் மனைவி சரோஜினியும் சிவசிதம்பரத்துடன் சேர்ந்து வீட்டின் மேல்மாடியில் தங்கியிருந்த அதேவேளை, அமிர்தலிங்கமும் மனைவியும் மாவை சேனாதிராஜாவும் கீழ்த்தளத்தில் குடியிருந்தனர். 

விக்னா, விசு, அறிவு 

மூன்று விடுதலை புலிகளும் வந்து சேர்ந்தபோது  மாலை 6.40 மணி. எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, யோகியை அங்கு காணவில்லை. விசு என்ற இராசையா அரவிந்தராஜா, விக்னா என்ற பீட்டர் லியோன் அலோசியஸ், அறிவு என்ற சிவகுமார் -- இவர்கள் மூவருமே வந்திருந்தனர். வாசலில் காவல் கடமையில் இருந்த சத்தியமூர்த்தி என்ற பொலிஸ் அதிகாரி மூவரையும் சோதனை எதுவுமின்றி உள்ளே அனுமதித்தார்.

சத்தியமூர்த்தி கந்தசாமிக்கு அறிவித்தபோது கந்தசாமி அவர்கள் மூவரையும் யோகேஸ்வரனை சந்திக்க மேல்மாடிக்கு அனுப்புமாறு கூறினார்.  விசுவும் அலோசியஸும் மேலே சென்ற அதேவேளை, அறிவு மாடிப்படிகளின் அடியில் நின்றுகொண்டார்.

மேல்மாடியில் யோகேஸ்வரனும் மனைவியும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர்.  விடுதலை புலிகள் வந்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டதும் படிகளில் அரைவழியில் இறங்கிவந்து யோகேஸ்வரன் விசுவையும் அலோசியஸையும் சந்தித்தார். யோகி வரவில்லை என்று ஏமாற்றமடைந்தாலும் யோகேஸ்வரன் விசுவை அன்புடன் வரவேற்றார். 

அவர்கள் அமர்ந்திருந்து பேசினர். சரோஜினி சிற்றுண்டிகள் தயாரிப்பதற்கு சென்றார். கீழ்த்தளத்தில் இன்னொரு அறையில் சிவசதம்பரம், மாவை சேனாதிராஜா மற்றும் மங்கையர்க்கரசி சகிதம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அமிர்தலிங்கத்துக்கு ராஜு என்ற வேலைக்காரப் பையன் மூலமாக யோகேஸ்வரன் குறிப்பொன்றை அனுப்பினார். இந்திய தூதுவரின் விருந்துபசாரத்துக்கு செலாவதற்காக நன்றாக உடுத்து தயாராகியிருந்த அமிரும் சிவாவும் மேல்மாடிக்கு சென்ற அதேவேளை, மங்கையர்க்கரசியும் சேனாதிராஜாவும் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர்.

அமிரும் சிவாவும் அறைக்குள் பிவேசித்ததும் விசுவும் அலோசியஸும் எழுந்து நின்று வரவேற்றனர். ஒருவரின் தோழில் தட்டிய அமிர்தலிங்கம் அவர்கள் இருவருக்கும் இடையில் பிரம்புக்கதிரை ஒன்றில் அமர்ந்தார்.சிவசிதம்பரம் சற்று தள்ளி அமர்ந்தார்.

யோகேஸ்வரன் சிற்றுண்டிகள் தயாரித்துக் கொண்டிருந்த சரோஜினிக்கு  உதவுவதற்காக எழுந்து சென்றார். சரோஜினி தக்காளி சாண்ட்விச்களையும் பிஸ்கட்களையும் கொண்டுவந்தார். என்ன குடிக்க விரும்புகிறீர்கள் என்று விசுவையும் அலோசியஸையும் சரோஜினி கேட்டார். மென்பானம் அருந்துவதற்கு  இரு புலிகளும்  விரும்பினர். அமிர்தலிங்கம் தேனீரை விரும்பினார். சிவாவும் யோகேஸும் எதையும் குடிக்க விரும்பவில்லை. சரோஜினி இரு பழரச பானங்களையும் ஒரு தேனீரையும் கொண்டு வந்தார். அதற்கு பிறகு அவர் தனது அறைக்கு சென்றுவிட்டார்.

WhatsApp_Image_2025-07-14_at_12.32.25_PM

சுமுகமான சம்பாஷணை 

யோகேஸ்வரன் அறிமுகம் செய்துவைத்த பிறகு இரு விடுதலை புலிகளும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தலைவர்களை  சந்திப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று கூறினர். அதே உணர்வுகளையே அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் பதிலுக்கு வெளிப்படுத்தினர். தமிழப் போராளிகளின் அர்ப்பணிப்பையும் தியாகங்களையும் தாங்கள் பெரிதும் மதித்து பாராட்டுவதாக தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் இரு தலைவர்களும் கூறினர். 

சகல தமிழ்க்குழுக்களும் ஒன்றுபட்டு பொதுவான அணுகுமுறை ஒன்றை வகுக்கவேண்டியது இப்போது அவசியம் என்றும் அல்லாவிட்டால் இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் மூலமாகக் கிடைத்த விளைவுகள் பயனற்றுப்போய்விடும் என்றும் அவர்கள் கூறினர். எந்தவொரு அரசியல் ஏற்பாட்டிலும் விடுதலை புலிகளுக்கு பெருமைக்குரிய இடம் வழங்கப்படும் என்று அமிர்தலிங்கம் உறுதியளித்தார் 

வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை விடுதலை புலிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவதாக விசு கூறினார். விடுதலை புலிகளின் உயர்பீடம் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்து இந்த விடயங்களை ஆராய்வதற்கு அக்கறையாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். கொழும்பில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியைச் சந்தித்து மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு விடுதலை புலிகளின் மூத்த தலைவர்கள் தயாராயிருப்பார்கள்  என்றும் விசு குறிப்பிட்டார். இரு தரப்புகளுக்கும் இடையிலான சம்பாஷணை மிகவும் சுமுகமானதாக அமைந்தது. பெரும்பாலான கருத்துப்பரிமாறல்கள் அமிர் -- சிவா இரட்டையர்களுக்கும் விசுவுக்கும் இடையிலானதாக இருந்த அதேவேளை, யோகேஸ்வரனும் அலோசியஸும் பொதுவில் அமைதியாக இருந்தனர்.

ஒரு கட்டத்தில் அமிர்தலிங்கம் விடுதலை புலிகள் ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதற்கான நேரம் வந்துவிட்டது என்று நல்லெண்ணத்துடன் கூறினார். "உங்களைப் போன்ற இளைஞர்கள் எல்லோருக்கும் ஜனநாயகம் பழைய பாணியிலானதாக தோன்றக்கூடும். ஆனால், உங்களுக்கு பழையவர்கள் கூறுகின்றவற்றையும் அமைதியாகக் கேளுங்கள்" என்று சிவசிதம்பரம் கூறினார்.

மேல்மாடியில் பேச்சுவார்த்தை  சுமுகமான முறையில் தொடர்ந்துகொண்டிருந்த அதேவேளை, கீழ் மாடியில் ஏதோ பரபரப்பு காணப்பட்டது. கீழே காத்துக்கொண்டிருந்த அறிவு என்ற சிவகுமார் மாலை  7மணிக்கு பிறகு குழப்படையத் தொடங்கி விட்டார். அவர் தனது கைக்கடிகாரத்தை பார்த்தவாறு அமைதியிழந்தவராக மேல்மாடியை நோக்கி அடிக்கடி நோக்கிக் கொண்டிருந்தார்.

நிசங்க திப்பொட்டுமுனுவ 

கடமையில் இருந்த பொலிஸ்காரர்களில்  ஒருவருக்கு சிவகுமாரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரின் பெயர் நிசங்க திப்பொட்டுமுனுவ. அவரின் சொந்த இடம் கேகாலை மாவட்டத்தில் ஹெட்டிமுல்லவில் உள்ள அக்கிரியாகல என்ற கிராமமாகும். நிசங்க மகாவலி அமைச்சில் இருந்தே அமிர்தலிங்கத்தின் பாதுகாப்பு கடமைக்காக அனுப்பப்பட்டவர்.

நிசங்கவும் சத்தியமூர்த்தியும் சிவகுமாரை பலவந்தமாக சோதனை நடத்தி கிரனேட் ஒன்றும்  துப்பாக்கி ரவைகளும்  அவரிடம் இருந்ததைக் கண்டுபிடித்தனர். அது குறித்து தம்பிராஜா கந்தசாமிக்கு அறிவிக்கப்பட்டது. சிவகுமாரை சத்தியமூர்த்தியின் காவலில் வைத்த பிறகு  கந்தசாமியும் நிசங்கவும் அமைதியாக மேல்மாடிக்குச் சென்றனர்.

கந்தசாமி மாடிப்படிகளின் உச்சியில் நிற்க நிசங்க பல்கணிக்கு சென்று பிரதான அறைக்குள் இருந்தவர்கள் தன்னை பார்க்கமுடியாதவாறு நி்ன்றுகொண்டார். நடைபெற்றுக் கொண்டிருந்த பேச்சுவார்த்தையை குழப்புவதற்கு இருவரும் விரும்பவில்லை. ஆனால், சிவகுமாரிடமிருந்து கிரனேட்டும் துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டதால் உஷார் நிலையில் தயாராயிருந்தனர். அறைக்குள்ளே தோழமை  உணர்வு தொடர்ந்து நிலவியது. அதற்கு பிறகு நடந்தது இது தான்.

நீங்கள் தான் உண்மையான அரக்கர்கள்

அப்போது இரவு 7.20 மணி. விசு தனது பானத்தைக் குடித்து முடித்தபிறகு வெற்றுக் கிளாஸை மேசையில் வைப்பதற்காக எழுந்தார். பிறகு உடனே திரும்பி அமிர்தலிங்கத்தை பார்த்து "எல்லோரும் புலிகளைத்தான் அரக்கர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் நீங்கள் எல்லோரும்தான் அரக்கர்கள்" என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் மூன்று தலைவர்களும் விசு ஏதோ பகிடி விடுவதாக நினைத்துக் கொண்டனர்.

யோகேஸ்வரன் பலத்த சத்தத்துடன் சிரிக்க அமிரும் சிவாவும  புனமுறுவல் பூத்தனர். அப்போது விசு தனது துப்பாக்கியை எடுத்து அமிர்தலிங்கத்தை நோக்கிச் சுடத் தொடங்கினார். யோகேஸ்வரன் சத்தமிட்டவாறு தனது கதிரையில் இருந்து எழுந்தார். அப்போது அலோசியஸ் தனது துப்பாக்கியால் யோகேஸ்வரனை நோக்கிச் சுட்டார். சற்று தள்ளி அமர்ந்திருந்த சிவசிதம்பரம் அதிர்ச்சியடைந்தவராக எழுந்து " வேண்டாம், வேண்டாம் " என்று தமிழில் கத்தினார். அப்போது விசு சிவாவின  வலது தோளில் சுட்டார்.

துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டு  அறையின் உள்ளே பார்த்த நிசங்க ஜன்னல் கண்ணாடிகளின் ஊடாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். அவர் விசுவையும் அலோசியஸையும் சுட்டுக் காயப்படுத்தினார். அப்போது  இருவரும் அறையை விட்டு வெளியே ஓடினர். சூட்டுச் சத்தங்களைக் கேட்ட கந்தசாமியும் அவர்கள் இருவரையும் நோக்கி சுட்டுக்கொண்டு ஓடிவந்தார். காயமடைந்த விசுவும் அலோசியஸும் திருப்பிச் சுட்டுக் கொண்டு படிகளின் வழியாக கீழே ஓடுவதற்கு முயற்சித்தனர். ஆனால், நிசங்க தன்னிடமிருந்த இரண்டாவது துப்பாக்கியால் இருவரையும் நோக்கி தொடர்ந்து சுட்டுக் கொண்டேயிருந்தார். இருவரும் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டதும் சத்தியமூர்த்தி சிவகுமாரைப் பிடித்தவாறு  மல்லுக் கட்டிக்கொண்டிருந்தார். 

சத்தியமூர்த்தியிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட சிவகுமார்  ஏற்கெனவே தன்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட கிரனேட்டை எடுக்க முயற்சித்தார். அதை அவர் எடுத்து வெடிக்க வைக்க முன்னதாக நிசங்க படிகளில் இருந்து கீழே ஓடிவந்து அவரைச் சுட்டுக் காயப்படுத்தினரார். அப்போது சிவகுமார் ஓட முயற்சிக்கவே நிசங்க மீண்டும் அவரை நோக்கச்சுட்டுக் கீழே கொண்டுவந்தார். மூன்று கொலையாளிகளுமே சம்பவ இடத்தில் நிசங்கவினால் கொல்லப்பட்டனர்.

நிசங்கவின் சூடுகளினாலேயே விடுதலை புலிகள் இறந்தார்கள் என்றபோதிலும், மற்றையவர்களும்  கூட அவர்கள்  மீது தாக்குதல்களை நடத்தினார்கள். சப் - இன்ஸ்பெக்டர் கந்தசாமி அலோசியஸை சுட்டுக் காயப்படுத்திய அதேவேளை, கான்ஸ்டபிள் லக்ஸ்மனின் துப்பாக்கிப் பிரயோகத்தில்  விசுவும்  அறிவும் காயமடைந்தனர்.  இரு அதிகாரிகளும் தமிழர்கள் என்பதால் அவர்களது குடும்பங்களை  விடுதலை புலிகள்  பழிவாங்காமல் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாக அவர்கள் நடத்திய தாக்குதல் விபரங்கள் பத்திரிகைகளில் அப்போது வெளியிடப்படவில்லை. 

இரண்டாவது துப்பாக்கி 

துப்பாக்கிச் சண்டையில் நிசங்கவுக்கு பெரிதும் உதவியது அவரிடமிருந்த இரண்டாவது துப்பாக்கியேயாகும். குறிப்பாக, அறிவு முதலில் சுடப்பட்டபோது அவர் தனது கையில் கிரனேட்டை வைத்திருந்தார். அதனால் புலிகளை வெற்றிகொள்வதற்கு நிசங்கவிடமிருந்த இரண்டாவது துப்பாக்கி கைகொடுத்தது. அதற்கு காரணம் அமிர்தலிங்கத்தின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் இருந்த இன்னொரு பொலிஸ்காரர் அன்றையதினம் விடுமுறையில் சென்றிருந்ததேயாகும். சில்வா என்ற அந்த பொலிஸ்காரர் நிசங்கவிடம் தனது ஆயுதத்தை ஒப்படைத்திருந்தார். அதனால் புலிகள் மீது இரு துப்பாக்கிகளினால் நிசங்கவினால் தாக்குதல் நடத்தக் கூடியதாக இருந்தது. மகாவலி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த நிசங்கவும் சில்வாவும் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளாக அமிர்தலிங்கத்தின் பாதுகாப்புக்காக காமினி திசாநாயக்கவினால் தனிப்பட்ட முறையில்  கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர். 

" பாஸ்ராட்ஸ், பாஸ்ராட்ஸ்" 

துப்பாக்கிச் சூட்டு சத்தங்களை கேட்டு மங்கையர்க்கரசி, சரோஜினி, மாவை சேனாதிராஜா ஆகியோர் பின்புறமாக இருந்த படிகளின் வழியாக மேல்மாடிக்கு ஓடிச் சென்றனர். அமிர்தலிங்கம் இரத்தம் வடிந்தோடிய நிலையில் அசைவின்றி தனது கதிரையில் கிடந்தார். அவர் இறந்துவிட்டார் எனப்தை அறியாத மங்கையர்க்கரசி அவரின் தலையின் பின்புறத்தில் தலையணை ஒன்றை வைத்து அவரை தாங்கிப்பிடித்தார். நிலத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்துகொண்டிருந்த யோகேஸ்வரன் " பாஸ்ராட்ஸ், பாஸ்ராட்ஸ் " என்று  ஆங்கிலத்தில் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவரின் அருகில் மனைவி சரோஜினி முழந்தாளிட்டு நின்றுகொண்டிருந்தார். சிவசிதம்பரம் பேசமுடியாதவராக சுவரில் சாய்ந்து கிடந்தார்.  சுடப்பட்ட தலைவர்கள்  அம்புலன்ஸ்களில் வைத்தியசாலைக்கு விரையப்பட்டனர்.

அமிர்தலிங்கத்தின் உடலை பரிசோதனை செய்த கொழும்பு சட்டமருத்துவ அதிகாரி  டாக்டர் எம்.எஸ். எல். சல்காது தலையிலும் நெஞ்சிலும் ஏற்பட்ட காயங்களினால் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார். யோகேஸ்வரனின் உடலைப் பரிசோதித்த பிரதி மருத்துவ அதிகாரி இதயத்திலும் ஈரலிலும் ஏற்பட்ட காயங்களினால் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார்.

விடுதலை புலிகளின் " மறுப்பு " 

கொலையாளிகள் மீதான  மரணவிசாரணை ஜூலை 21 ஆம் திகதி நடைத்தப்பட்டது. அவர்களின் சடலங்களை பொறுப்பேற்பதற்கு எவரும் உரிமைகோரி வரவில்லை என்பதால் கணிசமான நாட்களுக்கு பிறகு அவை அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டன. தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தலைவர்களின் கொலைக்கு தாங்கள் பொறுப்பில்லை என்று கூறிய விடுதலை புலிகள்  இயக்கம் அந்த மறுப்பை தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தது. ஆனால், ஆனந்தபுரத்தில் ஒரு போலி இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. கொலைகளுக்கு விடுதலை புலிகளே பொறுப்பு என்பதே தமிழ்ச் சமூகத்தில் கதையாக இருந்தது.

கொலையாளிகள் மூவரும் உயிருடன் தப்பிச் சென்றிருந்தால் கொலைகளுக்கு பொறுப்பு என்ற குற்றஞ்சாட்டப்படுவதில் இருந்து விடுதலை புலிகள் இயக்கம் தப்பியிருக்கக்கூடும். அன்றைய பிரேமதாச அரசாங்கமும் கொலைகளுக்கு விடுதலை புலிகள் பொறுப்பு இல்லை என்று காட்டுவதற்கு சகல பிரயத்தனங்களையும்  எடுத்திருக்கவும் கூடும். குற்றப்பொறுப்பு ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) அல்லது புதுடில்லிக்கு சார்பான தமிழ்க்குழு ஒன்றின் மீது சுமத்தப்பட்டிருக்கவும் கூடும். 

அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த பேச்சுவார்த்தைகளை குழப்புவதற்கான  ஒரு சதிமுயற்சியாகவே தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று கதை கட்டிவிடப்பட்டிருக்கவும் கூடும்.  ஆனால், அத்தகைய சூழ்நிலைக்கு வாய்ப்பு இல்லாமல் பே்ய்விட்டது. ஏனென்றால் மூன்று விடுதலை புலிகளும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதுடன  அவர்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்டும் இருந்தன. 

இந்த சோகமிகுந்த  சம்பவத்தில் ' ஹீரோ ' மூன்று கொலையாளிகளையும் சுட்டுக்கொன்ற சிங்கள பொலிஸ்காரர் நிசங்க திப்பொட்டுமுனுவவேயாவார். ஒரு கொலை முயற்சியில் சம்பந்தப்பட்ட சகல விடுதலை புலிகள் இயக்கத்தின் கொலையாளிகளும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட முதலாவது சம்பவமும் ஒரேயொரு சம்பவமும் இதுவேயாகும்.

சிவசிதம்பரம் 

தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி அல்லது இலங்கை தமிழரசு கட்சி பல வருடங்களுக்கு முன்னர்  முயற்சி எடுத்திருந்தால் அமிர்தலிங்கம் கொலை பற்றி விரிவான முறையில் உண்மையை வெளிக்கொணரக்கூடியதாக இருந்திருக்கும். கொலைகளை நேரில் கண்ட ஒரேயொரு சாட்சியான முருகேசு சிவசிதம்பரம் சம்பவம் தொடர்பான விடயங்கள் குறித்து வெளிப்படையாக பேசாமல் மௌனம் காத்தார்.  அவ்வாறு அவர் செய்ததை அன்று நிலவிய சூழ்நிலைகளின் பின்புலத்தில் விளங்கிக்கொள்ள முடிந்தது. ஆனால், என்ன நடந்தது என்பதை குறிப்பிட்ட ஒரு சிலருக்கு சிவசிதம்பரம் தனிப்பட்ட முறையில் விரிவான  முறையில் கூறினார்.

"சிவா ஐயா"   உண்மையாக என்ன நடந்தது என்பதை ஒரு தொலைபேசி சம்பாஷணையில் என்னிடம்  முழு விபரமாகக் கூறினார். அவரது நினைவுத் திறனுக்காக நான் பாராட்டியபோது "அன்றைய தினம் நடந்ததை எவ்வாறு தம்பி என்னால் மறக்கமுடியும்? " என்று கூறினார்.

அவருக்கும் எனக்கும் இடையிலான அந்த தொலைபேசி சம்பாஷணை கொலைச்சம்பவம் இடம்பெற்று சில வருடங்களுக்கு பிறகு நடந்தது. அன்று எனக்கு கூறியவற்றை பிரசுரிக்கக்கூடாது என்று சிவா ஐயா என்னிடம் உறுதி வாங்கினார்.  "நான் செத்தபிறகு நீங்கள் எழுதலாம்" என்று அவர் கூறினார்.  2002 ஜூனில் சிவா ஐயா இறந்தார்.  மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்துடனும் சரோஜினி யோகேஸ்வரனுடனும் கொலைச்சம்பவங்கள் குறித்து அவர்களின் நினைவுகள் பற்றி நான் பேசினேன். 1998 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாநகர மேயராக தெரிவான திருமதி யோகேஸ்வரனும் விடுதலை புலிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்பது இன்னொரு சோகக்கதை. திருமதி அமிர்தலிங்கம் 2016 ஆம் ஆண்டில் லண்டனில்  அமைதியாக மரணத்தை தழுவினார். 

சிறிமாவோ கவலை 

இதுதான் யோகேஸ்வரனுடன் சேர்த்து  முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் விடுதலை புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட துன்பியல் கதை. அன்றைய எதிச்க்கட்சி தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு தமிழ்த் தலைவர்களின் கொலை குறித்து லசந்த விக்கிரமதுங்க அறிவித்தபோது அவர் "யார் இதைச் செய்தது?"  என்று பதறிக்கொண்டு கேட்டார். விடுதலை புலிகள் தான் செய்தார்கள் என்று லசந்த கூறியபோது நிம்மதிப் பெருமூச்சுவிட்ட திருமதி பண்டாரநாயக்க "அவர்களை சிங்களவர் ஒருவர் கொலை செய்வில்லை என்பது எனக்கு மகிழ்ச்சி" பதிலளித்தார்.

அமிர்தலிங்கத்தின் அரசியலை சிங்களவர்களில் பலர் வெறுத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அவரைக் கொலை செய்யவில்லை. அமிர்தலிங்கத்தை முன்னர் தங்களது ஹீரோவாக கருதிய தமிழ் இளைஞர்களே கொலை செய்தார்கள்.

https://www.virakesari.lk/article/219983

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையில் வரும் ஒரு பாத்திரமான சேனாதி அண்ணன் வலுசுழியன் பாருங்கோ! கதிரைக்காக கடைசிவரை வாய்திறக்கவே இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பொலிசார் திறமையாக செயற்பட்டு மூன்று கொலையாளிகளும் தப்பி செல்ல விடாது அவர்களை சுட்டு கொலை செய்யப்பட்டது நல்ல விடயம். வீட்டுக்கு விருந்தினர்களாக வந்து அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகிய இருவரின் மனைவிமார் கையால் பிஸ்கட் தேனீரும் வாங்கி குடித்துவிட்டு அவர்களின் கணவரை படுகொலை செய்த நம்பிக்கை துரோகிகளான அயோக்கியர்களை சுட்ட நிசாங்க பாராட்டுக்குரியவர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.