Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராபர்ட் ஃப்ராஸ்டின் (Robert Frost) உள்ளரங்கம் - சுப.சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராபர்ட் ஃப்ராஸ்டின் (Robert Frost) உள்ளரங்கம்

               - சுப.சோமசுந்தரம்

                 கல்லூரியில் படிக்கும் காலத்தில் எனக்கு வாய்த்த சிறந்த ஆங்கிலப் பேராசிரியர் சிலர் ஆங்கில இலக்கியக் காட்சியையோ கவிதையையோ உணர்வுபூர்வமாய் நம் அகக்கண்ணில் நிறுத்தும்போது (அத்தகையோர் வாய்க்கப் பெறுதல் நமக்கான வரம்), நான் ஓரளவு ரசித்தது என்னவோ உண்மைதான். இருப்பினும் என்னை மெய் மறக்கச் செய்யும் தமிழின் இலக்கியச்சுவை அதில் தோன்றுவதில்லையே என்று குறைப்பட்டுக் கொள்வதுண்டு. வலுக்கட்டாயமாக ஏதோ உணர்வைக் கடத்த ஆங்கிலப் பேராசிரியர் தம் உடலை வருத்தி ஏன் இவ்வளவு மெனக்கிடுகிறார் என்றெல்லாம் நினைத்தது உண்டு. அந்த வயதில் தேவையில்லாத, பொருத்தமில்லாத ஒப்பீட்டினால் என் மனதில் அக்குறை தோன்றியது என உணர வயது தேவைப்படுகிறது. வயதாவதின் மேன்மையை வயது ஆகியே உணர்த்துகிறது. பல்லாயிரமாண்டு மூத்த ஒரு மொழியுடன் இன்றைய வடிவத்திற்கு வந்து சுமார் ஐநூறு வருடங்களே ஆன ஒரு மொழியை ஒப்பீடு செய்வது வேடிக்கைதானே ! மடமையும் கூட.

              ஆயினும் நமது அக இலக்கியங்களில் வாய்க்கும் உள்ளுறை உவமம், இறைச்சி போல அவர்களிடமும் அருமையான மொழியாட்சி ஓரளவு உண்டு என்பதை ஏற்கத்தான் வேண்டும்; ஏற்று ரசிக்கத்தான் வேண்டும். ஆங்கிலத்தின் இன்றைய வடிவமானாலும் இலத்தீன், கிரேக்கம் போன்ற பண்டைய மொழிகளில் இருந்து தோன்றியமையின் அச்செம்மொழிகளின் கூறுகள் அமைந்து திகழ்வது இயல்புதானே !அவ்வகையில் என்னைக் கவர்ந்த அமெரிக்கக் கவிஞரான இராபர்ட் ஃப்ராஸ்ட் அவர்களின் கவிநயத்தை இங்கே தொட்டுக்காட்ட எண்ணம். மிகவும் எளிமையான வரிகளில் பாமரனுக்கும் பயனுள்ள செய்தியை உள்ளார்ந்த பொருளாய் இலாவகமாகச் சொல்லிச் செல்லும் நேர்த்தி அவருக்கே உரியது. அவர் சொல்ல வருகிற உயரிய சிந்தனை கவிதையில் ஓரிடத்தில் வந்து ஏனைய வரிகள் அதனை மேலும் வலுப்பெறச் செய்வதாகவோ அல்லது அழகியல் சார்ந்த வர்ணனையாகவோ இடம்பெறக் காணலாம். எனவே நம் ரசனைக்குத் தீனி போடும் கவிஞராக மட்டுமின்றி மானிடர்க்கு உயரிய வாழ்வியல் கருத்துகளை அள்ளித் தெளிக்கும் சமூகச் செயற்பாட்டாளராகவும் மிளிர்கிறார் இராபர்ட் ஃப்ராஸ்ட். சில இடங்களை எடுத்துக்காட்டலாம் என்று நினைக்கிறேன். முழுக்கவிதையையும் வாசகருக்கு விடுத்து மையச் செய்தியைக் கொண்டுள்ள வரிகளை மட்டும் நாம் கண்டு களிக்கலாமே !

               முதலில், 1915 இல் வெளியிடப்பட்ட 'The Road not taken' (தேர்ந்தெடுக்காத பாதை) எனும் கவிதையைத் தேர்ந்தெடுக்கலாம். அதில் நாம் தேர்ந்தெடுக்கும் வரிகள் கவிதையின் தொடக்கத்திலேயே வந்து கவிஞரின் சிந்தனைப் பாதையில் நம்மையும் இட்டுச் செல்கின்றன.

"Two roads diverged in a yellow wood

And sorry I could not travel both"

என்று ஆரம்பித்து,

"I took the one less traveled by

And that has made all the difference"

என்று கவிதை நிறைவுறுகிறது.

"கானகத்தில் இரண்டு பாதைகள் பிரிந்து சென்றன; என்னால் இரண்டிலும் பயணிக்க முடியவில்லை" என்று வெள்ளந்தியாய்ச் சொல்லித் தொடங்குகிறது பாடல். கவிதையின் மையப் பொருளே இந்த இரு வரிகளில் சுருக்கமாகவும் உருவகமாகவும் வெளிப்படுகின்றது. கானகம் உலகமாகவும் பாதைகள் வாழ்க்கைப் பாதைகளாகவும் உருவகிக்கப் பெறுகின்றன. இடைப்பட்ட வரிகளிலிருந்து, அந்த இரு பாதைகளும் இலைகள் சொரிந்து பெரிய அளவில் வேறுபாடின்றி தென்பட்டன என்பது தெளிவு. வனத்தில் வழி சொல்வோர் யாருமிருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் ஏதோ ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்கத்தானே வேண்டும் ! இரண்டிலும் ஒரே நேரத்தில் பயணிக்க முடியாதே ! உட்பொருள் யாதெனில் வாழ்வில் நம்மால் தீர்மானிக்க முடியாத முடிவுகளில் ஏதேனும் ஒன்றை எடுத்தே ஆக வேண்டும் என்னும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவோம். நாம் எடுத்த முடிவு தவறாகவும் முடியலாம். அப்போது ஐயோ என்று நிலை குலைந்து போகாமல்,

"சென்றதினி மீளாது மூடரே! நீர்எப்போதும் சென்றதையே சிந்தை செய்துகொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா இன்று புதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்எண்ண மதைத் திண்ணமுற இசைத்துத் தின்றுவிளையாடிக் கொண்டு இன்புற் றிருந்து வாழ்வீர்; தீமையெலாம் அழிந்துபோம், திரும்பி வாரா"

என்ற பாரதியின் சொல் கேட்டு முன்னேறுவது சிறப்பு என்பதையே, "I could not travel both" என்பது சுட்டுகிறது எனலாம். ஏனெனில் அப்போது பாதையின் முடிவு தெளிவாய் இல்லாததால் எந்த முடிவும் தோல்வியை சந்தித்திருக்கலாமே !

             மேலும் பாடலில் இறுதியாக வரும் இரண்டு வரிகள், "(இலை தழை அதிகம் கிடந்த) மக்கள் அதிகம் பயணிக்காத பாதையைத் தேர்ந்தெடுத்தேன். அதுவே அனைத்து விளைவுகளுக்கும் காரணியாய் அமைந்தது" என்பதே. இதனை மக்கள் தத்தம் இயல்புக்கு ஏற்ப, அனுபவத்திற்கு ஏற்ப பொருள் கொள்ளலாம். வெற்றி பெற்றோர் தனி வழியைத் தேர்வு செய்து வெற்றி பெற்ற தம் தனித்தன்மையை மெச்சிக் கொள்ளலாம். தோல்வியுற்றோர் ஊரோடு ஒட்ட ஒழுகும் ஒப்புரவு இன்மையால் தம் தோல்வியை எண்ணி வருந்தலாம். ஆனாலும் விளைவை எண்ணி வருந்த வேண்டியதில்லை என்பதையே முதல் இரு வரிகள் சுட்டுவதை மறக்க வேண்டியதில்லை.

                காடு மஞ்சள் நிறத்தது என்பதை 'yellow wood' என்று பாடலின் முதல் வரியில் வாசிக்கிறோம். அது இலையுதிர் காலத்தைக் குறிப்பது. அஃதாவது கவிஞரின் வயது முதிர்ந்த நிலையை உருவகிப்பதாய்க் கொள்வது பாடலை ரசிப்போரின் உரிமை. இது போன்ற அழகியல் பொதுவாக இராபர்ட் ஃப்ராஸ்டின் அனைத்துப் பாடல்களிலும் காணக் கிடைப்பது.

              அடுத்து நம் நினைவுக்கு வருவது இராபர்ட் ஃப்ராஸ்டின் 'Stopping by Woods on a snowy evening' என்ற கவிதை. குறிப்பாக அதில் இறுதியாக வரும் வரிகள் :

"The woods are lovely, dark and deep   

But I have promises to keep   

And miles to go before I sleep   

And miles to go before I sleep"

பொருள் : "காடு மனதைக் கொள்ளை கொள்வதாகவும், இருள் கவிந்தும், ஆழ்நிலையொடும் அமையப்பெற்றுள்ளது. ஆனால் நான் ஆற்ற வேண்டிய கடமைகள் பல உண்டு. நான் அடங்கும் முன் கடக்க வேண்டிய தொலைவு அதிகம் உண்டு".

உள்ளார்ந்த பொருள் : "வாழ்வில் என் மனம் கவர்ந்த பொருட்கள், செயல்கள் உண்டு. ஆனால் அவற்றில் முழுமையாக ஈடுபட்டுத் தன்னிலை மறந்து நான் வாழ முடியாது. ஏனெனில் (மனதிற்குப் பிடிக்கிறதோ இல்லையோ) வேறு கடமைகள் உலகியல் வாழ்வில் எனக்கு உண்டு. அக்கடமைப் பாதையில் நான் வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதாவது அவற்றை நிறைவேற்ற எனக்கான கால வெளி குறைவாகவே உள்ளது".

             மேற்கூறிய கவிதைகளில் வாழ்வியல் தத்துவங்களை வேற்றுப்பொருளாய் வைத்த ஃபிராஸ்ட் தமது Fire and Ice என்ற குறுங்கவிதையை இயல்பு நவிற்சியாய்த் தாமே நேரிடையாய் சொல்லிச் செல்கிறார்.

"Some say the world will end in fire

Some say in ice

From what I've tasted of desire

I hold with those who favor fire

But if it had to perish twice

I think I know enough of hate

To know that for destruction

Ice is also great

And would suffice"

"சிலர் இந்த பூமி நெருப்பில் அழியும் என்கின்றனர்; சிலர் பனியில் உறையும் என்கின்றனர். பேராசை எனும் தீயை உணர்ந்த நான் 'நெருப்பு' அணியினருடன் நிற்கிறேன். பூமி இருமுறை அழிய வேண்டுமெனில், வெறுப்பின் (அமைதியாய் அழிக்கும் தன்மை) உணர்ந்த நான் பனியின் ஆற்றலும் பெரிது என்பேன்; அழிவிற்கு அதுவே போதும் என்பேன்" என்பதே பாடற் பொருள். அஃதாவது பேராசை நெருப்பைப் போல் அதிதீவிரமாய் உலகை அழிக்கவல்லது என்பதும், வெறுப்பு பனியைப் போல் அமைதியாய் உள்ளிருந்து அழிக்கவல்லது என்பதும் கவிதையின் செய்தியாம்.

                அடுத்து வரும் குறுங்கவிதை 'Dust of snow' (பனித் தூசி).

"The way a crow

Shook down on me

The dust of snow

From a hemlock tree

Has given my heart

A change of mood

And saved some part

Of a day I had rued"

"ஒரு காகம் ஹெம்லாக் (hemlock) மரத்தில் தங்கிய பனித்துகள்களை என் மீது விழச் செய்ததானது, சோக மனநிலையில் நாளின் ஒரு பகுதியைப் பாழாக்கிய நான் எஞ்சிய நாளைக் காப்பாற்ற ஏதுவாகியது" என்று ஒரு சாதாரண நிகழ்வு துயரத்தை மாற்றியதைப் பகிர்கிறார் இராபர்ட் ஃப்ராஸ்ட்.  "இதுவும் கடந்து போம்" என்னும் நேர்மறை எண்ணத்தைத் துயருற்ற உள்ளத்தில் விதைத்துச் செல்கிறார் கவிஞர். வெறுமனே அறம் பேசுபவராக இல்லாமல் கவிஞராயும் உள்ளமையால், மேலும் ஒரு உட்பொருளைப் பொதிந்து வைக்கிறார். மேற்கத்திய உலகில் காகம் ஒரு ராசியற்ற பறவையாகவும் (இங்கு மட்டுமென்ன, சனியனின் வாகனமாய் வைத்தானே !), ஹெம்லாக் மரம் உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பதாகவும் கொள்ளப்படுகின்றன. எதிர்மறையான பொருட்கள் கூட நமக்கு நேர்மைறையான பலன்களைத் தரலாம் என்று கவிதையின் வெளிப்பாடாகச் சுட்டுவர் கவியுலகில் சஞ்சரிப்போர்.

             ஒரு பானைச் சோற்றுக்கு நான்கு சோறு பதமாய் ஃபிராஸ்டின் கவிநயம் பேசினோம். இனி வயிறார உண்டு மகிழ்வது வாசகர்தம் உரிமை. ஃபிராஸ்டின் பொன்மொழி ஒன்றைச் சொல்லி தற்போது கட்டுரையை நிறைவு செய்ய எண்ணம்.

"A diplomat is a man who always remembers a woman's birthday but never remembers her age".

"ஒரு ராஜதந்திரி (சாதுரியமானவர், விவேகம் நிறைந்தவர் என்றெல்லாம் அடுக்கலாம்) என்பவர் யாரெனில், ஒரு பெண்ணின் பிறந்த நாளை நினைவில் வைத்துக் கொண்டு அவளது வயதை நினைவில் வைக்காதவர்" என்பது பொருள். பெண்ணின் பிறந்தநாள், வயது போன்றவை இங்கு வேற்றுப்பொருளாய் அமைவன. "மானிட உறவில், பிறரது தேவையான விவரங்களை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு, தேவையற்றதை அல்லது பிறர்க்கு எக்கச்சக்கமான விவரங்களை மனதில் ஏற்றாத நிலையே விவேகம்" என்பதே கவிஞர் கூற வந்த பொதுப்பொருள்.

              ஒரு கவிஞனின் கவித்துவம் கவிதையில் மட்டும்தான் வெளிப்படும்  என்றில்லை. அவன் கவிதையாகவே வாழ்பவன் என்று காட்டியவர் இராபர்ட் ஃப்ராஸ்ட் எனக் கொண்டாடலாமே !

Edited by சுப.சோமசுந்தரம்

  • சுப.சோமசுந்தரம் changed the title to இராபர்ட் ஃப்ராஸ்டின் (Robert Frost) உள்ளரங்கம் - சுப.சோமசுந்தரம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.