Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரண தண்டனைக்குத் தயாராகி விட்டோம் - இயக்குநர் சீமான் 'கர்ஜனை' பேட்டி

Featured Replies

திரைப்படத் துறையில் ஈடுபாடு கொண்டு, அதேசமயம் இலங்கை தமிழர் பிரச்சினையிலும் வெளுத்து வாங்குகிறார் இயக்குநர் சீமான். ராமேஸ்வரத்தில் அவர் பேசியதில் குற்றம் கண்டுபிடித்த போலீஸ்,

சீமானை சிறையில் அடைத்தது. தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகி, மதுரையில் தங்கியிருந்து தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே இலங்கைப் பிரச்சினை தமிழக அரசியலையும் தினசரி கலக்கி வருகிறது. ஆதரவும், எதிர்ப்புமாக இருந்து கொண்டிருக்கிறது. இன்னும் சிலரைக் கைது செய்ய வேண்டும் என்று பிடிவாதம் செய்கிறது காங்கிரஸ் கட்சி. இந்த நிலையில் இயக்குநர் சீமானை மதுரையில் தமிழன் எக்ஸ்பிரஸýக்காக சந்தித்தோம்.

திரைப்படத்துறையில் ஈடுபாடுகொண்ட நீங்கள், இலங்கை தமிழர் பிரச்சினையில் தீவிரக் குரல் கொடுத்து வருகிறீர்கள். இதற்கு உந்து சக்தி எது?

அடிப்படையில் நான் தமிழன். என் இனம் அழிக்கப்படுகிறபோது அந்த உணர்வு தானாக வருகிறதேயொழிய யாரும் சொல்லி வருவதில்லை. இதற்கு உந்து சக்தி என்று எதுவும் கிடையாது. ஆனால் சில சுயநல சக்திகளே தேசியம், இறையாண்மை என்று பேசி, தமிழினத்திற்கு எதிராக இருக்கிறார்கள். எந்தவொரு விடுதலைப் போராட்டமும் விமர்சனம் இல்லாமல் இருந்ததில்லை. யாரும் பூங்கொத்தோடு போய் போராடிக் கொண்டிருக்க முடியாது.

மற்ற மொழி பேசக்கூடிய மாநிலங்களில் இருக்கக்கூடிய ஒற்றுமை, தமிழகத்தில் இல்லை என்பதே உங்களுடைய ஆதங்கம்..... அப்படித்தானே?

நாம் உணர்வை ஊட்டமுடியாது. அது ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாகவே இருக்க வேண்டிய ஒன்று. ஒகேனேக்கல் பிரச்சினையில் எடியூரப்பா சொன்ன அதே கருத்தை அங்கு தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் வலியுறுத்தின. மராட்டியத்தில் துப்பாக்கியோடு போன ஒரு பீகாரியை சுட்டுக்கொன்றதற்காக லல்லுபிரசாத் யாதவ் முதல், ராம்விலாஸ் பஸ்வான் வரை குரல் கொடுக்கிறார்கள். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் பதவியே விலகுகிறார். அந்த ஒற்றுமை தமிழர்களுக்கு இல்லையே..! இங்கு கட்சித் தமிழன், ஜாதித் தமிழன், மதத் தமிழன் என்று அணுவுக்கு மேலாகப் பிளந்துகிடக்கிறான். இந்த மூன்றும்தான் தமிழர்களைச் சிதறடித்துள்ளது. இதைக் கடக்காதவரை இன உணர்வை ஊட்டமுடியாது; ஒற்றுமையும் வராது.

இலங்கை தமிழர் பிரச்சினையில் கருத்துச் சொல்ல உங்களுக்குள்ள உரிமையைப் போல காங்கிரஸýக்கும் உரிமையுண்டு அல்லவா?

தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்தை எதிர்த்துப் பேச அவர்களுக்கு எந்தளவுக்கு உரிமை உண்டோ, அதே அளவு உரிமை ஆதரித்துப் பேசவும் உண்டு என்பதே கருத்துச் சுதந்திரம். ஆதரித்துப் பேசக்கூடாது என்றால் அது சர்வாதிகாரமாக இருக்குமே தவிர ஜனநாயகமாக இருக்காது. இந்தியா சர்வாதிகார நாடா என்பதே என்னுடைய கேள்வி. சர்வாதிகார நாடுதான் என்றால் நாங்கள் பேசவில்லை.

ஆனால் இலங்கையில் தனி ஈழம் உருவானால், பிறகு அதேபோன்ற பிரிவினை கோரிக்கை இந்தியாவிலும் கிளம்பும் என்பதால்தானே புலிகளை இங்கு தேசப்பற்றாளர்கள் ஆதரிப்பதில்லை...?

காவிரியில், முல்லைப் பெரியாறில் தண்ணீர் தர மறுத்தபோதும், பாலாற்றின் குறுக்கே கட்டும் அணையைத் தடுக்க முடியாதபோதும் நாங்கள் தனி நாடு கேட்டதில்லை. தவிச்ச வாய்க்கு தண்ணீர் தர மறுத்த இந்தத் தேசத்தில் நாங்கள் நேசத்துடன்தான் இருக்கிறோம்? ஆகவே தனி நாடு கேட்போம் என்பது ஒரு மாயை. தேசிய இறையாண்மையை மதிக்க தமிழன் அளவுக்கு வேறு எந்த இனமும் இந்த நாட்டில் இல்லை. விடுதலைப் போராட்டத்தில் முதன்முதலாகக் குரல் கொடுத்த சின்ன மருது, பெரிய மருது, தீரன் சின்னமலை, திப்பு சுல்தான், வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., சுந்தரலிங்கனார், அழகுமுத்துக்கோன் இப்படி யாரையும் இந்த மண் மறந்துவிடமுடியாது.

இவ்வளவு காலமாக நாங்கள் நேசித்த என் தேசம் என் இனப் படுகொலைக்குத் துணை போகிறதே என்கிற ஆதங்கம், கோபம் இருக்கிறதே தவிர அதற்காக இந்திய கடவுச் சீட்டோ, குடியுரிமையோ வேண்டாம் என்று சொல்லவில்லை. விமானம் கடத்திய தீவிரவாதிகளை இந்தத் தேசம் வெளியில் விடவில்லையா..? அந்தச் செயல் இறையாண்மைக்கு நேர்மையானதா? ஒரு இந்திக்காரனை சுட்டதற்காக எவ்வளவு பிரச்சினை...! பாகிஸ்தானில் ஒரு சீக்கியரை தூக்குக் கயிறு முன்னால் நிறுத்தியபோது அந்த இனமே எழுந்து பேசியது. ஆனால் வயிற்றுப் பிழைப்புக்காக கடலுக்குப் போகும் மீனவர்களை தனுஷ்கோடி வரை விரட்டிவந்து சுட்டுக்கொல்வதை எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று ஏன் இந்தத் தேசம் கண்டிக்கவில்லை? ஆயுதமும் கொடுத்து, பயிற்சியும் கொடுத்து சுடச் சொல்வதே இந்தியாதான். அதைத்தான் ஏற்க முடியவில்லை.

ராஜீவ்காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்தினால் மட்டுமே அங்கு அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடரமுடியும் என்று காங்கிரஸ் தரப்பு கருத்து சொல்லியிருக்கிறதே..?

அதை ராஜபக்ஷேவிடம் சொல்லட்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரிக்கக் கூடாது என்பதே அந்த ஒப்பந்தம். ஆனால் பிரிக்கப்பட்டபோது இதே காங்கிரஸ்காரர்கள் ஏன் தடுக்கவில்லை? ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டியவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களே தவிர, விடுதலைப் புலிகள் அல்லர்.

ராஜீவ் கொலைக்கு முன், அதற்குப் பின் என்று தி.மு.க. தன் நிலையை மாற்றிக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. ஆனால் ராஜீவின் கொலைக்கு முன்பிருந்த நிலையையே நீங்கள் கடைப்பிடிக்கிறீர்களே..?

தி.மு.க. ஒரு அரசியல் இயக்கம். அதன் தலைவர் ஒரு முடிவெடுக்கிறார். ஆனால் நான் ஒரு கட்சியோ, இயக்கமோ நடத்தவில்லை. எனவே என்னுடைய நிலைப்பாடு அப்படியேதான் உள்ளது. எப்படி காந்தி, இந்திராகாந்தி மரணத்தை மறந்து கடந்தது போல ராஜீவ் காந்தியின் மரணத்தையும் மறந்து யோசியுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

சிங்களனுக்குப் பயிற்சி கொடுத்து விடுதலைப் புலிகளை மொத்தமாக அழித்துவிட வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம். காரணம், அது ராஜீவைக் கொன்ற இயக்கம்; தீவிரவாத இயக்கம். அந்த இயக்கம் எப்படிப்பட்டது என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தற்போது "மேலும் இரண்டு ஆண்டுகள் தடை' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன பெரிய தடை....? எங்கேயோ போராடும் ஒரு இயக்கத்துக்கு டெல்லியில் நான்கு சுவற்றுக்குள் வைத்து தடை விதிப்பது வேடிக்கையாக இல்லையா?

சிறையிலிருந்து விடுதலையாகி முதலமைச்சரைச் சந்திக்காமல் நீங்கள் வைகோவைச் சந்தித்தது "விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்' என்ற அடிப்படையிலானது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சரிடம் கூறியிருக்கிறார்களே...?

முதல்வரை சந்தித்து நிதி கொடுக்க வேண்டும் என்று எங்களுக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் மதுரையில் தங்கியிருந்து கட்டாயக் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருக்கும் நாங்கள் எப்படி சென்னை போய் அவரைச் சந்திக்க முடியும்? வீர. இளவரசனைப் பார்ப்பதற்காக மதுரை வந்தார் வைகோ. அவரும் எங்களைப் போன்று சிறையில் இருந்தவர். இந்தத் "தம்பி'களைப் பார்க்க அவர் விரும்பியிருக்கிறார். எனவே அன்பின் நிமித்தமாக அவரைச் சந்தித்தோம்... அவ்வளவுதான்.

டாக்டர் ராமதாஸ் இலங்கைப் பிரச்சினை பற்றிக் குரல் எழுப்பி வரும் நிலையில் அவரை காங்கிரஸ் தலைவர் தங்கபாலு சந்திக்கிறார். ஆனால் அதே பிரச்சினையைப் பேசிவரும் திருமாவளவனை காங்கிரஸ் கட்சி கைது செய்யச் சொல்லிக் கேட்கிறதே...?

காங்கிரஸின் நிலைப்பாடு என்னவென்றே புரியவில்லை. கட்சி சொல்லியிருக்கிற தலைவராக தங்கபாலு இருக்கிறாரே தவிர, 500 பேர் வரை தலைவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆளுக்கொரு விமர்சனம்! அதில் யார் கருத்து எதை நோக்கிப் போகுதுன்னு தெரியல. திருமாவளவன் குற்றம் செய்தார் என்று அரசு கருதினால், அவரைக் கைது செய்யலாம், காங்கிரஸ் சொல்கிறது என்பதற்காக அந்த நடவடிக்கை அவசியமில்லை. கைதுக்குப் பயந்து மனசாட்சிக்குச் "சரி' எனப்படும் உண்மையை பேசாமல் இருக்க முடியாது.

"ஜெயலலிதா தமிழர் இல்லை என்றும், சுட்டுப்போட்டாலும் அவருக்கு அந்த உணர்வு வராது' என்றும் சொல்லியிருக்கிறீர்கள். அவர் பத்தாண்டுகள் முதலமைச்சராக இருந்தபோது அவரை எதிர்த்து நீங்கள் போராடினீர்களா..?

ஜெயலலிதாவை எதிர்த்து தேர்தல் பிரச்சாரமே செய்தோம். அவர் மீண்டும் முதலமைச்சராக வரக்கூடாது என்பதுதான் அதன் அர்த்தம். ஆட்டின் மூளை கூட ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து சிந்திக்கும். ஆனால் ஜெயலலிதாவின் மூளை ஒரு போதும் சிந்திக்காது.

இலங்கைப் பிரச்சினைக்காக இங்கு எந்தெந்த அரசியல் கட்சிகள் முழு மனதோடு ஆதரவு தெரிவிக்கின்றன என்பதைப் பட்டியலிட முடியுமா?

பட்டியல் போட்டுச் சொல்ல முடியாது. அ.தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் எதிராகப் பேசிக் கொண்டிருக்கின்றன. தேசியக் கட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பெரும் பங்களிப்பு, தமிழ்நாட்டில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அது பெரிய வெற்றி.

"போர் நிறுத்தம் என்ற வேண்டுகோளை ஏற்கத் தயார்' என்று புலிகள் அறிவித்துள்ளார்கள். ஆனால் அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்கிறதே இலங்கை அரசு?

ஏற்கெனவே போர் நிறுத்தம் இருந்தபோது ஒப்பந்தத்தை அத்து மீறி போர் தொடுத்தது சிங்களன்தான். ஆகவே சிங்கள அரசுதான் போரை முதலில் நிறுத்த வேண்டும். சார்க் மாநாட்டின்போது புலிகள் போர் நிறுத்தம் அறிவித்தபோது, அது முடியாது என்று சொன்னவர்தான் ராஜபக்ஷே.

இப்பவும் போரை நிறுத்தத் தயார் என்று சொல்லியிருக்கும் புலிகளைச் சரணடையச் சொல்கிறார்கள். ஆயுதத்தை அவர்கள் கீழே போட்டால் என்ன நடக்கும்? தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆயுதத்தைக் கீழே போட்டு அரசியல் வழியில் பாராளுமன்ற உறுப்பினரான 22 பேரில் எட்டுப் பேரை, சிங்கள அரசு ஏன் சுட்டுக்கொன்றது? இப்போதும் அவர்கள் நோக்கம் அதுவாகத்தான் இருப்பது புரிகிறது. அங்கு போர்நிறுத்தம் செய்யச் சொல்லி தமிழகத்திலிருந்துதான் குரல் கிளம்புகிறதேயொழிய மத்திய அரசு சொல்லவில்லை. சொன்னால் மறு நிமிடமே நிறுத்தப்பட்டுவிடும். ஆனால் இந்தியா அதை விரும்பவில்லை. காரணம், என் இனப்படுகொலையை திட்டமிட்டு இந்தியா ரசிக்கிறது. இந்தியக் குடிமகனாகிய 400 மீனவர்களின் மரணத்திற்கு இந்தத் தேசத்தில் எந்தப் பதிலும் இல்லையே. இரண்டு நாட்களுக்கு முன்புகூட துரத்தி வந்து சுடுகிறான். ஆக இந்தியாவின் அரசியல் நாடகத்தை நல்ல ரத்தம் ஓடுகிற, மான இன உணர்வுள்ள எந்தத் தமிழனும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. அதிக பட்சம் என்ன...? மரண தண்டனைதானே! அதற்கும் நாங்கள் தயாராகிவிட்டபோது இதுவெல்லாம் எங்களை என்ன செய்துவிடப் போகிறது? என் இனத்தின் எதிரிகளைப் பேசுவதற்குப் பயந்துகொண்டு வெளியில் வாழணுமா?

போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி புலிகள் ஆயுதம் வாங்கிக் குவிப்பார்கள் என்கிறார்களே...?

எப்படி வாங்க முடியும்? எந்த நாடு கொடுக்கும்? இந்தியாவும், பாகிஸ்தானும் கொடுக்குமா? புரட்சியில் பூத்த கியூபா கூட ஆதரவில்லை. சிங்களன் தமிழனுக்கு அதிகாரம் கொடுப்பான் என்பதை எப்படி நம்ப முடியாதோ, அதே போல் புலிகள் ஆயுதம் வாங்கிக் குவிப்பார்கள் என்பதும் நம்ப முடியாத அப்பட்டமான குற்றச்சாட்டு.

இவ்வளவு பேசும் நீங்கள் பிரபாகரனை சந்தித்துள்ளீர்களா?

பிரபாகரன் இந்த இனத்தில் இனி எந்த நூற்றாண்டிலும் பிறக்க முடியாத ஒரு தலைவன். தன் மண்ணையும், மக்களையும் ஒரு தாய்க்கு மேலாக நேசிக்கக் கூடிய தலைவன். என் பாட்டனார்கள் வீரர்களாகவும், மன்னர்களாகவும் இருந்துள்ளார்கள். ஆனால் மதி நுட்பத்திற்கு ஒரு மந்திரியை வைத்துக்கொள்வார்கள். ஆனால் ஒரே நேரத்தில் வீரனாகவும், விவேகியாகவும் இருக்கிற ஒரே தலைவனாகப் பிரபாகரனைப் பார்க்கிறேன்.

அவர் மனித நேயமிக்கவர். அதனால்தான் 40 ஆயிரம் சிங்கள வீரர்களை "தப்பிச்சு ஓடுங்க'ன்னு சொன்னாரு. சிங்கள வெறி பிடித்த நாய்கள் எங்கள் பிள்ளைகளில் ஒரு ஆண், ஒரு பெண்ணை நிர்வாணமாக்கி குப்பை லாரியில் தூக்கிப் போட்டு கோஷம் போட்டுப் போனார்களே... அது சர்வதேச மனித நேயத்துக்கே நேர்ந்த அவமானம். ஆனால் செத்து விழுந்த ஒரு சிங்கள வீரனை புலி போராளி ஒருவர் காலால் எட்டித் தள்ளியபோது, "அது தவறு. நாம் ஒரு லட்சியத்துக்காகப் போராடுவதைப் போன்று அவனும் போராடுகிற வீரன். அவனுக்கு மதிப்பளிக்க வேண்டும்' என்று சொல்லி வணக்கம் செலுத்த வைத்தவர்தான் பிரபாகரன். ஆக, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கணும்.

என் தலைவன் என்னிடத்தில் திரும்பத் திரும்பச் சொன்னது ஒன்றுதான். ""அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரமாகச் சாவது மேலானதடா தம்பி... பயந்து பயந்து வாழ்வதைவிட ஒரு நொடியேனும் வீரமாகப் போராடி வாழ்ந்து சாவதே மேலானது. ஆயுதம் ஏந்தி ஒருவன் வரும்போது "ஐயா, சாமி' என்று குனிந்து கும்பிடுவதைவிட, போராடிச் செத்துவிட்டுப் போகலாம்'' என்று சொன்னார். அதுதான் என் காதுகளில் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டிற்கும் அண்டை மாநிலங்களுடன் தீராத பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ் தேசியச் சிந்தனையாளர்களை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்வீர்களா..?

காலம் அதைச் செய்யும். எப்படி அடிவாங்கி, அடிவாங்கி தமிழ் ஈழத்திற்கு அங்கு கருவி ஏந்திப் போராடுகிறார்களோ, அதேபோல அடிவிழும் போது தானாகவே உணர்ச்சி வரும். அப்போது இந்தச் சீமான் என்ன செய்யணுமோ அதைச் செய்வான். நாம் தலைமை ஏற்கவேண்டும் என்ற அவசியமில்லை. புரட்சி என்பது காய்ந்த சருகுகளாகக் கிடக்கிறது. அது எந்த நேரத்திலும் பற்றிக் கொள்ளும் ஆற்றல் மிகுந்தது.

http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி தராக்கி. உருக்கமான செவ்வி. ஆனாலும் சீமானின் நகைச்சுவையுணர்வுக்கு என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

||ஆட்டின் மூளை கூட ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து சிந்திக்கும். ஆனால் ஜெயலலிதாவின் மூளை ஒரு போதும் சிந்திக்காது.|| :o:)

Edited by nunavilan

எனக்கும் சீமானின் பேச்சு என்றால் ரொம்ப பிடிக்கும் அதுவும் "என் பெருமக்களே" என்று கூறும் வசனம் அடிக்கடிகாதில் கேட்கும்போல் இருக்கும் அப்படி ஒரு உணர்வுள்ள பேச்சு.....

எனக்கும் சீமானின் பேச்சு என்றால் ரொம்ப பிடிக்கும் அதுவும் "என் பெருமக்களே" என்று கூறும் வசனம் அடிக்கடிகாதில் கேட்கும்போல் இருக்கும் அப்படி ஒரு உணர்வுள்ள பேச்சு.....

உற்றுக்கவனியுங்கள் அவர் "என் பெருமக்களே" என்று அழைப்பதில்லை "என் பெருமக்கள" என்றுதான் அழைப்பார். அது அவரின் பேச்சுவழக்காக இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.