Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் பலம் - Power of Tigers:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உள்ளிருந்து ஒரு குரல் - அம்புலி -

நாளொரு சண்டையும், பொழுதொரு முறியடிப்புமாக மன்னார்க் களமுனை சூடுபிடித்துக் கொண்டிருக்கின்றது.

18.12.2007 அன்று முள்ளிக்குளம் முன்னணி நிலைகளுக்கு முன்னேயிருந்த எதிரிக்கும், புலிகளுக்குமிடைப்பட்ட பகுதியில் பெண் புலிகளின் அணியொன்று பொறிவெடி வைப்பதற்காகச் சென்றிருந்தது. P.K சுடுகருவிக் குழுவினரும் பொறிவெடி வைப்போர் சிலரும் G.P.S கருவியுடன் ஒருவருமாகச் சென்ற அணி துப்புரவுப் பணி செய்து கொண்டிருக்கும்போதே சிங்களப் படைகளின் பதுங்கித் தாக்குதலைச் சந்தித்தது.

அந்தப் பதுங்கித் தாக்குதலைச் சமாளித்து நிலைகளுக்கு மீண்டுவர அந்தப் புலிகளின் அணிகளுக்கு ஒன்றரை மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் தேவைப்பட்டது. அவ்வளவு நேரமும் நல்ல சண்டை. G.P.S கருவியோடு சென்ற தமிழ்க்குயில் காயப்பட்டுவிட அவரைத் தூக்கிப் பின்னுக்கு அனுப்பமுடியாத களச்சூழல். தனது பலம் அனைத்தையும் ஒன்றுதிரட்டி எறிகணைச் சூட்டாதரவோடு எதிரி நடத்திக்கொண்டிருக்கும் தாக்குதலை முறியடிப்பது மட்டுமன்றிக் காயக்காரரையும் பின்னுக்கு அனுப்ப வேண்டும். P.K குழுவில் முடியரசியும் ஒருவராகச் சென்றிருந்தார். அவர் களமுனைக்குப் புதியவர். பயிற்சி முடித்து, P.K கருவிக்கான பயிற்சியும் எடுத்துக் களமுனைக்கு அப்போதுதான் வந்திருந்தார்.

தமிழ்க்குயில் விழுப்புண்பட்டு எழும்பிவர முடியாத நிலையில் இரண்டு பகுதிக்கும் நடுவிலே விழுந்து கிடக்கிறார். விழுப்புண்ணால் அவர் படும் வேதனையின் ஒலியைப்போல எதிரியும் நையாண்டி பண்ணிக் கத்திக்கொண்டிருக்கின்றான். நேரம் போகின்றது. புலிகளின் அணி நிலைகளுக்குப் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றது. காப்புச் சூடு வழங்கிக் கொண்டிருந்த P.K அணியிலிருந்த முடியரசி எழுந்தார். எதிரிகளின் சன்னங்கள் கூவிவர அவற்றை எதிர்கொண்டபடி ஓடிச்சென்று தமிழ்க்குயிலை மெது மெதுவாக இழுத்து வந்தார். முடியரசி தாமதித்திருந்தால் தமிழ்க்குயிலை எதிரியே இழுத்துச் சென்றிருப்பான். களமுனை புதிதாக இருந்தாலும் அவர் காட்டிய வீரம் ஒரு போராளியின் உயிர் காத்தது.

அந்தச் சண்டை நடந்து மூன்று நாட்களுக்கும் பின்னர் நடந்த ஒரு தாக்குதலில் முடியரசி விழுப்புண்ணடைந்து மருத்துவ மனைக்குப்போனார். அந்தக் காயம் மாறி மீண்டும் களமுனைக்கு வந்து கட்டுக்கரைப் பகுதியில் நின்ற ஒருநாளில் எதிரியுடன் நடந்த மோதலில் லெப். முடியரசியாக விழிமூடிப்போனார்.

********************************************************************************

மாலதி படையணியின் P.K குழுவில் ஒருவரான பிறைவிழியும் அவரது அணியினரும் களமுனையில் தங்களை நம்பியே சண்டை பிடிக்கின்றார்கள். அதாவது தமது P.K சுடுகருவிக்குரிய ரவைகளுக்காகத் தங்களையே அவர்கள் நம்பியிருக்கின்றார்கள். கடும் சண்டைக்கிடையே 'ரவைகளை யாராவது சுடுவதற்காகக் கொண்டு வந்து தருவார்களா" என்று அவர்கள் ஒருபோதும் எதிர்பார்த்ததே கிடையாது. அமைப்பின் ஆயுத விபர அறிக்கைப்படி இயக்கம் கொடுத்த குறித்தளவான ரவைகள் அவர்களிடம் இருக்கும்.

சண்டையொன்று நடந்து முடிந்தால் முடிந்த ரவைகள் நிரப்பீடு செய்யப்படும். ஆனால் அவர்களுக்கான ரவைகளைப்போல இன்னொரு மடங்கு யாருக்கும் தெரியாத வண்ணம் அவர்களிடம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். முன்னையதுடன் தமது சுடுகருவியையும் அதற்கான உபகரணங்களையும் தூக்கி நடப்பதே மிகவும் கடினம். அதைவிட இன்னொரு மடங்கு ரவைகளையும் மேலதிகமாகச் சுமந்த படி களமுனையில் அவர்களைக் கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் சண்டை பிடிக்கப்போய் வருவார்கள்.

சண்டை பிடிக்கப்போகும் இடங்களில் அவர்களுக்கான மேலதிக ரவைகள் இருக்கும். முன்னேறி வந்த படையினரோடு அடிபட்டு அவர்களைத் துரத்தியடித்த பின் படையினரின் ரவைகளை எடுத்து வைத்துக்கொள்ளுவார்கள். இப்படித்தான் ஒரு தடவை கப்டன் புலிக்குட்டி 200 ரவைகளை எதிரியுடன் சண்டை பிடித்து இவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார். புலிக்குட்டி அப்போது இவர்களின் அணியிலிருந்தார். இதைவிட பின்தளத்துக்குப் போகும் நேரமெல்லாம் ஒன்றிரண்டாக ரவைகள் களவாடப்பட்டு இவர்களது மேலதிகக் களஞ்சியப்படுத்தலுக்கு வந்து சேரும். இப்படிச் சேரும் ரவைகளை வைத்துக்கொண்டு அடிபட்டால் சண்டையும் தூள்பறக்கும். ஆக அவர்கள் சண்டை பிடிப்பது தங்களை நம்பி; தவிர யாரையும் நம்பியல்ல.

***************************************************************************

பிறைவிழி போர் ஓய்வுக்காலத்தில் அமைப்பில் இணைந்து பயிற்சி பெற்றதனால் நீண்ட காலம் சண்டைக்கான வாய்ப்புக் கிட்டவில்லை. P.K சுடுகருவியுடன் ஓடி ஓடிப் பயிற்சி பெற்ற போதும் சண்டைக்கான வாய்ப்பு இல்லை. பயிற்சி ஆசிரியர்கள் தரும் ஒத்திகைகளைச் செய்து பார்க்க வாய்ப்பே இல்லை. 2006 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் முகமாலைப் பகுதியில் முன்னேறிய படையினரின் நடவடிக்கையை முறியடித்து படையினரின் 75 உடலங்களை எடுத்த சண்டையே இவளது முதல் ஒத்திகை. படையினரை நேரே பார்த்து நெற்றிக்கு நேரே சண்டை பிடித்ததில் சண்டை ஒரு விளையாட்டுப்போல இருந்தது.

அதற்குப் பின்னர் 2007 மார்ச் மாதம் தொடக்கம் 2008 சனவரி மாதம் வரையான பத்து மாதங்கள் தொடர் களமுனைக் காலமாக இருந்தது. திருக்கேதீஸ்வரம், கட்டுக்கரை, பாலைக்குழி, கட்டையடம்பன், முள்ளிக்குளம், தம்பனை, பண்டிவிரிச்சான் என்று மன்னாரின் ஊர்களையெல்லாம் கால்களால் அளந்து எதிரியுடன் நேருக்கு நேர் நின்று பல சண்டைகளைப் பிடித்தாகிவிட்டது.

21.12.2007 அன்று முள்ளிக்குளம் பகுதியில் காலை முன்னே சென்று துப்புரவுப் பணியில் ஈடுபட்டுவிட்டுத் திரும்பி வந்து தமது நிலைகளில் நின்றபோது சண்டையொன்று மூண்டது. துப்புரவுப்பணி முடியுமட்டும் பார்த்திருந்த எதிரி, நிலைகளுக்குத் திரும்பிய பின்பு முன்னேறி வந்து பெட்டி போட்டுச்சண்டை பிடிக்கத் தொடங்கிவிட்டான்.

ஏற்கெனவே பல நாட்கள் குளிப்பில்லாத அந்த அணி அன்றுதான் உடைமாற்றுவதற்காக வந்திருந்தது. பின்னே வந்து கால்மணி நேரத்துக்குள் சண்டை தொடங்கிவிட்டதால் உடை மாற்றியவர்கள் உடையை மாற்றிக் கொண்டிருந்தவர்கள் என்று அவசர அவசரமாகத் தயாராகிச் சண்டைபிடித்து விழுப்புண்ணடைந்து எதிரியை விரட்டிக் கலைத்துவிட்டார்கள். முன்னிலை நோக்குநர் கவிமதி வீரச்சாவு, ஒரு சிலர் விழுப்புண்ணடைந்த அந்தச் சண்டையில் எதிரிகள் பத்துப் பேர் கொல்லப்பட்டனர்.

திகழினி விழுப்புண்ணடைந்தவர்களுக்கு குருதி வெளியேறாமல் கட்டிப்பின்னுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். பிறைவிழிக்கு முழங்கையைத் துளைத்துக்கொண்டு எதிரியின் சன்னம் பாய்ந்தது. மருத்துவமனை சென்று மீண்டு வந்தபோதும் இடக்கையைத் தூக்கமுடியாது வலது கையால் இடது கையைத் தூக்கி வைத்துக்கொண்டு செயற்படும் பிறைவிழி P.K சுடுகருவி அணிக்கு இப்போதும் தலைமை தாங்குகின்றார்.

களமுனையொன்றில் மதியம் 2.00 மணியைத் தாண்டி உணவுப் பொதிகள் வந்தபோதும் அவர் சாப்பிடவில்லை. பயிற்சிக்குப்போன தனது அணிப்போராளிகள் வரட்டும் அவர்களுடன் சேர்ந்தேதான் சாப்பிடுவேன் என்று அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். வீடே உலகம் என்று பலர் வாழ்ந்து கொண்டிருக்க, நாடே தன் வீடு போர் செய்யும் பிள்ளைகளே தன் பிள்ளைகள் என்று போராளிகளுடன் அன்புறவோடும், எதிரிகளோடு பெருந்துணிவோடும் நிற்கும் அவரைப் பார்க்க வியப்பாக இருந்தது. முறிந்துபோன முழங்கை முறியாத துணிவு, பகைக்கு முன்னே வீரம், தன் உறவுகளைக் காக்கும் ஈரம் என்று இன்னமும் களமுனையில் நிற்கும் அவரை எந்தப் பகைவராலும் வெல்ல முடியாது.

********************************************************************************

இசையாழினி வீட்டில் மூன்று ஆண்களுக்கு நடுவில் ஒரே பெண்பிள்ளை. அப்பாவின் பூர்வீகம் மலையகம். மல்லாவியில் அவளது குடும்பம் வேர்விடத் தொடங்கியிருந்தாலும் நாட்டுப் போர்ச்சூழல் காரணமாக இவளது ஐந்து அகவையிலேயே குடும்பமாக மீண்டும் இடம்மாறித் தலவாக்கலயில் வாழ வேண்டி இருந்தது. மலையகத்திலேயே படித்து வளர்ந்ததால் தமிழீழ விடுதலைக்கான போராட்டம் பற்றிய புரிதல் இன்றியே இவளது வாழ்வு நகர்ந்தது.

மீண்டும் 2004 இல் அமைதிக் காலத்தின் போது இவளது குடும்பம் மல்லாவிக்கு மீண்டு வந்தது. வன்னிவிளாங்குளம் துயிலுமில்லத்துக்கு அருகில் வீடு. அடிக்கடி வீரச்சாவும் வித்துடல் விதைப்புமாக இருக்கப் போராட்டம் பற்றிய தேடல் அவளுள் விரிந்தது.

மலையகத்தில் இது நாள் வரை தான் வாழ்ந்த வாழ்வை ஒரு கணம் நினைத்துப் பார்த்தாள். அங்கு எங்குமே சுதந்திரமில்லை. அடிமைப்பட்ட வாழ்க்கைமுறை. பெற்றோரை இழந்தால் நடுத்தெருவில் நிற்கவேண்டிய பரிதவிப்பு நிலை, கணவனை இழந்த மனைவியர் உழைப்புக்குப் படும்பாடு.

தனித்து வாழ முடியாத சூழல் என்று பல்வேறுபட்ட நெருக்கடிகள் அங்கே இருந்தன. எல்லாவற்றிலும் முதன்மையாகத் தமிழர் என்ற இன அடையாளமே யாவற்றுக்கும் தடையாக இருந்தது. க.பொ.த. சாதாரணதரத்துடன் கல்வியை இடைநிறுத்திவிட்டு இங்கிருந்த காலத்தில் ~நியாப்பின்| வேலைத்திட்டத்தில் இணைந்து சமூக நல வேலைகளில் இசையாழினி பங்கு கொண்டிருந்தாள். மாதம் நான்காயிரம் ரூபா ஊதியத்தில் ஒரு ஆண்டு பணிபுரிந்தபோது பல பெண்களைச் சந்தித்திருந்தாள்.

மலையகத்தில் வாழும் வாழ்க்கைக்கும் இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடு இருந்ததை அவள் இனங்கண்டாள். இங்கு பெற்றோரின்றிக் குழந்தைகள் தவிக்க வேண்டிய நிலை இல்லை. தெருப்பிச்சைக்காரர்கள் இல்லை.

கணவனை இழந்த பெண்களின் வாழ்வு தன்னம்பிக்கை கொண்டதாக இருந்தது. எங்கும் போய் வருவதற்கும் வாழ்வதற்கும் சுதந்திரம் இருந்தது. ஆனால் எல்லோரது வாழ்வையும் போர் பாதித்து இருந்தது. 2004 இலிருந்து 2006 வரை வாழ்ந்த வன்னி வாழ்க்கைப் போராட்டத்தின் பால் அவளை ஈர்த்தது.

2006 இல் விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து பயிற்சி பெற்று 2 ஆம் லெப். மாலதி படையணியின் களமுனைகள் பலவற்றைச் சந்தித்த சண்டைக்காரி அவள். 'ஒரேயொரு பெண்பிள்ளை நீ வந்து வீட்டில் நில்லு நான் உனக்காகப் போகின்றேன்" என்று தம்பி எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் அவள் மறுத்து விட்டாள். 'எனக்குப் பிறகு வேண்டுமானால் நீ வா" என்று கூறிவிட்டுத் தனது கடமையைத் தொடர்கின்றாள்.

வீட்டிலே தனிப் பெண்ணாக வளர்ந்ததால் பெண்களோடு இணைந்து குழுவாக வாழும் இன்றைய வாழ்வு அவளுக்குப் பிடித்துப் போய் விட்டது. எல்லாரும் சேர்ந்து எல்லாருக்காகவும் கஷ்டப்படுதல்; வாழுதல் அவளுக்கு விருப்பமாக இருக்கின்றது.

மன்னார் களமுனையில் ஒன்றரை வருடங்களாக நின்று நான்குக்கும் மேற்பட்ட பெரிய சண்டைகளைப் பிடித்ததில் அளப்பரிய துணிவு கீரிசுட்டானில் வேவுக்குப் போய்க்காயமடைந்தாலும் சவால்கள் பலவற்றையும் எதிர்கொள்ளும் வேவு அணியில் பணியாற்ற அவளுக்கு நல்ல விருப்பம். எதையும் சமாளிக்கும் இயல்பைத் தன்னுள் வளர்த்துக் கொண்டு, காட்டு வாழ்க்கையில் பிடிப்புக்கொண்டு களமுனை ஒன்றில் நிற்கும் அவளது உணர்வுகளை இலகுவில் எல்லோராலும் புரிந்து கொள்ளமுடிவதில்லை. இன்னொரு தேசத்தில் சிங்களத்தால் தம்மினம் படுகின்றபாட்டை அங்கிருந்தே நேரில் கண்டு கொண்டதால் விடுதலை வேண்டும் என்ற முடிந்த முடிவை ஏற்றுக்கொண்டு போராடும் அவளைப் புரிந்து கொள்ள எல்லோராலும் முடிவதில்லை.

அவள் உடன்பட்டால் அவளுக்காகத் தம்பி வந்து அவளது கடமையைத் தொடரமுடியும். ஆனால் தனது குடும்பத்துக்காகவும், தனது தேசத்துக்காகவும் போராட வேண்டிய தெரிவைப் புறந்தள்ள அவள் விரும்பவில்லை. தனக்காகத் தம்பியை அனுப்புவது 'புறமுதுகிட்ட அரசனைப்" போன்ற உணர்வையே அவளுள் ஏற்படுத்தும். அதனால் அவள் முன்னே செல்கின்றாள். விரிந்த போர்க்களம் அவளை எதிர்கொள்ளக் காத்திருக்கின்றது.

நன்றி: தமிழ்நாதம் (மூலம்: வெள்ளிநாதம்)

Edited by Tigerblade

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிதிவண்டி தொட்டு விமானப்படை வரை (from Bicycle to Aircraft):

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.