Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி வளைவில் சர்வதேசத்திடம் நீதிகோரி உணவுத் தவிர்ப்புப் போர்;

1260774579.jpg

நாளை முதல் செப்ரெம்பர் 29 வரை ஐந்து தினங்கள் நடைபெறும்!

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி, நாளை முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை சுழற்சிமுறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தற்போது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரின் போதும், அதற்கு முன்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும், தமிழர்களுக்கான தீர்வை வலியுறுத்தியும் சுழற்சி முறையில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடத்தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் இரவு - பகலாக எதிர்வரும் 29ஆம் திகதி மாலை 4 மணிவரை இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது. எனவே, தமிழ் மக்கள் பெருவாரியாக இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் - என்றனர்.

https://newuthayan.com/article/செம்மணி_வளைவில்_சர்வதேசத்திடம்_நீதிகோரி_உணவுத்_தவிர்ப்புப்_போர்;

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மகா சமுத்திரத்தில் கண்ணீர்த் துளி வடிவில் அமைந்துள்ள இலங்கைத் தீவு, சட்டவிரோதமாகக் கொன்று புதைக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளாலும் நிரம்பிய நிலமாக இன்று அறியப்படுகிறது. ‘இந்து சமுத்திரத்தின் முத்து' என அழைக்கப்படுகின்ற இந்தத் தீவுக்குள் மனித எலும்புக்கூடுகளே நிரம்பியிருக்கின்றன.

அழகிய கடற்கரைகள், பசுமையான தேயிலைத் தோட்டங்கள், மலைகள், நதிகள் என இந்த இலங்கைத்தீவின் அழகான பக்கங்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் புதைகுழிகளாலும் நிரம்பியிருக்கிறது. கண்ணீர்த் துளி வடிவில் உள்ள இத்தீவில் கண்ணீருடன் வாழும் மக்கள் அதிகம். தீவு முழுவதும் மனிதப் புதைகுழிகளில் இருந்து எடுக்கப்படும் எலும்புக் கூடுகளால் அழுகின்ற மக்களை அதிகம் கொண்ட நாடாகவும் இலங்கை காணப்படுகிறது.

இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தம் மற்றும் கிளர்ச்சி காரணமாக இந்தத் தீவு முழுவதும் ஏராளமான மனிதப் புதைகுழிகள் காணப்படுகின்றன. இற்றைவரை சுமார் 23 புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கண்டுபிடிக்கப்படாமல் இன்னும் ஏராளமான மனிதப் புதைகுழிகள் தீவெங்கும் ரகசியம் காத்துக் கிடக்கின்றன. இதில் தமிழ் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கில் அதிக மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் பல தோண்டப்பட்டு, ஒவ்வொன்றிலும் ஏராளமான மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன, மீட்கப்பட்டும் வருகின்றன.

இலங்கையில் 1971-ம் ஆண்டு ஜே.வி.பி கிளர்ச்சியுடன் ஆரம்பிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள், 2009-ம் ஆண்டில் விடுதலைப்புலிகளுடனான யுத்தம் நிறைவுக்கு வரும் வரையில் தொடர்ந்தன. தென்னிலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் அனைத்தும் ஜே.பி.வி கிளர்ச்சியின்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களுடையது எனத் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறே வடக்கு கிழக்கில் காணப்படுகின்ற மனிதப் புதைகுழிகள் அனைத்தும் விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின்போது காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்களுடையதாகக் காணப்படுகிறது.

வடக்கு கிழக்கிற்கு ஐ.நா பிரதிநிதிகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், உள்ளூர்ப் பிரதிநிதிகள் என யார் விஜயம் செய்தாலும், அவர்களிடம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் படங்களுடன் செல்லும் அம்மாவும் அப்பாவும் அக்காவும் அண்ணாவும் உறவுகளும் கண்ணீருடன் கதறி அழுது நீதி கோரி நிற்கும் காட்சிகள் நெஞ்சை கனக்கச் செய்கிறது. இலங்கை இராணுவத்தால், பொலீஸாரால், அல்லது இவர்களோடு சேர்ந்து இயங்கிய துணை இராணுவக் குழுக்களால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்திருக்கும் என்ற பெரும் கேள்விக்கு விடையாக இப்பொழுது தமிழர் தாயகப் பிரதேசங்களில் தோண்டப்படும் செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் காணப்படுகின்றன. இந்தப் பாரிய குற்றத்திற்கு அச்சமின்றி சாட்சி சொல்லும் ஒன்றாக, மீட்கப்படும் எலும்புக்கூடுகள் மட்டுமே உள்ளன.

மனிதப் புதைகுழிகளால் நிரம்பிய இந்துமகா சமுத்திரத்தின் முத்து!

மனிதப் புதைகுழிகளின் அவலம்!

மனிதப் புதைகுழிகள் தொடர்பில் இன்றுவரை மிகத் தெளிவான சர்வதேச வரைவிலக்கணங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. ஆனாலும் சட்டரீதியாக புதைக்கப்பட்டவர்களைத் தவிர வழமைக்கு மாறாக ஓரிடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மனித உடல்கள் புதைக்கப்பட்ட குழிகள், அகழிகள் என்பன பாரிய மனிதப் புதைகுழிகளாக அடையாளம் காணப்படுகின்றன. இவை யுத்தம், இனப்படுகொலை, மனித உரிமை மீறல் போன்றவற்றின் போது சித்ரவதைக்கு ஆளாகிக் கொல்லப்படும் அப்பாவிகளை மறைக்கும் நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்றன.

இதுவரை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து மனிதப் புதைகுழிகளும் மேற்சொன்னவாறு கைதுகள், காணாமல் ஆக்கப்படுதல், அதன்பின் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோதக் கொலைகளால் ஏற்பட்டவை. அதாவது, மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் அனைத்தும் சித்ரவதைக்கு ஆளாகிக் கொலை செய்யப்பட்டவர்களுடையவை அல்லது சுடப்பட்டுக் கொலை செய்யப்பட்டவர்களின் மிச்சங்கள் எனத் தடயவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

சிறுவர்களையும் கொன்று புதைத்த அவலம்!

இலங்கையில் 2009 வரை ஏற்படுத்தப்பட்டவை என இன்றுவரைக்கும் சுமார் 23 பாரிய மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை நாடு முழுவதும் பரவலாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர கிடைக்கப்பெறுகின்ற தகவல்கள், வாக்குமூலங்களுக்கு அமைவாக அந்தந்தக் காலப்பகுதியில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் இன்னும் பல புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படக்கூடும்.

அந்த வகையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகளாக யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கம், யாழ்ப்பாணம் செம்மணி, யாழ்ப்பாணம் மிருசுவில், கிளிநொச்சி மாவட்டம் கணேசபுரம், மற்றும் பிறிதொரு மனிதப் புதைகுழி, மன்னார் மாவட்டம் சதோச, மன்னார் திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய், குருநாகல் மாவட்டம் நிகரவபிட்டிய, கம்பகா மாவட்டம் மினுவாங்கொட கம்பகா எஸ்செல்ல, கம்பகா மாவட்டம் நித்தம்புவ, கொழும்பு மாவட்டம் கோகந்தர, கொழும்பு பொல்கொட ஏரி, மாத்தறை மாவட்டம் அக்குரஸ்ஸ, இரத்தினபுரி மாவட்டம் சூரியகந்த, மாத்தளை வைத்தியசாலை, கண்டி அங்கும்புர, மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி, மட்டக்களப்பு சத்துருகொண்டான், மட்டக்களப்பு குருக்கள்மடம் ஆகியன காணப்படுகின்றன. இப்பொழுது புதிதாக யாழ்ப்பாணம் மண்டைத்தீவு மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

1994-ம் ஆண்டு இரத்தினபுரி சூரியகந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியிலிருந்து 48 சிறுவர்கள் உட்பட 300-க்கும் அதிகமான மனித மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவ்வாறே 2012-ம் ஆண்டு மாத்தளை வைத்தியசாலையின் புதைகுழியில் 155 மனித மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 2018-ம் ஆண்டு மன்னார் சதோச புதைகுழியில் 350-க்கும் மேற்பட்ட மனித மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் 2013-ம் ஆண்டு மன்னார் திருக்கேதீஸ்வரம் புதைகுழியில் 88-க்கும் மேற்பட்ட மனித மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

1999-ம் ஆண்டு கண்டறியப்பட்ட யாழ்ப்பாணம் செம்மணியில் அப்போது 15 மனித மிச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டன. தற்போது அகழ்வுப் பணிகளின்போது இன்றுவரைக்கும் 147 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அகழ்வுப் பணிகள் இன்னமும் நிறைவுக்கு வரவில்லை. செம்மணி பகுதியில் சுமார் 400 வரையானவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என கிருஷாந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள இராணுவத்தைச் சேர்ந்த கோப்ரல் சோமரட்ன ராஜபக்ச கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு புதைகுழியில் 9 மனித மிச்சங்களும், கொக்குத் தொடுவாய் புதைகுழியில் 52-க்கும் மேற்பட்ட மனித மிச்சங்களும் கண்டறியப்பட்டுள்ளன.

மனிதப் புதைகுழிகளால் நிரம்பிய இந்துமகா சமுத்திரத்தின் முத்து!

மனிதப் புதைகுழிகளும் அரசியல் தலையீடுகளும்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் விடயத்திலும் அல்லது குறிப்பிட்ட இடத்தில் மனிதப் புதைகுழிகள் காணப்படுகின்றன என்ற தகவல்களின் அடிப்படையில் அவற்றை அகழ்கின்ற விடயத்திலும் கடந்த காலங்களில் பாரிய அளவில் அரசியல் தலையீடுகள் இருந்தமையினை பலரும் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளனர். அரசியல் நலன்களின் அடிப்படையில்தான் இவ்வாறான மனிதப் புதைகுழிகள் விடயத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பது மனித உரிமை செயற்பாட்டாளர்களின் குற்றச்சாட்டு.

அரசியல்வாதிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் அல்லது பாதுகாப்புத் தரப்பின் உயரதிகாரிகள் சம்பந்தப்பட்டிருப்பின் அகழ்வு நடவடிக்கைகள் கிடப்பில் போடப்படும் அல்லது தடுக்கப்படும். 2014-ம் ஆண்டு களுவாஞ்சிகுடி மனிதப் புதைகுழி விடயத்தில் அது விடுதலைப்புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற நோக்கில் ஆரம்பத்தில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டிருந்தபோதும், பின்னர் அந்த அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. 2004-ம் ஆண்டு புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்று பாதுகாப்புப் படைகளுடன் சேர்ந்து, அதன் பின்னர் 2018-ல் மகிந்த ராஜபக்ச அரசில் அமைச்சராக இருந்த கருணா அம்மான் இச் சம்பவங்களில் தொடர்புபட்டிருக்கலாம் என்ற காரணத்தால் இந்த விசாரணை நிறுத்தப்பட்டதாக மனித உரிமைகள் அமைப்புகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் குற்றம் சாட்டினர்.

அவ்வாறே 2013-ல் மாத்தளையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளுக்கும் நடந்தது. இவை 1980-களுக்குப் பின்னரான காலப்பகுதியைச் சேர்ந்தவை என கிடைக்கப் பெற்ற தடயவியல் பொருள்களை வைத்துக் கூறப்பட்டிருந்தது. 1989-90களில் மாத்தளை மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக இருந்தவர் கோத்தபாய ராஜபக்ச. பின்னர் மாத்தளை புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட காலப்பகுதியில் இவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றினார். எனவே இந்தப் புதைகுழி விடயத்தில் உண்மைகள் வெளிவரும் பட்சத்தில் தன்னுடைய சகோதரரின் வகிபாகம் வெளியே வந்துவிடும் என்பதற்காக அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெறுமனே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமித்து அதனை வலுவிழக்கச் செய்தார். நீதிமன்ற விசாரணைகளுக்கும் தாமதங்கள், ஒத்துழைப்பு இன்மை என்பவற்றால் தடைப்பட்டது என மனித உரிமை அமைப்புகளால் குற்றம் சாட்டப்பட்டது. முக்கியமாக மாத்தளை உள்ளிட்ட மத்திய மாகாணத்தின் அனைத்து பொலீஸ் நிலையங்களிலும் காணப்பட்ட ஐந்து வருடங்களுக்கு முந்திய அனைத்துக் கோப்புகளையும் அழித்துவிடும்படி செய்யப்பட்டதாக கோத்தபாய ராஜபக்ச மீது அப்போது குற்றம் சாட்டப்பட்டது.

இதுபோன்றே செம்மணி புதைகுழி விடயத்திலும், கிருஷாந்தி படுகொலையுடன் தொடர்புபட்ட இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது, செம்மணியில் 400-க்கும் மேற்பட்ட மனித உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக இராணுவ கோப்ரல் சோமரட்ண ராஜபக்ச தெரிவித்தார். பின்னர் அகழ்வுப் பணிகளில் 15 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு அகழ்வுப் பணிகளும் விசாரணைகளும் நிறுத்தப்பட்டன. இராணுவ உயரதிகாரிகள் பலர் சிக்கிக்கொள்வார்கள் என்ற காரணத்தினால் விசாரணை நிறுத்தப்பட்டது. இப்பொழுது புதிய அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 147 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறே மிருசுவில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று குழந்தைகள் உள்ளிட்ட எட்டுப்பேர் கொலை தொடர்பான வழக்கில் குற்றவாளிகளாக இனம் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தைச் சேர்ந்த சுனில் ரத்நாயக்கவுக்கு 2020-ல் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கினார்.

இதேபோன்றே 1995-ல் கொழும்பு பொல்கொட ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட 21 சடலங்கள் தொடர்பில், அவர்களைக் கொலை செய்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்தார் நீதிபதி.

பல மனிதப் புதைகுழிகள் விடயத்தில் இவ்வாறு அரசியல் தலையீடுகள் காரணமாக அவை தொடர்பான உண்மைகள் வெளிவராமலே அவையும் புதைக்கப்பட்டுள்ளன.

மனிதப் புதைகுழிகளால் நிரம்பிய இந்துமகா சமுத்திரத்தின் முத்து!

மனிதப் புதைகுழியும் நீதியும்

புதிய அரசு மனிதப் புதைகுழிகள் விடயத்தில் வெளிப்படைத்தன்மையுடன் நீதியான விசாரணை நடத்தும் என்ற சிறு நம்பிக்கை காணப்படுகிறது. ஆனாலும் கடந்த காலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த எல்லா அரசுகள் போன்றும் நீதிக்குப் புறம்பாகத் தன் படைகளையும் அதிகாரிகளையும் காப்பாற்றும் முயற்சியில் அரசு இறங்குமா என்ற சந்தேகமும் மக்களிடம் உண்டு.

இலங்கையில் மனிதப் புதைகுழிகள் விடயத்தில் நீதியான விசாரணைகள் நடாத்தப்பட்டு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றே கூறவேண்டும்.

குற்றம்சாட்டப்பட்ட பல இராணுவ அதிகாரிகள் பின்னாட்களில் பதவி உயர்வு வழங்கப்பட்டு ஓய்வு பெற்றுள்ளனர். பலர் விசாரணை வளையத்திற்குள் வராமலே பதவிக் காலத்தைக் கழித்துவிட்டுச் சென்றுவிட்டனர். உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதோடு, இந்த பாரிய மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையும் கிடைக்கின்றபோதே இந்த அழகிய தீவில் அழுகைகளுக்கும் கண்ணீருக்கும் முற்றுப்புள்ளி கிடைக்கும்.

வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் எப்படிப்பட்ட வலியையும் வேதனையையும் சந்தித்து இறந்திருக்கக்கூடும் என்பதற்கு சாட்சிகளே இந்த மனிதப் புதைகுழிகள். அவர்கள் அனுபவித்த வலிகளுக்கும், உறவுகளின் அழுகைக்கும் இயற்கை நீதியை வேண்டி நிற்கிறது இலங்கை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களினுடைய உறவுகளின் வலியையும் வேதனையையும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவுக்கு யாரும் விளங்கப்படுத்தத் தேவையில்லை. காரணம், அவருடைய சகோதரனும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுள் ஒருவர். அப்போது அவரது தாய் பொலீஸ் நிலையங்கள் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு ஏறி இறங்கியதனையும் அதன் வலிகளையும் நேரில் அனுபவித்தவரே ஜனாதிபதி. எனவே, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மனிதப் புதைகுழிகள் தொடர்பில் அவரிடமிருந்து நீதியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

https://www.vikatan.com/
No image preview

மனிதப் புதைகுழிகளால் நிரம்பிய இந்துமகா சமுத்திரத்தின் முத...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.