Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணீர் சுமக்கும் கரங்கள்: நீதிக்கான பெண்களின் அறப்போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் சுமக்கும் கரங்கள்: நீதிக்கான பெண்களின் அறப்போராட்டம்

March 8, 2026 10:29 am

கண்ணீர் சுமக்கும் கரங்கள்: நீதிக்கான பெண்களின் அறப்போராட்டம்

ஆளுமை மிக்க பெண்களின் சாதனைகளைக் கொண்டாடும் சர்வதேச மகளிர் தினம் இன்று! உலகம் முழுவதும் வெற்றிக் கொடி நாட்டிய மங்கையர் போற்றப்படும் வேளையில்…

இலங்கையின் வடக்கு – கிழக்கு மண்ணில், முப்பது ஆண்டு கால யுத்தத்தின் வடுக்களைச் சுமந்து கொண்டு, இழந்த தம் உறவுகளுக்காகவும், மறுக்கப்பட்ட நீதிக்காகவும் வீதியோரக் கொட்டகைகளில் இன்றும் ஓயாது போராடும் வலிமை மிக்க பெண்களின் குரல்களை உலகம் கேட்கத் தவறிவிட்டதா?

கண்ணீரை ஆயுதமாக்கி, நீதியைத் தேடி அலையும் அந்தத் தாய்மார்கள் மற்றும் கணவனைப் பறி கொடுத்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வியலை மையப்படுத்தி, சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இலங்கையில் நீதிக்காகப் போராடும் பெண்களைச் சிறப்பிக்கும் விதமாக ஆதவன் வானொலியின் செய்திப் பிரிவு வழங்கும் ‘விசேட தொகுப்பு’ இது..

இன்று சர்வதேச மகளிர் தினம். உலகம் முழுவதும் பெண்களின் சாதனைகளும், வெற்றிகளும் கொண்டாடப்படும் வேளையில், ஈழத் திருநாட்டின் வடக்கு – கிழக்குப் பகுதிகளில் மௌனமான, ஆனால் வலிமையான ஒரு போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இது அதிகாரத்தைக் கைப்பற்றும் போராட்டமல்ல; இது இழந்த தங்கள் உறவுகளுக்காகவும், பறிபோன நீதிக்காகவும் வீதியில் இறங்கிப் போராடும் பெண்களின் குரல்.

முப்பது ஆண்டு கால யுத்தம் இலங்கையில் எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்தியது. ஆனால், அந்த யுத்தம் பெண்களுக்குத் தந்த பரிசு ‘கைம்மை’. வடக்கு மற்றும் கிழக்கில் மட்டும் யுத்தத்தினால் கணவனைப் பறி கொடுத்த சுமார் 90,000-க்கும் அதிகமான பெண்கள் இன்று தலைமைத்துவப் பொறுப்பைச் சுமக்கிறார்கள்.

நேற்றுவரை வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்கள், இன்று தங்கள் குடும்பத்தைக் காக்கவும், பிள்ளைகளின் கல்விக்காகவும் வயல்களிலும், ஆலைகளிலும் வியர்வை சிந்துகிறார்கள். சமூகக் கட்டமைப்பு மாற்றமடைந்தாலும், “கணவனை இழந்தவள்” என்ற சமூகப் பார்வை இவர்களை இன்னும் காயப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது.

யுத்தம் முடிந்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், இன்றும் வீதியோரங்களில் அமர்ந்து கண்ணீர் மல்கப் போராடும் பெண்களை நீங்கள் வவுனியாவிலும், கிளிநொச்சியிலும், முல்லைத்தீவிலும் காணலாம். இவர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

தங்கள் கைகளில் மகனின் அல்லது கணவனின் புகைப்படத்தை ஏந்தியபடி, “எங்கள் உறவுகள் எங்கே?” என்று இவர்கள் கேட்கும் கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.

இந்தத் தாய்மார்களில் பலர், நீதிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் போதே உயிரைத் துறந்துவிட்டார்கள். போராட்டக் களத்திலேயே சுமார் 200-க்கும் மேற்பட்ட தாய்மார்கள் மறைந்த செய்திகள் நம் மனதை உலுக்குகின்றன. சர்வதேச மகளிர் தினத்தில் இவர்களுக்கான நீதி எங்கே என்ற கேள்வி இன்றும் சர்வதேச சமூகத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கிறது.

யுத்தத்தின் வடுக்கள் ஒருபுறமிருக்க, தற்போதைய பொருளாதார நெருக்கடி இந்தப் பெண்களை மேலும் ஒரு யுத்தத்திற்குள் தள்ளியுள்ளது. நுண்கடன் என்ற பெயரில் சிக்கவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள், இன்று அந்த கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை வரை தள்ளப்படும் அவலம் தொடர்கிறது.

தனது குடும்பத்தைப் பராமரிக்க வழியின்றி, அன்றாடத் தேவைக்காகப் போராடும் இந்தப் பெண்களுக்கு முறையான வாழ்வாதாரத் திட்டங்களோ அல்லது உளவியல் ரீதியான ஆலோசனைகளோ போதுமான அளவில் கிடைக்கவில்லை என்பது கசப்பான உண்மை.

ஆனாலும், இந்தப் பெண்கள் சோர்ந்துவிடவில்லை. நில மீட்புப் போராட்டமாக இருந்தாலும் சரி, அரசியல் உரிமைகளாக இருந்தாலும் சரி, வடக்கு – கிழக்கில் பெண்களே இன்று முன்னிலையில் நிற்கிறார்கள். கேப்பாபுலவு முதல் முள்ளிவாய்க்கால் வரை நீதிக்கான தீபத்தை ஏந்தியிருப்பது இவர்கள்தான்.

இலங்கையின் வரலாற்றில் பெண்கள் வெறும் குடும்பத் தலைவிகளாக மட்டுமன்றி, சமூகத்தின் அரசியல் மற்றும் நீதித்துறை மாற்றங்களுக்கான முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளனர் என்பதை இந்தப் போராட்டங்கள் நிரூபிக்கின்றன.

சர்வதேச மகளிர் தினம் என்பது வெறும் வாழ்த்துகளுடன் முடிந்துவிடக் கூடாது. வடக்கு – கிழக்கில் நீதிக்காகப் போராடும் இந்தப் பெண்களின் கண்ணீருக்கு விடை கிடைக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையானது பரிதாபமல்ல, அங்கீகாரம் மற்றும் நீதி. அவர்களின் போராட்டம் வெற்றிபெறும் நாளில்தான் உண்மையான மகளிர் தினம் அர்த்தப்படும்.

நீதிக்காகப் போராடும் அனைத்துத் தமிழ் பெண்களின் உறுதிக்கும் oruvan  இணையத்தளத்தின் வீர வணக்கங்கள்

தொகுப்பு : தர்மராஜா ரஸ்மிலா

https://oruvan.com/womens-struggle-for-justice-for-day/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.