Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ், கோலிவுட், சினிமா உலகம், பா. ரஞ்சித், பொழுதுபோக்கு

பட மூலாதாரம்,@BEEMJI/X

படக்குறிப்பு, உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ்

கட்டுரை தகவல்

  • கார்த்திக் கிருஷ்ணா

  • பிபிசி தமிழுக்காக

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

நாகப்பட்டினத்தில் ஜூலை 13, 2025 அன்று, அனுபவமிக்க ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் (எஸ்.எம். ராஜு) ஒரு ஆபத்தான கார் சாகசக் காட்சியின் போது உயிரிழந்தார்.

திரை மறைவு நாயகர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகள், சமீபத்தில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் படப்பிடிப்பில் நடந்த துயரச் சம்பவத்தால் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன.

பாதுகாப்பு அம்சங்கள் சரியாக இல்லை என இந்தச் சம்பவம் குறித்து அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் குப்தா கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆனால், சண்டைக்காட்சி படப்பிடிப்பின்போது போதிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுவதாக சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா கூறுகிறார்.

திரைப்படங்கள் என்கிற மாயாஜால உலகின் முகவரியாக இருப்பவர்கள் நடிகர்கள். குறிப்பாக ரசிகர்கள் எப்போதும் புகழ் வெளிச்சத்தில் நிறுத்தி மகிழ்வது, கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும்தான்.

ஆனால், திரைக்குப் பின்னால் ஆயிரக்கணக்கான கலைஞர்களின், பணியாளர்களின் உழைப்பும் சேர்ந்தே ஒரு திரைப்படம் உருவாகிறது.

இதில், வியக்கவைக்கும் சாகசங்களை திரையில் உருவாக்கும் ஸ்டண்ட் கலைஞர்கள், ஒவ்வொரு திரைப்படத்துக்கும் ஈடற்ற மதிப்பை சேர்க்கின்றனர். ஆனால் மற்றவர்களைப் போலவே இவர்களின் பங்களிப்பும் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படுவதில்லை.

ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ், கோலிவுட், சினிமா உலகம், பா. ரஞ்சித், பொழுதுபோக்கு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, திரைப்படக் குழுவினர் (சித்தரிப்புக் காட்சி)

இயக்குநர் ரஞ்சித் இரங்கல்

ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் இறந்த சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் இயக்குநர் ரஞ்சித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது. செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம்" என்று ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிட்ட கார் சாகசக் காட்சியை எடுக்கும் முன்பு, எப்போதும் செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள் என எல்லாம் இருந்தன என்று குறிப்பிட்டுள்ள ரஞ்சித், அந்த நாள் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

மோகன்ராஜ் இறப்புக்கு நடிகர்கள் பாபி சிம்ஹா, ப்ரித்விராஜ், விஷால், நடிகை துஷாரா, இயக்குநர்கள் மாரி செல்வராஜ், வெங்கட்பிரபு உள்ளிட்டோர் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள் ஆர்யா, கலையரசன் உட்பட வேட்டுவம் திரைப்படக் குழுவினர் பலரும், மோகன்ராஜின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

"எக்ஸ் தளத்தில் பதிவு போடுவதோடு மட்டுமல்ல, மோகன்ராஜின் குடும்பத்துக்காக நான் ஆதரவாக இருப்பேன். அவர் திரைத்துறைக்கு ஆற்றிய பங்கை மனதில் வைத்து, நானும் திரைத்துறையைச் சேர்ந்தவன் என்கிற முறையில், அவர்களுக்கு ஆதரவளிப்பது எனது கடமை" என்று பகிர்ந்துள்ளார் நடிகர் விஷால்.

52 வயதான மோகன்ராஜ், மங்காத்தா, சிங்கம், வேலாயுதம், பிரியாணி, லூசிஃபர், துணிவு எனப் பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்களில், மிகப்பெரிய சூப்பர்ஹிட் திரைப்படங்களில் ஸ்டண்ட் கலைஞராக பணியாற்றியவர்.

கிட்டத்தட்ட தனது அத்தனை படங்களிலும் மோகன்ராஜின் பங்கு இருந்திருக்கிறது என இயக்குநர் வெங்கட் பிரபு தனது இரங்கலில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் கார் சாகசக் காட்சி என்றாலே அதற்கு சண்டைப்பயிற்சி இயக்குநர்களின் முதல் விருப்பம் மோகன்ராஜாகத்தான் இருந்திருக்கிறார்.

பல நூறு முறை, பல ஆபத்தான சண்டைக் காட்சிகளில் பங்கேற்று பாதுகாப்பான கலைஞர் என்று பெயரெடுத்துள்ளார் மோகன்ராஜ்.

ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ், கோலிவுட், சினிமா உலகம், பா. ரஞ்சித், பொழுதுபோக்கு

பட மூலாதாரம்,@BEEMJI/X

ஸ்டண்ட் கலைஞர்கள் கூறுவது என்ன?

மோகன்ராஜ் பற்றியும், படப்பிடிப்புகளில் சண்டைக் காட்சிகளுக்கான பாதுகாப்பு பற்றியும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி சண்டைப் பயிற்சி இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் ஸ்டண்ட் சில்வா பிபிசி தமிழிடம் பேசியபோது, "எனது பல வெற்றிப் படங்களின் சண்டைக் காட்சிகளில் முக்கியப் பங்கு வகித்தவர் மோகன்ராஜ். அவரது இறப்பு மிகவும் துரதிஷ்டவசமானது.''என்றார்

''அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தில் அவர் செய்த சாகசக் காட்சிகள் எல்லாம் இப்போது நினைத்தாலும் பயத்தைத் தரும். ஒருவர் இப்படியான கார் சாகசக் காட்சியை செய்யப் போகிறார் எனும்போது, அதிக பதற்றம், பயம், எங்களைப் போன்ற சண்டைப் பயிற்சி இயக்குநர்களுக்குத்தான் இருக்கும். ஏனென்றால் எங்களுக்காக, எங்கள் சார்பாகத்தான் அவர் இதைச் செய்யப் போகிறார்.

வினோதய சித்தம் என்கிற திரைப்படத்தில் உயரத்திலிருந்து மோகன்ராஜ் கீழே விழும்போது அவரது ஹெல்மெட் விலகிவிட்டது. நானும் நடிகர் சமுத்திரகனியும் பதறியடித்து அவரிடம் சென்றோம். அவர் எதுவும் ஆகவில்லை என்று பதற்றமின்றி எழுந்து வந்தார்.'' என்கிறார் ஸ்டண்ட் சில்வா.

''வேட்டுவம் திரைப்படத்தில் விபத்து ஏற்பட்டது ஒரு மணல் வெளியில், அவர் எளிதாக செய்து முடிக்கும் ஒரு சாகச் காட்சி இது. உடற்கூறாய்வு அறிக்கையில் அவருக்கு அடிபடவில்லை, எங்கும் ரத்தக் கசிவு இல்லை என்று தெரியவந்துள்ளது. அப்படி இருக்கையில் அவர் உயிர் பிரிந்திருக்கிறது என்பது மிகப்பெரிய துரதிர்ஷ்டமே. சென்ற வாரம் என்னுடன் அமர்ந்து சாப்பிட்டவர், இப்போது உயிரோடு இல்லை என்பதை நம்ப முடியவில்லை" என்கிறார் சில்வா.

ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ், கோலிவுட், சினிமா உலகம், பா. ரஞ்சித், பொழுதுபோக்கு

பட மூலாதாரம்,STUNT SILVA/FACEBOOK

படக்குறிப்பு, படப்பிடிப்புத் தளத்தில் ஸ்டண்ட் சில்வா

பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளன?

தற்போது சண்டைக் காட்சிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எழுப்பப்பட்டு வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், "சமூக ஊடகங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விமர்சிப்பவர்கள் திரைத் துறையின் உண்மையான நிலவரம் என்னவென்று தெரியாமல் பொதுவாகப் பேசுகிறார்கள். எல்லா விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டே சண்டைக் காட்சிகள் படம்பிடிக்கப்படுகின்றன. 25 வருடங்களுக்கு முன் வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அப்படி இல்லை.'' என்கிறார் ஸ்டண்ட் சில்வா

''ஹாலிவுட்டுக்கு நிகரான பாதுகாப்பு ஏற்பாடுகள் நமது ஊரிலும் உள்ளன. ஹாலிவுட்டைச் சேர்ந்த பல சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் நம் திரைப்படங்களில் பணியாற்றுக்கின்றனர்.

ஹாலிவுட்டில் கூட இது போல மிக அரிதாக விபத்துகள் நடந்துள்ளன. எனவே ஒரு சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் அத்தனையும் செய்யப்படும். எங்கள் சங்கத்தில் 750 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை என்பது மிக மிகக் குறைவு. எனவே ஒரு சம்பவத்தை வைத்து பொதுவாக குற்றம்சாட்டக் கூடாது" என்று கூறுகிறார் சில்வா.

சண்டைப் பயிற்சி கலைஞர்களுக்கான மருத்துவ உதவி, மருத்துவ காப்பீடு குறித்தும் சரியான புரிதல் இல்லை என்கிறார் சில்வா.

"ஒரு காலத்தில் சண்டைப் பயிற்சி கலைஞர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட விஷயங்களும் கிடையாது. ஆனால் நடிகர் சூர்யாவின் முன்னெடுப்பினால் எங்களுக்கு தற்போது காப்பீடும் உள்ளது. பல வருடங்கள் சூர்யாவே எங்களுக்கான காப்பீடு செலவை பார்த்துக் கொண்டார்.

அவருக்கு மிகப்பெரிய நன்றியைக் கூற வேண்டும். இந்தப் பாதையைப் போட்டுக் கொடுத்தவர் அவர்தான். தற்போது எங்கள் சங்கமே காப்பீடுக்கான செலவை செய்து வருகிறது. மற்றவர்களுக்கான ப்ரீமியம் தொகையை விட எங்களுக்கான தொகை சற்று அதிகமாக இருக்கும். அவ்வளவே. பாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு தொடர்ந்து நடிகர் அக்‌ஷய் குமார் காப்பீடு உள்ளிட்ட உதவிகளைச் செய்து வருகிறார்.'' என்கிறார் அவர்.

''மோகன்ராஜ் குடும்பத்துக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் எங்கள் சங்கம் செய்யும். சங்கத்தில் உறுப்பினராவதே அதற்காகத்தானே''.

இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் குப்தா

பட மூலாதாரம்,PTI

படக்குறிப்பு, இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் குப்தா

எழும் கண்டனக் குரல்கள்

சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்புக்கு தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து எப்படியான ஆதரவு கிடைக்கிறது என்பது பற்றி ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபுவிடம் பேசியபோது, "பொதுவாக பெரிய சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்புக்குத்தான் செலவு அதிகம். ஆனால் தயாரிப்பாளர்கள் யாரும் அதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதில்லை.

தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்துக்கும் செலவு செய்கிறோம். இப்போதெல்லாம் ஒரு சண்டைக் காட்சியின் படப்பிடிப்பில் ஆம்புலன்ஸ், மருத்துவர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஒருவகையில் கட்டாயமாக்கப்பட்டுவிட்டன. மேலும் பெரிய பொருட்செலவில் தயாராகும் திரைப்படங்களுக்கு காப்பீடும் செய்யப்படுகின்றன" என்று கூறினார்.

மோகன்ராஜ் இறப்பு தொடர்பாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தரப்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் சுரேஷ் குப்தா, இந்தச் சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "உலக சினிமா அனுபவத்தை தர வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். ஆனால் பாதுகாப்பு அம்சங்களைக் கூட அவர்களால் சிறப்பாக கொண்டு வர இயலவில்லை," என்று குற்றம் சாட்டினார்.

ஏஐ போன்ற வசதிகள் வந்து, ஸ்டண்ட் கலைஞர்களுக்கான தேவையும், ஆபத்தும் குறையும் வரை நாங்கள் இப்படிக் களத்தில் இறங்கி பணியாற்றித் தானே ஆகவேண்டும் என்கிறார் சண்டைப் பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா.

விரைவில் அதுவும் சாத்தியப்பட வேண்டும் என்றே திரைப்பட ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c3vdyzy0e3do

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ......... !

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.