Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரம், சோழர் வரலாறு, சோழ சாம்ராஜ்ஜியம்

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • ரெஹான் ஃபசல்

  • பிபிசி இந்தி

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

ஒன்பதாம் நூற்றாண்டில் (கி.பி 850 வாக்கில்) தெற்கு இந்தியாவில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஜயாலயச் சோழன் எனும் மன்னர் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். சோழ சாம்ராஜ்ஜியத்திற்கான அடித்தளம் இவ்வாறு தான் நிறுவப்பட்டது.

பத்தாம் நூற்றாண்டில் (கிபி 907 ஆம் ஆண்டு) சோழ சாம்ராஜ்ஜியத்தின் முதலாம் பராந்தக மன்னர் அரியணை ஏறி 48 ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் வந்த பலவீனமான மன்னர்களால் சோழ சாம்ராஜ்ஜியம் சரியத் தொடங்கியது.

கிபி 985 ஆம் ஆண்டு முதலாம் ராஜராஜ சோழன் அரியணை ஏறியபோது சோழ சாம்ராஜ்ஜியம் மீண்டும் எழத் தொடங்கியது.

முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவரின் மகன் ராஜேந்திர சோழன் தலைமையில் சோழர்கள், ஆசியாவில் மிகப்பெரிய ராணுவ, பொருளாதார மற்றும் கலாசார சக்தியாக உருவெடுத்தனர்.

ஒரு காலகட்டத்தில் சோழ சாம்ராஜ்ஜியம் தெற்கில் மாலத்தீவிலிருந்து வடக்கே வங்காளத்தில் கங்கை நதிக்கரை வரை பரவியிருந்தது.

ரிச்சர்ட் ஈடன் தனது 'பாரசீக காலத்தில் இந்தியா (India in the Persianate Age)' புத்தகத்தில் சோழர்கள், "தஞ்சையின் மகா சோழர்கள்" என அறியப்பட்டதாக குறிப்பிடுகிறார்.

"ஒட்டுமொத்த தெற்கு கரை மீதான அவர்களின் கட்டுப்பாடு தற்போதும் கோரமண்டல் என நினைவுகூரப்படுகிறது. சோழமண்டல் என்கிற வார்த்தையின் மறுவிய வடிவம் தான் கோரமண்டல். இது சோழப் பேரரசின் ஆட்சி எல்லையைக் குறிக்கிறது" என எழுதியுள்ளார்.

ஸ்ரீவிஜய அரசுடனான மோதல்

ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரம், சோழர் வரலாறு, சோழ சாம்ராஜ்ஜியம் கெமர்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, நடராஜர் சிலை சோழப் பேரரசின் அடையாளமாக இருந்தது

11 ஆம் நூற்றாண்டில் கெமர் மற்றும் சோழ வணிகர்கள் வங்காள விரிகுடாவின் கரையோரம் அமைந்துள்ள நாடுகளின் பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.

தங்கள் இருவரின் நலனும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்துள்ளது என சோழர்களும் கெமர்களும் உணர்ந்தனர். இந்தக் காலகட்டத்தில் கெமர் பேரரசும் மிகப் பெரிதாக, செல்வாக்கு மிக்கதாக இருந்தது.

அவர்கள் தற்போதைய கம்போடியா, தாய்லாந்து மற்றும் வியட்நாமின் பல பகுதிகளை ஆட்சி செய்தனர். கம்போடியாவில் உள்ள பிரபலமான அங்கோர்வாட் கோவிலை கெமர் மன்னர்கள் கட்டினர்.

ஒய் சுப்பராயலு தனது 'சோழர்களின் கீழ் தென்னிந்தியா (South India Under the Cholas)' எனும் புத்தகத்தில், "பல கல்வெட்டுகள் சோழர்கள் மற்றும் கெமர்கள் இடையே நட்புறவு இருந்தையும், 1020 ஆம் ஆண்டில் இருவருக்கும் இடையே ரத்தினங்கள் மற்றும் தங்கரத பரிமாற்றம் இருந்ததையும் குறிப்பிடுகின்றன. அதிகரித்து வந்த ரஷ்ய, சீன மக்கள் தொகை மற்றும் ஆடம்பர பொருட்கள் மீதான அவர்களின் ஈடுபாட்டால் இரு அரசுகளும் பெரிதும் பலனடைந்தன" என எழுதியுள்ளார்.

இருவருக்கும் இருந்த ஒரே எதிரி - ஸ்ரீவிஜய அரசு தான். பௌத்தர்களான ஸ்ரீவிஜய அரசர்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல துறைமுகங்களை கட்டுப்படுத்தி வந்தனர்.

சீனா நோக்கிச் சென்ற அனைத்து கப்பல்களுக்கும் அவர்கள் வரி விதித்தனர். வரி செலுத்தாத கப்பல்களை அவர்களின் கப்பற்படை தாக்கி அழித்தது.

ஸ்ரீவிஜய அரசின் தோல்வி

ஸ்ரீவிஜய அரசர்களின் ராஜாங்கம் சோழ அரசர்களை கோபமடையச் செய்தது.

சோழ மன்னர்களுக்கு நட்புறவான செய்திகளை அனுப்பிய அதே வேளையில் தற்போதைய நாகப்பட்டினம் துறைமுகம் இருக்கும் பகுதியில் பௌத்த மடம் கட்டுவதற்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தனர்.

மறுபுறம், சீன மன்னர்களிடம் சோழர்கள் சிறிய அரசு என்றும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்து வந்தனர்.

ராஜேந்திர சோழன் 1015-இல் சீனர்களுடன் ராஜாங்க உறவுகளை ஏற்படுத்தினார். அப்போது ஸ்ரீவிஜயர்களின் கொள்கையைப் பற்றி அறிந்த பிறகு விஜயதுங்கவ மன்னரிடம் தனது ராணுவ வலிமையைக் காட்ட முடிவு செய்தார்.

1017ஆம் ஆண்டு நடந்த போரில் ராஜேந்திர சோழன் வென்று விஜயதுங்கவர்மனை சிறைபிடித்தார். அதன் பின்னர், ராஜேந்திர சோழனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு தனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தார் விஜயதுங்கவர்மன்.

வெற்றிக்குப் பிறகு வன்முறை

ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரம், சோழர் வரலாறு, சோழ சாம்ராஜ்ஜியம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை ஒன்றின் எச்சங்கள்

ராஜேந்திர சோழன் ஆசியாவில் மிகப் பிரபலமான நபராக மாறினார். அவர் ராணுவ வெற்றிகளின்போது வன்முறையில் ஈடுபடுவதற்காக அறியப்பட்டார்.

அவர் போர் விதிகளை மீறுவதாக அவரின் எதிரிகள் குற்றம்சாட்டினர்.

சாளுக்கியர்கள் உடனான போரில் ஒட்டுமொத்த ராஜ்ஜியத்தையும் அழித்து, "பெண்கள் மற்றும் பிராமணர்களைக் கொல்லவும் தயங்கவில்லை" எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனிருத் கனிசெட்டி தனது 'தென்னிந்தியாவின் தக்காணப் பிரபுக்கள்: சாளுக்கியர்கள் முதல் சோழர்கள் வரை (Lords of the Deccan, Southern India from Chalukyas to Cholas)' எனும் புத்தகத்தில், "இலங்கையின் வரலாற்றிலும் ராஜேந்திர சோழனின் வீரர்கள் கடுமையாக நடந்து கொண்டது பதிவு செய்யப்பட்டுள்ளது" என எழுதியுள்ளார்.

"அரச குடும்பத்தின் பெண்களை கடத்தி, அனுராதபுரத்தின் அரச கஜானாவை களவாடிச் சென்றனர். இது மட்டுமில்லை பௌத்த மடங்களின் ஸ்துபிக்களை உடைத்து ரத்தினத்தை எடுத்துச் சென்றனர்" என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் மாலத்தீவு ஆக்கிரமிப்பு

ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரம், சோழர் வரலாறு, சோழ சாம்ராஜ்ஜியம்

பட மூலாதாரம், UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, இலங்கையில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான பொலன்னறுவா இலங்கை அரசாங்கம் மற்றும் சோழப் பேரரசின் பழமையான அரச நகரம்.

1014-இல் ராஜராஜ சோழனின் மறைவுக்குப் பிறகு ராஜேந்திர சோழன் அரியணை ஏறினார்.

பாண்டியர்கள் மற்றும் சேரர்கள் உடனான சண்டைக்குப் பிறகு 1017-இல் முதலில் இலங்கையைத் தாக்கினார்.

இந்தத் தாக்குதலின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது அல்ல, மாறாக முடிந்த வரையில் தங்கம் மற்றும் இதர பொக்கிஷங்களை எடுத்து வர வேண்டும் என்பது தான் என அந்த காலத்து கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

எனினும், முடிவில் சோழர்கள் முதல் முறையாக முழு இலங்கைத் தீவையும் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.

அதற்கு ஓராண்டு கழித்து 1018-இல் ராஜேந்திர சோழன் மாலத்தீவிற்கும் லட்சத்தீவிற்கும் கடற்படைகளை அனுப்பி அவற்றை சோழ காலனிகளாக மாற்றினார்.

1019-இல் வட கர்நாடகா மற்றும் தெற்கு மகாராஷ்டிராவிற்கு ராணுவப் படைகளை அனுப்பினார். 1021-இல் தென்னிந்தியாவின் பெரும்பகுதிகளைக் கட்டுப்படுத்திய சாளுக்கியர்களை வென்றார்.

கங்கை நீரை தெற்கிற்கு எடுத்துச் சென்றவர்

ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரம், சோழர் வரலாறு, சோழ சாம்ராஜ்ஜியம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சோழர்கள் கட்டிய சிவன் கோவில்

1022-இல் தனது பேரரசை 1000 மைல்கள் தாண்டி கங்கையின் கரை மற்றும் அதற்கு அப்பாலும் விரிவுபடுத்தினார். வழியில் ஓடிசா மற்றும் வங்காளத்தின் சக்திவாய்ந்த பால சாம்ராஜ்ஜியத்தின் மன்னரான மகிபாலாவை தனது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்தார்.

"ராஜேந்திர சோழன் வங்காளத்திலிருந்து மிக விலையுயர்ந்த ரத்தினங்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் மற்றும் கலசங்களில் கங்கையின் புனித நீரையும் எடுத்துக் கொண்டு திரும்பினார். இந்த சாதனையின் நினைவாக அவருக்கு 'கங்கை கொண்ட சோழன்' என்கிற பெயர் கிடைத்தது. கங்கை கொண்ட சோழபுரத்தை தனது புதிய தலைநகராக அறிவித்தார். கங்கை கொண்ட என்றால் கங்கையை வென்றவர் என்று பொருள்" என ரிச்சர்ட் ஈடன் எழுதியுள்ளார்.

புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியரான ரோமிலா தாப்பர் தனது 'ஆதி இந்தியா (Early India)' புத்தகத்தில், "வெற்றிக்குப் பிறகு கங்கை நீரை தெற்கே எடுத்துச் சென்றது வடக்கு மீதான தெற்கின் வெற்றியின் சின்னம்" என எழுதியுள்ளார்.

சுமத்ராவிற்கு கப்பல் பயணம்

ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரம், சோழர் வரலாறு, சோழ சாம்ராஜ்ஜியம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, இந்தோனீசியாவில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்பன்னன் கோவில்

ராஜேந்திர சோழன் தனது தலைநகரில் சிவனுக்கு ஒரு கோவிலை கட்டினார், இது 250 ஆண்டுகளுக்கும் மேலாக சைவ வழிபாடு மற்றும் சோழ கட்டடக்கலையின் அடையாளமாக திகழ்ந்தது.

தலைநகரில் மிகப்பெரிய செயற்கை ஏரி ஒன்றை நிர்மாணித்தார் ராஜேந்திர சோழன். இதன் பரப்பளவு 16 மைகள் நீளமும் 3 மைல்கள் அகலமும் ஆகும்.

வங்காளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நதி இந்த ஏரியில் ஊற்றப்பட்டது, ஆனால் ராஜேந்திர சோழன் நீண்ட காலம் வடக்கு மீதான தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்த முடியவில்லை.

மாலத்தீவு மற்றும் இலங்கை மீதான தனது வெற்றிகளால் குதூகலமடைந்த ராஜேந்திர சோழன் மற்றும் கடல்கடந்த பயணத்திற்கு திட்டமிட்டிருந்தார். இந்த முறை இந்தோனீசியாவில் உள்ள சுமத்ரா தீவுகளுக்கு தன்னுடைய கப்பற்படையை அனுப்பும் எதிர்பாராத முடிவை எடுத்தார்.

ஸ்ரீவிஜய அரசு மீதான கப்பற்படை வெற்றி

ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரம், சோழர் வரலாறு, சோழ சாம்ராஜ்ஜியம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 'The Golden Road' புத்தகத்தில் வில்லியம் டால்ரிம்பிள், சோழர்களின் வெளிநாட்டு பயணங்கள் பற்றி குறிப்பிடுகிறார்.

1017-இல் ராஜேந்திர சோழன் மற்றும் ஸ்ரீவிஜய அரசிற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ராஜேந்திர சோழனின் கப்பற்படை வென்றது.

இது மலேசியாவின் கெடா ("கடாரம்") நகரில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ராஜேந்திரன் 'கெடாவை வென்றவர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

1025-இல் ராஜேந்திர சோழன் தனது முழு கப்பற்படையையும் ஸ்ரீவிஜய அரசுக்கு எதிராக சண்டையிட அனுப்பினார்.

பால் முனோஸ் தனது 'ஆதி சாம்ராஜ்ஜியங்கள் (Early Kingdoms)' புத்தகத்தில், "இந்தப் போரில் வெற்றிக்குப் பிறகு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் அங்கோரைச் சேர்ந்த சூர்யவர்ம மன்னர், ராஜேந்திர சோழனுக்கு விலைமதிக்க முடியாத பரிசுகளை வழங்கினார். மிகப்பெரிய கப்பற்படை ஒன்றை அவர் அனுப்பினார். இவை சோழர்களின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நாகப்பட்டினத்தில் அணி சேர்க்கப்பட்டன" என எழுதியுள்ளார்.

வில்லியம் டால்ரிம்பிள் தனது 'தங்க சாலை (The Golden Road)' புத்தகத்தில், "இந்தப் போருக்கான வீரர்கள் மற்றும் யானைகளும் கூட கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டன. சோழர்கள் தங்களின் சண்டையை இலங்கையில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து ஆரம்பித்தனர்" என எழுதியுள்ளார்.

மேலும் அதில், "பல நாட்கள் கடல் பயணத்திற்குப் பிறகு அவர்கள் சுமத்ரா, தகுவா பா என்கிற தாய்லாந்து துறைமுகம் மற்றும் மலேசியாவில் உள்ள கேதா ஆகிய இடங்கள் மீது எதிர்பாரா தாக்குதலை நடத்தினர், அப்போது ஒரு தெற்காசிய அரசால் தங்கள் நாட்டிற்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட நீண்ட தூர ராணுவ நடவடிக்கை ஆகும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெற்றிகரமான போர்களுக்குப் பிறகு ராஜேந்திரனின் ஆதிக்கம் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவியிருந்தது.

இந்த வெற்றியின் பெருமையால் அதன் முழு விவரங்களை தஞ்சையில் உள்ள கோவில் சுவற்றில் 1027 ஆம் ஆண்டு எழுதினார்.

விஜய் மற்றும் சங்கீதா சகுஜா தங்களின் 'ராஜேந்திர சோழன், தென்கிழக்கு ஆசியாவிற்கான முதல் கடல் பயணம் (Rajendra Chola, First Naval Expedition to South-East Asia)' எனும் புத்தகத்தில், "இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு இடங்களில் நான்கு சுமத்ராவிலும், ஒன்று மலாய் தீபகற்பத்திலும் ஒன்று நிகோபார் தீவுகளிலும் உள்ளது" என எழுதியுள்ளார்.

அதில், "ராஜேந்திர சோழன் இன்று சிங்கப்பூர் என அழைக்கப்படும் இடத்தை கடந்து சென்றிருப்பது சாத்தியமே. இதற்கு காரணம் அங்கும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதில் ராஜேந்திர சோழனின் பல்வேறு பெயர்களில் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவுடன் நெருங்கிய உறவு

ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரம், சோழர் வரலாறு, சோழ சாம்ராஜ்ஜியம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது.

தெற்கிழக்காசியாவில் கடல் வழியாக ராஜேந்திர சோழன் நுழைந்ததன் நோக்கம் வெற்றி பெறுவது மட்டுமல்ல, ஒரு வர்த்தகப் போரில் ராணுவ பலத்தைப் பயன்படுத்தி கடல் வழித்தடங்களில் ஸ்ரீவிஜய அரசின் பிடியை வலுவிழக்கச் செய்வதே ஆகும் என வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.

கென்னத் ஹால் எழுதிய 'Khmer Commercial Development and Foreign Contacts under Suryavarman I' எனும் புத்தகத்தில், "இந்தப் பயணங்களில் முக்கியமான நோக்கம் என்பது சீனா உடன் மிகவும் லாபகரமான வர்த்தகப் பாதையை உருவாக்குவது ஆகும். அந்த காலகட்டத்தில் மிளகு, மசாலா மற்றும் பருத்திக்கு சீனாவில் பெரிய அளவில் தேவை இருந்தது. இவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அளவில் லாபம் சம்பாதிக்க முடியும் என சோழர்கள் நம்பினர்" என எழுதியுள்ளனர்.

ஸ்ரீவிஜயர்களை தற்காப்பு நிலைப்பாட்டை எடுக்க கட்டாயப்படுத்திய பிறகு, ராஜேந்திர சோழன் சீனாவுக்கு தனது தூதுக்குழுவை அனுப்பினார்.

சீன பேரரசருக்கு தந்தம், முத்துகள், பன்னீர், காண்டாமிருகக் கொம்புகள் மற்றும் பட்டு ஆடைகள் போன்ற விலையுயர்ந்த பரிசுகளை எடுத்துச் சென்றார்.

அதற்குச் சில நாட்கள் கழித்து சீனாவின் குவான்சூ நகரில் கோவில் ஒன்று கட்டப்பட்டது. அதன் சில பகுதிகள் தற்போதும் உள்ளன.

ஜான் கை தனது, 'தமிழ் வணிகர்களும் இந்து-பௌத்த புலம்பெயர்ந்தோரும் (Tamil Merchants and the Hindu-Buddhist Diaspora)" எனும் புத்தகத்தில், "1067-69 காலகட்டத்தில் சோழ இளவரசர் திவாகரன் சீனாவில் உள்ள கோவில்களை பராமரிக்க நிதிகள் வழங்கினார் என ஒரு சீன கல்வெட்டு குறிப்பிடுகிறது" என எழுதியுள்ளார்.

தமிழ் வணிகர்கள் சீனாவிலிருந்து கோரமண்டல் துறைமுகங்களுக்கு நறுமணக் கட்டைகள் (சந்தனக்கட்டை), தூபம், கற்பூரம், முத்துக்கள், பீங்கான் மற்றும் தங்கம் அடங்கிய கப்பல்களைக் கொண்டு வந்தனர்.

கெமர் பேரரசு உடனான உறவுகள்

ராஜேந்திர சோழன், கங்கை கொண்ட சோழபுரம், சோழர் வரலாறு, சோழ சாம்ராஜ்ஜியம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சோழ மற்றும் கெமர் சாம்ராஜ்ஜியங்கள் இடையேயான ஒத்துழைப்பின் அடையாளமாக அங்கோர் வாட் கோவில் உள்ளது.

ராஜேந்திர சோழனின் காலகட்டத்தில் சோழ மற்றும் கெமர் சாம்ராஜ்ஜியங்கள் இடையேயான ஒத்துழைப்பு, உலகின் மிகப்பெரிய அங்கோர்வாட் கோவில் கட்டுமானத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த விஷ்ணு கோவில் தற்போதும் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தஞ்சையிலும் சிதம்பரத்திலும் கோவில்கள் கட்டப்பட்ட அதே காலகட்டத்தில் தான் இந்தக் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் இரு சக்தி வாய்ந்த மன்னர்கள் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர்.

சிறந்த போர் வீரர் என்பதோடு, சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தார் ராஜேந்திர சோழன். பல கிராமங்களில் பல உயர்தர குருகுலங்களை நிறுவினார். இங்கு மாணவர்களுக்கு சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழி கற்பிக்கப்பட்டது.

தஞ்சாவூர் தவிர்த்து ஸ்ரீரங்கம், மதுரை, ராமேஸ்வரம் உட்பட பல பிரம்மாண்டமான கோவில்களை அவர் கட்டினார். அவை இன்றளவும் கட்டடக்கலைக்குச் சான்றாகப் பார்க்கப்படுகின்றன.

ராஜேந்திர சோழன் கடலை மட்டுமல்ல மக்களின் மனங்களையும் வென்றவர் எனக் கூறப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cj4werp9lj2o

  • கருத்துக்கள உறவுகள்
On 11/8/2025 at 02:44, ஏராளன் said:

இருவருக்கும் இருந்த ஒரே எதிரி - ஸ்ரீவிஜய அரசு தான். பௌத்தர்களான ஸ்ரீவிஜய அரசர்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல துறைமுகங்களை கட்டுப்படுத்தி வந்தனர்.

இன்றும் தொடர்கிறது

On 11/8/2025 at 02:44, ஏராளன் said:

"இலங்கையின் வரலாற்றிலும் ராஜேந்திர சோழனின் வீரர்கள் கடுமையாக நடந்து கொண்டது பதிவு செய்யப்பட்டுள்ளது" என எழுதியுள்ளார்.

அன்று சோழர்கள் இன்று சிங்களவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்

On 11/8/2025 at 02:44, ஏராளன் said:

"அரச குடும்பத்தின் பெண்களை கடத்தி, அனுராதபுரத்தின் அரச கஜானாவை களவாடிச் சென்றனர். இது மட்டுமில்லை பௌத்த மடங்களின் ஸ்துபிக்களை உடைத்து ரத்தினத்தை எடுத்துச் சென்றனர்"

அன்று அதிகாரத்தில் உள்ள சோழர்கள் செய்தனர் இன்று அதிகாரத்தில் உள்ள சிங்கள இராணுவம் செய்கின்றது

On 11/8/2025 at 02:44, ஏராளன் said:

இந்தத் தாக்குதலின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது அல்ல, மாறாக முடிந்த வரையில் தங்கம் மற்றும் இதர பொக்கிஷங்களை எடுத்து வர வேண்டும் என்பது தான் என அந்த காலத்து கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

அன்றைய சோழ எகாதிபத்தியவாதிகள் இன்றைய அமெரிக்கா எகாதிபத்தியவாதிகள் போல நட்ந்து கொண்டனர்🤣

😅🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சோழர் ஆட்சி பொற்காலமா? நீர், நில மேலாண்மை, சாதிய சமூக கட்டமைப்பு பற்றிய ஒரு பகுப்பாய்வு

சோழர் ஆட்சி பொற்காலமா?, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், பெரிய கோவில், தஞ்சை

பட மூலாதாரம், KALANIDHI

கட்டுரை தகவல்

  • கா.அ.மணிக்குமார்

  • பேராசிரியர் (ஒய்வு) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

  • 16 ஆகஸ்ட் 2025, 03:53 GMT

"என் நாட்டு மக்கள் இதைப் பார்த்தால் பரவசமடைவார்கள்; இதை விவரிக்க அவர்களால் முடியாது. பின் எப்படி இது போன்றதைக் கட்டமைக்க அவர்களால் சிந்திக்க முடியும்"

கங்கை கொண்ட சோழபுரத்தில் முதலாம் ராஜேந்திரனால் கட்டப்பட்ட பதினாறு மைல் நீளம், நான்கு மைல் அகலம் கொண்ட "சோழ கங்கம்" ஏரியைக் கண்டு மனித நாகரிகத்தில் மிகவும் முன்னேறியிருந்த அரபு நாட்டிலிருந்து 11ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்திருந்த அறிஞர் அல்பெருனி வியந்து கூறிய வார்த்தைகள் இவை.

நீர்ப்பாசன நிர்வாகம்

வரலாற்றில் எத்தனையோ பேரரசுகள் தோன்றி வீழ்ந்திருக்கின்றன. ஆனால் ஒரு சில பேரரசுகள் மட்டும் சிறப்புமிக்க சில சாதனைகளுக்காக மக்களின் மனதில் நீங்கா நினைவில் வாழ்கின்றன. அத்தகைய வரிசையில் சோழப் பேரரசு நீர்ப்பாசன வேளாண்மைக்காகவும், உள்ளாட்சி நிர்வாகத்திற்காகவும் இன்றும் வரலாற்றில் சிறப்புமிக்க இடத்தை வகிக்கிறது.

கரிகாலன் பாரம்பரியத்தில் வந்த சோழ மன்னர்கள் குளங்கள், ஏரிகளை வெட்டி மழை நீர், ஆற்று நீர் ஆகியவற்றைச் சேகரித்து வேளாண்மையைப் பெருக்கினர். அவற்றில் சிறப்புமிக்கவை சோழ கங்கம், மற்றொன்று வீராணம்.

நிலங்களை வகைப்படுத்துதல் முறை

பராந்தகனின் கல்வெட்டுகள் ஒன்றில் ஆறு வகை நிலங்கள் குறிப்பிடப்பட்டன. அனைத்து நெல் வயல்களும் நீர்-நிலம் (நன்செய்) என வகைப்படுத்தப்பட்டன. வறண்ட நிலம் புன்செய் என்று குறிப்பிடப்பட்டது. இவை நெல் அல்லாமல் இதர தானியங்கள் விளைந்த நிலங்களாகும். மூன்றாவது வகை தோட்ட நிலமாகும். ஆங்கிலேயர்கள் இம்மூன்று வகைகளை ஏற்றனர். நான்காவது வகை களர்-நிலம் (உப்பு நிலம்) ஆகும்.

பதினொன்றாம் நூற்றாண்டின் ஒரு கல்வெட்டு, கால்நடைகளைப் பார்ப்பதற்கான நிலங்கள் என்று அழைக்கப்படும் மற்றொரு வகையைக் குறிப்பிடுகிறது. இதை ஆங்கிலேயர் மேய்ச்சல் என்று தங்கள் ஆவணங்களில் பதிவு செய்தனர். தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆறாவது வகை நிலம் தரிசு; இதை ஆங்கிலேயர்கள் தங்கள் பதிவுகளில் "பஞ்சார்" என்று குறிப்பிட்டனர்.

சோழர் ஆட்சி பொற்காலமா?, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், பெரிய கோவில், தஞ்சை

நிலஉடைமை முறைகளும், வாரியங்களும்

காடுகளை அகற்றுதல், நீர்ப்பாசனக் குளங்கள், கால்வாய்கள் வெட்டுதல் போன்றவற்றுக்கு கூட்டு முயற்சி தேவைப்பட்டது, கல்வெட்டுகளில் காணப்படும் சபா-மஞ்சிகம், ஊர்-மஞ்சிகம், மற்றும் ஊர்ப்பொது ஆகிய சொற்கள் சோழர் காலத்திய நிலத்தில் கூட்டுடைமை உரிமையைச் சுட்டிக்காட்டுகின்றன.

பிரம்மதேயம், தேவதானம், ஆங்கிலேயரது இரயத்வாரி நிலங்களைப் போன்ற வேளாண் வகை, போர்க்காலங்களில் மன்னரின் இராணுவ சேவைக்குத் தயாராக இருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீரர்களைப் பராமரிப்பதற்காக நிலப்பிரபுகளுக்கு "படைபற்று" போன்ற நிலஉடைமைகள் உருவாக்கப்பட்டிருந்தன.

பிரம்மதேயம், தேவதானம் அரசுக்கும் விவசாயிக்கும் இடையில் ஒரு இடைநிலையை உருவாக்க வழிவகுத்தது. பிரம்மதேயத்தில், பொதுவாக, ஒரு பிரம்மதேய நிலம் பல பங்குதாரர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்டது. ஆனால் ஏகபோக பிரம்மதேயம் ஒரு தனிநபருக்கு மட்டுமே உரிமை உடையதாக இருந்தது.

"குடிநீக்கா" அல்லது "குடிநீக்கி" என இரு வகையான கிராமங்கள் பிராமணர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. "குடிநீக்கி" கிராமங்களில் பிராமண நிலஉரிமையாளர்கள், குத்தகைதாரர்களையும் விவசாய தொழிலாளர்களையும் வெளியியிருந்து அழைத்து வர வேண்டியிருந்தது. கோயில்களால் நிர்வகிக்கப்பட்ட தேவதான நிலங்கள் கிராம சபை மற்றும் அரசு மேற்பார்வையில் இருந்தன.

தரிசு நிலங்களும், வன நிலங்களும் பெயரளவு வருடாந்திர வாடகைக்கு கோயில்களுக்கு வழங்கப்பட்டன. கோயில்கள் இந்த நிலங்களை குத்தகைக்கு விட்டு சாகுபடி செய்தன. நிலத்தை உழுதல், சமன் செய்தல், நீர்ப்பாசனம் வழங்குதல் ஆகியவை குத்தகை நிபந்தனைகளாக இருந்தன.

பொதுவாக, கோயில் நிலங்களை பயிரிட்டவர்கள் வழங்க வேண்டிய சேவைகள் கோயில்களில் விளக்குகளுக்கு எண்ணெய் வழங்குதல், வழிபாடு நடத்துதல் மற்றும் கோயிலைக் கண்காணித்தல் போன்ற வடிவங்களில் இருந்தன. மன்னரின் முன் அனுமதி இல்லாமல் கோயில் நில குத்தகைதாரர்களை அகற்ற முடியாது.

சோழர் ஆட்சி பொற்காலமா?, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், பெரிய கோவில், தஞ்சை

படக்குறிப்பு, முதலாம் பராந்தகன் ஆட்சியில் உத்திரமேரூர் சதுர்வேதிமங்கலத்தின் சபை கிராம நிர்வாகத்திற்குத் தேவையான குழுக்களை வெளிப்படுத்தும் கல்வெட்டு

உள்ளாட்சி நிர்வாகம்

பல சோழர் கால மகாசபை கல்வெட்டுகள் சாகுபடியின் பல்வேறு அம்சங்களை மேற்பார்வையிடும் கிராம சபையின் குழுக்களைப் பற்றி குறிப்பிடுகின்றன. இரண்டு முக்கியமான குழுக்கள் ஏரி வாரியம், தோட்ட வாரியம். பயிரிடப்பட்ட நிலங்களின் பொது மேற்பார்வைக்கு கழனி-வாரியம், மதகுகளைப் பராமரிக்க கலிங்கு-வாரியம், மற்றும் சாகுபடி வயல்களைச் சுற்றியுள்ள பாதைகள் மற்றும். சாலைகளை பராமரிக்க தடிவழி-வாரியம் அமைக்கப்பட்டிருந்தது. எந்தெந்த ஊர்களின் வழியாக பெருவழிகள் சென்றனவோ அந்தந்த ஊர்களில் வணிகர்களிடமிருந்து தடிவழி வாரியம் மூலம் பராமரிப்பு வரிகள் பெறப்பட்டன.

ஊர், நாடு, நகரம், பிரம்மதேயம் (பிராமணர் குடியிருப்புகள்) ஆகியவை சோழர்களின் நிர்வாக அமைப்புகளாகும்.

ஊர் என்பது பிரம்மதேயமல்லாத கிராமம். சில கல்வெட்டுகளில் காணப்படும் 'ஊர் உழுதுகொண்டு' என்ற சொற்றொடர், நிலம் ஊர் மக்களால் பயிரிடப்பட்டதைக் குறிக்கிறது. நொபுரு காராஷிமா ஆய்வு செய்த சோழமண்டலத்தில் உள்ள அல்லூரில், ஊர்ப் பொது நிலம் அங்கு குடியிருந்தவர்களால் பயிரிடப்பட்டது. அதே நேரத்தில் கோயில், அர்ச்சகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுக்குச் சொந்தமான மற்ற நிலங்கள் உள்ளூர் மக்களைத் தவிர "புறக்குடி" என அழைக்கப்பட்ட வெளியூர் மக்களால் பயிரிடப்பட்டன. இவர்கள் நிரந்தர குத்தகைதாரர் அந்தஸ்து அல்லாதவர்கள் ஆவர்.

'நாடு' என்பது பல சிற்றூர்கள் சேர்ந்த விவசாயப் பகுதிகள். வேளாண் சமூகக் கட்டமைப்பின் ஒரு சிறிய வடிவம். ஒவ்வொன்றும் திருமணம் மற்றும் இரத்த உறவால் பிணைக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களைக் கொண்டிருந்தது. ஏராளமான கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள 'நாட்டார்' அப்பகுதியில் மன்னரிடமிருந்து நில உரிமை சாசனத்தைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியவர்கள்; தங்களுக்குரிய பகுதியில் நிலங்களை வகைப்படுத்தி பதிவு செய்தனர். நீர்ப்பாசனக் குளங்களைச் சார்ந்திருந்த நிலங்களின் முழு உற்பத்தித்திறனையும் உபயோகிக்க அவர்களுக்கு உரிமை இருந்தது.

நாட்டார்களின் ஆதிக்கம், அவர்களின் பகுதியில் கொள்ளையர்களுக்கு எதிராக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இராணுவத் திறனை அடிப்படையாகக் கொண்டது. சோழ அரசின் சோழமண்டல கடலோரப் பகுதியில் வலதுகைப் பிரிவைச் சேர்ந்த வலங்கை வேலைக்கார வீரர்கள் அடங்கிய சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவ அமைப்பு அத்தகைய தோர் ஏற்பாட்டின் அங்கமாகும். வருவாய் கணக்கெடுப்பு மற்றும் தீர்வை நிர்ணயம் செய்தது நாடு-சேய் அல்லது நாடு-வகை-சேய் அதிகாரி ஆவார்.

தமிழகத்தை ஆண்ட சோழப்பேரரசு கடலாதிக்கம் செலுத்திய ஒரு ஏகாதிபத்திய பேரரசு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி இப்பேரரசை கிழக்கு ரோமப் பேரரசான பைசாண்டின் (கான்ஸ்டான்டிநோபிள்- இன்றைய இஸ்தான்புல்-) பேரரசோடு ஒப்பிட்டார். சோழ நாடு ஒரு பேரரசாக உருவாவதில் முக்கிய பங்காற்றியவர்கள் இராஜராஜ சோழனும் இராஜேந்திர சோழனும் முக்கிய இடம் வகிக்கின்றனர்.

சோழர் ஆட்சி பொற்காலமா?, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், பெரிய கோவில், தஞ்சை

இராஜராஜ சோழன்

சோழ மன்னர்களில் ராஜராஜன் பதவியேற்கும் போது அரசியல் ரீதியாக சாதகமானதொரு சூழல் இருந்தது. வடக்கிலிருந்து பெரும் அச்சுறுத்தலாக இருந்த ராஷ்டிரகூடர்கள் சாளுக்கியர்களால் தோற்கடிக்கப்பட்டிருந்தனர். முதலாம் பராந்தகன் தெற்கே பாண்டிய நாட்டு கடைசி முக்கிய மன்னனான இரண்டாம் ராஜசிம்மனைத் தோற்கடித்து "மதுரை கொண்டான்" என்ற பட்டத்தையும் சூட்டிக்கொண்டிருந்தார்.

ராஜவர்மன் இலங்கைக்குத் தப்பி ஓடி தனது கிரீடத்தையும் கழுத்தில் அணியும் பதக்கங்களையும் இலங்கை மன்னனிடம் கொடுத்துவிட்டு கேரளாவில் தனது தாயின் ஊருக்குச் சென்று விட்டார். ஆட்சி பறிபோன பிறகு (920), கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள் கழித்தே (1216), மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சியை மீட்டு அரியணையில் அமர்ந்தார்.

இலங்கை மீதான படையெடுப்பு

சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசிக்கு எதிராக முதலாம் நரசிம்மனுக்கு இலங்கை அரசன் மானவம்மன் உதவியதாலும் பின்னர் மானவம்மன் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட போது நரசிம்மவர்மன் மானவம்மன் மீண்டும் அரியணையில் அமர உதவியதாலும் பல்லவர் காலத்தில் இலங்கையுடனான அரசியல் தொடர்பு நெருக்கமாக இருந்திருக்கிறது.

பல்லவர் காலத்தில் மகாபலிபுரம் ஒரு முக்கிய துறைமுகமாக இருந்திருக்கிறது. அதன் மூலமாக ஏற்பட்ட சமூக-கலாசார பாதிப்புகள் இரு நாடுகளிலும் வெளிப்பட்டன. இலங்கையில் கோவில் கட்டடக்கலை, சிற்பங்கள் அனைத்திலும் பல்லவர் தாக்கத்தைப் பார்க்கமுடியும். ஆனால் சோழர் காலத்தில் அரசியல் சூழல் மாறியிருந்தது.

இராஜராஜன் தான் பதவிக்கு வந்தவுடன் இலங்கையின் மீது தாக்குதல் நடத்த பாண்டிய நாட்டின் மீதான ஆதிக்கம் அவசியம் என உணர்ந்தார். தன் இளம் வயதிலேயே மலபார் கடற்கரையில் சேர மன்னரைத் தோற்கடித்து சோழர்களின் கடற்படை வலிமையை வெளிப்படுத்தியிருந்தார். தனது ஆட்சி எல்லைக்கு மேற்குப் பகுதிகளில் இருந்த சேர மன்னரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதிகளை சோழ பேரரசுப்பகுதிகளோடு இணைத்தார்.

பாண்டியர் ஆட்சி முடிவடைந்திருந்தாலும் பாண்டிய இளவரசர்கள் இலங்கை அரசருடன் கூட்டு சேர்ந்து சோழ நாட்டுக்கு எதிராக தொடர்ந்து சதியில் ஈடுபட்டு வந்ததால் தனது ஆதிக்கத்தை அங்கு நிறுவிட எண்ணி இலங்கையின் மீது படையெடுத்தார். அங்கு ஐந்தாம் மகிந்தா பதவி ஏற்ற சூழலில் அங்கு அவரது படைவீரர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் நிலவிய குழப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் தனது ஆதிக்கத்தை எளிதில் நிலைநாட்டினார். தலைநகர் அனுராதபுரம் தரைமட்டமாக்கப்பட்டது. பொலநருவா சோழர் தலைநகரானது.

இராஜராஜன் காலத்திலேயே அங்கு ஒரு சிவன் கோயில் கட்டப்பட்டது. இராஜராஜன் ஏற்கனவே தான் சூட்டியிருந்த ஜெகநாதன் என்ற பெயரில் அந்நகருக்கு ஜெகநாதமங்களம் எனப் பெயரிட்டார். மற்றொரு சிவன் கோவில் அவரது அதிகாரி தளி குமரன் என்பவரால் கட்டப்பட்டு பேரரசரின் பெயரில் ராஜராஜேஸ்வரர் கோவில் என அழைக்கப்பட்டது. காட்டிற்குள் தப்பியோடிய இலங்கை அரசன் பிடிபட்டு சோழ மன்னர் சிறையில் தனது எஞ்சியிருந்த 12 ஆண்டு காலத்தை கழித்து உயிரிழந்தார்.

இராஜராஜன் தான் அரியணை ஏறிய பத்து ஆண்டுகளுக்குள் தனது ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டி, நிலையானதோர் ஆட்சியை அமைத்தார். ராஜராஜனின் இறுதிக்காலம் தென் தக்காணத்தில் பல்லவர்கள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளை ஆக்கிரமித்து ஆட்சி செய்துகொண்டிருந்த சாளுக்கியர்களுடன் போர் புரிவதில் கழிந்தது.

சோழர் ஆட்சி பொற்காலமா?, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், பெரிய கோவில், தஞ்சை

பட மூலாதாரம், UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, இலங்கையில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான பொலன்னறுவா இலங்கை அரசாங்கம் மற்றும் சோழப் பேரரசின் பழமையான அரச நகரம்.

ராஜேந்திர சோழன்

1012இல் ஆட்சிப்பொறுப்பேற்ற ராஜேந்திர சோழன் சாளுக்கியர் அச்சுறுத்தலை முழுவதும் முறியடிக்கும் நோக்கில் சாளுக்கிய மன்னர் மூன்றாம் ஜெயசிம்மனை போரில் வென்றதோடு (1020), வடக்குநோக்கி மேலும் முன்னேறி ஒரிசா, கோசல நாட்டு மன்னர்களையும் வென்றார். வட இந்தியாவில் அப்போது நிலவிய அரசியல் சூழல் ராஜேந்திரனுக்கு மிகச் சாதகமாக இருந்தது. அதுவரை அப்பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திய பிரத்திகாரர், பாலர் பேரரசுகள் பலம் குன்றி நலிவடைந்திருந்தன. ஆதலால் கன்னோஜ் அரசன் கோவிந்த சந்திரா, வங்காளத்து மஹிபாலன் ஆகியோரையும் தோற்கடித்து அவரது படை கங்கைக்கரையை சென்றடைய முடிந்தது. இவ்வெற்றிகளின் நினைவாக பின்னர் கங்கைகொண்ட சோழன் என்ற பட்டத்தைச்சூடியதை நாம் அறிவோம்.

தான் அரியணை ஏறிய ஐந்தாம் ஆண்டில் மகிந்தாவின் ஆட்சியின் போதே ராஜேந்திர சோழன் இலங்கை மீது படையெடுத்து (1017) இலங்கையை வென்றார். ஏராளமான கொள்ளைப் பொருள்களுடன் சோழர் வெற்றிப்படை அங்கிருந்து திரும்பியது. பராந்தகனாலும் இராஜ ராஜ சோழனாலும் செய்ய முடியாத பாண்டிய மன்னரின் கிரீடம், பரம்பரை நகைகள், ஒடிக்க முடியாத வாள், விலைமதிக்க முடியாத வைரக்காப்பு, கற்களாலான பதக்கங்கள் அனைத்தையும் ராஜேந்திரன் மீட்டு வந்தார்.

இராஜேந்திரன் அனுப்பிய கப்பற்படை வங்கக்கடலைக் கடந்து ஸ்ரீ விஜயா பேரரசின் கீழ் இருந்த மலேயா தீபகற்பத்தில் கடாவை (காந்தாரம்) வென்று சோழராதிக்கத்தை நிலைநாட்டியது. கல்வெட்டுப் பதிவுகளின் படி ஸ்ரீவிஜயத்தைத் தாக்கிய பிறகு முதலாம் இராஜேந்திரன் சங்கிராம் விஜயதுங்கவர்மனை கைது செய்து ஸ்ரீவிஜயத்தின் ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட வித்யாதர தோரணம் உட்பட பல விலைமதிப்பற்ற பொருள்களைப் பறித்தார்.

இராஜராஜனும் இராஜேந்திரனும் அந்நிய நாட்டு எதிரிகளை முழுமையாக முறியடித்து உள்நாட்டில் அமைதியை ஏற்படுத்திய பின் தான் கோவில் கட்டுதல், புதிய தலைநகர் கட்டுவது, போன்ற பணிகளில் ஈடுபட்டனர். தஞ்சை பெரிய கோவில் (இராஜராஜேஸ்வரர் கோவில்) இராஜராஜனின் 20ஆம் ஆண்டு ஆட்சியின் போது, அதுவும் மகனிடம் ஆட்சிப்பொறுப்பைக் கொடுத்தபின் (1012) கட்டப்பட்டது.

வெளிநாட்டு வணிகத்தொடர்பு

பண்டைய உலகின் "புதையல் பெட்டியாக" இந்தியா விளங்கியது என்று புதைபொருள் ஆய்வாளர் பீட்டர் பிரான்சிஸ் கூறுகிறார். உலகச்சந்தை உருவாக சோழப் பேரரசின் துறைமுகங்களும், தமிழ் வர்த்தகக் குழுவினரும் முக்கிய காரணிகள் என வரலாற்றறிஞர் டான்சன் சென் குறிப்பிடுகிறார்.

தமிழர்களின் கடல் கடந்த நாடுகளுடனான வணிகத்தொடர்புகள் துறைமுகங்கள் பகுதிகளில் மட்டுமில்லாமல் உள்நாட்டிற்குள்ளும் விஸ்தரிக்கப்பட்டிருந்ததை கொடுமணல், உறையூர், ஆலங்குளம் போன்ற இடங்களிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ள புதைபொருள் சான்றுகள் அடிப்படையில் நாம் அறிகிறோம். தென் இந்தியாவிலிருந்து முத்து, பவள மணிகள், மாணிக்கக் கற்கள் கண்ணாடி போன்றவை சீனாவிற்கு சென்றிருக் கின்றன.

கடல் தொல்பொருள் ஆய்வாளர்கள் கவிழ்ந்த, விபத்துக்குள்ளான கப்பல்களிலிருந்து கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் என்னென்ன பொருள்கள் ஒரு நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன என்பதைத் தெரிவிக்கிறார்கள். உதாரணத்திற்கு ஸ்ரீ விஜயா தலைநகரான பலெம் பாங்கிலிருந்து (சுமத்ரா) ஜாவாவிற்குச் செல்லும்போது கடலில் மூழ்கிய கப்பலில், சீன நாட்டிலிருந்து மத்திய தரைக்கடல் வழியாக வந்த கண்ணாடிகள், மட்பாண்டங்கள், இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட வெண்கலம், தகரம், ஈயம், இந்தோனீசியாவின் சிறப்பு அணிகலன்கள் மற்றும் வெள்ளி போன்றவை முக்கிய சரக்குகளாகக் காணப்பட்டன.

ஸ்ரீவிஜயம் பத்தாம் நூற்றாண்டில் கடல் வணிகத்தில் தலை சிறந்து விளங்கியது. சுமத்ரா, மலேயா போர்னியோ, பிலிப்பைன்ஸ், மேற்கு ஜாவா, பார்மோசாவின் (தைவான்) பாதி இடங்களையும் கொண்டிருந்த பரந்து விரிந்திருந்த இந்த ஏகாதிபத்தியப் பேரரசு பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் தான் நலிவடையத் தொடங்கியது. அத்தகையதொரு நாட்டை சோழப்பேரரசர்கள் போரில் வென்றது மிகப்பெரிய சாதனையாகும்.

சோழர் ஆட்சி பொற்காலமா?, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், பெரிய கோவில், தஞ்சை

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை ஒன்றின் எச்சங்கள்

சோழர்கள் தமிழகத்தை ஆண்ட விதம்

மேற்கூறிய சாதனைகள் எல்லாம் சோழர்களால் சாதிக்க முடிந்ததற்குக் காரணம் அவர்களது அரசாண்மைத் தந்திரம். பிராமணர்கள், கோவில்கள், சமயநிறுவனங்கள், வர்த்தகக்குழுக்கள் அனைத்துடனும் ஒருங்கிணைந்த அரசாக தங்கள் அரசை அமைத்தார்கள்.

கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் சோழர் படை பெற்ற வெற்றிகளால் அப்பகுதிகளில் வணிகத்தொடர்பை விரிவாக்கம் செய்ய முடிந்தது; அதுபோல் இலங்கை, தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனும் போரின் மூலம் வென்ற பகுதிகளின் மீதான ஆதிக்கத்தால் தான் அங்கு வணிகத்தொடர்பு தங்குதடையின்றி நீடித்தது என பேராசிரியர் சம்பக லெக்ஷ்மி கருதுகிறார். பேரரசின் ஆதரவைப் பெற்றிருந்த பெரும்பொருள் ஈட்டியிருந்த வணிகர்கள் கோவில்களுக்கும் சமயநிறுவனங்களுக்கும் தாராள நிதி வழங்கி சோழப் பேரரசைப் போற்றினர்.

பெரும்பாலும் மெய்க்கீர்த்தி சாசனங்கள், மகாசபை கல்வெட்டுகளிலிருந்து நாம் அறிவது அனைத்தும் மன்னர்களைப் பற்றியும் மேல்தட்டு மக்களைப் பற்றியுமே ஆகும். இருப்பினும் சிலவற்றில் குறிப்பிடப்படும் விவரங்கள் அக்கால அடக்குமுறையிலான சுரண்டல் சமூகத்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

பராந்தக சோழனின் உத்திரமேரூர் கல்வெட்டு ஒரு உதாரணம். குடவோலை முறையில் மகாசபைக்கும் அதன் பல்வேறு வாரியங்களுக்கும் ஜனநாயக அடிப்படையில் தேர்தல் நடைபெற்றதாக அது பறைசாற்றுகிறது. ஆனால் அத்தேர்தல்களில் போட்டியிட, வாக்களிக்க, நிர்ணயிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை நாம் படிக்கும்போது உண்மை நிலை நமக்குப் புரிகிறது. சொத்துரிமை கொண்ட, வேதங்களைக் கற்றறிந்தவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ முடியும். பெண்களுக்கு வாக்குரிமை கிடையாது. ஆக பெரும்பான்மையான மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்கவோ அல்லது தங்கள் கருத்துகளைக் கூறவோ உரிமை இல்லை.

சோழர்கள் மாபெரும் கோயில்களைக் கட்டினார்கள் என பெருமைப்படுகிறோம் ஆனால் அக்கோவில்களுக்குள் சூத்திரர்களாக முத்திரை குத்தப்பட்ட உழைப்பாளர்களில் பெரும்பகுதியினர் நுழைய முடியாது.

சோழர் சாதனைகளுக்கு பின்னே ஒளிந்துள்ள 'அடிமை முறை'

சோழ மன்னர்கள் நீர்ப்பாசனத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் அரசுக்கு நீர்ப்பாசன அல்லது பொதுப்பணித் துறை எதுவும் இல்லை. ஏரிகள், குளங்கள் வெட்டுவது, அவற்றை பராமரிக்கும் பணிகள் அனைத்தும் தனிநபர்கள், கிராம சபைகள், கோயில்களிடம் விடப்பட்டன. மழை பெய்யும் முன் ஒவ்வொரு ஆண்டும் கிராம சபைகள் தூர் வார வேண்டும்.

வெட்டி, மஞ்சி போன்ற சொற்கள் அத்தகைய சேவை வழங்கிய பணியாளர்களைக் குறிக்கும். நதி நீர்ப்பாசனத்தின் முக்கிய ஆதாரமாக இருந்த பகுதிகளில், நீர்தேக்கங்களைப் பராமரிக்கும் பொறுப்பு நிலத்தை வைத்திருப்பவர்களுடையதாகும். வெறுக்கத்தக்க அடிமை முறை அவர்கள் கடமையை ஆற்ற உதவியது.

நிலவரி கொள்கை

வேளாண் வகை கிராமங்களில், மேல்வாரம் அரசுக்குரிய பங்கு. குடிவாரம் நிலத்தை சொந்தமாக வைத்திருப்பவரின் பங்கு என பிரிக்கப்பட்டு நிலஉடமையாளரிடமிருந்து வரியாக வசூலிக்கப்பட்டது. மேல்வாரம், குடிவாரம் தவிர, நிலத்தின் உரிமையாளர்கள் விவசாயிகளாக இல்லாத இடங்களில், துண்டுவாரம் எனப்படும் பங்கு வசூலிக்கப்பட்டது. உதாரணமாக, கோயில், இராணுவ அதிகாரிகள், வணிகர்கள், அர்ச்சகர் கள், நடனக் கலைஞர்கள் போன்றோர் வைத்திருந்த நிலத்தின் விளைபொருட்கள் மேல்வாரம், குடி வாரம், மற்றும் துண்டு வாரம் எனப் பிரிக்கப்பட்டன.

கிடைக்கக்கூடிய அனைத்து புள்ளிவிவரங்களும் வருவாயில் அதிக விகிதத்தை அரசு வரியாகக் கோரியதைக் குறிக்கின்றன. ராஜேந்திரனின் சிதம்பரம் கல்வெட்டின்படி, 4500 கலம் நெல் விளையும் 44 வேலி நிலத்திற்கான மேல்வாரம் மொத்த விளைச்சலில் 50% ஆகும். இதுதான் ஆங்கிலேயர்கள் நீர் நிலங்களுக்கு(நன்செய்) விதித்தது. இருப்பினும், சோழ ஆட்சியாளர்களின் நன்கு நிறுவப்பட்ட நீர்ப்பாசன வசதிகள் காரணமாக வரிவிதிப்பு அடக்குமுறையாகக் கருதப்படவில்லையா அல்லது விதிக்கப்பட்டிருந்த சமூகக் கட்டுப்பாடுகளால் எதிர்ப்பதற்கான சூழல் இல்லையா என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு வழிபாட்டுத் தலங்களை இடித்தல்

சோழர் காலத்தில் பெரும் துறைமுகமாக இருந்த நாகப்பட்டினத்தில் ஸ்ரீவிஜயா அரசன் விஜயோத்துங்க வர்மன் தனது நாட்டு மக்கள் வழிபட கட்டியதுதான் சூடாமணி விகாரம். இதைக் கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனதாக இராஜராஜ சோழனின் 21ஆம் ஆண்டு ஆட்சியில் வெளியிடப்பட்ட சாசனம் தெரிவிக்கிறது. இதைப் பேணிப் பாதுகாக்க 97வேலி நிலங்கள் அடங்கிய 26 கிராமங்கள் தானமாக இராஜராஜ சோழனால் வழங்கப்பட்டிருந்தது.

"சீன பகோடா" என அழைக்கப்பட்ட இது சுமத்ரா, ஜாவா கட்டிடக்கலையில் வடிவமைக்கப்பட்டது. அதே விஜயதுங்கவர்மனை . ராஜேந்திர சோழன் போரில் வென்றபின் ஸ்ரீவிஜயாவில் பௌத்த விகாரைகளை இடித்து அவ்விடங்களில் சிவன் கோவில்கள் கட்டுகிறார்.

அக்காலத்தில் வழிபாட்டு தலங்கள் ஏகாதிபத்தியத்தின் சின்னமாகக் கருத்தப்பட்டது. இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில் சோழப் பேரரசின் ஏகாதிபத்தியத்தின் அடையாளம். தில்லி சுல்தான்களாக இருந்தாலும் முகலாய மன்னர்களாக இருந்தாலும் எங்கே தனது பேரரசுக்கு அடங்கிப் போனார்களோ, அப்பகுதியில் கோவில் கட்ட நிலம் தானமாக வழங்கினார்கள். எங்கு தனது ஆட்சிக்கு சவால் வந்ததோ அங்கு வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டன.

ஔரங்கசீப் இந்த நடைமுறையைக் கடைப்பிடித்தார் இந்தியாவில் கோவிலை இடித்த. முகமது கஜினி மத்திய ஆசியாவில் முஸ்லிம் மன்னர்களின் மீது போர் தொடுத்த போது தனது இந்து தளபதி திலக் என்பவரை அனுப்பி மசூதியை இடிக்கச் செய்தார். எந்த விதத்திலும் சோழ மன்னர்கள் சமகாலத்து (இடைக்கால) பேரரசர்களிடமிருந்து வேறுபட்டிருக்கவில்லை. அவர்கள் கடைபிடித்த அதே நடைமுறையையே பின்பற்றினர்.

சோழர் ஆட்சி பொற்காலமா?, ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், பெரிய கோவில், தஞ்சை

பட மூலாதாரம், GETTY IMAGES

சமூக வன்முறைகள்

சோழர் ஆட்சி சாதிய பாகுபாடுகளை ஆழமாக சமூகத்தில் வேரூன்றச்செய்தது. அவ்வேறுபாடுகள் அவர்கள் காலத்திலேயே சமய வழிபாடுகளில் வெளிப்பட்டது. வலங்கையினர் (வேளாண் குடியினர்- உள்ளூர் மக்கள்) பெற்றிருந்த சிறப்பு உரிமைகளுக்கு இடங்கையினரிடமிருந்து (கைவினைஞர்கள்-வெளியூரிலிருந்து வந்து குடியிருந்தவர்கள்) எதிர்ப்பு கிளம்பியதால் பகைமை அதிகரித்தது.

சோழர்ஆட்சி காலத்தில் காஞ்சிபுரத்தில் வலங்கை-இடங்கை பிரிவினர் ஒரே கோவிலில் கடவுள் தரிசனம் செய்யமாட்டார்கள்; மதச் சடங்குகளுக்காக ஒரே மண்டபத்தை பயன்படுத்த மாட்டார்கள்; தேவதாசிகள், நடனமாடும்பெண்கள் கூட இரு பிரிவினருக்கும் தனித்தனி தான் என்று பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி கூறுகின்றார்.

முதலாம் குலோத்துங்கன் ஆட்சியின் போது இரு பிரிவினருக்கும் இடையே வெடித்த மோதலின் விளைவாக ராஜ மகேந்திர சதுர்வேதி மங்களம் (பாபநாசம் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம்) தீக்கிரையானது. அங்கிருந்த கோவில்கள் இடிக்கப்பட்டு, விலைமதிப்பில்லா பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக சாஸ்திரி சுட்டிக்காட்டுகிறார்.

(கட்டுரையாளர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjdyr57gz9mo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.