Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனா, ஐந்தாண்டு திட்டம், உலக பொருளாதாரம்

பட மூலாதாரம், AFP via Getty Images

கட்டுரை தகவல்

  • நிக் மார்ஷ்

  • பிபிசி செய்தி

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சீனாவின் உயர்மட்டத் தலைவர்கள் பெய்ஜிங்கில் இந்த வாரம் கூடி, இந்த தசாப்தத்தின் மீதமுள்ள காலத்திற்கான நாட்டின் முக்கிய இலக்குகளைத் தீர்மானிக்க உள்ளனர்.

சீனாவின் மிக உயர்ந்த அரசியல் அமைப்பான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு ஒவ்வொரு ஆண்டும் கூடுகிறது. இந்தக் கூட்டம் ஒரு வாரம் நீடிக்கும்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், சீனாவின் அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்திற்கான அடிப்படையாக அமையும்.

2026 முதல் 2030 வரை, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா பின்பற்ற உள்ள திட்டத்தின் வழிகாட்டியாக இது இருக்கும்.

முழு ஐந்தாண்டுத் திட்டம் அடுத்த ஆண்டு தான் வெளியாகும்.

ஆனால், வரும் புதன்கிழமை அதிகாரிகள் இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பற்றிய தகவல்களை வழங்குவார்கள். அதன் பிறகு ஒரு வாரத்துக்குள் கூடுதல் விவரங்களையும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

"மேற்கத்திய நாடுகளில், கொள்கைகள் தேர்தல் சுழற்சிகளால் இயங்குகின்றன. ஆனால், சீனாவில் திட்டமிடல், அடிப்படையில் இயங்குகிறது," என்கிறார் ஆசிய சமூகக் கொள்கை நிறுவனத்தின் சீன அரசியல் நிபுணர் நீல் தாமஸ்.

"ஐந்தாண்டுத் திட்டங்கள், சீனா எதை அடைய விரும்புகிறது என்பதையும், தலைமை எந்த திசையில் செல்ல விரும்புகிறது என்பதையும் காட்டுகின்றன. அரசின் வளங்கள் இந்த குறிக்கோள்களை அடைய வடிவமைக்கப்படுகின்றன," என்றும் அவர் கூறுகிறார்.

மேலோட்டமாகப் பார்த்தால், நூற்றுக்கணக்கான அதிகாரிகள் கைகுலுக்கி கூட்டம் நடத்துவது சாதாரணமான விஷயமாகத் தோன்றலாம். ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவுகள் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது.

சீனாவின் ஐந்தாண்டுத் திட்டங்கள் உலகப் பொருளாதாரத்தை மாற்றிய மூன்று முக்கிய தருணங்களை இங்கே பார்க்கலாம்.

1981-84: "சீர்திருத்தம் மற்றும் புதுமை"

சீனா ஒரு பொருளாதார வல்லரசாக எப்போது மாறத் தொடங்கியது என்று சரியாகக் கூறுவது கடினம். ஆனால், பலர் 1978 டிசம்பர் 18-ஐ முக்கியமான தருணமாகக் கருதுகின்றனர்.

அதற்கு முன், 30 ஆண்டுகளாக சீனாவின் பொருளாதாரம் அரசின் கடுமையான கட்டுப்பாட்டில் இருந்தது. சோவியத் பாணியில் அமைந்த திட்டமிடல் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவில்லை. பலர் வறுமையில் வாடினர்.

மாவோ சேதுங்கின் கடுமையான ஆட்சியிலிருந்து சீனா மெதுவாக மீண்டு வந்த சமயம் அது.

மாவோ சேதுங் ஆட்சியில், 'மகா முன்னேற்றம்' மற்றும் 'கலாசாரப் புரட்சி' போன்ற திட்டங்கள் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் மாற்ற முயன்றன, ஆனால் கோடிக்கணக்கான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தன.

பெய்ஜிங்கில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சீனாவின் புதிய தலைவர் டெங் ஜியோ பிங், 'சுதந்திர சந்தைக் கொள்கைகளை ஏற்க வேண்டிய நேரம் இது' என்று அறிவித்தார்.

அவரது "சீர்திருத்தமும் புதுமையும்" (Reform and Opening Up) என்ற கொள்கை, 1981-இல் தொடங்கிய அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய அங்கமாக மாறியது.

சுதந்திர வர்த்தகத்திற்காக சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. இவை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து, சீன மக்களின் வாழ்க்கையை மாற்றின.

சீனா, ஐந்தாண்டு திட்டம், உலக பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெங் ஜியோ பிங் தொடங்கிய சீனாவின் பொருளாதார திட்டம், 1979ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் கார்டருடன் கையெழுத்தான ஒரு முக்கியமான ஒப்பந்தத்தையும் உள்ளடக்கியது.

அந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் இலக்குகளை இதைவிட சிறப்பாக நிறைவேற்றியிருக்க முடியாது என்கிறார் தாமஸ் .

"மக்களால் கற்பனை செய்ய முடியாத அளவு சீனா வளர்ந்தது. தேசிய பெருமையையும், உலக வல்லரசுகளில் தனது இடத்தையும் சீனா உறுதிப்படுத்தியது," என்கிறார் நீல் தாமஸ்.

இந்த மாற்றங்கள் உலக பொருளாதாரத்தை மாற்றின.

21-ஆம் நூற்றாண்டில், மேற்கத்திய நாடுகளின் லட்சக்கணக்கான உற்பத்தி தொழில்கள் சீனாவின் கடலோர தொழிற்சாலைகளுக்கு மாற்றப்பட்டன.

பொருளாதார வல்லுநர்கள் இதை "சீன அதிர்வு" (The China Shock) என்று அழைக்கிறார்கள்.

இது ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் பழைய தொழில்துறை மையங்களில் சில கட்சிகளின் எழுச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

உதாரணமாக, டொனால்ட் டிரம்பின் பொருளாதாரக் கொள்கைகள், குறிப்பாக அவரது சுங்க வரிகள் மற்றும் வர்த்தகப் போர்கள், கடந்த சில ஆண்டுகளில் சீனாவுக்குச் சென்ற அமெரிக்க உற்பத்தி பணிகளை மீண்டும் அமெரிக்காவுக்கே கொண்டுவரும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன.

2011-15: "உத்தி சார்ந்து வளர்ந்து வரும் தொழில்கள்"

2001-இல் சீனா உலக வர்த்தக அமைப்பில் (WTO) இணைந்தபோது, 'உலகின் உற்பத்தி மையம்' என்ற அந்தஸ்தை உறுதிப்படுத்தியது. ஆனால், நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அடுத்த கட்டத்தைத் திட்டமிட்டது.

சீனா "நடுத்தர வருமானப் பொறி"யில் (Middle Income Trap) சிக்க விரும்பவில்லை. இது, ஒரு நாடு வளர்ச்சியடைந்த, அதேநேரம் மேம்பட்ட பொருளாதார நாடுகளைப் போல உயர்தரப் பொருட்கள் மற்றும் சேவைகளை உருவாக்கும் புதுமைத் திறன் இல்லாதபோது ஏற்படும் சிக்கல்.

எனவே, மலிவான உற்பத்திக்கு பதிலாக, சீனா "உத்தி சார்ந்து வளர்ந்து வரும் தொழில்கள்" (Strategic Emerging Industries) என்ற கருத்தை 2010-இல் அறிமுகப்படுத்தியது. இதில் மின்சார வாகனங்கள் (EVs) மற்றும் சோலார் பேனல்கள் போன்ற பசுமை தொழில்நுட்பங்கள் முக்கியமாக இருந்தன.

மேற்கத்திய நாடுகளில் காலநிலை மாற்றம் முக்கியத்துவம் பெற்ற போது, சீனா இந்தத் துறைகளில் மிகப்பெரிய வளங்களை முதலீடு செய்தது.

இன்று, சீனா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்சார வாகன உற்பத்தியில் உலக நாடுகளில் முன்னிலை வகிக்கிறது.

இவற்றை உருவாக்கத் தேவையான அரிய தாதுக்களின் (Rare Earth Elements) விநியோகச் சங்கிலியில் கிட்டத்தட்ட முழு கட்டுப்பாட்டையும் சீனா பெற்றுள்ளது.

இந்த அரிய தாதுக்கள் சிப் தயாரிப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகளுக்கு முக்கியமானவை. இந்த வளங்களின் மீதான சீனாவின் கட்டுப்பாடு, அதனை உலகளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

சமீபத்தில், அரிய தாதுக்களின் ஏற்றுமதியைக் சீனா கட்டுப்படுத்தியது. இந்த முடிவை, டொனால்ட் டிரம்ப் "உலகை சிறைப்பிடிக்கும் முயற்சி" என்று விமர்சித்தார்.

"உத்தி சார்ந்து எழுச்சி பெறும் சக்திகள்" (Strategic Emerging Forces) என்ற கருத்து 2011-ஆம் ஆண்டு ஐந்தாண்டுத் திட்டத்தில் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றிருந்தாலும், பசுமை தொழில்நுட்பத்தை வளர்ச்சி மற்றும் உலக அரசியல் சக்தியின் புதிய இயந்திரமாகப் பார்க்கும் சிந்தனையை சீனாவின் அப்போதைய தலைவர் ஹு ஜின்டாவோ 2000-களின் தொடக்கத்திலேயே முன்வைத்திருந்தார்.

"சீனா தனது பொருளாதாரத்திலும், தொழில்நுட்பத்திலும், தன்னம்பிக்கையுடனும் தனித்துவம் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் புதிது அல்ல. அது சீன கம்யூனிஸ்ட் கட்சி சித்தாந்தத்தின் அடிப்படை கூறாகவே உள்ளது," என்று நீல் தாமஸ் விளக்குகிறார்.

2021-2025: "உயர்தர மேம்பாடு"

2017-ஆம் ஆண்டு ஜின்பிங் அறிமுகப்படுத்திய "உயர்தர வளர்ச்சி" (High Quality Development) என்ற கருத்து, சமீபத்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியிருப்பது ஏன் என்று விளக்குகின்றன.

தொழில்நுட்ப துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு சவால் விடுத்து, சீனாவை அந்த துறையில் முன்னிலை பெறச் செய்வது தான் இதன் நோக்கம்.

வீடியோ பகிர்வு செயலியான டிக்‌டாக் (TikTok), தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாய் (Huawei), மற்றும் டீப்சீக் (DeepSeek) எனப்படும் செயற்கை நுண்ணறிவு மாடல் போன்ற உள்நாட்டு தயாரிப்புகள், இந்த நூற்றாண்டில் சீனாவின் அதிவேக தொழில்நுட்ப வளர்ச்சிக்கான சான்றுகளாகத் திகழ்கின்றன.

ஆனால் மேற்கத்திய நாடுகள் சீன தொழில்நுட்பத்தை அவற்றின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதுகின்றன.

இதனால், சீன தொழில்நுட்பங்களுக்கு தடைகள் விதிக்கப்பட்டன. இது உலகளவில் கோடிக்கணக்கான இணையப் பயனர்களைப் பாதித்ததுடன், கடுமையான ராஜ்ஜீய மோதல்களையும் உருவாக்கியது.

சீனா, ஐந்தாண்டு திட்டம், உலக பொருளாதாரம்

பட மூலாதாரம், Grigory Sysoev/RIA Novosti/Pool/Anadolu via Getty Images

படக்குறிப்பு, 2017-ஆம் ஆண்டு ஜின்பிங் அறிமுகப்படுத்திய "உயர்தர வளர்ச்சி" என்ற கருத்து

இதுவரை சீனா தனது தொழில்நுட்ப வளர்ச்சியை அமெரிக்காவின் புதுமையான கண்டுபிடிப்புகள், குறிப்பாக என்விடியாவின் மேம்பட்ட செமிகன்டக்டர்கள் (advanced semiconductors) மூலம் முன்னெடுத்தது.

தற்போது அவற்றை சீனாவிற்கு விற்பனை செய்யும் திட்டத்தை அமெரிக்கா தடுத்து விட்டதால், "உயர்தர வளர்ச்சி" என்ற பழைய முழக்கம், 2023ஆம் ஆண்டு ஜின்பிங் அறிமுகப்படுத்திய "புதிய தரமான உற்பத்தி" என்ற புதிய முழக்கமாக மாறும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த புதிய முழக்கம், உள்நாட்டு பெருமையும் தேசிய பாதுகாப்பையும் முக்கியமாகக் கொண்டது.

அதாவது, மேற்கத்திய தொழில்நுட்பத்தைச் சார்ந்திருக்காமல் , தடைகளால் பாதிக்கப்படாமல், சிப் தயாரித்தல், கணினிமயமாக்கல், செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் சீனாவை முன்னணியில் நிலைநிறுத்துவதே இதன் நோக்கம்.

இந்நிலையில், அனைத்து துறைகளிலும், குறிப்பாக புதுமையான கண்டுபிடிப்புகளில் தன்னிறைவு (self-sufficiency) அடைவது, அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தேசிய பாதுகாப்பும் சுயாதீனமான தொழில்நுட்ப மேம்பாடுகளும் இப்போது சீனாவின் பொருளாதாரக் கொள்கையின் முக்கிய நோக்கமாக மாறியுள்ளன," என்று நீல் தாமஸ் விளக்குகிறார்.

"இது, மீண்டும் சீனாவில் கம்யூனிசத்துக்கு அடிப்படையாக உள்ள தேசியவாத கருத்துக்குத் திரும்பி, வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு சீனா மீண்டும் இடமளிக்காது என்பதை உறுதி செய்கிறது," என்றும் அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5yp7kx1z5eo

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, ஏராளன் said:

மாவோ சேதுங் ஆட்சியில், 'மகா முன்னேற்றம்' மற்றும் 'கலாசாரப் புரட்சி' போன்ற திட்டங்கள் பொருளாதாரத்தையும் சமூகத்தையும் மாற்ற முயன்றன, ஆனால் கோடிக்கணக்கான உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தன.

அந்த கோடிக்கணக்கான உயிரிழப்புகளால் தான் சீனா இன்று கட்டுக்கோப்புடன் இயங்குகின்றது. அதே போல் மேற்குலக நாடுகளிலும் கோடிக்கணக்கான உயிரிழப்புகளால் தான் சட்டங்களும் நியாய, நேர்மைகளும் அமுலுக்கு வந்தன.

தண்டனைகள் உண்டு. அதற்கு மக்கள் பயப்பிடுகின்றார்கள். அதனால் சட்டங்களை பின்பற்றுகின்றார்கள்.

எல்லா உயிரின கூட்டங்களிற்கும் ஒரு தலைமை இருக்கும். அதற்கு கட்டுப்பட்டு நடப்பது இயற்கையின் நியதி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.