Jump to content

அக்கினிச் சிறகுகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அக்கினிச் சிறகுகள்

அன்று காலையிலேயே விழிப்பு ஏற்பட்ட மதுசாவிற்கு தலை பாரமாய்க் கனத்தது. நெற்றிப் பொட்டு விண்விண் என்று வலித்தது. இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்தவள் சற்றுக் கண்ணயரவும் அனுவின் அழுகுரல் கேட்கவும் சரியாக இருந்தது. குழந்தையை அள்ளி அணைத்து பாலூட்டி மறுபடியும் தொட்டிலில் கிடத்தியவள் கோப்பி ஒன்று சூடாகக் குடித்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தாள்.

“கோப்பி குடிக்காட்டி என்ன செத்தா போயிருவன்” மனம் வெறுமையில் துடித்தது.

குழந்தை அனுவைத் திரும்பிப் பார்த்த கண்கள் குளமாகியது. எத்தனை நாளைக்குத்தான் இந்த அவஸ்தை. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கணவன் என்ற அந்தஸ்த்தைப் பெற்ற மோகன் தினமும் வேலைக்குப் போய்விட்டு விடிந்ததும் வந்து கட்டிலில் விழுந்தால் எழ மாலையாகிவிடும். பாவம் இரவு முழுக்க நித்திரை முழித்து வேலை செய்தவர் தூங்கட்டும் என்று அவசர வேலை இருந்தாலும் எழுப்ப மாட்டாள். திருமணமான புதிதில் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதிலிருந்து எல்லா வேலைகளிலும் மோகன் மதுசாவிற்கு உதவியாகத்தான் இருந்தான். எப்பொழுது தன் தம்பி மதனை இங்கு கூப்பிட்டானோ அன்றே தனது சோம்பல் தனத்திற்கு அட்சதை போட்டுக் கொண்டான்.

“மது தம்பி பாவம் அங்க அகதிமுகாம்களில கிடந்து கஸ்ரப்பட்டு வந்திருக்கிறான் நல்லாக் கவனிக்க வேணும்” என்று அடிக்கடி கூறி மதனிடம் வீட்டு வேலைகளைப் பங்கு போட்டுக்கொண்டான். மதுசாவும் மிகவும் அக்கறையுடன் மதனைக் கவனித்துக் கொண்டாள். மதன் இங்கு வந்ததில் இருந்து இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீட்டிற்கு மாறியதால் மதனுக்கென்று ஓர் அறை.

மதனுக்குப் பகல் வேலை ஒன்றும் கிடைத்து விட்டது. மதன் பகலிலும் மோகன் இரவிலும் வேலைக்குப் போய் வந்தனர். காலப் போக்கில் மதன் வேலை முடிந்து எங்கெங்கோ சுற்றிவிட்டு நடு இரவிற்கு மேல்தான் வீட்டிற்கு வர ஆரம்பித்தான்.

சரி அவன் வயது அப்படி வீட்டுக்குள்ள இருக்க போரடிக்கும் என்று மது தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்வாள். ஏத்தனை மணிக்கு வந்தாலும் மதனின் உணவு ரெடியாக இருக்கும்.

சென்ற வாரம் ஒரு வெள்ளிக் கிழமை சமையலறையைச் சுத்தம் பண்ணி பாத்திரங்களைத் துடைத்து அடுக்கியவள் கதவு திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப் பார்த்தாள். மதன்.

“என்ன மதன் இண்டைக்கு இவ்வளவு நேரத்திற்கு வந்திற்றீர்” அதுவும் நல்லதுதான் சாப்பாட்டைக் கொடுத்து விட்டே படுக்கப் போகலாம் என எண்ணியபடி “மதன் குளிச்சுப்போட்டு வாரும் சாப்பாடு எடுத்து வைக்கிறன்” வழக்கத்துக்கு மாறாக மதன் சற்று தடுமாற்றத்துடன் நடப்பதையும் தன்னை ஒரு மாதிரி முறைத்துப் பார்ப்பதையும் கவனித்த மது ஏதும் பேசாமல் உணவை மேசையில் வைத்து விட்டு குழந்தைக்குப் பால் தயாரிக்கத் தொடங்கினாள்.

சாப்பாட்டு மேசையில் வந்து அமர்ந்த மதனிலிருந்து மதுவின் நெடி வீசுவதை அவதானித்த மது “என்ன மதன் குடிச்சுப் போட்டா வந்திருக்கிறீர்? இது என்ன புதுப் பழக்கம்” அக்கறையுடன் கூறினாள்.

“ஏன் குடிக்கிறது பிழையோ?”

“இது என்ன கேள்வி? அங்க அம்மா தங்கச்சி எல்லோரும் எங்களை நம்பித்தானே இருக்கினம். அதோட அண்ணன் உம்மை கூப்பிடப் பட்ட கடனே இன்னும் குடுக்க இல்லை.”

“அதுக்குத்தானே நான் வேலை செய்யிறன்” துடுக்காகப் பதில் வந்தது.

“சரி மதன் நான் நாளைக்கு உம்மோட கதைக்கிறன். இப்ப போய்ப் படும்.”

மதுவுக்கு ஏதோ விபரீதமாகப் படவே எப்படியாவது பேச்சைக் குறைக்க விரும்பி தன் அறைக்குப் போய் விட்டாள்.

அடுத்த நாள் அதற்கடுத்த நாள் என்று மதனின் போக்கு படிப்படியாக மாறுவதையும் அவன் தன்னுடன் பேசுவது பழகுவதில் ஏதோ தப்பார்த்தம் தென்படுவதையும் மதுவால் ஊகிக்க முடிந்தது.

“என்ன மோகன் மதன் இப்ப முந்திமாதிரி இல்லை நேரத்திற்கு ஒழுங்கா வீட்டுக்கு வாறதில்லை. அவன்ர போக்கு ஒரு மாதிரி இருக்கு”

“என்ன? போக்கு ஒரு மாதிரி இருக்கா? உமக்கு எப்படியாவது மதனை வீட்டை விட்டுத் துரத்த வேணுமெண்ட நினைப்புப் போல” வார்த்தைகள் சூடாய் விழுந்தன.

ஜயோ அப்படி ஒன்றும் இல்லை. மதனின் பேச்சும் நடத்தையும் முன்போல இல்லை. இப்ப குடிக்கிறான். நீங்க கொஞ்சம் கண்டித்தால் என்ன?”

“மது எனக்குத் தெரியும் அவன் இந்தக் காலத்துப் பொடியன். அப்பிடி இப்பிடி நடக்கத்தான் செய்வான். இங்க பொடியன்கள் என்னவெல்லாம் செய்து அட்டகாசம் பண்ணுறான்கள். அவன் வேலை வேலை விட்டா வீடு எண்டு திரியிறான். கனடா அவனுக்குப் புதுசுதானே. போகப் போகச் சரியாகிவிடும்.

“ஏன் மோகன் ஆரம்பத்திலேயே நீங்க அவனுக்குப் புத்தி சொல்லிப் பார்க்கலாம் தானே”

“நீர் எப்பவும் இப்படித்தான். ஒன்றுமில்லாததறகெல்லாம் வீண் கற்பனை செய்து சின்ன விடயங்களையும் பெரிதாக்கிறது”

“சரி ஏதோ நான் சொல்லிப் போட்டன். இனி நீங்க பாடு உங்க தம்பி பாடு”

இப்படிச் சொல்லி விட்டாலும் மதுவுக்கு ஒரு நாள் போவது ஒரு வருடம்போல இருந்தது.

தினமும் மதனின் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டே சென்றன.

மோகன் கண்டுகொள்வதாயும் இல்லை.

கணவன் இல்லாத நேரங்களில் மதனின் பார்வையும் பேச்சும் மதுவுக்குத் தாங்க முடியாத இம்சையாக இருந்தது.

தினமும் “கடவுளே ஏன் எனக்கு இப்படியான சோதனைகளைத் தருகிறீர் மதனுக்கு நல்ல அறிவையும் தெளிந்த புத்தியையும் கொடும்” என்று வேண்டிக் கொள்வதைத் தவிர வேறு எதுவும் அவளால் செய்ய முடியவில்லை.

இரவு முழுவதும் வேலை செய்து களைத்து வரும் கணவனிடம் தன் கஸ்ரத்தைஎடுத்துச் சொல்ல ஆரம்பத்தில் தயங்கினாலும் நாளடைவில் பட்டும் படாமலும் மதனின் போக்கைச் சொல்லத்தான் செய்தாள்.

“இங்க பார் மது நீ என்ன நினைத்துக் கொண்டு இப்பிடி அவதூறு சொல்கிறாய். அவன் அண்ணி அண்ணி என்று எத்தனை அன்பாக இருக்கிறான். பெத்தவங்களைப் பிரிந்து எங்களை நம்பி வந்திருக்கிற பிள்ளையைப் பற்றி வீண் கதைகள் சொல்லிறதே உனக்கு வேலையாப் போச்சு” வார்த்தைகள் சூடாக விழுந்தன.

“சரி மோகன் நான் இனி ஒண்டும் சொல்ல இல்லை”

அனுவின் துணையுடன் மதுவின் வாழ்க்கை நிமிடம் யுகமாகக் கழிந்துகொண்டிருந்தது.

தினமும் குடிபோதையில் வர ஆரம்பித்த மதன் இன்று இன்னும் தாமதமாகவே வீடு திரும்பினான்.

மது குழந்தையை தூங்க வைத்துவிட்டு கட்டிலில் படுத்தபடி தன் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தாள். ஏன் மோகன் நான் சொல்வதைப் புரிந்து கொள்கிறாரில்லை. புரிந்து கொள்ளவில்லையா அல்லது புரிந்தும் புரியாததுபோல் நடிக்கிறாரா? எனக்கு இங்கு கேட்பதற்கு யாருமில்லை என்ற அலட்சியமா? எது என் பேச்சைக் கேட்க விடாமல் தடுப்பது? சகோதர பாசமா? அல்லது பெண் எதற்கும் விட்டுக் கொடுக்க வேணும். பணிந்து போகவேணும். பொறுமையாக இருக்க வேணும் என்று எம் இனத்தவர் கலாச்சாரம் என்ற போர்வையில் கட்டிக் காத்துவரும் அடிமைத்தனமா? எது?

சிந்தித்து சிந்தித்து தனியே கண்ணீர் உகுப்பதைத் தவிர வேறு எதுவும் செய்யத் தோன்றவில்லை.

அன்று கண்ணகியும் சீதையும் சாவித்திரியும் வாழ்ந்த அவலக் கதைகளை சொல்லிச் சொல்லி எம்மை வளாத்ததனால் நாம் மதுரையை எரிக்கவம் முடியாமல் தீக்குளிக்கவும் இயலாமல் யமனிடம் உயிர்ப் பிச்சை கேட்கவும் துணியாமல் தத்தளிப்பது மற்றவர்களுக்கு எப்படி புரியும்?

மது புரண்டு படுத்தாள்.

இப்பொழுதெல்லாம் தனியே இருக்க அவளுக்குப் பயமாக இருந்தது. வெளியே கதவு தட்டப்படும் ஒலி.

மதனிடம் திறப்பு இருக்குத்தானே? ஏன் தட்டுகிறான்?

பயத்துடன் எழும்பி வந்தவள் கதவுத் துவாரத்தால் அவதானித்தாள். மதன்தான்.

மதன் திறப்பைத் தொலைத்து விட்டானோ? அல்லது வீட்டில் விட்டு விட்டுப் போய்விட்டானோ?

கதவில் கை வைத்தவள் தயங்கினாள். மறு நிமிடமே கணவனின் கண்டனத்தை நினைத்துக் கொண்டாள்.

துணிவை வரவழைத்துக்கொண்டு கதவைத் திறந்தவள் மதன் நல்ல குடி போதையில் இருப்பதை அவதானித்து கதவைப் பூட்டிவிட்டு உள்ளே செல்லத் திரும்பினாள்.

“என்ன மது நித்திரை வர இல்லையா?”

ஐயோ இவன் ஏன் இப்ப தேவையில்லாத கதை தொடங்கிறான். அதுகும் என்றுமில்லாமல் மது என்று பேர்சொல்லி வேறு அழைக்கிறான். பயத்தை விழுங்கியபடி “இல்லை நான் கதறு தட்டிக் கேட்டுத்தான் முழிச்சனான்.”

இயல்பாகப் பதில் சொன்னாள்.

“ஏன் மது புதுப் படக் கொப்பி கொண்டு வந்திருக்கிறன். படம் பார்ப்பமே?”

“பேசாமல் போய்ப் படும். அனு எழும்பப் போறா”சொல்லியபடி அறைக்குப் போகத் திரும்பியவளின் கரத்தை எட்டிப் பிடித்துக்கொண்டான் மதன்.

“மதன் என்ன இது? கையவிடும். இதுக்குத்தான் குடிக்கவேணாம் எண்டு சொன்னனான்” என்று கோவத்துடன் கையை உதறிக் கொண்டு தள்ளிப் போனாள்.

மதனுக்கு குடிபோதையில் எதுவும் காதில் விழவில்லை.

“இந்தமது அல்லது அந்த மது”

இந்தமது கிடைத்தால் அந்தமது தேவையில்லை”

கடவுளே இது என்ன சோதனை? இந்த மோகனுக்கு ஏன் நான் சொல்வது காதிலேயே ஏறுதில்லை? தன் தம்பியை நம்புபவர் மனைவியின் பேச்சையும் நம்பலாமல்லவா? இப்ப என்ன செய்யப் போறன்? இவனை எப்படிச் சமாளிப்பது?அப்படி ஏதாவது நடந்தால் பெண் என்று என்னைத்தான் கணவனோ சமூகமோ குற்றம் சாட்டுமே தவிர கண்டும் காணாததுபோல் நடக்கும் கணவனையோ துரோகம் செய்யத் துணிந்த இவனையோ யாரும் பிழை சொல்ல மாட்டார்கள்.

“என்ன மது யோசிக்கிறீர்? அண்ணன்தான் தினமும் வேலை வேலை என்று ஓடுறான். உமது இளமைக்கு நான்தான் ஏற்ற துணை.

இன்னும் ஏதேதோ அவனின் வாயிலிருந்து வார்த்தைகள் உளறலாக வெளிப்பட்டன. மது காதைப் பொத்திக் கொண்டாள்.

உலகமே தலை கீழாகச் சுற்றுவதுபோல் இருந்தது. இனி இவனிடம் பேச்சுக் கொடுத்துப் பலனில்லை என்ற முடிவுடன் விடிய மோகன் வரட்டும் ஒரு முடிவு எடுக்க வேணும். ஏத்தனைதரம் சொல்லியும் கேட்காதவன் இப்ப மட்டும் கேட்கவா போறான். மனச் சலிப்போடு அறைக்குச் செல்லத் திரும்பியவளை அணைக்கத் துடித்தான் மதன். அவனிடம் இருந்து தப்புவதற்காக கையில் கிடைத்த பூச்சாடியை எடுத்து வீசினாள். அது கீழே விழுந்து சிதறியது.

என் வாழ்க்கையும் இப்படித்தானோ? சீ என் அனுமதி இன்றி இவனுக்கு எப்படி இவ்வளவு துணிச்சல் வந்தது? மோகனின் உதாசீனமும் பாராமுகமும்தானா இவனுக்கு இத்தனை துணிச்சலைக் கொடுத்தது.

கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து வீசினாள். மதனும் எப்படியாவது மதுவை இன்று அடைந்து விடுவது என்று கங்கணம் கட்டியவனைப்போல் ஆவேசமாக இருந்தான்.

தன் பலம்கொண்ட மட்டும் அவனைத் தள்ளி விட்டாள்.

மதுபோதையில் இருந்த மதன் தள்ளாடி விழுந்தான். தலையில் பலமாக அடிபட்டதில் இரத்தம் கசிந்தது.

அடிபட்ட நாகம் ஆத்திரத்துடன் சீறத் தொடங்கியது.

“என்ன நீ பெரிய பத்தினி எண்ட நினைப்போ? நாளைக்கு அண்ணா வரட்டும்” ஆத்திரத்தில் வார்த்தைகள் வெளிப்பட்டன.

“என்னடா செய்வாய்? உன்னைக் கூப்பிட்டு இருக்க இடமும் தந்து வைத்திருந்ததற்கு நல்ல பரிசு தந்திற்ராய். இனி ஒரு நிமிசம் நீ இங்க இருக்கக் கூடாது”

“அது நாளைக்குத் தெரியும் நீயா இல்ல நானா வெளிய போறதெண்டு”

“என்னடா சொல்கிறாய்”

“நான் வேலை விட்டு வரேக்க நீ வேறு யாருடனோ இங்கு இருந்ததாகவும் அதனால்தான் எங்களுக்குள் சண்டை வந்ததாகவும் அண்ணாவிடம் சொல்ல எனக்கு எவ்வளவு நேரம் செல்லும்” வார்த்தைகள் விசமாக வெளிப்பட்டன.

ஜயோ கடவுளே இது என்ன சோதனை? தம்பியை நம்பும் மோகன் அவன் சொல்வதை உண்மை என்றுதான் நம்புவான்.

ஏனக்கு இந்த உலகத்தில் யாரும் துணை இல்லை. கடவுளே நீ தான் துணை என்று மனதுக்குள் மறுகினாள்.

மதன் ஏதேதோ உளறியபடி வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.

மீண்டும் குடித்துவிட்டு வருவானோ என்னமோ? பூச்சாடி விழுந்த சத்தம் கேட்டே விழித்து அழுது கொண்டிருந்த அனுவின் அழுகுரல் இப்பொழுதுதான் மதுவின் காதில் விழுந்தது.

ஓடிச் சென்று அனுவை அணைத்துக் கொண்டாள்.

இனி என்ன?

என்ன செய்வது?

யாரிடம் முறையிடுவது?

பெண்விடுதலை பற்றி பேசி முழஙகுபவர்கள் என்னைப்போல அபலைகளுக்கு என்ன சொல்வார்கள்?

கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருசன் என்று போதனை செய்வார்களா?

விட்டுக் கொடுத்து வாழவேணும் அதுகும் அடுத்தவனுக்கு விட்டுக்கொடுத்து வாழவேணம் என்று அறிவுரை சொல்வார்களா?

தினம் தினம் தீக்குளிக்கும் என் போன்ற சீதைகளுக்கு என்ன பதில் சொல்வார்கள்?

வெளிநாட்டிற்கு வந்து பெண்கள் அடங்காப் பிடாரிகளாகி விட்டார்கள் என்பார்களா?

ஆல்லது கலாச்சாரம் பேணவேண்டுமென்று கண்ணீரில் மிதக்கச் சொல்வார்களா?

மனம் பட்டி மன்றம் நடத்தியது.

சிந்திக்க இதுவல்ல தருணம்.

அடிபட்ட நாகம் மீண்டும் வருமுன்பு தப்பிச் செல்வதுதான் புத்திசாலித்தனம்.

பெண்மை விழித்துக் கொண்டது.

அவசரமாக குழந்தையின் உணவுப்பை மாற்றுடுப்புக்களுடன் அனுவை அள்ளி அணைத்தபடி வாசல் தாண்டத் துணிந்து விட்டாள்.

எங்கே போவது?

அதுவும் இந்த நடு இரவில்?

அவளது அப்பார்ட்மென்டில் சில வீடுகள் தள்ளி தமிழ் ஆட்கள் இருப்பது அவளுக்குத் தெரியும். வெளியே போய்வரும்போது அந்தப் பெண்ணைச் சந்தித்துக் கதைத்திருக்கிறாள். துணிவுடன் சென்று கதவைத் தடடினாள்.

திறந்தவர் திகைத்தனர்.

அடுத்தது என்ன? அவள் அன்றிரவை அங்கு கண்ணீருடன் கழித்தாள்.

அவர்களுக்கு மதனைப்பற்றி அவள் எதுவும் சொல்லவில்லை. அவர்களாக ஏதும் கேட்கவும் இல்லை. ஏதோ குடும்பத் தகராறு என்றுதான் அவர்கள் நினைத்தனர்.

விடிந்தது. பெண்கள் காப்பகத்தில் மது ஒப்படைக்கப்பட்டாள்.

அம்மி மிதித்து அருந்ததி பார்த்து கெட்டி மேளம் முழங்க கரம் பற்றியவன் உரம் போடத் தவறியதால் தளிர் ஒன்று சருகாகிக் கருகியது.

எத்தனை கனவுகளுடன் வாழ்க்கைப் பூங்காவில் அடி எடுத்து வைத்தாள். இன்று அத்தனையும் சுக்கு நூறாய் உடைந்து போனது.

கண்களில் துளிர்த்த கண்ணீரை அழுத்தித் துடைத்துக் கொண்டாள்.

அது ஒரு கனவு.

அதுவும் கெட்ட கனவு.

இனி என்னாலும் வாழ முடியும்.

என் அனுவை நன்றாக அறிவூட்டி வளர்க்க முடியும்.

என் பெண்மையை நானே காப்பாற்ற முடியும்.

மனதில் உறுதியுடன் மகளை இறுக அணைத்துக் கொண்டாள் மதுசா.

(யாவும் கற்பனை அல்ல)

‘’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’

  • கருத்துக்கள உறவுகள்
Posted

காவலூர்க் கண்மணி,

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எமது சமூகம் தெரிந்திருந்தாலும் வெளிப்படையாக வந்து பெண்ணுக்காக நியாயம் பேசத் தவறுகிறது. காலங்காலமாக வளர்க்கப்பட்டுவரும் பெண்களைவிட ஆண்கள் மேலானவர்கள் என்ற மேலாதிக்க சிந்தனையின் அமோக அறுவடையே பெண் என்பவள் எவ்வளவுதான் தூய்மையானவளாக இருந்தாலும் அவளை இலகுவாக அசிங்கப்படுத்தும் நிகழ்வுகள்.

ஆண் என்பவன் எப்போதுமே பெண்ணை ஆள்பவனாகவே இருக்க ஆசைப்படுகிறான். அவனுடைய ஆசைக்கும் அதிகாரத்திற்கும் ஒரு பெண் அடங்கி வாழ்ந்தால் அதாவது தனக்கென்று எந்தவித சுயகௌரவமும் இல்லாமல் சடப்பொருளாக, அல்லது உணவையும், உடையையும், உறையையும் மட்டுமே எதிர்பார்க்கும் மந்தையாக இருப்பதையே பெரும்பாலான ஆண்கள் விரும்புகிறார்கள். உங்களுடைய இந்தக் கதையைப் போல் எத்தனையோ ஆயிரங்கதைகள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்குள்ளும் மௌனமாக உறங்கிக் கொண்டிருக்கின்றன. எப்போதாவது ஏதாவது எழுதுகோல்கள் சிலவற்றை வெளிக்கொணர்ந்துவிடும். அந்த வகையில் கற்பனையல்லாத உங்கள் படைப்பு எங்கள் சமுதாயத்தை நோக்கி கேள்விக் குறியாகத் தெரிகிறது. மது தன்னைத் திடப்படுத்தி எதிர்காலத்திற்குத் துணிந்துவிட்டாள் என்று முடித்துள்ளீர்கள். எனக்கென்னவோ இனிமேல்த்தான் அவளது கதையே ஆரம்பிக்கப்போகிறது போல் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.