Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு 2023 இல் ஹமாஸுடனான போர் தொடங்கியதிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று முடிவு செய்வதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது.

ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, அவர்களுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான தீங்கு விளைவிப்பது, குழுவை அழிக்க வேண்டுமென்றே நிபந்தனைகளை விதிப்பது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது என்பனவற்றின் ஊடாக வௌிப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றாக இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகள் மற்றும் இஸ்ரேலியப் படைகளின் நடத்தை முறையை அந்த அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது.

எவ்வாறாயினும் இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சு குறித்த அறிக்கையை திட்டவட்டமாக நிராகரித்ததாகக் கூறியுள்ளதுடன், இது தவறான சித்தரிக்கப்பட்ட அறிக்கை என்றும் தெரிவித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmfm8ghbu00gjo29n9jy9a3yj

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டும் ஐநா அறிக்கையின் அரசியல் விளைவு என்ன?

இஸ்ரேல்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகள் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் முதல், 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை குறைந்தது 90% மக்கள் இடம்பெயர்வதற்கு வழிவகுத்துள்ளது

கட்டுரை தகவல்

  • ஜெர்மி போவன்

  • சர்வதேச ஆசிரியர், பிபிசி

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலையை நிகழ்த்துவதாக கூறும் ஓர் அறிக்கை, விரிவான, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கும் அளவுக்கான ஆதாரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

1948-ஆம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்ட ஐநாவில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தீர்மானத்தை இஸ்ரேல் மீறியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

'இனப்படுகொலை (Genocide)' என்ற வார்த்தையும் அதை குற்றச்செயலாக கூறும் இந்த தீர்மானமும், நாஜி ஜெர்மனியால் 60 லட்சம் யூத மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதிலிருந்து நேரடியாக தாக்கம் பெற்றதாகும்.

போர் தொடர்பான சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதநேயச் சட்டத்தை உருவாக்க வழிவகுத்த தீர்மானங்கள் மற்றும் உடன்படிக்கைகளை காஸாவில் தங்களின் நடவடிக்கைகள் மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் மறுத்துள்ளது.

தற்காப்பு, தங்கள் நாட்டு குடிமக்கள் மீதான பாதுகாப்பு மற்றும் 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை விடுவிப்பதை வலியுறுத்தும் விதமாகவே தங்கள் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது.

இஸ்ரேலிய பணயக்கைதிகளில் சுமார் 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஹமாஸால் பரப்பப்படும் யூத எதிர்ப்பு பொய்களால் ஈர்க்கப்பட்டுள்ளதாக, இஸ்ரேலியர்கள் அந்த அறிக்கையை நிராகரித்துள்ளனர்.

இந்த அறிக்கை, ஐநா மனித உரிமைகள் கவுன்சிலால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடமிருந்து தொகுக்கப்பட்ட தகவல்களாகும். தங்கள் நாட்டுக்கு எதிராக பாரபட்சமாக செயல்படுவதாக கூறி, இந்த கவுன்சிலை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா புறக்கணித்துள்ளது.

ஆனால், இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக வளர்ந்துவரும் சர்வதேச கண்டனத்துக்கு இந்த அறிக்கை முடிவுகள் பங்களிப்பதாக உள்ளன.

இஸ்ரேலின் பாரம்பரிய மேற்கத்திய நட்பு நாடுகளும் ஆபிரஹாம் உடன்படிக்கைகளில் (Abraham Accords) இஸ்ரேலுடனான தங்கள் நாட்டு உறவுகளை இயல்புநிலைக்குக் கொண்டுவந்த வளைகுடா அரபு முடியாட்சி நாடுகளும் இவ்விவகாரம் தொடர்பாக இஸ்ரேலை கண்டித்துள்ளன.

இஸ்ரேல் - காஸா

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, கடும் வான்வழி தாக்குதல்கள் மற்றும் கட்டடங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை அழிப்பது ஆகியவற்றை உள்ளடக்கிய இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கையால் காஸா பெருமளவு அழிவை சந்தித்துள்ளது

அடுத்த வாரம் நியூயார்க்கில் ஐநா பொதுச் சபையில், சுதந்திரமான பாலத்தீன நாட்டுக்கான இறையாண்மையை அங்கீகரிக்கும் மற்ற ஐநா உறுப்பினர் நாடுகளுடன் பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் இணைய உள்ளன.

இந்த நகர்வு பெரிதும் அடையாள ரீதியான நடவடிக்கையாக இருக்கும். நூற்றாண்டுக்கு முன்பு ஐரோப்பாவிலிருந்து பாலத்தீனத்தில் குடியேற சியோனிய யூதர்கள் (Zionist Jews) வந்தபோது தொடங்கிய இந்த மோதலின் எதிர்காலம் குறித்த விவாதத்தை இது மாற்றும்.

ஆனால், பாலத்தீனத்தை அங்கீகரிப்பது யூத எதிர்ப்பு என்றும் ஹமாஸ் பயங்கரவாதத்திற்கான வெகுமதி என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாலத்தீன நாடு, இஸ்ரேலியர்களை ஆபத்தில் ஆழ்த்தும் என்பதால், ஜோர்டான் ஆறு மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடைப்பட்ட நிலத்தின் எந்த பகுதியிலும் பாலத்தீனர்கள் ஒருபோதும் சுதந்திரம் பெற முடியாது என்று அவர் தெரிவித்தார். அந்த நிலம் கடவுளால் யூத மக்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டது என இஸ்ரேலிய மத தேசியவாதிகள் நம்புகின்றனர்.

1948-ஆம் ஆண்டு தீர்மானத்தின்படி, இனப்படுகொலை என்பது, ஓர் தேசிய, இன, மதக்குழுவின் மீது பகுதியாகவோ அல்லது மொத்தமாகவோ வேண்டுமென்றே அழிக்கும் நோக்கத்துடன் செயல்படுவது என விவரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் காஸாவில் பாலத்தீனர்கள் மீதான தாக்குதல் அவ்வாறு குறிப்பிடப்படுகிறது.

இஸ்ரேல் - காஸா

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, காஸாவின் பல பகுதிகளில் "மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினி" நிலவுவதாக ஐநாவின் பல முகமைகள் கூறியுள்ளன

இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுகள்

காஸாவில் உள்ள பாலத்தீனர்கள் மற்றும் இஸ்ரேலில் அமைந்துள்ள சிறைகளில் உள்ள பாலத்தீனர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுகள் அடங்கிய நீண்ட பட்டியலில், அந்நாடு சட்ட ரீதியாக காக்க வேண்டிய பொதுமக்கள் மீதும் குறிவைப்பதாகவும், "உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகள் பற்றாக்குறையின் மூலம் பாலத்தீனர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் வகையிலான மனிதநேயமற்ற சூழல்களை உருவாக்குதல்" போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.

உணவு தொடர்பான அவசர சூழலை மதிப்பீடு செய்யும் சர்வதேச அமைப்பான ஐபிசியின் (IPC- கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை வகைப்பாடு) கூற்றுப்படி, பஞ்சம் மற்றும் பரவலான பட்டினிக்கு வழிவகுத்த இஸ்ரேலிய தடையை இது குறிக்கிறது.

இஸ்ரேலிய ராணுவம் காஸா நகரத்தில் உள்ள பொதுமக்களை தெற்கு நோக்கி நகருமாறு உத்தரவிட்டதையடுத்து, அங்கு தற்போது நடைபெறும் வலுக்கட்டாயமான இடம்பெயர்வு குறித்தும் ஐநாவின் இந்த புதிய அறிக்கை விவரித்துள்ளது.

இதனால் சுமார் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. வான்வழி தாக்குதல்கள் மற்றும் காஸா நகரின் அடையாளமாக விளங்கும் உயர்ந்த கட்டடங்கள் உட்பட பல கட்டடங்களை அழிப்பதன் மூலமாகவும் இஸ்ரேலிய தாக்குதலின் வேகம் அதிகரித்து வருகிறது.

காஸா நகரின் அடையாளமாக விளங்கும் கட்டடங்களை ஹமாஸின் "பயங்கரவாத கோபுரங்கள்" என இஸ்ரேலிய ராணுவம் அழைக்கிறது.

"காஸாவில் குழந்தை பிறப்பை தடுக்கும் நோக்கத்துடனான நடவடிக்கைகளையும்" இஸ்ரேல் மேற்கொள்வதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

காஸாவில் மிகப்பெரிய கருத்தரிப்பு கிளீனிக் மீதான இஸ்ரேலிய தாக்குதலில் சுமார் 4000 கருமுட்டைகள் மற்றும் 1000 விந்து மாதிரிகள் மற்றும் கருவுறாத முட்டைகள் அழிக்கப்பட்டதாக வெளியான தகவலை இது குறிக்கிறது.

இனப்படுகொலையை தூண்டியதாக 3 பேர் மீது குற்றச்சாட்டு

இஸ்ரேல் - காஸா , பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (இடது), அதிபர் ஐஸக் ஹெர்சோக் (நடுவில் இருப்பவர்), பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் யோவ் கேலண்ட் (வலதுபக்கத்திலிருந்து இரண்டாவதாக இருப்பவர்) ஆகியோர் இனப்படுகொலையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

ராணுவ நடவடிக்கையின் விளைவுகளை தவிர்த்து, இந்த 'இனப்படுகொலைக்கு' தூண்டியதாக இஸ்ரேலிய அதிகாரிகள் மூன்று பேரையும் ஐநாவின் அறிக்கை கோடிட்டுக் காட்டியுள்ளது.

அவர்களுள் ஒருவர், இஸ்ரேலின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 9 அன்று, "மனித மிருகங்களுடன்" இஸ்ரேல் சண்டையிடுவதாக கூறியிருந்தார்.

பிரதமர் நெதன்யாகுவை போன்று யோவ் கேலண்ட்டும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் போர் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கைது வாரண்டை எதிர்கொண்டுள்ளார்.

அமலேக்குக்கு (Amalek) எதிரான யூத சண்டை குறித்த கதையுடன் காஸா போரை ஒப்பிட்டு, அதை தூண்டியதாக நெதன்யாகுவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

அமலேக் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், அவர்களின் உடைமைகள் மற்றும் விலங்குகளை அழிக்குமாறு யூத மக்களுக்கு கடவுள் கூறியதாக பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள மூன்றாவது அதிகாரி ஐஸக் ஹெர்சோக், இவர் போரின் முதல் வாரத்தில் ஹமாஸுக்கு எதிராக நிற்கவில்லையென காஸாவின் பாலத்தீனர்களை கண்டித்தார். 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 13 அன்று, "முழு தேசமும்தான் இதற்கு பொறுப்பு" என கூறினார்.

கடும் சட்டவிதிகள்

சட்டபூர்வமாக இனப்படுகொலை குற்றத்தை நிரூபிப்பது கடினம். இனப்படுகொலை தீர்மானத்தை உருவாக்கியவர்கள் விதிகளை கடுமையாக வடிவமைத்தனர். சர்வதேச நீதிமன்றம் அதுகுறித்து கூறும் விளக்கமும் உயர்ந்த விதிமுறைகளை கொண்டதாக இருந்தது.

ஹேக் நகரத்தில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில், பாலத்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்வதாக தென்னாப்பிரிக்கா வழக்கு ஒன்றை தொடுத்தது. இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட பல ஆண்டுகளாகும்.

ஆனால், காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் ஐநா அறிக்கை இந்த போர் தொடர்பான சர்வதேச பிளவுகளை இன்னும் ஆழப்படுத்தும்.

ஒருபுறம், காஸாவில் நடைபெறும் கொலைகள் மற்றும் அழிவுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும், இஸ்ரேலின் தடைகளால் உருவாகியுள்ள பஞ்சத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் நாடுகள் உள்ளன. அவற்றில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் உள்ளன.

மறுபுறம், இஸ்ரேலும் அமெரிக்காவும் உள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், முக்கியமான ராணுவ உதவி மற்றும் ராஜீய ரீதியிலான பாதுகாப்பை வழங்கிவருகிறது, இவை இல்லாமல் காஸாவில் போரை தொடரவும் மத்திய கிழக்கில் குண்டுவீச்சு நடவடிக்கைகளை தொடரவும் இஸ்ரேல் போராட வேண்டிய நிலை உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8xrg7zkwwvo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

இஸ்ரேல் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டும் ஐநா அறிக்கையின் அரசியல் விளைவு என்ன?

இதுவரை காலமும் ஐநா செய்த நற்செயல்களை பஞ்சபுராணமாக பாடி அருளுக...😎

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை கடுமையான குற்றமாக இருந்தாலும் தண்டனை கிடைப்பதில் என்ன சிக்கல்?

இனப்படுகொலை என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • லூயிஸ் பார்ரூசோ

  • பிபிசி

  • 17 செப்டெம்பர் 2025

காஸா போரில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறதா என்ற உலகளாவிய விவாதம் எழுந்துள்ளது. சர்வதேச சட்டத்தின் கீழ் இது மிகக் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.

செப்டம்பர் நடுப்பகுதி வரை, இஸ்ரேலின் ராணுவ தாக்குதல் காஸாவில் சுமார் 65,000 பேரைக் கொன்றுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸின் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதில் கொல்லப்பட்ட 1,200 பேரில் பெரும்பாலானோரும் காஸாவுக்கு கடத்தப்பட்ட 251 பேரும் பொதுமக்கள் ஆவர்.

காஸாவில் நடந்த தாக்குதல் மற்றும் அழிவுகள் பரவலான கண்டனங்களுக்கு வழிவகுத்துள்ளன. துருக்கி மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல நாடுகள், மனித உரிமை குழுக்கள் மற்றும் ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட சில வல்லுநர்கள், காஸாவில் இஸ்ரேலின் நடத்தை 'இனப்படுகொலை' எனக் கூறியுள்ளனர்.

1948 இனப்படுகொலை தீர்மானத்தை மீறியதாக இஸ்ரேலுக்கு எதிராக 2023 டிசம்பரில் தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) வழக்கு தொடர்ந்தது.

ஒரு மாதத்திற்குப் பிறகு ஒரு இடைக்கால தீர்ப்பு, பாலத்தீனர்களுக்கு இனப்படுகொலையில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமை இருக்கிறது என்று கூறியது.

தென்னாப்பிரிக்கா கூறிய குற்றச்சாட்டுகளில் சில உண்மையென நிரூபிக்கப்பட்டால், அவை சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலையாக கருதப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேல் காஸாவில் இனப்படுகொலை செய்வதாக ஐநா ஆணையமும் தனது அறிக்கையில் கூறியுள்ளது. இந்த அறிக்கை, ஐநா மனித உரிமைகள் கவுன்சிலால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவிடமிருந்து தொகுக்கப்பட்ட தகவல்களாகும்.

பிரிட்டன் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட மேற்கத்திய அரசுகள், இஸ்ரேலின் செயல்களை இனப்படுகொலை என்று விவரிப்பதை பெரும்பாலும் தவிர்த்துள்ளன.

பிரான்ஸ் அதிபர் மக்ரோங் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவது அரசியல் தலைவரின் கையில் இல்லை என்றும் "வரலாற்றாசிரியர்கள்" பொருத்தமான நேரத்தில் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் "அப்பட்டமான பொய்கள்" என்று கடுமையாக நிராகரித்து, தனது பாதுகாப்பு மற்றும் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி வருவதாக வலியுறுத்துகிறது.

இந்த வாதத்தை இஸ்ரேலின் மிகவும் சக்திவாய்ந்த நட்பு நாடான அமெரிக்காவும் ஆதரிக்கிறது.

இனப்படுகொலை என்றால் என்ன, இது பொருந்துமா என்பதை யார் முடிவு செய்யலாம்?

இனப்படுகொலை என்பதன் வரையறை என்ன?

யூத-போலிஷ் வழக்கறிஞர் ரஃபேல் லெம்கின் ஒரு முழு உடையில் மேசையில் அமர்ந்து,  கையில் பேனாவுடன் ஒரு காகிதத்தில் எழுதுவதைக் காட்டும் கருப்பு-வெள்ளை புகைப்படம்.

பட மூலாதாரம், Bettmann Archive/Getty Images

படக்குறிப்பு, யூத-போலிஷ் வழக்கறிஞர் ரஃபேல் லெம்கின் இனப்படுகொலை மாநாட்டை உருவாக்குவதற்கு உதவினார்.

இந்தச் சொல் 1943இல் யூத-போலிஷ் வழக்கறிஞர் ரஃபேல் லெம்கினால் உருவாக்கப்பட்டது. அவர் கிரேக்க வார்த்தையான "ஜெனோஸ்" (இனம் அல்லது பழங்குடி) மற்றும் லத்தீன் வார்த்தையான "சைடு" (கொல்லுதல்) ஆகியவற்றை இணைத்தார்.

அவரது சகோதரரைத் தவிர அவரது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் கொல்லப்பட்ட யூத இனப்படுகொலை பயங்கரங்களைக் கண்ட பிறகு சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலை ஒரு குற்றமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று லெம்கின் வலியுறுத்தினார்.

அவரது முயற்சிகள் 1948 டிசம்பரில் ஐ.நா. இனப்படுகொலை தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வழிவகுத்தது, இது 1951 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது. 2022-ஆம் ஆண்டு வரை, இது 153 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

தீர்மானத்தின் இரண்டாம் பிரிவு, இனப்படுகொலை என்பதை "தேசிய, இன, இனவியல், அல்லது மதக் குழுவை, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்று" என்று வரையறுக்கிறது:

  • குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது

  • குழுவின் உறுப்பினர்களுக்கு கடுமையான உடல் அல்லது மன ரீதியான தீங்கு விளைவிப்பது

  • குழுவின் அழிவை, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே மோசமான வாழ்க்கை சூழலை உருவாக்குவது

  • குழுவிற்குள் பிறப்புகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுப்பது

  • குழுவின் குழந்தைகளை வலுக்கட்டாயமாக மற்றொரு குழுவிற்கு மாற்றுவது

கையெழுத்திட்ட நாடுகளுக்கு இனப்படுகொலையை "தடுக்கவும் தண்டிக்கவும்" ஒரு பொதுவான கடமையை தீர்மானம் விதிக்கிறது.

இனப்படுகொலை என்பதை யார் தீர்மானிக்கிறார்கள்?

இஸ்ரேலின் தொடர்ச்சியான தடைகள் மற்றும் காஸா மீதான தாக்குதல்களுக்கு மத்தியில் ஒரு தொண்டு நிறுவனத்தால் விநியோகிக்கப்படும் உணவுக்காக இஸ்லாமிய உடையணிந்த பாலத்தீன பெண்கள் குழு வெற்று பாத்திரங்களுடன்  காத்திருக்கிறது.

பட மூலாதாரம், Abdalhkem Abu Riash/Anadolu via Getty Images

படக்குறிப்பு, காஸா மக்கள் பட்டினியால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதை இஸ்ரேல் மறுக்கிறது

ஒரு சூழ்நிலை இனப்படுகொலையாக உள்ளதா என்பதை தன்னால் தீர்மானிக்க முடியாது என்றும் சர்வதேச நீதிமன்றங்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட நீதித்துறை அமைப்புகளுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது என்றும் ஐ.நா. கூறுகிறது.

சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு சில வழக்குகளில் மட்டுமே இனப்படுகொலை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன. 1994இல் ருவாண்டாவில் நடைபெற்ற இனப் படுகொலை, 1995இல் போஸ்னியாவில் ஸ்ரெப்ரெனிகா இனப்படுகொலை மற்றும் 1975 முதல் 1979 வரை கம்போடியாவில் கமர் ரூஜின் சிறுபான்மை குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை.

சர்வதேச நீதிமன்றம் (ICJ) மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) ஆகியவை இனப்படுகொலை குறித்து தீர்ப்பு வழங்குவதற்கு அதிகாரம் பெற்ற முக்கிய சர்வதேச நீதிமன்றங்களாகும். ருவாண்டா மற்றும் முன்னாள் யூகோஸ்லாவியாவில் இனப்படுகொலைகள் குறித்து விசாரிக்க ஐ.நா. தற்காலிக தீர்ப்பாயங்களையும் அமைத்தது.

சர்வதேச நீதிமன்றம், நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளைத் தீர்க்கும் ஐ.நாவின் உயர்ந்த நீதித்துறை அமைப்பாகும். தற்போது நடந்து வரும் இனப்படுகொலை வழக்குகளில், 2022இல் யுக்ரேன் ரஷ்யாவுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ஒன்றாகும்.

யுக்ரேனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் யுக்ரேன் இனப்படுகொலை செய்ததாக ரஷ்யா தவறாக குற்றம் சாட்டியதாகவும், அதை படையெடுப்புக்கு ஒரு காரணமாக பயன்படுத்தியதாகவும் யுக்ரேன் குற்றம் சாட்டியுள்ளது.

விமானங்கள் பாராசூட் மூலம் உதவி பொதிகளை வீசுகின்றன, மேற்கு காஸா நகரில் மனிதாபிமான உதவி பொதிகள் தரையிறங்கும் பகுதியில் பாலத்தீனர்கள்  குவிகின்றனர்.

பட மூலாதாரம், Mahmoud Abu Hamda/Anadolu via Getty Images

படக்குறிப்பு, உதவிகள் மீது விதிக்கப்பட்டிருந்த முழுமையான தடையை இஸ்ரேல் மே மாதத்தில் பகுதியாக தளர்த்திக்கொண்டது

மற்றொரு உதாரணம், 2017இல் காம்பியா மியான்மருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு. பௌத்த மக்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு, முஸ்லிம் ரோஹிஞ்சா சிறுபான்மையினருக்கு எதிராக "பரவலான மற்றும் திட்டமிட்ட அழிக்கும் நடவடிக்கைகளை" அவர்களின் கிராமங்களில் நடத்தியதாக குற்றம் சாட்டியது.

2002இல் ரோம் சாசனத்தின் கீழ் அமைக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC), தனிநபர்களை விசாரணைக்கு உட்படுத்துகிறது. இந்த ஒப்பந்தத்தை அங்கீகரித்த 125 நாடுகள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளன. அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகியவை குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளாக உள்ளன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இனப்படுகொலை என்று குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளை விசாரித்து வருகிறது.

ஆனால் 2019இல் கிட்டத்தட்ட முப்பது ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு பதவி நீக்கப்பட்ட சூடானின் முன்னாள் அதிபர் ஓமர் ஹசன் அஹ்மத் அல் பஷீர் மீது மட்டுமே இதுவரை குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. அவர் இன்னும் தலைமறைவாக உள்ளார்.

தேசிய நாடாளுமன்றங்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் இனப்படுகொலை என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என்றாலும், இவை அவர்களின் எல்லைகளுக்கு அப்பால் சட்டபூர்வமான அங்கீகாரத்தைக் கொண்டிருக்கவில்லை என்று ஐ.நா. கூறுகிறது.

உதாரணமாக, 1932-33இல் யுக்ரேனில் ஜோசப் ஸ்டாலினின் கூட்டுமயமாக்கல் கொள்கைகளால் மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியால் இறந்த 'ஹோலோடோமரை' பல அரசாங்கங்களும் நாடாளுமன்றங்களும் சமீபத்திய ஆண்டுகளில் இனப்படுகொலை என்று அங்கீகரித்துள்ளன.

தகுதியான நீதிமன்றங்களின் முடிவுகளைத் தொடர்ந்து மட்டுமே இனப்படுகொலை தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற நீண்ட கால கொள்கை காரணமாக பிரிட்டன் இவ்வாறு அங்கீகரிக்கவில்லை.

காஸாவின் ஜிகிம் எல்லைக் கடவையில் அருகில் உள்ள உதவி விநியோக மையத்தில் குவிந்திருக்கும் பாலத்தீன மக்கள் கூட்டம், இடிபாடுகளாலும் குண்டு வீசப்பட்டு அழிக்கப்பட்ட கட்டடங்களாலும் சூழப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Khames Alrefi/Anadolu via Getty Images

படக்குறிப்பு, காஸாவில் பஞ்சம் மற்றும் பரவலான பட்டினி இருப்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருவதாக ஐநா சொல்கிறது

விமர்சனங்கள் உள்ளனவா?

இனப்படுகொலை தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து, பல்வேறு தரப்பினரால் அதிலும் குறிப்பாக, குறிப்பிட்ட வழக்குகளுக்கு இதை பயன்படுத்துவதில் உள்ள சிரமத்தால் விரக்தியடைந்தவர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளது. சிலர் வரையறை மிகவும் குறுகியது என்று வாதிடுகின்றனர். மற்றவர்கள் இது அதிகப்படியான பயன்பாட்டால் மதிப்பிழந்துவிட்டது என்று கூறுகின்றனர்.

"இனப்படுகொலைக்கான அளவுகோலை எட்டுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது," என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றிய இனப்படுகொலை தொடர்பான நிபுணர் திஜ்ஸ் பவுக்னெக்ட் ஏஎஃப்பிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

"நோக்கம் இருந்தது என்பதை நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்பதுடன் நடந்தவற்றுக்கு அந்த நோக்கமே ஒரே சாத்தியமான விளக்கம் என்றும் நிரூபிக்கவேண்டும்," என அவர் மேலும் கூறினார்.

மற்ற சில பொதுவான விமர்சனங்களில், சில அரசியல் மற்றும் சமூகக் குழுக்களை பாதிக்கப்பட்டவர்களாக சேர்க்காதது மற்றும் எத்தனை இறப்புகள் இனப்படுகொலைக்கு சமமாகும் என்பதை நிறுவுவது ஆகியவை அடங்கும்.

இனப்படுகொலை நடந்ததா என ஒரு நீதிமன்றம் தீர்மானிக்க பல ஆண்டுகள் ஆகலாம் என்று பவுக்னெக்ட் குறிப்பிட்டார்.

ருவாண்டாவின் வழக்கில், ஐ.நா. அமைத்த தீர்ப்பாயம் இனப்படுகொலை நடந்ததாக முறையாக முடிவு செய்ய கிட்டத்தட்ட பத்தாண்டுகள் எடுத்தது.

மேலும் 1995இல் ஸ்ரெப்ரெனிகா படுகொலையில் கிட்டத்தட்ட 8,000 முஸ்லிம் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் கொல்லப்பட்டதை 2017-ஆம் ஆண்டு வரை சர்வதேச நீதிமன்றம் இனப்படுகொலை என்று அங்கீகரிக்கவில்லை.

யார்க் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் நிபுணர் ரேச்சல் பர்ன்ஸ், மிகக் குறைவான குற்றவாளிகளே தங்கள் குற்றங்களுக்கு தண்டிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

"ருவாண்டா, முன்னாள் யூகோஸ்லாவியா மற்றும் கம்போடியாவில் உண்மையான குற்றவாளிகளின் எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் ஒருசிலரே தண்டிக்கப்பட்டுள்ளனர்."

ஒரு சூழல் சட்டரீதியாக இனப்படுகொலை என்று வரையறுக்கப்பட்டவுடன், தீர்மானத்தில் கையெழுத்திட்ட நாடுகள் அதைத் தடுக்க அல்லது நிறுத்துவதற்கு ராஜீய, தடைகள் அல்லது ராணுவ தலையீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

உதாரணமாக, ருவாண்டா இனப்படுகொலைகள் நடந்து கொண்டிருந்தபோது, தீர்மானத்தின் கீழ் சட்ட மற்றும் அரசியல் கடமைகளைத் தவிர்க்க, அமெரிக்க அதிகாரிகள் "இனப்படுகொலை" என்ற வார்த்தையை வேண்டுமென்றே பயன்படுத்தாமல் இருந்ததாக அமெரிக்காவின் வெளியிடப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்தின.

"ஐ.நா. வரையறையுடன் கூட, வரையறை செய்யத் தவறுதல், செயல்படத் தவறுதல் மற்றும் விசாரணை செய்யத் தவறுதல் ஆகியவை இன்னும் உள்ளன," என்று பர்ன்ஸ் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cddmz0vv2eyo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.