Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உண்ணாவிரதத்தில் அரசியல் இல்லை : விஜய் பேட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தின் பின்னணியில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை என விஜய் கூறியுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 37 இடங்களில் விஜய் ரசிகர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தார்கள். சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில், விஜய் கலந்து கொண்டு ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். இதற்காக சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் பந்தல்கள் போடப்பட்டிருந்தன. 'புத்தர் கடவுளாக உள்ள நாட்டில் யுத்தம் நிற்க உண்ணாவிரத போராட்டம்' என்று எழுதப்பட்ட பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது, அதைப்பார்த்து பெண்கள் கதறி அழுவது போன்ற படங்களும் வைக்கப்பட்டிருந்தன.

காலை 7 மணிக்கே ரசிகர்கள் அங்கு திரள ஆரம்பித்தார்கள். கோவை, புதுச்சேரி மற்றும் சென்னையை சேர்ந்த ரசிகர்கள் விஜய் நற்பணி இயக்க கொடிகளை பிடித்தபடி, ஊர்வலமாக வந்தார்கள். பெரும்பாலான ரசிகர்கள் கறுப்பு உடை அணிந்திருந்தார்கள். காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. விஜய் கறுப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். அவருடைய தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர், தாயார் ஷோபா சந்திரசேகரன், மனைவி சங்கீதா ஆகியோரும் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார்கள்.

உண்ணாவிரதத்தின்போது நிருபர்களிடம் பேசிய விஜய் கூறியதாவது :- "தமிழ்நாடு முழுவதும் என் ரசிகர்கள் 37 இடங்களில் உண்ணாவிரதம் இருப்பதாக கேள்விப்பட்டேன். இதில் என் முயற்சி எதுவும் இல்லை. ரசிகர்கள் எடுத்த முடிவு இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு சம்மதித்து, நானும் அவர்களுடன் உண்ணாவிரதம் இருக்கிறேன்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் எந்த அரசியலும் இல்லை. இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக எங்கள் உணர்வை தெரிவிக்கும் போராட்டம் இது. இலங்கையில் நடைபெறும் போர் முடிவுக்கு வரவேண்டும் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்படவேண்டும். இதற்காக நாம் அங்கே போய் சண்டை போட முடியாது, இது போன்ற உண்ணாவிரத போராட்டம் மூலம் நம் உணர்வுகளை காட்ட முடியும்" இவ்வாறு விஜய் கூறினார்

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் பிரச்னை இன்று தமிழகத்தில் பரபரப்பாக பற்றியெரியும் நிலையில், தனியொரு நடிகராக விஜய் இந்தப் பிரச்னையில் களமிறங்கி, அவரது ரசிகர்கள் சகிதம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறார்.

தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிறன்று முப்பத்தாறு இடங்களில் விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதமிருந்தனர். இந்த உண்ணாவிரதங்களுக்கான ஏற்பாட்டைச் செய்தது, இளைய தளபதி விஜய் நற்பணி இயக்கம். சென்னை சேப்பாக்கத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் விஜய் கலந்து கொண்டார். அதேநாளில், அதே இடத்தில் உண்ணாவிரதம் நடத்த இருந்த இந்து மக்கள் கட்சி, விஜய்க்காக அந்த இடத்தை விட்டுக் கொடுத்தது தனிக்கதை.

காலை எட்டு மணிக்கு போராட்டம் என அறிவித்திருந்தாலும், விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அங்கே வந்து சேர்ந்தபோது மணி ஒன்பது. மேடை உள்பட மற்ற ஏற்பாடுகளைப் பார்வையிட்ட எஸ்.ஏ.சி.யிடம் நாம் பேச்சுக் கொடுத்தோம். ``இந்தப் போராட்டத்தில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. விஜயின் விருப்பத்தின் பேரில்தான் இது நடக்கிறது'' என்றார் அவர். அதன்பின் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், புதுவைப் பகுதி ரசிகர்கள் வந்து குவிய ஆரம்பித்தனர். புதுச்சேரி முன்னேற்றக் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. புஷி ஆனந்த், அந்த மாநில விஜய் ரசிகர் மன்றத் தலைவராம். அவரும் வந்திருந்தார்.

ரசிகர்கள் இருக்கைகளில் அமராமல் எழுந்து நின்று கத்திக்கொண்டே இருந்ததால், ``நீங்கள் திரைப்பட விழாவுக்கு வரவில்லை. நம் சகோதரர்கள் வீட்டு சாவுக்கு வந்திருக்கிறீர்கள். இப்படி நடந்து கொள்ளக் கூடாது'' என்று மைக்கில் எஸ்.ஏ.சி. திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார். ஆனால் யாராவது கேட்டால்தானே? நடிகர் மன்சூர் அலிகான் அவரது மகளுடன் வந்து இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். ``நான் ஆவேசமாகப் பேச இந்த மேடை உகந்த இடம் இல்லை. மத்திய அரசு இலங்கைக்குச் செய்யும் ஆயுத உதவிகளை அங்குள்ள போராளிகளுக்குச் செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை'' என்று பேசினார் மன்சூர். (மன்சூர் தொடங்கி அதன்பின் ஒவ்வொருவரும் பேசும்போது எஸ்.ஏ.சி., அவர்கள் அருகிலேயே நின்று, `வில்லங்கமாக எதுவும் பேசி விடாதீர்கள்' என்று கெஞ்சினார்).

காலை 10.20-க்கு விஜயின் தாயாரும் பாடகியுமான ஷோபா சந்திரசேகர் வர, 10.25 மணிக்கு வந்து சேர்ந்தார் விஜய். அப்போது `நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்(!!)' என்ற பாடல் ஒலிபெருக்கியில் அலறியது. `திருச்செந்தூரில் `வில்லு' பட ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு விஜய் வந்திருப்பதாக' எஸ்.ஏ.சி. மைக்கில் சொன்னார். விஜய் வந்தபின் பேசத் தொடங்கிய ஷோபா, ``உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும் என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் சோகமும் சந்தோஷமாக மாறும் காலம் வந்துவிட்டது'' என்று முடித்துக் கொண்டார்.

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகப் பேச அரசியல் பிரமுகர்களோ, திரையுலகத்தினரோ வராததால் மேடை டல்லடித்தது. இதை ஈடுகட்டும் விதமாக `நீ எந்த ஊரு நான் எந்த ஊரு', `அர்ஜுனன் வில்லு, அரிச்சந்திரன் சொல்லு' போன்ற புகழ்பெற்ற விஜய் பாடல்கள் காதுகளைப் பதம் பார்த்தன. அந்தப் பாடல்களுக்கு ரசிகர்கள் எழுந்து நடனம் ஆடத் தொடங்க, உண்ணாவிரதப் பந்தலே குத்தாட்ட மேடையானது. அப்போது மேடைக்கு வந்த பேராசிரியர் சுப. வீரபாண்டியன், ``சினிமா பாடல்களுக்கு நீங்கள் இப்படி நடனம் ஆடுவதை ஊடகங்கள் ஒளிபரப்பினால் என்ன ஆகும்? நடிகர்களுக்கும் சமூகப் பொறுப்புண்டு'' என்று விழா ஏற்பாட்டாளர்கள் தலையில் குட்டு வைத்தார்.

இயக்குநர் வேலு. பிரபாகரன் பேசும்போது, ``விஜய் பொறுப்புணர்வுடன் படங்களைத் தேர்வு செய்து நடிக்க வேண்டும்'' என்று அட்வைஸ் வழங்கினார். சுப.வீ. சென்ற பிறகு மீண்டும் விஜய் பாடல்கள் காதைக் கிழிக்கத் தொடங்கின. ரசிகர்களும் பழையபடி எழுந்து குத்தாட்டம் போட, போலீஸார் லேசான தடியடி நடத்தி அவர்களைக் கட்டுப்படுத்தினர். மதியம் 1.37 மணிக்கு விஜயின் மனைவி சங்கீதா வந்து சேர்ந்தார்.

இயக்குநர் வி.சி.குகநாதன் பேசும்போது, ``இயக்குநர்கள் சீமானும், அமீரும் தனித்தனியாகச் சொன்னால் குற்றம்; விஜய் ரசிகர்கள் அனைவரும் இணைந்து சொன்னால் அதுதான் சட்டம். விஜய் கோட்டையைப் பிடிப்பது நிஜம்'' என்று எதற்கோ அச்சாரம் போட்டுவிட்டுச் சென்றார். நடிகர் ஸ்ரீமன், ``புத்தன் பிறந்த நாட்டில் நடக்கும் யுத்தத்தை நிறுத்த புத்தனே விஜய் வடிவில் மறு அவதாரம் எடுத்திருக்கிறார்'' என்று பேசி அசத்தினார்(!). இயக்குநர் பேரரசு, ``இதே இடத்தில் (ரஜினி கலந்து கொண்ட) ஒகேனக்கல் பிரச்னைக்காகக் கூடிய கூட்டத்தைவிட அதிகமான கூட்டம் கூடிவிட்டது'' என்று பஞ்ச் வைத்தார்.

பிற்பகல் 3.30 மணிக்கு பழ.நெடுமாறன் உண்ணாவிரத மேடைக்கு வந்த போது, மேடையில் `வா.. வா..வா என் தலைவா, உன் ரசிகன் நான் அல்லவா?' என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. ரசிகர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்து முகம் சுளித்தார் நெடுமாறன். சற்று நேரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியனும் மேடையேறினார். அவர்கள் இருவரும் பேசிவிட்டுச் சென்றதும் பேசத் தொடங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர், ``தமிழகம் முழுவதும் இன்று 36 இடங்களில் விஜய் ரசிகர்கள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். `சேலத்தில் ஆயிரம் சாப்பாட்டுப் பொட்டலம் வாங்கியிருந்தோம். ஆனால் இரண்டாயிரத்து ஐநூறு பேர் வந்துவிட்டார்கள்' என்று சேலம் மாவட்டத் தலைவர் என்னிடம் பேசினார்'' என அவர் சொன்னதும், மேடையில் இருந்தவர்கள் (விஜய் உள்பட) சிரிப்பை அடக்கிக் கொண்டார்கள். உடனே சுதாரித்துக் கொண்ட எஸ்.ஏ.சி. ``அந்தச் சாப்பாடு உண்ணாவிரதம் முடிந்ததும் வழங்குவதற்கு..'' என்று கூறி சமாளித்தார்.

கடைசியில் பேசிய விஜய், ``இலங்கையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. திரையுலகத்தினரும், அரசியல் கட்சிகளும் எத்தனையோ போராட்டங்களை நடத்திவிட்டார்கள். எனது கோரிக்கையை ஏற்று எனது ரசிகர்கள், `இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும். அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்த வேண்டும்' என்று மத்திய அரசுக்குத் தந்தி அனுப்பினார்கள். அந்த வாசகத்தை சிங்கள மொழியில் சொன்னாலாவது அவர்கள் காதில் விழுகிறதா பார்ப்போம்?'' என்றவர், ``ஸ்ரீலங்க ராஜ்ஜிய கருணாகர ஹிதயவதன; ஜெமில மரணக்கே நவதாண்டவோனே!'' என்றவர், ``நிச்சயம் அங்கு நடக்கும் போர் முடிவுக்கு வரும்'' என்று முழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். பின்பு நாம் விஜயிடம் தனியாகப் பேசியபோதும் மேடையில் பேசிய அதே கருத்தைத்தான் நம்மிடமும் சொன்னார் அவர்.

திரையுலகத்தைச் சேர்ந்த சிலரிடம் பேசியபோது, ``தனது மகன் விஜயை சினிமாவில் முன்னிறுத்த அவரது தந்தை எஸ்.ஏ.சி. என்னவெல்லாம் செய்தார் என்று எல்லோருக்கும் தெரியும். அடுத்தகட்டமாக விஜயை இப்போது அரசியலுக்கும் அவர் தயார் செய்து கொண்டிருக்கிறார். முதலில் மன்றக் கொடி வெளியிட்டார்கள். இப்போது உண்ணாவிரதம். இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரண நிதியாக நயன்தாரா கூட ஐந்து லட்ச ரூபாய் கொடுக்க, விஜய் கொடுத்தது வெறும் ஒரு லட்சம்தான். அதனால் ஏற்பட்ட சலசலப்பைச் சரி செய்யவே இந்த உண்ணாவிரத ஏற்பாடு. அதாவது இந்த உண்ணாவிரதத்தின் மூலம் அனைவரிடமும் பாவ மன்னிப்புக் கேட்டிருக்கிறார். மற்றபடி ரசிகர்கள் கேட்டுக் கொண்டதால் உண்ணாவிரதம் நடத்துகிறோம் என்று சொல்வதெல்லாம் நம்பும்படியாக இல்லை'' என்றனர் அவர்கள்.

- வே.வெற்றிவேல்

படம் : ஞானமணி

- குமுதம் ரிப்போட்டர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.